Site icon சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026

வண்ணத்துப்பூச்சிகள் விரிக்கும் புதைந்த இரகசியங்கள்

வானத்தில் விரிந்த சிறகுகளில்
வண்ணங்கள் எழுதும் கவிதை.
வாசனைகளில் வெளிப்படும் மறைக்குறியீடுகளில்
வடிவங்கள் இசைக்கும் காதல்.

இது ஒரு கற்பனைக் காட்சியல்ல. வண்ணத்துப்பூச்சிகளில் புதைந்திருக்கும் ரகசியத்தை அறிய இன்றைய அறிவியல் முனைகிறது.

இன்றைய நவீன உலகெங்கும், ஆராய்ச்சியாளர்கள் வண்ணத்துப்பூச்சிகளின் நிறம், வடிவம் மற்றும் மணம் ஆகியவற்றில் பொதிந்துள்ள மர்மங்களைத் தீர்க்கும் பயணத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். 

நீர் நுகரும் பட்டாம்பூச்சி

இளங்காலை நேரம். ஐஐடி மதறாஸ் வளாகம். ஹாஸ்டல்கள் நிறைந்த பகுதியில் ஒரு சிறிய நடை பயணம்.  நாற்பது வருடங்களில் எத்தனை மாற்றங்கள்.  நதியின் பெயர் கொண்ட ஒவ்வொரு ஹாஸ்டலும், மரங்களுக்கிடையில் பதுங்கிக் கொண்டு இக்கோடை வெயிலில் இயற்கை வழங்கும் ஏசியில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. புள்ளி மான்களும், blackbucks என்கிற கொம்பு மான்களும் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருக்கின்றன.‌ ஞாயிறு என்பதால் வானரக் கூட்டங்கள் மரக்கிளைகளிலிருந்து இன்னும் கீழே இறங்க முயற்சிக்கவில்லை.

மரங்களின்  கிளைகள், ஏதோ ஆகாய மேடையில் ராஜாவின் ‘காற்றில் வரும் கீதமே, என் கண்ணனை அறிவாயா” என்ற இசைக்கு ஏற்றவாறு நடனமாடிக் கொண்டிருந்தன. கோடை நேரமாதலால், தேகத்தின் மேல் வியர்க்கும் வேர்வைகள். அதுவும் ராஜாவின் இசைக்கு தாளமிட தொடங்கின.

ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்திற்குள் நுழையும் போது, இரண்டு, மூன்று டஜன்களுக்கும் மேலான வண்ணத்துப்பூச்சிகள், பல்வேறு வடிவங்கள் மற்றும் வண்ணங்களுடன் அங்கும் இங்குமாய் பறந்து கொண்டிருந்தன.

ஓ… பட்டர்ஃப்ளை ,பட்டர்ஃப்ளை
ஏன் விரித்தாய் சிறகை.
ஓ… பட்டர்ஃப்ளை, பட்டர்ஃப்ளை
ஏன் விரித்தாய் சிறகை

என்று பாடத் தோன்றியது.

திடீரென்று ஒரு வண்ணத்துப்பூச்சி, மண்ணில் சூரிய ஒளியில் ஏதோ ஒரு ஜொலிக்கும் வைரத்தைக் கண்டது போல், ராஜகுமாரியைப் போல நளினமாக கீழே இறங்கி, அந்த நீர்த்துளிக்கு அருகில் அமர்ந்தது.

சில்லென்று அதன் சிறகுகள் மடியத் தொடங்கின. அதன் நுண்ணிய தொண்டை அந்த ஈரமான மண்ணிலிருந்து நீரை உறிஞ்சி, மெதுவாக, சுவைத்து குடிக்கத் தொடங்கியது. 

அந்த மண்ணும், “நான் வெறும் மண் இல்லை. இந்த வண்ணத்துப்பூச்சிக்காக ‘கஃபே நிலூஃபர்’ ஆகிவிட்டேன்!” என்று பெருமிதப்பட்டது.

அடுத்த சில நிமிடங்கள், அந்த வண்ணத்துப்பூச்சிக்கு, கண்ணுக்குத் தெரியாத அந்த நீரூற்று, ஏதோ பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டர் மாதிரி தெரிந்ததோ என்னவோ!

தாகம் தீர்ந்தவுடன், அது மகிழ்ச்சியாக பறந்து போகும் போது, “ஆஹா, அடிக்கடி இப்படி ஒரு குளிர்ந்த பானம் கிடைத்தால்,

 பூ பூவாய் பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா நீ பள பளன்னு போட்டு இருப்பது யாரு கொடுத்த சொக்கா?

என்ற எம்எஸ்வியின் மெல்லிசைக்கு  அல்லவா, என் சிறகுகள் அபினயம் பிடிக்கும்” என்று.

பூவா? பட்டாம்பூச்சியா? முதலில் வந்தது எது?

எது முதலில் வந்தது, ‘பட்டாம்பூச்சியா அல்லது பூவா’ என்பது அறிவியலில் எழும் நவீன பட்டிமன்றம். சாலமன் பாப்பையா தலைமையில் ராஜா, பாரதி பாஸ்கரை கூப்பிடலாமா!

புதைபடிவ எச்சங்கள் மற்றும் பரிணாமக் கருத்துக்கள் போன்ற சமீபத்திய ஆதாரங்கள் மூலம், பட்டாம்பூச்சி தான் முதலில் வந்தது என்கிறது புதிய ஆய்வுகள்.

பட்டாம்பூச்சிகளின் தோற்றத்தை 236 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது பூக்கும் தாவரங்கள் தோன்றுவதற்கு சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு என்று கூறி, “கோழி மற்றும் முட்டை” போன்ற சிக்கலை மேலும் எழுப்பியுள்ளது. அப்படியானால், அந்த காலங்களில் பட்டாம்பூச்சிகள் எதை உட்கொண்டன என்ற கேள்வியம் எழுகிறதல்லவா.

பட்டாம்பூச்சிகளுக்கான ஆதாரம் அர்ஜென்டினாவில்  ஒரு புதைபடிவக் கழிவுகளான, கோப்ரோலைட் (coprolite)டிலிருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. நுண்ணோக்கியின் கீழ் ஆராயப்பட்ட சிறிய அலங்கார செதில்கள், ஒரு புதிய வகை பட்டாம்பூச்சியின் இறக்கைகளிலிருந்து வந்தவை என்று கண்டுள்ளனர். சமீபத்திய மரபணு தரவுகள், பட்டாம்பூச்சிகள் அல்லது லெபிடோப்டிரான்களின் காலத்தை, முன்பு நிரூபிக்கப்பட்டதை விட சுமார் 30 முதல் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கூறுகிறது (‘நிரூபிக்கப்பட்ட’ என்ற வார்த்தை ஒரு  சுவாரஸ்யமான தேர்வோ!).

மலர்கள் பூக்கும் முன், சுமார் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, வண்ணத்துப்பூச்சிகள் என்ன சாப்பிட்டன? அந்தக் காலத்தில் மலர்கள் இல்லாத நிலையில், இந்த அழகிய பூச்சிகள் தங்கள் உணவை எப்படிக் கண்டன? புதைப்படிவங்களும் ஆய்வுகளும் சுவாரசியமான தகவல்களைத் தருகின்றன!

வண்ணத்துப்பூச்சிகளின் மூதாதையர்கள், சைகாட்கள் (cycads), ஜிங்கோ (ginkgos) அல்லது கூம்புகள் (conifers) போன்ற பூக்காத மரங்கள் மற்றும் தாவரங்களின் தேன் போன்ற சுரப்புகளை உண்டன. மரச்சாறு, பழுதடைந்த பழங்கள், பூஞ்சைகளின் திரவங்கள் ஆகியவையும் அவற்றின் உணவாக இருந்தன. சிலர் குட்டைகளில் நீரை உறிஞ்சி, அதிலுள்ள கனிமங்களைப் பெற்றன, இது இன்றும் காணப்படும் “குட்டை உறிஞ்சுதல்” (puddling) போன்ற பழக்கமாகும்! அவற்றின் கம்பளிப்பூச்சிகள் பன்னைகள், கூம்பு தாவரங்களின் இலைகளையோ விதைகளையோ தின்றன.

மலர்களின் வரவு, வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கையை மாற்றியது. தேன் நிறைந்த மலர்களும், நீள் வாய்க்குழாய் கொண்ட பூச்சிகளும் ஒருவரையொருவர் உருவாக்கின. இந்த இணை-பரிணாமம் இயற்கையின் அற்புதம்! மலர்கள் இல்லாத உலகில் வண்ணத்துப்பூச்சிகள் எப்படி உயிர் வாழ்ந்தன என்பது ஆச்சரியமல்லவா?

அண்மையில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள Tacola kamitanii என்ற புதிய பட்டாம்பூச்சி இனத்தின் உயிரினம் 2.6 மில்லியன் ஆண்டுகள் பழமையான பிளைஸ்டோசீன் காலத்தைச் சேர்ந்தது. இந்த அரிய கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது, ஏனெனில் பட்டாம்பூச்சிகள் மிகவும் மென்மையான உடலும் இறக்கைகளும் கொண்டவை என்பதால் அவை அரிதாகவே பளிங்காக்கம்(vitrification) ஆகும்.

ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உயிரினம், அதன் விசாலமான இறக்கை பரப்பும், Tacola இனத்தின் பரவலையும் விரிவாக்குகிறது. இது தற்போது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள, இனம் அழிந்துள்ள பட்டாம்பூச்சிகளில், மிகவும் இளம் உயிரினமாகும். இது பண்டைய காலத்தில் இருந்த உயிரினங்களையும், அந்த காலத்திலிருந்த சுற்றுச்சூழல் நிலைகளையும் அறிய புதிய வாய்ப்புகளை வழங்குகிறது.

இந்த கண்டுபிடிப்பு Paleontological Research என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது பட்டாம்பூச்சி வளர்ச்சி மற்றும் பழங்கால சூழ்நிலைகள் குறித்த ஆராய்ச்சியில் புதிய பாதைகளைத் திறக்கிறது. Tacola kamitanii என்ற இந்த உயிரினத்தின் இருப்பு பண்டைய கால உயிரினங்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது. மேலும், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மரபணு ஆய்வுகள் பழங்கால ஆய்வில் புரட்சியை ஏற்படுத்தி, பூமியில் மறைந்திருந்த பல ரகசியங்களை வெளிப்படுத்த உதவுகின்றன.

பரிணாம வளர்ச்சிக்கு சிறந்த தொலைநோக்கு பார்வை உள்ளது அல்லவா!

இறைவன் இருக்கின்றானா, மனிதன் கேட்கிறான்.

RNA-வின் மந்திரம், கருமையின் மர்மம்!

பல ஆண்டுகளாக, பட்டாம்பூச்சிகளின் இறக்கைகளில் காணப்படும் கருப்பு நிறங்கள், ஜீன்களில் உள்ள புரதங்களை உருவாக்கும் DNA மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன என்று விஞ்ஞானிகள் நம்பினர். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் இந்தக் கருத்தை முற்றிலும் மாற்றியமைத்துள்ளன. பட்டாம்பூச்சி இறக்கைகளில் கருப்பு நிறங்கள் உருவாக RNA தான் காரணம், DNA அல்ல என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது, cortex எனும் இடத்தில் இருந்து உருவாகும் ஒரு நீண்ட noncoding RNA (lncRNA) ஆகும். இந்த RNA, வழக்கமான ஜீன்கள் போல புரதமாக மாறுவதில்லை. ஆனால், இது இறக்கை வளர்ச்சியில் எந்த இடங்களில், எப்போது கருப்பு நிறங்கள் உருவாக வேண்டும் என்பதை நேரடியாக கட்டுப்படுத்துகிறது.

CRISPR எனும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் இந்த RNA உருவாகும் ஜீனை சில பட்டாம்பூச்சிகளில் நீக்கி பார்த்தனர். அதனால் ஏற்பட்ட மாற்றம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது: பட்டாம்பூச்சிகளின் கருப்பு நிறங்கள் முற்றிலும் மறைந்துவிட்டன; கருப்பு புள்ளிகள் இருந்த இடங்களில் வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறங்கள் மட்டும் காணப்பட்டன. இதன் மூலம், இந்த RNA இல்லாமல் பட்டாம்பூச்சி இறக்கைகளில் கருப்பு நிறங்கள் உருவாகாது என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டது.

மேலும் ஆய்வுகளில், இந்த RNA உருவாகும் இடங்கள் மற்றும் நேரங்கள், கருப்பு நிறங்கள் உருவாகும் இடங்களுடன் துல்லியமாக பொருந்துகின்றன. இது ஒரு “பாரம்பரிய ஓவியக் கட்டை” போன்று செயல்பட்டு, கருப்பு நிறங்கள் எந்த இடங்களில் வர வேண்டும் என்பதை நிர்ணயிக்கிறது. இந்த செயல்முறை பல்வேறு பட்டாம்பூச்சி இனங்களில், 80 மில்லியன் ஆண்டுகள் வேறுபட்டவையாக இருந்தாலும், ஒரே மாதிரியாக காணப்படுகிறது. இது இந்த RNA-வின் முக்கியத்துவத்தையும், கருப்பு இறக்கை வடிவமைப்பில் அதன் அடிப்படை பங்கையும் காட்டுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், பட்டாம்பூச்சி இறக்கைகளில் கருப்பு நிறங்கள் உருவாக DNA-வில் உள்ள புரதங்களை உருவாக்கும் ஜீன்கள் மட்டுமல்ல, அவற்றை கட்டுப்படுத்தும் RNA தான் முக்கியக் காரணம். இந்தக் கண்டுபிடிப்பு, பட்டாம்பூச்சி இறக்கை வடிவமைப்பில் DNA மட்டுமல்ல, RNA தான் முடிவை தீர்மானிக்கும் முக்கிய சக்தி என்பதை வெளிப்படுத்துகிறது.

https://phys.org/news/2024-08-rna-molecule-butterfly-wing.html?

ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், சூப்பர் ரெசல்யூஷன் நுண்ணோக்கிகளால் ஆய்வு செய்து, சிறகு செதில்களில் அடர்ந்த கற்றைகளாக ஒழுங்கமைந்துள்ள ஆக்டின் புரதங்கள் (actin protein) பிரகாசமான நிறங்களை உருவாக்குகிறது என்று கண்டறிந்துள்ளனர். மேலும் வண்ணம் உருவான பிறகு, ஆக்டின்கள், ஒரு தையல்காரன் ஊசிகளை எடுத்துவிட்டு செல்வது போல், செல்களை விட்டு வெளியேறுகின்றன என்று கூறியுள்ளனர். 

இந்த கட்டமைப்புகளால், இந்நிறமானது UV கதிர்கள் உட்பட்ட சூரிய ஒளியில்   வெளுக்காமல் நீடித்த தன்மையளிக்கிறது. இதனால்தான் அருங்காட்சியகங்களில் நூற்றாண்டுகளுக்கு முன்பு சேகரிக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சிகள் இன்றும் பளிச்சென்று இருப்பதைக் காணமுடிகிறது.

இயற்கையின் நீடித்த வர்ணங்களைப் புரிந்துகொள்வது, புதிய பொருள்கள் மற்றும் மருத்துவ உணரிகளுக்கு வழிவகுப்பதோடு, அவற்றில் நீடித்து ஒளிரும் வர்ணங்களை உருவாக்கமுடியும் என்று கருதப்படுகின்றது.

https://phys.org/news/2024-05-actin-butterfly-wings-vibrant.html#

பட்டாம்பூச்சியின் வாசனை வேதியல்: துணையைத் தேர்ந்தெடுக்கும் மந்திரம்

ஒரு கோடை புல்வெளியில், பல  வண்ணத்துப்பூச்சிகள் பறந்து கொண்டிருக்கின்றன. அவைகளின் மென்மையான சிறகுகள் சூரிய ஒளியை பிரதிபலித்து பல நிறங்களில் ஒளிர்கின்றன. வெளிப்படையாகப் பார்க்கும் போது, அவைகள் பறப்பது சீரற்றதாகத் தோன்றலாம். ஆனால் இங்கு கண்ணுக்குப் புலப்படாத ஒரு  நடன நாடகம் நடந்து கொண்டிருப்பதை நாம் அறிய மாட்டோம். அது ஒரு ரசாயன நடனம், அவைகள் தங்களுக்குத் தகுந்த துணையைத் தேர்ந்தெடுக்கப்பதற்கான சுயம்வரம்.

ஒரு பூவின் மேல் ஒரு ஆண் வண்ணத்துப்பூச்சி அமைதியாக அமர்ந்திருக்கிறது. அதன் மேலுள்ள முட்கள் அசைந்து, எதிர்பார்ப்புடன் இருக்கிறது. ‘பார்வை ஒன்றே போதுமே’ என்றில்லாமல், தன் உணர்வுகள் மூலம், பெண் வண்ணத்துப்பூச்சி வெளியிடும் வாசனையை உணர முயற்சிக்கிறது. ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சி இனமும் தனித்துவமான வாசனை கலவையை அதாவது பெரோமோன்களை உருவாக்குகிறது. இது ஒரு ரகசிய வாசனை குறியீடு, சரியான துணை மட்டுமே அதனை உணர முடியும்.

மென்மையாக அலைபாயும் காற்றில், அருகிலுள்ள பெண் வண்ணத்துப்பூச்சியின் மணம் பரவுகிறது.  தான் மட்டுமே படிக்கக்கூடிய அந்த மறைமுக அழைப்பை உணரும் ஆண் வண்ணத்துப்பூச்சி, அந்த நுண்ணிய மூலக்கூறுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், அந்த தெரியாத பாதையை ரசாயண ஈர்ப்புடன் பின்பற்ற தொடங்குகிறது.

அதே சமயம், பெண் வண்ணத்துப்பூச்சியும் தனது காதல் முயற்சியில், எப்போது, எங்கு பெரோமோனை வெளியிட வேண்டும் என்று தேர்ந்தெடுத்து, மிக கவனமாக தனது சிக்னலை அனுப்புகிறது. ஆண் அருகில் வந்ததும், அதன் சிறகுகளின் வடிவம், பறக்கும் வலிமை, ரசாயன சிக்னல்கள் என அனைத்தையும் மதிப்பீடு செய்கிறது. சில நேரங்களில், ஆண்கள் தங்களுக்கே உரிய பெரோமோன்கள் அல்லது குறிப்பிட்ட செடிகளில் இருந்து சேகரித்த வாசனையை வெளிப்படுத்துகிறது. இது, அவைகளுக்குள் நடைபெறும் ரசாயன உரையாடலை மேலும் ஆழமாக்குகிறது.

ரசாயன சமிக்ஞைகள் சரியாக பொருந்தி, நடனம் ஒன்றுபடும் போது, ஆணும், பெண்ணும் ஒன்றிணைகிறார்கள். காற்றில் மலரும் இக்காதல், நுண்ணிய ரசாயன மொழியின் வழிகாட்டுதலில் அடுத்த தலைமுறை வண்ணத்துப்பூச்சிகள் பறப்பதற்கான தடயங்களை விதைக்கிறது.

பூக்களும், பூச்சிகளும் தங்களது துணையைத் தேட, ஒரே மந்திரத்தைத் தான் ஜபிக்கின்றது, அதாவது ஒரே வாசனையைத் தான் உபயோகிக்கிறது என்று ஆச்சரியப்படும் வகையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூறுகிறது.

ஆண் வண்ணத்துப்பூச்சிகள் தங்கள் இனப்பெருக்க உறுப்புகளில் ஓசிமீன் (ocimene) எனும் வாசனை வேதிப்பொருளை உற்பத்தி செய்கின்றன. இது புணர்ச்சியின் பின் இந்த வாசனையை பெண் பூச்சியின் மீது விட்டுச் செல்வதால், இது மற்ற ஆண்களை ஈர்ப்பதைத் தடுக்கிறது.

இதே ஓசிமீன், பூக்களாலும் பூச்சிகளை ஈர்க்க உற்பத்தி செய்யப் படுகிறது.

தாவரங்களும் பூச்சிகளும் ஒரே வேதிப்பொருளை வெவ்வேறு காரணத்திற்காக உபயோகிப்பதை,

இயற்கையின் நயமான நையாண்டி இணைந்த பரிணாமம் (convergent evolution) என்று சொல்லலாமா!

வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் ஒரு இயற்கையின் கலைக்கூடம். ஒரு சிறகின் செதில்கள் ஓர் ஓவியனின் தூரிகைத் தட்டுக்கு ஒப்பானவை. ஒவ்வொரு சிறகும் ஒரு ஆய்வகம் என்பதால், இயற்பியல், வேதியியல், மரபியல், பரிணாமவியல் என்ற அனைத்தும் அதை படிக்க முயல்கின்றன.

ஆக்டினால் கட்டமைக்கப்பட்ட நிறம், வாசனைகளில் நடைபெறும் மரபணுக்களின் நயமான நாடகம், RNA-வின் இருண்ட ஆளுமையில் ஏற்படும் வடிவம்; இவை அனைத்தும் பாதுகாப்பு-காதல் என்ற இருமுனைத் தேவைகளின் விளைவில் உருவாகிறது. இதனால், வண்ணத்துப்பூச்சிகளை “பரிணாமத்தின் மாதிரி உயிரினம்” (model organism) என்று அழைக்கலாம்.

நீடித்த வர்ணங்கள், உயிரிமுறை உணரிகள், மரபணு திருத்தம் ஆகியவற்றில் பெற்ற அறிவு நம்மை புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கத் தூண்டுகிறது. வண்ணத்துப்பூச்சிகள் எவ்வளவுதான் கண்ணாடி போல் எளிமையான வடிவமைப்புகளைக் கொண்டிருந்தாலும், இறுதியில், இயற்கை எவ்வளவு சிக்கலானது, என்பதை நினைவூட்டுகிறது. ஒரு வண்ணத்துப்பூச்சி பறக்கும்போது, அது பரிணாமத்தின் எட்டு கோடி ஆண்டு கதையை சுமந்து செல்கிறது. அந்த கதையை இன்றைய அறிவியல் படிக்க முயற்சி செய்கிறது!

ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை

எறும்புத் தோலை உரித்துப்பார்க்க யானை வந்ததடா! பாரம்பரியப் படிக்கிணறுகளின் ஆய்வில் அறிவியல் சிந்தனை
Exit mobile version