- குமார சம்பவம் மஹா காவ்யம்
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 2
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 3
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 4
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 5
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 6
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 7
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 8
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 9
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 10
- குமார சம்பவம்: பாகம் – 2
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 9
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 13
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 14
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 15
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 16
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 17
அத்யாயம்-15
சேனாபதியாக வந்திருப்பவன் பரமேஸ்வரனுடைய மகன் என்ற செய்தியே தைத்யர்களின் உத்சாகத்தை வடியச் செய்தது. குமாரனை முன்னிட்டுக் கொண்டு தேவர்கள் இந்திரனின் படை வீரர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் – இந்த செய்தியைக் கேட்டு அவர்கள் எட்டிப் பார்த்து அந்த சேனையின் அளவைக் கண்டு திகைத்தனர்.
மன்மதனை எரித்தவன் மகனா? எதிரிகளை நிச்சயம் வெல்லக் கூடியவனே, அவனிடம் நாம் யுத்தம் செய்வது எந்த அளவு பலன் தரும் என்ற சிந்தனையும் எழ, யோசித்தனர். இது வரை வெற்றியே கண்டு வந்துள்ளோர். இவர்களை வெற்றி கொண்டு நமது செல்வ சம்பத்துக்கள் பெருகும், விஜய ஸ்ரீ நம்மிடையே இருக்கிறாள் என்று நம்பினோம். இந்த பெரும் படையுடன் வந்து நிற்பவர்கள் தாயாதிகளான இந்திராதி தேவர்கள். (கஸ்யபர் என்பவரிடம் பிரஜைகளை பெருக்க வேண்டும் என்று பிரம்மா சொல்லி மனைவிகளையும் கொடுத்தார். அவர் தான் முதல் தந்தை. ஏழு மனைவிகள். அவர்களில் திதி, அதிதி என்ற இரு மனைவியர்களிடம் பிறந்தவர்களே திதியின் மைந்தர்கள் தைத்யர்கள், அதிதி மைந்தர்கள் அமரர்கள் என்ற தேவர்கள் அதனால் தாயாதிகளே) பின் குறிப்பு-4
செய்தியை தைத்யாதி பதியான தாரகனிடம் வந்து, பணிவுடன் கை கூப்பி வணங்கி, மன்மத சத்ருவின் மகன் வெற்றி கொள்ளும் நோக்கத்துடன் வந்து நிற்கிறான். அவனை பின் தொடர்ந்து ஏவல் செய்பவர்கள் போல பணிந்து ஜம்ப சத்ரு என்று புகழ் பெற்ற இந்த்ராதி தேவர்களும் வருகிறார்கள். இது வரை நமக்கு அடங்கி தாஸர்களாக இருந்தவர்கள், பல முறை நம்மிடம் தோற்றவர்கள் தைரியமாக வந்து நிற்கிறார்கள் என்றால், பின் பலமாக மகேசநின் மகன் இருக்கிறான் என்பது தான் உண்மை என்றனர். அதனால் என்ன, அவனையும் சேர்த்து ஜயிப்போம் என்றவன் ஹா ஹா ஹா என்று சிரித்தான். இப்படிச் சொன்னாலும் கோபம் மேலிட, தன் பலத்தில் கர்வம் கொண்டவன் பல்லைக் கடித்தபடி, , மூவுலகையும் யுத்தம் செய்து ஜயித்தவன் நான் என்ற கர்வமே மிகுந்து தெரிய, தன் சேனாபதிகளிடம் எதிர்த்து போரிட ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னான்.
பெரிய சேனைகளின் தலைவர்கள், தங்களுக்குள் கூடி பேசி, உடனடியாக ஆயுதங்களுடன் அந்த மாளிகையின் முற்றத்தில் வந்து கூடினர். வாயில் காப்போன், ஏற்கனவே அவர்களிடம் இந்திரனின் பெரும் படை எதிர்க்க வந்துள்ளதையும், சேனைத் தலைவனாக இருப்பது மகேசனின் குமாரன் என்பதையும் தெரிவித்திருந்தான். அதையும் அறிந்த சேனைத் தலைவர்களும் கடல் போல பரந்த சேனை, வீரர்களுடன் வேக வேகமாக வந்து இணைந்து கொண்டனர்.
தானும் (பலசாலி) பலி, எதிரியும் பலாராதி (பலி என்ற தைத்யனை வென்றவன்), அவனுடன் மோத
திக்கஜங்களுக்கு இணையான தன் யானைப் படையுடன், பூ லோக பெரும் கடல் போன்ற தன் வீரர்களுக்கு முன்னோடியாக ரதத்தில் ஏறினான் தாரகன்.
யுக முடிவில் வரும் ப்ரளயம் போல இரைச்சலும், அலை அலையாக நகர்ந்த வீரர்களும், அவர்களின் கொடிகள் உயரத்தில் போட்டி போட்டுக் கொண்டு உரசி கவனத்தை ஈர்ப்பதாகவும் இருந்த இடையிடையே பெரிய குடைகள், இவைகளுடன் கிளம்பிய சேனை கிளப்பிய புழுதியும் ஆதவனை மறைத்தன. தலைவனையே நோக்கியபடி படை வீரர்கள் முன்னேறினர். இவர்களின் வேகமும், ஆரவாரமும் திக்கஜங்களை ஆட்டுவித்தன. அவர்களின் வெண்மையான தந்தங்கள், இந்த புழுதிகளால் மலினமடைந்தன.
மலைகளின் இடை வெளிகளில் பாறைகள் உரசி தாங்களாகவே காட்டுத் தீ பரவுவது போல,தாரக சேனையின் படக வாத்யங்கள் கிளப்பிய நாதம் பெரும் ஓசையாகி ஆகாய கங்கையையே திடுமென ப்ரவாஹமாக ஓடி, அதனால் வெள்ளக் காடாக ஆயிற்று. அதனுடன் போட்டியிடுவது போல அவளும் தன் நீர் பெருக்கையும், ஆரவாரத்தையும் அதிகரித்து விட்டது போல இருந்தது. அந்த வேகத்தில் சுவர்கத்தின் மாளிகைகளையும் முழுக்காட்டி விட்டாள். முதல் துர் நிமித்தம்.
தாரகனுடைய சேனைகள் கிளம்பி நின்றவைகள் இந்த நதியின் வேகத்தால் ஒரு க்ஷணம் ஸ்தம்பித்து நின்றது போல நிற்கவும், ஹே! தாரக! என்னுடன் நீயும் கீழ் நோக்கி போகும் நாள், (பாதாளம் – தைத்யர்களின் இருப்பிடம்) போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று சொல்வது போல இருந்தது.
திடுமென கழுகுகளும், புறாக்களும் கூட்டமாக ஆகாயத்தில் வட்டமிட்டன. ஆதவனின் ஒளியையே மறைத்து விடும் அளவு அதிக எண்ணிக்கையில் பறந்தன. பெரும் போர், தோற்கப் போகும் தைத்யர்கள் மடிந்து விழுவர் என்று மாமிச பக்ஷிகளான அவை எண்ணியதோ. இரண்டாவது துர் நிமித்தம்.
குதிரைகளும், யானைகளும், ஸூரியனின் ஒளி குறையவும் தடுமாறின. ஏற்கனவே புழுதியால் கண்கள் பாதிக்கப் பட்டவை, உள்ளுணர்வால் அஸ்தமிக்கும் நேரம் ஆகவில்லையே என்று நினைத்தோ, குடைகளும், த்வஜங்களும் காற்றின் போக்கை மாற்றி விட்டதால் இயற்கையின் போக்கில் மாற்றங்கள் வந்து விட்டனவா என்றும் மயங்கின போலும். இது மூன்றாவது தடை.
இயல்பான தங்கள் விஷ வாயுவால், சுற்றுப் புறத்தையே பயங்கரமாக ஆக்கியபடி தாரகனின் படைகளுடன் சர்ப்பங்கள் மலையிலிருந்து உருண்டு விழும் பாறைகள் போல வந்து விழுந்தன. காற்றினால் அவதியுற்ற தேவ படையினரும், விலங்குகளும், திடுமென வந்த தீயின் நாக்குகள் தங்கள் மேல் பட்டது போல உணர்ந்தனர். இது நாலாவது தடை.
ஆதவனைச் சுற்றி கரு வளையம் தெரிந்தது. இதுவும் ஒரு உத்பாதம் வரப் போகும் கெடுதலை அறிவிக்கும் என்பர். இது ஐந்தாவது சகுனத் தடை.
இயற்கைக்கு மாறாக ஆதவனின் ஒளி மண்டலத்தில் கரு வளையம் தோன்றியதைக் கண்ட குள்ள நரிகள் ஆதவனை நோக்கிய முகத்துடன் பயங்கரமாக ஊளையிட்டன. இப்படி விலங்குகள் ஊளையிடுவதும் அபசகுனமாக சொல்லப் படுகிறது. ஆறாவது, ஏழாவது தடைகள்.
பகல் வேளையிலேயே தாரா கணங்கள் வேகமாக வந்து விழுந்தன. தாரகனின் சேனையைச் சுற்றி நாலா புறமும் விழுந்தன. வரும் கெடுதலைச் சொல்லும் இதுவும் உத்பாதம் எனப்படும். இது எட்டாவது. மேகமே இன்றி மின்னல்கள் தென் பட்டன. பளீரென்ற ஒளிக் கற்றைகளுடன் மின்னல்கள் மழைக் காலத்தில் நீருண்ட மேகங்கள் நிறைந்திருக்கும் சமயங்களில் தோன்றுவது இயல்பு. இதுவும் ஒரு கெடுதலே. மின்னல் அகாலத்தில் தோன்றியதே ஒரு உத்பாதம், கீழ் நோக்கி பாய்வது போல தென் பட்டதும் இயல்பாக இல்லாததால் இவை ஒன்பதாவது, பத்தாவது சகுனத் தடைகள், தாரகனின் தோல்வியை குறிக்கின்றன என ஊகித்தனர்.
அந்த சமயம் ஆகாயத்தில் மேகங்கள் எதுவுமில்லாமல் நிர்மலமாக இருந்தது திடுமென பல கழுதைகள் ஓலமிடுவது போல ஆரவாரத்துடன் கற்கள் விழுவது போலவும், நெருப்புத் துண்டுகள் போலவும் மழை பெய்யலாயிற்று. நீரில் ரத்தம் தோய்ந்த உடல் பாகங்கள், எலும்புத் துண்டுகளுடன் தகிக்கும் தணல் போல எங்கிருந்து வருகிறது என்பதே தெரியாமல் மழை நீருடன் கலந்து விழுந்தன. இது பதினொன்றாவது.
ரத்தம் தோய்ந்த (சிவந்த அல்லது கலங்கிய நீர்) எலும்புகள் போல கனமான நீர் தாரைகளுடன் மழை என்பது (சிலேடையான இரு பொருளுடைய பதங்கள் ) பன்னிரெண்டாவது.
கழுதையின் குரல் போன்ற மழை ஓசை என்றது பதின் மூன்றாவது உத்பாதம்.
மலை முகடுகளில் வீசி அடித்த மழை கர்ஜனையாக கேட்டது. மலையின் குகைகளில் எதிரொலித்து மலை சிகரங்கள் பெயர்ந்து விழுவது போன்ற பிரமையை அளித்தன. காதுகள் கிழிந்து விடும் போன்ற பேரிரைச்சல். இது பதினாலாவது உத்பாதம்.
தாரகனின் படை நடுவில் கடையப் பட்ட கடல் போல கொந்தளிக்கலாயிற்று. பூ கம்பம் – பூமி ஆட்டம் கண்டது. பெரிய மரங்கள் ஆடுவது போல பெரிய யானைகள் ஆடி விழுந்தன. குதிரைகள் தடுமாறின. படை வீர்கள் மரங்கள் சாய்வது போல இருந்த இடத்திலேயே விழுந்தனர். இது பதினைந்தாவது.
முகத்தை தூக்கி ஆதவனைக் கண்ட பல அசுரர்கள் என்ன நடக்கிறது என்பது புரியாமல், உரத்த குரலில் அழ ஆரம்பித்தனர். ஒருவரையொருவர் கருணையுடன் பார்த்தபடி ஊர் திரும்பினர். பதினாறாவது உத்பாதம்.
தாரகாசுரன் அவர்களைத் தடுத்து, திரும்ப யுத்த களத்திற்கே செல்லப் பணித்தான். विनाश काले विपरीत बुद्धि: -வினாச காலே விபரீத புத்தி: என்பது இது தான். சகுனங்கள் சாதகமாக இல்லை என்பதை பொருட் படுத்தாமல் கோபித்தான். எடுத்த காரியத்தை எப்பாடு பட்டாலும் தொடர்வதே வீரம் என்றான்.
ஆலோசகர்களான மந்திரிகள் சந்தேகப் பட்டனர். இந்த அளவு விபரீதமான சகுனங்கள் நல்லதல்லவே என நினைத்தாலும் ஆத்திரத்தால் அறிவை இழந்தவன் போல தடுப்பவனை நல்வழி படுத்த முடியாது என்பதால் உடன் யுத்த களம் திரும்பினர். கண் மூடித் தனமான ஆத்திரம். அத்துடன் ஆணையிடுகிறான். இந்த சமயம் அவனுக்கு செய்யும் நல் உபதேசம் வீணே.
எதிர் காற்று வீசி அடித்து பொன் மயமான தாரகாசுரனுடைய குடை விழுந்தது. பெரிய சுவர்ண பாத்திரம் போன்ற அது தலை கீழாக விழுந்ததைக் காண, பின்னால் யுத்த முடிவில் யமன் பூமிக்கு பாரணை- உபவாசம் முடிந்து செய்யும் உணவு- அனுப்ப ஏதுவாக இருக்கும் என்று கவியின் கல்பனை.
அசுரனுடைய மௌளி- கிரீடம் பின்னால் தலையே விழப் போகிறது என உணர்ந்தது போல, அதில் பதித்திருந்த உயர் மணிகளை உதிர்த்தது போலவும், அவை விழுவது கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் விழுவது போலவும் இருந்த தாக கவியின் கற்பனை. மகுடம் விழுவது நல்லதல்ல, தோல்விக்கு அறிகுறி என்பதால் வருத்தப் பட்டு கண்ணீர் சிந்துவதாக காவ்ய அலங்காரம்.
கழுகுகளை துரத்தினாலும் அவை பின் தொடர்ந்தன. யுத்தத்தில் தாரக படையினர் மாள்வார்கள், நல்ல உணவு என்று நினத்தோ, அவை அகலுவதாக இல்லை.
போர்க் கொடிகளின் நடுவில் திட்டு திட்டாக கருமையாக ஏதோ வரைந்தது போல காணப்பட்டன. படம் விரித்து ஆடும் சர்ப்பங்களுக்கு இணையாக அவை ஆடும் சமயம் ரத்னங்களும் அவைகளின் முகங்கள் நடுவில் கருமையாக தெரிவது போலவும் இருந்ததாக கவியின் வர்ணனை.
படையின் ஒழுங்கு கலைந்ததாலோ, காற்று வேகமாக வீசியதாலோ, ரதத்தில் பூட்டியிருந்த குதிரைகளின் பிடரி மயிர் பின் பக்கமாக விசிறி போல பறந்தன. செந்நிற கேசம், அக்னி ஜ்வாலை போல காணப்பட்டன. இதுவும் கவியின் வர்ணனையே.
இந்த அப சகுனங்களால் சற்றும் பாதிக்கப் படாமல் தாரகாசுரன் முன்னேறினான். அந்த சமயம் அசரீரி வாக்கு கேட்டது. ‘ ஹே! மதாந்த! புஜ பலத்தால் கர்வம் கொண்டு யாரிடம் போர் என்பதை மறக்காதே. இந்திராதி தேவர்களை தலைமை தாங்குபவன் புராரியின் மகன் என்பதை எண்ணி போருக்கு செல்வதை நிறுத்து’
குஹன்- மகேஸ்வரனின் மகன் பிறந்து ஆறு நாட்களே ஆகின்றன. இருட்டை கிழித்துக் கொண்டு வரும் ஒளி போல இருக்கிறான். அவனை எதிர் கொள்வது உனக்கு நல்லதல்ல. இந்த குமாரனுடன் உனக்கு என்ன விரோதம்? வானத்தை தொட்டுவிடும் போல இருந்த க்ரௌஞ்ச மலையின் நூறு சிகரங்களுடன் அதன் மலைச் சாரல்களுடன் பிளந்து விட்டான். அவன் பாணம் அந்த அளவு கூர்மையானது, குறி தவறாதது. அவனுடன் மோதுவது உனக்கு நன்மையும் அல்ல, உசிதமும் அல்ல.’
ஜமதக்னி மகன் பரசுராமர் யாரிடம் தனுர் வேதம் கற்றாரோ, எதிர்த்த அரச குலங்களை அழித்து, அவர்கள் ரத்தம் நிறைந்த குளத்தில் தர்ப்பணம் செய்தாரோ அவருக்கு உபதேசம் செய்தவரே, பரமேஸ்வரன் தான். அந்த பரசுராமரே கூட, தற்சமயம் அவருடைய குமாரன் குஹனோடு மோத மாட்டார். கர்வப் படாதே, உன் பலம் அவருக்கு முன் ஒன்றுமில்லை. குஹனிடம் விரோதம் வேண்டாம்’
நான் யுத்த பூமியிலிருந்து திரும்பி போனால் மட்டும் விடுவாரா, என்னை வதம் செய்ய மாட்டார் என்று என்ன நிச்சயம்? என்று கேட்பாயோ, புராரி மகன் கருணை மிக்கவன். அவனை சரணடைந்து நீண்ட காலம் வாழ்வாய். அவன் ஜகத் சுவீரன், உலகிலேயே ஏக வீரன். அதில் தான் உன் நன்மை உள்ளது. அவன் கையில் உள்ளது உயர்ந்த சக்தி ஆயுதம், அதற்கு பலியாகாதே. சரணடைந்தவனை காப்பவன் அவன்.
இதைக் கேட்ட பின்னும் தாரகன் பின் வாங்குவதாக இல்லை. மூவுலகையும் என் பலத்தால் ஆட்டம் காண வைத்தவன் நான், இச்சிறுவனுடைய சக்தி ஆயுதம் எம்மாத்திரம் என நினைத்து உரத்த குரலில் பதில் இறுத்தான்.
ஆகாயத்தில் மறைந்து அசரீரியாக உபதேசம் செய்பவர்களே, கேளுங்கள். நீங்கள் என்ன சொல்வது? தேவர்கள் அனைவரும் கேளுங்கள். பிறந்து ஆறே நாளான மகேசனின் மகன் உங்களுடன் இருப்பதால் புதிய பலம் பெற்று விட்டீர்களோ, இங்கு எதிரியாக நிற்கும் எங்களிடம் அடி பட்டு ஓடி ஒளிந்ததை மறந்து விட்டீர்களா? அந்த சமயம் , உடல் முழுவதும் காயங்களுடன் தப்பி ஓடினீர்களே, அதே கதி தான் இப்பொழுதும் வரப் போகிறது, நினைவு இருக்கட்டும். என்றான்.
ஹே தேவர்களே! அந்த சிறுவன் உங்களுடன் சேர்ந்ததால் பரிதாபமாக வாழ் நாள் முழுவதும் துன்பம் அனுபவிக்கப் போகிறான் என்பது நிச்சயம். அல்லது சிவ குமாரன் என்பதால் பாலனாக இருப்பவன் உடனே தபஸ்வியாக ஆவான். திருடனுடன் சேர்ந்தால் என்றும் திருடனாகவே அறியப் படுவான் என்பது போல. அல்லது வீரனானால் முதலில் உங்களையே அழிப்பான். அதனால் உங்கள் அனைவரையும் அழித்தபின் அவனையும் ஒரு கை பார்ப்பேன் என்றான்.
இப்படி குரோதத்துடன் தன் பலத்தின் பெருமையில் பேசியவனிடம் பயந்து தேவர்கள் வெகு தூரம் விலகிச் சென்றனர். அவனிடம் பயங்கரமான வாள் இருக்கிறது. அது ஒன்றே போதுமானது. நம்மை அடியோடு அழிக்க. ஒருவரையொருவர் முட்டிகளால் இடித்து தள்ளிக் கொண்டு ஓடினர்.
பலமாக சிரித்த தாரகன், தன் சிறப்பான ஆயுதமான வாளை உறையிலிருந்து எடுத்து கையில் எடுத்துக் கொண்டான். சாரதியைப் பார்த்து, வாஸவன்-இந்திரன் இருக்குமிடம் போ என்று கட்டளையிட்டான். வேகமாக ஓட்டு.
மனோ வேகத்தில் ரதத்தை ஓட்டிய சாரதி, கடல் போல திரண்டிருந்த தேவ சேனைகளின் அருகில் சென்றான். வீரன், அதிலும் யுத்தம் விரும்புபவன், தன் தோள்களின் பலத்தால் எதிரிகளை வீழ்த்தும் ஆற்றல் உடையவன், எதிரில் ஒழுங்காக வகுக்கப் பட்ட பெரும் சேனையைக் கண்டதும் குதூகலமாக உடல் புல்லரிக்க, உத்சாகமான போர் விளையாட்டை விளையாடத் தயாரானான். வீரர்களுக்கு தங்களுக்கு சமமான வீரனைக் கண்டால் உத்சாகம் வருவது இயல்பு. அதனால் வரும் ஆனந்தம். அவர்களைப் பார்த்து ஏன் தாமதிக்கிறீர்கள், தொடங்குவோம் யுத்தம் தொடங்கட்டும், என்று அறை கூவினான்.
தாரகாசுரனின் வீரர்கள் இந்திரனின் தேவ படையினரை நெருங்கினர். தங்கள் பெயரையும் பதவியையும் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டு விரைவாக முன்னேறினர். தேவர்கள் கூட்டம் நேருக்கு நேர் தாரகனுடைய பலசாலிகளான போர் வீரர்களையும், காணவே பயங்கரமாக இருந்த பெரு உருவங்களையும், ஆற்றலுடன் தன்னம்பிக்கையுடனும் இருந்தவர்கள், யார் அந்த சிவ குமாரன் என்று ஓரக் கண்ணால் பார்த்த படியே வருவதைக் கண்டு பயந்தனர்.
கார்த்திகேயன், எதிரி பலத்தையும் கவனித்துக் கொண்டான். தன் பக்ஷத்து வீரர்களின் பயத்தையும் பார்த்தான். அம்ருதம் பொழியும் தன் கடைக் கண்ணால் அனைவரையும் பார்வையாலேயே வருடி ஆட்கொண்டு பயப்பட வேண்டாம் என்று அபயம் அளித்து, கவலையின்றி யுத்தம் செய்வோம் என்று ஆறுதலாக சொன்னான். அதனால் பெற்ற உத்சாகம், சக்தி தரனான குமாரன் இருக்கிறான் என்ற தைரியமும், போர் செய்ய தூண்டுதலையும் பெற்றனர். நமக்கும் சக்தி இருக்கிறது எதிர் நின்று போர் புரிய என்ற நம்பிக்கையுடன் கிளம்பினர்.
இரு பக்கமும் சமமான பலமும், உயர்ந்த ஆயுதங்களும் வைத்துக் கொண்டு போர் தொடங்கியது. தாரகனின் அரசவை பாடகர்கள், அவனுடைய பெருமைகளை, தீர செயல்களை பாட்டாக பாடினர். அதே போல தேவ சைன்யத்திலும் தங்கள் பெருமைகளையும், சாதனைகளையும் பட்டியலிட்டு பாடினர்.
லோக சம்ஹாரம் எனும் பிரளய காலம் போல இருந்தது. யுத்தம் செய்வதே குறியாக இருந்தவர்கள் அதன் பலா பலன்களை நினைக்கவேயில்லை. இரு தரப்பினரும் தர்மத்தை மீறாமலே யுத்தம் தொடர்ந்தது. தங்கள் திறமைகளை காட்டவே முயன்றனர். இரு பக்கமும் கடல் போன்ற சேனை, அணி வகுத்து நின்ற போர் வீரர்கள். ஒருவருக் கொருவர் சளைத்தவரில்லை என்ற மனப்பாங்கு, கோலாஹலமான ஆரவாரமும், மலைகளின் உச்சியில் இருக்கும் பெரிய பழைய மரங்கள் விழுந்தாற் போல, கல கல சப்தமும், காலம் என்ற அதிதியை வரவேற்கும் விதமாக பிரும்மாண்டமே வயிறாக அதையே கிழித்து வீசுவது போன்ற பயங்கரமான அட்டகாசம்.
(இது வரை ஸ்ரீ காளிதாஸரின் குமார சம்பவம் என்ற மகா காவியத்தில் देवसेना प्रयाणम् தேவ சேனா ப்ரயாணம் என்ற பதினைந்தாவது அத்யாயம். )
