ஒரு வீரன்: இந்த காத்ரசேவகன் (bodyguard) எங்கே ? இளவரசி வெளியில் போக வேண்டுமாம். புஷ்பதந்தக, நீ கண்டாயா? என்ன சொல்கிறாய்? அவன் குடித்து விட்டு மயங்கி கடை வாசலிலேயே கிடக்கிறானா? அடடா? அங்கேயே போய் பார்க்கிறேன், இவனெல்லாம் அணுக்க சேவகனாம், இளவரசியை பாதுகாப்பானாம். ம் .. என்ன செய்ய? அரசு பணி, கையில் காசு. கூடவே இந்த கெட்ட பழக்கமும் வந்து விடுகிறது.
குடித்து சிவந்த கண்களுடன் தள்ளாடியபடி வருகிறான் அந்த அணுக்க காவலன்.
( சம்ஸ்க்ருத நாடகங்களில் பெண்கள், அரசு ஊழியர்கள் ப்ராக்ருதம் என்ற வட்டார மொழியிலேயே பேசுவதாக அமைந்துள்ளது. அவர்களின் உரையாடல்கள் மூலம், நடந்த விஷயங்களை அறிவிப்பர்.)
காவலன்? ஆஹா, மதம் பிடித்து புத்தி மயங்கும்வரை கள்ளைக் குடிப்பவர்கள் தான் பாக்யசாலிகள். அவர்கள் வாயில் மட்டுமல்ல, உடல் முழுவதும் அதில் குளித்தவன் போல இருப்பவன் அதை விட அதிக பாக்யம் செய்தவன். குடித்ததை வைத்தே ஒருவனை அடையாளம் சொல்வது இன்னும் மேல். என் புத்ர, தாரா:- மனைவி மக்கள், இதை விரும்ப மாட்டார்கள். அவர்களா பாக்யசாலிகள்? என் மாமனாரிடம் சொல்கிறேன். இப்படி குடித்த குற்றத்திற்கு தண்டனை கொடுப்பாராம். அதோ, தண்டத்தை வைத்துக் கொண்டு நிற்கிறாரே ,அவர் தான் என் மாமனார்.
ராஜ ஸேவகன்: ஏய், நீ எப்படி இங்கு வந்தாய்? உன் வேலை பத்ரவதியிடம் அல்லவா? எவ்வளவு நேரம் தேடுவேன்? இளவரசி வெளியில் போக பத்ரவதி (அந்த பெயருடைய இளவரசிக்கான யானை வாகனம்) நீயானால் இங்கு குடித்து விட்டு கூத்தடித்துக் கொண்டிருக்கிறாய்.
அணுக்க சேவகன்: உளறுகிறான். நான் மட்டுமா, அவளும் பித்து பிடித்தவள் போலத்தான் இருக்கிறாள். வந்த மனிதனும் பித்தன். நீயும் தான் பித்தனைப் போல யானையைத் தேடுகிறாய். நான் மடியில் மறைத்தா வைத்துக் கொள்வேன்.
ராஜ சேவகன்: அரண்மனையில் தேடுகிறார்கள். நீ தானே பொறுப்பு, உன்னை கூட்டி வரச் சொல்லி ஆணை. என்ன செய்வாயோ, சீக்கிரம் பத்ரவதியுடன் வந்து சேர்.
அ.சே: நான் பூ மாலை, மணிகள் அனைத்தையும் போட்டு அலங்காரம் பண்ணி தயாராக இருந்தேன்.
ரா.சே: நீராட கிளம்பியவர்கள் ஏறி செல்லப் போகிறார்கள், எதற்கு மாலையும், மணியும்?
அ.சே: அது தானே, ஏனோ உடன் படாமல் சண்டித் தனம் செய்தாள். லேசாக அங்குசத்தால் குத்தினேன்.
ரா.சே: குத்தினாயா? ஏன்? பத்ரவதி சாதுவான யானை, அதை ஏன் குத்தினாய். இதற்கு தண்டனை கிடைக்கும் தெரியுமா?
அ.சே: எனக்கு ஏன் தண்டனை கிடைக்கும். குத்தினவன் நான் இல்லையே. என் கையில் சுரா (கள்) பாத்திரத்தைக் கொடுத்து விட்டு கண்டில சௌண்டிகி ( ஒரு சேடி) வந்தாளே அவள் தான் குத்தினாள்.
அ.சே: நான் சொன்னேனே, இது (பத்ரவதி) தான் எனக்கு வாழ்வே. (இதை பராமரிப்பது தானே என் தொழில்) அதற்குத் தானே ஊதியம் பெறுகிறேன். இதை அழித்து விடாதே என்றேன்.
ரா.சே: ஆ இது என்ன சத்தம்?
அ.சே: ஆ, யார் யாருக்கு மதம்? மதம் பிடித்துவிட்டதா? நானும் தான் மகா மந்திரியின் கட்டளைப் படி இங்கு சேவகம் செய்கிறேன். மற்றவர்களுக்கும் தெரிவித்து விடுகிறேன். வழியில் அரசனின் வீரர்கள் க்ருஷ்ண சர்ப்பம் போல திரிகிறார்களே எப்படி மறைந்து செல்வேன்? ஹே, வீரர்களே, என்னைச் சார்ந்த நண்பர்களே, கேளுங்கள், கேளுங்கள்.
அ.சே. கண்டில சௌண்டிகி அழைத்துக் கொண்டு சென்றாளே, அவளுக்கு அடங்காமல் பத்ரவதி ஓடி விட்டது.
ரா.சே. எப்படி சொல்கிறாய்?
அ.சே. எங்கள் அரசன் உதயணன், வாசவதத்தாவையும் அழைத்துக் கொண்டு இந்த நகரத்தை விட்டு வெளியேறி விட்டார். எங்கள் அரசர் தடங்கலின்றி போய் சேர வேண்டும். கடவுளே. இந்த கள்ளைக் குடித்து சமயத்தில் நான் புத்தியை இழந்து தடுமாறிக் கொண்டு இருந்து விட்டேனே. கடமையை மறக்கச் செய்யும் இந்த மது பழக்கம்.
தன் தலைவனின் நன்மைக்காக, அவருடைய தயவால் உண்ட உணவையும், வாழ்வையும் ஏற்றுக் கொண்ட பின் அவருக்கு பாதகமாக செயல்களைச் செய்தால் நரகம் தான் வாய்க்கும் என்பதை அறியாதவனா? ஆனால், கௌடில்யர் அர்த்த சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறார், தெரியுமா ? போர் வீரனை உத்சாகமூட்டும் விஷயங்கள் எவை என்று சொல்லி வரும் சமயம், அப்படி தன் அரசனுக்காக போரில் ஈடுபட்டு உயிரிழந்தவனுக்கு என்ன லாபம்? என்ற கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறார். “सा ते गतिर्यां शूराणाम्“ பர லோகத்தில் ஸூரர்கள் அடையும் தகுதியை போரில் அரசனுக்குக்காக மரிப்பவனும் அடைவான் என்பதாக.
(இந்தமேற்கோள் சொன்னதிலிருந்து பாஸ (bhasa) கவி கௌடில்யருக்கு பிந்தியவர் என்பது ஒரு ஊகம் என்பர்)
முதன் மந்திரி யௌகந்தராயன் எங்கே? இதோ இருக்கிறாரே. இவர் தான். தன் கையில் கூர்மையான வாளை வைத்திருப்பார். அது வெளியில் தெரியாது. பார்வைக்கு புத்தி பிசகியவன் போல இருப்பார். உண்மையில் அவருடைய உருவம் பார்ப்பவர்களை மரியாதையாக நெருங்கச் செய்யும். பொன் நிற நிறமுடையவர். இவரது ஆடையோ புலித் தோல் போல எதிரிகளின் ஆயுதங்களை உடலில் படாமல் தடுக்கும் கவசம். (फलकं-கவசத்தின் பெயர்). எந்த செயலானாலும் இவர் கை ஓங்கி இருக்கும். உடல் மேல் அள்ளிப் போட்டுக் கொண்டது போல பல துணிகள், ஆடைகளாக அல்லது மேல் வஸ்திரம் எனும் போர்த்திக் கொள்ளும் துண்டுகள், வெண்ணிற இடுப்பு பட்டை (பெல்ட்) மின்னல் போன்ற வேகம், உதிக்கும் சந்திரனின் ஒளி போன்ற உள்ளத்தின் கருணை வெளிப்பட இருப்பவர், தானங்கள், கொடுப்பதில் மேகம் போன்றவர் – குறைவின்றி தருபவர். எங்கள் தலைவர் இவர். அஹோ! வருந்துகிறான். மிகப் பெரிய யுத்தம் வருமோ.
யுத்தம் என்று வந்தால் பெரிய யானைகள், அதன் மேல் இருக்கும் வீரர்கள் மடிவார்கள். குதிரை வீரர்கள் குதிரையுடன் வீழ்வார்கள். கூட்டம் கூட்டமாக கால் நடை வீரர்கள் மடிப்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? முஹூர்த்த நேரத்தில் என்ன சேதம், எத்தனை மரணங்கள், கடவுளே. கை கால் உடைந்து, தங்கள் மேல் விழுந்த தன் பக்கத்து யானைகளின் தந்தமே குத்தி கிழிக்க விழுவோர், ஆயுதங்கள் கை நழுவ திகைத்து நிற்பவர், நகரக் கூட முடியாமல் இவைகளுக்கிடையில் அகப்பட்டுக் கொண்டவர்கள், ஹா திக், ஹா, பரிதாபம், மகா மந்திரி யௌகந்தராயனை என்ன செய்வார்களோ, அவர் என்ன செய்வார். முடிந்த மட்டும் யுத்தம் வராமல் காக்கவே முயன்றார். அவருக்கு ஏதாவது நேர்ந்தால் நானும் அழிந்தேன். (போகிறான்)
அரச சேவகன்: இது என்ன? உஜ்ஜயினியா? கௌசாம்பியா? இங்கு தென்படுபவர்கள் அனைவருமே வத்ஸ ராஜனின் படை வீரர்கள். ப்ராகாரங்களும், தோரணங்களும் மட்டுமே உஜ்ஜயினி அரச கொடிகளுடன் உள்ளன.
குரல்: நகருங்கள், வழி, வழி, யௌகந்தராயனை சிறை பிடித்து அழைத்துச் செல்கிறோம் வழி விடுங்கள்.
கூட்டத்தில் ஒருவன்: பாவம், இவன் கத்திக் கத்தி குரலே கம்மி விட்டது. யாருமே இவனை கேட்பதாகத் தெரியவில்லை. கூட்டம் அலை மோதுகிறதே. கோலாஹலமாக மக்களின் குரல் எதுவுமே தெளிவாகத் தெரியவில்லை.
இரண்டாமவன்: எதற்கு இவரை பிடித்தனர்? இளவரசி காணாமல் போய் விட்டாள் என்றனர். எப்படி? நம்மை எதற்கு விரட்டுகிறான்?
முதல்வன்: வத்ஸ ராஜ்ய முதல் மந்திரி யௌகந்தராயனை சிறை பிடித்து விட்டார்களாம். சற்று முன் பெரிய யுத்தமாம். இவர் தன் படை வீரர்களுடன் தீரமாக போரிட்டாராம். உஜ்ஜயினி படை பெரிது. தாக்குப் பிடிக்க முடியவில்லை போலும். அதனால் தன் வீரர்களை காக்க தானே சரணடைந்து விட்டார் போலும். இல்லாவிட்டால், மகா மந்திரி யௌயகந்தரயனை நம் வீரர்கள் சிறை பிடிப்பதாவது? நெருங்கவே பயப்படுவார்கள். விஜய சுந்தரன் என்ற யானையின் தந்தம் குத்தி விழுந்தாராம். மனித ப்ரயத்னத்தில் அவரை தோற்கடிக்கவில்லை.
அரச சேவகர்கள் கட்டியம் கூறியபடி வருகிறார்கள்.
நகருங்கள், மகா மந்திரி யௌகந்தராயனை பார்த்ததே இல்லையா? கூட்டம் போடாதீர்கள். ஒருவன், அவரிடமே பரிகாசமாக, ஆர்ய, வத்ஸ ராஜனையும் பிடித்து விட்டோம்.
வத்ஸ ராஜ சேவகர்களும் மாறு வேடத்தில் நடமாடுகிறார்கள். (தங்களுக்குள்) இது என்ன உஜ்ஜயினி நகரமே பொலிவில்லாமல் இருக்கிறது. ப்ராகாரங்களில் தோரணங்களோ, வண்ண மயமான கொடிகளோ கூட இல்லை. நம் கௌசாம்பி நகரம் குதூகலமாக இருக்குமே. வீதிகளில் நடந்து போகவே சுகமாக இருக்கும்.
ஒருவேளை நம் நகரில் தான் இருக்கிறோமா. சுற்றிலும் நம் அரசனின் படை வீரர்களே தென்படுகிறார்களே
மகா மந்திரி யௌகந்தராயனை. சிறை பிடித்து, கைகளைக் கட்டி ஒரு பலகையில் வைத்து அழைத்து வருகிறார்கள். நகருங்கள், நகருங்கள்.
ஒரு நகரவாசி: யாரை சிறை பிடித்திருக்கிறார்கள்.
இரண்டாம் நகரவாசி: உன்மத்தனாக வீதியில் திரிந்து கொண்டிருந்தானாம். யாரென்று தெரியவில்லை.
யௌகந்தராயனை, கைகளைக் கட்டி, இரு வீரர்கள் ஒரு பலகையில் அமர்த்திக் கொண்டு வந்தபடி, வழி, வழி என்று சொல்லிக் கொண்டே ஓட்டமும் நடையுமாக செல்கிறார்கள்.
யௌகந்தராயன், வீரர்களிடம்.- நான் நடந்தே வருகிறேன். இறக்கி விடுங்கள். கைகள் தான் கட்டியிருக்கிறதே, ஓட மாட்டேன். எனக்கு மனைவி மக்கள் என்ற பந்தமும் இல்லை. காட்டில் ரமணீயமான அருவிகளின் அருகில் வாசம். சுத்தமான குளிர்ந்த தண்ணீர், தாபத்தைப் போக்கும். என் புண்ய பாபங்கள் தீர்ந்தவுடன் தான் மரணம் அடைவேன் என்பது நிச்சயம். எனக்கு யாரிடமும் விரோதம், பயம், அவமானம் எதுவும் இல்லை. அனைத்தும் ஒன்றே. முடிந்தவரை பல இடங்களில் வெற்றியடைந்தோம். எதிரிகளின் செல்வங்களை கப்பமாக அடைந்தோம். எங்கள் அரசனும் மகா ராஜாவானான். இனி ஒரு செயல் தான் மீதியுள்ளது. வத்ஸ ராஜனை மீட்டு, என் தலைவனின் துக்கத்தை தீர்த்து, ஆஹா வெற்றி, என்று பெருமித்தோடு, தலை நிமிர்ந்து வாழ்வேன்.
எனக்கு ப்ரத்யோத ராஜாவிடம் என்ன விரோதம்? எதுவுமில்லை. ஏற்கனவே புத்தி பேதலித்து உன்மத்தன் ஆனவன் நான். என்னை பயமோ, அவமானமோ எதுவும் பாதிப்பதில்லை. நீதி நியதிகளை கடை பிடித்து, தேவையான இடத்தில் பணிந்தும், முடிந்த இடத்தில் வீரத்தைக் காட்டியும் என் ஆயுதங்களாலும் ராஜ சேவகத்தைக் குறைவறச் செய்தேன். எதிரிகளின் செல்வம், வெற்றிகள், உடன் இருந்த நண்பர்களின் துன்பங்கள், இவை யாவும் தற்சமயம் என்னிடத்தில் எந்த உணர்ச்சியையும் ஏற்படுத்துவதில்லை. அனைத்தையும் தியாகம் செய்து விட்டேன். என் தலைவன் வத்ஸ ராஜனின் வெற்றி – அது தான் என் குறிக் கோள். அவர் மகான். அவரை காப்பாற்றி விட்டேன். வெற்றி வீரனாகவே ராஜ குலத்தில் தான் என்றாலும் சந்தோஷமாகவே இருப்பேன். ( ராஜ குலம்-சிறை)
சேவகர்கள்; நகரு, நகரு வழி விடு
யௌ: மகானை தரிசிக்க வந்த பொது மக்கள். அவர்களை ஏன் விரட்டுகிறாய்? என்னை பார்க்கட்டும். அதனால் என்ன? என் அரசனிடம் உள்ள பற்றினால், தெரிந்தே ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டவன். அமைச்சர் பதவி என்றால் ஏதோ மதிப்பு மிக்கது, பல வசதிகள் தானே வந்து சேரும் என்று எண்ணி அதை தமக்கும் வேண்டும் என்று ஆசைப் படுபவர்கள் தெரிந்து கொள்ளட்டும். இது எவ்வளவு கடினமானது என்று. என் நிலையைப் பார்ப்பவர்கள் யாருமே இனி அமைச்சராக விரும்ப மாட்டார்கள்.
சேவகன்: இது என்ன நீங்கள் மகா மந்திரி யௌகந்தராயனைப் பார்த்ததே இல்லையா? எதற்கு கூட்டம் போடுகிறீர்கள். நகருங்கள்.
யௌ: என்னை நன்றாக அறிவார்கள், பார்த்தும் இருக்கிறார்கள். ஆனால் இந்த நிலையில் அல்ல.
உன்மத்தனாக, அதுவும் உண்மையா, வேஷமா என்று அறிய ஆவலாக இருக்கலாம். வீதிகளில் சுற்றி அலைந்த சமயம் கவனித்திருக்க மாட்டார்கள். என்னை அறிந்தவர்களின் மனதில் ஒரு வடிவம் இருந்திருக்கும். நேர்மையான. திறமையான மந்திரி என்று.
என் செயல்களை கேள்வி பட்டவர்கள், நான் எதிரி வசம் ஆனதைக் கூட தவறாகவோ, மதிப்புக் குறைவாகவோ நினைக்க மாட்டார்கள். கேளுங்கள் ஜனங்களே! சுகம் என்பது என்ன? மனதுக்கு பிடித்தமானது சுகம். அழகாக, மனதை கவரும் படி இருந்தால் சுகம். அதிலிருந்து நழுவி விழுந்தால் துக்கம். அது தெய்வச் செயல். தர்மங்கள் நிறைய செய்திருக்கிறேன் என்று தானே நினைத்துக் கொள்வது பேதமை.
தனக்குள்: நான் செய்ய வேண்டியதை செய்து விட்டேன் என்று நம்புகிறேன். அதனால் என் மனம் கவலையின்றி இருக்கிறது. ப்ரத்யோதன் தானே வந்து விரோதியானான். எனக்கு யாரிடமும் விரோதமும் இல்லை. அதனால் தான் உன்மத்தன்- புத்தி பிசகியவனாக நடிக்கவும் முடிந்தது. புத்தி பிசகியவனை சமூகத்தில் எப்படி அவமதிப்பார்கள், எனக்கு அவை உறைக்கவேயில்லை.
ஏதோ ஒரு வாசலில் நுழைகிறார்கள்.
ஒரு சேவகன்: (அவரிடம் பரிகாசமாக) ஆர்ய! வத்ஸ ராஜனையும் பிடித்து விட்டோம்.
யௌ: இது உண்மையாக இருக்க முடியாது.
வெகு நேரத்திற்கு முன்பே எதிரி நாட்டிலிருந்து தப்பி விட்டார் என்று கேள்வி. பத்ரவதியில் ஏறிக் கொண்டு இன்னேரம் அடர்ந்த காடுகளை கடந்து சென்று, விந்த்ய மலைக்கு மறுபுறம் சென்றிருப்பார். அவர் வேகம் தெரியுமா உங்களுக்கு. வினாடி நேரத்தில் மறைந்து விடுவார்.
சேவகன்: நலாகிரியில் அதை விட வேகமாக பின் தொடர்ந்து சென்று மகாசேன வீரர்கள் பிடித்து விட்டனராம்.
யௌ: யானைகளை பழக்குவதில் தான் இருக்கிறது அதன் சாமர்த்யம். நலாகிரி பெரிய யானையாக இருக்கலாம் வேகமாக ஓட பயிற்சி பெற்றுள்ளதா?
ஒரு சேவகன் வந்து கொண்டே: அமைச்சர் ஆணை. இவரை ஆயுத கிடங்கிலேயே வைத்திருக்கச் சொன்னார். ஊருக்குள் ஒற்றர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறதாம்.
இதோ ஆயுத கிடங்கு வந்து விட்டது. உள்ளே செல்வோம்.
சேவகன்: ஆர்ய! அமைச்சர் இவரது கை கட்டுகளை அவிழ்த்து விடச் சொன்னார். .
யௌ: அப்பாடி. நல்லது என் கட்டுகளை அவிழ்த்து விட்டாய். (தனக்குள்). பரத ரோஹகன் என்ற அமைச்சர் என்னை காண விரும்புகிறார் போலும்.
பரதரோஹகன் வருகிறார். வந்து கொண்டே, இங்கு யார் யௌகந்தராயன் என்பவர்? வத்ஸ ராஜனின் மதி மந்திரி என்றார்கள். வத்ஸ ராஜனைத் தேடிக் கொண்டு வந்தாராம். மிதி பட்ட பாம்பு போல ரோஷத்துடன் வஞ்சனையாக அவரை காப்பாற்ற வந்திருக்கிறாராம். நான் இன்னும் அவரை சந்திக்கவே இல்லையே. எங்கு இருக்கிறார் ?
ஸேவகன்: ஐயா, இதோ இருக்கிறார்.
இருக்கட்டும். அவரும் என்னை பார்க்கவே ஆவலாக இருப்பார். போய் சந்திக்கிறேன்.
அருகில் சென்று: நீங்கள் தான் யௌகந்தராயனா?
யௌ: ஆம்.
பரதரோஹகன்: யௌகந்தராயன் என்ற பெயரை கேட்டிருக்கிறேன். என் நல்ல காலம். இப்பொழுது நேரில் சந்திக்கிறேன். அவரோ, தன் அரசனுக்காக தன்னால் முடியுமா என்று கூட யோசிக்கவே மாட்டார். என்ன கடினமான செயலானாலும் அரசனைக் காக்க என்றால் யோசிக்காமல் இறங்கி விடுவார். வஞ்சனையோ, வீரமோ அவர் வழி மற்றவர்கள் அறிய முடியாதது என்பர். இப்படி பிடிபட்டது தான் புதிது. அவர் முன் கூட்டியே வரக் கூடிய இடர்களையும் நினைத்து தான் திட்டமிடுவார் என்பது பிரசித்தம். மிதி பட்ட பாம்பின் ரோஷம் போன்றது அவரது சிறை பிடித்தல். தலை வணங்கி அறியாதவர். இதை எப்படி எடுத்துக் கொள்வார். ரோஷமோ, அவமானமோ, பொதுவாக நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் உடையவராகவே அறிந்திருக்கிறேன். இந்த சந்திப்பு எப்படி அமையுமோ? போய் பார்க்கிறேன். நீல யானை என்று வஞ்சித்து நமது அரசன் வத்ஸ ராஜனை பிடித்தான். அதன் எதிர் வினையை நாம் இதோ காண்கிறோம்.
சேவகன்: ஆர்ய! இப்படி வாருங்கள்.
அருகில் வந்து: ஆர்ய, யௌகந்தராயரா, இது வரை பெயர் தான் கேள்வி பட்டிருக்கிறேன், என் நல்ல காலம் இதோ உண்மையில் பார்க்கிறேன்.
யௌ: நானும் அவ்வாறே. உங்கள் பெயரை கேட்டிருக்கிறேன். என் நல்ல காலம் இதோ நேரில் காண்கிறேன். தன் தந்தையை வதைத்த த்ருஷ்டத்யும்னனை அஸ்வத்தாமா கண்டது போல. வஞ்சனையால் யானையை முன்னிட்டு எங்கள் அரசனை சிறைப் படுத்தினீர்கள். இதில் என்ன பெருமை? நீங்கள் யானையை காட்டி சால வ்ருக்ஷத்தின் அடியில் செய்த வஞ்சனை. எங்கள் அரசன் தன் புஜ பலத்தால் பூமியை ஜயித்தவன். நீங்கள் யானையை வைத்து செய்த அதே செயலை நாங்கள் வீணையால் செய்தோம். உங்கள் தேச இளவரசியை அபகரித்தோம், இரண்டும் சமமாகி விட்டனவே. இனி என்னை குற்றம் சொல்வானேன்.
பரதரோஹகன்: ஆஹா! யௌகந்தராயன! நல்ல மதி மந்திரி நீங்கள். அக்னி சாக்ஷியாக விவாகம் செய்யாமலே மகாசேனரின் மகளை, அவர் முன் நின்று கன்யா தானம் செய்யாமலே, உங்கள் அரசனுக்கு மணம் முடித்து, அழைத்துச் செல்கிறீர்களா? நல்ல மந்திரியா, அல்லது திருடர்கள் தலைவனா?
யௌ: பெரியவர் நீங்கள் அப்படிச் சொல்லாதீர்கள். நியாயமான விவாகம் தான். எங்கள் அரசன் யாரோ அல்ல. பாரத குலத்தில் வந்தவன். வத்ஸ ராஜ்யத்தின் அதிபதி. நியாயமாக ஆளும் அரசன். விசாரிக்காமல் ஏன் குற்றமாக சொல்கிறீர்கள்.
பரதரோஹகன்: அது சரி. ப்ரத்யோத அரசனே ஏற்றுக் கொண்டு விட்டாரே. உங்களுக்குத் தெரியாதா?
யௌ: வேறென்ன செய்வார்? அவருடைய நலா கிரி தற்சமயம் வத்ஸ ராஜனின் பிடியில் இருக்கிறது. அவர் அதை பயிற்றுவித்து தன் சொல்படி நடக்க வைத்து விட்டார். அதனால் தான் விட்டு விட்டார். நட்பு கரம் நீட்டியிருக்கிறார். எங்கள் அரசரிடம் சிஷ்யையாக உங்கள் அரசரே தானே அனுப்பினார். அவர்கள் சந்திக்கவும் ஒருவரையொருவர் தெரிந்து கொள்ளவும் அது தானே வழி வகுத்தது. அதுவும் அவரிடம் ஒப்படைத்தல், அல்லது விவாகம் தான்.
எங்கள் வத்ஸ ராஜன் பிரசித்தமான ராஜ குலத்தில் வந்தவன். ராஜ தர்மம் அறிந்தவன். யுவதியான ஏதோ ஒரு பெண்ணை மாணவியாக ஏற்று, பின் அவளை பாணிக்ரஹணம் செய்து கொண்டால் அபவாதம் வரும் என்று அறியாதவரா? பாரத வம்சத்தினன். தான் மணமகளாக கை பிடித்த பெண்ணிடம் விசுவாசமாக இருக்கும் தீர புருஷன்.
வெளியில் ஏதோ கூக்குரல் கேட்கிறது. இருவரும்: வாசலில் என்ன குழப்பம்?
கஞ்சுகி: மகாராணி அங்காரவதி, மகளை பிரிய வருந்துகிறார். கௌதுக மங்களங்களை பூர்ணமாக செய்யாமல் மகளை அனுப்ப அவர் மனம் ஒப்பவில்லை போலும். அவள் அழுது ஆர்பாட்டம் செய்வதை அரசர் சமாதானம் செய்கிறார். க்ஷத்திரிய தர்மப் படி தான் உன் மகள் விவாகம் நடந்துள்ளது. மகிழ்ச்சிகரமான இந்த நேரத்தில் ஏன் வருந்துகிறாய்? என்று சொல்கிறார். பெண்கள் பலவிதமான சிறிய செயல்கள், நீராட்டுதல், புத்தாடை அணிவித்தல், ஆபரணங்கள் பூட்டுவது என்று செய்வது அவர்கள் மன சமாதானத்திற்காகவே. மகளை பிரிவதை உள் மனம் ஏற்றுக் கொள்ளச் செய்யவே கௌதுக மங்களங்கள் என்ற பெயரில் நீண்ட உபசாரங்கள். புஷ்ப, சந்தன, ஹரித்ராதி வஸ்துக்களை பயன் படுத்துவதும், உற்றார் உறவினர்களை அழைத்தும், பாடியும், ஆடியும் மகளை வழி அனுப்புவதும் விவாக வழக்கங்கள். எல்லா பெண்களுக்குமே இது குறையாக இருந்திருக்கும்.
யௌ: ஆஹா, மகாசேனர் இந்த சம்பந்தத்தை அனுமதித்து விட்டார். ஆக, எனக்கும் மணமகனைச் சேர்ந்தவன் என்பதற்கான பரிசுகள், தானங்கள் (சீர் வரிசைகள்-ப்ருங்கார தானம் எனப்படும்) வரட்டும். ஏற்றுக் கொள்ள நான் சித்தமாக இருக்கிறேன்.
பரதரோஹகன்: உங்களைத் தனியாக உபசரிக்க வேண்டுமா? அது தான் மகாசேன ராஜா உங்கள் அரசருக்கு செய்து விட்டாரே. இதோ. ஏற்றுக் கொள்ளுங்கள்.
யௌ: மகா சேனர் ப்ரசன்னமாக இருக்கிறார் என்றால், வேறென்ன வேண்டும்.
இந்த நாடகத்தின் கதை. போரில் வெற்றி கொள்ள முடியாத வத்ஸ ராஜன் உதயணனை உஜ்ஜயினி மகா ராஜாவான ப்ரத்யோதன் வஞ்சனையாக சிறை பிடிக்கிறார். யௌகந்தராயன் என்ற முதன் மந்திரி ப்ரத்யோதனுடைய சூழ்ச்சியிலிருந்து வத்ஸராஜனை விடுவித்தது. இவர்களுடைய முயற்சிகளில் தீவிரமாக இருந்த சமயம் உதயணன் வாசவதத்தாவை மோகித்த செய்தி அவர்களுக்கு சோதனையாக அமைந்தது. அதையும் சமாளித்த விவரங்கள். கடைசியில் மகாசேனர் உதயணனை மருமகனாக ஏற்றுக் கொண்டது.
பரத வாக்யம்: பசுக்கள் நோயின்றி ஆரோக்யமாக இருக்கட்டும். வெளியிருந்து எந்த ஆபத்தும் வராமல் ராஜ்ய பாலனம் நல்ல முறையில் நடக்கட்டும். இந்த பூமி முழுவதையும் நமது ராஜ சிம்ஹ ராஜா ஆளட்டும். இத்துடன் இந்த நாடகம் நிறைவேறுகிறது.
