- மருத்துவத்தில் நிலைத்தவையும், அழிந்தவையும்
- ஹோமியோபதி – ஓர் எளிய அறிமுகம்
- மனித நாகரீகத்தின் நுழைவாயிலில்
- 3. மரணமின்மையின் முதற்துளி
- 4. புனிதத்திலிருந்து அறிவை நோக்கி
- அறிவு அளித்த விடுதலை
- 6. ஞானங்களின் விளைநிலம்
- 7. மூன்றே பொருளாய் முடிந்தது
- 8. பிரபஞ்ச ஒழுங்கை வழிநடத்தல்
- 9. ஒருங்கிணைப்பின் வழியே
- 10. மீண்டெழல்
- 11. அறிவின் ஒளி
- 12. என்றென்றும் நிலைத்திருப்பது
பொதுயுகம் 1796 ஆம் ஆண்டு மானுடகுல வரலாற்றில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்தன.
1. எட்வர்ட் ஜென்னர் பெரியம்மை நோய்க்கான முதல் தடுப்புமுறையை அறிமுகப்படுத்தி பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை இறப்பிலிருந்து காப்பாற்றினார்.
2. ஜெர்மனியை சேர்ந்த மருத்துவர் சாமுவேல் ஹானிமன் ஹோமியோபதி என்று அழைக்கும் மருத்துவ முறையை முன்வைத்து Essay on a New Principle for Ascertaining the Curative Power of Drugs என்ற தனது கட்டுரையை பதிப்பித்தார்.
ஹானிமன் லெப்ஸிக் பல்கலைக்கழகத்தில் ( Leipzig University) மருத்துவம் படித்தார். பின்னர் எர்லேங்கன் பல்கலைக்கழகத்தில் ( Erlangen University) 1779-ல் MD பட்டம் பெற்றார். அவரது முதல் பத்தாண்டு மருத்துவ தொழிலானது சிரமமானது. அன்றிருந்த மருத்துவ முறையின் மீது கடும் விலக்கம் கொண்டிருந்தார். மரபான மருத்துவமுறைகளில், உடலிலுள்ள கெட்ட இரத்தம் வெளியேற அட்டைபூச்சியை கொண்டு கடிக்கவிடுதல், சூடு வைத்தல் போன்றவை ஏற்கனவே நோயின் வேதனையில் உள்ள நோயாளியை மேலும் துன்பப்படுத்துகின்றன என்ற கருத்தும் கொண்டிருந்தார். பொருளாதார தேவைகளுக்காக அவர் மொழியாக்கம் செய்யத் தொடங்கினார். அவர் ஆங்கிலம், ஃப்ரெஞ்ச் , லத்தீன், கிரேக்கம், அரபி, சிரியன், ஹீப்ரூ போன்ற மொழிகளை அறிந்திருந்தார். அவற்றிலிருந்து மற்ற மொழிகளுக்கு மொழியாக்கங்களை மேற்கொண்டார்.
பதினெட்டாம் நூற்றாண்டின் மருத்துவம்
18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டு மருத்துவமுறையானது இன்று போல் முறைப்படுத்தப்பட்டதல்ல. ஒவ்வொருவரும் தங்கள் மருந்துகளை முன்வைத்து விளம்பரம் செய்து கொள்வதும், வெவ்வேறு ஊர்களுக்கு பயணம் செய்து குணப்படுத்துவதும் நடைமுறையில் இருந்தது.
மருத்துவக் கல்லூரிகளிலேயே, தங்களது மருத்துவமுறையை கற்பிக்க முன்வைப்பதும், அதை கல்லூரி ஏற்றுக்கொண்டால் அதை கற்பிக்கும் வாய்ப்பும் அமைந்தது. எந்த மருத்துவமுறை மிக அதிக ஈர்ப்பு பெறுகிறதோ, அதைக் கற்கவே மாணவர்கள் ஆர்வம் காட்டினர். அதன் மூலமே அதை கற்பிப்பவர்களின் செல்வம் நிர்ணயிக்கப்பட்டது.
பதினெட்டாம் நூற்றாண்டின் பொதுவான மருத்துவமுறை என்பது வயிற்றுப்போக்கு, காலரா போன்ற நோய்கள் மாசுபட்ட உணவு மற்றும் நீரால் ஏற்படுகின்றது என்றும், மலேரியா, மஞ்சள் காய்ச்சல், டைபஸ் போன்றவை காற்றில் உள்ள கண்ணுக்குத் தெரியாத கெட்ட நீராவிகளால் ஏற்படுகிறது என்றும் நம்பப்பட்டது. இக்காலத்தில் மருத்துவர்கள், அறுவைசிகிச்சை செய்பவர்கள் மற்றும் மருந்தாளாளுனர்கள் தனித்தனியாக இருந்தனர். மருத்துவர்கள் நீண்ட 40, 50 பொருட்களின் சேர்மானங்களை மருந்தாக எழுதினர். இவை முக்கியமாக ஆல்கஹால், ஓப்பியம், வெவ்வேறு மூலிகைகளின் சாறு என்ற கலவையாக இருந்தது. இந்தக் கலவையான ஒரே மருந்து அனைத்து நோய்களுக்குமான தீர்வாக இருக்கும் என நம்பப்பட்டது.
இன்னொரு முறையான ஹீயுமோரல் (Humoral theory) என்பது உடம்பில் உள்ள நான்கு ஹீயுமர் ஆன ரத்தம், மஞ்சள் பித்தம், கருப்பு பித்தம் மற்றும் சளி இவற்றின் சமநிலையில் ஏற்படும் குறைவே நோய் என்றும் நம்பப்பட்டது. இதற்குத் தீர்வாக ரத்தத்தை பல்வேறு கசாயங்கள் மூலம் சுத்தப்படுத்துவதும், அதிகப்படியான ரத்தத்தை வெளியேற்றுவதும் சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டது. அட்டைப் பூச்சிகள், ஊசிகள், ஒரே நேரத்தில் பல வெட்டுகளை ஏற்படுத்தக்கூடிய ஸ்காரிபிகேட்டர் (scarificator) போன்ற கருவிகள் இச்சமநிலை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டன. இது பெரும்பான்மையான சமயங்களில் அதிகப்படியான ரத்தப்போக்கை ஏற்படுத்தி நோயாளரை இறப்பை நோக்கி கொண்டு சென்றது.
அமெரிக்க முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் டிசம்பர் 12, 1799-ல் தொண்டை அழற்சியால் பாதிக்கப்பட்டார். சேஜ் (sage) கஷாயமும், ரத்தம் வெளியேற்றும் முறையும் கடைபிடிக்கப்பட்டது. இரண்டு நாட்களில் 2 லிட்டர்க்கும் மேலாக ரத்தம் வெளியேறி அவர் உடல்நிலை கவலைக்கிடமானது. டிசம்பர் 14 அன்று அவர் இறந்தும் போனார்
ஸ்காட்டிஷ் மறுமலர்ச்சியின் மைய ஆளுமையான வேதியியலாளரும், மருத்துவருமான வில்லியம் கலென் (William Cullen) எழுதிய Treatise of Materia Medica நூலை ஹானிமன் மொழிபெயர்க்கும்பொழுது “சின்கோனா மலேரியா நோயை குணமாக்கும்” என்ற வரியும், அதன் அடிக்குறிப்பாக ஆரோக்கியமான ஒருவன் அதே சின்கோனா மரபட்டையை உட்கொள்ளும்போது மலேரியா நோயின் அறிகுறிகள் தோன்றும் என்பதும் ஹானிமனின் கவனத்தை கவர்ந்தது.
ஹானிமன் அதை அவர் உடம்பிலே பரிசோதிக்க முடிவுசெய்தார். சின்கோனா மரப்பட்டையின் கஷாயத்தை உட்கொண்டார்.
அவருக்கு வீரியம்குறைந்த மலேரியா நோயின் அறிகுறிகள் தோன்றின. அதிலிருந்து, எந்த ஒன்று ஆரோக்ய மனிதரில் வீரியம் குறைந்த நோயின் அறிகுறிகளை உண்டாக்குமோ அதுவே நோயை குணப்படுத்தவும் செய்யும் என்ற “ஒத்தது ஒத்ததை குணமாக்கும்” (Similia Similibus Curentur) என்ற ஹோமியோபதியின் அடிப்படை தத்துவத்தை கண்டடைந்தார். தான் கண்டுபிடித்த முறைக்கு ஹோமியோபதி என்றும், அன்றிருந்த மரபான மருத்துவமுறைக்கு அலோபதி என்றும் பெயரிட்டார்.
ஆனால், அவ்வாறு ஒரு பொருளை அதன் அடிப்படைநிலையில் கொடுக்கும் போது அதன் அறிகுறிகள் தீவிரமாக இருப்பதை ஹானிமன் கண்டு கொண்டார். பின்னர் அவர் டைனமிசேஷன் என்ற முறையை அறிமுகப்படுத்துகிறார். அடிப்படையான அந்த பொருள் நீருடன் பலமுறை கலக்கப்பட்டு அதன் வீரியம் குறைக்கப்படுகிறது உதாரணமாக ஹோமியோபதி மருந்தில் 1C என்பது ஒருபாகம் மூலமருந்து 99 பாகம் நீர். 2C என்பது ஒருபாகம் 1C மற்றும் 99 பாகம் நீர். இவை ஒவ்வொரு முறையும் 10 முறை குலுக்கப்பட்டது. 30C என்பது 1060 விகிதம். இவ்வாறு அதிகபட்சமாக 1M, 50M வீரியங்கள் இருக்கின்றன. சுருக்கமாக சொல்வதென்றால் 12C என்பதே (மூலமருந்து) வட மற்றும் தென் அட்லாண்டிக் கடல்நீரில் கரைக்கப்பட்ட ஒரு சிட்டிகை உப்புக்கு ஈடானது. ஹானிமன் பொருட்களின் குணப்படுத்தும் திறன் ஒவ்வொரு முறையும் வீரியப்படுத்தப்பட்டு அடுத்த வீரியத்திற்கு கடத்தப்படுவதாக வாதிடுகிறார்.
பிறகு மூலிகைகள், கனிமங்கள் போன்றவை இம்முறையில் தயாரிக்கப்பட்டு பொதுவாக 6C வீரியத்தில் ஆரோக்கியமான மனிதருக்கு கொடுக்கப்பட்டு அவர்கள் உடலில் தோன்றும் அறிகுறிகள் விலாவாரியாக பதிவு செய்யப்பட்டன. இவை ஹோமியோபதி மெட்டீரியாமெடிக்கா என்று அழைக்கப்படுகிறது.
அதேசமயம் ஹானிமன் ஹோமியோபதி தத்துவத்தை நிறுவ ஆர்கனான் ஃஆப் மெடிசன் என்ற புத்தகத்தை எழுதுகிறார். இவற்றில் ஐந்து பதிப்புகள் அவரின் வாழ்காலத்திலும், ஆறாவது பதிப்பு அவர் இறப்புக்கு பின்னும் வெளியிடப்பட்டது. இவற்றில் ஹானிமன் நோய்களுக்கான காரணங்கள் மற்றும் அவற்றை குணப்படுத்தும் முறைகளுக்கான தத்துவங்களை விரிவாக்கிக்கொண்டே செல்கிறார். நீண்டகால நோய்களுக்கு காரணமாக மூன்று விதமான மயாசங்களை (Miasams) முன்வைக்கிறார். உயிராற்றல் (Vital Force) என்ற மையநிலை சக்தியை உடலுக்குள் உருவகிக்கிறார். மருந்துகள் செய்வதெல்லாம் இந்த சக்தியின் குணப்படுத்தம் திறனை வெளிக்கொணர்வதே என்கிறார்.
.
ஹோமியோபதி மருத்துவத்தின் தத்துவ பின்புலம்
ஹானிமன் ஹோமியோபதி மருத்துவத்தின் விதிகளை கண்டுபிடிப்பதற்கு விரிவான ஒரு தத்துவப் பின்புலம் இருக்கிறது. ஹானிமன் மீது ஆழமான செல்வாக்கை செலுத்திய இருவரை பற்றி பார்ப்போம்.
Paracelsus( 1493-1541), born as Philippus Aureolus Theophrastus Bombastus von Hohenheim
1. ஹானிமனுக்கு ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த சுவிஸ் மருத்துவரும், ரசவாதியும், தத்துவஞானியுமான பாராசெல்ஸஸ் (Paracelsus, 1493-1541). பாராசெல்ஸஸ் ஒரு கலகக்காரராக மார்ட்டின் லூதர் கிங் (1483-1546) அவர்களுடன் ஒப்பிடத்தக்கவர். நாவித அறுவை சிகிச்சையாளர்கள், மருந்தாளுனர்கள், ரசவாதிகள் போன்றவருக்கு கல்லூரியில் மருத்துவம் கற்றுக் கொடுக்க முனைந்தார். “அளவே விஷத்தன்மையை நிர்ணயிக்கிறது” (The dose makes poison) என்ற பிரபலமான கூற்றுக்கு சொந்தக்காரர். பாராசெல்ஸஸ் பின்வரும் ஹோமியோபதி தத்துவங்களின் முன்னோடியாக கருதப்படுகிறார். இவர் அன்றைய நவீன மருத்துவத்தின் பாடப்புத்தகங்களாக இருந்த கேலன் (Galen), அவிசென்னா (Avicenna / Ibn Sina) எழுதிய புத்தகங்களை பொது இடத்தில் எரித்தார். அவிசென்னா என்பது இபின் சினா என்ற அரபி வார்த்தையின் லத்தீன் திரிபு. இவர் இந்தியாவின் வடமேற்கில் ஹிந்துகுஷ் மலைகளில் பிறந்தவர். இஸ்லாமிய உலகின் தத்துவ ஞானி, மருத்துவர், வானியிலாளர், புவியியலாளர், கவிஞர் என புகழ் பெற்றவர். இவரின் The Book of Healing தத்துவ மற்றும் அறிவியல் கலைகளஞ்சியமாகவும் Canon of Medicine மருத்துவ கலைகளஞ்சியமாகவும் ஐரோப்பிய பல்கலைகழகங்களில் பயிலப்பட்டது. இவரே நவீன மருத்துவம் மற்றும் யுனானி மருத்துவத்தின் முன்னோடியாக கருதப்படுகிறார்.
ஹோமியோபதியின் பின்வரும் தத்துவ முன்ஊகங்கள் பாராசெல்ஸஸ் மற்றும் ரசவாதம் முன்வைத்தது, அவற்றுக்கு ஒரு தத்துவ கட்டுமானத்தை ஹானிமன் உருவாக்கி அளித்தார் என்றும் நம்ப இடமுள்ளது.
- ஒத்தது ஒத்ததை குணமாக்கும் (Law of similaris)
- மீச்சிறு அளவு மருந்து (The minute dose)
- மூலப்பொருளை கரைத்தும், சீரான முறையில் குலுக்குவதன் மூலம் ஒன்றன் பின் ஒன்றான மருந்தின் வீரியம் அடையப்படுகிறது (Succession).
- இயந்திர முறையில் மூலப்பொருளின் துகள் அளவை குறைத்தல் – இது சீரான முறையில் மெதுவாக அரைப்பதன் மூலம் மருந்தின் வீரியம் அடையப்படுகிறது (Trituration).
- தேவையான வீரியத்தை மருந்தில் உண்டாக்குதல் (Potentisation)
- மூன்று வித மயாசங்கள் (Tria prima)
2. பிரான்சிஸ் பேக்கன்
பிரான்சிஸ் பேக்கன் ( 1561-1626) நிரூபணவாதவியலின் (empiricism) தந்தை. தொகுத்தறியும் தர்க்கம் (Inductive Logic) என்ற முறையை கண்டறிந்தவர்.
தொகுத்தறியும் தர்க்கம் என்பது,
வெவ்வேறு தொடர்பற்ற காகங்கள் கருப்பு நிறத்தில் உள்ளன.
⬇️
மொத்த காகங்களும் கருப்பு நிறத்தில் உள்ளன.
⬇️
எனவே, தனிப்பட்ட ஒரு காகம் கருப்பு நிறத்தில் இருக்கும்.
இந்த தொகுத்தறியும் தர்க்கத்தின் அடிப்படையில்,
சின்கோனா மரப்பட்டை மலேரியாவை குணப்படுத்தும்.
⬇️
ஹனிமன் தினமும் சின்கோனா கசாயத்தை அருந்த அவரில் மலேரியாவைப் போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன.
⬇️
மருந்துகளின் குணப்படுத்தும் தன்மை அந்த நோயையும் உருவாக்கும் என்று அவர் அவதானிக்கிறார்.
இந்த ஆய்வை, அவர் மறுபடியும் நிகழ்த்தி அதை உறுதி செய்கிறார்.
⬇️
பின் அதை மற்றவர்களுக்கும் கொடுத்து உறுதிப்படுத்துகிறார்.
எதிர்பார்த்தபடி அனைவருக்கும் மலேரியா நோயின் அறிகுறிகள் தோன்றுகின்றன.
⬇️
அது, அவரை “ஒத்தது ஒத்தது குணமாக்கும்” என்ற முடிவுக்கு வர வைக்கிறது.
இது தனிப்பட்ட அனுபவத்தில் தொடங்கி அனைவருக்கும் உரித்தான பொதுஅனுபவமாக மாறுவதைக் குறிக்கிறது. ஹோமியோபதி இந்தத் தொகுத்து அறியும் தர்க்கத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஹோமியோபதி – அறிவியலா?
ஹோமியோபதி அதன் தொடக்க காலத்திலேயே மிகப் பரவலான மக்கள் ஏற்பு பெற்றுவிட்டது. அரச குடும்பங்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரையும் உள்ளிழுத்து கொண்டது. நாம் இன்று காணும் நவீன அறிவியல் முறைகள், மருத்துவக் கொள்கைகள், கிருமிக் கொள்கை போன்றவை எல்லாம் ஹானிமன் காலத்துக்கு பின்னரே கண்டுபிடிக்கப்பட்டன.
ஹானிமன் காலத்திலேயே, அவருக்கு எதிர்ப்புகளும் தோன்றிவிட்டன. ராணி விக்டோரியாவின் மருத்துவரான சர் ஜான் போர்ஸ் ஹோமியோபதி பயனற்றது, மனித காரண அறிவுக்கு எதிரானது என்கிறார்.
ஹோமியோபதி மருந்துகளில், ஆதாரமான பொருளின் மூலக்கூறுகள் இருப்பதில்லை என்பது கோட்பாட்டளவில் உண்மையாக இருக்கிறது.
ஆனால் சில அறிவியலாளர்கள் இந்த செறிவூட்டப்பட்ட கரைசல்களில் மூலக்கூறுகளின் நடத்தையானது வேறுவிதமாக இருக்கக்கூடும், பொதுவான விதிகளை அங்கு போட்டு பார்க்கமுடியாது என்கின்றனர்(1).
மற்றொரு கொள்கையாக நீரின் நினைவுத்திறன் (Water Memory Hypothesis ) ஊகிக்கப்படுகிறது. குலுக்குவதன் மூலம் மூலக்கூறுகள் தண்ணீரில் தங்களது குணப்படுத்தும் திறனை பதிவு செய்கின்றன என்று நம்பப்படுகிறது(2).
இந்தியாவில் ஐஐடி, மும்பையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று ஹோமியோபதி 200C கரைசல் அதன் முதல் மூலக்கூறின் ( Raw Form of the Material) தன்மையை கொண்டிருக்கிறது மீச்சிறு மூலக்கூறு (Nano-Particulate) வடிவில் என்றும் முன்மொழிகிறது(3).
19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மூன்று காலரா தொற்று பரவலின் போதும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சல் பரவலின் போதும், ஒப்புநோக்க நவீன மருத்துவமனைகளின் இறப்பு விகிதம் 40 – 60% ஆகவும், ஹோமியோபதி மருத்துவமனைகளில் இறப்பு விகிதம் 5 – 6% ஆகவும் இருந்தது ஆச்சர்யம் அளிக்கக்கூடியது(4).
ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் 1998 முதல் 2006 வரை சுமார் 8 ஆண்டுகள் 3900 நோயாளிகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்விலும், இங்கிலாந்தில் 6500 நோயாளிகளை கொண்டு 6 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்விலும் , ஹோமியோபதி 70% மேல் நோயாளிகளுக்கு பலனலித்துள்ளது ஒப்புநோக்க இது நவீன மருத்துவத்தை விட மிக அதிகம் ஆகும்(5).
இருப்பினும், பல்வேறு அறிவியலாளர்கள் ஹோமியோபதியை நிராகரிக்கின்றனர். இதுவரை செய்யப்பட்ட எந்தவொரு நவீன அறிவியல் ஆய்விலும் ஹோமியோபதி மருந்தின் குணப்படுத்தும் தன்மை எதுவென சரிவர நிரூபிக்கப்படவில்லை.
ஹோமியோபதி அறிவியல் என்று சொல்லத் துணிந்தால் நாம் இதுவரை பெற்ற அறிவியல், புள்ளியில், வேதியியல், இயற்பியல், பொருண்மை பற்றிய விதிகள் அனைத்தையும் கைவிடவேண்டி இருக்கும்.
ஹோமியோபதி – பயனுள்ளதா?
நவீன நோய்த் தடுப்பூசி முறை (Vaccination), ஹோமியோபதியின் சிந்தனையின் (ஒத்தது மற்றும் வீரியம் குறைக்கப்பட்ட) நீட்சியாக இருக்கலாம் என்று ஒரு கருதுகோள் உள்ளது.
இன்று உலக அளவில் நவீன மருத்துவத்திற்கு அடுத்த இடத்தில் ஹோமியோபதி பயன்படுத்தப்படுகிறது.
முதலில் ஹோமியோபதி மருந்து எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறது என்று பார்ப்போம்.
1. மருத்துவர் நோயாளிகளின் நோய்க்குறிகளை மிக நீண்ட அளவிலான விசாரணையின் (Long case taking) வழியே பதிவு செய்கிறார்.
2. நோயாளின் பசி, தூக்கம், கனவு, நோய் நிலையில் மாறுபாடுகள், நோய்க்கான காரணமாக நினைப்பவை, கால மாறுபாடுகள் போன்ற அனைத்தும் கேட்டு அறியப்படுகின்றன.
3. ஒவ்வொரு நோயாளியும் தனித்துவமானவர். அதனால் அவர்களுக்கான மருந்துகளும் தனித்துவமானவை. இங்கு நோயின் பெயர் முக்கியமல்ல நோயாளியே முதன்மையானவர். உதாரணமாக ஒரே விதமான தலைவலியுடைய இரு நபர்களுக்கு குளிர்நீரில் குளித்தால் தலைவலி குறையும் ஒருவருக்கு ஒரு மருந்தும், குளிர்நீரில் குளித்தால் தலைவலி அதிகரிக்கும் மற்றொரு நபருக்கு வேறொரு மருந்தும் பரிந்துரைக்கப்படுகிறது.
நோயின் நிலையில் முன்னேற்றம் பின்வருமாறு கண்காணிக்கப்படுகிறது. இது ஹெரிங் குணப்படுத்தும் விதி (Hering’s Law of cure) எனப்படுகிறது.
- தலையில் இருந்து உடலுக்கு: உதாரணமாக கழுத்தில் அரிப்பும், கால் முட்டியில் வலியும் உள்ள ஒருவருக்கு சரியான மருந்து கொடுக்கும் போது, முதலில் கழுத்திலுள்ள அரிப்புக்குப் பின்னரே, காலில் உள்ள வலி குணமாகும்.
- உள்ளிருந்து வெளியே: உள்ளுறுப்புகள் குணமடைய நோய்க்குறிகள் வெளி உறுப்புகளில் வியர்வை, காய்ச்சல் போன்று தென்பட ஆரம்பிக்கும் .
- மிக முக்கிய உறுப்பிலிருந்து சாதாரண உறுப்பிற்கு: உதாரணமாக நுரையீரலில் இருந்து தோல்பரப்பிற்கு.
- நோய்க்குறிகளின் தலைகீழ்நிலை: உதாரணமாக தோலில் தோன்றும் அரிப்பானது பின்பு ஆஸ்துமாவாக மாறிவிடும் போது, சரியான மருந்தானது முதலில் ஆஸ்துமாவை குணப்படுத்தி தோல் அரிப்பை உண்டாக்கும். பிறகு தோல் அரிப்பு குணமாகும்.
இந்த அத்தனை வழிமுறையும், ஹோமியோபதி மருத்துவர் மற்றும் நோயாளியை சார்ந்ததாகும். இவற்றை புறவயமாக அளவிட எந்த கருவியோ, முறைகளோ இல்லை.
இத்தனை குழப்பங்களுக்குப் பிறகும், ஹோமியோபதியை பயன்படுத்துவர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இவர்களில் பெரும்பான்மையினர், மற்ற மருத்துவ முறைகளின் மூலம் குணப்படுத்த முடியாத தங்களின் நோய்களுக்காக ஹோமியோபதியை நாடுகின்றனர். மற்றொரு சாரார் நவீனமருத்துவத்தின் வேதியியல் மருந்துகள் மீதான பயம், பக்கவிளைவுகளுக்கான பயம் முதலியவற்றால் ஹோமியோபதியை நாடுகின்றனர்.
ஹோமியோபதி காலகட்டத்தில் உருவான மற்ற மருத்துவ முறைகளான ஐசோபதி (Isopathy), ஆன்ட்டிபதி (Antipathy), அப்பி தெரபி (Apitherapy), காந்தவியல், மெஸ்மெரிசம், வைட்டலிசம் போன்றவை இன்று மொத்தமாக வழக்கொழிந்துவிட்டன.
ஹோமியோபதி தடை செய்யப்பட வேண்டியதா?
சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹோமியோபதியை தடைசெய்யவேண்டும், அது அறிவியல் ஆதாரமற்றது என்ற கூற்று பொது ஊடகவெளியில் பரபரப்பாகும். இதை முன்னிறுத்தும் முதல் சாரார், தூய நவீன அறிவியல்வாதிகள், இவர்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.
மற்றொரு சாரார், மருந்து கம்பெனிகள் – காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவர்களின் கூட்டு என நம்பப்படுகிறது.
ஹோமியோபதி மருத்துவ வணிகத்தின் முக்கிய பயனாளர்கள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகள். வட அமெரிக்கநாடுகளில் குறிப்பிடத்தகுந்த அளவில் ஹோமியோபதி மருந்துகளின் விற்பனையும் உள்ளது. ஐரோப்பிய பொது சுகாதாரத் திட்டத்தில் ஹோமியோபதிக்கு அளிக்கப்படும் நிதிகள் தற்சமயம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு வருகின்றன.
இன்றைய 21-ம் நூற்றாண்டில், உலகில் ஒவ்வொருவரும் தங்கள் உடலானது முற்றிலும் ஆரோக்கியமானது, நோயே வராதது என நம்ப விரும்புகின்றனர். சிறுசிறு உடல் மாறுபாடுகளுக்கும், மருத்துவரை அணுகும் போக்கு அதிகரித்துள்ளது. இவர்களை கையாள நவீனமருத்துவ கட்டுமானத்தில் தற்சமயம் இடமில்லை என்பதே உண்மை. ஹோமியோபதி ஒரு போலி அறிவியல் என்று தடைசெய்யும்போது இவர்கள் நவீன மருத்துவ கட்டுமானத்திற்கு மிகப்பெரும் சுமையாக ஆவார்கள்.
இரண்டாவது, பலர் பயனளிக்கக்கூடியது என்று கருதக்கூடிய ஒன்றை போலிஅறிவியல் என தடைசெய்வது எந்தவிதத்தில் சரியானது என்பது கேள்விக்குரியது. அறிவியலைப் பொறுத்தவரை நவீன மருத்துவம் தவிர்த்த உலகில் உள்ள அத்துனை மருத்துவமுறைகளும் ஆயுர்வேதம், யுனானி, சித்தா, அக்குபஞ்சர், சீன மருத்துவம், இயற்கை மருத்துவம் என அனைத்தும் போலி அறிவியலே. நவீன மருத்துவம் மானுடகுல சிந்தனையில் பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்திருக்கும் போதும், இந்த ஒற்றைப்படையான போக்கு அதன் முடிவுகளை சந்தேகத்துக்கு உரியதாக ஆக்குகிறது.
ஒவ்வொருவரும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் மருத்துவமுறைகளில் சற்றே பரிச்சயம் உள்ளவர்களாக இருப்பது அவர்கள் ஆரோக்கியத்தைப் பேணவும், பொருளாதாரநிலைக்கும் அவசியம் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
சான்றாதாரங்கள்:
- Metal nanoparticle induced hormetic activation: a novel mechanism of homeopathic medicines
https://pubmed.ncbi.nlm.nih.gov/28844286
