Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் ஒற்றுமை

2025 ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி நடந்த ‘அமிர்தலதா விருது’ விழாவிற்குச்  சென்றிருந்தேன். ‘சுரவரம் பிரதாப் ரெட்டி’ தெலுங்கு பல்கலைக்கழகம், என்.டி,ஆர். அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மேடையில் அமர்ந்திருந்த பிரமுக விருந்தினர்களாலும், கீழே அமர்ந்திருந்த பார்வையாளர்களாலும் அரங்கம் நிரம்பி வழிந்ததைப் பார்க்க முடிந்தது. அது பெண்களுக்கான கொண்டாட்டமான விழாவாக இருந்தது. இங்கு டாக்டர் அமிர்தலதா ஒரு வேலை செய்கிறார். விருது பெறுபவர்களின் உறவினர்களும் நண்பர்களும் மேடை ஏறி வந்து விருதாளரோடு நின்று ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார். அதனால் ஒவ்வொரு விருதாளரும் தம் உறவினர்களையும் நண்பர்களையும் வரச் சொல்கிறார்கள். அது அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. பெண் எழுத்தாளர்கள் பிற பெண் எழுத்தாளர்களை அழைத்து விருதளித்து கௌரவிப்பதைக் காண மிகவும் அதிசயமாக இருந்தது. ஒரே தொழிலில் இருப்பவர் ஒருவருக்கொருவர் பொறாமைப்படுவது தானே இயல்பு. ஆனால் தெலுங்கு பெண் எழுத்தாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒருவரை ஒருவர் பாராட்டி மகிழ்வது கண்ணுக்கும் மனத்துக்கும் விருந்தாக இருந்தது. இத்தனை பெண் எழுத்தாளர்களை ஒரே இடத்தில் பார்ப்பது என்பது கூட ஒரு பாக்கியமே என்று நினைத்தேன். 

அது மட்டுமல்ல. சில பெண் எழுத்தாளர்கள் குறிப்பிட்ட சிறப்பான நாட்களில் சக பெண் எழுத்தாளர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து சமைத்து போட்டு மகிழ்கிறார்கள். ஒன்றிணைந்து சுற்றுலா செல்கிறார்கள். இப்படிப்பட்ட அதிசயங்கள் தமிழ்நாட்டில் நடக்கிறதா என்று நான் தமிழ்நாட்டில் இல்லாததால் எனக்குத் தெரியவில்லை. பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்பார்கள். ஆனால் அது தவறு என்பதை நிரூபிக்கிறார்கள் இந்தச் சிறந்த பெண்மணிகள். யாரோ வந்து சாதனைப் பெண்ணைப் பார்த்து, “நீ சாதித்தாய்” என்று பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காமல், “இதோ நாங்கள் இருக்கிறோம், வாருங்கள்” என்று ஒன்று கூடிக் கொண்டாடுகிறார்கள். இவ்விதம் தெலுங்கு பெண் எழுத்தாளர்கள், சக பெண் எழுத்தாளர்களைப் பாராட்டிப்  போற்றும் விதத்தைப் பார்த்து எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமாக நான் பரவசம் அடைகிறேன். 

பெண்கள் தம்மைத் தாமே உயர்த்திக் கொண்டு திறமையுள்ள பிற பெண்களையும் உயர்த்தும் நிகழ்ச்சிகள் வரவேற்கத்தக்கவை. பாராட்டத்தக்கவை. பாராட்டி மகிழ்வோம்

அம்ருதலதா அவார்டுகள்

டாக்டர் அமிர்தலதா, ‘நெல்லெட்ல’ ரமாதேவி, கிரண்பாலா என்ற இரு தோழிகளின் ஒத்துழைப்போடு சாதனை மகளிரான பெண் எழுத்தாளர்களையும் பெண் கலைஞர்களையும் ஒன்று திரட்டிக் கடத்த பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து விழா எடுப்பது ஒரு சாதனைதான். 2011 லிருந்து 2025 வரை  230  பெண் இலக்கியவாதிகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் விருதுகள் அளித்துள்ளார். அமிர்தலதா அவார்டு, அபுரூப அவார்டு, இந்தூரு அபுரூப அவார்டு என்று மூன்று பெயர்களில் பரிசளிக்கிறார். விருது பெறுபவர்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளை ‘அபிநந்தனா’ என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகமாக வெளியிட்டு கௌரவிக்கிறார்.  

முதலில் விருதளிப்பவரைப் பற்றிப் பார்ப்போம். டாக்டர் அமிர்தலதா பன்முகத் திறமைசாலி. நிஜாமாபாத்தில் விஜயா கல்வி நிலையங்கள் நடத்தி வருகிறார். நிஜாமாபாத் மகளிர் கல்லூரியில் கல்வி ஆலோசகராக உள்ளார். தெலுங்கு பல்கலைக் கழகம் வழியாக ஒவ்வொரு ஆண்டும் கார்டூனிஸ்டுகளுக்கு ’கீர்த்தி புரஸ்காரம்’ விருதளிக்கிறார். தெலங்காணா யுனிவர்சிட்டி வழியாக கல்வித் துறையில் சிறப்பாக மிளிரும் மாணவ, மாணவிகளுக்கு ‘அமிர்தலதா தங்கப் பதக்கம்’ அளிக்கிறார். நிஜாமாபாதில் ‘அபுரூப வெங்கடேஸ்வர ஸ்வாமி தேவாலயம்’ நிர்மாணித்துள்ளார். 1980 முதல் இன்றுவரை நூற்றுக்கு மேலாக கலை நிகழ்சிகள் நடத்தியுள்ளார். ‘மௌரி டெக்’ என்ற பன்னாட்டு நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு அதிகாரியாகப் பணிபுரிகிறார். இலக்கியம், கலை, விளையாட்டு, கல்வி, சமூகசேவை போன்றவற்றில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு மாநில அளவில் 2011 முதல் ‘அமிர்தலதா’ அவார்டும், அதோடு கூட 2013 லிருந்து ‘அபுரூப’ அவார்டும் அளித்து வருகிறார். அதில் ‘சிம்ம பாகம்’ எழுத்தாளர்களுக்கே. மேலும், நிஜாமாபாத் மாவட்டத்தில் சிறந்த சாதனை படைத்த ஆண்களுக்கு 2013 லிருந்து ‘இந்தூரு அபுரூப அவார்டு’ அளித்து வருகிறார். பல சிறுகதைகளும் நாடகங்களும், நாவல்களும் எழுதியுள்ளார். சிறுவர்களுக்காக தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் நாடக நூல்கள் எழுதியுள்ளார். பரதமுனி விருது, பெஸ்ட் அவுட்ஸ்டாண்டிங் பெண்மணி விருது போன்ற எண்ணற்ற விருதுகள் இவரை வந்தடைந்தன. இவருடைய பல நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி உள்ளன. 

இனி, அவர் பெண்களின் திறமைக்கு அளிக்கும் அங்கீகாரத்தைப் பற்றிப் பார்ப்போம்.  விருது பெறுபவர் மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் இவர் நடத்தும் விருது நிகழ்ச்சியைக் கண்டு களிக்க ஆயிரம் கண்களோடு பெண்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். இரு தெலுங்கு மாநிலங்களிலும் இந்த விருதுக்கு அத்தனை முக்கியத்துவம் உள்ளது. டாக்டர் அமிர்தலதா, ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினத்தன்று மூன்று பெண்மணிகளுக்கு ‘அமிர்தலதா வாழ்நாள் சாதனையாளர் விருதும், பன்னிரண்டு பெண்மணிகளுக்கு ‘அபுரூப விருதும்’ பெருமையோடு வழங்குகிறார். பல்வேறு துறைகளில் தம் திறமையை வெளிப்படுத்தும் பெண்மணிகளைத் தேடி அடையாளம் கண்டு நேரில் சென்று அழைத்து கௌரவிக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

அமிர்தலதா இது குறித்து என்ன கூறுகிறார்?

“இந்த விருதுகளைக் கொடுக்க வேண்டும் என்ற யோசனை ஏன் தோன்றியது என்று எல்லோரும் கேட்கிறார்கள். நம்மிடையே பல எழுத்தாளர்களும், கலைஞர்களும், விளையாட்டு வீராங்கனைகளும் இருந்தாலும் சாதாரணமாக ஒரு பத்து புகழ் பெற்றவர்களின் பெயர்களையே நாம் நினைவில் கொள்கிறோம். ஆனால் நூற்றுக்கணக்கில் இருக்கும் பிறரைப் பெரிதாக கவனிப்பதில்லை. சினிமா, கிரிக்கெட் தவிர பிற கலைகளின் மீதோ, அதில் சாதனை படைப்பவர்களின் மீதோ மக்களின் பார்வை படுவதில்லை. அதானால்தான் இந்த விருதுகளின் பெயரில் திரைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களோடு கூட எழுத்து மற்றும் பிற துறைக் கலைஞர்களையும் கௌரவிக்கும் எண்ணம் தோன்றியது. முக்கியமாக இந்த விருதைப்  பெரும் போது அவர்களுடைய முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியைப் பார்த்து எனக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த நேரத்தில் நான், குழந்தையின் மகிழ்ச்சியைப் பார்த்து மகிழும் தாயாகி விடுகிறேன்” என்று கூறி மகிழ்கிறார். 

இத்தனை புகழ்பெற்ற இந்த ‘அமிர்தலதா’ விருதுகளுக்காக தனிப்பட்டு எதுவும் விண்ணப்பம் அளிக்கத் தேவையில்லை. “பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களைத் தேடி நாங்களே சென்று அவர்களின் வீட்டுக் கதவைத் தட்டி விருது பெறுவதற்கு அழைக்கிறோம். இது எங்கள் அமிர்தலதா விருதுகளின் தனிச்சிறப்பு. எவ்வாறு தேர்ந்தெடுக்கிறோம் என்றால், நாங்கள் கேள்விப்படும் சாதனை மகரிளின் பெயர்களை அவ்வப்போது பட்டியலில் சேர்த்துக் கொண்டே இருப்போம். குறிப்பிட்ட சாதனை மகளிருக்கு விருது கொடுங்கள் என்று எங்களுக்குச் செய்தி கூறும் தோழிகளும் உள்ளனர். அவர்களையும் லிஸ்டில் சேர்த்துக் கொள்வோம். எங்கெங்கோ இருக்கும் சாதனையாளர்களை நாமே தெரிந்து கொள்வது இயலாது அல்லவா? எல்லோருக்கும் ஒரே தடவையில் விருது கொடுக்க முடியாது என்பதால் அந்தந்தத் துறையில் திறமைசாலியான பெண்களில் வயதிற்கு முக்கியத்துவம் அளித்து மூத்த சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் முதலில் அழைத்து விருதளிகிறோம். நாங்கள் விருது கொடுக்காத சாதனை மகளிர் இன்னும் பலர் இருக்கிறார்கள். இந்த விருது விழாவில் எனக்கு உறவுகளும் தோழிகளும் பக்கபலமாக நின்று பெருமளவு உதவுகிறார்கள். அவர்கள் தங்கள் வீட்டுப் பண்டிகை போல பொறுப்பு வகிக்கிறார்கள். ஒவ்வொரு விருதுக்கும் தன்னார்வத்தோடு ஒரு ஸ்பான்சர் நிதியுதவி செய்ய முன்வருகிறார். இவர்களும் மகளிராக இருப்பது எங்கள் அமிர்தலதா விருதுகளின்  சிறப்புகளில் ஒன்று. பிரமுக பெண் எழுத்தாளர் ஜலந்தரா (நடிகர் சந்திரமோகனின் மனைவி), முன்வந்து ஒவ்வொரு ஆண்டும் தன் தந்தை எழுத்தாளரும் மருத்துவருமான டாக்டர் ‘காலி பாலச்சந்திரராவ்’ பெயரில் நாடகத்துறையில் சாதனை படைத்த மகளிரின் விருதுக்கு நிதியுதவி செய்வதற்கு முன்வந்து வருடம் தவறாமல் உதவி வருகிறார். அதேபோல் இந்த ஆண்டு, புகழ்பெற்ற தொழிலதிபர் தயானந்த் ரெட்டியின் மனைவி ரேணுகா, தானும் ஒரு விருதுக்கு ஸ்பான்சர் செய்வதற்கு முன்வந்தார். பல்வேறு அமைப்புகளில் பணிபுரியும் முன்னூறு பேரோடு எங்கள் உத்தியோகிகள் பத்து பேர் சேர்ந்து தேநீர் விருந்துக்கும், விழா தொடர்பான எற்பாடுகளான பாடல்கள், நினைவுப் பரிசுகள், பார்வையாளர் அமரும் ஏற்பாடுகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி ஒரு ராணுவத்தைப் போல தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உழைகிறார்கள்.  

நிகழ்ச்சி நிரலை அத்தனை கச்சிதமாகக் கடைப்பிடித்து, நேர மேலாண்மையில் முதலிடம் வகிக்கின்றனர் அமிர்தலதா குழுவினர். ஒவ்வொரு விருதாளரும் மேடை ஏறி வரும் போது அவர்கள் பெயர் தொனிக்கும் திரைப்பாடல்களோ தனிப்பாடல்களோ ஒலிக்க விடுவது அமிர்தலதாவின் தனிச்சிறப்பு. அவர்ங்கள் பெயரில் பாடல்கள் கிடைக்காவிட்டால் தானே பாடல் எழுதி பாடகர்களைக் கொண்டு பாட வைத்து நாலு வரி ஒலிக்க விடுவார். அந்த கானத்தின் இடையே விருதாளர்கள் மேடை ஏறி வரும்போது அவர்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியைச் சொல்லி மாளாது. அதைப் பார்த்து தானும் மகிழ்கிறார் அமிர்தலதா. வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் ஆக்கி விடுகிறார். இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக நடிகை ரோகிணி வந்திருந்தார். (திடீர் பரிசாக எனக்கு (ராஜி ரகுநாதன்) லாட்டரி அதிர்ஷ்டம் கிட்டியது. மேடைக்குச் சென்று ரோகிணியிடமிருந்து அந்த பரிசைப் பெற்று வந்தேன்). 

“விழா நிகழ்சிகளை ‘நெல்லெட்ல ரமாதேவி’ நெறியாளராக இருந்து திறம்பட நடத்தி வருகிறார். விருதாளர்களின் அறிமுகங்கள் நிரம்பிய நினைவு மலர் தயாரிப்பிலும் வெளியீட்டிலும் பல தோழிகள் உதவி புரிகின்றனர். ஒரு மாத காலம் நாங்கள் இதனைச் சிறப்புற நடத்த மகிழ்வோடு உழைக்கிறோம். பொதுவாக விருது நிகழ்சிகளில் சால்வை, பூச்செண்டு, நினைவுப் பரிசு, பண முடிப்பு அளிப்பது வழக்கம். நாங்கள் அந்த நான்கோடு கூட நினைவு மலரும் கொடுப்போம். விழாவின் நடுவில் ஆடல், பாடல், திடீர்ப் பரிசு போன்றவற்றோடு கண்ணுக்கும் செவிக்கும் விருந்தாகத் தொய்வடையாமல் நிகழ்ச்சியை நடத்துவோம் அது எங்களுக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது” என்று கூறும் அமிர்தலதா மேலும் இவ்வாறு தெரிவிக்கிறார்.  

“நீங்கள் பெண்களுக்கு மட்டுமே விருது தருவீர்களா என்று பலரும் வினவுகிறார்கள். வீட்டு வேலை, வெளி வேலை ஆகியவற்றால் களைத்துப் போகும் பெண்களுக்குத் தம் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பும் நேரமும் ஆண்களைப் போல் கிடைப்பதில்லை. அப்படியிருந்தும் படைப்புத் திறனும் கற்பனைத் திறனும் அவர்களைச் சும்மா இருக்க விடுவதில்லை. அவர்களுடைய திறமைக்கு அங்கீகாரமாக இது போன்ற விருதுகள் கிடைத்தால் மழ்ச்சியடைந்து மேலும் ஊக்கத்தோடு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்பது நிச்சயம். அதனால் தான் விருதின் பெரும்பகுதியை பெண்களுக்கே உரித்தாக்குகிறோம். அதோடு கூட, ஒவ்வொரு ஆண்டும் ஆந்திரா, தெலங்காணா, ராயலசீமா இந்த மூன்று பகுதிகளையும் சேர்ந்த ஆறு ஆண் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து ‘அம்ர்தலதா விருது’ அளிக்கிறோம். அதோடு சென்ற பன்னிரண்டு ஆண்டுகளாக நான் பிறந்த நிஜாமாபாத் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற பத்து பேரைத் தேர்ந்தெடுத்து இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை ‘இந்தூரு அபுரூப அவார்டு’ என்ற பெயரில் விருதளித்து கௌரவிக்கிறோம். அதில் பாதி பேர் ஆண்கள்” 

என்று கூறும் அமிர்தலதா, திறமையை அங்கீகரிப்பதில் தான் எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை என்றார். அமிர்தலதா தன் சுயசரிதையை தெளிவான நீண்ட நூலாக எழுதியுள்ளார். அந்த நூலுக்கு வந்த மதிப்புரைகளைத் தொகுத்து தனி நூலாக வெளியிட்டுள்ளார். 

அமிர்தலதா அவார்டு கமிட்டியின் உறுப்பினரான ‘நெல்லட்லு ரமாதேவி’ இவ்வாறு கூறுகிறார்,

“இந்த விருது விழாவிற்கான வேலைகளைக் கவனிக்கும் பணி எனக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது. பெண்கள் வீட்டு வேலை, பிள்ளை வளர்ப்பு, உத்தியோகம் எல்லாவற்றையும் செய்து கொண்டே தம்மில் இருக்கும் கலைகளையும் உயிர்ப்போடு வைத்திருப்பது மிகவும் சிரமமான வேலை இவ்விஷயத்தில் ஆண்களுக்கிருக்கும் வாய்ப்புகள் பெண்களுக்குக் குறைவு. அங்கீகாரம் கிடைக்கும் விஷயத்திலும் பெண்கள் அநியாயத்துக்கு ஆளாகிறார்கள் என்பதை அமிர்தலதா திடமாக நம்பினார். அதனால் இரு தெலுங்கு மாநில மகளிரின் முயற்சியையும் திறமையையும் சாதனைகளையும் அடையாளம் கண்டு பணமுடிப்போடு கூடிய விருதுகளை அளிக்க முன்வந்தார். அதில் பெரும்பகுதி விருதுகளை இலக்கியத்திற்கே அளிக்கிறார். பெண் எழுத்தாளர்கள், பெண் கவிஞர்கள், இவர்களில் பாதி பேர் தெலங்காணாவைச் சேர்ந்தவர்கள். ஒரு அடையாளமாக இருக்கட்டும் என்பதால் அன்னையர் தினத்தில் விழா எடுக்கிறோம்” என்கிறார்.

“தருவதனால் பெறுவதனால்” கிடைக்கும் சுகம் இந்த மகிழ்ச்சியே அல்லவா.

‘லேகினி’ அமைப்பு: (பெண் எழுத்தாளர்களுக்கான அமைப்பு)

இதே போல் நான் பார்த்து, பங்குகொண்டு ரசித்து மற்றொரு அமைப்பு ‘லேகினி’. இது பெண் எழுத்தாளர்களால், பெண் எழுத்தாளர்களுக்காக நடத்தப்படும் அமைப்பு. லேகினி அமைப்பின் தற்போதைய தலைவர் ‘அத்துலூரி விஜயலட்சுமி’ இவ்வாறு கூறுகிறார். 

“கடந்த 24 ஆண்டுகளாக லேகினி உயிர்ப்போடு செயல்பட்டு வருகிறது. முதலில், பிரபலமான அந்நாளைய பெண் எழுத்தாளர்களோடு சேர்ந்து டாக்டர் ‘வாசிரெட்டி சீதாதேவி’ தலைமையில் ‘சக்ய சாஹிதி’ என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாகி நடந்தது. ‘வேதுல’ சகுந்தலாவும், ‘துரகா’ ஜானகிராணியும் செயலாளர்களாக இருந்து வந்தார்கள். சிறந்த நிகழ்ச்சிகளைத் திறம்பட நடத்தினார்கள். அப்போது வயதிலும் அனுபவத்திலும் சிறியவளாக இருந்த நான், விழாவுக்கான அழைப்பிதழ் கொடுப்பது, மேடைக்கு சால்வை, பூங்கொத்து எடுத்து வருவது போன்ற சின்னச் சின்னப் பணிகளை உற்சாகத்தோடு செய்து வந்தேன். ஆனால் அந்த அமைப்பு ஏனோ நின்றுவிட்டது. அதன் பிறகு ‘யத்தனபூடி’ சுலோச்சனா ராணி, டாக்டர் ‘வாஸா’ பிரபாவதி ஆகியோரின் தலைமையில் ‘லேகினி மகிளா சைதன்ய சாஹிதி’ அமைப்பு தொடங்கப்பட்டது. அதில் என்னை (அத்துலூரி விஜயலட்சுமி) முக்கிய செயலராக நியமித்தார்கள்.

அப்போதிலிருந்து நூல் வெளியீடு, பிற இடங்களில் இருந்து வரும் எழுத்தாளர்களோடும் லேகினி எழுத்தாளர்களோடும் நேர்காணல்கள், தெலுங்கு யுனிவர்சிட்டி மற்றும் சாகித்திய அகாடமி உதிவியோடு செமினார்கள் நடத்துவது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம்.  ‘நன்னபநேனி’ ராஜகுமாரி, சுவர்ணா சுதாகர், டாக்டர் கீதா ரெட்டி போன்ற அரசியல் பிரமுகர்களும் எங்கள் ‘லேகினி’ அமைப்புக்கு ஆலோசகர்களாக இருந்தார்கள். ‘மல்லாதி’   சுப்பம்மா போன்ற பிரபல எழுத்தாளர்களும் லேகினியில் அங்கம் வகித்தார்கள்.

அந்நாட்களிலேயே வாசா பிரபாவதி, வேதகிரி ராம்பாபுவின் உதவியோடு ‘லேகினி’ எழுத்தாளர்கள் எழுதிய ‘தீப தோரணம்’ என்ற நூறு சிறுகதைகளின் தொகுப்பை வெளிக்கொனர்ந்தார்.  அதில் நான் எழுதிய (அத்துலூரி விஜயலட்சுமி) ‘தோட்டமாலி’   என்ற சிறுகதையும் இடம்பெற்றது. அதன் பிறகு நான் என் உத்தியோகத்தில் ஆழ்ந்ததால் சாதாரண உறுப்பினராக அதில் தொடர்ந்தேன். வாசா பிரபாவதி கூறியதன் படியே லேகினி அமைப்பை நடத்தி வந்தோம். தனிப்பட்ட செயல்வடிவம் எதுவும் அப்போது தயாரிக்கவில்லை.

அதன் பிறகு 2019 ல் ‘வாஸா பிரபாவதி’ கேட்டதற்கிணங்க நான் அதன் துணைத் தலைவரானேன். 2019  டிசம்பரில் வாஸா பிரபாவதி காலமானார். மூத்த எழுத்தாளர் ‘பொத்தூரி’ விஜயலட்சுமி தலைவராக நியமிக்கப்பட்டார். ‘மந்தா’ பானுமதியின் முயற்சியால் பல எழுத்தாளர்கள் லேகினியில் உறுப்பினர்களாகச் சேர்ந்தார்கள். இரண்டாண்டுகளுக்குப் பின் ‘பொத்தூரி’ விஜயலட்சுமி என்னைத் தலைவராக்கினார்.

எனக்குக் கலை நிகழ்ச்சிகளில் ஆர்வம் அதிகம். லேகினியில் பல்வேறு கலை நிகழ்சிகளும், நாடகங்களும் நடத்தினோம். பெண்கள் தினம் விமரிசையாகக் கொண்டாடினோம். எங்கள் லேகினி மூலம் சிறுகதைத் தொகுப்பு எடுத்து வர முடிவு செய்தோம். எங்கள் செயலாளர் ‘குரவதி’ சரஸ்வதி அதற்கான விதிகளைத் தெரிவித்து லேகினி உறுப்பினர்களிடம் கதைகளுக்கான அழைப்பு விடுத்தார்.

உறுப்பினர்களான எழுத்தாளர்கள் அனைவரும் சிறிது தொகை செலுத்தி ‘கதல லோகிலி’ என்ற அந்த சிறுகதைத் தொகுப்பில் பங்கு கொண்டார்கள். புத்தகப் பிரசுரம் என்பது பெரிய யக்ஞம் போன்றது என்பது அங்கத்தினர்களாக இருக்கும் பெண் எழுத்தாளர்கள் அனைவரும் அறிந்ததே. எங்கள் வாட்சப் குரூப் மூலம் அழைப்பு விடுத்ததில், 74 பெண் எழுத்தாளர்களின் கதைகள் லேகினி மெயில் வழியாக வந்து சேர்ந்தன. ஏற்கெனவே இதழ்களில் வெளிவந்த, பரிசு பெற்ற, ஆனால் தொகுப்பாக வந்திருக்காத கதைகளை ஒவ்வொருவரையும் இரண்டு அனுப்பச் சொன்னோம். அவற்றிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தோம்.

அந்தப் பணியில் பிரபல எழுத்தாளர் ‘சுஜலாகண்ட்டி’ உதவினார். மூத்த எழுத்தாளர்கள் சிலர், “எங்களுக்கு மெயிலில் அனுப்பத் தெரியாது. கையால் எழுதித் தருகிறோம் நேரில் வந்து வாங்கிச் செல்லுங்கள்” என்றார்கள். ‘முக்தேவி’ பாரதி, ‘பொலாப்ரகட’ ராஜ்யலட்சுமி, ஞானப்பிரசூனா ஆகியவர்களின் வீடுகளுக்குச் சென்று கதையும் தொகையும் பெற்று வந்தோம். அவ்வாறு மிகுந்த உற்சாகத்தோடு தொகுப்பு உருவானது. மேலும் பல பெண் எழுத்தாளர்கள் தாங்களும் கதை தருகிறோம் என்று முன்வந்தார்கள். அவர்களுக்கு அடுத்த முறை வாய்ப்பு தருவதாகக் கூறினோம். 

இந்த ‘கதல லோகிலி’ என்ற சிறுகதைத் தொகுப்பை இரண்டு பகுதிகளாக வெளியிட வேண்டி வந்தது. ஏனென்றால், எழுபத்துநான்கு பெண் எழுத்தாளர்கள் இதில் எழுதியுள்ளார்கள். பல கதைகள் நீண்டவை. ஒரே தொகுப்பாக வெளியிட்டால் கையில் பிடித்துப் படிக்க முடியாது என்பதால் முப்பது நான்கு, முப்பத்து நான்கு கதைகளாக வெளியிட்டோம். அப்படியும் ஒவ்வொன்றும் முந்நூறு பக்கங்களைத் தாண்டி விட்டது. யாருடைய கதையை முதலில் போடுவது என்று சந்தேகம் வந்தது. வயதில் மூத்தவர்களின் கதைகளில் இருந்து ஆரம்பிப்பதா என்று யோசித்தோம்.

இறுதியாக ‘அ’ விலிருந்து தொடங்கிப் போடுவது என்று தீர்மானித்து அவ்வாறே செய்தோம். திரு ராமணாச்சாரி, திரு ஓலேட்டி பார்வதீசம், திரு எண்டமூரி வீரேந்திரநாத் ஆகியோர்  எங்கள் தொகுப்புக்கு வாழ்த்துரை வழங்கினார்கள். எங்கள் ‘லேகினி’ அமைப்பு முதலில் இரட்டை மாநகரங்களான ஹைதராபாத், சிகந்தராபாத் எல்லைக்குள் மட்டுமே தெரிந்ததாக இருந்தது. தற்போது உலக அளவில் இதற்கு உறுப்பினர்கள் உள்ளார்கள். அனைவரும் பெண் எழுத்தாளர்களே” என்று உற்சாகமாகக் கூறுகிறார் அதன் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அத்துலூரி விஜயலட்சுமி

தற்போது லேகினி அமைப்பில் 112  பெண் எழுத்தாளர்கள் உறுப்பினராக உள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் தினத்தன்று விருதளிக்கும் நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்துகிறது லேகினி. அதன் உறுப்பினர்கள் பலர், தங்களுடைய தாய்மார்களின் பெயரால் ‘மாத்ரு தேவோ பவ’ என்ற விருதினை பல துறைகளின் சாதனை செய்த மகளிருக்கு அளித்து கௌரவிக்கிறார்கள். (2024 ம் ஆண்டு எனக்கு (ராஜி ரகுநாதன்) மொழிபெயர்ப்பு பிரிவில் முக்தேவி பாரதி, தன் தாயாரின் பெயரில் ‘மாத்ரு தேவோ பவ’ விருதளித்து கௌரவித்தார்). 

லேகினி அமைப்பும் சரி, அமிர்தலதா அமைப்பும் சரி, விருது விழா நடத்தும்போது,  மேடையும், அரங்கும் பெண்களால் நிரம்பி வழிவதைக் காண முடிகிறது. இத்தனை பெண் எழுத்தாளர்கள் தெலுங்கில் உள்ளார்களா என்று வியப்பு ஏற்படுகிறது. ஒற்றுமையாக ஒருவரை ஒருவர் பாராட்டியும் விருது கொடுத்து கௌரவித்தும் அன்னியோனியமாக மிளிர்வதைப் பார்த்து நான் வியந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். 

இதைப்போல் இன்னும் பல அமைப்புகள் உள்ளன. ஆண்கள் நடத்தும் அமைப்புகளிலும் அன்னையர் தினத்திலும், பெண்கள் தினத்திலும் சாதனை மகளிரை அழைத்து விருதளித்து பாராட்டும் விழாக்கள் நடைபெறாமல் இல்லை. ஆனால் பெண்களே பெண்களுக்காக கொண்டாடும் விழாக்கள் மனத்துக்கு நெருக்கமானவை அல்லவா? நான் பார்த்து வியந்து ரசித்த இரண்டு அமைப்புகளைப் பற்றி இங்கு எழுதியிருக்கிறேன்.

அடுத்து, நூல் மதிப்புரை மூலம் பெண் எழுத்தாளர்கள் பிற பெண் எழுத்தாளர்களையும் பெண் கதாபாத்திரங்களையும் பாராட்டி எழுதிக் கொண்டாடும் விதத்தைப் பார்ப்போம். 

தெலுங்கு பெண் எழுத்தாளர்கள்

தெலுங்கு பெண் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள் – பகுதி- 2
Exit mobile version