Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

அதிரியன் நினைவுகள் – 39

This entry is part 38 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மூலம்: மார்கெரித் யூர்செனார்

தமிழாக்கம்: நா. கிருஷ்ணா

உரோம் நகருக்கு மீண்டும் வந்தபோது, ​​பழைய லூசியஸைத் திரும்பக் காண நேர்ந்தது. இதற்கு முன்பு அவனிடம் சில வாக்குறுதிகள் கொடுத்திருந்தேன் ; சாதாரணமாக அத்தகைய உறுதிமொழிகளைக் காப்பாற்றுவதில்  சங்கடங்களுண்டு;  ஆனால் அவற்றை என்னால் கட்டிக்காக்க முடிந்தது. அதற்காக நான் அவனுக்குச் செங்கோலை கையளிக்க சத்தியம் செய்திருப்பேன் என்பதெல்லாம் உண்மையல்ல ; அப்படிச் செய்து ஆவதென்ன. ஆயினும் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் அவன் பட்ட கடன்களை அடைத்திருக்கிறேன்; அவனுடைய வம்புதும்புகளை பிறர் காதுகளுக்கு எட்டாமல் பார்த்துகொண்டிருக்கிறேன்; தாமதமின்றி அவனுடைய கடிதங்களுக்குப் பதில் எழுதியுள்ளேன். அக்கடிதங்கள் மகிழ்ச்சிக்குரியவை என்கிறபோதும், ஓயாமல் அவனுக்கோ அவனுடைய சினேகிதர்களின் பொருட்டோ பணம் உதவி கேட்டு எழுதப்பட்டிருக்கும். என்னுடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருந்தான்; விரும்பியிருப்பின் அவனை வெளியேற்றிருக்கமுடியும், ஆனால் அப்படியொரு எண்ணம் எனக்கு வந்ததில்லை. நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றவகையில் அவனுடைய உரையாடலிருக்கும்.  பொதுவில் பலராலும் அவ்வளவாகப் பொருட்படுத்தபடாத இந்த இளைஞன்தான், எழுதுவதொன்றையே தொழிலாகக்கொண்ட  மேதைகளைக் காட்டிலும் நன்றாகவும் கூடுதலாகவும் வாசித்திருந்தான். இதுதான் என்றில்லை மனிதர்கள், பொருட்கள், மரபுகள், கிரேக்க கவிதைகளை மிக துல்லியமாக உச்சரித்தல் என எல்லாவற்றிலும் அவனுடைய ஆர்வம் தலைசிறந்த வகையில் இருந்தது.  அவனுடைய  திறமையை அங்கீகரித்த செனெட் அவையில், சிறந்த பேச்சாளன் என்கிற நற்பெயரைச் சம்பாதித்திருந்தான்; அவனுடைய மேடைப்பேச்சுகள் தெளிவாகவும், அலங்காரமாகவும் இருந்த காரணத்தால் சொற்பொழிவுத்துறை ஆசிரியர்களுக்கு அவை உடனுக்குடன் முன்மாதிரிப் பேச்சாகப் பயன்பட்டன. நான் அவனை முதலில் நீதிமான் (Praetor) ஆகவும், அதன் பின்னர் கான்சல் (consul) ஆகவும் நியமித்தேன் ; அப்பணிகளைத் திறம்படச் செய்தான். இது நடப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர்,  எனது ஆட்சிகாலத் தொடக்கத்தில் மரணதண்டனையின் கீழ் தண்டிக்கப்பட்ட  கான்சல்களில் ஒருவரான  நைகிரினஸ்(Nigrinus) மகளை அவனுக்கு மணமுடித்து வைத்தேன்;  இத்திருமணப் பந்தம் அரசியலில் நான் கையாண்ட சமாதானப்போக்கைப் பிரதிபலிக்கும் சான்றாக அமைந்தபோதும், இதனை நான் பெரிய வெற்றியாகச் சொல்வதற்கில்லை ; காரணம் மணமுடித்த இளம்பெண் தன்னை  ஒருபொருட்டாக கணவன் மதிக்கவில்லையென்று வருந்தினாள்; இருந்தும் அவளுக்கு மூன்று பிள்ளைகள்; அவர்களில் ஒர் ஆண்குழந்தை. ( ஒருவன் தனக்காக அன்றி  குடும்பத்துக்காகத் திருமணம் செய்துகொள்ள வழிவகுக்கிற ஒப்பந்தம், இயல்பான காதல் விளையாட்டுகளுக்குப் பொருத்தமற்றது ) என்பது அப்பெண்ணின் ஏறக்குறைய ஓயாத முணுமுணுப்பிற்கு,  உற்சாகமற்று, மரியாதையின் நிமித்தம் அவன் தந்த பதில், அவனுடைய குழப்பமான கருத்தின்படி, ( பெண்கள் பகட்டான விழாக்களுக்கும், கொண்டாட்டங்களுக்குமான ஒரு தேவை ) ;  தவிரப் பிற காரியங்களையும் போலவே அவனுடைய உடலிச்சைக்கும் எளிதாகக் கீழ்ப்படியும் அடிமைகள் வேண்டியிருந்தனர். ஒரு கலைஞன் உயிரைக்கொடுத்துத் தலைசிறந்த படைப்பினை உருவாக்குவதுபோல, இவன் உடலின்பத்திற்கென்று  தன்னை அழித்துக்கொள்கிறவன்; ஆயினும் அவனைக் குற்றம் சொல்லும் இடத்தில் நானில்லை.

நான் அவனைக் கண்காணித்து வந்தேன். அவனைப் பற்றிய என்னுடைய அபிப்ராயத்தை அடிக்கடி மாற்றிவந்தேன் ; பொதுவாக நம்மோடு நெருக்கமாக இருக்கிற மனிதர்களிடத்தில் இப்படி நடந்துகொள்வது அரிது. ஒருவரைக்குறித்த முதல் அபிப்ராயத்திலேயே திருப்தி அடைவது நம்முடைய வழக்கம் ; அதுவே அவரைப்பற்றிய நம்முடைய இறுதி அபிப்ராயமாகவும் இருக்கிறது. சில சமயங்களில் வேண்டுமென்றே காட்டும் ஆணவமும், முரட்டுக்குணமும், போகிறபோக்கில் பிரயோகிக்கிற அற்பத்தனமான வார்த்தையும் என்னைக் கவலைகொள்ள வைத்தன; இருந்தும், அவ்வப்போது அவனுடைய நுண்ணறிவிலும், அது செயல்படும்விதத்திலும் என் மனைதைப் பறிகொடுத்திருக்கிறேன். விவேகத்துடன் அவன் வைத்த விமர்சனமொன்று, அவனொரு சிறந்த எதிர்கால அரசியல்வாதி  என்பதை உறுதி செய்தது. பிரெட்டோரியன் காவற்படைப் பொறுப்பை ஏற்றிருந்த மார்சியஸ் டர்போ, நாள்முழுக்கப் பணிசெய்த களைப்புடன் ஒவ்வொரு மாலையும் என்னைச் சந்திப்பார், நடப்பு விவகாரங்களைப் பேசுவோம் ; பகடை விளையாடுவோம்; அச்சமயத்தில் இவற்றையெல்லாம் அவருடன் பேசியிருக்கிறேன்; ஒரு சக்கரவர்த்திக்குரிய பணியை முறையாக நிறைவேற்றுவதற்கு லூசியஸுக்குள்ள சாத்தியங்களை இருவரும் மிகக்கவனமாக  திரும்பப் பரிசீலித்தோம். லூசியஸ் விவகாரத்தில் எனது கரிசனத்தை அறிந்த நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள், ஒரு சிலர் எனது விருப்பம்போல நடக்கும்படி ஆலோசனை கூறி விடைபெற்றார்கள்; உலகின் ஒருபாதியை அரசாள வாரிசை தேடுவதென்பது, கிராமப்புறத்திலுள்ள ஒரு வீட்டை ஏதோ தானமாக எழுதிக்கொடுக்கும் விவகாரமென இவர்கள் நினைத்திருக்க வேண்டும். நான் இரவில் அதைப்பற்றி யோசித்தேன்: லூசியஸ் முப்பது வயதை எட்டவில்லை:  முப்பது வயதில் சீசர் நிலைமையென்ன, அவரும் கடனில் சிக்கிய, ஊழல் அவப்பெயரை சுமந்ததொரு குடுமபத்தின் மகன்தானே? மன்னர் திராயான் என்னை வாரிசென்று அறிவிப்பதற்கு முன்பு, அந்தியோகியாவில் கழித்த மோசமான நாட்கள் நினைவுக்குவந்தன;  ஒரு மனிதனின் உண்மையான பிறப்பென்று சொல்லப்படுவது மெல்ல நிகழ்கிறது  என்பதை வேதனையோடு எண்ணிப்பார்த்தேன். பன்னோனியன் பிரதேசக் காடும் கரம்பும் அதிகாரப் பொறுப்புகள் பக்கம் எனது கண்களைத் திறந்தபோது, எனக்கு முப்பதைக் கடந்த வயது. அந்த வயதில் லூசியஸைக் காட்டிலும் நான் சாதித்தவனில்லை. இப்படி எதையெதையோ யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென மூச்சுத் திணறல், முந்தைய தாக்குதல்களைக் காட்டிலும் கடுமையாக இருந்தது, இனியொரு நிமிடம் தாமதிக்கக் கூடாதென்றுணர்ந்த மறுகணம் முடிவுக்கு வந்தேன். 

லூசியஸை வாரிசென்று தெரிவு செய்தேன்; அவனுடைய பெயர் தற்போது  ஏலியஸ் சீசர், அவன் வசம் தனது முன்னேற்றம் குறித்த கனவுகள் உண்டென்கிறபோதும், அலட்சியமும் உடன் வாசம் செய்தது; அவனுக்குத் தேவைகள் இருந்தன ஆனால் பேராசைக்காரனல்ல; அதேவேளை, எப்பொழுதும் எல்லாவற்றையும் பெறப் பழகியிருந்தான்; எனது முடிவைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டான். இப்பொன்னிறக் கேசம்கொண்ட பட்டத்து இளவரசனுக்கு மகுடம் சூட்டினால், வியக்கத்தக்க வகையில் அழகாக இருப்பான் எனப்பிதற்றும் மனநிலையிலிருந்தேன். தீங்கெண்ணங்கொண்ட மனிதர்களோ கடந்தகாலத்திய பாலியல் உறவுக்கு நான் செலுத்தும் கைம்மாறு எனக் கூற விழைந்தார்கள். தனது பட்டத்திற்கும், பதவிக்கும் ஓரளவிற்குத் தகுதியானவராக இருக்கும் ஒரு  தலைவனுடைய மனம் செயல்படும் விதத்தைப் பற்றி சரிவரப் புரிந்துகொள்ளாததால் வருகின்ற கோளாறிது. இதுபோன்றவற்றையெல்லாம், நான் கருத்தில் கொண்டிருந்தால், எனது  தேர்வுக்குரியவனாக லூசியஸ் ஒருவன் மட்டுமே இருந்திருப்பானென்று சொல்வதற்கில்லை. 

எனது மனைவி பாலட்டைனில் உள்ள அவளுடைய  இல்லத்தில் இறந்திருந்தாள்; தீபுரைக்காட்டிலும் அவள் விருப்பம் தொடர்ந்து பாலட்டைனாக இருந்தது;  அவளுக்கு முக்கியமென நினைத்த ஸ்பெய்ன் நண்பர்கள், உறவினர்கள் என்கிற சிறு சுற்றத்தோடு அந்நகரில் வசித்து வந்தாள். வார்த்தைகளில் கவனம், மரியாதை,  புரிந்துகொள்ள எடுக்கும் பலவீனமான முயற்சிகள் அத்தனையும் படிப்படியாக விலகிக்கொள்ள  எங்கள் உறவில் பகையும், கோபமும், மனக்கசப்பும் தலைகாட்டின; அவளும் தன் பங்கிற்கு கடும் வெறுப்பைப் பிரயோகித்தாள். அண்மைக்காலங்களில் பாலட்டைன் நகருக்கு அவளைப் பார்க்கச்செல்வேன்; நோய், அவளுடைய   கசப்பையும் சிடுசிடுப்பையும் மேலும் மோசமாக்கியிருந்தது; கடுமையாக என் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதற்குரிய வாய்ப்பை, என்னுடைய வருகை  அளித்ததால், அவளுக்கு அதில் நிம்மதி ; தவிர, அந்நியர்கள் முன்னிலையில் கண்ணியமின்றிப் பேசினாள். குழந்தைப்பேறின்றி இறப்பதில் அவளுக்கு மகிழ்ச்சி, பிறந்திருந்தால் அவர்கள் என்னைப்போல இருப்பார்கள் என்பது நிச்சயம்; அவர்களின் தந்தையிடம் காட்டிய வெறுப்பைப் பிள்ளைகளிடமும் காட்டியிருப்பாள். அவள் என்னிடம் காட்டிய  அன்பிற்கான சான்று,  வெறுப்புணர்ச்சி பொங்கி வழியும் இந்த ஒப்புதல் ஒன்றுதான்.  

எப்போதும் நம்முடன்  உறைந்திருக்கிற  ஒரு மனிதரின் சகித்துக்கொள்ளத்தக்க ஒருசில ஞாபகங்களை, அவரை நினைவுகூரச்  சிரமப்படுகிறபோது நாம் கிளறிப் பார்ப்பதுண்டு, அவ்வாறு  என்னுடைய மனைவி சபீனா பற்றிய நினைவுகளைத் தோண்டியதில், ஒரு சண்டைக்குப் பிறகு அவள் என்னுடைய பிறந்தநாளுக்காக ஒரு கூடைப் பழங்களை அனுப்பியது நினைவுக்கு வந்தது;     முன்பொரு முறை கட்டிலில் வைத்து என்னைச் சுமந்து செல்ல, தீபுர் நகராட்சியின் குறுகலான தெருக்கள் வழியாக செல்லவேண்டியிருந்தபோது, சபீனாவின் தாய் மத்திதியாவுனுடைய எளிமையான கோடைகால இல்லமாக ஒருகாலத்தில் திகழ்ந்த இல்லத்தைக் காணும் சந்தர்ப்பம் வாய்த்தது, நீண்டகாலத்திற்கு முன் கோடையில் ஒருசில  இரவுகளை அங்குக் கழித்துள்ளேன் ; அப்போது,காதலுடன் அவளை நெருங்கும்போதெல்லாம் சபீனா என்னிடம் குரூரத்துடனும் ஒட்டுதலின்றியும்   இருப்பாள் ; அதனைக் கசப்புடன் நினைவுகூர முடிந்தது. அதே ஆண்டு குளிர்காலத்தில் தீபுர் வில்லாவின் பணிப்பெண்ணான அரேட்டே காய்ச்சலில் பாதிக்கப்பட்டு இறந்திருந்தாள் ;  அவளுடைய இறப்பே  மனைவியின் மரணத்தைக்காட்டிலும் கூடுதலாக என்னைப் பாதித்தது. மருத்துவர்கள் நோய்பற்றிய கணிப்பில் தவறிழைத்ததின் விளைவாக, சக்கரவர்த்தினியாகிய என் மனைவி  கொடிய குடல்வலியால் அவதிப்பட்டு முடிவில் இறக்கவும் செய்தாள் ; அவளை நான் விஷம் கொடுத்துக் கொன்றதாகக் குற்றச்சாட்டெழுந்தது ; அர்த்தமற்ற இந்த வதந்தி எளிதில் நம்பகத்தன்மையும் பெற்றது. இப்படியொரு அபரிமிதமான குற்றத்தை இழைக்கும் தூண்டுதல் எனக்குள் ஒருபோதும் நேர்ந்ததில்லை   என்பது சொல்லாமலேயே விளங்கும். 

என் மனைவியின் மரணத்தால் அதிக நெருக்கடிக்கு ஆளானவர்  செர்வியானஸ். உரோமில் அவளுக்கென்றிருந்த செல்வாக்கைப் பழுதின்றி பெற்றிருந்தார்; ஆயினும் அவளுடைய மறைவோடு, பெரும் மரியாதைக்குரிய அவருடைய ஆதரவுகளில் ஒன்றை அவர் இழக்கும்படி ஆயிற்று. மேலும், அவர் தனது தொண்ணூறாவது வயதை எட்டியிருந்த காரணத்தால், என்னைப்போலவே இனியொரு நொடியைக்கூட வீணடிக்க கூடாது என்கிற நிலைமை. கடந்த சில மாதங்களாக, பிரித்தோரிய காவற்படை அதிகாரிகளடங்கிய சிறிய குழுக்களைத் தனதில்லத்திற்கு வரவழைக்க முயன்றார்; அவருடைய தள்ளாதவயதும் ஒருவித மூடத்தனமான மரியாதைக்கு வழி வகுத்துத் தர, அதைப் பயன்படுத்தி  நான்கு சுவர்களுக்குள் தம்மைச் சக்கரவர்த்தியாகக் கட்டமைக்கச் சில நேரங்களில் துணிவார். நான் சமீபத்தில் இராணுவ  இரகசியக் காவற்படை பிரிவைப் பலப்படுத்தியிருந்தேன்; இப்பிரிவினர் பொதுவில் அனைவராலும் வெறுக்கபட்டவர்கள் என்பதை  ஒப்புக்கொள்கிறேன்; ஆனால் நடந்த சம்பவங்கள்,  நமக்கு இவர்களின்  தேவையை உறுதி செய்தன. வயதான செர்வியானஸ் அர்சஸ் தம்முடைய பேரனுக்குச் சதிசெய்யும் கலையைக் கற்றுக்கொடுப்பதற்காக ஏற்பாடு செய்த இரகசிய சந்திப்புகள் அத்தனையும் எனக்குத் தெரியும். லூசியஸின் நியமனம், கிழவரை ஆச்சரியப்படுத்தவில்லை;  வாரிசு விஷயத்தில் என்னிடமிருந்த நிச்சயமற்ற தன்மையை, முடிவெடுத்துவிட்டு நான் மறைக்கிறேன்  என்பதாக இன்று நேற்றல்ல  வெகுகாலமாகவே நினைத்துவந்தார்; தத்தெடுப்பு விவகாரம் உரோம் நகரில் இன்னமும் சர்ச்சைக்குரிய விஷயமாக இருக்கப்போக, அத்தருணத்தை மனிதர் பயன்படுத்திக்கொண்டார். இவருடைய செயலாளர் கிரிசென்ஸ், நாற்பது ஆண்டுகால நம்பிக்கைக்குரிய விசுவாசி; இருந்தும் அதற்கீடான ஊதியம் பெற்றவரில்லை, எனவே விரக்தியிலிருந்தார், சதி அம்பலமானது; சம்பவத்திற்குத் திட்டமிட்டிருந்த நாள், இடம், கூட்டாளிகள் பெயர்கள், அவ்வளவும் தெரியவந்தன. என் எதிரிகளின் கற்பனைக்கு அதிகச் செலவில்லை; முந்தையகாலத்தில் நைக்ரினஸும், கொயட்டஸும் திட்டமிட்ட தாக்குதலை வெறுமனே நகலெடுத்திருந்தனர்; அதன்படி கேபிடோலியம்(Capitolium) நடைபெறவிருக்கும்  ஒரு சமயப் பண்டிகையின்போது என்னைக் கொல்லத் திட்டம் ;  எனது தத்தெடுத்த மகனும் என்னுடன் சாவான்.

எதிரி செர்வியானஸ் நீண்டகாலம் வாழ்ந்தாயிற்று என்கிற நிலையில்  அன்றிரவே முன்னெச்சரிக்கையாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை எடுத்தேன்; லூசியஸ் ஆட்சி அதிகார வாரிசுரிமைக்கு நேரக்கூடிய  அபாயங்களையெல்லாம் களைவதென முடிவெடுத்தேன். ஏறக்குறைய மணி பன்னிரண்டு; பிப்ரவரி மாதத்தின் அதிகாலை; செர்வியானஸ், அவருடைய பேரன் இருவருக்குமான மரணதண்டனை உத்தரவுடன் திரிப்யூன் ஒருவர் என்னுடய மைத்துனர் இல்லத்தில் ஆஜரானார்.  இடப்பட்ட உத்தரவு நிறைவேற்றப்படும்வரை, அதனைக் கொண்டுசென்றவர், செர்வியானஸ் இல்லத்தின் முன்கூடத்திலேயே காத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டார். செர்வியானஸ் தமது மருத்துவரை அழைத்துவரக் கட்டளையிட்டார்; பிரச்சினைகளின்றி அனைத்தும் நடந்தேறின. இறப்பதற்கு முன், அவருடைய விருப்பமெனத் தெரிவித்தது,  அவரைப்போல இல்லாமல் உடனடியாக எனக்கு மரணம் நேராமல் நான் தீராதநோயில்விழுந்து அவ்வேதனையில் மெல்லமெல்ல நான் சாகவேண்டுமென்பதாகும்; அவருடைய வேண்டுதல்படியே நடந்திருக்கிறது. 

இந்த இரட்டை மரணதண்டனைகளையும் மகிழ்ச்சியோடு உத்தரவிடவில்லை; தண்டனையை நிறைவேற்றிய பின்னர் அதற்காக வருந்தியதுமில்லை; குற்ற உணர்வு அறவே இல்லை. பழைய கணக்கை முடித்துவைத்தேன்,  அவ்வளவுதான். ஒரு மனிதனின் கடும் பகைமைக்கு வயது ஒரு போதும் காரணமாக முடியாது ; சொல்லப்போனால்  இப்பிரச்சினையில் நிலைமையை விபரீதமாக்கிய   சூழ்நிலைக்குப் பொறுப்புள்ளது. ஏக்கிபாவையும் அவருடைய கூட்டாளிகளையும் தண்டிப்பதற்கு வெகு நேரம் தயங்கினேன்; ஏக்கிபாவும்  முதியவர், செர்வியானஸும்  முதியவர், ஆயினும், சதிகாரனை விட மதவாதி மேல். ஃப்யூஸ்கஸைப்(Fuscus) பொறுத்தவரை அவன் இறப்பை ஒருவரும் பெரிதுபடுத்தப் போவதில்லை, சாதாரணமானவன்;  மிகமோசமான அவனுடைய பாட்டன் என்னிடமிருந்து பையனை  விலக்கி வைத்திருந்ததும் உண்மை; ஆயினும் என்னுடைய சகோதரி போலினாவுடைய  பேரன். ஆனால் யார் என்ன சொன்னாலும்,   வலுப்படுத்த எந்தப் பாசமும் உதவாதபோது, இரத்தப் பந்தங்கள் உண்மையில்  மிகவும் பலவீனமானவை. சாதாரண மனிதர்களிடம்கூடச் சொத்து விவகாரம் என்று வருகிறபோது இதனைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ஃப்யூஸ்கஸுடைய இளம்வயது, சிறிது  அவனிடம் பரிதாபம் ஏற்படுத்தியிருந்தது; பதினெட்டு வயது பூர்த்தியாகவில்லை.  ஆனால் பேரரசின் நலன் கருதி இப்படியொரு முடிவை எடுக்கவேண்டியிருக்க, அதைத்  தவிர்க்க இயலாததாகச் செய்தவர் முதியவயது  அர்சஸ் செர்வியானஸ். இந்த இரண்டு உயிர்களின் முடிவுகளைப் பற்றியெல்லாம் தற்போதைக்குச் சிந்திக்க எனக்கு நேரமில்லை, காரணம்  எனது சொந்த மரணத்திற்கு வெகு அருகில் நான் இருந்தேன்.

செர்வியானஸ்  நண்பர்கள் பழிவாங்கக்கூடும் என அஞ்சி, தொடர்ந்து வந்த நாட்களில், மார்சியஸ் டர்போ எங்களைச் சுற்றிலும் கண்காணிப்பை இரட்டிப்பாக்கினார். தாக்குதல், கலவரம், அரசுக்கு எதிராகப் புகார்களென்று எந்த அசம்பாவிதமும் இல்லை. நான்கு கான்சல்களைக் கொன்றொழித்து, பொதுமக்கள் கருத்துகளைப் புறம்தள்ளி அரசாளவந்த பழைய அதிரியன் இல்லை; தற்போது    பத்தொன்பது ஆண்டுகாலமாக ஆட்சியிலிருக்கும் பேரரசன். ஆட்சியும் அதிகாரமும் எனக்கு ஆதரவாக இருந்தது; ஒட்டுமொத்த சாம்ராச்சியமும் எனது எதிரிகளை வெறுத்தது ; துரோகியைக் களையெடுத்த எனது நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்திருந்தது.  ஃப்யூக்கஸ் விடயத்தில்கூடக் கருணைக்கு இடங்கொடுக்க மறுத்து, அவன் குற்றவாளியாகக் கருதப்பட்டான். மாறாக செனெட் அவையினர்  தங்கள் உறுப்பினர்களில்  ஒருவரை நான் இரண்டாவது முறையாகக் கொன்றிருப்பதை  மன்னிக்கப்போவதில்லை என்பதை அறிவேன்; ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக, செனெட் அவை வாய் திறக்கவில்லை; எனது இறுதிக்காலம்வரை மௌனம் காப்பார்கள்.  வழக்கம்போல ஆட்சியில் கருணையும், கடுமையும் சரிசமமாக கோலோச்சத் தொடங்கியது; செர்வியானஸ் ஆதரவாளர்கள் அஞசவேண்டியதில்லை என்கிற நிலைமை. இப்பட்டியலில் ஒருவருக்கு மட்டும் விதிவிலக்கு; அவர் நாடறிந்த கொடிய குணம்படைத்த அப்போலொடோரஸ், என்னுடைய மைத்துனரின் மொத்த இரகசியங்களையும் கட்டிக்காத்த ஒரே ஆசாமி ; ஆனால் செர்வியானஸுடன் அவரும் மாண்டிருந்தார். மிகுந்த ஞானமுள்ள இந்தமனிதர், எனது  முன்னோடியின்   விருப்பமான கட்டிடக் கலைஞர்; திராயான் பெருந்தூணை எழுப்பியபோது, அதனுடைய கற்பாளங்களைக் கலை நயத்துடன் அடுக்கியிருந்தார். எனக்கும் அம்மனிதருக்குமிடையே இணக்கமான உறவில்லை. என்னுடைய  கற்றுக்குட்டித்தனமான ஓவியங்களையும், மிகுந்த ஈடுபாட்டுடன் வரைந்த சுரை, பூசணிக் காய்களின் நிலை ஓவியங்களையும்  (natures mortes) அவர் கேலிசெய்வதுண்டு; என்னுடைய தரப்பிலும் ஓர் இளைஞனுக்குரிய அனுமானத்துடன் அவருடைய படைப்புகளை விமர்சிப்பேன். பின்னர் என்னுடையவற்றை இழிவுபடுத்திப் பேச ஆரம்பித்தார்; அந்த ஆளுக்குக் கிரேக்கக் கலையின் பொற்காலம் குறித்த ஞானம் துளியும் கிடையாது;  இந்த மேலோட்டமான தர்க்கவாதி நமது ஆலயங்களைப் பிரமாண்டமான சிலைகளால் நிரப்பியமைக்காக என்னை நிந்தித்தார்; அச்சிலைகளை  நிற்கவைத்தால்,  அவற்றின் நெற்றி கருவறை மண்டப வளைவுகளில் இடிபடுமென்பது அவரது வாதம். முட்டாள்தனமான இவ்விமர்சனம் என்னைக்காட்டிலும் சிற்பி பீடியஸை(Phidias) கூடுதலாகப் புண்படுத்தியது. இருப்பினும் இக்கடவுள்கள் ஒருபோதும் எழப்போவதில்லை என்பதைப்போலவே, நம்மை எச்சரிக்கவோ, பாதுகாக்கவோ, நமது திறனை மெச்சும் வகையில் வெகுமதியோ, அல்லது அதற்கு மாறாகத் தண்டனையோ அளிக்கப்போவதில்லை  என்பது நிச்சயம், அப்போலோடோரஸ் கொல்லபட்ட அன்று அவரைக் காப்பாற்ற  எழுந்திருக்காத கடவுள்கள் இனியா எழுந்திருக்கப் போகிறார்கள் ?

தொடரும்……

அதிரியன் நினைவுகள்

அதிரியன் நினைவுகள் – 38 அதிரியன் நினைவுகள் – 40
Exit mobile version