Site icon சொல்வனம் | இதழ் 378 | 08 நவ 2026

இலக்கியம் என்னும் காலக்கண்ணாடி

This entry is part 4 of 4 in the series கற்று கேட்டு ஆய்ந்தவை

உலகத்தின் திருவிழாக் கொண்டாட்டத்தில் பெரியதொரு பங்கு இலக்கியங்களுடையதாகும். மொழியின் வெளிப்பாடே இலக்கியம் எனலாம்; அதே மொழி குறிப்பிட்டதொரு  சமூகத்தின் முழுமையான வெளிப்பாடாகும். மொழியின் ஆளுமை என்பது மிகப் பரந்து விரிந்தது. ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு சமூகம் அல்லது சமுதாயத்தின் நடப்புகளையும், வாழ்வியல் செய்திகளையும், பழக்க வழக்கங்கள், உணவு, உடை, நம்பிக்கைகள் எனப் பலவற்றையும் அந்தந்த மொழிகளில் சொற்களால், எழுத்துக்களால், கவிதையால், உரைநடையால் பதிந்துவைப்பதே இலக்கியமாக உருப்பெற்றது. ஆகவே இலக்கியம் என்பது மனிதனின் சிந்தனையின் அற்புதமான வெளிப்பாடு எனக்கொள்ளத் தகுதியானது.

இலக்கியத்தை வாய்மொழி இலக்கியம், எழுத்திலக்கியம் என இருவகையாக்கலாம். எழுத்து என்பது வழக்கில் வரும்வரை வாய்மொழியாகவே அனைத்தும் பரிமாறிக் கொள்ளப்பட்டன: கதை சொல்லுதல் (பாட்டிமார்களின் காக்கா-குருவி, சரித்திர, புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்கள் தாமே நாமெல்லாம்!), வேதங்கள் வாய்மொழியாகவே கற்பிக்கப்பட்டன; பழமொழிகள், விடுகதை, தாலாட்டு போன்றவை வாய்மொழி இலக்கியங்களாகவே வளர்ந்தன. கதைசொல்லியான ஹோமரின் இலியட், ஒடிஸி ஆகியவை வாய்வழியாக வந்த பாடல்களே. பிற்காலத்தில்தான் இவை எழுத்தாக்கம் பெற்றன.

பின் எழுத்து, வடிவங்களாக உருக்கொண்ட காலத்திலிருந்து ஒரு சமூகத்தின் கற்பனைகள், கருத்துகள், எழுத்திலக்கியமாகப் பரிணமித்தன. எழுத்துக்களின் பண்பட்ட வடிவமே எழுத்திலக்கியம் ஆனது எனலாம். முதலில் கற்கால மனிதன் பாறைகளில் எழுதிய வடிவங்களான எழுத்துகள், பின்பு வழக்கில் வந்த ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், சங்க இலக்கியங்கள், அவற்றின் விதிமுறைகளை வகுத்த இலக்கண நூல்கள், இதிகாசங்கள், காப்பியங்கள், புராணங்கள், சமயம் சார்ந்த நூல்கள், உரைநடை இலக்கியங்கள் என இவை தமிழில் வளர்ந்தன. பாரத தேசத்தின் மற்ற மொழிகளும் தமிழிலிருந்தும், வடமொழி எனப்படும் சமஸ்கிருதத்திலிருந்தும் கிளைத்து வளர்ந்து வெவ்வேறான எழுத்துக்களையும், இலக்கியங்களையும் உருவாக்கின. உலகின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறோ அல்லது சிற்சில 

வேறுபாடுகளுடனோ ஏதோவொரு காலகட்டத்தில் இலக்கியங்கள் உருவாகத் தொடங்கின; தொடர்ந்த வண்ணமே உள்ளன!

சமகாலத்திலோ அல்லது சற்றுப் பிற்பாடோ, கலை (இசை, நடனம், நாடகம் ஆகிய நுண்கலைகள்) அறிவியல், வேதாந்தம், தத்துவம், பொருளாதாரம், சரித்திரம் தொடர்பான இலக்கியங்கள் / நூல்கள் ஆகியன வளர்ந்தன. வரலாற்றினைக் கல்வெட்டுகளில் பொளிந்து வைக்கும் முறை ஏற்பட்டது.

>>>>>00000<<<<<

உலகம் கொண்டாடும், பல மொழிகளிலும் உள்ள  இலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள்:

நம் தாய்மொழி தமிழினை முதலில் பார்ப்போம். ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தின்முன்பு வாளோடு உலகில் முன்தோன்றி மூத்த குடி’ எனத் தமிழினத்திற்குப் பெயருண்டு. இதற்குப் பலவிதமாகப் பொருள்கண்டு வருகிறார்கள். இங்கு, இப்போது நம்முடைய வேலை இதற்குப் பொருள் காண்பதன்று; அத்தகைய பழமையான மொழியில் காலங்கள் தோறும் உருவான இலக்கியங்களைப் பற்றிச் சிந்திப்பதே! 

தத்துவ, வேதாந்த, இறைமை பற்றிய சிந்தனைகளுக்குள் மிகவும் தொன்மைக் காலத்திலேயே புகுந்துவிட்ட நாகரிகம் நம்முடையது. ஆகவே இவை பற்றிய நூல்களை ஆரம்பகால இலக்கியங்கள் எனலாம். 

களிமண் பலகைகளில் எழுதப்பட்ட சுமேரியர்களின் காப்பியமான கில்காமெஷ் உலகின் பழையதொரு காப்பியமாகக் கருதப்படுகிறது. எகிப்தின் இறந்தோர் நூல், பரதக் கண்டத்தின் வேதங்கள் இதிகாசங்கள் ஆகியன மிகப்பழைய ஆரம்பகால இலக்கியங்களின் சான்று.

தமிழிலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையானது. தொல்காப்பியம் எனும் நூல் தமிழின் மிகப்பழைய இலக்கண நூலாக மதிக்கப்படுகிறது. இலக்கியங்கள் எழுதும் வகைமுறைகளைக் காட்டும்  நூலாகவும் விளங்குகிறது. பின் சங்க இலக்கியங்கள் எழுந்தன. இவை தத்துவம், வேதாந்தம், இயற்கையழகு, காதல், கொடை, வீரம் ஆகியன பற்றிப் பாடின. அனைத்துமே செய்யுள் வடிவிலமைந்தவை. இத்தகைய இலக்கியங்கள் கிளை விரித்துப் பரந்து காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் எனப் பெருகின. இவற்றை எழுதும் புலவர்களைப் புரக்க மன்னர்களும் பெரியோர்களும் தலைப்பட்டனர். சிற்சில இலக்கியங்கள் பற்றிக் காணலாம். 

சங்க இலக்கியமான (சங்க காலம் – கி.மு. 500 – கி.பி. 200)  நற்றிணை, அகநானூறு ஆகியன மாந்தர்களின் காதல் வாழ்வைப் பற்றிப் பாடின; பரிபாடலானது கடவுள்களான சிவன், முருகன், திருமால், கொற்றவை இவர்களை மட்டுமின்றி மதுரையின் பெருமைமிகு நதியான வைகை பற்றியும், அதன் நீர்ப்பெருக்கு, மக்களின் கொண்டாட்டம் ஆகியன பற்றியும் பாடியது. வைகையைப் போற்றும் ஒரு பாடலைக் காண்போமா?

பரிபாடல்: வைகையில் நீராடல்:
பண்: பாலையாழ்

அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட
பனிப்புலர்பு ஆடிப் பருமணல் அருவியின்
ஊதை ஊர்தர உறைசிறை வேதியர்
நெறிநிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின்
தையல் மகளிர் ஈரணி புலர்த்தர
வையை நினக்கு மடை வாய்த்தன்று
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து
பொய்யாடல் ஆடும் புணர்ப்பின் அவரவர்
தீயெரிப்பாலும் செறி தவம் முன்பற்றியோ
தாயருகா நின்று தவத் தைந்நீராடுதல்
நீயுரைத்தி வையைநதி !……

தாயோடு நீராடும் (அம்பா ஆடும்) கன்னிமைப் பருவத்து சிறுபெண்கள், சடங்கறிந்த முதிய அந்தணப்பெண்கள் நோன்பு செய்யும் முறைமையினை அறிவிக்க, பனியையுடைய வைகறைப்பொழுதிலே நீராடி, மணலிலே தம் ஈர ஆடையினின்று ஒழுகுகின்ற நீரில் குளிர்வாடை தவழ்ந்து வருதலால், குளிரில் நடுநடுங்குகின்றனர். அந்தக் கரையினில் நின்ற அந்தணர், வேத நெறியாலே வளர்க்கப்பட்ட வளைந்தெரியும் தீயினை சிறப்புடன் வளர்க்கின்றனர்; அக்கன்னிப் பெண்கள் சென்று, அதில் தம் ஈரஆடையை உலர்த்தி நின்றனர்;

வையையே, வேள்விப்பொருள் (அவி, ஹவிஸ்) நினக்கு வாய்த்தது.

ஒரு அரசன் தனக்குப் பிறந்த குழந்தையைக் காணச்செல்லும்போது அதற்கு வீர உணர்வை ஊட்ட எவ்வாறு செல்கிறான் என இன்னொரு அரிய பாடல்.

வீரம்: அதியமான் நெடுமான் அஞ்சி மீது அவ்வையார் பாடியது:

கையது வேலே காலன புனைகழல்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்
வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு
வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇ
சுரிஇரும் பித்தை பொலியச் சூடி,
வரிவயம் பொருத வயக்களிறு போல,
இன்னும் மாறாது சினனே அன்னோ
உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றி யோரே;
செறுவர் நோக்கிய கண், தன்
சிறுவனை நோக்கியும் சிவப்பானாவே.

பின்பு சங்கம் மருவிய காலம் என ஆயிற்று. (கி.பி. 300-500.) திருக்குறள், இரட்டைக் காப்பியங்கள் (சிலப்பதிகாரம் – மணிமேகலை) போன்றவை எழுந்தன.

உள்ளத்தை அள்ளும் பாடல்கள் கொண்டது சிலப்பதிகாரம்.

சிலப்பதிகாரத்தில் இயற்கை வழிபாடு

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகுஅளித்த லான்.

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம்திரி தலான்.

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான்.

‘வடவரையை மத்தாக்கி’- எனும் ஆய்ச்சியர் குரவை. அனைவரும் பலமுறை கேட்டுள்ளோம்.

 திருமந்திரம் எனும் திருமூலரின் நூலும் கி. மு. 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. வெளிப்படுத்திய காலம் சங்கம் மருவிய காலம். 

காரைக்காலம்மையார் – முதன்முதலில் ‘பண்’ எனும் ராகங்களைப் பாடியவர்; தமிழிசையின் தாய் என அறியப்படுகிறார். ஏழு சுரங்களாலும் பலவித இசைக்கருவிகளாலும் ஆடவல்லானின் நடனத்தைப் பாடியுள்ளார். இவரைப்பற்றி பின்பு இசை தொடர்பான கட்டுரையில் காணலாம்.

அடுத்து வந்த பல்லவர் காலம் பக்தி இலக்கிய காலம் எனப்படுகிறது (கி.பி. 600-850) தேவாரம், திவ்வியப்பிரபந்தம், இவற்றை நாயன்மார்களும் ஆழ்வார்களும் இயற்றினார்கள். இன்னும் பலவிதமான இலக்கியங்கள் புனையப்பட்டன.

அடுத்து வரும் சோழர் காலம் காப்பிய காலம் என வழங்கப்படுகிறது (கி. பி. 850-1350) ஐம்பெரும் காப்பியங்கள்; கம்பராமாயணம், கந்தபுராணம், பெரியபுராணம் ஆகியவை புலவர்களால் இயற்றப்பெற்றன. ‘அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்’ எனும் காதல்ரசம் நிறைந்த பாடல், ‘வெய்யோன் ஒளி தன்மேனியின் விரிசோதியின் மறைய’ எனும் அற்புத ரசம் பெருகிடும் பாடல் ஆகியவை கம்பரால் இராமாயணத்தில் கற்பனை வளமும் கவிதைநயமும் சேர இயற்றப்பெற்றன.

பின்பு நாயக்கர் காலத்தில் (கி.பி. 1350-1750) சைவ சித்தாந்த நூல்கள், உரை நூல்கள், உலா, கலம்பகம், பிள்ளைத்தமிழ், திருப்புகழ், எனப்படும் பல சிற்றிலக்கியங்கள் பாடப்பெற்றன. கவியரசு நடேச கவுண்டர் இயற்றியுள்ள திருப்பேரூர்க் கலம்பகத்தில் உள்ள அழகான ஊசற்பாடல்:

ஏலநறுங் குழலாட மாலை யாட
இமிர்ந்தினவண் டாடமதி நுதல்வே ராடச்
சாலவடி காதாடக் குழைக ளாடத்
தளர்ந்துகொடி யிடையாட வளைக ளாடக்
கோலமட மயிலனையீ ராடீ ரூசல்
குளிர்முத்த மணிநகையீ ராடீ ரூசல்
பாலனைய மொழிமடவீ ராடீ ரூசல்
பட்டீசர் பேர்பாடி யாடீ ரூசல்.

திருப்பேரூரில் எழுந்தருளியுள்ள பட்டீசுவரப் பெருமானைக் கண்டு போற்றித் துதித்துவிட்டு வரும் பெண்கள் வழியிலுள்ள ஒரு மலர்ச்சோலையில் விளையாட நுழைகின்றார்கள். வழக்கமாக அவர்கள் ஆடும் ஊசல்கள் அங்கே மரக்கிளைகளிலிருந்து தொங்குகின்றன. சிலர் அவற்றிலேறி வீசியாட முற்படுகிறார்கள். ஆடும் வேகத்தில் அள்ளிமுடித்த நறுங்குழல் அவிழ்ந்து அலைந்தாடுகின்றது; கழுத்திலணிந்த முத்துமாலைகளும் பொன்னணிகளும் ஆடுகின்றன; மலர்ச்சோலையல்லவா? இவர்கள் ஊசலாடும் வேகத்தில் மலர்களில் தேனுண்ணும் வண்டுகளும் எழுந்தும் தாழ்ந்தும் ஆடுவனபோல் காட்சியளிக்கின்றன! விசையாக ஆடுவதால், பிறைபோன்ற நெற்றியில் வியர்வை அரும்பிப் படர்கிறது; தொங்கும் துளைச்செவியானதும் ஆடுகின்றது (அக்காலத்து மகளிர் காதில் பாம்படம் போன்ற பெரிய  அணிகளை அணிவதற்காக, காதுத்துளைகளை நீளமாகத் தக்கை முதலியனவற்றால் வளர்த்துக்கொண்டு அழகு செய்துகொள்வார்கள்; இதனை ‘வடிகாது’ என்பார்கள்). அக்காதிலணிந்த குழைகளும் கூடவே ஆடுகின்றன. கொடியிடையும், கைவளைகளும் ஆடிட, கோலமயில் போலும் பெண்களே நீங்கள் ஊசலாடுவீர்களாக! முத்தைப்பழிக்கும் புன்னகை கொண்டவர்களே! பால்போலும் இனிய சொல் பேசுபவர்களே! பட்டீசர் புகழைப் பாடி ஆடுவீராக!” எனப்பாடியவண்ணம் ஒருவரையொருவர் ஊசலில் ஊக்கியபடி இவர்கள் ஊசலாடும் அழகு நமது கண்முன் காட்சியாகத்தோன்றி மகிழ்விக்கிறது. இறைவனின் அல்லது அரசனின் புகழைப்பாடும் ஒருவகைச் சிற்றிலக்கியம், பலவிதமான பாடல்வகைகளைக் கொண்டு அமைவதனால், கலம்பகம் எனப்பெயர் பெற்றது. 

    பிள்ளைத்தமிழ் எனும் இலக்கியவகை பெரியோர் அல்லது தெய்வங்களின் குழந்தைப் பருவத்தைப் போற்றிப் பாடப்படுவது. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், பொன்னூசல் எனும் பத்துப் பருவங்களைப் பெண்பால் பிள்ளைத்தமிழாகக் கொண்டமைக்கப் படுவது. திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ் எனும் நூலினின்று ஒரு அம்புலிப்பருவப் பாடல்; 17-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த அழகிய பிள்ளைத்தமிழ் நூலின் ஆசிரியர் சோணாசல பாரதியார்.

செம்புலி பதஞ்சலி எனும் தவர்கள் போற்றத்
திருப்புலி நகர்க் கண்டனம்
செய்தருளி வாட்புலியெனும் பெரிய கோட்புலி
சிறப்புலிக்கு அருளுநாதன்
வெம்புலி யுரித்தனன் எனப்புலவி தீரும்வணம் (வண்ணம்)
மெய்ப்புலி நகைத்து உரைக்கின்
வெற்றிகொள நாமுமொரு வண்புலி யுரித்தும் என
வேண்டிவருகென்றெனள் எனக் (வேண்டி வருக என்றனள் என)
கம்புலியிருத்தியோ தாழாது வருதியேற்
கவுரியருள் பெற்றுய்யலாம்
கங்கையொடு பழகு திங்கட்புலியேன் எனைக்
காயின் என்செய்வதென்னில்
அம்புலி எனச் சொல்லித் தப்புவிப்பேம்; உண்மை
அம்புலீ யாடவாவே
அண்ணாமலைக்கினிய உண்ணாமுலைக் க(ன்)னியோடு
அம்புலீ யாடவாவே.

“வியாக்கிரபாதர், பதஞ்சலி எனும் தவத்தோர் போற்றுகின்ற திருப்புலி எனும் நகரினில் சிவ அபராதம் செய்தவர்களை வாளால் கண்டனம் செய்த கோட்புலி நாயனாருக்கும், வள்ளல் தன்மை நிறைந்த சிறப்புலி நாயனருக்கும் பேரருள் செய்தவன் சிவபிரான். அவன் உமையம்மையின் ஊடலைத் தீர்க்கும் வண்ணம் அவளைத் தன்னுடன் சேர்த்து இறுகத் தழுவி நகைத்த வண்ணம், “யாம் ஒரு புலியின் தோலை உரித்துள்ளோம் பாராய்! (தாருகாவனத்து முனிவர்கள் தன்மீது ஏவிய புலியின் தோல்)” என்று கூறினான். உடனே உமையம்மை தானும் அவனுக்குப் போட்டியாக அவ்வாறே ஒரு புலியின் தோலை உரிக்க வேண்டும் என எண்ணம் கொண்டு அதற்காக அம்புலி எனும் புலியை (உன்னை) அழைத்தனள் என எண்ணி அச்சங்கொண்டு சிவபிரான் தலையினை இறுகப் பற்றிக் கொண்டு வராமல் இருக்கின்றாயோ அம்புலியே! அச்சம் கொள்ளாதே. காலந்தாழ்த்தாது வருவாயாகில் கௌரி அன்னையின் அருளினைப் பெற்றுப் பிழைக்கலாம். ‘கங்கையோடு நட்பாயுள்ளவன் இந்தத் திங்கள் எனும் அம்புலி என என்னைச் சினந்தால் என்ன செய்வேன்,’ எனக் கருதினாயாகில், ‘இவன் அம்புலி; உன்னோடு விளையாட வந்தான்,’ எனக் கூறித் தப்புவிப்போம்; இதுவே உண்மை. ஆகவே, அம்புலியே, இந்த அண்ணாமலையானுக்கு இனியவளாகிய உண்ணாமுலை அம்மையொடு விளையாட வா,” என அழைக்கின்றனர் செவிலித் தாயர் என்கின்றார் புலவர். (மெய்ப்புலி – உடலினைத் தழுவி, புல்லி; கம்புலி – சிவபிரான் தலையை இறுகப் பற்றி).

புலி எனும் சொல் பலபொருள்களைக் கொண்டு (புலி – வேங்கை, புல்லி – தழுவி, அம்புலி) வருமாறு புலவனார் பாடலில் பொருத்தி அமைத்துள்ள அழகே அழகு. இதனை ‘சொல் பின்வரு நிலையணி,’ என்பது வழக்கம்.]

இவ்வாறு தமிழிலக்கியம் தழைத்து வளர்கின்றது. உலகத் திருவிழாவினைக் கொண்டாடும் மக்களால்தானே இவையனைத்தும் இயன்றன?

பின்பு தோன்றிய சித்தர் இலக்கியம் தத்துவ, வேதாந்த விசாரங்களை முன்வைத்துக் கேள்விகளைக்கேட்டு அறிவுரை கூறியது. இவை ஆன்மீக, உலகாயத சிந்தனைகளின் சாரம் எனலாம்.

ஐரோப்பியர் காலம் (ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர் ஆகியோர் வந்து ஆண்ட காலங்கள்) ஆன கி.பி. 1700-1900-ல் கிறித்தவ இலக்கியங்கள் தமிழில் எழுதப்பட்டன. தமிழ் மூவர் ஆகிய முத்துத் தாண்டவர், மாரிமுத்தாபிள்ளை, அருணாசலக் கவிராயர், மேலும் கோபாலகிருஷ்ண பாரதியார், இராமலிங்க அடிகளார் ஆகியோரின் இனிமையான பாடல்கள் ஆகியனவும், பல சிற்றிலக்கியங்களும் எழுந்தன.

தற்காலத்தில் நாம் காண்பது இயல்தமிழ் வளர்ச்சி (அதாவது உரைநடை இலக்கியங்கள்). பாரதியார், முத்தையா பாகவதர், நாமக்கல் கவிஞர், கல்கி, தேசிக விநாயகம் பிள்ளை, பாபநாசம் சிவன், கோடீஸ்வர ஐயர், உளுந்தூர்பேட்டை சண்முகம்; யாழ்ப்பாணத்துத் தமிழ்ப்புலவர்கள்: ஆறுமுக நாவலர் முதலியோர் காவடிச்சிந்து, தேசபக்திப் பாடல்கள், தமிழிசைப்பாடல்கள், பலவிதப் பாடல்கள் ஆகியனவற்றை இயற்றினர்.  பேசுவது போலவே தமிழில் கதை எழுதத் தொடங்கினர், வ, வே சு, ஐயர், முதலியோர் தொடங்கிய இவ்வடிவம் மிகுந்த வலுவுற்றுத் தற்போது பல்லாயிரக் கணக்கான எழுத்தாளர்கள் (என்னையும் சேர்த்துத்தான்!!!) உள்ளனர். நமக்குப் படிக்கவே நேரம் போதவில்லை. அத்தகைய அருமையான படைப்புகள் வந்துகொண்டேயிருக்கின்றன.

இவ்வாறு தமிழிலக்கிய உலகம் தனது நீண்ட காலப்பரப்பில் காலத்திற்கேற்ற மாற்றங்களைப் படிப்படியாகக்கொண்டு வளர்ந்து வந்துள்ளது. எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்துகளைக் காணலாம். திருமூலரே 3000 ஆண்டுகளுக்கு முன் கூறியது:

‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

  நன்றே நினைமின்’- என்ற பாடல்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்- எனும் சங்கப் பாடல் ஆகி, 

‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்ற பொதுவுடைமைக் கருத்தை நிலைநாட்டும் பாடலாகவும் திகழ்கிறது.

இவையனைத்தும் இந்த உலக வாழ்வை திருவிழாவாகக் கொண்டாடி ரசிக்கத் தெரிந்த மக்களால்தான் சாத்தியப்பட்டது. அதனால்தான் மானுடப்பிறவி எல்லாப்பிறவிகளிலும் உயர்வானதாகக் கருதப்பட்டது.

——————————

இவ்வளவு கூறிவிட்டு மற்ற மொழிகள், நாடுகளின் இலக்கியங்களைப் பற்றி, அவற்றையும் நமது கொண்டாட்டங்களில் சிறிதேனும் கூற வேண்டாமா? இதோ!

பன்மொழி இலக்கியங்கள்:

சமஸ்கிருதம்: சிவபெருமானிடமிருந்து தோன்றிய மொழி என நாம் கருதும் இம்மொழியும் அருமையாக வளர்ந்து வந்தது. மிகப் பழமையான இந்த மொழியில்செறிவான பல இலக்கியங்கள் உருவாயின. சமயம், தத்துவம், அரசியல், சரித்திரம், அறிவியல், வானவியல், கலைகள், தினசரி வாழ்க்கை ஆகிய தளைப்புகளில் எத்தனை எத்தனை கவிஞர்கள் படைப்புகலை அளித்துள்ளனர் – வால்மீகியிலிருந்து தொடங்கி, வியாசர், காளிதாசர், பாஸர், பாரவி, தண்டி, பாணபட்டர், கல்ஹணர், பவபூதி, ஜயதேவர், ஜகன்னாத பண்டிதர், ஸ்ரீ ஹர்ஷர், கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், இன்னும் அரசி கங்காதேவி போன்ற பெண்பால் புலவர்களும் நிறைந்து உலகப்புகழ் பெற்ற சாகுந்தலம், குமாரசம்பவம், மேகதூதம், அஷ்டபதி, மதுராவிஜயம் ஆகிய அற்புதமான படைப்புகளைக் கொண்டு பாரத தேசத்தின் சரித்திரம், புராணம், அழகு, அரசர்கள் இவற்றை விளக்கும் இலக்கியங்களாக இவை திகழ்கின்றன எனில் மிகையில்லை. வேதங்களும் உபநிஷதங்களும் இம்மொழிக்கு அழகு சேர்த்தன எனலாம். புகழ்பெற்ற காசி, நாளந்தா பல்கலைக் கழகங்களில் எத்தனை உயரிய ஆசிரியர்கள் சமஸ்கிருத கல்வி கற்றுக் கொடுத்தனர். பெருமைக்குரிய செய்தி.

வங்கமொழி: இதுவும் பழமையானதொரு மொழி. கி.பி. 650-1200ல் மொழியாக நிலைபெற்றது. பாலா, ஸேனா வம்சாவளிகள் அழிவுற்றபின் இஸ்லாமிய கலாச்சாரத்திலிருந்து அரபிய, பாரசீக, சமஸ்கிருத மொழிகளிலிருந்து பல சிந்தனைகளைத் தன்னுள் ஏற்றுக்கொண்டது இந்தமொழி. மங்கல்காவ்யா எனும் பக்திப் பாடல்களில் தொடங்கி, வைணவ இலக்கியங்களான பதாவலிகள் (சைதன்ய மஹாப்ரபுவால் இயற்றப்பெற்றது), இஸ்லாமியக் கவிஞர்களால் இயற்றப்பட்ட நூல்கள், சந்திரவதி எனும் பெண் புலவரால் பாடப்பட்ட (பெண்ணின் நோக்கிலான) ராமாயணம் இவை போன்றவையே முதன்மை நூல்களாகும். பின் தற்காலத்தில் கவிதையினின்று உரைநடையும், நாவல்கள் எனப்படும் புதினங்களும் உருவாகத் தொடங்கின. 19ம் நூற்றாண்டில் ஈஷ்வர் சந்திர வித்யாசாகர், மைக்கேல் மதுசூதன் தத், பங்கிம் சந்திர சாட்டர்ஜி  ஆகியோரால் வங்கமொழி வளம் பெற்றது. முதன்முதலாக ஒரு இந்திய மொழியில் (வங்கமொழியில்) ‘துர்க்கேச நந்தினி’ என்ற புதினம் ஒன்றினை பங்கிம் சந்திரர்தான் எழுதினார் எனும் பெருமை வங்கமொழிக்குண்டு. 

பின்பு ரவீந்திரநாத் தாகுர் வங்கமொழியை அகில உலக நிலைக்குத் தன்னுடைய எழுத்துக்களால் உயர்த்தினார். இவருடைய நூலான கீதாஞ்சலி ஆங்கிலத்தில் இவராலேயே மொழிபெயர்க்கப்பட்டு நோபல் பரிசும் பெற்றது. தற்காலத்தில் இன்னும் பல எழுத்தாளர்கள் உரைநடை இலக்கியங்களால் இம்மொழிக்குப் புகழ் சேர்த்தவண்ணம் உள்ளனர். ஞானபீட பரிசுபெற்ற மஹாஸ்வேதா தேவியும் ஒரு புகழ்பெற்ற வங்க எழுத்தாளராவார். 

மலையாள இலக்கியம்: கி.பி. 7-8ம் நூற்றாண்டுகளில் பூகோள அமைப்பினால் தமிழ் மொழியினின்று வேறுபட்டுப் பிரிந்தது மலையாளம். 9ம் நூற்றாண்டில் வட்டெழுத்துமுறை அமலுக்கு வந்தது.12-13, நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட ராமசரிதம் எனும் நூல் தமிழின் இலக்கண, சொல்லாட்சிகளைக் கொண்டே பெரிதும் அமைந்திருந்தது. 14ம் நூற்றாண்டு நூலான லீலாதிலகம், மலையாளத்தையும் சமஸ்கிருதத்தையும் இணைத்து எழுதப்பட்ட மணிப்பிரவாள நடை (முத்தும் பவளமும் கோர்க்கப்பட்ட கழுத்தணி போன்றது) என்பதனைச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றது. 

16-18ம் நூற்றாண்டுகளில் மறுமலர்ச்சி கண்ட தற்கால மலையாளத்தின் தந்தை எனப்படுபவர் எழுத்தச்சன் ஆவார். இவர் ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றைக் கிளிப்பாட்டு என மலையாளத்தில் எழுதினார். பூந்தானம் நம்பூதிரி என்பவர் ஞானப்பனா எனும் பக்தி நூலை இயற்றினார். கொட்டாரக்கர தம்புரானும் உண்ணாயி வாரியரும் கதகளி இலக்கியங்களை எழுதினர். நவீன மலையாள இலக்கியத்தின் துவக்கம் சந்து மேனனின் இந்துலேகாவுடன் துவங்கியது. குமரன் ஆசான், வள்ளத்தோள் ஆகியோரும் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளனர். 20ம் நூற்றாண்டின் மத்தியில்  வைக்கம் முகம்மது பஷீர், தகழி சிவசங்கரன் பிள்ளை, எம், டி. வாசுதேவன் நாயர் ஆகியோர் கேரளப் பின்னணியில் மக்களின் வாழ்க்கைகுறித்து பல நவீனங்களைப் புனைந்துள்ளனர். ஞானபீட விருதினரான பொற்றேகாட், சங்கர குருப், அக்கிதம் அச்சுதன் ஆகியோர் உலகப்புகழ் பெற்ற மலையாள எழுத்தாளர்கள்.

இதேபோல ஹிந்தி, ஒரியா, மராத்தி, குஜராத்தி, கன்னட மொழி, தெலுங்கு மொழி இன்னும் பல இந்திய மொழிகளிலும் இலக்கியம் வளர்ந்துள்ளது. 

~~~~~~00000~~~~~~

ஆங்கிலம்: ஆங்கில மொழி இலக்கியங்களும் பல காலங்களையும் மாறுதல்களையும் கண்டு வளர்ந்தன. ஆங்க்லோ சாக்ஸன் காலம் கி.பி. 450 பின்பு துவங்கியது. பின்பு 1066 முதல் 1500 வரை சாஸர் (Chaucer)  முதலானவர்கள் இலக்கியங்களை இயற்றினர். (Canterburry Tales) மறுமலர்ச்சிக் காலம் என்றது 1500-1600 வரை; ஷேக்ஸ்பியர், மில்டன், ஆகிய கவிதையாளர்களின் காலம் பின்பு 1660 முதல் 1800 வரை ஜானதன் ஸ்விஃப்ட், ட்ரைடன் ஆகியோரின் காலம்; பின்பு 1837 வரை வொர்ட்ஸ்வொர்த், கீட்ஸ், காலரிட்ஜ், ஷெல்லி ஆகியோரின் காலம். விக்டோரியன் காலத்தில் தான் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு நாவல்கள் டிக்கன்ஸ், ஜார்ஜ் எலியட், தாமஸ் ஹார்டி ஆகியோரால் எழுதப்பட்டன. தற்காலத்தில் பற்பல எழுத்தாளர்கள் – டி.எஸ். எலியட், வர்ஜீனியா வுல்ஃப், ஜேம்ஸ் ஜாய்ஸ் ஆகியோர் புதுமுறையில் எழுதியுள்ளனர்.

ருஷ்ய மொழி, பிரென்சு, லத்தீன், ருஷ்ய மொழி, ஜப்பானிய மொழி ஆகியவற்றில் பல இலக்கியங்கள் உருவாயின.

உலகின் பல்வேறு மொழிகளிலும் அற்புதமான இலக்கியங்கள் உருவாயின. அவற்றை அந்தந்த மொழிகளை அறியாதோர் எவ்வாறு படிப்பது, எவ்வாறு அதன் புதுமையைப் பற்றித் தெரிந்து கொள்வது எனக் கேட்கலாமா? இங்குதான் மொழிபெயர்ப்பின் இன்றியமையாமை பற்றி அறிந்து கொண்டோம்.

————————————————-

மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம்.

   இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மொழிபெயர்ப்பு தொடங்கியது என்கிறார்கள். கி.மு. 2500ல் சுமேரியக் கவிதையான கில்காமேஷ், அக்காடியன் மற்றும் ஆசிய மொழிகளில் ஆக்கம் செய்யப்பட்டதாம். கி. மு. 2000-ல் பல மொழிகளில் ஆக்கம் செய்யப்பட்ட முதல் இலக்கியமாக விளங்கியது!! 

இவை வெறும் மொழியாக்கங்கள் மட்டுமல்ல. கலாச்சாரப் பரிமாற்றங்கள், மதம் பரப்புதல், அரசியல் தொடர்புகள் ஆகியவை அந்தந்த இனங்களில் இருந்த ‘கல்வியில் தேர்ந்தவர்களால்’ செய்யப்பட்ட சேவைகள் எனலாம்.

கி.பி. 4ம் நூற்றாண்டில் கிறித்தவர்களின் புனித பைபிள் ஹீப்ரூ மொழியிலிருந்து இலத்தீனுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டது.

மொழிபெயர்ப்பாளர் இரு கலாச்சாரங்களிடையே பாலமாக விளங்குகிறார். சரித்திரப்பதிவாக விளங்கும் முக்கிய மொழிபெயர்ப்பு ரோஸெட்டா கல் (Rosetta stone) என்பதன் மொழிபெயர்ப்பே. 1799ல் கண்டுபிடிக்கப்பட்ட இது எகிப்திய எழுத்துக்களான ஹியரோக்ளிஃபிக்ஸைப் புரிந்துகொள்ளவும் எகிப்திய நாகரிகம்பற்றி அறிந்து கொள்ளவும் ஏதுவாக விளங்கியது.

ஒரு கூடுதலான சுவாரசியம்: நான் அமெரிக்காவில் பணிபுரிந்த காலத்தில் எங்கள் பக்கத்து அப்பார்ட்மெண்டில் இருந்தவர்கள் ஜப்பானியர்கள். அந்தப் பெண்மணி தாகுரின் சாந்திநிகேதனில் பயின்றவராம். அவர் சத்யஜித் ராய் எழுதிய சிறுவர்களுக்கான நூல் ஒன்றினை வங்கமொழியிலிருந்து ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்திருந்தார். எனக்கும் ஒரு பிரதியை ஞாபகார்த்தமாக வழங்கினார். (எனக்கு ஜப்பானிய மொழி பேசவோ படிக்கவோ தெரியாது என்பது வேறு விஷயம்!) இன்றும் அது என் கைவசம் உள்ளது. மொழிபெயர்ப்பின் வலிமையை எண்ணி வியக்கிறேன்!!!

சமீபத்தில் நான் ஒரு அபூர்வமான நூலை ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்து பதிப்பித்தேன். அது பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் ‘துர்க்கேச நந்தினி’ எனும் இந்தியமொழி முதல் நாவல். ஒரு அம்மையார் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருந்தார், அவரிடமும் பதிப்பாளரிடமிருந்தும் அனுமதிபெற்று, மொழியாக்கம் செய்தேன். புஸ்தகா நிறுவனம் பதிப்பித்தனர். கதைப்போக்கு மிக அருமையானது. முடிந்தால் வாங்கிப் படியுங்கள்.

இவையெல்லாம் அல்லவோ உலகத் திருவிழாக் கொண்டாட்டம்!

(கொண்டாட்டங்கள் தொடரும்!)

கற்று கேட்டு ஆய்ந்தவை

சொல்லும் பொருளும்
Exit mobile version