Site icon சொல்வனம் | இதழ் 378 | 08 நவ 2026

வரைநிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே

புக்திமுக்திதாயகம்

– காலபைரவாஷ்டகம்

முதல் பகுதி:

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி

அவர் கதையை நிறுத்தியதும் உண்மையை நோக்கிச் செல்லாத சொற்கள் ஜல்பமாகவும் விதண்டையாகவும் சிதறுவதற்கும் என் பதட்டத்திற்கும் தொடர்பிருப்பது புரிந்தது, நானும் எத்தனை முறை பேசுவதாக நினைத்துக்கொண்டு என்னையே பதற்றப்படுத்தியிருக்கிறேன் என்று தோன்றியது, இனி சிறிது நேரம் எதையும் சொல்லால் நிரப்ப வேண்டாம் என்று நினைத்தேன், ஜன்னலுக்கு வெளியே மரங்கள் கடந்துகொண்டிருந்தன, அவற்றைப் பார்த்துக்கொண்டிருப்பது எளிதாக இருந்தது, ஒரு மரத்தைப் பார்த்ததும் அது ஏன் மரம் என்று சொல்ல வேண்டியிருக்கவில்லை, நான் சாய்ந்து அமர்ந்தேன், அவர் கண்ணாடியில் என்னைப் பார்ப்பது தெரிந்தது, நான் எதையாவது கேட்பேன் என்று காத்திருக்கிறாரோ என்று தோன்றியது, கேட்க எதுவுமில்லை என்றும் தோன்றியது, இதுவரை கேட்டதற்கெல்லாம் அவர் பதில் சொல்லியிருந்தார், அந்தப் பதில்களிலிருந்து இன்னும் கேள்விகள் வந்திருந்தன, அவற்றுக்கும் பதில் சொல்லியிருந்தார், எனக்கு மட்டும் களைப்பாக இருந்தது, ஏன் இவ்வளவு களைப்பாக இருக்கிறது என்று கேட்டால் அதற்கும் அவர் பதில் சொல்லக்கூடும் என்று நினைத்தேன், அந்த நினைப்பே சலிப்பாக இருந்தது, நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது என்றேன், அவர் கண்ணாடியில் என்னைப் பார்த்தார், புரிகிறது என்பதற்காக இதுவே எனக்குப் போதும் என்று சொல்ல முடியவில்லை என்றேன், எது உண்மை என்று அறிந்து அதைச் சரியாகச் சொல்லி மற்றவரும் ஏற்றுக்கொண்டுவிட்டால் பிறகு என்ன என்று கேட்டேன், பிறகு என்ன நடக்க வேண்டும் என்று அவர் கேட்டதும் ஜன்னலுக்கு வெளியே திரும்பினேன், நான் என்ன செய்ய வேண்டும், எனக்கான தனித்தன்மை எது, என் செயல்களை நான் எப்படிப் புரிந்துகொள்வது என்றேன், அதைச் சொன்ன பிறகு அவர் பக்கம் பார்க்கவில்லை, பேருந்தின் அசைவில் என் தோள் ஜன்னல் சட்டத்தில் உரசியது, விலகி அமர்ந்தேன், சிறிது நேரம் அவர் பேசவில்லை, அந்த இடைவெளி இன்னும் நீள வேண்டும் என்று நினைத்தேன், பிறகு விசோனில் மண் எடுக்கக் காட்டிற்குச் சென்ற அண்ணனையும் தங்கையையும் பற்றி அவர் சொல்லத் தொடங்கினார், மீண்டும் ஒரு கதையா என்று நினைத்தேன், அண்ணனுக்கு வாதத்தில் வெல்வது மிகவும் பிடிக்கும் என்று அவர் சொன்னதும் எனக்குச் சிரிப்பு வந்தது, அவனிடம் என்னைக் கொண்டுபோய் விடாதீர்கள் என்று சொன்னேன், அவரும் சிரித்தார்,  அன்று அந்த அண்ணனுக்கு நன்றாகப் பேசத் தெரிந்திருந்தது, ஆனால் கால் வைக்குமிடத்தை அவன் தங்கைதான் பார்த்தாள் என்று அவர் சொன்னபோது வெளியே பார்த்தபடியே கேட்டுக்கொண்டிருந்தேன்

காட்டிற்குள் காலை வெளிச்சம் முழுவதுமாக இறங்கியிருக்கவில்லை. உயர்ந்த மரங்களின் கிளைகள் ஒன்றையொன்று கடந்து நின்றன. அவற்றுக்கிடையில் புகுந்த வெயில் சில இலைகளை மட்டும் ஒளிரச் செய்தது. கீழே ஈரமான சருகுகளும் வேர்களும் நிழலில் இருந்தன. பழம் ஒன்று விழுந்தது. அதன் ஒலியைத் தொடர்ந்து புதருக்குள் சிறிய சலசலப்பு எழுந்தது.

திரிலோசனன் தோளில் மண்வெட்டியுடன் நடந்தான். முதுகில் கட்டியிருந்த வெற்றுக்கூடை அவன் நடைக்கேற்ப அசைந்தது. ஸமருசி பின்னால் வந்தாள். அவள் கூடையில் உணவுப் பொதியும் நீர்க்குடுவையும் இருந்தன.

காட்டின் உள்ளே இருந்த குட்டையின் வடக்குக் கரையில் கிடைக்கும் மண்ணை எடுக்கச் சென்றார்கள். அதில் செய்த பானைகளுக்கு அந்த ஆண்டு நல்ல விலை கிடைத்திருந்தது. இன்னும் சிலவற்றைச் செய்து தரும்படி வாங்கியவர்கள் கேட்டிருந்தார்கள்.  அன்று காலையில் அவன் மனத்தில் பானைகளை விட முந்தைய இரவின் வாதமே இருந்தது. திரிலோசனன் வழக்கமாக அவன் அம்மாவுடன் செல்வான். இன்று முதன் முதலில் தங்கை ஸமருசியுடன் சென்றான். நேற்று நண்பனுடன் பற்றி விவாதம் செய்ததை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான்.

“கடைசியில்  என்ன சொன்னான் தெரியுமா?” அவன் குரலில் நேற்றைய உற்சாகம் தொடர்ந்தது.

ஸமருசி தாழ்ந்த கிளையை விலக்கிக்கொண்டு வந்தாள். “நீதான் அவனை எதையும் சொல்லவிடவில்லையே.” என்றாள்

திரிலோசனன் சிரித்தான். “சொல்லியிருந்தால் கேட்டிருப்பேன்.”

“அவன் வாயைத் திறந்தபோதெல்லாம் நீ பேசினாய்.”

“முதலில் சொன்னதற்கு மாறாகப் பேசினான். அதைத் தெளிவாக்க வேண்டாமா?”

அவன் நண்பனின் குரலில் பேசிக்காட்டினான். பின்னர் தன் பதிலைச் சொன்னான். மற்றவர்கள் சிரித்த இடத்தைச் சொல்லும்போது அவனும் மீண்டும் சிரித்தான். ஸமருசி அவன் முகத்தைப் பார்த்தாள். நேற்றிரவு விவாதம் முடிந்து தாய் உணவு பரிமாறியபோது அவன் முகத்தில் இருந்த அதே மகிழ்ச்சி இன்னும் இருந்தது. குலத்தின் முதியவர் அவனை அருகில் அழைத்து அமர்த்தியதையும், “நம்மவன் பேசும்போது கேட்க வேண்டும்” என்று சொன்னதையும் அவன் இருமுறை சொல்லியிருந்தான்.

“அதற்குப் பிறகு உன் நண்பன் என்ன அறிந்துகொண்டான்?” என்று கேட்டாள்.

“அவன் சொன்னது தவறு என்று அவன் புரிந்துக் கொண்டிருப்பான்”

“நீ?”

“எனக்கென்ன?”

அவன் திரும்பிப் பார்த்தபடியே அடுத்த அடியை வைத்தான்.

ஸமருசி அவன் மணிக்கட்டைப் பிடித்து இழுத்தாள்.

மண்வெட்டியின் பிடி தோளிலிருந்து வழுக்கியது. அவன் தங்கையை நோக்கித் திரும்பினான். அவள் கீழே பார்த்துக்கொண்டிருந்தாள்.

சருகுகளின் நிறத்திலேயே ஒரு பாம்பு பாதையின் குறுக்கே கிடந்தது. அதன் தலை சிறிது உயர்ந்தது. திரிலோசனன் தூக்கிய காலை வைக்காமல் நின்றான். பாம்பின் நாக்கு வெளியே வந்து மறைந்தது. பின்னர் அது தலையைத் தாழ்த்தி வேர்களை நோக்கி நகர்ந்தது.

இலைகள் மெல்ல உரசின. அதன் வாலின் நுனியும் மறைந்த பிறகுதான் அவன் காலை பின்னால் வைத்தான்.

ஸமருசி இன்னும் அவன் கையை விடவில்லை.

“காலடியில் இருந்ததைப் பார்க்கவில்லை,” என்றாள்.

“உன்னிடம் பேசிக்கொண்டிருந்தேன்.”

“என்னிடமா பேசினாய், இன்னும் உன் நண்பனுடன் விவாதம் செய்து கொண்டிருக்கிறாய் அல்லவா?”

அவன் அவளுடைய பிடியிலிருந்து கையை எடுத்தான். மண்வெட்டியைத் தூக்கி அதன் முனையில் ஒட்டிய இலையை உதறினான்.

“நான் உண்மையை நிறுவியதைச் சொன்னேன்.”

“வென்றதைச் சொல்லும்போது உனக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது.”

“உண்மை தெரிந்ததால்தான் வென்றேன்.”

அவள் பதில் சொல்லவில்லை. பாம்பு சென்ற இடத்தில் இரண்டு வேர்களுக்கிடையில் சிறிய இடைவெளி இருந்தது. அதைப் பார்த்துக்கொண்டிருந்தபோது மேலிருந்து பறவை ஒன்று தாழ்ந்து வந்தது. நீண்ட அலகும் நீலக் கழுத்தும் கொண்டிருந்தது. ஒரு வேரின் மீது அமர்ந்து தலையைச் சாய்த்தது.

“நீலகண்டி,” என்றான் திரிலோசனன்.

பாம்பு உள்ளே மேலும் நகர்ந்தது. பறவை மற்றொரு வேருக்குத் தாவியது. இருவரும் அசையாமல் பார்த்தார்கள். சிறிது நேரம் காத்திருந்துவிட்டு அது மேலே கிளைக்குச் சென்றது. அதன் பார்வை இன்னும் வேர்களின் இடைவெளியில் இருந்தது.

திரிலோசனன் தங்கையைப் பார்த்தான்.

“இரண்டும் இருக்கலாமே.”

“எது?”

“உண்மையை அறியும் விருப்பமும் வெல்லும் விருப்பமும். பாம்பும் அதைத் தின்னும் பறவையும் ஒரே காட்டில் இருக்கின்றனவே.”

ஸமருசி கிளையைப் பார்த்தாள்.

“அதனால்தான் பாம்பு ஒளிந்துகொண்டதா?”

அவன் சிரித்தான்.

“பாம்பும் பறவையும் ஐந்து பூதங்களால் ஆனவைதானே? நிலம், நீர், தீ, காற்று, ஆகாசமும்.”

“அதை அறிந்ததால் பாம்பைப் பறவை என்று சொல்ல முடியாதே.”

“அவற்றின் உருவமும் குணங்களும் வேறு.”

“அப்படியானால் பொதுவாக இருப்பதை அறிந்த பிறகும் ஒவ்வொன்றைத் தனியாக அறிய வேண்டியிருக்கிறது.”

“அதைத்தான் வேறுபடுத்திச் சொல்கிறேன்.”

“நானும் அதைத்தான் பார்க்கிறேன்,” என்றாள்.

திரிலோசனன் அவளைப் பார்த்தான். அவள் முகத்தில் சிரிப்பு இருந்தது.

“காலை எங்கே வைக்கிறாய் என்றும் பார்,” என்றாள்.

அவன் இந்த முறை முன்னால் பார்த்து நடந்தான்.

சிறிது தூரத்தில் இனிய மணம் அடர்ந்து வந்தது. ஸமருசி நின்று மூச்சை இழுத்தாள். சருகுகளின் ஈர மணத்திலிருந்து அதைத் தனியே அறிய முடிந்தது.

“கண்ணுக்கு தெரியாத காற்று இருப்பதை மணத்தினால் அறிகின்றோம்?”  திரிலோசனன் சொன்னான்.

“தேன்சுடர் பூத்திருக்கிறது. காற்று மணத்தைக் கொண்டுவருகிறது. ஆனால் மணம் பூவினுடையது. காற்று உடலில் படுவதையும் உணர்கிறோமே.”

ஸமருசி ஒரு பூவைப் பறித்து முகர்ந்தாள். அதை அண்ணனிடம் கொடுத்தாள். அவன் வாங்கிய பிறகும் அவள் விரல்களில் மணம் இருந்தது.

“பூ அங்கே இருக்கிறது. மணம் இன்னும் என் கையில் இருக்கிறது.”

அவன் அவள் கையைப் பிடித்து முகர்ந்தான்.

“நேற்று இதைத்தான் கேட்டேன். ஒன்றுடன் சேர்ந்ததால் வந்த குணத்தை அதனுடைய இயல்பு என்று சொல்லிவிட முடியுமா?”

ஸமருசி கையைத் திருப்பிப் பார்த்தாள்.

“பிறகு எது அதனுடையது, எது சேர்ந்ததால் வந்தது என்று பார்க்க வேண்டும்.”

அவன் தலையசைத்தான். பூவைத் தன் கூடையில் வைத்தான்.

அவர்கள் மீண்டும் நடந்தார்கள். மணம் குறையத் தொடங்கியது. புதருக்குள் குருவிகள் அசையும் ஒலி கேட்டபோது ஸமருசி கீழே பார்த்தாள். சற்றுமுன் இனிமையாக இருந்த மணம் இப்போது அவளை எச்சரிக்கவும் செய்தது.

அப்பொழுது கிளை முறியும் ஒலி கேட்டதும் திரிலோசனன் நின்றான். ஸமருசி அவன் கையைப் பற்றினாள். மரங்களுக்குப் பின்னால் கனமான காலடிகள் அடுத்தடுத்து விழுந்தன. அவற்றுக்கிடையிலான இடைவெளி குறைந்துகொண்டிருந்தது.

“யானை,” என்றான்.

இன்னும் அதைப் பார்க்கவில்லை. ஆனால் அது வேகமாக நெருங்குவதை ஒலி அறிவித்தது. சற்றுமுன் பறவையின் குரல்களால் விரிந்திருந்த வெளி, இப்போது அந்தக் காலடிகளால் அவர்களைச் சூழ்ந்தது.

திரிலோசனன் தங்கையின் கையை இழுத்துக்கொண்டு ஓடினான். அவள் கூடை ஒரு கிளையில் சிக்கியது. கயிற்றைத் தோளிலிருந்து உதறிவிட்டு அவனுடன் ஓடினாள். மண்வெட்டி அவன் காலில் மோதியது. அதை எங்கே விட்டான் என்று அவனுக்குத் தெரியவில்லை.

பின்னால் மரங்கள் முறியும் ஒலி கேட்டது. அவன் இடதுபுறம் திரும்பினான். ஸமருசி குனிந்து ஒரு கிளையைக் கடந்தாள். அடுத்த கணம் அவன் கை நழுவியது.

“அண்ணா!”

அவன் திரும்பி அவளைப் பிடித்தான். இருவரும் ஒரு சரிவில் இறங்கினார்கள். காலுக்குக் கீழே சருகுகள் வழுக்கின. மரத்தண்டைப் பற்றிக்கொண்டு ஸமருசி நின்றாள். திரிலோசனன் அவளருகே வந்து குனிந்தான். அங்கு அகப்பட்ட தடமொன்றில் ஓடினார்கள்.

இருவருடைய மூச்சும் உரக்கக் கேட்டது.

மேலே கிளைகள் அசைந்தன. அவர்கள் ஒன்றையொன்று பார்த்தார்கள். யானையின் காலடிகள் மீண்டும் கேட்டனவா, தங்கள் நெஞ்சின் துடிப்பா என்று பிரித்தறிய முடியவில்லை.

“வழி எங்கே?” என்று ஸமருசி கேட்டாள்.

திரிலோசனன் அவர்கள் இறங்கிய சரிவைப் பார்த்தான். எந்த இடத்தில் திரும்பினார்கள் என்று நினைவில்லை. யானையின் காலடியோசை நின்றிருந்தது. அவன் சிறிது நேரம் செவிகொடுத்தான்.

“இந்தப் குட்டையின் பக்கம்தான் வந்திருப்போம். குட்டையின் அருகே அடர்ந்த மரங்கள் உண்டு” என்றான்.

“அண்ணா, இது காடு இங்கு அடர்ந்த மரங்கள் அடையாளமா என்ன?”

“இப்போது யார் சொல்வது சரி என்று பேசிக்கொண்டிருந்தால் இருட்டிவிடும்,” என்றான்.

ஸமருசி அவனைப் பார்த்தாள். அவனுக்கே சிறிது சிரிப்பு வந்தது.

“மேலே ஏறிப் பார்க்கிறேன். மேடு தெரிந்தால் வழி கண்டுபிடிக்கலாம்.”

அருகில் இருந்த மரம் உயரமாக இருந்தது, அதன் முதல் கிளையே மூன்று ஆள் உயரத்தில் இருந்தது. அதில் ஏறி பார்த்தால் பாதை தெரியுமா என யோசித்தான். 

ஸமருசி சிறிய வயதில் இருந்தே நன்றாக மரமேறுவாள், அம்மாவுக்கு வேண்டிய மாம்பழங்களை பறிக்க, புளிய மரம் உலுக்க அவள் ஏறுவதை அவன் அறிவான். அவளை பார்த்து ஏறுமாறு சைகை காட்டினான்.

“அண்ணா நீ…” ஸமருசி குழம்பினாள்.

“ நீ ஏறு, நான் கீழே இருக்கின்றேன், சீக்கிரம் ஏறி பாதையை பார்”  

ஸமருசி ஏற ஆரம்பித்தாள். கிளைக்கு அருகில் வந்தாள். சுற்றிலும் பார்த்தாள். 

“அண்ணா, அங்கே மேட்டின் மேல் யாரோ நிற்கின்றார்கள். ” ஸமருசி உற்சாகத்துடன் குரல் எடுக்கையில்  இருபது அடி தூரத்தில் புதரின் விளிம்பில் புலி நின்றிருந்ததை கண்டாள்.

முதலில் அதன் முகம்தான் தெரிந்தது. பிறகு தோளும் வரிகள் படிந்த உடலும் வெளிவந்தன. அது சில அடிகள் நடந்துவிட்டு நின்றது. தலையை உயர்த்தியது.

ஸமருசியின் கால் கீழிருந்த கிளையைத் தேடியது. மூச்சை அடக்கி சப்தம் எழாமல் சரி செய்துக் கொண்டாள். அண்ணனை பார்த்து உதட்டில் கை வைத்து சப்தம் வேண்டாம், மேலே ஏற சைகை செய்தாள்.

திரிலோசனன் பரபரவென ஏறி தங்கை அருகில் வந்த பொழுது புலியை கண்டதும் கை விரல்கள் நடுங்கியது, கீழே விழுந்து விடுவோமோ என தயங்கினான்.

ஸமருசி மூச்சை மெதுவாக வெளியே விட்டாள்.

“அது போய் விடுமா” என மெல்லிய குரலில் கேட்டாள்.

ஸமருசி தண்டிற்கும் கிளைக்கும் இடையில் அமர்ந்தாள். திரிலோசனன் சற்றுக் கீழிருந்த கிளையில் கால்களைத் தொங்கவிட்டுக்கொண்டு உட்கார்ந்தான். 

“பயமாய் இருக்கு அண்ணா”

“பயப்படாதே… அது போய் விடும்” திரிலோசனன் அவளுக்கு ஆறுதல் சொன்னான். 

“அங்கே தூரத்தில் மேட்டின் மீது உள்ளவரை அழைப்போமா?”

“சப்தம் போடாமல் கை அசைத்துப் பார்ப்போம்” திரிலோசனன் கூறினான்.

இருவரும் மேட்டை நோக்கி கை அசைக்க திரும்புகையில், மேட்டில் உள்ள மனிதர் இவர்களை பார்த்து விட்டார்.  அவர் விரல்கள் அங்கு இருக்கும் புலியை சுட்டிக் காட்டியது.

புதரில் அசைவு மிக மெல்லியதாக எழுந்தது. புலி மெல்ல மரம் நோக்கி அடி எடுப்பது போல இருந்தது. 

“அதற்கு மரமேறத் தெரியுமா?” என்று அவள் கேட்டாள்.

“புலி ஏறும் என்று கேட்டிருக்கிறேன்.”

அவள் அவனைப் பார்த்தாள்.

“பிறகு ஏன் இங்கே இருக்கிறோம்?”

திரிலோசனன் கீழே பார்த்தான்.

“கீழே இருப்பதைவிட இங்கே கொஞ்சம் நேரம் கிடைக்கிறது.”

அவன் பதில் சொல்லும்முன் புலி நகர்ந்தது. ஸமருசி அவன் கையைப் பற்றினாள். மேட்டின் மேலே இருந்த மனிதர் சப்தமிட்டு புலியை நோக்கி எதையோ எறிந்தார், புலியின் கவனம் அவரை நோக்கித் திரும்பியது. வேகம் கொண்டது. அவரும் புலியை நோக்கி மேட்டில் இருந்து சரசரவென இறங்கினார்.

புலி மரத்தினை விட்டு விலகி சரிவினை நோக்கி நகர்ந்தது, அவர்கள் பார்வையில் இருந்து புதர்களுக்குள் புகுந்து மறைந்தது. அந்த மனிதர் அலறும் குரல் கேட்டது, பிறகு தீனமான முனகல், புலியின் வால் மட்டுமே தெரிந்தது.

ஸமருசி அழ ஆரம்பித்தாள், திரிலோசனன் தேம்பலை அடக்கினான். அவனுக்கு சிறுநீர் கால் வழியே போனது. கை கால்கள் நடுங்கின.

புலி நகரவே இல்லை. அங்கேயே அது உணவை கடித்து இழுக்கும் ஓசை பலமாக கேட்டது. கண்ணை மூடிக் கொண்டான்.

வெகு நேரம் கழித்து ஸமருசி “ஏன் இப்படிச் செய்தார்?” இன்பம் தரும் என்று நினைத்தால் அதை அடைய விரும்பி செய்கிண்றாம். துன்பம் தரும் என்றால் விலக விரும்புகிறோம். அவருக்கு புலியை நோக்கி செல்வதில் என்ன இன்பமிருக்க முடியும்?” என்றாள்.

“நமக்காக சென்றார் தெரியுமா?” என திரிலோசனன் கேட்டான்.

“ம்…” தேம்பி தேம்பி  “வீட்டிற்குப் போக வேண்டும்.” என்றாள்

“அதற்கான முயற்சி?”

அவன் அவளைப் பார்த்தான்.

அவள் பற்றியிருந்த கிளையை விட்டுவிட்டு மற்றொரு கிளையைத் தொட்டாள். அது மெலிதாக இருந்தது. மீண்டும் பழைய கிளையைப் பிடித்துக்கொண்டாள்.

“விருப்பம் இருக்கிறது. முயற்சி செய்யப் பயமாக இருக்கிறது.”

திரிலோசனன் அவளுடைய கையைப் பார்த்தான். விரல்கள் மரப்பட்டையில் அழுந்தியிருந்தன.

“பிடித்துக்கொண்டிருப்பதும் முயற்சிதான்,” என்றான். “விழாமல் இருக்கச் செய்கிறாய்.”

அவள் பிடியைச் சிறிது தளர்த்தினாள். உடனே உடல் சாய்ந்தது. மீண்டும் இறுகப் பற்றிக்கொண்டாள்.

“எவ்வளவு நேரம் இப்படிப் பிடித்துக்கொண்டிருப்பது?”

அவளுடைய குரல் உடைந்தது. திரிலோசனன் அருகே நகர்ந்து தன் முழங்காலில் அவள் காலைத் தாங்கினான்.

“இப்படிச் சாய்ந்துகொள்.”

அவள் அவன் சொன்னபடி அமர்ந்தாள். சிறிது நேரம் இருவரும் பேசவில்லை.

“செயலைத் தொடங்க விருப்பம் இருந்தால் போதுமல்லவா?” என்றாள் ஸமருசி. “அது எங்கே கொண்டுபோகும் என்று அதைக் கொண்டு அறிய முடியாதா?”

கீழே சருகுகள் அசைந்தன. திரிலோசனன் அவளைத் தன் பக்கம் இழுத்தான். புலியின் முகம் ஒரு கணம் வெளிவந்தது. இருவரும் மூச்சை அடக்கினார்கள்.

ஸமருசி கண்களைத் துடைத்தாள். வெயில் கிளைகளுக்கிடையில் நேராக இறங்கியது. பின்னர் மெல்லச் சாய்ந்தது. வேர்களின் நிழல்கள் நீண்டு புதர்களை நோக்கி நகர்ந்தன.

ஸமருசியின் உதடுகள் உலர்ந்திருந்தன. நீர்க்குடுவை கிளையில் சிக்கிய கூடையுடன் எங்கோ கிடந்தது. நாவால் உதட்டை நனைத்தாள். சிறிது நேரத்தில் அதுவும் உலர்ந்தது.

திரிலோசனனின் தொங்கிய கால்கள் மரத்துப் போயிருந்தன. அசைத்தால் கிளை முனகுமோ என்று அஞ்சி, கால் விரல்களை மட்டும் மடக்கி நீட்டினான். ஊசிகள் குத்துவதுபோல் உணர்வு திரும்பியது. பட்டையில் எறும்புகள் வரிசையாக ஏறின. ஒன்று அவன் கணுக்காலில் கடித்தது. அவன் அசையவில்லை.

கீழே புதருக்குள் புலி படுத்திருந்தது. அதன் வால் மட்டும் அவ்வப்போது சருகுகளில் அடித்தது. ஒவ்வொரு முறையும் ஸமருசியின் பிடி இறுகியது.

“எவ்வளவு நேரம் ஆனது?” என்று கேட்டாள்.

அவன் மேலே பார்த்தான். காலையில் ஒரு பக்கமிருந்து வந்த வெளிச்சம் இப்போது மறுபக்கமிருந்து வந்தது.

“சூரியன் மரத்தைக் கடந்துவிட்டது.”

பின்னர் வானம் சிவந்தது. கிளைகளின் இடைவெளியில் மேகங்கள் பொன்னிறமாயின. பறவைகள் கூட்டம் கூட்டமாகக் கூடு திரும்பின. ஸமருசி அதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகம் சற்றுத் தளர்ந்தது. ஒரு கணம் அவள் விரல்கள் பிடியை மறந்தன.

கீழிருந்து உறுமல் எழுந்தது.

அவள் மீண்டும் கிளையை இறுகப் பற்றினாள். வானம் இன்னும் சிவந்துதான் இருந்தது. அவள் அதைப் பார்க்கவில்லை.

தொலைவில் மரங்களுக்கிடையில் பறை முழங்கும் ஒலி எழுந்தது, திரிலோசன் எக்கிப் பார்த்த்தான். வெளிச்சம் தெரிந்தது. பின்னர் இன்னொன்று. ஒரு குரல் யாரோ ஒருவரின் பெயரை அழைத்தது.

“யாரோ வருகின்றார்கள்,” என்றான் திரிலோசனன்.

ஸமருசி அவன் கையைப் பற்றினாள். “அண்ணா…!.”

அவன் மூச்சை இழுத்தான். “இங்கே! நாங்கள் இங்கே இருக்கிறோம்!, கீழே புலி இருக்கின்றது”

ஸமருசியும் சேர்ந்து கத்தினாள். கீழே புதர் உரக்க அசைந்தது. அவள் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

வெளிச்சங்களும், சப்தங்களும் வேகமாக நெருங்கின. தீப்பந்தங்களின் தழல் துடித்தது. ஒரு கணம் அந்த ஒளியில் இரண்டு கண்கள் மின்னின. பின்னர் சருகுகள் விலகும் ஒலி எதிர்த் திசையில் நகர்ந்து மறைந்தது.

மரத்தடிக்கு பத்து  பேர் வந்தார்கள். கையில் வேல்கம்பு, தடிகள், தீப்பந்தங்கள், பறைகள் வைத்திருந்தனர்  நரைத்த தாடியுடன் ஒருவர் பந்தத்தை உயர்த்தினார். புலி படுத்திருந்த இடத்தில் பார்த்தார். அவர் உதடுகள் துடித்தன, முகமெல்லாம் வாடியது, கண்கள் நீர்க் கோர்த்தன, அவரை சுற்றி இருந்தவர்கள் தடுமாறியவரை தாங்கி பிடித்தனர். புதரின் அருகில் நிற்க முடியாமல் அமர்ந்தார்.

அமர்ந்தவர் “மரத்தில் இருந்து இறங்க உதவி செய்யுங்கள்” என திரிலோசனனை காட்டி சொன்னார்.

ஸமருசி வந்தவர்களின் தோள்பட்டையில் கால்வைத்து எளிதாக இறங்கினாள். திரிலோசனனின் மரத்துப்போன கால் வழுக்கியது. தண்டைப் பற்றியபோது பட்டை உள்ளங்கையைக் கிழித்தது. அதற்குள் கீழிருந்து ஒரு கை அவன் கணுக்காலைப் பற்றி அடுத்த கிளையில் வைத்தது.

தரையைத் தொட்டதும் கால்கள் மடிந்தன. யாரோ நீர்க்குடுவையை நீட்டினார். ஸமருசி இரண்டு மிடறு குடித்துவிட்டு அண்ணனிடம் கொடுத்தாள்.

“உன் பெயர் திரிலோசனனா?” என தாடி வைத்தவர்க் கேட்டார். திரிலோசனன் தலை அசைத்தான்.

“இவர்களுடைய ஊர்க்காரர்கள் இவர்களைத் தேடிக்கொண்டு குட்டைக்கு அருகே உள்ளார்கள். நம்மில் ஐவர் இவர்களை ஊரில் விட்டுவருவோம். மற்ற ஐவர் நம்மவரிடன் மீதமிருக்கும் உடலை பாதுகாப்பாக எடுத்துச் சென்று அதற்கு உரிய இறுதிச் சடங்குகளை செய்ய ஏற்பாடு செய்யலாம். முழுக்க இருட்டும் முன் இங்கிருந்த நகர வேண்டும்”  என தாடி வைத்தவர் சொன்னா.

 “நீங்கள் இளையோருடன் ஊருக்குள் செல்லுங்கள், நாங்கள் இங்கிருப்பதற்கு சடங்குகள் செய்து நம்மவரை அனுப்பி விட்டு வருகின்றோம். பாதுகாப்பாக எடுத்துச் செல்லக் கூடியதாக இங்கு எதுவும் மிச்சமில்லை” கவலை பொங்க கையில் வேல் வைத்திருந்தவர் சொன்னார். “கணாதரரே, புலி இந்தப் பக்கம்தான் போனது,” என்றார்.

“தெரியும்,” என்றார் கணாதர். 

இளையோரும், இன்னமும் நால்வரும்  கணாதர் காட்டிய வழியில் ஊர் நோக்கி நடக்க துவங்கினர்.ஐவர் புதர் அருகில் தங்கினர். பறை முழங்கியது. கையில் தீப்பந்தம் பலமாக எரிந்தது.

ஊர் நோக்கி நடக்கையில் யாரிடமும் பேசவோ, யோசிக்கவோ பலமில்லை.

மௌனம் கனமான ஒரு நேரத்தில் “நீங்கள் வராவிட்டால்…” என்று திரிலோசனன் தொடங்கினான்.

அவர் அவனைப் பார்த்தார். “நாங்கள் எங்கள் நண்பரை தேடி வந்தோம், உங்களை தேடும் குழுவினை வழியில் சந்தித்தோம். அவர்கள் மேலே காட்டு யானை தடமொன்றை கண்டு அதற்கு எதிர் திசையில் சென்று தேடுகின்றார்கள். உங்கள் கூடையை பார்த்துள்ளார்கள்”

“உங்கள் நண்பர்…அவரும் கணாதரரா?”  திரிலோசனன் கேட்டான். 

கணாதர் தலை அசைத்தார்.

“அவர் ஏன் புலியை நோக்கி ஓடினார்?” ஸமருசி கேட்டாள்.

“எங்களைக் காப்பாற்றத்தானே? புலி பசிக்கு மேல் வேட்டையாடாது, அவரை உணவாக தந்தது ,எங்களைக் காப்பாற்றத்தானே செய்தார், சொல்லுங்கள்,” திரிலோசனன் கேள்வியின் சுமையை சுமக்க முடியாமல் தவித்தான்.

கணாதர் சிறிது தூரம் பேசாமல் நடந்தார்.

“இச்சையோ, துவேஷமோ இல்லாமல் எந்தச் செயலும் தொடங்குவதில்லை,” என்றார். “அவரிடம் இரண்டும் இருந்தன.”

“என்ன இச்சை?”

“நீங்கள் இருவரும் உயிருடன் இருக்க வேண்டும் என்ற இச்சை.”

ஸமருசி அவரைப் பார்த்தாள்.

“விருப்பும் வெறுப்பும் எல்லோரிடமும் உள்ளன. அவை தன் இன்பத்தை நோக்கித் திரும்பலாம், பிறர் நலத்தை நோக்கியும் திரும்பலாம். எதை நோக்கித் திரும்புகின்றன என்பதில்தான் செயல் தர்மமாகிறது, அல்லது அதர்மமாகிறது.”

“எனக்கும் வீட்டிற்குப் போக இச்சை இருந்தது,” என்றாள் ஸமருசி மெதுவாக. “முயற்சி செய்யப் பயமாக இருந்தது.”

“இச்சையிலிருந்து பிரயத்தனம் எழ வேண்டும். பிரயத்தனத்திலிருந்துதான் செயல். அவரிடம் இச்சை ஒரு கணத்தில் பிரயத்தனமாக மாறியது.”  கணாதர் குரல் தாழ்ந்தது. “அவர் தன் தர்மத்தினைச் செய்தார்.”

“எது என் தர்மம்?” திரிலோசனன் குரல் நடுங்கியது.

“நீ ஒருநாள் அறிவாய்”  கணாதர் குரல் திடமுடன் ஒலித்தது.

“எனக்கு ஏன் அவர் அளவுக்கு துணிவில்லை. எனக்கும் புலியை நோக்கி ஓடும் திறன் உண்டல்லவா “ திரிலோசனன் கேட்டான்.

“இருக்கலாம்.”

“நான் ஏன் செய்யவில்லை?.”

“திறனும், செயலும் ஒன்றல்ல. அறிதல், விருப்பம், முயற்சி ஆகியவை இருவரிடமும் உள்ளன என்று கொள்கிறோம். ஆனால் நீ அவர் அல்ல. எப்பொழுதும் பொதுமையைச் சாமான்யம் என்கிறோம். அதற்குள் வகைகளின் வேறுபாடுகளையும், ஒவ்வொரு இருப்பின் தனித்தன்மையையும் மேலும் உசாவ வேண்டும்.”

“அனைத்தையும் பிரித்துக்கொண்டே போக வேண்டுமா?” என்று திரிலோசனன் கேட்டான்.

“உண்மையை அறிதல் மகிழ்ச்சிதானே, அதை அறியவே பிரித்துக் கொள்கின்றோம்”

பாதை அகன்ற இடத்தில் அவர்கள் ஓய்ந்தார்கள். ஸமருசி தரையில் அமர்ந்தாள். விரல்களை நீட்டி மடக்கினாள். கணாதர் தன் உணவுப் பொதியைத் திறந்தார். இருவருக்கும் கொடுத்தார்.

திரிலோசனன் முதல் கவளத்தை விரைவாக உண்டான். ஸமருசி சாப்பிடுவதைப் பார்த்துவிட்டு அடுத்ததை எடுத்தான்.

“நீ குடம் செய்வாயா?” ஸமருசியை பார்த்து கணாதர் கேட்டார். ஸமருசி தலை அசைத்தாள். 

“அண்ணன் இன்னமும் பெரிய குடங்களை செய்வான், அதற்காகவே மண் எடுக்க வந்தோம்,” ஸமருசி சொன்னாள்.

“எந்த இடத்தில்?”

குட்டையைச் சொன்னாள். கணாதரருக்குத் தெரிந்திருந்தது.

“அந்த மண் வேறாக இருக்கிறது,” என்றான் திரிலோசனன். “எல்லாம் மண் என்று சொன்னாலும் ஒரேபோல் பானை வருவதில்லை.”

கணாதர் அருகிலிருந்த சிறு மண் கட்டியை எடுத்தார்.

“இதை உடைத்தால்?”

“சிறிய கட்டிகள் வரும்.”

“அவற்றையும்?”

“தூளாகும்.”

ஸமருசி அவருடைய விரல்களில் இருந்த மண்ணைப் பார்த்தாள்.

“மேலும் பிரித்தால்?”

“கண்ணுக்குத் தெரியாமல் போகலாம்,” என்றான் திரிலோசனன்.

“தெரியாமல் போனதும் இல்லாமல் போய்விட்டதா?”

அவன் தலையசைத்தான்.

“பகுதிகள் சேர்ந்த பொருட்கள் மீண்டும் பிரிவதைப் பார்க்கிறோம். இதைத் தொடர்ந்து உசாவியவர்கள், மேலும் பகுக்க முடியாத பரமாணுக்களை அடிப்படையாகக் கொள்கிறார்கள். நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கிற்கும் உரிய பரமாணுக்கள் இருக்கின்றன. அவற்றின் சேர்க்கைகளிலிருந்து பொருட்கள் உருவாகின்றன.”

“பானை உடைந்தால் மண் துண்டுகள்தான் வருகின்றன,” என்றாள் ஸமருசி.

“ஆமாம். உடைந்தவுடனே பரமாணுக்களாகிவிடுவதில்லை. நீ காணும் துண்டுகளும் பல பகுதிகள் சேர்ந்தவை. அவற்றின் பிரிவையும் தொடர்ந்து உசாவுகிறோம். பகுதிகளால் ஆன உருவம் அழிவதற்கும், அதன் அடிப்படையான அணுக்கள் அழிவதற்கும் வேறுபாடு இருக்கிறது.”

திரிலோசனன் கேட்டான்:

“நீருக்கும் தீக்கும் இப்படியா?”

“அந்தந்த அணுக்களின் சேர்க்கையால் உருவான காரியப் பொருட்கள் தோன்றுகின்றன, பிரிகின்றன. அடிப்படைப் பரமாணுக்கள் நித்தியமானவை என்று கொள்கிறோம். ஆனால் ஆகாசத்தையும் காலத்தையும் திக்கையும் இவ்வாறு அணுக்கள் சேர்ந்த பொருட்களாகக் கொள்வதில்லை. ஆன்மாவையும் அவற்றிலிருந்து வேறுபடுத்தியே நீ பார்க்கனும்.”

ஸமருசி தரையில் இருந்த மண்ணைத் தொட்டாள்.

காலையில் அதை எடுக்கக் கூடை கொண்டுவந்திருந்தாள். இப்போது அவளுடைய நகங்களுக்குள் இருந்த சிறிது மண் மட்டுமே அவர்களுடன் வந்திருந்தது.

“அதே அணுக்கள் மீண்டும் சேர்ந்தால் அதே பானை வருமா?” என்று கேட்டாள்.

“எப்படி இணைகின்றன, என்ன குணங்களும் தொடர்புகளும் இருக்கின்றன என்பதையும் அறிய வேண்டும்.”

திரிலோசனன் அவளைப் பார்த்தான்.

“மண் இருந்தால் மட்டும் பானை வந்துவிடுவதில்லை.”

“நம் கைகள் இருந்தாலும் சில நாட்களில் வருவதில்லை,” என்றாள் அவள்.

திரிலோசனன் மெதுவாகச் சிரித்தான்.

கணாதர் கையிலிருந்த மண்ணைத் தரையில் வைத்தார். 

“நீர், நெருப்பு, வாயு,மண், ஆகாயம் தவிர காலமும், திக்கும், மனமும், ஆன்மாவும் உண்டு என சொன்னேன் அல்லவா?”  என்றார் கணாதர்.

திரிலோசனனும், ஸமருசியும் நின்று கணாதரரை பார்த்தார்கள்.

“அதை பற்றி சொல்லுங்களேன்!”  திரிலோசனன் ஆர்வமுடன் கேட்டான்.

 “ஏன் தெரிந்துக் கொள்ளனும்” ஸமருசி கேட்டாள்.

கணாதர் எழுந்து தீப்பந்தத்தை உயர்த்தினார். இருவரும் எழுந்து அவருடன் நடந்தார்கள். “வழித்துணைக்கு,”  என்றார்.

“ம்…” திரிலோசனன் சொன்னான். “காலமென இருப்பது நேற்றும், இன்றும், நாளையும், சரியா”  அவன் நடையில் வேகம் வந்தது.

“நீ சொல்”  என ஸமருசியை பார்த்தார்

“கடந்ததும், இருப்பதும், வருவதும்…”  என்றாள்.

தீபந்தம் காற்றின் வேகத்தில் துடித்தது, அதில் எண்ணையை ஊற்றி அதன் வேகத்தினை சரி செய்தார்கள்.

“புலியைக் கண்டது கடந்தது. ஊருக்குச் செல்வது வருவது. உங்களுடன் நடப்பது இருப்பது,”  என்றான் திரிலோசனன்.

“என்னிடம் இப்பொழுதும் இங்கேயும் பயம் இருக்கின்றது”  என்றாள் ஸமருசி.

“இங்கே என்பது என்ன?” கணாதர் கேட்டார்.

“அங்கே இல்லாதது,” என திரிலோசனன் ஊரின் திசையை நோக்கிக் கைக் காட்டினான்.

“அது தொலைவில் உள்ளது,” ஸமருசி சேர்ந்துக் கொண்டாள்.

“ஊர் அருகில் உள்ளது, நதியின் ஓசை கேட்கின்றது,” திரிலோசனன் தொடர்ந்தான்.

கணாதர் நின்றார். “ஒரே ஊர். இவள் தொலைவு என்கிறாள். நீ அருகில் என்கிறாய். இருவரில் யார் சரி?”

இருவரும் ஒருவரையொருவர் பார்த்தார்கள்.

“என் கால்கள் வலிக்கின்றன,” என்றாள் ஸமருசி.

“எனக்கு நதி கேட்கிறது,” என்றான் திரிலோசனன்.

“அருகென்பதும், தொலைவென்பதும் ஊரில் இல்லை. எங்கிருந்து அளக்கிறோம் என்பதைப் பொறுத்தே அவை தோன்றுகின்றன. ஒன்றிலிருந்து மற்றொன்றை அருகில், தொலைவில், இங்கே, அங்கே என்று அறிய ஆதாரமாக இருப்பதைத் திக்கு என்கிறோம்,” என்றார் கணாதர்.

ஸமருசி இருளில் தெரிந்த பாதையைப் பார்த்தாள். காலை அவர்களுடைய பாதங்களுக்குக் கீழே வழி இருந்தது. அவர்கள் பேசிக்கொண்டே நடந்தார்கள். இப்போது ஒவ்வொரு அடிக்கும் வெளிச்சம் வேண்டியிருந்தது.

“மரத்தில் இருக்கையில் சூரியன் மறைவதைப் பார்த்தோம்,” என்றாள்.

கணாதர் அவளை நோக்கினார்.

“அழகாக இருந்தது. சிறிது நேரம் புலியை மறந்துவிட்டேன். பிறகு அது உறுமியது.”

“அப்போது வானம் மறைந்துவிட்டதா?”

“இல்லை.”

“புலியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது வானம் இல்லையா?”

அவள் தலையசைத்தாள்.

“கண்களும் எதிரே பொருளும் இருந்தால் மட்டும் எல்லாவற்றையும் அறிந்துவிடுவதில்லை. மனத்தின் தொடர்பும் வேண்டும். அது ஒன்றில் இணைகிறது, பின்னர் இன்னொன்றிற்குச் செல்கிறது. அதனால்தான் எதிரே இருந்ததையும் சில நேரங்களில் அறியாமல் இருக்கிறோம்.”

திரிலோசனன் காலையில் பாம்பின் அருகே வைத்த காலை நினைத்தான். தங்கை தன் கையை இழுத்த இடத்தைத் தொட்டான்.

“அப்போது மனம் எங்கே இருந்தது?” என்று ஸமருசி கேட்டாள்.

அவன் பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தான்.

“நேற்றைய வாதத்தில்.” எனச் அவளே சொல்லி விட்டு அவனுடைய கையை மீண்டும் பற்றிக்கொண்டாள்.

கணாதர் இருவரையும் பார்த்தார்.

“மனம் அறிதலுக்கான கருவி. ஆனால் அறிந்ததும் அஞ்சியதும் மகிழ்ந்ததும், இப்போது அவற்றைத் தன்னுடைய அனுபவமாக நினைவுகூர்வதும் யார் என்ற கேள்வி இருக்கிறது. அறிவு, இன்பம், துன்பம், இச்சை, துவேஷம், பிரயத்தனம் ஆகிய குணங்களுக்கு ஆதாரமாக ஆன்மாவை உசாவுகிறோம்.”

“எனக்கும் அவனுக்கும் ஒரே பயம்தான்,” என்றாள் ஸமருசி.

“அவன் அஞ்சியதை நீ நேராக உணர்ந்தாயா?”

அவள் அண்ணனைப் பார்த்தாள்.

“கை நடுங்கியது.”

“அதனால் அறிந்தாய். உன் அச்சம் உனக்கே அனுபவமானது. அவனுடையது அவனுக்கே. ஆன்மாக்கள் பல என்று சொல்வதற்கு இத்தகைய அனுபவ வேறுபாடுகளையும் ஆராய்கிறோம்.”

திரிலோசனன் கேட்டான்:

“உடல் இறந்தால்?”

கணாதர் சிறிது நேரம் அமைதியாக நடந்தார். 

“இந்த உடலுடன் உள்ள தொடர்பு முடிகிறது. ஆன்மா இந்த உடலைப்போல் பகுதிகள் சேர்ந்து உருவானது அல்ல என்று கொள்கிறோம். ஆகவே உடலின் பிரிவை ஆன்மாவின் அழிவாகக் கொள்வதில்லை.”

“உங்கள் நண்பரை போல…” திரிலோசனன் கண்களில் நீர் ததும்ப காட்டினை பார்த்து அழுது தரையில் உட்கார்ந்தான்.

அந்த இரவின் கேள்விகள் கணாதர்களிடத்தில் தங்கியது, பள்ளிகளில் மீண்டும் கேட்கப்பட்டது, அடுத்த தலைமுறைகளால் விரிக்கப்பட்டது.

காலங்கள் செல்கையில் தனித்துவத்தை ஆராயும் முறை ஒன்றைக் கணாதர்கள் தொகுக்கத் தொடங்கினார்கள். பிரபஞ்சப் பேரொழுக்கினை, இருப்பதும் அறியப்படுவதும் சொல்லால் சுட்டப்படுவதுமான ஏழு அடிப்படை வகைகளாகப் பகுத்தறிந்தனர்.

 குணமும் செயலும் குடிகொளும் இருப்பே
திரவியம் என்றொரு பெயர்கொண்டது
இருப்பினில் மலரும் இயல்பே குணமானது,
இருப்பின் அசைவே செயலானது.

பலவற்றில் ஒன்றாய்ப் பொதிந்து நிற்பது
சாமான்யம் எனும் பெயர்கொண்டது
நித்திய இருப்புகள் ஒவ்வொன்றையும்
தனித்து நிறுத்துவது விசேஷம் ஆனது.

பிரித்திட இயலா உள்ளுறைப் பிணைப்பே
சமவாயம் எனும் பெயர்கொண்டது
இங்கே இது இல்லை எனத் தெளியும் இன்மை
அபாவம் என்றொரு பெயர்கொண்டது.

என்று கணாதர்கள் வகுத்தனர். 

அவ்வறிவு காட்டிய மீட்பின் வழி எதுவெனவும் அறிவித்தனர்.அந்த வழியிலும் சென்றனர். அது விசோனின் சொல்லில், செயலில் கலந்தது.

ஆன்மா நித்தியமானது. உடலின் தோற்றத்துடன் அது தோன்றுவதில்லை; உடலின் அழிவுடன் அது அழிவதில்லை.

உடல், மனம், புலன்கள் ஆகியவற்றை ஆன்மாவிலிருந்து வேறுபடுத்தி அறியுங்கள். இன்பமும் துன்பமும் ஆன்மாவில் நிகழும் குணங்கள், அவை தோன்றி மறைகின்றன. அவற்றையே உங்கள் முழு இருப்பாகக் கொள்ளாதீர்கள்.

இருப்பவற்றின் பொதுமைகளையும் தனித்த இயல்புகளையும், அவற்றின் தொடர்புகளையும் உள்ளவாறு அறியுங்கள். அந்த மெய்யறிதலின் வழியே வினைப்பிணைப்பு நீங்கி, பரிபூரண சுதந்திரமான நிச்ரேயஸத்தை அடையுங்கள் 

விசோனியர்கள் அதைத் “சிறப்பு இயல்பு உணர்தல்” என்று அழைத்தனர்.

Exit mobile version