Site icon சொல்வனம் | இதழ் 371 | 26 ஜூலை 2026

மாயமான நாட்குறிப்பு

This entry is part 6 of 6 in the series கொலம்பஸ்

கொலம்பஸ் தனது கடற்பயணத்தின் அன்றாட நிகழ்வுகளைத் தேதி மற்றும் பல சமயங்களில் நேரத்தையும் குறிப்பிட்டு மிக விளக்கமாகத் தனது log book எனப்பட்ட தினசரி நாட்குறிப்புப் புத்தகத்தில் எழுதிக்கொண்டார். அவரது வெற்றிக் கதைகளை அவ்வப்போது எழுதி அரசகுடும்பத்துக்கு அனுப்ப அந்தக் காலத்தில் தபால் வசதி இல்லை. அவர்களது கப்பல் நடுக்கடலில் இருந்ததால் யாரிடமும் கொடுத்தனுப்பவும் வழியில்லை. எனினும், கொலம்பஸ் தனது தினசரி பயண அனுபவங்களை மிக விளக்கமாக தொடர்ந்து எழுதினார். நாட்க்குறிப்புக்களில் பெரும்பாலும் அவரது தனிப்பட்ட சாதனைகளாகவே அந்தப் பயணம் சித்தரித்திருக்கப்பட்டிருந்தது. என்றாவது அது ஸ்பெயினுக்குப் போய்ச் சேர்ந்ததும், அது பல பிரதிகள் எடுக்கப்பட்டு உலகெங்கிலும் விநியோகிக்கப்படும் என்பதை அவர் அறிந்திருந்தார்.

அவரது நாட்குறிப்புக்கு ஒரு உதாரணம்:

கொலம்பஸ் சான் சால்வடர் தீவிலிருந்து கிளம்பி அடுத்த தீவிற்குச்  சென்று கொண்டிருந்தபோது, வழியில் ஒரு பூர்வகுடிஆண் சிறிய கட்டுமரத்தில் தனியாகப் பயணிப்பதைக் கண்டார். அவனிடம் சில காய்ந்த இலைகள் இருந்தன. அதைப்பற்றிக் கொலம்பஸ் தன் நாட்குறிப்பில் இப்படி எழுதுகிறார்:

அக்டோபர் 15, 1492 :

“அவனிடம் சில காய்ந்த இலைகள் (Certain dried leaves) இருந்தன. சான் சால்வடர் தீவில் இருந்த மக்கள் எனக்குப் பரிசாகக் கொடுத்த இலைகளும் இவைதான் என நினைக்கிறேன். ஏனெனில், அவர்கள் இந்த இலைகளை ஒரு பெரும் செல்வமாக மதிக்கிறார்கள்.”

அப்போது கொலம்பஸுக்கு அது புகையிலை என்று தெரியவில்லை. ஆனால், லூகாயன் மக்கள் அதை ஒரு மதிக்கத்தக்க பொருளாக அவரிடம் கொடுத்திருந்தார்கள். 

கடிதங்களில் தனது வெற்றிகளை மட்டுமே குறிப்பிட்ட கொலம்பஸ், தோல்விகளை, தான் சந்தித்த சங்கடங்களை, சிக்கல்களை எல்லாம் எழுதாமல் தவிர்த்து தனது புதிய கண்டுபிடிப்புகளை விதந்தோதியே எழுதினார். திரும்பத் திரும்ப தன் கைப்பற்றிய அனைத்து தீவுநிலங்களும் அரசருக்கும் அரசிக்கும் உரிமையானவை என்றும், எந்த எதிர்ப்பும் இன்றி அவை கைப்பற்றப்பட்டன என்பதையும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்தப் பயணம் ஒரு வணிக ரீதியான வெற்றிப்பயணம் மட்டுமல்லாமல், மத ரீதியான வெற்றிப்பயணமும்தான் என்பதை தேவாலயங்களும் அறிந்துகொள்ளவே, பழங்குடியினருக்கு மதம் எதுவும் இல்லை என்பதையும், அவர்களை எளிதில் மதம் மாற்ற முடியும் என்பதையும்  அடிகோடிட்டிருந்தார்.  

 அக்டோபர் 1492-ல்  புதிய நிலத்தில் கொலம்பஸ் கால் பதித்திருந்தாலும், அவர் மீண்டும் ஐரோப்பாவுக்குத் திரும்பியது 1493 மார்ச்சில்தான். எனவே அவரது வெற்றிகளை ஸ்பெயின் அரசு உடனடியாகத் தெரிந்துகொள்ள வழியேதுமில்லை. ஆனாலும் தொடர்ந்து அன்றாட நிகழ்வுகளை எழுதிக்கொண்டிருந்தார்.

1493 பிப்ரவரியில் அவர் ஸ்பெயின் திரும்பிக் கொண்டிருந்தபோது அசோரஸ் தீவுகளுக்கு அருகில் ஒரு பயங்கரமான கடற்புயல் வீசியது. கப்பல் மூழ்கித் தான் இறந்துவிட்டால், தன் வாழ்நாள் சாதனை உலகிற்குத் தெரியாமல் போய்விடும் என்று கொலம்பஸ் பயந்தார்.

அப்போது தான் எழுதிய நாட்குறிப்பின் சுருக்கத்தை ஒரு தடிமனான தோல் பாராசூட்டில் (Parchment) சுருட்டி, மெழுக பூசப்பட்ட துணியால் சுற்றினார். அதை ஒரு பெரிய மரப்பீப்பாய்க்குள்  வைத்து, நன்றாக மெழுகிட்டு மூடி கடலில் தூக்கி எறிந்தார். யாராவது ஒரு மாலுமி அல்லது பயணி கையில் இது கிடைத்தால், அதை ராணி இஸபெல்லாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதில் எழுதியிருந்தார். ஆனால் அது கடைசி வரை யாரிடமும் போய்ச்சேரவே இல்லை

கொலம்பஸ் சான் சால்வடர் தீவிலிருந்து புறப்பட்டு, பஹாமாஸ் பகுதியில் இருந்த பிற சிறிய தீவுகளுக்குச் சென்றார். தங்கம் தேடுவதே அவரது முக்கிய நோக்கமாக இருந்ததால்,  கடத்தி வந்த பூர்வகுடிகளின் வழிகாட்டுதலின்படி அக்டோபர் மாத இறுதியில் கியூபா தீவைச் சென்றடைந்தார்.

அதன் பிறகு, டிசம்பர் மாத தொடக்கத்தில் ஹிஸ்பானியோலா (Hispaniola) என்ற தீவுக்குச் சென்றார் (இன்று இந்தத் தீவில் தான் ஹைட்டி மற்றும் டொமினிகன் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன).

புறப்படும்போது மூன்று கப்பல்களும் ஒன்றாகப் புறப்பட்டாலும், பயணத்தின் அடுத்தடுத்த கட்டங்களில் பிண்டா  தனியாகப் பிரிந்தது: கியூபா தீவில் கப்பல்கள் இருந்தபோது, பிண்டா கப்பலின் கேப்டனான மார்ட்டின் அலோன்சோ பின்ஸோன், கொலம்பஸின் அனுமதியின்றி தங்கத்தைத் தேடி தன் கப்பலுடன் தனியாகப் பிரிந்து சென்றார்.

 கொலம்பஸின் கப்பல் விபத்துக்குள்ளானது மற்றும் 1493ல் அவர் நாடு திரும்பும் வரை நடந்தவைகளைப் பிற்பாடு பார்க்கலாம். அதற்கு முன்னர் கொலம்பஸின் நாட்குறிப்புக்கு என்னவானது, அவரது உடைவாள் நிலம் நோக்கித் தாழ்த்திய சித்திரம் எப்படிப் புனைந்து உருவாக்கப்பட்டது என்பதை விரிவாகப் பார்க்கலாம். 

திரும்பும் பயணத்தில் கொலம்பஸ்  புயலின் காரணமாக முதலில் போர்ச்சுகலின் லிஸ்பனுக்கு வந்திறங்கி, பிறகு பாலோஸ் (Palos) துறைமுகம் வழியாக ஸ்பெயின் சென்றார். 

அந்தப்பயணத்தின் போது இரண்டு கடிதங்களை அவர் எழுதியிருந்தார். பயணநிகழ்வுகள் சுருக்கமாக எழுதப்பட்ட  அந்தக்கடிதங்களில் ஒன்றை ஒரு தூதுவர் மூலமாக லிஸ்பனிலிருந்தே தனது முதன்மை ஆத்ரவாளரான லூயிஸ் டி சாண்டாஞ்செலுக்கும் மற்றொரு கடிதத்தை அரசகுடும்பத்துக்கும் அனுப்பினார்

 லூயிஸ் டி சாண்டாஞ்செல் (Luis de Santángel) கிறிஸ்டோபர் கொலம்பஸின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடல் பயணத்திற்கு மிக முக்கியமான நிதி உதவியாளரும், அவருக்கு ஆதரவாக இருந்த ஒரு செல்வாக்கு மிக்க நண்பரும் ஆவார்.

ஸ்பெயின் நாட்டின் அரசி இஸபெல்லா மற்றும் அரசர் பெர்டினாண்ட் ஆகியோரின் அரசவையில் அவர் ஒரு உயர் நிதி அதிகாரியாகப் பணியாற்றினார். கொலம்பஸின் வாழ்க்கையிலும் அவரது கண்டுபிடிப்புகளிலும் சாண்டாஞ்செல்  முக்கிய பங்களிபப்பாற்றியிருக்கிறார்.

 கொலம்பஸின் இந்தியாவை நோக்கிய (ஆனால் அமெரிக்காவை சென்றடைந்த) கடல் பயணத் திட்டத்திற்கு ஸ்பெயின் அரச குடும்பம் முதலில் நிதியுதவி செய்ய மறுத்துவிட்டது. அந்த இக்கட்டான சூழ்நிலையில், சாண்டாஞ்செல் தனது சொந்தப் பணத்திலிருந்தும், அரசவையின் நிதி ஆதாரங்களிலிருந்தும் கணிசமான தொகையை (சுமார் 1.1 மில்லியன் மாரவெடிகள் ) வட்டியற்ற கடனாக ஸ்பெயின் அரசுக்கு வழங்கினார். இதன் மூலமே கொலம்பஸின் பயணம் சாத்தியமானது.

 கொலம்பஸின் திட்டத்தை அரசி இஸபெல்லா  தொடக்கத்தில் நிராகரித்தபோது, சாண்டாஞ்செல்தான் அரசியிடம் தொடர்ந்து பேசி, இந்த அட்லாண்டிக் பயணத்தால் ஸ்பெயினுக்கு கிடைக்கவிருக்கும் மிகப்பெரிய வணிக வாய்ப்புகளையும், மதப் பரப்பல் சாத்தியங்களையும் எடுத்துரைத்து அவரைச் சம்மதிக்க வைத்தார்.

எனவேதான்  கொலம்பஸ் 1493-ல் தனது பயணத்தை முடித்துக்கொண்டு திரும்புகையில் தான் புதிய நிலப்பரப்பைக் (அமெரிக்காவை) கண்டுபிடித்தது குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் அதிகாரப்பூர்வ கடிதத்தை (announcement letter)  லூயிஸ் டி சாண்டாஞ்செல்லுக்கு எழுதினார்.

 இந்தக்கடிதம் பார்சிலோனா, ரோம், பாரிஸ் என ஐரோப்பா முழுவதும் அச்சிடப்பட்டு, பல பிரதிகள் எடுக்கப்பட்டு, பெரும் விலைக்கு விற்கப்பட்டு, உலகெங்கும் பரவியது. லிஸ்பனிலிருந்து ஸ்பெயின் திரும்பியதும், அரசர் ஃபெர்டினாண்டு மற்றும் அரசி இசபெல்லா அப்போது பார்சிலோனாவில் இருந்ததால், கொலம்பஸ் அங்கு சென்று அவர்களை ஏப்ரலில் நேரில் சந்தித்தார் (ஏப்ரல் 1493).

பிரபுக்களும் உயரதிகாரிகளும் ஊர்வலமாகப் பின்தொடர, கொலம்பஸ் வெற்றி நாயகனாக அவையினுள் நுழைந்தார். அரசரும் அரசியும் அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று, அவருக்கு “பெருங்கடலின் தலைமை அட்மிரல்” (Admiral of the Ocean Sea) என்ற பட்டத்தை உறுதிப்படுத்தினர் — இது 1492 சாண்டா ஃபே ஒப்பந்தத்தில் ஏற்கனவே வாக்களிக்கப்பட்டிருந்தது.

கொலம்பஸ் தான் கொண்டு வந்த பொருட்களை — தங்கம், கிளிகள், புகையிலை, மற்றும் அவர் “இந்தியர்கள்” என அழைத்த சில பூர்வகுடி மக்களை, பதப்படுத்தப்ட்ட விலங்குகளின் உடலை எல்லாம்  அரசவையில் காட்சிப்படுத்தினார். அவருடைய நாட்குறிப்பையும், பயணக் கணக்குகளையும் அரசர்-அரசிக்குச் சமர்ப்பித்தார்.

புதிய நிலங்களின் கண்டுபிடிப்புகளுக்கான உரிமையை உறுதிப்படுத்த, ஸ்பெயின் போப்பாண்டவரிடம் (Pope Alexander VI) அங்கீகாரம் கோரியது. இதன் விளைவாக 1493-ல் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவரால்  மட்டுமே வெளியிடப்படும் மிக முக்கியமான, அதிகாரப்பூர்வமான அரச அரசாணையான Papal Bulls (குறிப்பாக Inter Caetera) வெளியிடப்பட்டது. 

“புல்” (Bull) என்ற வார்த்தை லத்தீன் மொழியின் “புல்லா” (Bulla) என்ற சொல்லில் இருந்து வந்தது, அதற்கு “முத்திரை” என்று பொருள். இந்த ஆவணங்களின் இறுதியில் போப் ஆண்டவரின் தனித்துவமான ஈய முத்திரை பதிக்கப்பட்டிருப்பதால் இந்த அரசானைக்கு இந்தப்பெயர் வந்தது.

கொலம்பஸின் கண்டுபிடிப்புகளுக்கும் இந்த பேப்பல் புல்ஸுக்கும் மிக நெருங்கிய, உலக வரலாற்றையே மாற்றியமைத்த ஒரு தொடர்பு இருக்கிறது.

கொலம்பஸ் 1493-ல் அமெரிக்க நிலப்பரப்பைக் கண்டுபிடித்துத் திரும்பியவுடன், அந்தப் புதிய பகுதிகளைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கு இடையே பெரும் போட்டி நிலவியது. அப்போது ஸ்பெயின் அரச குடும்பத்திற்கு நெருக்கமானவரான ஆறாம் அலெக்சாண்டர் (Pope Alexander VI) என்ற போப் ஆண்டவர், அவர் ஸ்பெயினுக்கு ஆதரவாக ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேப்பல் புல் பிரகடனத்தை வெளியிட்டார்.

1. இண்டர் சிடேரா (Inter caetera – 1493)

இதுதான் உலக வரலாற்றை மாற்றிய மிக முக்கியமான அரசாணை. இதன் மூலம் போப் ஆண்டவர் அட்லாண்டிக் கடலின் நடுவே (அசோரஸ் தீவுகளுக்கு மேற்கே) ஒரு கற்பனையான தீர்க்கரேகையை (Line of Demarcation) வரைந்தார்.

அந்தக் கோட்டுக்கு மேற்கே உள்ள அனைத்துப் புதிய கொலம்பஸ் கண்டறிந்த நிலங்களும் ஸ்பெயினுக்கு சொந்தம் அந்தக் கோட்டுக்கு கிழக்கே உள்ள பகுதிகள் போர்ச்சுகலுக்கு சொந்தம் எனப் பிரித்தளித்தார்.

இந்த பேப்பல் புல்ஸ் மூலமாகவே “கண்டுபிடிப்புக் கோட்பாடு” என்ற சர்வதேச சட்டம் உருவானது. அதாவது, கிறிஸ்தவர் அல்லாத பழங்குடி மக்கள் வாழும் எந்தவொரு நிலத்தையும், முதலில் கண்டறியும் கிறிஸ்தவ நாடே ஆக்கிரமித்துக்கொள்ளலாம் என்ற தார்மீக உரிமையை இந்த அரசாணை வழங்கியது. இதுவே பிற்காலத்தில் உலகெங்கும் ஐரோப்பியர்களின் காலனி ஆதிக்கம் (Colonialism) பரவ முதன்மைக் காரணமாக அமைந்தது.

அரசி இஸபெல்லா கொலம்பஸின் நாட்குறிப்பைத் தானே  வைத்துக்கொண்டு அதைக் கைப்பட அப்படியே இன்னொருவரைக் கொண்டு எழுதச்செய்து 1493ன் இறுதியில் ‘பார்சிலோனா நகல்’ என்றழைக்கப்பட்ட அந்த நகலைக் கொலம்பஸிடம் கொடுத்தார். அசல் நாட்குறிப்பைத் தன் அனுமதியில்லாமல் எவரும் நகலெடுக்கக் கூடாது என்று அரசாணையும் பிறப்பித்தார். 

ஆனால், 1504ம் ஆண்டு நவம்பர் 26 அன்று இஸபெல்லாவின் மறைவுக்குப் பிறகு அந்த அசல் நாட்குறிப்பு காணாமல் போயிற்று. அரசவை இடமாற்றம், அரண்மனைத் தீவிபத்துகளில் அது எங்கேயோ வரலாற்றிலிருந்தே காணாமல் போனது.  

1506 ல் கொலம்பஸின் மறைவுக்குப் பிறகு, அந்த நாட்குறிப்பின் நகல் கொலம்பஸின் மகன் டியாகோவிடம் வந்து சேர்ந்தது. 1526 ல் அது பேரன் லூயியிடம் வந்தது. லூயிக்கு அதை நூலாகப் பிரசுரிக்கும் அதிகாரம் அரசால் 1554ல் வழங்கப்பட்டாலும், லூயி அதை ஒருபோதும் செய்யவில்லை. ஏனெனில், அதற்கு முன்பே அது லூயியால் விற்கப்பட்டிருந்தது. 

கணக்கு வழக்கில்லாமல் கடன் வாங்கும் பழக்கம் கொண்டிருந்த, ஊதாரித்தனமாகச் செலவு செய்யும் கொலம்பஸின் பேரன் லூயி கொலம்பஸ், 16ம் நூற்றாண்டின் மத்தியில் பெருந்தொகைக்கு அதை விற்றிருக்கலாம் என வரலாற்றாய்வாளர்கள் கருதுகிறார்கள். 

 நமக்கு இப்போது கிடைத்திருக்கும் தகவல்கள் அனைத்துமே  1530களில், கொலம்பஸின் முதல் கடற்பயணத்துக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு, வரலாற்றாய்வாளரும் ரோமன் கத்தோலிக்கத் துறவியுமான பார்த்தலோமே தே லாஸ் கஸாஸின் (Bartolomé de las Casas) முயற்சியால்தான் சாத்தியமானது. 

கஸாஸ் கொலம்பஸின் அசல் நாட்குறிப்பிலிருந்து பல பகுதிகளையும் நீண்ட அத்தியாயங்களையும் சுருக்கெழுத்தில் தன் கைப்பட எழுதினார். எனவே நாம் அறிந்துகொண்டதெல்லாம் அந்தத் துறவி சுருக்கெழுத்தில் எழுதிய வடிவத்தின் வழியாகத்தான். உண்மையில் கொலம்பஸ் என்ன சொற்களை எழுதினார் என்பது வரலாற்றின் எங்கோ ஆழத்தில் ஒளிந்துகிடக்கிறது, என்றேனும் ஒருநாள் அது வெளிவரக்கூடும்.

கஸாஸ் அமெரிக்க வரலாற்றின் மிக முக்கியமான, அதே சமயம் அடுக்கடுக்கான முரண்பாடுகள் நிறைந்த ஒரு மாபெரும் ஆளுமை.

இண்டீஸ் மக்களின் வரலாற்றை அறிந்துகொள்ள ஒரு வரலாற்றாய்வாளராக கஸாஸ் எடுத்த கடும் முயற்சியால்தான், கொலம்பஸின் நாட்குறிப்பு விவரங்கள் இவ்வளவாவது நமக்குக் கிடைத்தன. அவரது தந்தையும் மாமாவும் கொலம்பஸுடன் அடுத்தடுத்த கடற்பயணங்களில் பயணித்தவர்கள் என்பதால், கொலம்பஸின் அசல் நாட்குறிப்பை அவரால் பார்வையிடவும், அதிலிருந்து சுருக்கெழுத்தில் பல அத்தியாயங்களை எழுதிக்கொள்ளவும் முடிந்தது. 

ஸ்பெயின் அரசுடன் இணைந்து பழங்குடியினரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளைக் எடுத்திருந்த, மாபெரும் நிலவுரிமையாளராக இருந்து, பல பழங்குடி அடிமைகளை விவசாய வேலைகளில் ஈடுபடுத்திப் பெரும்பணம் ஈட்டிய கஸாஸ் திடீரென ஆன்மிக வழியில் தீவிரமாக ஈடுபட்டு, தன்னிடம் இருந்த அடிமைகள் அனைவரையும் விடுவித்ததோடு, அடுத்த 50 ஆண்டுகள் ஸ்பானிய அரசுக்கு எதிராக அடிமைமுறையை ஒழிக்க வெகுவாகப் போராடினார்.

அவரது, A Short Account of the Destruction of the Indies என்னும் நூல் புத்துலகில் ஸ்பானியர்கள் செய்த அட்டூழியங்களை விரிவாகப் பேசியது.  கொலம்பஸின் கடற்பயணத்தால் இண்டீஸ் மக்கள் எப்படி அழிந்தார்கள் என்பதைப் பேசிய அந்த நூலுக்காகவே அவர் அந்த நாட்குறிப்பைப் பிரதி எடுத்தார். 

அந்த நூலை அடிப்படையாகக் கொண்டுதான் 1542ல் இண்டீஸ் மக்களுக்கான, அவர்களை எப்படி நடத்த வேண்டும், அவர்களது உரிமைகள் என்ன என்பதற்கான புதிய அரசுச் சட்டங்கள் இயற்றப்பட்டன.  

கஸாஸின் குடும்பத்திற்குக் கொலம்பஸுடன் இருந்த நெருக்கமும், அவரது கடற்பயண வரலாற்றில் அவருக்கு இருந்த அதீத ஆர்வமுமே நமக்கு இந்த அளவுக்காவது தகவல்கள் கிடைக்க உதவியிருக்கிறது.

அவரது தந்தை பெட்ரோ டெ லாஸ் கஸாஸ் (Pedro de las Casas) கொலம்பஸுடன் அவரது இரண்டாம் கடற்பயணத்தில் 1493ல் இணைந்திருந்ததால், கஸாஸுக்கு கடற்பயணங்களில் ஈடுபடுவோரின் உள்வட்டத்தை அணுகுவதும், நேரடி அணுகுமுறையும் சாத்தியமானது.

கஸாஸ், இண்டீஸ் மக்களின் வரலாறு Historia de las Indias (History of the Indies) என்னும் மாபெரும் படைப்பை உருவாக்கப் பல பத்தாண்டுகள் கடுமையாக உழைத்தார். அரசு ஆவணக் காப்பகத்திலும் தனிப்பட்ட நபர்களின் சேகரிப்பில் இருந்த நாட்குறிப்பு, கடிதம் போன்றவைகளைச் சேகரித்து எடுத்துக்கொண்டிருந்ததால், ஐரோப்பியர்களின் புது உலகத் தேடலில் உண்மையில் பழங்குடியினருக்கு என்ன நடந்தது என்பதை அவரால் உலகிற்குச் சொல்ல முடிந்தது. அவர் ஆவணங்களைத் தேடினார் என்பதை விட, வேட்டையாடினார் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு தீவிரமாக அவர் அதில் ஈடுபட்டிருந்தார். 

துரதிர்ஷ்டவசமாக  கஸாஸின் சுருக்கெழுத்து ஆவணமும் மர்மமான முறையில் மறைந்துபோனது. பல நூற்றாண்டுகள் கழித்து 1790ல் ஆய்வாளர் மார்ட்டின் பெர்னாண்டஸ் டெ நபாரெட்டே (Martín Fernández de Navarrete), ஸ்பெயின் அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரபு ஒருவரின் தனிப்பட்ட நூலகத்திலிருந்து அதை மீண்டும் கண்டுபிடித்து மீட்டெடுத்தார். 

கஸாஸ் எழுதிய அந்தச் சுருக்கெழுத்து நகல் (Abstract) முற்றிலும் கொலம்பஸின் சொந்த மொழியிலேயே இருக்கவில்லை. அது கொலம்பஸின் நேரடிச் சொற்கள், கஸாஸின் சொந்த மொழி, மற்றும் அவரது விமர்சனக் கோணம் ஆகிய மூன்றும் கலந்த ஒரு கலவையாகத்தான் இருந்தது.

நாட்குறிப்பின் பெரும்பகுதியை கஸாஸ் சுருக்கி எழுதும்போது, கொலம்பஸ் தன் நாட்குறிப்பில் என்ன எழுதினார் என்பதைத் தன் சொந்த மொழியில் தான் குறிப்பிடுகிறார்.

உதாரணத்திற்கு, “அட்மிரல் (கொலம்பஸ்) அன்று இவ்வளவு தூரம் பயணம் செய்ததாகக் கூறுகிறார்…” என்றும், “அங்குள்ள பூர்வகுடிகள் மிகவும் அன்பானவர்கள் என்று அட்மிரல் எழுதுகிறார்…” என்றும் கஸாஸ் தன் மொழியிலேயே மாற்றி எழுதினார்.

மிக முக்கியமான சில வரலாற்றுத் தருணங்களை விவரிக்கும்போது மட்டும், கஸாஸ் கொலம்பஸின் அசல் நாட்குறிப்பில் இருந்த வரிகளை அப்படியே அச்சுப்பிசகாமல் பிரதி எடுத்தார்.

அக்டோபர் 12, 1492 அன்று முதன்முதலில் அமெரிக்க நிலத்தைக் கண்டடைந்த நிகழ்வு மற்றும் அங்குள்ள தாஹினோ மக்களைச் சந்தித்த நொடிகளை எழுதும்போது, “அட்மிரலின் சொந்தச் சொற்கள் இதோ…” என்று குறிப்பிட்டு, கொலம்பஸ் எழுதிய வாக்கியங்களை அப்படியே எழுதியுள்ளார். கஸாஸ் வெறும் ஒரு நகலெடுப்பவர் மட்டுமல்ல; அவர் ஒரு தீவிரமான மனித உரிமைப் போராளி. எனவே, கொலம்பஸின் நாட்குறிப்பை அவர் பிரதி எடுத்தபோது, அதில் தன் சொந்தக் கோணத்தையும் சேர்த்தார்:

கொலம்பஸ் பூர்வகுடி மக்களைப் பற்றி எழுதிய சில இடங்களின் ஓரங்களில், கஸாஸ் தனது சொந்தக் குறிப்புகளை எழுதினார் (Marginalia). “கொலம்பஸ் இங்கு தவறு செய்கிறார்”, “இங்குதான் ஸ்பானியர்களின் பேராசை தொடங்குகிறது” என்பது போன்ற தன் விமர்சனங்களை அவர் ஆவணப்படுத்தினார்

 40 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டதால், சில இடங்களில் கொலம்பஸ் பயன்படுத்திய பழைய கடற்பயணக் கலைச்சொற்களுக்கு (Nautical terms) கஸாஸ் தனது சொந்த விளக்கங்களையும், புரிதலையும் புகுத்தியுள்ளார்.

எனவே, இன்று நம்மிடம் இருக்கும் நாட்குறிப்பு என்பது தூய்மையான கொலம்பஸின் மொழி அல்ல. அது கொலம்பஸ் காட்டிய புதிய உலகத்தைக் கஸாஸ் என்ற மனிதரின் கண்ணாடி வழியே நாம் பார்க்கும் ஒரு சித்திரம் தான்.

ஆனாலும் அந்தச் சுருக்கெழுத்துப் பிரதி மட்டுமே நம்மை அந்த 1492ம் ஆண்டு கடற்பயணத்துடன் இணைக்கும் ஒரே ஒரு கண்ணி. 1925 வரை ஸ்பெயினின் தேசிய நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த அது அங்கிருந்தும்  மர்மமாகக் காணாமல் போனது. நமக்குக் கிடைத்தவை எல்லாம் அதிலிருந்து அச்சுப்பிரதி எடுக்கப்பட்டவைதான். 

 கொலம்பஸ் நாட்குறிப்பில் குறிப்பிட்டிருக்காத, உடைவாளை நிலம் நோக்கித் தாழ்த்தும் சித்திரம் எப்படி உருவாக்கப்பட்டது,  பயணத்தில் அடுத்தடுத்து என்னவெல்லாம் நடந்தது என்பதை  தொடர்ந்து  காணலாம். 

தொடரும்…..

கொலம்பஸ்

கன்னித்தீவு
Exit mobile version