புனைவுக்கு நெருக்கமான உண்மையின் மீதான பயணம்…
எழுத்தாளர் தாரமங்கலம் வளவன் அவர்களின் இயற்பெயர் திருமாவளவன். இவரது தந்தையார் தாரை வடிவேலு அவர்கள் சிறந்த தமிழாசிரியர் மட்டுமல்ல கவிஞர். அதனால் வளவன் அவர்கள் சிறுவயதிலிருந்தே தமிழின் மீது தீராக்காதல் கொண்டவராக இருந்திருக்கிறார். தொடர்ந்து பொறியியல் கல்வி பயின்று ஒன்றிய அரசுப் பணியில் சேர்ந்து அலுவல் காரணமாக இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் பணியாற்றியவர். ஏற்கனவே, அப்பாவின் வழி வந்த தமிழறிவும் இலக்கியம், வரலாறு, அறிவியல் உடனான இவரது ஆழ்ந்த வாசிப்பும் சமூகத்தின் மீதான நுணுக்கமான பார்வையும் மக்களைக் கூர்ந்து நோக்கும் அனுபவமும் இணைந்து இவரை எழுத்தாளராக்கியிருப்பது வியந்து பாராட்டத் தகுந்ததாகும். அதன் விளைவாக ஐயனார் கோவில் குதிரை வீரன், தோற்றப்பிழை ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் தாதர் எக்ஸ்பிரஸ், கடிகார கோபுரம், அம்னி என்ற மூன்று புதினங்களையும் எழுதி காவ்யா பதிப்பகத்தின் வழி வெளியிட்டிருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.
அண்மையில் வெளிவரவிருக்கும் இவரது “ஐன்ஸ்டீனுடன் பயணித்தபோது..“ என்ற நான்காவது நாவலை வாசித்தபோது பெரும் வியப்பில் ஆழ்ந்தேன். நாவல் எழுதப்படும் கருவின் அடிப்படையில் பல வகைமைகளாகப் பிரித்தறிகிறோம். ஆனால், இந்த நாவலை இலக்கியமாகப் பார்ப்பதா? வரலாற்று நாவலாகப் புரிந்து கொள்வதா? அறிவியல் புனைவாக எடுத்துக் கொள்வதா? என்பதில் நமக்கே ஐயம் எழுகிறது. புனைவென்பது உண்மைக்கு நெருக்கமானது எனுமளவிற்கு இலக்கியம், வரலாறு, அறிவியல் சார்ந்த தரவுகள் மட்டுமல்லாமல் நாம் இதுவரை அறியாத புதிய செய்திகளையும் கொண்டு வந்து நாவலில் இணைத்திருக்கிறார். ஒரு நாவல் எழுத அவர் மெனக்கெட்டிருக்கிற உழைப்பை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அணையையும் அதனுடன் இணைந்த பவர் ஹவுஸையும் ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் பணி மத்திய நீர்வளத்துறையில் பணியாற்றும் கணேசனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன் காரணமாக கேரளாவிற்கு அணையைப் பார்வையிட வரும் கணேசன் இரவில் தனியாகப் படகில் பயணிக்கிற போது நீர்ச்சுழற்சியில் படகு கவிழ்ந்து மயக்கமடைகிறார். கணேசன் படிக்கிற காலத்தில் கடந்த காலத்திற்குப் போய்வர முடியும் என்ற ஐன்ஸ்டீனின் கருத்தை ஆழமாக நம்புபவர். மேலும் பேராசிரியர் பரமேஸ்வரனை அவருக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் பயணிக்க வேண்டும் என்ற அவரது ஆழ்மன விருப்பம் மயக்கத்தில் உலவுகிறது. அந்த மயக்கத்திலிருந்து வேறொரு கனவுலகிற்குத் தள்ளப்படும் கணேசன் சித்தரின் ஆணைப்படி அவரது பேராசிரியர் பரமேஸ்வரனை வரவழைத்துப் புனைவின் வழி புத்தர் தொடங்கி சத்ரபதி சிவாஜியின் மராட்டியப் பேரரசு ஆட்சிப் பரவல் வரை வரலாற்றின் நெடுவழியை நம்முன் அச்சு அசலாக எழுத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். நாவல் எழுதும் முறைமையில் இது ஒரு புதிய உத்தியாக இருக்கிறது. நாவலில் இந்த வரலாறுகள் வாசிக்கப்படுகிறபோது அவை நம்முன் திரைக்காட்சியாக விரிகின்றன. எளிதாக மனக்கண்முன் பதிந்துவிடுகின்றன. நாவலை வாசித்து முடித்த பிறகும் காட்சிகள் ஓடிக்கொண்டேயிருப்பதை ஒரு சில நாட்களாக உணர்ந்தேன். நாவலாசிரியர் இந்த வரலாற்றுச் செய்திகளைப் பதிவு செய்து அதற்கு நியாயம் கற்பிக்கவில்லை. அதிலுள்ள நிறைகளைப் பாராட்டியும் குறைகளைச் சுட்டிக்காட்டியும் ஓர் எழுத்தாளராக உழைக்கும் மக்கள் பக்கம் இருந்து வரலாற்றை அணுகியும் இருக்கிறார் என்பதை ஓர் அறமாகப் பார்க்கிறேன். இதனைக் கலை, இலக்கியவாதிகளின் கடமையாகவும் கருதுகிறேன்.
நாவலில் மேற்குத் தொடர்ச்சிமலை, சடாமுடிச் சித்தரின் மலைக்குகை, வைசாலி நகரத்துப் பேரழகி அம்ரபாலி, புத்தமதக் கருத்துகள், புத்தரைக் கடவுளாக்கி வழிபடும் அரசியல் பின்புலம், சாதிய உருவாக்கத்தின் அடிப்படை முதல் மராட்டியப் பேரரசு உருவாக்கம் உள்ளிட்டவை உரையாடல் வழி காட்சிப்படுத்தப்படுகின்றன. வரலாற்றுச் செய்திகளின் இடையிடையே சமகால வரலாற்றையும் நாவலசிரியர் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முனைவர் பி. பாலசுப்பிரமணியன்
- உதவிப் பேராசிரியர்
- தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை
- பச்சையப்பன் கல்லூரி
- சென்னை.
உள்ளே…
1 மேற்குத் தொடர்ச்சி மலை
2 மலைக் குகையில் சித்தர்
3 அம்ரபாலி, வைசாலி நகரத்துப் பேரழகி ( கிமு ஐந்தாம் நூற்றாண்டு)
4 தாலமியின் பாய்மரக் கப்பலும், கிரேக்க தேவதை உராணியாவும் ( கிபி இரண்டாம் நூற்றாண்டிம் முற்பகுதி)
5 கடலோடிகளுக்கான பூகோளம்
6 சீன யாத்திரிகர் யுவான் சுவாங்கின் காஞ்சி தரிசனம் ( கிபி 640)
7 கடாரம் கொண்டான் சோழன் இராஜேந்திரன் ( கிபி 1025)
8 பாண்டிய நாட்டுக்கு மார்க்கோ போலோ வருகை, ஹொய்சளா நாட்டுத் துவார சமுத்திரம் (கிபி 1293- கிபி 1311)
9 மாலீக்காபூரின் தென்னிந்தியப் படை எடுப்பு (கிபி 1311)
10 ஓலைச் சுவடிகளின் ஊர்வலம் ( கிபி 1311)
11 ஸ்ரீரங்கத்து நடன மங்கை வெள்ளாயி ( கிபி 1323)
12 கவி கங்கா தேவியின் மதுரா விஜயம் ( கிபி 1378)
13 மிளகைத் தேடி கடல் வழியாக வந்த வாஸ்கோடகாமா ( கிபி பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதி)
14 வாஸ்கோடகாவின் சபதம் (கிபி 1498)
15 காமா- போர்ச்சுகீசிய வைஸ்ராய் ( கிபி 1524)
16 அப்சல்கானின் பிரம்மாண்ட படையை சத்ரபதி சிவாஜி வெற்றி கொண்டது ( கி.பி. 1659)
17 கொச்சி எம்ஜி ரோடு மருத்துவமனை
அத்தியாயம்- 6
சீனப் பயணி யுவான் சுவாங்கின் காஞ்சி தரிசனம்- கிபி 640
“ சீனப் பயணி யுவான் சுவாங்கைப் பற்றிக் கேள்விப் பட்டு இருக்கிறாயா..” கணேசனிடம் கேட்டார் புரொபசர்.
“ வரலாற்றுப் பாடங்களில் அவரைப் பற்றி நான் படித்து இருக்கிறேன் சார்.. அவரையா பார்க்கப் போகிறோம்..” கணேசன் கேட்டான்.
“ ஆமாம். அவரோடு சேர்த்து உனக்கு அப்பர் என்கிற திருநாவுக்கரசரையும் காண்பிக்கப் போகிறேன். பாலகனாக திருஞான சம்பந்தரையும் பார்க்கலாம். ஏன் நரசிம்ம பல்லவ சக்கரவர்த்தியையும் கூட நாம் பார்க்கலாம்.. 7 ஆம் நூற்றாண்டு காஞ்சிக்கு உன்னைக் கூட்டிக் கொண்டு போகிறேன்.. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் கிபி 640.” என்றார் புரொபசர்.
“ 7 ஆம் நூற்றாண்டு காஞ்சிக்குப் போகப் போகிறோமா சார்..”
” ஆமாம் கணேசா. யுவான் சுவாங்கை எனக்குப் பிடித்துப் போனதற்கு காரணம் என்ன என்று சொல்லட்டுமா.” புரொபசர் கேட்க,
”சொல்லுங்கள் சார்.” என்றான் கணேசன்.
” அறிவைத் தேடி ஒரு ஆபத்தான பயணத்தை மேற் கொண்டவர் யுவான் சுவாங். இவர் இந்தியா வருவதற்கு சுமார் 10 நூற்றாண்டுகளுக்கு முன், கிமு 327 இல், அலெக்சாண்டர் நாடு பிடிக்கும் ஆசையில் பல மலைகளைக் கடந்து பல ஆயிரம் மைல்கள் தன் படைகளை நடத்தி இந்தியாவுக்கு வந்தார். அவருடன் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் வந்தனர். ஆனால் அதை விட பல மடங்கு ஆபத்தான பாதையில், தனி ஒரு மனிதனாக, ஆபத்தான மலைகளையும் பனிப் பாலைவனத்தையும் தாண்டி பல ஆயிரம் மைல் தாண்டி இந்தியாவுக்கு இவர் வந்தார். அது தான் அவரை எனக்கு பிடித்துப் போனதற்கான காரணம்.”
” எதற்காக அந்த ஆபத்தான பயணம்..”
”அப்போது புத்த மதம் சீனாவில் பரவி இருந்தது. அவர் தனது 20 ஆவது வயதிலேயே புத்த மத துறவி ஆனவர். இந்தியாவில் இருந்து தான் புத்த மதம் தோன்றியது என்பது அவருக்கு தெரியும். புத்த மத கருத்துக்கள் சீன மொழிக்கு மொழி பெயர்க்கப் பட்டதால் பல முரண்களையும், பலவீனங்களையும் கொண்டு இருப்பதாக நினைத்தார். அதனால் புத்த மதம் தோன்றிய அந்த நாட்டிற்கு சென்று, புத்த மத நூல்களின் ஒரிஜினல் பிரதிகளை, அதாவது மூலப் பிரதிகளை சேகரிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். மூல நூல்களைப் படித்தால் தனக்கு இருக்கும் சில குழப்பங்கள் நீங்கும் என்றும் அவர் முடிவு செய்தார். பல இன்னல்களுக்கு இடையில் திபெத், கோபி பாலை வனத்தைக் கடந்து, இன்றைய ஆப்கானிஸ்தானில் நுழைந்து கைபர், போலன் கணவாய் வழியாக சிந்து நதி பாயும் பிரதேசத்திற்கு வந்தார். முடிவில், யுவான் சுவாங், சீனாவுக்கு 600 மகாயான, ஹீனயான புத்த மத புத்தகங்களை இந்தியாவில் இருந்து எடுத்துச் சென்றதாக நான் படித்து இருக்கிறேன்.”
“ சார்.. அந்த மூலப் பிரதிகள் எந்த மொழியில் எழுதப் பட்டு இருந்தது.”
“ பாலி மொழியிலும், சமஸ்கிருத மொழியிலும் எழுதப் பட்டு இருந்தது. அவர் வந்த பாதையை சில்க் ரூட் என்றும் சொல்லலாம். சில்க் ரூட் என்பது, பட்டு தயாரிக்க உதவும் பட்டுப் புழுக்களையும், அது வாழ்வதற்கு தேவையான மல்பெரி இலைகளையும், சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு கடத்தி வந்த பாதையைக் குறிக்கும். ”
“ கடத்தி வந்தார்களா.. ஏன் கடத்தி வர வேண்டும்..”
“ ஆமாம். கடத்தி மட்டுமே வர வேண்டும். அப்போது, உலகில் பட்டுத் தயாரிப்பு என்பது சீனாவில் மட்டும் தான் இருந்தது. மற்ற நாடுகளுக்கு சீனப் பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு சீனா ஒரு பெரிய லாபத்தை சம்பாதித்து கொண்டிருந்தது. பட்டு உற்பத்தியிலும், உலக மக்களுக்கு பட்டுத் துணிகளை ஏற்றுமதி செய்வதிலும், ஒரு மோனோபாலி நாடாக இருந்தது. அதனால் பட்டுப் புழுக்கள் வளர்ப்பதையும், பட்டுத் துணிகள் தயாரிப்பதையும், ஒரு ரகசியமாக வைத்து இருந்தது சீனா. மற்ற நாடுகள் இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது. இந்த ரகசியத்தை அதாவது பட்டுப் புழுக்களையும், அதன் உணவான மல்பெரி மரங்களையும், அதன் இலைகளையும் நாட்டை விட்டு வெளியில் எடுத்துப் போவது ஒரு பெரிய குற்றமாகக் கருதப் பட்டு, பிடிபட்டவர்களுக்கு பெரிய தண்டனையும் கொடுக்கப் பட்டது. புத்த பிட்சுகளும், வியாபாரிகளும் இந்த எதிர்ப்பையும் மீறி தங்கள் உயிரை பணயம் வைத்து இந்த பட்டுப் புழுக்களை சீனாவுக்கு வெளியே கொண்டு வந்தனர். இதை பல பாதைகள் மூலமாக கொண்டு வந்தனர். அப்படி பட்டுப் புழுக்களையும், மல்பெரி இலைகளையும் கொண்டு வந்த பாதைகளுக்கு பட்டுப் பாதை என்று பெயர் வைக்கப் பட்டது. அதில் முக்கியமான பாதை திபெத், கோபி பாலை வனம் மூலமாக கொண்டு வந்த பட்டுப் பாதை.. அந்த வழியாகத் தான் யுவான் சுவாங்கும் வந்தார்.”
” மற்றவர்களைப் போல அவரும் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தாரா..”
“ ஆமாம்.. இந்தியாவிற்குள் நுழைந்து, காஷ்மீரம், பாடலிபுத்திரம், பிரயாகை, மதுரா, அயோத்தி, பனாரஸ், வைசாலி, கனோஜ் போன்ற இடங்களில் தங்கி புத்த மத ஆராய்ச்சியில் ஈடுபட்டவர், பிறகு நாளந்தா பல்கலைக் கழகத்திற்கு வந்து சேர்ந்தார். பிறகு தென்னாட்டிற்கு பயணம் ஆனார். இன்றைய ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நாகார்ச்சுனா மலைப் பகுதியில் பயணித்து பல்லவர்களின் தலை நகரான காஞ்சியை அடைந்தார். வைகுண்ட பெருமாள் ஆலயத்தையும் தரிசித்து உள்ளார்.”
” காஞ்சியைப் பற்றி அவர் என்ன எழுதி இருக்கிறார்..”
“ பல்லவ தேசத்தை த லொ பி து என்று குறிப்பிடுகிறார். திராவிட தேசம் என்பதைத் தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார். அதன் தலைநகரம் கஞ் சிஹ் பு லொ என்கிறார். அதாவது காஞ்சிபுரம். இது 30 லீ சுற்றளவு கொண்டது அதாவது காஞ்சி ஆறு மைல் சுற்றளவு கொண்டது என்கிறார். பல்லவர்கள் காஞ்சி நகரைச் சுற்றிலும் கோட்டை கட்டி பாதுகாப்பாக வைத்திருந்தனர். கோட்டையைச் சுற்றிலும் அகழிகள் வெட்டப் பட்டு இருந்தன. காஞ்சி நகர மக்கள் வீரம் மிக்கவர்கள். நீதி தவறாதவர்கள். காஞ்சி நகரில் பல கோயில்கள் இருந்தன. நல்ல பெரிய சாலைகள் இருந்தன என்றெல்லாம் எழுதி இருக்கிறார். அது தவிர இவர்கள் பேசும் மொழி மத்திய இந்திய மொழிகளில் இருந்து மாறுபட்டது என்கிறார். அதாவது தமிழ் மற்ற வட இந்திய மொழிகளில் இருந்து வேறு பட்டதை விவரிக்கிறார்.”
“ அது சரி தான் சார்.. தமிழ் மொழி வட மொழியில் இருந்து மாறுபட்டது என்பதையும், இது தனித்துவ மொழி என்பதையும் அவர் அப்போது கண்டு பிடித்து சொல்லி இருக்கிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது.”
“ நீ சொல்வது சரி தான். இதையே தான் 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த கால்டுவெல் சொல்லி இருக்கிறார். தமிழ் மொழி, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. வட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது அல்ல என்று சொல்லி இருக்கிறார். அது தவிர யுவான் சுவாங் காஞ்சியில் வெவ்வேறு மதப்பிரிவுகளுக்கு உரிய தேவாலயங்களும் உண்டு” என்றும் எழுதி இருக்கிறார்.’
“ சார். யுவான் சுவாங் எழுதி இருப்பதைப் பார்த்தால், அனைத்து மதப் பிரிவினரும் தங்களது நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்ந்தார்கள் என்பதைச் சொல்கிறார். அதாவது காஞ்சி ஒரு மதச் சார்பற்ற நகரமாக இருந்திருக்கிறது என்று சொல்கிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது.”
“ ஆமாம்…”
“ அப்படி அவர் சொல்ல வேண்டிய அவசியம் என்ன. அந்த காலத்தில் காஞ்சியில் வேறு என்ன மதங்கள் இருந்தன. அந்த காலத்தில் காஞ்சியில் கிருஸ்துவமும், இஸ்லாமும் இருந்திருக்க முடியாது. காஞ்சியில் அனைத்து மதப் பிரிவினரும் சகஜமான சூழ்நிலையில் வாழ்ந்தார்கள் என்று அவர் குறிப்பிடுவது யார் யாரை..”
“நீ கேட்கும் கேள்வி சரி தான். புத்த மதம், சமண மதங்கள் தவிர, சைவமும், வைணமும் வேறு வேறாக நம்பிக்கைகளைக் கொண்டிருந்தன. அது மட்டுமல்ல கபாலிக மதம் என்று சைவத்தில் ஒரு தீவிரவாத குழுவும் இருந்தது.”
“மண்டை ஓட்டை வைத்து சுடுகாட்டில் பூஜை செய்வார்கள் என்று சொல்வார்களே அவர்களா..”
“ஆமாம். இதில் யுவான் சுவாங் பாராட்டும் அம்சம் என்னவென்றால், அந்த காலத்திலேயே காஞ்சி ஒரு செக்கூலர் நகரமாக இருந்திருக்கிறது என்பதைத் தான்.”
” அது ஒரு பெருமைப் பட வேண்டிய ஒன்று சார்..”
“ அது உண்மை தான் கணேசா..”
* * *
”அந்த கிபி 640 ஆம் ஆண்டு காஞ்சியைப் போய்ப் நாம் பார்க்கலாம் சார்..” என்றான் கணேசன்.
“ சரி போகலாம்..” என்ற புரொபசர்,
” இப்போது காஞ்சியின் கோட்டை பலப் படுத்து விட்டது. சாளுக்கிய மன்னன் புலிக்கேசி காஞ்சியின் மீது படை எடுத்து வந்து நீண்ட காலமாக கோட்டையை முற்றுகை இட்டும், காஞ்சியைக் கைப் பற்ற முடியாமல், காஞ்சியை ஒட்டி உள்ள சுற்றுப் புற கிராமங்களை சூறையாடி விட்டு வாதாபி சென்றான். அந்த யுத்தத்தில் தோல்வி அடைந்து விட்டோம் என்று எண்ணி மனம் வருந்தி மகேந்திர பல்லவர் உயிரை விட்டார். இப்போது நாம் தரிசிக்கப் போகும் மன்னர் அவருடைய மகன் நரசிம்ம பல்லவர். தந்தையின் தோல்விக்குப் பழி வாங்க, பெரிய படையைத் திரட்டி, அவர் வாதாபியின் மீது படை எடுத்து புலிகேசியை வெற்றி கொண்டார். அவரும் வாதாபியை தீக்கிரையாக்கினார்.” என்றார்.
“ மறுபடியும் புலிகேசியின் மகன் தன் தந்தை அடைந்த தோல்விக்குப் பழி வாங்க இந்த காஞ்சியையும், நரசிம்ம பல்லவரையும் தாக்குவான் இல்லையா. அப்போதும் காஞ்சி நகர மக்களுக்கு கொடுமைகள் இழைக்கப் படலாம். இப்படியே பழிக்குப் பழி தொடர்ந்து கொண்டிருந்தால் பாதிக்கப் படுவது சாமான்ய குடிமக்கள் தான்.”
“ நீ சொல்வது சரிதான் கணேசா. எந்த காலத்திலும் சாதாரண குடி மக்கள் அமைதியை மட்டுமே விரும்புகிறார்கள். அவர்களை ஆளும் மன்னர்கள், தங்களின் தனிப்பட்ட விரோதத்தினாலோ, தங்களின் பராக்கிரமத்தைக் காண்பிக்க வேண்டும் என்ற ஆசையினாலோ, மக்கள் மேல் போரைத் திணிக்கிறார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப் பட்ட ஐநா சபை போன்ற அமைப்புகள் தான் மக்களைப் பற்றி நினைத்து, மக்கள் அமைதியாக வாழ வழி வகை செய்ய வேண்டும் என்று உழைத்தார்கள். உண்மையில் மக்கள் சமாதானத்தையே விரும்புகிறார்கள், அமைதியாக வாழவே விரும்புகிறார்கள், அவர்களின் அந்த உரிமையை அதாவது அமைதியாக வாழ விரும்பும் உரிமையை ஆட்சி செய்பவர்கள் பறித்து விடக் கூடாது என்று சொல்லி உலக அமைதியை நிலை நாட்ட ஐ நா சபையினர் முயன்று வருகிறார்கள். ஜப்பான் மன்னர் இப்படி தன் பராக்கிரமத்தைக் காண்பிக்க அண்டை நாடுகளின் மீது படை எடுத்து அந்த நாட்டு மக்களை தாங்க முடியாத சித்ரவதைக்கு உள்ளாக்கினார். அதற்கு எதிர் வினையாக, ஜப்பான் மக்களும் பெரிய அளவில் பாதிக்கப் பட்டனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பான் ஒரு ஜனநாயக நாடாக உருவாக்கப் பட்டு, மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை போரில் ஈடுபடுத்தக் கூடாது என்ற ஒரு உடன் படிக்கையில் ஜப்பான் கையெழுத்து இட்டது..”
* * *
புரொபசரும், கணேசனும் காஞ்சி மாநகர கோட்டைக்குள் பிரவேசிக்க, அப்போது நகரெங்கும் பறை அடித்து ஒரு செய்தி சொல்லப் படுவதைப் பார்த்தார்கள்.
” கணேசா.. அது என்ன பறை அடிக்கும் சத்தம்.. பறை அடிப்பவன் என்ன சொல்கிறான்..”
” சார். இன்று மகேந்திர சக்கரவர்த்தியின் பிறந்த நாளை ஒட்டிய விழாவாம். அந்த விழாவில், மகேந்திர சக்கரவர்த்தி எழுதிய மத்த விலாசப் பிரகடனம் நாடகத்தை நடத்த வேண்டும் என்று மகேந்திர சக்கரவர்த்தியின் மகன் நரசிம்ம பல்லவர் ஆணை யிட்டு இருக்கிறாராம். பறை அடித்து சொல்கிறான்..”
“ சார். இந்த மத்த விலாசப் பிரகடனம் நாடகத்தை நீங்கள் படித்து இருக்கிறீர்களா…”
” நான் படித்து இருக்கிறேன். படித்தவுடன், எனக்கு தோன்றியது என்ன என்றால், சேக்ஸ்பியருக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தை ஆண்ட ஒரு சக்கரவர்த்தி ஒரு காமெடி நாடகத்தை எழுதி இருக்கிறார் என்பதைத் தான்.”
” சார்.. என்ன கதை அது.”
”காபாலிகன், ஒரு புத்த பிக்ஷு, சைவ பக்தன், பைத்தியக்காரன், ஒரு நாய், காபலிகனுடைய காதலி என்ற பாத்திரங்கள். காபாலிகனும் அவனது காதலியும் காஞ்சீபுர வீதிகளில் உலா வருவதுடன் காட்சி துவங்குகிறது. முதல் காட்சியில் காபாலிகன் அவன் காதலி தேவசோமையுடன் வாதாடுகிறான். தனது பிச்சை ஏற்கும் கபாலத்தைக் காணவில்லை என்று சொல்கிறான். அதைத் தேட இருவரும் முயற்சி செய்கின்றனர். இருவரும் மதுக்கடைக்கு செல்கின்றனர்.”
“ அதாவது அந்த காலத்திலும் பெண்களும் மதுக்கடைக்கு சென்று இருக்கிறார்கள் போல் தெரிகிறதே சார்..”
“ ஆமாம். அது உனக்கு முக்கியமான விஷயம் தான். மேலே சொல்கிறேன். அவ்வழியே வந்த புத்த பிஷுவிடம் ஒரு பிச்சை ஏற்கும் கபாலம் இருக்க, அதை தனது காணாமல் போன கபாலம் என்று பிடுங்க, அந்த புத்த பிட்ஷு அதைத் தடுக்க, அந்தப் பக்கம் வந்த சைவ பக்தனிடம் இருவரும் தங்கள் வழக்கை முறையிடுகின்றனர். அந்த சமயத்தில் பைத்தியக்காரன் ஒருவன், ஒரு வெறி நாயிடமிருந்து பிடுங்கிய கப்பரையுடன் வருகிறான்; அதைக் கண்ட காபாலிகன் அது தான் காணாமல் போன தனது பிச்சை பாத்திரம் என்பதைப் புரிந்து கொண்டு, தனது பிச்சை பாத்திரம் திரும்ப கிடைத்து விட்டதாக மகிழ்கிறான். பின்னர் அனைவரும் சமாதானமாகச் செல்கின்றனர்.”.
” பிச்சை எடுக்கும் கபால ஓடு காணவில்லை என்பதற்காக ஒரு சண்டை, மதுக்கடை, பின்னர் நாய் அந்த கபால ஓட்டை கவ்விக் கொண்டு வருவது எல்லாம் தற்கால பகடி நடை நாடகங்களுக்கு ஒரு முன்னோடி தான்.” என்றான் கணேசன்.
இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் அந்த சமயத்தில், நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் ஒன்று திடீரென்று பூமி அதிர ராஜ வீதியில் ஓடியது. மேலும் சில குதிரை வீரர்களும் மின்னல் வேகத்தில் பறந்தார்கள்.
” கணேசா.. அது என்ன.. யார் செல்கிறார்கள்.. எங்கே செல்கிறார்கள்.. மக்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்டு வா” என்றார் புரொபசர்.
”முதன் மந்திரியார் கோட்டை வாயிலை நோக்கி வீரர்கள் புடை சூழ சென்று கொண்டிருக்கிறாராம். சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சி மாநகரை தரிசிக்க வருவதாகவும், அவரை வர வேற்க கோட்டை வாசலுக்கே அவர் செல்கிறாராம். சக்கரவர்த்தி நரசிம்மரின் ஆணையாம்..”
” சரி.. நாம் மகேந்திர சக்கரவர்த்தியின் நாடகம் நடத்தப் படும் மண்டபத்திற்கு போய் காத்திருப்போம். நரசிம்ம சக்கரவர்த்தியுடன் சேர்ந்து அந்த நாடகத்தை நாமும் பார்க்கலாம்..”
மத்த விலாசப் பிரகடனம் நாடகம் நடத்தப் படும் நாடக அரங்குக்கு கணேசனும், புரொபசரும் வந்து சேர்ந்தார்கள்.
மேடை காலியாக இருந்தது.
பார்வையாளர்கள் கூடிக் கொண்டிருந்தார்கள்.
திடீரென்று பார்வையாளர்கள் கூட்டத்தில் ஒரு சல சலப்பு ஏற்பட்டது.
“ சார்.. என்ன பேசுகிறார்கள் என்று நான் கேட்டு வருகிறேன்.”
” சரி போய் கேட்டு வா..”
கணேசன் திரும்பினான்.
“ சார். காஞ்சிக்கு வந்துள்ள சீன யாத்திரிகர் யுவான் சுவாங்கை இந்த நாடகத்தைப் பார்க்க நரசிம்ம சக்கரவர்த்தி தன்னுடன் அழைத்து வருகிறாராம்.”
” நல்லதாகப் போயிற்று கணேசா.. நாம் இருவரையும் ஒன்றாகப் பார்க்கலாம்..”
சக்கரவர்த்தியும், சீனப் பயணி யுவான் சுவாங்கும் முன் வரிசையில் வந்து உட்கார்ந்தார்கள்.
நாடகம் ஆரம்பிக்க வேண்டியதற்கான வந்தனம் சொல்லப் பட்டது.
அப்போது முதன் மந்திரியார் ஓடி வந்து சக்கராவர்த்தியின் காதில் ஏதோ சொன்னார்.
சக்கரவர்த்தியின் முகம் மாறியது.
“ எனக்கு இது ஞாபகம் இல்லாமல் போய் விட்டது மந்திரியாரே. ராஜாங்க காரியங்களைப் பார்க்கவே எனக்குச் சரியாக இருக்கிறது.. எனது தந்தையால் எழுதப் பட்ட நாடகம் என்றாலும், நம்முடைய விருந்தினராக வந்திருக்கும் இந்த புத்த பிட்ஷுவின் மனதைப் புண்பட வைக்க நான் விரும்ப வில்லை.. நாடகத்தை ஆரம்பிக்க வேண்டாம்.. என் அருகில் உட்கார்ந்து இருக்கும் இந்த சீனருக்கு நாம் பேசியது புரிந்திருக்காது.. நான் வேறு ஏதாவது காரணம் சொல்லி சாதுர்யமாக இவரை திரும்ப அழைத்துப் போய் விடுகிறேன்..”
இதைக் கேட்ட கணேசன் சொன்னான்.
” சார். நம் இருவருக்கும், இந்த இருவரையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இப்போது நாடகத்தைப் பார்க்கும் வாய்ப்பு போய் விட்டது. இந்த நாடகத்தை ஏன் சக்கரவர்த்தி நிறுத்தி விட்டார் என்பது உங்களுக்கு புரிகிறதா..”
“ புரிகிறது கணேசா.. முதன் மந்திரியார் இந்த நாடகத்தை ஏற்கனவே பார்த்து இருப்பார் போலிருக்கு.. புத்த பிட்ஷுவிடமிருந்து கபாலிகன் தனது பிச்சை பாத்திரமான கபாலத்தை பிடுங்கும் காட்சியையும் மந்திரியார் பார்த்து இருப்பார். அந்த காட்சி புத்த பிட்ஷுவான யுவான் சுவாங் மனதை புண்படுத்தும் என்பதால் அது கூடாது என்று நாடகத்தையே நடத்த வேண்டாம் என்று நரசிம்ம பல்லவர் ஆணையிட்டு இருக்கிறார். அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்க வேண்டும், எந்த மத நம்பிக்கையாளரையும் புண்படுத்தக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர் நரசிம்மர்.”
” சார்.. இந்த இருவரையும் பார்த்து விட்டோம். இன்னும் இருவரை நாம் பார்க்க வேண்டுமே..”
” ஆமாம். அப்பரையும், திருஞான சம்பந்தரையும் நாம் பார்க்க வேண்டும். சரி. கிளம்பு. ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு. ”
புரொபசரும், கணேசனும் தெருவில் நடக்கும் போது, கூட்டம் கூட்டமாக மக்கள் கூடி நின்று ஏதோ ஒரு விஷயத்தை சிலாகித்து பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்தார்கள். ஒரு வேளை இதுவும் மத்த விலாச நாடகம் பற்றி இருக்குமா என்று புரொபசரும், கணேசனும் நெருங்கிப் போய்க் கேட்க, அந்த காட்சி, அந்த வியப்பு வேறாக இருந்தது.
அப்பரையும், திருஞான சம்பந்தரையும் பல்லக்கில் அவருடைய சீடர்களும், பக்தர்களும் தூக்கி வந்து கொண்டு இருந்தனர். அந்த மக்கள் சிலாகித்து பேசிக் கொண்டு இருந்த விஷயம் இது தான்.
அப்பர் சுவாமிகள் திருப்பூந்துருத்தியில் திருமடம் அமைத்து உழவாரப் பணியைச் செய்து கொண்டு இருந்தாராம். அப்போது, பார்வதி தேவியின் அருள் பெற்ற ஞானக் குழந்தையான சம்பந்தர், அப்பரைத் தரிசிக்க வேண்டும் என்று விரும்பி அவ்வூரை நோக்கிச் சிவிகையில் வந்து கொண்டிருந்தாராம். அதைக் கேள்விப்பட்ட அப்பர், ஞானக் குழந்தை வருவதற்குள் நாமே சென்று எதிர் கொள்வோம், வாருங்கள் என்று தனது அடியவர்களையும் அழைத்துக் கொண்டு ஊர் எல்லை வரை சென்று காத்து இருந்தாராம். சம்பந்தரின் சிவிகை வந்தவுடன், சம்பந்தருக்கே தெரியாமல், அடியவரோடு அடியவராக தானும் ஒரு தோள் கொடுத்து சம்பந்தர் அமர்ந்திருந்த சிவிகையை அப்பர் சுவாமிகள் சுமந்து நடக்க ஆரம்பித்தாராம்.
சிவிகையின் சீலையை விலக்கி சம்பந்தர் பார்க்கும் போது, இதைக் கண்டு கொண்டாராம். பதறிப் போன சம்பந்தர், சிவிகையில் இருந்து வேக வேகமாய் இறங்கி அப்பரை வணங்கி நின்றராம்.
’நாவுக்கரசரே, திருஞான சம்பந்தரின் சிவிகையை தன் தோளில் தாங்கி தூக்கி வந்தார் என்றால் அந்த பாலகன் ஒரு பெரிய மகான் என்றே தோன்றுகிறது’ என்று காஞ்சி மாநகர மக்கள் பேசிக் கொண்டார்கள்.
ஊர்வலம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சென்றது.
புரொபசரும், கணேசனும் ஊர்வலத்தோடு ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சென்றார்கள்.
* * *
” சார்.. அப்பர் சுவாமிகள் பற்றியும், திருஞான சம்பந்தர் பற்றியும் சொல்லுங்கள்..”
புரொபசர் சொன்னார்.
“ இவர்கள் இருவரையும் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் தமிழில் தோன்றிய பக்தி இலக்கியம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் கணேசா. பக்தி இலக்கியம் ஆரம்பித்தது பல்லவர் காலத்தில் இருந்து தான் என்று நான் நினைக்கிறேன். வேறு எம்மொழியிலும் தமிழில் தோன்றிய அளவு பக்தி இலக்கியம் தோன்றவில்லை. இலக்கியத்தின் மூலம் சமய மறு மலர்ச்சி ஏற்பட்டது. சமண, புத்த மத தாக்கங்களில் இருந்து, சைவ, வைணவ மதத்தை மறுமலர்ச்சி செய்ததில் தமிழ் பக்தி இலக்கியங்கள் முக்கிய பங்கு வகித்தன. அதில் முன்னோடியாக இருந்து ஆரம்பித்து வைத்தவர் அப்பர் என்று அழைக்கப் பட்ட இந்த திருநாவுக்கரசர் சுவாமிகள் தான். சமண, புத்த மதங்களின் தாக்கத்தில் இருந்து, முன்பு இருந்த சைவ, வைணவ மதங்கள் புத்துயிர் பெற, தமிழில் தோன்றிய பக்தி இலக்கியங்கள் தான் ஆரம்ப புள்ளியாக இருந்தன. சைவ, வைணவ மறு மலர்ச்சிக்கும் மகேந்திர பல்லவனுக்கும் ஒரு சம்மந்தம் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் மகேந்திர பல்லவனே சமண மதத்தினனாக இருந்து சமண துறவிகளின் பேச்சைக்கேட்டு நாவுக்கரசரை படாத படுத்தி, பின்னர் தானே சைவ மதத்திற்கு மாறினான். அந்த இடைப் பட்ட காலத்தில் அதாவது நாவுக்கரசர் சமணராக இருந்து மாறி விட்ட நிலையில் மகேந்திர பல்லவர் இன்னும் மாறாமல் சமணராக இருந்த அந்த இடைப் பட்ட காலத்தில் மகேந்திர பல்லவர் நாவுக்கரசருக்கு துன்பம் கொடுத்து இருக்கிறார்.”
” இந்த காலத்தில் அரசியலில் கட்சி மாறுவது போல அந்தக் காலத்தில் இப்படி நடந்து இருக்கிறது சார்”.
” ஆமாம். இருவருமே முதலில் சமண மதத்தினராக இருந்து சைவ மதத்திற்கு மாறியவர்கள் தான். ஆனால் முதலில் மாறியது நாவுக்கரசர் தான். ஒரு முறை அவரே பாடி இருக்கிறார். பெண்கள் முகம் சுழித்து, அருவருப்பாய் ஓடி ஒளியும் படி நிர்வாண சாமியாராக நான் தெருக்களில் நடந்து இருக்கிறேன் என்று.”
” ஆமாம் சார். அப்பரே, சமண மதத்தில் இருந்து சைவத்திற்கு மாறியவர் என்பதை நானும் படித்திருக்கிறேன் சார்”
காஞ்சி நகர தெருக்களில் நடந்து கொண்டிருந்தவர்கள் அதற்குள் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு வந்து விட்டார்கள்.
அப்பரையும், திருஞானசம்பந்தரையும் இருவரும் ஒருங்கே தரிசித்தார்கள்.
“ எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது கணேசா. இந்த திருஞான சம்பந்தர், சோழ மன்னரின் மகளான மங்கையர்க்கரசி, தனது கணவனான நின்ற சீர் நெடுமாறன் என்ற பாண்டிய மன்னனை சமண மதத்தில் இருந்தது மாற்ற வேண்டும் என்று ஆசைப் பட்ட போது, அதை நடத்திக் காட்டினார்.” புரொபசர் சொன்னார்.
“ அந்த நிகழ்ச்சியைப் பற்றி நான் படித்து இருக்கிறேன் சார்..”
“அப்படியா.. அந்த காலத்திற்கும் போய், அந்த நிகழ்ச்சியை நாம் பார்க்கலாமா..”
“வேண்டாம் சார்.. அதில் எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப் பட்டார்கள் என்று படித்து இருக்கிறேன். அந்த காட்சியை நாம் பார்க்க வேண்டாம் சார்..”
“ சில தமிழ் அறிஞர்கள் அப்படி ஒரு கழுவேற்றம் உண்மையில் நடக்க வில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். மற்றும் சில தமிழ் அறிஞர்கள் சமணர்களின் கழுவேற்றம் நடந்தது உண்மைதான். ஆனால், 8000 சமணர்கள் கழுவேற்றப் பட வில்லை. எண்ணாயிரம் என்பது ஒரு ஊரில் வாழ்ந்த சமணர்களையோ அல்லது எண்ணாயிரம் என்ற பெயர் கொண்ட ஒரு குழுவில் இருந்த சமணர்கள் கழுவேற்றம் செய்யப் பட்டதையோ குறிக்கிறது என்கிறார்கள்.”
“ எப்படி இருந்தாலும், அந்த காட்சியை நான் பார்க்க விரும்பவில்லை சார். வேறு ஏதாவது வரலாற்றுக் காட்சியைப் பார்க்கலாம் சார்.” என்றான் கணேசன்.
* * *
