- அதிரியன் நினைவுகள்-1
- அதிரியன் நினைவுகள்-2
- அதிரியன் நினைவுகள் -3
- அதிரியன் நினைவுகள் – 4
- அதிரியன் நினைவுகள் – 5
- அதிரியன் நினைவுகள் – 6
- அதிரியன் நினைவுகள் – 7
- அதிரியன் நினைவுகள் – 8
- அதிரியன் நினைவுகள் – 9
- அதிரியன் நினைவுகள் – 10
- அதிரியன் நினைவுகள் – 11
- அதிரியன் நினைவுகள் – 12
- அதிரியன் நினைவுகள் – 13
- அதிரியன் நினைவுகள் -14
- அதிரியன் நினைவுகள் -15
- அதிரியன் நினைவுகள் – 16
- அதிரியன் நினைவுகள் -17
- அதிரியன் நினைவுகள் -18
- அதிரியன் நினைவுகள் -19
- அதிரியன் நினைவுகள் -20
- அதிரியன் நினைவுகள் -21
- அதிரியன் நினைவுகள் -22
- அதிரியன் நினைவுகள் – 24
- அதிரியன் நினைவுகள் -25
- அதிரியன் நினைவுகள் -26
- அதிரியன் நினைவுகள் – 27
- அதிரியன் நினைவுகள் -28
- அதிரியன் நினைவுகள் -29
- அதிரியன் நினைவுகள் -30
- அதிரியன் நினைவுகள் -31
- அதிரியன் நினைவுகள் – 32
- அதிரியன் நினைவுகள் – 33
- இரத்தம் வரும்வரைத் தனதுடலைச் சொறிந்துகொள்ளும்…
- காட்டுப்பன்றி இலச்சினையை நாட்டுப் பன்றியெனத் தவறாகப் புரிந்துகொண்டு…
- அதிரியன் நினைவுகள் – 36
- அதிரியன் நினைவுகள் – 37
- அதிரியன் நினைவுகள் – 38
- அதிரியன் நினைவுகள் – 39
- அதிரியன் நினைவுகள் – 40
- அதிரியன் நினைவுகள் -41
- அதிரியன் நினைவுகள் – 42
- அதிரியன் நினைவுகள் – 43
- அதிரியன் நினைவுகள் – 44
- அதிரியன் நினைவுகள் – 45
- “அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 1
- “அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 2
- “அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள்
- “அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 4
- மூலம் : மார்கெரித் யூர்செனார்
- தமிழாக்கம் : நா. கிருஷ்ணா
A Western Song, 2007
ஆம், ஏதென்ஸ் நகரம் எப்போதும்போல அழகாக இருந்தது, கிரேக்கத்தின் பிரத்தியேக நெறிமுறைகளை என்னுடைய சொந்தவாழ்க்கையில் ஏற்றுக்கொண்டேன் ; அதற்காக நான் வருந்தியதில்லை. நம்மில் உள்ள மனிதம், ஒழுங்குமுறை, தெளிவான சிந்தனை அனைத்துமே கிரேக்கம் அளித்தவை. இக்கிரேக்கத்தில் எஞ்சியுள்ளவற்றை, மனக்கண்ணின் வியத்தகு பார்வைக்கும், ஆத்மாவின் நேர்த்தியான பாய்ச்சலுக்கும் ஏற்றவகையில் மாற்றுவதற்கு உரோமாபுரியின் நிலைபேறுடமைப் பண்பும், பருப்பொருள் இரசனையும் அவசியமானவை என நான் நினைப்பதுண்டு; உரோம் நகரின் காத்திரத் தன்மை சற்றுக் கடினமானது என்றாலுங்கூட. பிளாட்டோ ‘குடியரசு’ பற்றி எழுதும்போது, ‘நீதி’ என்ற கருத்தை வியந்தோதினார், அதை நம்முடைய தவறுகளில் கற்ற பாடங்களைக்கொண்டு, கடுமையாக முயற்சித்து முடிந்தவரை மனிதரினத்திற்கு அதிகம் தீங்கிழைக்காத, அதேவேளை மனிதர் நலத்திற்குப் பாடுபடுகிற ‘அரசு’ என்கிற பொருத்தமான எந்திரத்தை உருவாக்கினோம். ‘Philanthropy’(பரோபகாரம்) என்ற சொல் கிரேக்கத்திற்குச் சொந்தமானது, என்கிறபோதும், சட்டவல்லுனர் சால்வியஸ் ஜூலியானஸும்(Salvius Julianus) நானுமாக அடிமை வாழ்க்கையின் அவலத்தை மாற்றியமைக்கப் பாடுபட்டோம். விடாமுயற்சி, தொலைநோக்கு, ஒட்டுமொத்த அவதானிப்பிலுள்ள ஆணவத்தைத் திருத்திக்கொண்ட விரிவான பார்வை ஆகியவை உரோமாபுரியில் நான் கற்ற நற்பண்புகள்.
கவிஞர் வேர்ஜிலின் சோகம் அணிந்த இயற்கைக் காட்சிகளையும், கண்ணீர்த் திரையிட்ட அவற்றின் அந்திப் பொழுதுகளையும் எனது ஆழ்மனதில் காண்பதுண்டு. சிற்சில வேளைகளில் அதே ஆழ்மனதில் வெகுதூரம் பயணித்துச் சோகத்தில் பற்றி எரியும் ஸ்பெய்ன் தேசத்தையும், அதன்மீது வறட்சி அரங்கேற்றிய வன்முறையையும் சந்தித்துள்ளேன். கெல்ட்டியர், ஐபீரியர், ஏன், பியூனிக் வம்சத்தவரின் இரத்தத்துளிகளைக்கூட என்னுள் கற்பிதம் செய்ததுண்டு ; ஸ்பெய்ன் தேசத்து இத்தாலிகா உரோமானியர் காலனியாக இருந்த நாட்களில், இப்பகுதிக் குடிமக்கள் நரம்புகளில் இந்த இரத்தம் ஊடுருவி இருக்க வேண்டும்; என் தந்தைக்கு ஆப்பிரிக்கர் என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது நினைவுக்கு வந்தது. கிரேக்கம் அல்லாத என்னுடைய இத்தகைய கூறுகளை மதிப்பீடு செய்ய ஏதன்ஸ் எனக்கு உதவியது. ஆண்ட்டினூஸ் விஷயத்திலும் இது பொருந்தும். அழகினால் ஈர்க்கபட்ட கிரேக்கத்தை, ஆண்ட்டினூஸின் மறு உருவமாக, குறியீடாகக் கண்டேன். கிரேக்கம் கற்பித்த கடவுள்கள் வரிசையில் ஒருவேளை இவன் கடைசியாக இருக்கக்கூடும். இருந்தும், இழிவான மனிதப் பண்புகளை விலக்கியிருந்த பாரசீகமும், விலங்காண்மை பண்புடனிருந்த திரேசும் (Thrace), பண்டைய ஆர்காடியாவின் மேய்ப்பர்களுடன் பித்தினியாவில் கைகோர்த்திருந்தனர். அதனுடைய அம்சம்தான் ஆஸ்ரோஸ் பணியாளர்களைப் போன்ற முகத்தோற்றத்தில் ஆண்ட்டினூஸிடம் காண்கிற சற்று வளைந்த மூக்கு ; அதுபோல தூக்கலான கன்னக் கதுப்பினையும் அகன்ற முகத்தையும், பொஸ்பொரஸ் நதிக்கரையோரம் குதிரைகளில் வேகமாகச் செல்கிற, இரவு நேரங்களில் சோகமானப் பாடல்களுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிற திரேசியன் குதிரைவீரர்களிடமும் காணவியலும் ; ஆயினும் இவை அனைத்தையும் உள்ளடக்கிக் கூற ஒரு சூத்திரம் உண்டா என்றால் இல்லை.
அந்த ஆண்டு நான் ஏதன்ஸ் அரசியல் சாசனத்தில் சில திருத்தத்தங்கள் மேற்கொண்டு அதை முடித்திருந்தேன். முடிந்தவரை ஏதென்ஸின் அரசியல் சாசன வித்தகரான கிளிஸ்தனீஸின்(Clisththenes) பழைய குடியரசு அரசியல் சட்டங்களைத் திரும்பக் கொண்டுவந்ததாக அதைக் கருதமுடியும். அரசு ஊழியர்களின் எண்ணிக்கைக் குறைப்பு, அரசாங்கத்தின் பொதுச் செலவு சுமைகளைக் குறைக்க உதவியது; நிலக்குத்தகை வரியைத் தடைசெய்தேன் ; பெரும் கேட்டினைத் தரக்கூடிய இவ்வரிமுறை துரதிஷ்ட வசமாக இன்னமும் ஒரு சில உள்ளாட்சி நிர்வாகங்களில் பயன்பாட்டில் இருந்தது. அக்காலக்கட்டத்திலேயே பல்கலைக் கழங்களுக்கு அடிக்கல் நாட்டியதும், நிறுவியதும் ஏதென்ஸ் நகரை ஒரு முக்கியக் கல்வி மையமாக மாற்ற உதவியது. எனக்கு முன்பாகவும் அழகு உபாசகர்கள் பலர் இந்நகரில் திரண்டதுண்டு ; அவர்கள் எதற்காக வந்தார்களோ அதை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் நகரின் நினைவுச் சின்னங்களைப் பாராட்டி மகிழ்ந்தார்களே அன்றி நகரவாசிகளின் வளர்ந்துவரும் ஏழ்மை குறித்து கவலைப்பட்டவர்கள் அல்லர். மாறாக, இந்த வறிய பூமியின் வளத்தைப் பெருக்க நான் அனைத்தையும் செய்தேன். உலகெங்கிலுமுள்ள கிரேக்க பிரதிநிதிகள் தங்கள் அனைத்துப் பிரச்சினைகளையும் விவாதிக்கவும் பரிவர்த்தனை செய்துகொள்ளவும் ஒரு வருடாந்திர சந்திப்பை ஏதென்ஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ; விளைவாக, எளிய இந்த ஏதென்ஸ் நகரம் தமது பெருநகரத் தகுதியை மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனது ஆட்சியின் முக்கிய திட்டங்களில் ஒன்றான இத்திட்டம் நான் புறப்படுவதற்கு சற்று முன்னதாக நிறைவேறி இருந்தது. ஏதென்ஸின் மேலாதிக்கத்தைப் பார்த்துப் பொறாமை கொண்ட நகரங்கள் பல இருந்தன; ஏதன்ஸ் நகரத்துடன் காலத்திற்கு ஒவ்வாத, உலகாயத விஷயங்கள் குறித்து கோபமுற்றிருந்த இவற்றுடன் கடுமையாகப் பேச்சுவார்த்தை நடத்தவேண்டியிருந்தது, சிறிது சிறிதாக, முன்வைத்த காரணமும், இப்பிரச்சினையில் காட்டிய உற்சாகமும் வென்றன ; அதன் பிறகே இத்திட்டமும் வடிவம் பெற்றது;. உலகெங்கிலுமுள்ள கிரேக்க பிரதிநிதிகளின் முதலாவது கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாளில் பொதுவழிபாட்டிற்கெனத் திறக்கப்பட்ட ஒலிம்பியன் ஆலயம், முன்னெப்போதையும்விடப் புதுப்பிக்கப்பட்ட கிரேக்கத்தின் அடையாளமாக மாறியது.
இச்சந்தர்ப்பத்தில், டயோனிசஸ் நாடக அரங்கில் தொடர்ச்சியாக நடைபெற்ற கொண்டாட்டங்கள் அனைத்தும் குறிப்பிட்டுச் சொல்லும்வகையில் வெற்றிகரமாக நடந்தேறின. சமயப் புதிர்களை விளக்கிச் சொல்லும் ஒரு ஹைரோபான்ட் (Hierophant) இருக்கைக்கு அடுத்ததாகச் சற்று உயர்த்தப்பட்ட இருக்கையொன்றில் நான் அமர்ந்திருந்தேன். நாட்டில் குறிப்பிடத்தக்க மனிதர்கள், ஆலயக் குருமார்கள் வரிசையில் இனி ஆண்ட்டினூஸ் ஆலயப் பூசாரிக்கும் ஓர் இடமுண்டு. புதிதாகப் புடைப்புச் சிற்பங்களைச் சேர்த்த்து நாடக மேடையை அலங்கரித்ததோடு, பெரிதாகவும் மாற்றியிருந்தேன். அச்சிற்பங்களிலொன்றில் பித்தினிய இளைஞன் எலூசினியன் தேவதைகளிடமிருந்து நித்ய உலகில் இடம்பெறும் உரிமையைப் பெறுவதுபோல காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. அவ்வாறே, கொண்டாட்டங்களுக்கிடையில் வாய்த்த குறுகிய நேரத்தில், டயானா தேவதை மற்றும் தீசஸ் கடவுளின் ஊழியரும் ஹெராக்கிள்ஸ் தோழருமான ஹிப்போலிட்டஸின்(Hippolytus) காடும்கரம்புமான புராதன நகரின் விழாவை நினைவூட்டும் வகையில், பானாதெனாய்க் விளையாட்டரங்கை (le stade panathénaïque) சில மணிநேரங்களுக்கு கானகமாக மாற்றி ஆயிரம் காட்டு மிருகங்களை உள்ளடக்கியதொரு வேட்டையை அங்கு ஏற்பாடு செய்தேன். விழாமுடிந்த ஒருசில நாட்களுக்குப் பிறகு ஏதென்ஸ் நகரைவிட்டு வெளியேறினேன், அன்றிலிருந்து இன்றுவரை திரும்ப அங்கு கால் வைக்கவில்லை.
/ / / /
இத்தாலியின் நிர்வாகம், பல நூற்றாண்டுகளாக அரசு அதிகாரிகளின் (praetors) கைகளில் இருந்தது ; ஆயினும் திட்டவட்டமான நெறிமுறைக்குள் கொண்டுவரும் முயற்சி ஒருபோதும் எடுக்கப்பட்டதில்லை.. எனது காலத்தில், ஒரு நிரந்தர ஆணை மூலம், இப்பிரச்சினையை ஒருவழியாக முடிவுக்குக் கொண்டுவர நினைத்தேன். இந்தச் சீர்திருத்தங்கள் விஷயமாகப் பல வருடங்கள் சால்வியஸ் ஜூலியனஸுடன் தொடர்ந்து பேசிவந்தேன். நான் உரோம் நகர் திரும்பியது ஆணையைச் செப்பனிட்டுத் துரிதமாக முடிவுகாண உதவியது. இது, இத்தாலி நகரங்களிடமிருந்து குடிமக்கள் சுதந்திரங்களை அபகரிக்கும் முயற்சியே அல்ல; மாறாக, வலுக்கட்டாயமாக ஒரு செயற்கையான ஒற்றுமையைத் திணிக்காமல், ‘அரசு, மக்கள்’ – இருதரப்பும் பலன்பெறும் வகையில் நடவடிக்கை எடுத்தல் ஆகும். உரோம் நகரைவிடப் பழமையான இச்சிறு நகரங்கள் தங்கள் விவேகமான மரபுகள் உட்பட அனைத்துப் பழக்கவழக்கங்களையும் உண்மையில் துறக்கவும், உரோம் நகருடன் அனைத்திலும் ஒருங்கிணைந்து வாழவும் தயாராக இருந்தனவென்பது எனக்கு வியப்பிற்குரிய தகவல். குடியுரிமைச் சட்டங்களிலிருந்த ஒட்டுமொத்த முரண்பாடுகளும், தவறானப் பயன்பாடுகளும், நடைமுறை படுத்தியபோது குழப்பத்தில் முடிந்தன; இப்பிரச்சினையில் நேர்மையான மனிதர்கள் துணிந்து செயல்பட அஞ்சினர் ; கொள்ளையர்கள் சுபிட்சமாக வாழ்ந்தனர் ; எனவே இச்சட்டங்களிலிருந்த முரண்பாடுகளையும், அவற்றை துஷ்பிரயோகம் செய்வதையும் குறைப்பது எனது குறிக்கோளாக இருந்தது. இப்ப்ணி நிமித்தமாகத் தீபகற்ப இத்தாலியில் அடிக்கடிப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. பையெ(Baiae) நகரில் எனது ஆட்சிக்காலத்தின் தொடக்கத்தில் வாங்கியிருந்த சிசரோ(Cicero) என்கிற பழைய வில்லாவில் பலமுறை வாசம் செய்தேன். இத்தாலியியிலுள்ள காம்பானியா மாகாணம் கிரேக்கத்தை நினைவூட்டுவதால் இங்குத் தங்குவதற்கு எனக்கு ஆர்வம். ஏட்ரிட்டியாட்டிக்(Adriatique) கடலோரமிருக்கிற அத்ரியா எனும் சிறுநகரத்திலேதான் ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு எனது மூதாதையர்கள் ஸ்பெய்ன் தேசத்திலிருந்து குடியேறினார்கள் ; இங்கு நகராட்சியில் உயர்ந்த பதவியிலமர்த்தப்பட்டு நான் கௌரவிக்கப்பட்டேன். எனது பெயர் கொண்ட கொந்தளிக்கும் இக்கடலருகே சிதிலமடைந்த கொலம்பேரியம்(columbarium) ஒன்றில் இறந்த எனது குடும்பத்தினரின் சாம்பற் கலசங்கள் இருக்கின்றன. இவர்களைக் குறித்துப் ஏறக்குறைய எவ்விதத் தகவல்களும் என்னிடமில்லை; இருந்தும், இம்மனிதர்களுக்காக பிரார்த்திப்பதுண்டு ; இவர்களிடமிருந்தே நான் வந்தவன், ஆனால் என்னோடு எனது வம்சம் முடிந்தது.
உரோமில், எனது பிரமாண்டமான கல்லறையை விரிவுபடுத்துவதில் மும்முரமாக இருந்தனர் ; அதன் வரைபடத்தை கட்டடக் கலைஞரான டெக்ரியானஸ்(Decrianus) நுட்பத்துடன் மாற்றியமைத்தார்; இன்றைக்குங்கூட வேலைகள் அங்கு நடக்கின்றன. வட்டவடிவக் காட்சிக்கூடங்களும், நிலவறைக் கூடங்களுக்குச் செல்லும் படிகளுக்குத் துணையாக வழவழப்பான கைப்பிடிகளும், எகிப்து தேசமளித்த யோசனை. எனக்குமட்டுமின்றி, எனக்குப் பிறகு அரியாசனத்தில் உடனடியாக அமரவிருக்கிற ஆட்சியாளர்களுக்கும், பல நூற்றாண்டு காலத்திற்குப் பிறகு ஆட்சியிலமரவிருக்கும் எதிர்காலச் சக்கரவர்த்திகளுக்கும், இனிப் பிறக்கவிருக்கும் பட்டத்து இளவரசர்களுக்கும் மரணித்ததும் ஓய்வெடுக்க, பிரமாண்டமான அரண்மனை போன்றதொரு கல்லறையை உருவாக்குவது எனது யோசனை; அக்கல்லறையில் அவர்களுக்கான இடம் முன்னமேயே குறிக்கப்படும். ஆண்ட்டினூஸ் நினைவாகச் செவ்வாய் களத்தில் (Campus-Martius) நிர்மாணித்திருந்த நினைவுச் சின்னத்தை அலங்கரிக்கவும் முயற்சித்தேன்; அதன்பொருட்டு அலெக்ஸாண்டிரியாவிலிருந்து சுமையேற்றும் படகொன்றில் தூபிகள் மற்றும் ஸ்பிங்க்ஸ்கள் கொண்டுவரப்பட்டன. ஓடியன் என்கிற ஒரு முன் மாதிரி நூலகத்தை வகுப்பறைகள், மாநாடு மண்டபங்கள் ஆகியவற்றுடன் கட்டவேண்டும்; நூலகம் உரோம் நகரின் கிரேக்கக் கலாச்சார மையமாகவும் இருக்கவேண்டுமென புதியதொரு திட்டம் எனது கவனத்தை முழுமையாக ஆக்ரமித்து, விடாமல் என்னைத் துரத்தியது. எனினும் பெருமையில் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட எபேசஸின்(Ephèse) புதிய நூலகத்தைக்காட்டிலும் மேலானதாகவோ, வனப்பிலும், நேர்த்தியிலும் ஏதென்ஸ் நகர நூலகத்தைக் காட்டிலும் கூடியதாகவோ நான் கட்டப்போவதில்லை; ஆனாலும் அலெக்ஸாந்திரியா அருங்காட்சியகத்திற்கு நிகராக அல்லது கிட்டத்தட்ட அதைப்போல இந்நூலகம் எழுப்பப்படவேண்டும் என்பதென் திட்டம்; ஆனால் அதனுடைய எதிர்காலம் உன் கையில் இருக்கிறது. அதற்கான வேலைகள் நடைபெறும்போது, திராயான் பொதுமன்றத்தில்(Forum de Trajan) புளோட்டினா பிரத்தியேகக் கவனமெடுத்து உருவாக்கிய நூலக வாயிலில் “ஆத்மாவின் மருத்துவமனை”(Hôpital de l’Ame) என்ற வாசகத்தைப் பொறித்திருந்தார், அதனை அடிக்கடி நான் எண்ணிப்பார்ப்பதுண்டு.
எனது பிரத்தியேக மாளிகையான “வில்லா“வில் ஏறக்குறைய பெரும்பாலான வேலைகள் நிறைவுற்றிருந்த நிலையில் விரும்பிச் சேகரித்தவற்றையும், எனது இசைக்கருவிகளையும், பயணங்கள் தோறும், கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் வாங்கிய சில ஆயிரம் புத்தகங்களையும் அங்குக் கொண்டுபோக முடிந்தது. அங்கு வரிசையாக அளித்த விருந்துகள் அனைத்திலும், வழங்கிய உணவுகள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர் பட்டியலைக் கவனத்துடன் தயாரிப்பது வழக்கம். அமைதியான அழகோடு திகழ்ந்த பூந்தோட்டங்கள், மண்டபங்கள் ஆகியவற்றிற்கு இசைவாக விருந்து ஏற்பாடுகளும்; இசை நிகழ்ச்ச்சிகளைப் போன்றே இனிமையுடன் விருந்தில் வழங்கும் பழங்களும் ; அவ்வாறே வெள்ளி பாத்திரtத்தில் செதுக்கப்பட்ட உருவப்பொம்மைகளையொத்த தெளிவுடன் பரிசாரகர்களின் சேவையும் அமைய வேண்டுமென்பது எனது நோக்கம். பரிமாறப்பட்ட உணவுகளின் தேர்வுகளில் முதன்முதலாகக் கவனம் செலுத்த ஆரம்பித்தது இங்குதான்; சிப்பிகள் லுக்ரினஸ்(Lucrinus) தீவிலிருந்தும், கல் இறால்கள் கொலுவா நதிகளிலிருந்தும் தருவிக்கப்பட்டன என்பதையும் உறுதிப்படுத்த உத்தரவிட்டேன். அரண்மனை உணவு மேசைகளில் பெரும்பாலும் காணக்கூடியதொரு பண்பு ஒருவிதப் பகட்டான அக்கறையின்மை; அதற்கு மாறாக, முக்கியத்துவமற்ற விருந்தினர் என்றாலுங்கூட என்னிடம் காட்டியபிறகே ஒவ்வொரு உணவையும் பரிமாறவேண்டும் என்றொரு விதியை ஏற்படுத்தினேன். சமையற்காரர்கள் மற்றும் உண்டிச்சாலை பொறுப்பாளர்ககளின் கணக்குகள் எனது பார்வையில் இருக்கவேண்டுமென வலியுறுத்தினேன்; இவ்விடயத்தில் பாட்டனார் ஒரு சில சமயங்களில் உலோபியாக நடந்துகொண்டது நினைவில் இருக்கிறது.
என்னுடைய வில்லாவிலிருந்த சிறிய கிரேக்க நாடக அரங்கிலும் சரி, அதைவிடச் சற்றுப் பெரியதான இலத்தீன் நாடக அரங்கிலும் சில்லறை வேலைகள் இன்னமும் முடிக்கப்படாமல் இருந்தன. எனினும், அதற்காகக் காத்திராமல் துன்ப மற்றும் இன்பவியல் நாடகங்கள், நகைச்சுவை மற்றும் இசைநாடகங்கள், அவிநயக்கூத்துகள் என ஒருசிலவற்றை இங்கு தயாரித்து அரங்கேற்றியுள்ளேன். குறிப்பாக நடனங்களில் வெளிப்படும் நுட்பமான சீருடல் பயிற்சி கண்டு மகிழ்ந்திருகிறேன்; அவ்வாறே கேட்ஸ்(Gades) வட்டாரத்தில், சிறுவயதில் கண்ட நடனங்களை நினவூட்டும் கட்டுவிரியன் பாம்புடன் ஆடும் பெண்களின் நடனங்களில் என்னை நான் மறப்பதுண்டு. நாடக அரங்கின் அதிர்வைத் தரும் ஒலி ; உயர்த்த்தப்பட்ட கைகள்; திரையைச் சுருட்டுவது, அவிழ்பது; ஒரு பெண்ணாக இன்றி மேகம், பறவை, அலை, படகு என தொடர்ந்து மேடையில் நாட்டியக்காரி ஒருத்தி உருமாறுவது ; அனைத்தையும் விரும்பியிருக்கிறேன். சிலகணமே என்கிறபோதும், இவற்றில் ஒன்றி, மனதைப் பறிகொடுத்ததும் நிஜம். எனது மாளிகையான வில்லாவில் நான் தங்காத நேரத்திலும் நாய்கள் பட்டியும், குதிரைகளின் கொட்டிலும் கவனத்துடன் பராமரிக்கப்பட்டன. வேட்டைநாய்களின் தடித்த குறுமுடியுடல், குதிரைகளின் பட்டுபோன்ற மேனி, காட்டுப்பன்றிகளின் மந்தை எனும் உலகிற்குத் திரும்பவந்தேன். அம்ப்ரியா பிரதேச ட்ராசிமெனோ ஏரிக்கரையிலும், உரோம் அருகே அல்பன் காட்டிலும் வேட்டைகளுக்கு ஏற்பாடு செய்தேன்.
மகிழ்ச்சியைத் திரும்பவும் என் வாழ்க்கையிற் கண்டேன்; எனது செயலர் ஒனேசிமஸ் என்னைப் பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தார். ஒரு சில சாயல்களை அல்லது போலச் செய்தல்களை எப்போது தவிர்க்கவேண்டும் அல்லது கையாளவேண்டும் என்பதை அவர் அறிந்தவர். ஆனால் ஓர் அவசரத்துடனும், திசைதிருப்பப்பட்ட கவனத்துடனும் அவர் செலுத்திய அன்புக்குப் பதிலன்பு அரிதாகவே திருப்பித் தரப்பட்டது. எங்கேனும், எப்போதாயினும் பிறரினும் பார்க்க மிகவும் நேர்த்தியான அல்லது மென்மையான மனித உயிர்களைச் சந்திப்பதுண்டு, அவர்கள் பேசக் கேட்பதும், அவர்களைத் திரும்பக் காண்பதும் பொருள்நிறைந்ததாகவும் இருந்துள்ளது. ஆனால் அப்படியான வாய்ப்புகள் கிடைப்பது மிகவும் அரிது; ஐயத்திற்கிடமின்றி, ஒருவேளை அதற்கு நானே காரணமாக இருந்திருக்கக் கூடும். பொதுவாகவே பசியைத் தணித்தல் அல்லது ஏமாற்றுதல் இரண்டிலொன்றில் திருப்தியடையும் வழக்கம் என்னிடம் இருந்தது. எப்போதாவது இவ்விளையாட்டை முதியவர் ஒருவர் அனுபவமாகவும் உணர நேர்ந்திருக்கிறது. உறக்கமின்றி அவதியுறும் நேரங்களில் எனது வில்லாவின் நடைக் கூடங்களில் ஓயாமல் நடப்பேன் ; ஒவ்வொரு அறையாக அலைந்து திரிகிறபோது சிலசமயம் மொசைக் இடும் கைவினைஞருக்கு, இடையூறும் தருவதுண்டு; சிற்பக் கலைஞர் ப்ராக்சிட்டெலஸ்(Prextèle) வடித்திருந்த ஒரு சட்டயர்(Satyre) சிலையில் சில நொடிகள் கவனம் செலுத்துவேன்; பின்னர் இறந்தவர்கள் ஞாபகார்த்தமாகச் செய்திருந்த உருவ பொம்மைகள் முன்பாகச் சிறிது நிற்பேன். மூடுவாயிலுடன் உள்ள ஒவ்வொரு அறையிலும் அததற்கெனச் சில விசேடங்களுண்டு. விளக்கின் சுடருக்கு, கை அடைக்கலம்கொடுத்திருக்க, கற்சிலையின் மார்பை விரல்களால் வருடுவேன். இதுபோன்ற எதிர்கொள்ளல்கள் நினைவின் பணியில் சிக்கலைத் தரும்; உயிர்ப்பற்ற பாரோஸ் தீவு(Paros), பெண்டெலிகஸ்(Pentelikon) மலை, தூய வெண் பளிங்கு உருவரைகளை திரைச்சீலையாகக் கருதி ஒதுக்கிவிட்டு, ஜீவனுள்ள உடல்களைத்தேடி நடப்பேன் ; உறக்கமின்றி அலைவது தொடரும்; சற்றுமுன்புவரை எனது தேடலுக்குட்பட்டிருந்த கற்சிலை தற்போது இருட்டில் புதையும்; கையிலிருக்கும் விளக்கு எனக்கு சில அடிகள் தூரத்திலுள்ள வேறொரு உருவத்தை வெளிக்கொணரும்; இவ்வெண்ணிற பிரதிமைகளுக்கும் பூதகணங்களுக்கும் பேதங்கள் இருப்பதில்லை. எகிப்தியப் பூசாரிகள் இறந்த வாலிபனின் ஆத்மாவைத் தங்கள் சமயச் சடங்கின்போது மர உருவங்களில் செலுத்தவேண்டி, சில கண்கட்டுமாயங்களைச் செய்ததை நினைத்துப் பார்த்தபோது கசப்பாக இருந்தது. ஆனாலும், நான் அவர்களைப் போலவே செய்தேன்; அக்கற்களின் மீது அவர்கள் கூறியதை உச்சாடனம் செய்யப்போக, திரும்ப அவை என்னிடமே வந்தன; வெப்பமும், உயிர்ப்புடனுமிருந்த குரல்களும் இனியில்லை, என்னைச் சிறைபிடித்திருப்பவை நிசப்தமும், குளிரும்; எனக்கினி விடுதலையில்லை. அச்சுறுத்தும் அம்முகத்தையும், மழுப்பலான அதன் சிரிப்பையும் எரிச்சலுடன் பார்த்தேன். ஆனால், சில மணிநேரங்களுக்குப் பிறகு, என் படுக்கைக்குத் திரும்பியபோது, அப்ரோடிசியாஸ் நகர் பாபியாஸிடம், ஒரு புதிய சிலையைச் செய்து தரச்சொல்வதென முடிவெடுத்தேன்; கன்னங்கள் அச்சுஅசலாக அதிலும் குறிப்பாக கன்னப்பொட்டின் கீழ் எந்த இடத்தில் அதிகம் பிறர் உணரமுடியாதவகையில் அகன்று இருக்கிற பகுதியும், தோளையொட்டிக் கழுத்தில் மென்மையானதொரு வளைவும் அப்படியே இருக்கவேண்டுமென்பது எனது எதிர்பார்ப்பு. திராட்சைகொடிஇலைகள் அல்லது விலையுயரந்த கற்களில் மலர்வளையங்களைப்போல கிரீடங்களைச்செய்து அலங்காரமற்ற தலைக்குப் பெருமை சேர்க்கவேண்டும். இச்சிற்பங்களையும், மார்பளவு சிலைகளையும் எளிதாக பிற இடங்களுக்குக் கொண்டு செல்ல எடையைக் குறைக்கின்ற வகையில் சிலையின் உட்பகுதியை மறக்காமல் சுரண்டவும் ஏற்பாடு செய்யவேண்டும். இச்சிலைகளில் தத்ரூபமாக இருப்பவை அனைத்தும் என்னுடன் பயணித்துள்ளன; அவை அழகாக இருக்கின்றனவா இல்லையா என்பது அத்துணை முக்கியமல்ல..
தொடரும்…
