- மருத்துவத்தில் நிலைத்தவையும், அழிந்தவையும்
- ஹோமியோபதி – ஓர் எளிய அறிமுகம்
- மனித நாகரீகத்தின் நுழைவாயிலில்
- 3. மரணமின்மையின் முதற்துளி
- 4. புனிதத்திலிருந்து அறிவை நோக்கி
- அறிவு அளித்த விடுதலை
- 6. ஞானங்களின் விளைநிலம்
- 7. மூன்றே பொருளாய் முடிந்தது
- 8. பிரபஞ்ச ஒழுங்கை வழிநடத்தல்
- 9. ஒருங்கிணைப்பின் வழியே
- 10. மீண்டெழல்
- 11. அறிவின் ஒளி
- 12. என்றென்றும் நிலைத்திருப்பது
கிரேக்க ரோமானிய மருத்துவம்
புராதனமான தொன்மக்கதைகளில் மருத்துவ அறிவும், நோயும் கடவுளரின் சொத்தாக பார்க்கப்பட்டது. மரணமின்மை தேடிச்சென்று வெறும்கையுடன் திரும்பும் கில்காமேஷிலிருந்தும், கடவுளின் துணை கொண்டு மரணத்திலிருந்து உயிர்த்தெழும் ஒசிரிசிலிருந்தும் பரிணாமம் கொண்டு கடவுள்களிடமிருந்து மருத்துவத்தை பிரிக்கும் கிரேக்க – ரோம சிந்தனை மரபில் வைத்து மருத்துவத்தை பார்க்கலாம். இந்த இரண்டு காலக்கட்டதுக்குமுள்ள தூரம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் இருக்கக்கூடும்.
ரோமில் பயன்படுத்தப்பட்ட கிரேக்க மருத்துவமே ரோமானிய மருத்துவம் என்று அழைக்கப்பட்டது. “கிரேக்க மருத்துவத்துக்கு முன் ரோமானியர்கள், எல்லா நோய்களுக்கும் கருப்பு முட்டைக்கோஸை மதுவுடன் கலந்து தருவதையே மருத்துவமாக கருதினர். பொ யு மு 451 களில் ஏற்பட்ட பிளேக் நோய் பரவலில் ரோமானிய மருத்துவர்கள் எதுவும் செய்யாமல் சும்மா இருந்தனர்” என்று கிரேக்க ரோமானிய வரலாற்றை தொகுத்த டையோனைசிஸ் (Dionysius of Halicarnassus) குற்றம் சாட்டுகிறார்.
பொ யு மு 219 ஆம் ஆண்டு கிரேக்கத்தில் இருந்து ரோம் சென்ற ஆர்க்ககதஸ் (Archagathus) என்ற கிரேக்க மருத்துவருக்கு ரோமானிய குடியுரிமையும், மக்களின் வரிப்பணத்திலிருந்து இலவச அலுவலக கட்டிடமும் தரப்படுகிறது. ஆர்க்ககதஸ் வருவதற்கு முன் சுமார் 600 ஆண்டுகளாக ரோமில் மருத்துவர்களே இல்லை என்றும், ஆர்க்ககதஸ்ஸே ரோமின் முதல் மருத்துவர் என்றும் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த வரலாற்றாசிரியர் பிளினி ( Pilini, the elder) குறிப்பிடுகிறார்.
எனவே கிரேக்க ரோமானிய மருத்துவ முறைகளை ஒன்றாக பார்ப்பது நமக்கு இன்னும் மேலதிக புரிதல்களை அளிக்கக்கூடியதாக இருக்கும் என்பதால் ஒன்றாக எழுதப்படுகிறது.
நோய்களின் தொடக்கம் – பண்டோரா தாழி
ஒலிம்பியன் கடவுளான ஜீயஸ், டைட்டன் தெய்வங்களுடனான போரில் வெற்றி பெற அணி மாறி உதவி செய்த டைட்டன்களான ப்ரோமிதியஸ், எபிமேதியஸ் இரட்டையர்களிடம் மனிதர்களை படைக்கும் வேலையை அளிக்கிறார். ப்ரோமிதியஸ், மனிதர்களை படைக்கும்போது அவர்களின் மேல் கொண்ட கருணையால், ஜீயஸிடமிருந்து நெருப்பைத் திருடி, மனிதர்களுக்கு அளிக்கிறான். இதனால் கோபமுற்ற ஜீயஸ் அவனை ஒரு மலை உச்சியில் கட்டிவைத்து, அவன் கல்லீரலை ஒரு கழுகை விட்டு கொத்திக்கொத்தி சாப்பிட வைத்தார். ஆனால் அவன் கல்லீரல் இரவானால் மீண்டும் வளர, மறுநாள் கழுகு மீண்டும் கொத்தி சாப்பிடுகிறது. இது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.
தன் தம்பி எபிமேதியஸை பழி வாங்க, முதல் பெண்ணான பண்டோராவை உருவாக்கி அவனுக்கு திருமணம் செய்து வைக்கிறார் ஜீயஸ். திருமணப் பரிசாக ஒரு தாழியை “திறந்து பார்க்கக்கூடாது” என்ற ஆணையுடன் தருகிறார். ஆனால் ஆர்வமிகுதியால் பண்டோரா அதை திறக்க, மனிதர்களின் அத்தனை துன்பங்களும், பிளேக்கும், அனைத்துவிதமான நோய்களும் அதனுள் இருந்து வெளியேறி மனிதகுலத்தை அடைந்தன. இறுதியாக அதனுள் நம்பிக்கையின் ஒளி மட்டும் வெளியேறாமல் எஞ்சியிருந்தது. அது மனிதகுலத்துக்கு அளிக்கப்பட்ட ஒரு வாக்குறுதி. இக்கதை பொ யு மு 800 களில் வாழ்ந்த கிரேக்க கவிஞர் ஹெசியோட்டின் Works and Days மற்றும் Theogony தொகுப்பில் உள்ள ஒரு புராணக்கதை.
Walter Crane, wikimedia
மருத்துவ கடவுளின் பிறப்பும், இறப்பும்
கிரேக்க மருத்துவ கடவுளான அப்போலோ, மனித பெண்ணான கோரோனிஸ் (Coronis) உடன் உறவு கொள்கிறார். ஆனால் கோரோனிஸ் பின்னர் இஸ்கியஸ் என்ற மனிதனிடம் உறவு கொள்கிறாள். இதனால் கோபமடையும் அப்போலோ, அவளைக் கொல்ல தனது சகோதரியும், வேட்டைக் கடவுளும், பிரசவ தெய்வமுமாகிய அர்டீமிஸை அனுப்புகிறார். அர்டீமெஸ் அவளை கொன்று சிதையில் ஏற்றும்போது அவள் அப்போலோவின் குழந்தையை கருவுற்று இருப்பது தெரிகிறது. இதை அறியும் அப்போலோ அவள் கருப்பையைக் கிழித்து குழந்தையை வெளியே எடுக்கிறார். அவனுக்கு அஸ்கிளெப்பியஸ் (Asclepius) என பெயரிடப்படுகிறது.
அஸ்கிளெப்பியஸ் வளரும்போது ஒரு பாம்பு அவன் காதை நக்கி சுத்தப்படுத்தி குணமாக்கும் கலையை கூறியதாக நம்பப்பட்டது. அதன்பின் புகழ்பெற்ற மருத்துவனாக மாறிய அவனின் குணமாக்கும் திறன் அப்போலோவை விஞ்சியது. மேலும் அவன் இறந்தவர்களை மீண்டும் உயிரோடு கொண்டு வர ஆரம்பித்தான். இதனால் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. எங்கே இவன் உயிர்ப்பிக்கும் கலையை மற்ற மனிதர்களுக்கு கற்பித்து விடுவானோ என்று கோபமுற்ற முதன்மை கடவுள் ஜீயஸ் தன் இடிகளை அனுப்பி அவனை கொல்கிறார். ஆனால் அப்போலோவின் கோபத்திற்கு பயந்து அஸ்கிளெப்பியஸை கடவுளாக ஆக்குகிறார்.
அஸ்கிளெப்பியஸ், ஆறுதல் (soothing) அளிக்கும் கடவுளான Epione ஐ மணந்து குழந்தைகளைப் பெற்றான். சுத்தத்தின் கடவுளான ஹைஜியா (Hygeia), சர்வரோகநிவாரணி கடவுளாகிய பணசியா (Panacea), நலத்திற்கு அசோ (Aceso) நோயிலிருந்து மீள லாசோ (Laso), ஒளி அல்லது ஆரோக்கிய உடல் அழகின் ஈக்ள் (Aegle) ஆகிய மகள்களையும், திறமையான மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை செய்யும் Machaon, Podaleirios மற்றும் நோயில் இருந்து மீண்டும் முழுமைக்கு என்ற பொருளுடைய குள்ளமான டெலஸ்போரஸ் (Telesphoros) என்று மூன்று மகன்களையும் பெற்றனர்.
எகிப்தின் மருத்துவரும், கட்டிட கலை ஞானியும், மருத்துவ கடவுளுமான இம்கொதொப், அஸ்கிளெப்பியஸ்க்கு இணை வைக்கப்படுகிறார்.
இந்த புராணக்கதை சிறு சிறு மாற்றங்களுடன் சொல்லப்படுகிறது. அஸ்கிளெப்பியஸ் மரணத்திற்கு பின் அவருக்கு கோவில் எழுப்பப்பட்டு, நோயாளர்கள் அங்கு புனித யாத்திரை மேற்கொண்டனர். அவருக்கு அறிவைப் புகட்டிய விஷமில்லா பாம்புகள் (The Aesculapian snake / Zamenis longissimus ) அந்த கோவிலில் நிறைந்து வழிந்தன. அவை சுற்றிய தடியை அவர் கையில் வைத்திருந்தார். இன்று நாம் காணும் மருத்துவ சின்னமான கடுசியஸ் (Caduceus) அதிலிருந்து பரிணமித்தது.
அஸ்கிளெப்பியஸ் கோவில், அஸ்கிளெப்பியான் என்று அழைக்கப்பட்டது. புகழ்பெற்ற அஸ்கிளெப்பியான் கோவில் இருந்த Kos தீவில்தான், பொ யு மு 460 ஆம் ஆண்டு மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் ஹிப்போகிரேடெஸ் பிறந்தார். இவரின் தந்தை ஹீராக்ளிட்டஸ், அஸ்கிளெப்பியஸ் வழிவந்த 16 வது தலைமுறையாக கருதப்படுகிறார்.
இன்றுவரை மருத்துவர்கள் எடுக்கும் ஹிப்போகிரேடெஸ் சத்திய பிரமாணம் இப்படி ஆரம்பிக்கிறது “குணப்படுத்துபவரான அப்போலோ மற்றும் அஸ்கிளெப்பியஸ், ஹைஜீயா, பணசியா போன்ற கடவுள்கள் மீது ஆணையாக …”
கடவுளிடமிருந்து மருத்துவத்தை பிரித்தல்
ஹிப்போகிரேடெஸ் காலத்துக்கு முன்புவரை வலிப்பு போன்றவை மிக புனிதமான நோய்களாக கருதப்பட்டன. ஹிப்போகிரேடெஸ் புனிதமான நோய்கள் (on sacred disease) என்ற நூலில், “வலிப்பு மற்ற நோய்களை விட புனிதமானதாகவோ, தெய்வீகத்தன்மை கொண்டதாகவோ எனக்கு தோன்றவில்லை. மற்ற நோய்களை போல வலிப்பும் இயற்கையான காரணத்தை கொண்டு உள்ளது. மனிதர்களின் அனுபவமின்மை மற்றும் நோயின் விசேஷ தனித்தன்மையால் ஏற்படும் வியப்பால் அது புனிதமானது போல தோன்றுகிறது . ஆனால் மூளையில் இருக்கும் சளி சிரைகளில் அதிகப்படியாக இறங்குவதால் வலிப்பு ஏற்படுகிறது, தெய்வங்களால் இல்லை” என்கிறார்.
முழுவதுமாக கடவுள், புனிதம் என்பதிலிருந்து மருத்துவத்தை விடுவிக்கிறார். முதன்முறையாக நோய்கள், கடவுள் அல்லது கெட்ட ஆவிகளின் சாபம் என்பதிலிருந்து விலகி புறவயமான காரணங்களை கொண்டு விளக்கப்பட்டது.
ஹிப்போகிரட்ஸ் எழுதிய, தொகுக்கப்பட்ட மருத்துவ நூல் (corpus hippocraticum) அடுத்த 2000 ஆண்டுகள் மருத்துவ உலகை ஆட்கொண்டது.
கிரேக்க மருத்துவமும் தத்துவமும்
கடவுளிடம் இருந்து மருத்துவத்தை பிரிக்க தத்துவங்கள் அந்த இடத்தை எடுத்துகொள்ள ஆரம்பித்தன.
மருத்துவத்தில் தீவிர பாதிப்பை செலுத்திய சில கிரேக்க தத்துவங்களை அறிந்து கொள்வது மருத்துவத்தை இன்னும் அணுக்கமாக புரிந்துகொள்ள உதவும்.
பித்தகோரஸ்
பித்தகோரஸ் பொ யு மு 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மெய்யியலாளர், தத்துவ ஞானி, கணித அறிஞர். இந்த Courtesy கணித எண்களாக கண்டவர். இசையை கணித குறிப்புகளாக மாற்றும் முறையை கண்டறிந்தவர். அவரின் மூன்று முக்கிய சிந்தனைகள் மருத்துவத்தால் உள்வாங்கப்பட்டது.
- நோயின் முக்கியமான காலம் (Critical Days)
ஒரு நோயின் காலத்தில் சில நாட்களில் அது தீவிரம் அடைவதும், தீவிரம் குறைவதும், அதன் பின் மீண்டும் தீவிரம் அடைவதும் குறித்த ஒரு சுழற்சி கால அளவு பித்தகோரசிலிருந்து ஆரம்பித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
- இசை மருத்துவம் அல்லது ஒலி மருத்துவம்
பித்தகோரஸ், இசையை, அதன் கணித தன்மையை ஆன்ம சுத்திகரிப்பு என்று அழைத்தார். நோய்களுக்கு சிகிச்சைமுறையாக பயன்படுத்தினார்.
- சைவ உணவு முறை
பித்தகோரஸ் சைவ உணவுமுறையை தீவிரமாக வலியுறுத்தினார். வெஜிடேரியன் என்ற சொல் பொ யு 1800 களில் புழக்கத்திற்கு வரும் வரை, சைவ உணவாளர்கள் பித்தகோரியன் என்றே அழைக்கப்பட்டனர்.
பித்தகோரியன் ஒரு மத குறுங்குழுவாகவும், தத்துவப் பள்ளியாகவும் வெகுகாலம் நீடித்தது.
ஹியுமர் தத்துவம் (Humorism)
கிரேக்க சப்த ரிஷிகளில் ஒருவராக கருதப்படும் தாலேஸ் பொ யு மு 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இங்கு காணும் எல்லாம் ஒன்றிலிருந்து வந்து இருக்கலாம், அது தண்ணீராக இருக்கலாம் என்ற கருதுகோளை முன்வைத்தார். ஹியுமர் தத்துவம் (Humorism) இதிலிருந்து ஆரம்பித்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
எம்படீகிளிஸ் (Empedocles) பொ யு மு 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவ ஞானி. இந்த பிரபஞ்சத்தில் அனைத்தும், மனித உடலும் தீ, காற்று, நீர், மண் ஆகிய நான்கு மூலப்பொருட்களால் ஆனவை என்ற தத்துவத்தை முன் வைத்தவர். மருத்துவனின் வேலையானது இந்த கூட்டுகளின் சேர்தல் நிலை அல்லது அழிதல் நிலை ஆகியவற்றை கண்டறிந்து அவற்றில் சமநிலை கொண்டுவருவதே என்றார்.
ஆக்ம்யான் (Alcmaeon of Croton) பொ யு மு 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பித்தகோரஸ் சீடரான இவர், உயிரற்ற மனித உடல்களை அறுத்து ஆய்வு செய்த முன்னோடி. மூளையே பிரதானம், தன்னுணர்வு என்பது மூளை சார்ந்தது, ஆன்மா சார்ந்தது இல்லை என்ற கருத்தை முன் வைத்தார்.
ஹியுமர் தத்துவத்தின் முன்னோடியாக தீ, காற்று, மண், நீர், இனிப்பு, கசப்பு என்று மேலும் பலவற்றை ஹியுமராக வகைப்படுத்தினார். இவற்றுக்கு இடையே ஆன சமநிலையே ஆரோக்கியம் என்றும், அதில் ஏற்படும் மாறுபாடு நோய் என்றும் முன்வைத்தார். இந்த சமநிலையை அவர் ஒத்திசைவு (Isonomia) என்று குறிப்பிட்டார். வாழும் சூழல், உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை போன்றவை இந்த ஒத்திசைவு குலைவை உண்டாக்கலாம் என்றும், அதை மீட்டு பழைய ஒத்திசைவுக்கு கொண்டு வருவதே இயற்கையான நிலை என்றும் முன்வைத்தார்1.
இந்த தத்துவங்களின் நீட்சியாக ஹிப்போகிரேடெஸ் மருத்துவத்துக்கு ஹியுமர் தத்துவத்தை பயன்படுத்தி மருத்துவ கட்டுமானத்தை உருவாக்க ஆரம்பித்தார்.
இந்த உடலானது ரத்தம் (Blood) , சளி (Phlegm), கருப்பு பித்தம் (Black Humor) மற்றும் மஞ்சள் பித்தம் (Yellow Humor) என்னும் நான்கு வித ஹியுமர்களால் ஆனது. இவற்றின் சமநிலையில் ஏற்படும் மாற்றமே நோய் எனப்படுகிறது. அதிகப்படியான அல்லது குறைவான ஹியுமர் நோயை கொண்டுவருகிறது.
உண்ணும் உணவானது செரிமானத்தின் வழியே நான்கு ஹியுமர் ஆக மாற்றப்படுகிறது. முதலில் வயிற்றிலும், தொடர்ச்சியாக கல்லீரல், இரத்த நாளம் மற்றும் திசுக்களில் செரிமானம் நடக்கிறது.
உணவானது முதலில் செரிமான மண்டலத்தில் கைலஸ் ஆக மாற்றப்படுகிறது. பின் இது கல்லீரலால் செரிக்கபட்டு கைமஸ் ஆக மாறுகிறது. இதுவே இரத்தம், சளி, மஞ்சள் மற்றும் கருப்பு பித்தமாக மாறி இரத்த குழாய்களின் வழியே சுற்றுகிறது. திசு செரிமானத்தில், அந்த திசுவாக மாற்றப்படுகிறது.
இந்த செரிமான இயக்கத்தில் ஏதேனும் ஒரு நிலையில் ஏற்படும் மாறுபாடு, பிழையான ஹியுமரை உருவாக்குகிறது. பின் அந்த சமநிலையின்மை காரணமாக நோய் உருவாகிறது.
ஹிப்போகிரேடெஸ் காலத்துக்கு பின் வந்த தத்துவஞானி அரிஸ்டாட்டில் வாழ்வின் நான்கு அடிப்படை தன்மைகளாக வெப்பம், குளிர்ச்சி, ஈரம் மற்றும் வறண்ட தன்மையை (Hot, Cold, Wet, Dry) முன் வைத்தார். இதுவும் ஏற்கனவே இருந்த ஹியுமர் தத்துவத்துடன் இணைந்து கொண்டது2.
கேலன் பொ யு பி முதல் நூற்றாண்டில் ரோமில் வாழ்ந்த கிரேக்க மருத்துவராவார். கேலன் மனித உடல் ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று அமைப்புகளால் ஆனது என நம்பினார். எண்ணம் மற்றும் உணர்ச்சிகளுக்கு மூளையும், நரம்புகளும் காரணமாக அமைகின்றன. இதயம் மற்றும் தமனிகள் வாழ்க்கைக்கு தேவையான சக்தியை அளிப்பதற்கு காரணமாகவும், கல்லீரல் மற்றும் சிரைகள் உடலெங்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்வதும், வளர்ச்சிக்கும் காரணமாக இருக்கின்றன என்று நம்பினார் கேலன். ரத்தம் கல்லீரலில் உருவாக்கப்பட்டு உடம்பு எங்கும் கொண்டு செல்லப்படுகிறது என்றும் கூறினார்.
இவர் ஹிப்போகிரேடெஸ் நான்கு ஹியுமர் தத்துவத்தை விரிவாக்கி அதன் அடிப்படையில் மனிதர்களை மற்றும் நோய்களை நான்கு குணாதிசயங்கள் (Temperaments) கீழ் வகைப்படுத்தினார். உதாரணமாக,
இரத்தம்: சூடான மற்றும் ஈரத்தன்மையும், வசந்த காலத்துடனும் தொடர்புடையது. இரத்தம் சிறிதளவு மற்ற மூன்று ஹியுமர்களை உள்ளடக்கியது. இரத்தத்தை சோதனை செய்வதன் மூலம் ஹியுமர் சமநிலைத்தன்மையை அறிய முடியும். மகிழ்ச்சியான நடத்தை (Sanguine) கொண்டவராக இருப்பார்.
கருப்பு பித்தம்: குளிர்ச்சி மற்றும் வறண்ட தன்மையும், இலையுதிர் காலத்துடனும் தொடர்புடையது. மண்ணீரலில் உருவாக்கப்படும். சோகமான நடத்தை கொண்டவர் (Melancholic) கொண்டவராக இருப்பார். ஒரு உறுப்பில் கருப்பு பித்தம் தேங்குவது புற்றுநோயை உருவாக்கக்கூடியது.
மஞ்சள் பித்தம்: சூடான மற்றும் வறண்ட தன்மையும், கோடைக்காலத்துடனும் தொடர்புடையது. இது பித்தப்பை அல்லது வியர்வை, சிறுநீர், மலம் போன்ற உடல் கழிவுகளில் காணப்படும். உணர்ச்சிகளில் சமநிலையற்ற, கோபமான, ஊகிக்க முடியாத நடத்தை கொண்டவர் (Choleric) கொண்டவராக இருப்பார்.
சளி: குளிர் மற்றும் ஈரத்தன்மையும், குளிர்காலத்துடனும் தொடர்புடையது. மூளை இதை உருவாக்கும் என நம்பப்பட்டது. சளி என்பது வெள்ளை நிறம் அல்லது நிறமற்ற உடல் திரவங்களான வியர்வை, சளி, கோழை (mucus), எச்சில் போன்றவற்றுடன் தொடர்புடையது. மறதி மற்றும் அமைதியான நடத்தை (Phlegmatic ) கொண்டவராக இருப்பார்.
| ஹியுமர் | தன்மை | அதிகரித்த பண்புகள் | குறைந்த பண்புகள் |
| இரத்தம் (sanguine) | வெப்பம் மற்றும் ஈரப்பதம் | தைரியமானவர், நம்பிக்கையானவர், காதலானவர், மகிழ்ச்சியானவர், சிவந்த நிறம் கொண்டவர் | கருப்பு பித்தம் அல்லது சளி நிலையை அடைதல், வெளிறிய தன்மை, பலவீனமான நிலை. |
| சளி (phlegmatic) | குளிர் மற்றும் ஈரப்பதம் | அமைதியானவர், உணர்ச்சியற்றவர். வெளிறிய நிறம் கொண்டவர், சளிச்சுரப்பிற்கு ஆளாகக்கூடியவர் | மஞ்சள் பித்தம் அல்லது இரத்தம் அதிகரித்தல், வறட்சி, அமைதியின்மை |
| மஞ்சள் பித்தம் (choleric) | வெப்பம் மற்றும் வறட்சி | கோபமான குணம்,மனச்சோர்வு, உணர்ச்சிவசப்படுபவர் அமைதியற்ற எரிச்சலூட்டும் மனநிலை கொண்டவர், மஞ்சள் நிறம் கொண்டவர், பித்தப்பை நோய்களுக்கு ஆளாகக்கூடியவர் | சளி அல்லது கருப்பு பித்தம் அதிகரித்தல், மந்தமான தன்மை மற்றும் ஊக்கமின்மை |
| கருப்பு பித்தம் (melancholic) | குளிர் மற்றும் வறட்சி | சோகமான குணமுடையவர், மனச்சோர்வு, பயம், மெலிந்த, வெளிறிய நிறம் கொண்டவர், நோய்கள் இருப்பதாக நினைத்து வருந்துபவர் | இரத்தம் அல்லது மஞ்சள் பித்தம் அதிகரித்தல், எளிதாக மகிழ்ச்சி மற்றும் மனகிளர்ச்சி அடைதல் |
சுமார் 2300 ஆண்டுகளுக்கு மேல் மருத்துவத்தில் கோலோச்சிய இந்த ஹியுமர் தத்துவம் கிட்டத்தட்ட 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் கைவிடப்பட்டது.
அணுக்கொள்கை – Atomism
டெமோக்ரிட்டஸ் (Democritus) உருவாக்கிய அணுத்தத்துவத்தை முன்வைத்து மருத்துவத்தில் ரோமின் அஸ்க்லிபியட்ஸ் (Asclepiades) உருவாக்கியதாக கருதப்படுகிறது. இவர் ஹியுமர் கொள்கையை மறுத்து உடலில் உள்ள அணுக்களின் ஒத்திசைவுக்குலைவே நோய் என முன்வைத்தார். அவற்றை சரிசெய்ய மசாஜ், உணவுமுறை, குளியல், உடற்பயிற்சி, மருந்துகள் போன்றவற்றை முன்வைத்தார். நோய்களை குறுகியகால (acute) மற்றும் நீண்டகால (chronic) நோய்கள் என வகைப்படுத்தினார். மனநோய் கூடங்களில் இருந்து நோயாளிகளை வெளியேற்றி அவர்களுக்கு மசாஜ், இயற்கை சூழல், உணவுமுறை, ஆலோசனைகள் மூலம் குணப்படுத்த முயன்றவர். Cito tuto jucunde என்ற வேகமாக, ஆபத்தில்லாமல், இனிமையாக நோயை குணப்படுத்த வேண்டும் என்ற கொள்கை அன்றிருந்த மற்ற மருத்துவ முறைகளை விட மேம்பட்டதாக இருந்தது.
உயிர்சக்தி கொள்கை – Vitalism
மருத்துவம் கடவுள், ஆவிகள், ஆன்மா என்ற கருதுகோளிலிருந்து விலக ஆரம்பிக்கும் போதே அந்த இடத்தை உயிர்சக்தி (Vital Force) என்ற தத்துவக்கருதுகோள் நிரப்ப ஆரம்பித்துவிட்டது.
கிரேக்க சப்த ரிஷிகளில் ஒருவராக கருதப்படும் தாலேஸின் புகழ்பெற்ற கூற்றான “All things are god” என்பதில் ஆரம்பித்து சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹிப்போகிரேடெஸ் வழியாக பயணித்து இருபதாம் நூற்றாண்டு முற்பகுதி வரை புழக்கத்தில் இருந்தது.
உடலை, வாழ்வை வெறும் வேதியியல் அல்லது உயிரியல் செயல்பாடாக பார்க்கும் குறைத்தல்வாதத்தை (Reductionism) முற்றிலும் மறுத்தது. உயிர்சக்தி என்ற கருதுகோள் தொகுத்து அறியும் தர்க்க (Deductive Logic) முறைப்படி முன்வைக்கப்பட்டது. சுருக்கமாக சொல்வதென்றால், நாம் அல்லது உயிர் என்று ஒன்று இங்கு இருப்பதே உயிர்சக்தி இருப்பதற்கு நிரூபணம் ஆகும். நாம் அல்லது உயிர் இங்கு இல்லை என்று நிரூபிக்காத வரை, உயிர்சக்தி உண்மை என்றே எடுத்துகொள்ள வேண்டும் என்று வாதிட்டனர்.
மருத்துவ சிந்தனைகளின் முரணியக்கம்
ஹிப்போகிரேடெஸ் காலத்துக்கு பின்னர் முக்கியமான ஐந்து வித மருத்துவ பள்ளிகள் தோன்றிவிட்டன.
Dogmatic: ஹிப்போகிரேடெஸ் முறையை பின்பற்றுபவர்கள். ஒரு நோய் வெளிப்படுத்தும் அறிகுறிகள் நோயை ஏற்படுத்தும் மறைக்கப்பட்ட நிலையைக் குறிக்கின்றன. மறைக்கப்பட்ட நிலையை அறிந்தால் மட்டுமே ஒரு மருத்துவர் நோயாளிக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்று கருதினர். ரோமானிய மருத்துவர் கேலன் இந்த மருத்துவமுறையை சார்ந்தவர்.
Methodist: அஸ்க்லிபியட்ஸ் (Asclepiades) உருவாக்கிய அணுக்கொள்கை அடிப்படையில் இந்த உடலானது சிறு அணுக்கள் நாடிகளின் வழியாக நகர்கின்றன என்றும், இந்த நாடிகள் இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ மாறுவது நோயை உண்டாக்குகிறது என்றும் நம்பினர். ஒரு நோயாளிக்கு என்ன நோய் என்பதை அறிந்தவுடன், பின்பற்ற வேண்டிய சிகிச்சை இயல்பாகவே தெளிவாகத் தெரிகிறதென்று கருதுகிறது. இது ஊகம் அல்லது அவதானிப்பின் விஷயம் அல்ல, நோய் பற்றிய உடனடி அறிவின் விஷயம் என்று கருதுகின்றனர். கேலன் இவர்களை கடுமையாக மறுத்து முறைமையற்றவர்கள் (Methodless) எழுதியுள்ளார்.
Rationalist: உடலின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள், ஆரோக்கியம் மற்றும் நோய் பற்றி ஒரு கருதுகோளை உருவாக்குவதற்க்கு பகுத்தறிவை பயன்படுத்த வேண்டுமென்றனர். நோய்க்கு கண்டிப்பாக ஒரு காரணம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்குமென்று நம்பினர். மேலும் தர்க்க முறைப்படி அவற்றை ஆராய்ந்து சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டுமென்றனர். டி மெடிசினா என்ற நூலை எழுதிய ரோமினிய மருத்துவர் கெல்சஸ் (Aulus Cornelius Celsus) இப்பள்ளியின் முன்னோடியாக கருதப்படுகிறார்.
Empiricist: அன்றாட அனுபவம் மற்றும் கண்ணுக்கு தெரியும் உண்மை என்பவை கோட்பாடுகளை விட மேம்பட்டது என்ற அரிஸ்டாட்டில் கொள்கை அடிப்படையில் உருவாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. நோயின் வெளிப்படையான காரணங்களைப் புரிந்து கொள்வது அவசியம், ஆனால் மறைக்கப்பட்ட காரணங்கள் மற்றும் இயற்கை செயல்கள் பற்றிய விசாரணை பயனற்றது. அது எவ்வளவு தர்க்க ரீதியாக இருந்தாலும், பகுத்தறிவுடன் முன்வைக்கப்பட்டாலும் அதனால் பெரிய பயன் இல்லை. ஏனெனில் இயற்கை புரிந்துகொள்ள முடியாதது என்று கருதுகின்றனர். அவதானிப்பு (clinical observation), நோயாளிகளை விசாரிக்கும் முறை (case taking) ஆகியவற்றை மருத்துவர் தன் அனுபவத்தினால் ஒப்பீடு செய்து சிகிச்சை அளிக்க முடியும் என்று நம்பினர். அலெக்ஸாண்ட்ரிய மருத்துவர்கள் ஹெரோஃபிலஸ் மற்றும் எராசிஸ்ட்ராடஸ் ஆகியோர் எம்பிரிசிஸ்ட் பள்ளியின் ஆதரவாளர்களாக இருந்தனர்.
Pneumatists: மற்ற குழுக்களைப்போல் அல்லாது, இவரகள் ஹிப்போகிரேடெஸ் முன்மொழிந்த Pneuma என்ற வெளிப்புற நம்பிக்கையை சார்ந்து நோய்கள், அதன் சிகிச்சை முறைகளை மேற்கொண்டனர். Pneuma என்பதை பிரணானன் என்று எளிமையாக மொழிபெயர்க்கலாம். அதை இந்த பிரபஞ்சம் எங்கும் பரவி இருக்கும் ஒரு தெய்வ ஆற்றலாக கருதினர்3.
நேர்ச்சைக்கு விடப்பட்ட ஆட்டின் கல்லீரலை வைத்து நோய்க்கு வருகுறி உரைக்கும் சுமேரியன் தொன்மத்தையோ அல்லது ப்ரோமிதியஸ் கல்லீரல் மீண்டும் மீண்டும் வளரும் தொன்மத்தையோ, நான்கு ஹியுமர் உருவாக்கும் கல்லீரல் என்ற தத்துவத்துடன் இணைக்கும்போது நமக்கு கிடைக்கும் சித்திரத்தின் சிந்தனைப்பாய்ச்சல் ஆர்வம் ஊட்டக்கூடியது.
எங்கோ இருக்கும் கடவுளரிடம் மருத்துவ அறிவு அல்லது இளமைக்கு திரும்பும் மூலிகை இருக்கும் என்ற எண்ணத்தில் இருந்து, தன் கண் எதிரே தோலை உரித்து புதியதாக/இளமையாக அல்லது மறுபிறப்பு என்று உருவகமாக சொல்லத்தக்க உருமாறும் பாம்பிடமிருந்து மருத்துவ அறிவு அஸ்க்லிபியஸ்க்கு வந்து சேருகிறதென்பது கவித்துவமும் அறிவியலும் முயங்கி மானுட அறிவை பிரசவிக்கும் இடமாக நாம் கொள்ளலாம்.
இதுவரை பார்த்த கொள்கைகள் குறுகிய கால மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு விளக்கத்தை அளிக்கின்றன. ஆனால், திடீரென்று தோன்றி மக்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்த கொள்ளை நோய்களை எப்படி விளக்கிக்கொண்டது மருத்துவம்? கடவுளரின் சாபம் என்பதை மறுத்து அதற்கு எந்த தத்துவத்தை முன்வைக்கும்? பொ யு மு மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவில் ஆட்சி புரிந்த சந்திர குப்த மௌரியருக்கும், கிரேக்க மருத்துவத்துக்கும் இன்று நாம் எடுத்துக்கொள்ளும் நோய்த்தடுப்பூசிகளுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? நான்கு ஹியுமர் தத்துவம் இளமையான இரத்தத்தை முதியவர்களின் உடலில் செலுத்தினால் இளமை மீளுமென்ற கருதுகோளுக்கு இட்டுச்செல்லுமா?
சான்றாதாரங்கள்
- https://www.greekmedicine.net/history/Pre_Hipocratic_Physicians.html
- https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC2672651/
- Galen’s Method of Medicine, Edited and Translated by Ian Johnston and G. H. R. Horsley
