Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

சகோதரியை தேடி

அரசன் குமார என்ற அந்த காம ரூப அரசனை சந்திக்க தீர்மானித்து,  மனதில்  திட்டங்கள் போட்டபடி  இரவைக் கழித்தான். இது ஒரு ஆத்மார்ப்பணம் தான் மகான்களின் மூல  மந்ரம் – வசப்படுத்தும் குணம்.

விடிந்த பின்  ஹம்ச வேகனுக்கு தாராளமாக பரிசுப் பொருள்கல் கொடுத்து வழியனுப்பினான்.  தானும் பிரயாண ஏற்பாடுகளை செய்ய ஆணைகள் பிறப்பித்தான். 

முன் ஒரு சமயம் ராஜ்ய வர்தனன்   தன் புஜ பலத்தால் மாளவ ராஜ்யத்தை வெற்றி கொண்டு, மாளவ ராஜ்யத்தின் அனைத்து நல்ல பொருட்களையும் எடுத்துக் கொண்டு வந்தவனிடம் பண்டியை பற்றி விசாரித்தான்.  ஒரு முஹூர்த்த காலம் பழைய நினைவுகளும் சகோதர மறைவின் துக்கமும் அனுபவித்தவனாக செயலற்று இருந்தான். பின் சமாளித்துக் கொண்டு, பண்டியின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தான்.

பண்டி ஒரு குதிரையில் தான் மட்டுமாக அமர்ந்தவனாக, உடன்  ஒரு சில உறவினர்களான ராஜ குமாரர்கள் தங்கள் வாகனங்களில் தொடர்ந்து வர உள்ளே வந்தான்.  ஏதோ பயங்கரமாக அடி பட்டவன் போல, மனதில் குத்திய அம்பின் நுனி வதைப்பது போல முகம் வாடி,  பல நாட்களாக பயிற்சி செய்யாமல் விட்டதால் தளர்ந்த உடல் அவயவங்களுடன்,  தகிக்கும் உள்ளத்து வேதனையை வெளியேற்றுபவன் போல பெரு மூச்சு விட்டவனாக வந்தான். முகத்தை மறைத்த ஜடைகளாக வளர்ந்த முடிகள். ஏதோ துக்கம் அனுசரிப்பவன் போல.  வெட்கத்தினால் தானே தன் உடலில்  நுழைந்து விட்டவன் போல,  இந்த நீண்ட கரங்களால் என்ன பயன் என்று நொந்நு கொள்பவன் போலவும்,  பாதகி- பெரிய பாவத்தை செய்தவன் போலவும், அபராதி போலவும், த்ரோஹி- யாருக்கோ துரோகம் செய்தவன் போலவும், முஷித- அடக்க மாட்டாத கோபம் வெளிப்பட துடிக்கும் நிலையில் உள்ளவன் போலவும், சலித- தள்ளடுபவன் போலவும், சேனைத் தலைவன் என்ற பதவியில் இருந்து விலக்கப் பட்டவன் போலவும், கசையால் அடித்து விரட்டப் பட்ட யானை போல, மாலை வெய்யில் மறையும் நேரம் பொலிவிழந்த கமலங்கள் போலவும், துரியோதனின் மறைவால் வருந்திய துரோண புத்திரன் அஸ்வத்தாமா போலவும், ரத்தினங்களை ஒட்டு மொத்தமாக யாரோ அபகரித்து விட்ட நிலையில் சாகரம் வருந்துவது போலவும், ராஜ மாளிகையில் நுழைந்தான்.  குதிரையில் இருந்து இறங்கி தொங்கிய முகத்துடன் வந்தவன் அருகில் வந்தவுடன் ஹர்ஷனின் பாதங்களில் விழுந்து தேம்பினான். 

அரசன் ஹர்ஷனும், அவனை குனிந்து தன் கைகளால் தூக்கி அணைத்து, சமாதானப் படுத்தி, சகோதரன் மறைவை நினைத்து வாடிய முகத்துடன் அவனுடன் தன் ஆசனத்தில் வந்து அமர்ந்தான்.   பண்டியும் தன் முகத்தை கழுவிக் கொண்டு சற்றே மன சமாதானம் அடைந்தவனாக, அமர்ந்த பின் தன் சகோதரனின் மரணம் எப்படி சம்பவித்தது என்பதை விவரமாகச் சொல்லும் படி பணித்தான்.  பண்டியும் விவரமாக சொல்ல ஆரம்பித்தான். அதைக் கேட்டபின் ராஜ்யஸ்ரீ என்ற தன் சகோதரி பற்றி வினவினான்.  பண்டி சொன்னான்.   ‘தேவ! ராஜ்யவர்தன தேவன் மறைந்த பின், குசஸ்தலம் என்ற பிரதேசத்தை  குப்தன் என்பவன் கைப்பற்றி விட்டான்.  தேவி ராஜ்யஸ்ரீயை சிறை பிடித்திருந்தனர்.   அவள் எப்படியோ தப்பி, சில உண்மையான பரிவாரங்களுடன் விந்த்ய மலை சென்று விட்டாள். இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. மக்கள் மத்தியில் உள்ள பேச்சு இது. அவளைத் தேடி பலரை அனுப்பினோம். இன்று வரை எவரும் வந்து சேரவும் இல்லை, என்ன நடந்தது என்று தெரியவும் இல்லை என்றான். 

இதைக் கேட்டு ஹர்ஷன் ‘மற்றவர்களை அனுப்புவானேன். நானே செல்கிறேன்.  நீ படையுடன் சென்று கௌடனை முற்றுகையிடு.  தானும்  நீராடி,  பணியாளர்களிடம் ஆணையிட்டு, பண்டிக்கு நீராடவும், நல்லாடைகள் தரும் படியும் ஆணையிட்டான்.  அவனும் தன் மன பாரத்தை இறக்கி விட்டவனாக,   சகோதரியின் நிலை பற்றிய கவலைகளுடனேயே தன் வேஷ பூஷணங்களை தரித்தவனாக வந்தான். இருவரும் வெகு நேரம் நடந்த போர் பற்றிய விவரங்களை பேசிக் கொண்டிருந்தனர். 

மறு நாள் –  பண்டி அருகில் வந்து ஹர்ஷனிடம் விண்ணப்பித்துக் கொண்டான். ‘தேவ இதைக் கேளுங்கள்.  இதோ இருப்பவை மாளவ ராஜ்யத்தை வெற்றி கொண்டபின் சகோதரன் ராஜ்யவர்தனுக்கு, மாளவ அரசன் தன் பரிவாரங்களோடு வந்து வணங்கி  உபசரித்து, கப்பமாக  கொடுத்த  உயர்ந்த பொருட்கள்.  படை வீரர்களுடன் அதன் சாதனங்களுடன் கொடுத்திருந்தான். அவைகளை பார்வையிட வேண்டும் என்றான். ஆயிரக் கணக்கன யானைகள்,  மத ஜலம் பெருக நின்றிருந்தன. வண்டுகள் மொய்த்து சாமரம் வீசுவது போல சுற்றி வந்தன. வழக்கமான அலங்காரங்களுடன் இருந்தன. பலவிதமான முத்து மாலைகள்.  தாரகைகள் போல் அதில் பதித்த ரத்தினங்களும் உயர் மணிகளும் மின்னின.  வால வ்யஜனங்கள்  – விசிறிகள்,   நெடிதுயர்ந்து நிலவை எட்டி விடும் போல விளங்கின.  வெண் கொற்றக் குடைகள், அப்சர பெண்கள் போன்ற பெண்கள், போர் வீரர்களுக்கு உபசாரம் செய்ய,  சிம்ஹாசனம், சயனாசனம் போன்ற பொருட்கள், இரும்பு சங்கிலியால் பிணைக்கப் பட்ட கைகளுடன் மாளவ அரசனின் படை வீரர்கள், எண்ணிக்கையில்லாத எழுது பொருள்கள், பொக்கிஷங்களை வைக்கும் கலசங்கள்.  இவைகளை பார்வையிட்ட பின் அனைத்தையும் நாட்டின் மற்ற பொருட்களோடு பத்திரமாக வைக்கச் சொல்லி ஆணையிட்டான் அரசன் ஹர்ஷன். , 

மறு நாளே, தன் சகோதரியைத் தேட குறிப்பிட்ட சில சேவகர்களுடன் விந்த்ய மலைச் சாரல் வந்து சேர்ந்தான். 

சித்திரம் அருண்

மலையடிவாரத்தை அடைந்தவர்கள்  உலர்ந்த புல் எரியும் வாசனையுடன் அதன் புகையும் எழுந்து பரவி கிடப்பதை உணர்ந்தார்கள்.   கோசாலைகளில் உலர்ந்த மரக் கட்டைகளால் ஆன வேலிக்குள் பசுக்கள் சஞ்சரித்துக் கொண்டிருந்தன.   புலிகளிடமிருந்த பசுக்களை பாதுகாக்க  கிராம மக்கள் புலி தானே மாட்டிக் கொள்ளச் செய்யும் யந்திரங்களை வைத்திருந்தனர். ஒரு சில வேடர்கள் கோடாலிகளுடன்  வந்து மரம் வெட்ட அனுமதி கேட்டுக் கொண்டிருந்தனர். மற்றபடி கண்ணுக்கு எட்டியவை காடுகளே/    மலையின் நடுவில்  உயர்ந்து வளர்ந்திருந்த மரங்களின் இடையில் சாமுண்டா தேவியின் ஆலயம் தென்பட்டது.  எளிய வன வாசிகளான  மக்கள் மெலிந்து. அதிக உயரம் இல்லாத தேகத்தினராய், அன்றாட உணவுக்கே கடுமையாக உழைப்பவர்களாகத் தெரிந்தனர். முடிந்தவரை கடப்பாரை, மண் வெட்டி  போன்ற சாதனங்களால் நிலத்தை சமன் செய்து ஏதோ பயிரிட்டிருந்தனர். களி மண் பூமி கருமையாக இரும்பால் ஆனது போல இருந்தது. அப்படியும் வயல்களில் சம்பா பயிர் தழைத்திருந்தது.  உளுந்து பயிரிட்டிருந்தனர். கடினமான உழைப்பு வேண்டியிருந்த பயிர்களுக்கு காவலாக நாய்கள் சுற்றிக் கொண்டிருந்தன.  மரங்களின் இடையில் நடந்து நடந்து பாதை அமைந்திருந்தது. அதிலும் நடமாட்டம் அதிகம் இல்லாததால் மரங்களின் உலர்ந்த  இலைகள் மறைத்தன. நாடோடிகளாக சுற்றுபவர்கள், இளம் கிளைகளை வெட்டி கையில் வைத்துக் கொண்டு, வழி நடையில் புழுதி படிந்த கால்களை தட்டி சுத்தம் செய்து கொண்டனர்.  காட்டு மிருகங்களும் அதிகமாக இருப்பதாக பட்டது.  ஆங்காங்கு கிடைத்த  இடத்தில் ஒரு ஏரியோ, குளமோ வெட்டியிருந்தனர்.   புதிதாக வெட்டிய கிணறுகளும் அவைளை அடையாளம் காட்ட காடுகளில் சுலபமாக கிடைக்கும்  சால மரத்தின் கிளைகளை வெட்டி குறுக்கே போட்டு கொத்தாக மலர்களைக் கட்டி வைத்திருந்தனர்.  வழிப் போக்கர்கள், அதன் அருகில் அமர்ந்து நாவல் பழங்களை தின்று கொட்டைகளை வீசியிருந்தனர்.  கொடிகள் தாறு மாறாக வளர்ந்து பின்னிக் கொண்டிருந்ததால் வேகத் தடைகளாக இருந்தன.   கதம்ப பூக்கள் உதிர்ந்து பூமியை மறைத்திருக்க, நீரை சேமித்து வைக்கவும் குடிக்கவும்  வசதியாக  மரக்கட்டையைக் குடைந்து குழிவாக செய்து வைத்திருந்தனர். களைத்து வருபவர்கள் அந்த குளுமையான மணலில் அமர்ந்து தாகம் அடங்கி சுகமாக களைப்பு தீர தங்குவார்கள் போலும்.  அந்த தண்ணீர் நிரப்பிய மரக் குடுவைகளையும் மணலில் வேர்களைச் சுற்றி வைத்து, குளுமையாக்கி வைத்திருந்தனர் போலும்.  இருப்பதை முடிந்தவரை பயன்படுத்திக் கொண்டு திருப்தியாக வாழ்ந்த வன வாசிகள்.  அங்குள்ளோரும் மனைவி மக்களோடு வாழ்ந்து முதியவர்களாக இருந்தாலும் உடல் உழைப்புக்கு அஞ்சாமல், தோளில் கடப்பாரை, மண் வெட்டிகளுடன்  நடந்து அல்லது காளைகளின் மேல்  சென்று கொண்டிருந்தனர்.  காட்டில் மரங்களை வெட்டிக் கொண்டு செல்ல யாரும் அறியாமல் வருபவர்களையும் சமாளிக்க வேண்டி ஆங்காங்கு பொறிகளை வைத்திருந்தனர் போலும்.  வளர்ப்பு மிருகங்களை தங்கள் பரிவாரங்கள் போல பாது காத்தனர்.  அருகில் இருந்த கிராமங்களில் தங்கள் சேமிப்பை பாதுகாப்பாக வைத்து முதியோர்கள் அதைக் காவல் காக்க அமர்த்தியிருந்தனர் போலும்.  ஏதோ எண்ணெயை உடலில் பூசிக் கொண்டு மரக்கட்டைகளைத் தூக்கி செல்பவர்கள்,  உடல் பயிற்சி செய்யும் மல்லர்கள் போல இருந்தனர்.  அக்கம் பக்கத்து கிராமத்தார் சிலர் வேட்டையாடவும், அரிய காட்டுப் பொருட்களை கொண்டு செல்லவும் வந்தால்,  தேவையான உதவிகளை செய்தும்,  அவசியம் இன்றி  மிருகங்களை வேட்டை என்ற பெயரில் கொல்லாமல் இருக்கவும் தடுப்புகள் அமைத்து இருந்தனர்.  பறவைகளை பிடித்துச் செல்பவர்கள், வலைகளை தோளில் சுமந்து கொண்டு வந்தார்கள்.    கிராமத்து விளைச்சலை விற்க மூட்டைகளை தலையில் வைத்துக் கொண்டு வருபவர்கள், காட்டு பூக்களை பறித்து மூட்டையாக கொண்டு செல்வர்.   காடுகளில் இருந்து தேன், மயில் இறகுகள், மரக்கட்டைகள், கூட என்ற வேர், முதிர்ந்த சிங்கத்தின் பிடறி போல சிவந்தும் உறுதியாகவும் இருக்கும் – அவைகளை அதிகமாக கொண்டு சென்றனர்.  பலர் பூக்களைப் பறித்துக் கொண்டு சென்றனர். மாலைகளாக தொடுத்து கிராமத்து கடை வீதிகளில் விற்பனை செய்தனர்.  காளைகள் பூட்டிய கட்டை வண்டிகளில் வியாபார பொருட்கள் காட்டுக்குள் கொண்டு வரவும், இங்கிருந்து கொண்டு செல்லவும் பயன் பட்டன.  வெளி உலகம் அறியாத பல வஸ்துக்களை அந்த வன வாசிகள் அறிந்திருந்தனர் என்பது உள்ளே வருபவர்கள்  அவர்களிடம் மருந்தாகவோ, உணவாகவோ,வாசனை பொருட்களாகவோ  பயன்படும் பல பொருட்களை வாங்கிச் செல்வதில் அறிய முடிந்தது.  பலவிதமான தாவரங்கள், அதை பற்றிய அறிவு உடைய  அந்த வன வாசிகள் , கிராமத்து மக்களுக்கு வைத்தியர்களாகவும் இருந்தனர் போலும்  அரிய மூலிகைகள், வேர்கள், பச்சிலைகள் பற்றி அறிந்திருந்தனர்.   தேவையான பொருட்களை மரங்கள், செடி கொடிகளை, அவற்றை வளர்த்து பயன் படும் முறைகளை அறிந்தவர்கள்.

( இதன் பின் கவி பல செடிகளின் பெயரையும், பயன் பாட்டையும், சில பிராணிகள், விலங்குகள் பற்றியும் விவரமாக கொடுத்திருக்கிறார்)   அன்றிரவு அரசன் அந்த வன வாசிகளுடன் தங்கினான். 

அத்துடன் இந்த ஏழாவது பகுதி நிறைவுறுகிறது. 

பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்

பூமியில் அரசர்களின் அனுராகம் தொடரும் தேடல்
Exit mobile version