Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

சந்திரா தங்கராஜின் ‘மலையேற்றம்’

சந்திரா தங்கராஜின் மலையேற்றம் குறுநாவல் (எதிர் வெளியீடு) மங்களதேவி மலையேறும் ராசபாண்டியின் கதை – ஏழுவயதில் பிரிந்த தன் அப்பாவுடனான  பிளவுபட்ட உறவின் நினைவுகளில் விரிகிறது. பயணத்தில் ராசபாண்டி, தன்னை இழக்கின்றானா, அறிந்துகொள்கிறானா என்பதை நாவல் சித்தரிக்கிறது.  நாவலின் கதைக்களம் தேனி மாவட்டச் சூழலில்,  சரளமான வட்டாரவழக்கில் அமைந்துள்ளது.

ராசபாண்டி மலை பயணத்தின் புறக்காட்சிகள் வழியே நினைவுகளுக்குச் செல்கின்றான். நினைவுகளை மீட்டு எடுக்கிறான். நினைவும், யதார்த்தமும் மாறி, மாறி அமைகின்றன.  ஒரு மனிதனின் நிகழ்காலப் பார்வையை, உணர்வுகளைப் பெரிதும்  வடிவமைப்பது அவன் தனிப்பட்ட நினைவுகளே:  

அவை தன்னிச்சையாகத் தொடர்கின்றன; வெறுமையை நிரப்புகின்றன; சிதறிப்பரவுகின்றன;  மூழ்கித் திளைக்கத் தூண்டுகின்றன, வலுக்கட்டாயமாக மறக்கவும் விழைகின்றன. அவற்றுக்கு ராசபாண்டி நாவல் முழுவதும் தன்னை ஒப்புக்கொடுக்கிறான். 

கோபத்தின், வஞ்சத்தின் வடிவான அப்பாவை, அவன் பாதுகாக்கத் தவறிய, மென்மையே உருவான அம்மாவின் வாழ்வைக் குலைத்த அப்பாவை , தன் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணமாகக் கொள்கிறான். துரோகம் இழைக்கும் தன் மாமன்களிடம் பொறுமை காக்கிறான். வெறும் வார்த்தையாகக்கூட வன்முறை வெளிப்படக்கூடாது என்று வளர்த்த அம்மாவுக்காக அவர்களின் துரோகத்தை நம்ப மறுக்கிறான்.அவன்  மலை ஏற, ஏற  அப்பாவின் மீதான வெறுப்பும், கசப்பும் உச்சம் கொள்கின்றன. புலிக்கண்ணன் என அழைக்கப்படும் அவன் அப்பா முத்துக்கலுவனுடனான  கோபம் ஓர் உறுமலாக அவனுள் கனன்று கொண்டே இருக்கிறது. வழியில் தெரியும் பலவாறான காட்சிகள் அவன் அப்பாவைக் கொல்லப் பல வழிகளை மனதில் தோற்றுவிக்கின்றன. தானும் அம்மாவும் அனுபவித்த வன்முறையின் நினைவுகள் அந்த நெருப்பை ஊதி அணையாமல் இருக்கச்செய்கின்றன.   

அதே சமயம் அவன் அம்மாச்சியும், தாத்தா சின்னமாயனும் அவர்களை ஏற்று, அரவணைத்து,  பாதுகாத்த இனிய நினைவுகளும் தோன்றுகின்றன. அப்பா இல்லாத பெயரனுக்கு,  தாத்தா சின்னமாயன் விவசாயம், மாட்டு வியாபாரம் என எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்.  அவனை நிராதரவாக விட்டுச் செல்லக்கூடாது எனத்தவிக்கிறார். எப்பொழுதும் நிமிர்வுடன் இருக்கும் அவன் அம்மாச்சி அமராவதி, தன் மகன்களுக்குச் சொத்துக்களை எழுதித்தந்த பிறகு,  அவர்கள் தண்ணீர் பாத்தியதை கொடுக்காததால் தன் ஒரே மகளின் நிலம் தரிசாகும் நிலை கண்டு, பேசாதவளாக,  உண்ணாமல் அடங்குகிறாள். 

வைராக்கியத்துடன் அவனை வளர்த்த அம்மாவை, கோபக்குறி இல்லாமல், குணத்துடன், அவன் அப்பாவின் நிழலோ, சாபமோ படாமல் காத்து, கண்ணுக்குள்ளேயே தன்னை காத்து வளர்த்த அம்மாவையும்  இழக்கிறான். ஒரு குற்றமும் செய்யாத , வாழ்நாள் முழுவதும் துயரப்பட்டுச் செத்துப்போன அம்மா. எல்லாவற்றிற்கும் மூலகாரணம் அவன் தந்தை. இழந்த இளமைக்கும், அம்மாவின் கண்ணீருக்கும், வாழ்விற்கும், ஒரே ஆறுதலாக இருக்கும் மாமன் மகள் மீனாட்சிக்காக, வேறு வழி இன்றி செய்வினை வைத்த மருந்தைச் சாப்பிட்டவன் போல, அவன் தந்தையுடன் செல்ல ஒத்துக்கொள்கிறான். துன்பம் சூழ்ந்த கணங்களிலும், மனித உள்ளம்  முரணாக, நினைவுகளை தன் நினைவுப்பெட்டகத்தில் இருந்து மீட்டெடுக்கிறது.  

நினைவுகளை மீட்டெடுப்பது என்பது கதையின் முன்னகர்வில் ஒரு திட்டமிட்ட உத்தி. ஒரு கதாபாத்திரம் பின்னோக்கிய நிகழ்வுகளை நினைக்கும் பொழுது, கதையின்  ஓட்டம் ஓர்  இடைவெளியை உருவாக்குகிறது. இந்த இடைவெளிக்குள், எழுத்தாளர் கதையின் பின்னணி , கதாபாத்திரத்தின் உள்நோக்கங்களை வெளிப்படுத்தலாம். நிகழ்கால  நிகழ்வுகளை மறுவரையறை செய்யலாம். அல்லது உரைநடை பாணியையே முற்றிலும் மாற்றலாம். இந்தக் கட்டமைப்பு நிஜ நினைவுகளின் நேர்கோடற்ற தன்மை, காலக்கோட்டில் பொருந்தாத்தன்மை ஆகியவற்றைக் கட்டுக்குள் வைக்க வாய்ப்பளிக்கிறது. இதை மாற்று வழியாக, இரகசியமாக இலக்கை நோக்கி அழைத்துச் செல்லக் கதைசொல்லி உபயோகிக்கிறார். 

ஓர் ஓவியர் முதலில் கோடுகளால் ஓவியத்தை வரைந்து, பிறகு ஒவ்வொரு தூரிகை வீச்சிலும் நிறமும், ஒளியும், ஆழமும் சேர்த்து, மெல்ல மெல்ல ஓவியம் உயிர் பெறுவது போல், நினைவுகளும், யதார்த்தமும்  கதைக்கு அடுக்கடுக்காய் உயிரூட்டுகின்றன. இந்நாவலின் உருவகங்கள் உயிரோட்டம் அளிக்கின்றன, ராசபாண்டியின் தனிமையின் சுவர்கள் இயற்கையின் அழகில் பாளங்களாய் உதிர்கின்றன.  அப்பாவின் அருகில் போவதும் வருவதுமாய் இருக்கும் மஞ்சள் பட்டாம்பூச்சிகளை அவன் அம்மாவாகக் காண்கிறான். ‘தேன் இருக்கும் லட்சம் பூக்களை விட்டுவிட்டுக் காய்ந்த மரக்கட்டைகளில் அவை எதைத் தேடுகின்றன’ என வியக்கிறான். அப்பாவைப் பிரிந்த ராசபாண்டியின் நினைவுகள் தாவித்தாவி அவரிடமே செல்வதுபோல உள்ளது. 

குறுகிய காலத்தில் மாட்டு வியாபாரத்தில் வெற்றி கொள்ளும் ராசபாண்டி செல்லும்  மாட்டுச் சந்தையின் விவரங்களோ,  மாடுகளின் வகைகள் பற்றிய விவரணைகளோ குறைந்தே காணப்படுகின்றன. கி.ரா வின் கிடை போன்ற குறுநாவலில்,  செம்மறி ஆடுகளின் நிறம் பற்றிய விவரணை, அவ்வண்ண ஆடுகளை நம் கண் முன்னே நிறுத்திவிடும்.  இன்னும் சென்றிருக்கலாம் என்று தொன்றுவதை தவிர்க முடியவில்லை.

ராசபாண்டி, கோபத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுக்கலாம் – அது என்றுமே அவன் அம்மா அஞ்சிய மிருகம் அவனை ஆட்கொள்ள விடுவது, அல்லது தன்னை கட்டி இருக்கும் தளைகளிலிருந்து விடுதலை அளிப்பது.  அந்த உச்சம் ஒரு சிறுத்தையை எதிர்கொள்ளும் தருணத்தில் நிகழ்கிறது. அவனுள் இருக்கும் இருண்மையின் உருவமான கருஞ்சிறுத்தையையும்,  அதன் ஒளிரும் மஞ்சள் கண்களைத் தன்னுள் எரிந்து கொண்டிருக்கும் கோபமாகவும் எதிர்கொள்கிறான்.

ஒருவன் ‘நான்’ என உணர்வதற்கு அடிப்படையாக இருப்பது நினைவே. நினைவுகள் வழியாகத்தான் நான் என்பது சுய அடையாளமாக, தன் வரலாறாக ஒருவனுக்கு திரள்கின்றது. ஒருவன் தன்னுணர்வால் தேர்ந்தெடுக்கும் நினைவுகள் அவனுடைய இன்றைய வாழ்வனுபவங்களை உருவாக்குகின்றன. உவப்பானவையும்,  உவப்பல்லாதவையும் சேர்ந்தெழுகின்றன. எனவே நினைவு என்பது பிரச்சினையும் கூட, அதற்கான தீர்வும் அங்கேதான் நிகழ வேண்டும். நினைவுகளை விலகி நின்று நோக்கும்போது,  அவற்றை நேர் எதிர்கொள்வதற்கான துணிவோ, கடந்து சென்று விடுதலை பெறுவதோ தவிர்க்க முடியாது ஆகின்றது. அப்படிப் பார்க்கையில் இந்த புனைவினை நினைவுகளுக்கும், மதயானை போல் தன்னைத்

துரத்தும் வாழ்வின் துயரத்திற்கும் இடையே ஊசலாடும் ஒருவன் தன்னை கண்டடையும் பயணம் என்றும், உறவுகளின் அரவணைப்பையும், சாபத்தையும்  காட்டும் குறுநாவல் என்றும் சொல்லலாம்.

Exit mobile version