Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

பாபிநேனி சிவசங்கர்

தெலுங்கில்: டாக்டர். சி.ஹெச். சுசீலா
தமிழாக்கம் : ராஜி ரகுநாதன் 

8. பாபிநேனி சிவசங்கர் – (1953, வயது71)

பாதி திறந்த கதவு

இலக்கியத்தை ஆத்மாவின் உயர்வுக்கான ஒரு படிக்கட்டாக மாற்றிக் கொண்ட ‘பாபிநேனி’  சிவசங்கரின் சிறுகதைத் தொகுப்பு ‘பாதி திறந்த கதவு’. இதில் பதினாறு கதைகள் உள்ளன. தத்துவம் இல்லாத எழுத்தைக் கற்பனை கூட செய்ய இயலாத ‘பாபிநேனி’, தான் படைத்த கதைகளிலோ, கவிதைகளிலோ காட்டிய உணர்வுகள் இலக்கியப் பிரியர்கள் அனைவருக்கும் சம்மதமானவையே. 

‘சுசீலா’ என்ற கதை அற்புதமான படைப்பு. ஆண்கள் சிந்திக்கும் விதத்தை மறைமுகமாக விமரிசிக்கும் கதை. சமுதாயத்தை நேராக எதிர்கொண்டு கேள்வி கேட்கவும், தயக்கமின்றி சிந்திக்கவும் செய்யும் கடுமையான விமரிசனம். 

உண்மையில் பெண்களிடம் வன்முறை நிகழும் போது புனிதத்தை இழப்பது பெண் மட்டும் தானா என்ற கேளிவிக்கான பதிலே இந்தக் கதை. ஒரு பெண்ணுக்கு மானபங்கம் நடந்தால், இல்லை, இல்லை, ‘மானபங்கம்’ என்ற சொல் சரியானதல்ல. மனிதனுக்கு ‘அபிமானம்’ இருக்கிறதே தவிர ‘மானம்’ எங்கே இருக்கிறது? ஒருவேளை இருந்தால் அது பெண்ணோடு கூட ஆணுக்கும் ஏன் இல்லை? இந்தக் கேள்விகள் கதாநாயகன் நரேந்திரனின் சொற்களில் வரவில்ல. ‘பாபிநேனி’ சிவசங்கரின் விமரிசனபூர்வமான விளக்கத்தில் உள்ளன. கண்மூடித்தனமாக பெண்ணைக் குற்றவாளியாக நிறுத்தி, அந்தக் குற்றத்தில் பங்கு வகித்த ஆணைக் குற்றமற்றவனாகக் கருதும் அநியாயத்தை நடுரோட்டில் நிறுத்திக் கேள்வி கேட்கிறார்.  

“கற்பு என்றால் என்ன? கணவனைத் தவிர வேறு ஆணை உள்ளத்தாலோ உடலாலோ விரும்பாமல் பவித்திரமாக இருப்பதுதான் கற்பா?” என்று வினவுகிறார். கதையின் பெயர் ‘சுசீலா’. கதையின் நாயகி பெயர் ‘சுசீலா’. கெட்டுப்போன பெண்ணின் பெயர் ‘சுசீலா’ (நல்லொழுக்கம் கொண்டவள்) என்று எப்படி ஆகும்? சுசீலா கெட்டுப் போனாளா? கெடுக்கப்பட்டாளா? அதற்கு நரேந்திரன் கூறும் பதிலைப் போன்ற கேள்வி, “அவளுடைய ஈடுபாடு எதுவுமின்றி அவள் உடல் மீது நடந்த தாக்குதலுக்கு அவளை ஏன் பொறுப்பாக்குகிறீர்கள்? அதனால் சுசீலா கெட்டுப் போனாள் என்பதை நான் ஏற்கமாட்டேன்” எனபதே. 

கதையின் தொடக்கத்தில் சுசீலா கூறும் கருத்துக்கள் புரட்சிகரமானவை. அவளைப் பற்றி உலகத்திற்கு எல்லாம் தெரியும். அவளை மணம் புரிந்து கொள்பவனுக்குத்   தெரிவிக்காமல் இருப்பதில் அவளுக்கு விருப்பம் இல்லை. தெரிந்த பின் அவனுடைய எண்ண அலைகள் எதிர்காலத்தின் மீது பாதிப்பு ஏற்படுத்தும். ஒருவேளை இப்போது இல்லாவிட்டாலும் பின்னர் தெரிந்தால் பரிணாமங்கள் கடுமையாக இருக்கும். அதனால் அந்த சத்தியத்தை சத்தியமாகவே கூறி மன நிம்மதி பெறலாம். தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு, பிறரையும் ஏமாற்றும் வேதனையிலிருந்து விடுபடலாம். பொய் சொல்லி மகிழ்ச்சியை விலைக்கு வாங்க முடியாது. அவள் மீது யாராவது பரிதாபம் காட்டினால் அவளால் பொறுக்க முடியாது. அதனால் அவள் கூறுகிறாள், “வலியை   என்னால் பொறுக்க முடியும். ஆனால் பரிதாபத்தைப் பொறுக்க முடியாது”. இது அவளுடைய சுயமரியாதை. அவள் தன் திருமண விஷயத்தில் திடமான சித்தனை கொண்டிருந்தாள்.

“முன்பின் தெரியாமல், எண்ணங்கள் ஒன்று சேராமல் யாரையாவது எதற்காகத்  திருமணம் செய்ய வேண்டும்?” என்று கேட்ட நரேந்திரனுடைய விசாலமான பார்வையும், வாக்கு வன்மையும் அவளுக்குப் பிடித்தன. இந்தக் கதையைக் கூறுவது நரேந்திரனின் மாமா. நளினியின் கணவன். சுதாகர் ராவின் நண்பன். ஆனால் பெயரைக் கூட எங்கும்  கூறாமல் இருப்பது கதைப் போக்கின் ஒரு உத்தி. கதை முழுவதும் தன்மை ஒருமையில் நடக்கிறது. ஏதாவது தத்துவ சிந்தனைகள் வரும்போதும், தர்க்கத்தால் தீர்ப்பு கூற வேண்டி வரும்போதும் நேரந்திரனின் இடத்தில் ‘பாபிநேனி சிவசங்கர்’ வெளிப்படுகிறார். 

சுசீலா அழகானவள். சுதாகர் ராவின் சொற்களில் அவள் ஒரு தங்கப் பதுமை. புத்திசாலிப் பெண். ‘தரசரத ராமய்யா’வின் மூத்த மகள். அவள் வரைந்த இயற்கைக் காட்சிகளின் ஓவியத்தைப் பற்றிக் கூறும் விதமாக மேலும் சில நவீன ஓவியங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. தொலைதூரக் கல்வியில் எம்.ஏ. ஆங்கிலம் பயின்றாள். நரேந்திரனின் மாமா அவளைப் பற்றி வரைந்த ஆளுமைச் சித்திரம் அசாதாரணமானது. ‘மேக்பெத்’ நாடகத்தை வரும் சூனியக்காரிகளைக் கொண்டு ஏன் ஷேக்ஸ்பியர் நாடகத்தைத் தொடங்கினார் என்ற கேள்விக்கு அவள் கூறிய நுட்பமான பதில்களைப் பாராட்டாமல் அவரால் இருக்க முடியவில்லை. 

சுசீலாவுக்குச் சில திடமான அபிப்பிராயங்கள் இருந்தன. ஆனால் அவற்றை சாஸ்வதமான உண்மைகளாக நினைக்காமல் ஒப்பீட்டளவில் மட்டுமே  ஏற்கிறாள். 

“கடினமான அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கும் மனிதன் வாழ்க்கையில் நிறைய இழக்கிறான். தன்னுடைய அப்பிபிராயங்களின் சட்டகத்தில் முழுவதும் சிக்காமல் அசைந்து வளைந்து கொடுக்கும் தன்மை இருதால் மகிழ்ச்சியாக வாழ முடியும். உடனிருப்பவரையும் மகிழச் செய்ய முடியும்” அவ்வாறு கூறியபடியே ஓவியத்தை எடுத்துக் கொண்டு சுசீலா சென்று விடுகிறாள். ஒரு குளிர்ச்சியான நறுமணம் விலகிச் சென்று விட்டாற்போலத் தோன்றியது. அழகு, அறிவுக்கூர்மை ஆகியவற்றோடு சுசீலாவின் பொழுதுபோக்குகளும் பாராட்டு பெறக் கூடியவையாக இருந்தன. அதனால்தான் நரேந்திரனின் மாமா கூறுகிறார், “சுசீலா என் அருகிலேயே அமர்ந்திருந்தாள். அவளுடைய முகத்தில், முக்கியமாகக் கண்களில் எதோ அசாதாரணமான அறிவொளி மறைந்திருந்தாற்போல் தோன்றியது”. 

“ஆனால் சமுதாயம் என்று ஒன்று உண்டல்லவா? அதற்கு அழகும் வேண்டும். புத்திசாலித்தனமும் வேண்டும். கற்பும் வேண்டும்” என்று நரேந்திரனின் மாமா கூறுகையில், நரேந்திரன் நிதானமாக “சுசீலாவை விரும்பாமல் போவதற்கு வலிமையான காரணம் எதாவது உள்ளதா என்று யோசிக்கிறேன்” என்றான். அவனால் அவளிடமிருந்து மனத்தைத் திருப்ப முடியவில்லை. நரேந்திரனின் தர்க்கத்தில் இரண்டு கருத்துக்கள் இருந்தன. ஒன்று, சுசீலா கெட்டுப் போனவளா என்ற கேள்வி. இரண்டாவது, கெட்டுப்போன பெண்ணை மணம் புரிந்து கொள்ளக் கூடாதா என்பது. “கெட்டுப்போவது என்றால் விளக்கம் என்ன?” என்று கேட்டான் நரேந்திரன். “அதாவது கற்பை இழப்பது” என்பது மாமாவின் பதில். “கற்பு என்றால் என்ன?” என்று நரேந்திரன் குறுக்குக் கேள்வி கேட்டான். 

“எப்போதும் வேறு ஒரு ஆணைப் பற்றி மனத்தால், சற்று நேரத்திற்கு ‘செயலால்’ என்பதை நீக்கி விடுவோம், விருப்பத்தோடு நினைக்காத பெண்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?  திருமணத்திற்கு முன்பு யாரையும் விரும்பாமல், வரப்போகும் கணவனை மட்டுமே விரும்பவது என்று எந்தப் பெண்ணாவது மனத்தை அடக்கிக் கொண்டு இருக்க முடியுமா? அதே போல் ஆணும். அதாவது ஆண் பெண் இருவருக்கும் கற்பு எனது பொதுவல்லவா?”  

“நரேந்திரனின் சொற்களில் உண்மை இருக்கிறது” என்று சிந்தித்த நரேந்திரனின் மாமா  நரேந்திரனை மனத்துக்குள் பாராட்டினார். “அதனால், மானசிக புனிதத்தின் மீது எனக்கு அத்தனை நம்பிக்கை இல்லை. உடலளவில் புனிதம் என்றாலும் அப்படித்தான். ஆண் என்றாலும், பெண் என்றாலும் தனக்கு விருப்பமான ஒருவரை விரும்புவதில் தவறில்லை. அந்த விருப்பத்தில் மனமும் உடலும் சமநிலை இழப்பதைப் பொறுத்து நல்லதோ கெட்டதோ நடக்கும். அதாவது ஒரு மனிதன், இன்னொருவருடைய உள்ளத்தின்  தேவையில்லாமல் உடலையே விரும்புவது தவறு என்று நினைக்கிறேன். அவ்வளவுதானே தவிர, தனியாக ‘கற்பு’ என்ற பவித்திரமான பொருள் எங்குள்ளது? பவித்திரம், பவித்திரமற்றது என்பவை ரொம்ப பெரிய சொற்கள். இந்தப் புனிதத்தை முடிவு செய்வதற்குத் திருமணம் அளவுகோல் அல்ல”.

இங்கு கற்பை மிகச் சிக்கலில் ஆழ்த்தி விட்டான். இனி, கற்புள்ளவர்களே இல்லை என்று தோன்றுமளவுக்கு இருந்தது அவனுடைய வாதம். சுசீலாவிடம் நரேந்திரன் சிரித்துக் கொண்டே கூறிய கூற்றுக்கு சுசீலா எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறாள் என்று பாருங்கள். 

“நீங்கள் கூறும் கற்பு நம் வாழ்க்கையில் ஏற்படுத்தக் கூடிய மாற்றம் எதுவும் இல்லை. சமுதாயத்தின் பார்வையில் கற்புக்கு என்ன மதிப்பு என்கிறீர்களா? தாலியின் மறைவில் விபச்சாரம் செய்யும் பதிவிரதைகள் எத்தனை பேர் இல்லை?” என்றாள்.

“இந்த விஷயம் தெரிந்தால் உன்னை யார் திருமணம் செய்து கொள்வார்கள்?” என்று நரேந்திரன் கேட்டபோது, அவள் தைரியமாகக் கூறிய சொற்கள் நரேந்தனின் பாராட்டைப் பெற்றன. 

“தெரியாமல் என்னை யாராவது திருமணம் செய்து கொள்வதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்” இது அவளுடைய உண்மைத் தன்மை. அதுவே அவளுடைய தீர்மானமான  முடிவு.  

அப்போது சுசீலாவின் ஆளுமை நரேந்திரனின் பார்வையில் இமயமலை போல உயர்ந்தது. அதனால்தான் அவளை மணம் புரிய விரும்பினான். சுசீலாவும் நரேந்திரனும் கணவன், மனைவி ஆனார்கள். 

இந்தக் கதையில் பெண்களுக்கு நடக்கும் மனிதத் தன்மையற்ற கொடுமைகளில் குற்றவாளி யார் என்பது தெளிவாக்கப்பட்டது. கற்புக்கு விளக்கமாக சுசீலாவை  உருவாக்குகிறார் எழுத்தாளர். பெண்களின் வாழ்க்கையை ஆண்களின் சுயநலம் எவ்வாறு சீரழிக்கிறது, அதன் பின் அவளுடைய வாழ்க்கை எத்தகு கீழான நிலைக்குத் தள்ளப்படுகிறது என்பது புரிகிறது. ஆனால் அவளுடைய தன்னம்பிக்கை அவளை எவ்வாறு ஒரு மனிஷியாகவும் மாபெரும் சக்தியாவும் உருவாக்குகிறது என்பதை சுசீலாவின் பாத்திரச் சித்திரிப்பு மூலம் ‘பாபிநேனி’ தெளிவாகக் கூறுகிறார்.  

“மனிதன் சுகமாக வாழ வேண்டுமென்றால் சற்றேனும் தைரியமும், சாகசமும் தேவை என்று நான் நினைக்கிறேன். அவை சுசீலாவிடமும் நரேந்திரனிடமும் நிறைய இருந்தன. அவர்கள் சுகமாக வாழ்வார்கள் என்பது என் நம்பிக்கை. ஆனால் சமுதாயத்தின் மேல் சந்தேகம் உள்ளது” என்கிறார் எழுத்தாளர். இந்தக் கதையில் சுசீலா, நரேந்திரன் என்ற பெயர்கள் பொருள் பொதிந்தவை. 

“மனிதர்கள் தளர்வார்கள்”

‘நார்மன் மெயிலர்’ கூறிய கூரான சொற்களோடுத் தொடங்கும் இந்தச் சிறுகதை, ஆண், பெண் இடையே பாலியல் முக்கியத்துவத்தையும், மன சஞ்சலத்தையும், பேச்சின் மறைபொருளையும் விவரிக்கிறது. ‘சக்கிரபாணி’ என்ற ஒரு அற்புதமான இல்லறத்தானின் உடலில், நடு வயதில் தொற்றும் ‘நாற்பது வயது சின்ட்ரோம்’ எனப்படும் நோய்க்குறி தொற்றி உடலில் தளர்வு ஏற்படுத்துகிறது. அந்த ‘சின்ட்ரோ’முக்கு ஆளான ஆண்களுக்கு எடுத்துக்காட்டாக அவனைக் காட்டி இந்தக் கதை நகருகிறது. 

வயது அதிகரிக்கும் போது உடல் தளர்வது இயல்புதான். சக்கிரபாணியின் மனமும் தளர்ந்து, சிந்தனையும் தளர்ந்து, புதியவற்றுக்காக ஏங்கத் தொடங்குவதில் கதை தொடங்குகிறது. அவனுடைய மனைவி குறித்தும், அவளுடைய உடல் தளர்வு குறித்தும் அவனுக்கு எரிச்சலும் விரக்தியும் ஏற்பட்டாலும், கதையைக் கதையாக அன்றி, கணவன் மனைவி இடையேயான தொடர்பையும், சொல்லிலடங்காத, எல்லையற்ற, அகண்டமான, சாஸ்வத நிலையையும் சிறுகதைக்கு நீதி கூறுவது போல திருப்பிய விதம் அற்புதமாக உள்ளது. 

மதுபாலா நடுவில் மதுவைப் போல அவனுடைய வாழ்க்கையில் நுழைந்தாலும், மயக்கத்தில் சற்று ஆட்டம் போட்டாலும், சக்கிரபாணியின் உள்ளம் ஓயாமல் அவள் பின்னால் ஓடினாலும், இறுதியில் அவனுக்குத் தெரியவந்தது, “பனிக்கட்டி வெப்பமாக இருக்கும்’ என்று. அன்போடு பராமரிப்பவர் இன்றி, இல்லற சுகம் தொலைவாகிப் போன  மதுபலாவுக்கு, தன் கணவனால் கிடைக்கும் சுகம் கடுகளவே என்றும், அது அரைகுறை என்றும் புரிந்து, வேறொரு வழியைத் தேடும் நேர்த்தில் சரியாக சக்கிரபாணியின் அறிமுகம் கிடைத்தது. பரிச்சயம் காதலாக மாறியது. காதல் மாற்றத்திற்கு வழி வகுத்தது. பணத்தாசை கொண்ட கணவனோடு இல்லறத்தின் சாரத்தை அனுபவிக்க முடியாத தன் நிலைமையைத் தன் தந்தையிடம் தெரிவித்தாள். அவர் கொஞ்சம் யோசித்து, “ஒரு பிரச்சினையில் இருந்து இன்னொரு பிரச்சினைக்குள் நுழைகிறாயோ?” என்று தன்  சந்தேகத்தை அவளிடம் வெளிப்படுத்தி, தன் மகள் எந்தக் கஷ்டத்தில் சிக்கப் போகிறாளோ என்று அஞ்சினார்.   

சக்கிரபாணி அடிக்கொருதரம் ‘ஐ லவ் யு’ என்று கூறிவிட்டு, ”என் மனைவியை இனிமேல் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. வெறும் லூஸ் உடம்பு” என்று தன்  மனைவியைப் பற்றி குறை சொல்வதைக் கவனித்த மதுபாலாவுக்கு ஏதோ புரியாத உணர்வு பூதக்கண்ணாடியில் தெரிந்தது. “ரொம்ப மோகத்தில் ஆழ்த்துகிறாய்” என்ற அவனுடைய புகழ்ச்சி போன்ற சொற்களால் மதுபாலா திக்குமுக்காடிப் போனாள். 

அன்று, அதாவது மறுநாள் திருமணம் நடக்கப் போகும் நாள். அவள் கால் வழுக்கிக் கீழே விழுந்து காலில் சிராய்ப்பு ஏற்பட்டது. “மை காட். ஐ ஆம் லக்கி. இதுவே முகத்தில் அடிபட்டிருந்தால் உன்னுடைய அழகெல்லாம் என்ன ஆகியிருக்கும்? என்னால் தாங்க முடியாது” என்றான். மதுபாலா திடுக்கிட்டாள். வெளி அழகை ஆராதிக்கும் சக்கிரபாணி தன் உள்ளத்தை எப்படிப் புரிந்து கொள்வான்? இத்தனை காலம் அவனுடைய மனைவி பதிவிரதையாக, சாவித்திரியைப் போல அவனைக் காதலித்தாலும், அவனுக்கு ஒரு மகளையும் பெற்றுத் தந்த அவனுடைய இல்லாளை அவளுடைய தளர்ந்த உடலைக் காரணம் காட்டி தன்னுடைய மோகத்தில் விழுந்திருக்கிறான். இப்போது அவள் அந்த சாவித்திரியின் சம்சாரத்தைக் கெடுக்கப் போகிறாளா? அவர்களுடைய மகள் ப்ரீத்தியின் எதிர்காலத்தை அழிக்கப் போகிறாளா? தன்னுடைய சுயநலத்தால் இருவர் பலி ஆவது   உறுதி. சக்கிரபாணியிடம் இருக்கும் ‘அழகை ஆராதிக்கும் குணம்’ மாறாது எனபது என்ன நிச்சயம்? பதினைந்தாண்டுகள் மனைவியோடு குடித்தனம் நடத்திய பிறகு, சக்கிரபாணி மீண்டும் மணமகன் ஆவதற்குத் தயாராகிறான். சாவித்திரி மூட்டு வலியோடு எல்லா வேலைகளையும் செய்துவிட்டு, இரவு உடம்பு வலியோடு படுத்தால், “நீ எதற்கும் உதவ மாட்டாய்” என்று சக்கிரபாணி தன் எதிர்கால திட்டத்திற்கு அடித்தளம் வகுக்கிறான். 

சாவித்திரி ஒரு அப்பாவிப் பெண்மணி. சந்தித்து ஒன்றரை மணி நேரத்திற்குள் தன் சம்சார வாழ்க்கையில் பாதியைக் கூறி விட்டாள். கள்ளமில்லாமல் “முப்பத்து மூன்று வயதுக்குள் கிழவியாகிட்டேன் இல்ல?” என்று சக்ரபாணி வீட்டுக்கு அழைத்து வந்த போது மதுபாலாவிடம் கேட்டாள். சக்கிரபாணியின் மகள் ப்ரீத்தி, மதுபாலாவை “ஆன்ட்டி” என்று விளித்து, “எங்கப்பா உங்களப் போன்ற தோழியை வீட்டுக்கு அழைத்து வருவது இதுதான் முதல் தடவை” என்றாள். மதுபாலாவின் மனத்தில் சுயபரிசீலனை ஆரம்பமானது. அவளிடம் இன்னும் மனசாட்சி இருந்தது. பகுத்தறிவு இருந்தது. சாவித்திரியையும், மகளையும் இத்தனை எளிதாக விட்டுக் கொடுக்கும் இவன், ஏதோ ஒரு நான் என்னை விட்டுக் கொடுக்க மாட்டானா? மதுபாலா தன் பிரச்சினையை மூன்று கோணங்களில் ஆராய்ந்தாள். சக்கிரபாணிக்குத் தன் மேல் எதனால் ஆர்வம் ஏறபட்டது? தன் அழகால் இருக்காலாம். மனைவியிடம் ஏற்பட்ட திருப்தியின்மையால் இருக்கலாம். ‘செஸ்’ ஆட்டத்தை அவள் மிகத் திறமையாக ஆடுவாள். அவளை மிஞ்சி ஆடுவதற்கு அவன் முயலுவான். இரண்டு நாட்களில் சாவித்திரியின் குடும்பம் சீரழியப் போகிறது. ப்ரீத்தியின் எதிர்காலம் கேள்விக்குறியாகப் போகிறது. சாவித்தியின் இடத்தில் அவள் இருந்தால் என்ன செய்திருப்பாள்? மதுபாலாவிடம் பதில் இல்லை. 

கதையைச் சூழ்ந்த புகைப் பனி விலகிவிட்டது. “தொலைவில் இருக்கும் மலை இதமான வெய்யிலில் மின்னுகிறது”  (இக்கரைக்கு அக்கரைப் பச்சை) என்ற முத்தாய்ப்போடு கதை முடிகிறது.

“என்னைவிட இலக்கியத்தின் உயரம் அதிகம். அது என் ஆத்மாவின் உயர்வுக்கு நான் தேர்ந்தெடுத்த கருவி. கதையோ, கவிதையோ தத்துவச் சிந்தனை இல்லாத படைப்பை என்னால் கற்பனை செய்ய இயலாது. நம் சிந்தாந்தங்கள் எல்லாம் மனிதனை மையமாகக் கொண்டவையே”. “நானும் என் கதைகளும்” என்ற “பாதி திறந்த கதவு” முன்னுரையில் பாபிநேனி சிவசங்கர் உதிர்த்த முதிர்ந்த வாக்கியங்கள் இவை.  

அடுத்த பகுதியில் மேலும் சில பெண்ணியம் எழுதிய ஆண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிப் பார்ப்போம். 

—- ௦௦௦௦ —– 

தெலுங்கு பெண் எழுத்தாளர்கள்

கவிஞர் பகவான், ஆசு பாபு ராஜேந்திர பிரசாத் & என்ட்லூரி சுதாகர் சையது சலீம்
Exit mobile version