Site icon சொல்வனம் | இதழ் 372 | 09 ஆக 2026

திறன்பேசி என் சிறந்த நண்பன்

This entry is part 4 of 4 in the series தரவு ஏக்கம்

சென்ற பகுதியில், என்னை மதித்த மார்க் மற்றும் ஜெஃபைப் பற்றி சில உதாரணங்கள் பார்த்தோம். இவர்களைத் தவிர இன்னும் சிலர், என்னை ஒரு புள்ளி விவரத்திற்கு மேலாக மதிப்பதை பழக்கமாக, கடந்த பத்தாண்டுகளாக செய்து வருகின்றனர். அவற்றில் ஒன்று, என்னுடைய பிக்ஸல் திறன்பேசி. இதிலென்ன பெரிய விஷயம் என்று உங்களுக்குத் தோன்றலாம். நீங்கள் சொல்வதைக் கேட்பது உங்களது திறன்பேசியின் கடமை. இது கொஞ்சம் ஓவராக இருக்கிறது என்று கூட தோன்ற வாய்ப்புண்டு. விரிவாகச் சில சம்பவங்களைச் சொல்கிறேன்.

என் மகள், எல்லா வேலைகளையும் தள்ளிப் போடுவதில் வீராங்கனை. அவளை, பல முக்கிய வேலைகளைச் செய்து முடிக்கும்படி சென்ற வாரம் உரையாடிய பொழுது சொல்லி வைத்தேன். அவள், வேறு ஒரு ஊரில் வேலை செய்கிறாள். அவளுக்காக, அவள் செய்து முடிக்க வேண்டிய வேலைகளின் பட்டியலை இருவரும் விவாதித்து, சேர்ந்து ஒப்புக் கொண்டோம். முப்பது வயதாகிய அவளுக்கு, இப்படி வாழ்க்கை வழிமுறைகளைச் சொல்லித் தருவது எனக்கு அலுப்பூட்டும் விஷயம். ஒரு ஆறு மாதங்களுக்கு முன், உருவாக்கிய இன்னொரு பட்டியலை, ஒரு நாலு மாதம் இழுத்தடித்து, வேறு வழியில்லாமல் முடித்து விட்டாள். அதுவும், இதில் ஈரான்-அமெரிக்கா சமரச பேச்சுவார்த்தை போல, சில விஷயங்களைப் பட்டியலிலிருந்து நீக்கிவிட, என்னுடன் போராடி, வெற்றியும் பெற்று விட்டாள். இந்த முறை, எந்த விஷயத்தையும் பட்டியலிலிருந்து நீக்கப் போவதில்லை. 

கறாராக அவளுடன் உரையாடி, அவளை ஒரு பொறுப்பான பிரஜையாக மாற்ற வேண்டும் என்று சற்று கோபத்தோடு என் திறன்பேசியை எடுத்துப் பேசலாம் என்று திறன்பேசியைத் திறந்து வருடினால், எனக்காக ஒரு எதிர்பாரா வியப்பு காத்திருந்தது. அவள் பள்ளி சென்ற போது, கல்லூரிப் படிப்பு முடிந்து பட்டம் பெற்ற போது, என்னுடைய கடந்த ஐந்து முறை அவள் ஊருக்குச் சென்று, அவளுடன் எடுத்துக் கொண்ட வண்ணப்படம் என்று ஒரு சின்ன “மலரும் நினைவுகள்” ஆல்பமே எனக்காகக் காத்திருந்தது. அந்தப் படங்கள் ஒவ்வொன்றையும் பார்க்கையில், அவளது சின்ன குறும்புகள், அவளுடைய உழைப்பு, வெற்றிகள், எல்லாம் மனதில் வந்து போனது. அவள் மீதான கோபம் எங்கோ மறைந்து மாயமாகியது.

அதன் பிறகு, அவளை அழைத்து, நலன் விசாரித்து, பட்டியல் விஷயத்திற்கு வர சில நிமிடங்கள் ஆகியது. அவள், என்னிடம், பட்டியலில் இரு விஷயங்களை முடித்து விட்டதாகச் சொன்னாள். (மொத்தம் பட்டியலில் 12 விஷயங்கள்). நல்ல முன்னேற்றம் என்று அந்த அழைப்பு சுமுகமாக முடிவடைந்தது. என் திறன்பேசி அப்படி என்ன செய்து விட்டது? பொறுப்பற்ற வாழ்க்கை நடத்தும் இளம் பெண் என்று கடிந்து கொள்ள வந்த என்னை, ‘தனியாக, பல விஷயங்களையும் எப்படித்தான் சமாளிக்கிறாளோ’ என்று நினைக்க வைத்து விட்டது. ஒருவருடன் பேசி அவர்களை மாற்ற முயற்சிக்கலாம். ஆனால், என் திறன்பேசியோ பேச வந்த என்னையே மாற்றிவிட்டது. நான் ஒரு கருவியைப் பயன்படுத்தும் மனிதன் என்பதைத் தாண்டி, என் உறவுகள், என் கோபங்கள், என் குறைகள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் நண்பனாக மாறுவது ஒரு விந்தை. இத்தனைக்கும், என்னுடைய மனதில் உள்ள ஆதங்கம், என்னுடைய கோபம் எதையும் என் திறன்பேசியிடம் சொல்லவில்லை. அப்படியே இதை எல்லாம் கொட்டினாலும், ஒரு நிஜ மனிதன் தரும் ஆறுதல், மற்றும் மாற்றத்தை விட இது மிக உயர்ந்தது!

சரி, என் திறன்பேசி மீதான அபரிமிதமான கூகிள் பாசத்தை இன்னும் நம்புவதாக இல்லை என்றால், இன்னொரு சம்பவம் சொல்லுகிறேன். என்னுடைய பயண ஏற்பாடுகளை, நானே செய்து கொள்ளும், ஒரு வட அமெரிக்க துரதுஷ்டசாலி நான். பயணத்தை முடிவு செய்து விட்டு பயணச்சீட்டை வாங்கி விட்ட பின்பு என்னுடைய கூகிள் திறன்பேசி, என்னுடைய அனைத்து தேவைகளையும் பார்த்துக் கொள்ளும். பயணத்திற்கு ஒரு வாரம் முன்பு, முதலில் பயணம் பற்றி ஞாபகப்படுத்தும். என்னுடைய கூகிள் வாலட்டில் பயணத்திற்கு தேவையான packing list உண்டு. 

பயணத்திற்கு ஒரு நாள் முன்பு, நுழைவுச் சீட்டு (boarding pass) வாங்கி விட்டீர்களா என்று நினைவுபடுத்தும் என்னுடைய திறன்பேசி. நுழைவுச்சீட்டை வாங்கி, என் wallet –ல் பதிவு செய்துவிட்டால் போதும். மற்ற பயண ஏற்பாடுகளுக்கு ஏராளமாக உதவும் என் திறன்பேசி. முதலில், பயணத்திற்குத் தேவையான எல்லாவற்ரையும் எடுத்துக் கொண்டுவிட்டேனா என்று நினைவூட்டும். அடுத்தபடி, விமானம் புறப்பட 3 மணி நேரத்திற்கு முன், “உங்களது ஃப்ளைட், இந்த டெர்மினலில், இந்த கேட்டிலிருந்து புறப்படும் என்று நினைவூட்டும்”. 

விமான நிலையம் சென்றடைந்த பின், என் திறன்பேசி போல ஒரு அருமையான நண்பன் இருக்க முடியாது. விமான நிலையப் பாதுகாப்பைத் தாண்டி உள்ளே என் கேட்டிற்கு சென்று காத்திருப்பது வழக்கம். எங்கள் ஊரில் அடிக்கடி, கடைசி நேரத்தில், கேட்டை மாற்றி விடுவார்கள். விமான நிலைய அறிவிப்பு வருவதற்கு முன், என் திறன்பேசி, என்னை தட்டி எழுப்பி, “கேட் மாறிவிட்டது. உங்களது புதிய கேட் எண் இது” என்று பொறுப்பாக, சொல்லிவிடும். பல முறை, புதிய கேட்டில் சென்று 10-15 நிமிடங்கள் காத்திருந்த பின்னரே, ஏர்லைன் ஆசாமிகள் அங்கு வந்தடைவார்கள். விமான நிலைய அறிவிப்பும், மெதுவாக கேட் மாறியதை அறிவிக்கும். பதட்டமாக அங்கு வந்தடையும் பலரையும் பார்ப்பது, வேடிக்கையாக இருக்கும். என் திறன்பேசி, என்னை ஏற்கனவே தயார்படுத்தி, அமைதிப்படுத்திவிட்டது! எந்த நண்பரும், உறவினரும் செய்யாததை என்னுடைய திறன்பேசி செய்கிறது – அது என்னுடைய டென்ஷனைக் குறைப்பது, எனக்கு சரியாக பயண தகவல்களைக் கொடுப்பது, கடைசி நேர மாற்றங்களை முன்னமே அறிவிப்பது என்று எல்லாம், இதில் அடங்கும்.

இப்படி என் திறன்பேசி ஒரு புறமிருக்க, இன்னொரு புறம், சில அசட்டு சைனா வியாபாரங்கள், என்னை நெருங்குவதாக நினைத்து, எரிச்சலூட்டுவதையும் இங்கு சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சேவை அலி எக்ஸ்பிரஸ் (Ali Express) மற்றும் டீமு (Temu) என்ற சைனா நச்சரிப்புகள். இப்படி சைனாவை திட்டுவதைப் பார்த்து, நான் அமெரிக்க அரசாங்கத்திற்கு வேலை செய்வதாக நினைக்க வேண்டாம். இந்தச் சீனர்கள், அரவணைப்பில் பின்தங்கித்தான் இருக்கிறார்கள். 

தெரியாத்தனமாக அலி எக்ஸ்பிரஸில் என் வீட்டிற்கான சில சின்ன அலங்காரப் பொருட்களை வாங்கி விட்டேன். உடனே, “உங்கள் வரவேற்பறையை அலங்கரிக்க இதைவிட மலிவான விலை இருக்க முடியாது” என்று மின்னஞ்சல் அனுப்பி தொந்திரவு செய்து பார்ப்பார்கள். அது வெற்றி பெறவில்லையெனில், அடுத்த கட்டமாக, “ஜூலை மாதத்தில் கருப்பு வெள்ளி (Black Friday) விலைகள் சாத்தியமா?” என்று இன்னொரு நச்சரிப்பு. அதையும் திறந்து பார்க்காமல், குப்பையில் போட்டால், “நீங்கள் எங்கள் கடைக்கு வராமல் இருப்பதால், உங்களை மிஸ் பண்ணுகிறோம்” என்று டீனேஜ் காதல் வேறு! டீமு இதைவிட மோசம். “உங்களுக்காகவே ஒரு 30 டாலர்கள் காத்திருக்கிறது” என்று பொய் சொல்லவும் தயங்க மாட்டார்கள். 

கடந்த 4 பகுதிகளாக, ஒரு நுகர்வோரிடம் வியாபாரங்கள், அரசாங்கத்திற்கு உள்ள நெருக்கம் மற்றும் பிணக்கம் பற்றிப் பார்த்தோம். அடுத்த பகுதிகளில், சற்று சீரிஸாக, இந்தத் தரவு சார்ந்த உறவுகள் எப்படி பூதாகாரமாக உலக சமூகத்தின் பார்வையை மாற்றி, இன்றைய அரசியலையே மாற்றி வருகிறது என்று பார்ப்போம். என் பார்வையில், இந்த விவாதத்தின் இரு தரப்பிலும் குறைகள் உள்ளது. பொதுவாக, ஒரு தரப்பின் நல்முகத்தையும் இன்னொரு தரப்பின் தீயமுகத்தையும் பார்த்து, நாம் இந்த முக்கிய விஷயத்தை எடை போடக் கூடாது என்பதே என் வாதம்.

தரவு ஏக்கம்

மார்க் & ஜெஃப்: தரவின் தோழர்கள்
Exit mobile version