Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

மறம் பாடுதல்

This entry is part 10 of 19 in the series கவிதாயினி

பொன்முடியார் சேரநாட்டைச் சேர்ந்த சங்கப்பெண்கவிஞர். இவர் மறவர் குலத்தவர். மூன்று புறநானூற்றுப் பாடல்களை எழுதியுள்ளார்.

நொச்சித்திணையில் குதிரைமறம் என்ற துறையில் ஒரு பாடல் பாடியுள்ளார். குதிரையின் வீரத்தைப் பாடுதல் அல்லது குதிரை மேல் அமர்ந்த வீரனைப் பாடுதல் குதிரை மறம் எனப்படுகிறது.

சீறூர் என்ற ஊரின் அரசன் படையெடுத்து வரும்  பகை மன்னனிடம் இருந்து தன் நாட்டின் அரணாக இருக்கும்  பருத்திவேலியை காப்பதற்காக  போரிடுகிறான். சீறூர் மன்னனின் குதிரை உழுந்தின் சக்கையை உண்டு வளர்ந்தது. அந்தக் குதிரை கடலை கிழித்து முன்செல்லும் தோணியின் முகப்பு போன்று விசையுடன் பாய்கிறது.

 நெய்சோறு உண்டு வளர்ந்த பகை மன்னனின் குதிரை இந்தக்குதிரையின் பாய்ச்சலைக் கண்டு மாதவிடாய் காலத்தில் பாத்திரங்களை தொடாது முருகன் கோயிலுக்கு வெளியே நின்று வழிபடும் பெண்களைப்போல ஒதுங்கி நிற்கிறது.

பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்ததர் உண்ட ஒய் நடைப் புரவி
கடல் மண்டு தோணியின் படைமுகம் போழ
நெய்ம்மிதி அருந்திய கொய் சுவல் எருத்தின்
தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலம் தொடா மகளிரின் இகழ்ந்து நின்றவ்வே [புறநானூறு 299]

இந்தப்பாடல் சீறூர் மன்னனின் வீரத்தைப்பாடுகிற பாடல். சீறிப்பாயும் குதிரையும் தயங்கி நிற்கும் குதிரையும் மறைமுகமாக மன்னர்களையும் குறிக்கிறது. படையெடுத்து வந்த மன்னன் தயங்கி நிற்க காரணம் இல்லை. விசைக்கொண்ட ஆயுதங்களில் இருந்து சரியாக விலகிக் கொள்வதும் போர்முறைகளில் ஒன்று.  ஏனெனில் இந்தப்பாடலின் உவமையில் உள்ள எள்ளல் அழகியலுடன் இல்லை. [ அல்லது இன்று அதன் அழகியல் போற்றத்தக்கதாக இல்லை] புறநானூற்றின் போர்ப்பாடலில் மாதவிடாய் பெண்களை உவமையாகக் கூறுமளவிற்கு உவமை அற்றுபோனதோ என்று வாசிக்கும் போது தோன்றியது. செய்யுள் அழகியலில் உவமைச்சிறப்பிற்கு முக்கியமான இடம் உண்டு. எந்த உவமையும் அழகற்றது இல்லை. ஒரு உவமை எந்தப்பாடலில் எந்தப்பொருளில் எங்கு வைக்கப்படுகிறது என்பதே அதன் அழகை தீர்மானிக்கிறது. முதன்முதலாக சங்கப்பாடல்களில் இந்தப்பாடலில் பொருத்தமற்ற உவமையை பார்க்கிறேன்.

போர்க்களத்தில் ஒரு வீரன் புண்பட்டு இறந்து கிடப்பதை அவனுடைய அன்னை பார்க்கிறாள். சிறுவயதில் அவனைப் பால் குடிக்க வைப்பதற்காக அவள் கையில் கோலுடன் மிரட்டுவாள். அந்தக்கோலிற்கு பயந்து ஓடி ஔிபவன் இன்று இத்தனை பெரிய விழுப்புண்ணுடன் இறந்திருக்கிறான் என்று அவள் மனம் வருந்துகிறது. இவன் முதல் நாள் போரில் வீழ்ந்த உரம் மிக்க தந்தையின் மகனல்லவா… அப்படிதான் இருப்பான் என்று சிறிய பரவசமும் அவளுக்கு இருக்கிறது.

முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே
உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு
மான்உளை அன்ன குடுமித்
தோல்மிசைச் கிடந்த புல் அண லோனே [ புறநானூறு 310]

புறநானூற்றுப் பாடல்கள் போர்கள், சங்ககாலமன்னர்களின் வீரம், அரண் வலிமை, போர்வீரர்களின் உரம், வெற்றிச்சிறப்பு என்று பல்வேறு பாடுபொருட்களை உடையவை. பரவலாக சிற்றரசர்களும், சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கும் போர்கள் நடந்து கொண்டே இருந்திருக்கின்றன. ஒரே ஒரு ஊர் கூட சிற்றரசாக இருக்கும்.  இந்தப்பாடல்களிலேயே ‘சீறூர்மன்னன்’ என்று ஒரு மன்னர் குறிப்பிடப்படுகிறார். எனவே ஒவ்வொரு குடிமகனும் போர்ப்புரிதல் அவசியம். ‘ஈன்று புறந்தருதல்’ என்று தொடங்கும் இந்தப்பாடலை ஒரு தலைவிப் பாடுகிறாள்.  என்னுடைய முதல் கடமை ஒரு மகனை பெற்று தருதல் என்று தொடங்கி அந்த மகனிற்கு குடும்பமும் ,சமூகமும், நாடும்,வேந்தரும் செய்ய வேண்டிய கடமைகளையும், அவன் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமையையும்  கூறுகிறாள். இந்தப்பாடலை வீரயுக  தாலாட்டாகவும் பார்க்கலாம்.

புறநானூறு 312 ஆம் பாடலில் ஐவகை கடமைகள் சொல்லப்பட்டுள்ளன. ஒரு பிள்ளையை சான்றோனாக்குதல் தந்தைக்கு கடமை. அவனுக்கு நன்நடத்தையை அருள்தல் வேந்தனுக்கு கடமை என்று பொன்முடியார் சொல்கிறார். நல்கல் என்ற சொல்லிற்கு கொடுத்தல், அளித்தல், அருளுதல் என்ற பல இணையான சொற்கள் உள்ளன.  இந்த இடத்தில் அருளுதல் என்று வைக்கலாம். ஆக்குதல் தந்தையின் கடமை. குழந்தையின் இயல்பை அறிந்து அவர் அவனை அவ்வாறு ஆக்க வேண்டும். அதற்கு இன்னொரு முனையாக ‘அருளுதல்’ என்பது தலைவனில் இயல்பாகத் திகழ்வது. நன்னடத்தையை மன்னன் ஒவ்வொரு குடிமகனிற்கும் தலைவன் அளிக்க வேண்டும் என்றில்லை. அவனிலிருந்துஅது மக்களை தானே சென்றடைகிறது. புறநானூற்றுப் பாடல் என்பதால் நன்னடை என்பதை வீரம் என்றும் பொருள் கொள்ளலாம்.

ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே
ஔிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே [புறநானூறு 312]

கவிதாயினி

சந்தனம் வாடும் பெருங்காடு  சிறுகோட்டுப் பெருங்குளம்
Exit mobile version