- ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை
- ஹைக்கூ – ‘அ’ (あ) முதல் ‘ன்’ (ん) வரை – 2
- புறாவின் அழைப்பு
- காகமும் அழகு
- வாளைத் துறந்த சாமுராய்
- நடவுப் பாடல்
- அறுந்த பட்டம்
- கிளைக்கு உயரும் மலர்
- படுக்கை வரையில் பனி
- பிள்ளையின்மை
ஹைக்கூ 02:
பெண்ணைத் தீண்டிய காற்று
வசந்தகாலக் காற்று
அழகியைத் தீண்டியது
முகம் சுளித்தாள்
கவிஞர்: கியோதாய் (1732-1793)
ஹாரூ கசெ னி
ஓசரூரூ பிஜ்யோ னொ
இகரி கன
春風に
おさるる美女の
怒りかな
அவள் தன்னை அலங்கரித்துக்கொண்டு வெளியே புறப்படுகிறாள். வழியில் காற்று வீசுகிறது, அதன் வேகம் அவளைத் தள்ளுகிறது. அவளுடைய உடை காற்றில் படபடத்தும் மேனியில் ஒட்டியும் அவள் வீட்டிலிருந்து அணிந்த கோலத்திலிருந்து மாறுகிறது, கூந்தல் கலைகிறது. காற்று வீசுவது வசந்தகாலத்தில் நடப்பதுதான் என்றாலும் அவளுக்கு அந்த நேரத்தில் வீசிய காற்று தன் அலங்காரத்தைக் குலைத்தது பிடிக்கவில்லை, கோபப்பட்டு முகம் சுளிக்கிறாள்.
இதனைக் கவிஞர் கியோதாய் ஹைக்கூவில் காட்சிப்படுத்துகிறார்.
முதல் அடி 春風に ஹாரூ கசெ னி.
春 ஹாரூ இது காஞ்சி எழுத்துருவில் உள்ளது. இதனை ஹிராகனா வடிவில் எழுதினால் は ஹா, る ரூ என இரண்டு எழுத்துகள் அல்லது இரண்டு அசைகள் எனலாம். முன்பு சொன்னதுபோல் ஜப்பானிய ஹைக்கூக்களில் ஒவ்வொரு எழுத்தும் ஒரு அசை. ஹாரூ – வசந்தகாலம் அல்லது இளவேனிற்காலம்.
சீன உணவு வகை ‘ஸ்பிரிங்க் ரோல்’, இது இளவேனிற்கால உணவு என சொல்லப்படுகிறது. இதனுடைய ஜப்பானியப் பெயர் ‘ஹாரூமகி’. ஹாரூ = இளவேனில், ம+கி = சுருட்டப்பட்ட. காலத்துடன் தொடர்புடையது ஸ்பிரிங்க் ரோல் உணவு.
風 கசெ, காஞ்சி எழுத்துருவில் இருக்கும் இதனைப் பிரித்தால், か க, ぜ செ(ze), இரண்டு ஹிராகனா எழுத்துகள். இதன் பொருள் காற்று.
に ‘னி’ இது ஹிராகனா வடிவம். ‘ஆனது’ என்னும் வினயெச்சத்தைக் இங்கு குறிக்கிறது.
春風に – はるかぜに – ஹாரூகசெனி – இளவேனிற்காற்றானது.
இரண்டாம் அடி おさるる美女の ஓ ச ரூ ரூ பி ஜ்யோ னொ.
おさるる நான்கு எழுத்துகளும் ஹிராகனா வடிவில் உள்ளன. ஓ ச ரூ ரூ, ஓசரூரூ தொந்தரவு செய்யப்படுவதைக் குறிக்கிறது. அழுத்தம் உண்டாவதும் சில இடங்களில் பொருள்படும்.
美 காஞ்சி வரிவடிவம் び பி(B) என்னும் ஹிராகனா வடிவம், இதன் பொருள் அழகிய. 女 காஞ்சி வடிவம் じょ ஜ்யோ என்னும் ஹிராகனா வடிவம், இதன் பொருள் பெண். ஜ்யோவில் ‘ஜி’யின் அருகில் உள்ள ‘யோ’ அளவிற் சிறியதாக இருக்கும். ஜியும் அளவிற் சிறிய யோவும் அருகருகே எஉழ்தப்படும்போது அது ஜ்யோ என ஒலிக்கும். 美女 – び じょ – பிஜ்யோ – அழகிய பெண் – அழகி.
の – னொ, ஹிராகனா வடிவில் உள்ள இது ‘இன்’ என்னும் வேற்றுமை உருபாகவும் பயன்படும். சில இடங்களில் இன்னொரு வேற்றுமை உருபுடனும் சேர்ந்து பயன்பாட்டில் வரும். இந்தக் கவிதையில் ‘இன்’ என்ற பொருளில் குறிப்பிடலாம்.
おさるる美女の – おさるるびじょの – ஓசரூரூ பிஜ்யோ னொ – அழுத்தியது அழகியின்.
மூன்றாம் அடி 怒りかな இகரி கன.
怒り இது ஒரு காஞ்சி வடிவமும் ஒரு ஹிராகனா வடிவமும் சேர்ந்து அமைந்திருக்கும் சொல். 怒 இக(ரூ) என்னும் காஞ்சி வரிவடிவம் கோபத்தைக் குறிக்கும். 怒り இக ரி என வந்தாலும் கோபத்தைக் குறிக்கும். 怒 காஞ்சி – いか ஹிராகனா – இ க. り ஹிராகனா – ரி. 怒り – いかり – இகரி – கோபம். かな முன்பு அறிந்தது போல, இந்த ‘க ன’ அசைச்சொல்லாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
怒りかな – கோபம்.
ஹாரூ கசெ னி
ஓசரூரூ பிஜ்யோ னொ
இகரி கன
春風に
おさるる美女の
怒りかな
வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தால்
வசந்தகாலக் காற்றானது
தள்ளியது, அழகிய பெண்ணின்
கோபம்
கவிதையை உள்வாங்கி மொழிபெயர்த்தால்,
வசந்தகாலக் காற்று
அழகியைத் தீண்டியது
முகம் சுளித்தாள்
(தொடரும்)
