Site icon சொல்வனம் | இதழ் 377 | 25 அக் 2026

சிலப்பதிகாரமும் சி.சு. செல்லப்பாவும்

தமிழாசிரியர்கள் பங்கேற்ற நிகழ்வொன்றில் சிலப்பதிகாரம் குறித்துப் பேசுவதற்காகச் சென்றிருந்தேன். நிகழ்ச்சியின் தொடக்கமாகப் பள்ளி மாணவர்கள் சிலப்பதிகாரத்தின் ‘வழக்குரை காதையை’ நாடகமாக நடித்துக் காட்டினார்கள். கண்ணகி கையில் சிலம்புடன் தலைவிரிகோலமாக மன்னனைச் சந்தித்து நீதி கேட்கிறாள். கண்ணகிக்கும் பாண்டியனுக்கும் இடையே நடந்த உரையாடலின் முடிவில் கண்ணகியாகிய நடித்த மாணவி ” என் சிலம்பில் மாணிக்கம் உள்ளது ” எனக் கூறிக்கொண்டே தம் கையில் உள்ள சிலம்பைத் தரையில் அடித்தாள். சிலப்பதிகாரத்தில் இது போன்ற காட்சி ஏதும் இல்லை. சிலப்பதிகாரத்தில் கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பை, பாண்டியன் அரசவைக்குக் கொண்டுவரக் கட்டளையிடுவான். அச்சிலம்பையே கண்ணகி உடைப்பாள். 

” தருகெனத் தந்துதான்முன் வைப்பக்
கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப”

என்றே சிலப்பதிகாரம் கூறும்.

கண்ணகியாக நடித்த மாணவியின் அச்செயல் எனக்கு எழுத்தாளர் சி.சு. செல்லப்பாவை நினைவூட்டியது.

நாடகத்தில் நடித்த மாணவர்கள் சி.சு. செல்லப்பாவின் ‘ ‘கனவின் எதிரொலி’ என்ற சிறுகதையைப் படித்திருக்கவில்லை. இணையத்தில் கண்ட ,  நாடகத்தைப் பார்த்தே நடித்ததாகச் சொன்னார்கள்.

சிலப்பதிகாரத்தின் ‘வழக்குரை காதைப் பகுதி’ எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றுதான். சிலப்பதிகாரக்கதையின்  உணர்ச்சிபூர்வமான பகுதி அது.

அது எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவையும் கவர்ந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால், அதில் சில விமர்சனங்கள் அவருக்கு இருந்திருக்கக்கூடும். அதனால்தான் தனது விருப்பப்படி, சிலப்பதிகாரத்தில் ‘பொற்கொல்லன் – பாண்டிய மன்னன் சந்திப்பையும், வழக்குரை காதைப் பகுதியையும் இணைத்து ‘ கனவின் எதிரொலி’ என்ற சிறுகதையாகத் தந்திருப்பார்.

நாட்டை ஆளும் மன்னனுக்கு ஒரு சிலம்பு என்பது எட்டாக்கனியாக இருந்திருக்க முடியாது.  உடனே இன்னொரு சிலம்பு செய்திருக்க முடியும். இதற்காகத் தீர விசாரிக்காமல் ஒருவரைக் கொல்ல வேண்டுமா? அப்படியானால் காணாமல் போன சிலம்புக்கான முக்கியத்துவம் என்ன? என்ற கேள்விகள்.

அடுத்து, பாண்டி மாதேவி கண்ட தீய கனவுகள். 

கடைசியாகக் கண்ணகி உடைக்கும் சிலம்பு.

இந்த மூன்றையும் மாற்றியமைக்கவும் அவர் விரும்பியிருக்கிறார். அதுவே

‘கனவின் எதிரொலி’ என்ற சிறுகதையாக உருவாகியிருக்கிறது. நீதி முறையின் பிழை குறித்த கோபத்தைத் தீவிரமாக வெளிப்படுத்துகிறது இச்சிறுகதை.

சிலப்பதிகாரத்தில், பாண்டிமாதேவியின் சிலம்பைத் திருடிய கள்வனான பொற்கொல்லன், கோவலனிடம் அதைப்போன்றதொரு சிலம்பைக் கண்டவுடன், கோவலனின் மீது பழிபோடும் தீய எண்ணத்துடன், “நீ இங்கு இரு. ‘ விறல்மிகு வேந்தற்கு விளம்பியான் ‘ வருகிறேன் எனச்சொல்லி மன்னனைச் சந்திக்கச் செல்கிறான். போகும்போது வெறுங்கையுடன்தான் போகிறான். கோவலனிடமிருந்த சிலம்பை வாங்கிக்கொண்டு போகவில்லை.

ஆனால் சிறுகதையில் பொற்கொல்லன் சிலம்புடன் மன்னனைச் சந்திக்கிறான்.

மன்னனோ மனைவியைச் சமாதானப்படுத்த அந்தப்புரம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான். சிலப்பதிகாரத்திலும்  இதே சூழல்தான்.  கோப்பெருந்தேவி மன்னன்மீது ஊடல் கொண்டு அந்தப்புரத்தில் இருக்கிறாள்.

ஊடலுக்குக் காரணம் நாடக மகளிரின் ஆட்டத்தில் மன்னன் மனம் மயங்கி இருந்தது அரசிக்குப் பிடிக்கவில்லை. தலை வலிப்பதாகக் கூறி அந்தப்புரம் சென்று விடுகிறாள். அரசியைப் பற்றி நன்கு தெரிந்த மன்னன் அவளைச் சமாதானப்படுத்த அந்தப்புரத்த நோக்கி விரைகிறான். 

சிறுகதையில், பாண்டியனுக்கும் அவன் தேவிக்கும் இடையே இதுபோன்ற ஊடல் எதுவுமில்லை. பாண்டிமாதேவியின் வருத்தத்திற்குக் காரணம், அவளுக்கு மிகவும் விருப்பமான சிலம்பு காணமல்போய் நெடுநாள்களாகக் கிடைக்காததுதான். காணாமல்போன சிலம்பை எண்ணியே வேறு சிலம்பு அணியாமல் வருத்தத்தில் இருக்கும் மனைவியைத் தேற்ற அந்தப்புரம் நோக்கிச் செல்கிறான் மன்னன்.

இந்தச் சமயத்தில்தான் பொற்கொல்லன் மன்னனைச் சந்திக்கிறான். சிலம்பைக் காட்டித்தான் அரசியைச் சமாதானப்படுத்த வேண்டும் என்ற நிர்பந்தம் சிலப்பதிகாரத்தில் வரும் பாண்டியனுக்கு இல்லை. ஆனால், சிறுகதையில் வரும் அரசியின் மனவருத்தம், காணாமல் போன சிலம்பினால்தான் நீங்கும். எனவே சிலம்பைக் கண்டவுடன் கோவலனைக் கொல்க! என்று ஆணையிட்டுவிட்டு அவசர அவசரமாகச் சிலம்புடன் அந்தப்புரம் நோக்கி விரைகிறான் பாண்டிய மன்னன்.

இந்தச் சமயத்தில் பாண்டிமாதேவி காணக்கூடாத  கனவினைக் கண்டு மனக்கலக்கம் அடைந்திருக்கிறாள். சிலப்பதிகாரக் கனவுக்காட்சிகளை, பின்னர் நடக்கவிருப்பதை முன்னரே அறிவிப்பதுபோல் இளங்கோவடிகள் அமைத்திருப்பார். 

” செங்கோலும் வெண்குடையும்
செறிநிலத்து மறிந்து வீழ்தரும்
நங்கொன்றன் கொற்றவாயில்
மணிநடுங்க நடுங்குமுள்ளம்
இரவுவில்லிடும் பகல்மீன்விழும்
இருநான்கு திசையும் அதிர்ந்திடும்”

இப்படி நாட்டின் அழிவைக் குறித்த கனவை எண்ணிப் பதட்டத்துடன் அரசமாதேவி திரும்பத்திரும்ப அக்கனவினை அச்சத்துடன் கூறுவாள். சிலப்பதிகாரத்தில் வரும் பாண்டிமாதேவிக்குக் காணாமல் போன சிலம்பு குறித்த நினைவோ, வருத்தமோ இல்லை. அதனால் கனவு சிலம்பைப் பற்றியதாக இல்லாமல் இருக்கிறது. 

ஆனால், சி.சு. செல்லப்பாவோ கனவையும் சிலம்போடு இணைத்தே எழுதியிருப்பார்.சிறுகதையில் வரும் அரசி, தான் கண்ட கனவினைப் பற்றி மன்னனிடம் இப்படிக் கூறுகிறாள்,

 ” எந்த இடத்தில் இருந்தேன் என்பதே தெரியவில்லை. ‘ சிலம்பு, சிலம்பு ‘ என்று பைத்தியத்தைப்போல் போய்க்கொண்டிருந்தேன். எனக்குச் சற்று தூரத்தில் சிலம்பு உருவமான பிரகாசம் தெரியவே ஓடினேன். ஆசையோடு அதை எடுப்பதற்காகக் கிட்ட நெருங்கவும் அங்கே பெரிய ஜ்வாலை ஒன்று கிளம்பிக் கொண்டிருந்தது. பயந்து பின் வாங்கினேன். நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஜ்வாலை மளமளவெனக் குறைந்துகொண்டே வந்து ஓர் அனல் வளையமாகிவிட்டது.”

” யாரோ அதைக் கையில் எடுத்துக்காட்டி, ‘ இந்தா உன் சிலம்பு’ என்று கையில் வைக்க வருவதுபோல் இருந்தது ; கனல் வளையந்தான் என் கண்களுக்குத் தெரிந்தது ; உருவம் தெரியவில்லை. ஆனால் குரல் மட்டும் ஒரு பெண்ணின் தீர்க்கமான குரலாக இருந்தது.இப்போதுகூட என் காதுகளில் அந்தச் சப்தம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.”

 சிலம்பால் தாங்க இயலாத நெருப்பைப் போன்றதொரு துன்பம் தனக்கு ஏற்படப்போவதாக கனவு கண்ட அரசி  உணர்கிறாள். அதனால் பாண்டியன் கொண்டு வந்த சிலம்பை அணிய மறுக்கிறாள். மன்னன் வற்புறுத்தி அவளை அணிந்துகொள்ளச் செய்கிறான். காணாமல்போன,பாண்டிமாதேவியின் சிலம்பைப் போலவே கண்ணகியின் சிலம்பும் இருக்கிறது.

சிலப்பதிகாரத்தில் சிலம்பின் உள்ளேதான் முத்து – மாணிக்கம் என்ற வேறுபாடு இருக்கிறது. ஆனால், சிறுகதையில் சிலம்பின் வெளிப்புறத்தில் உள்ள ஒரு சிறிய வேறுபாட்டை அரசனும் அரசியும் பார்க்கத் தவறுகிறார்கள். கண்ணகி வந்து சுட்டிக்காட்டிய பின்பே அதைக் கவனிக்கிறார்கள்.

கண்ணகியின் சிலம்பில் புலி உருவமும், அரசியின் சிலம்பில் மீன் உருவமும் பொறிக்கப்பட்டிருந்ததாகச் சிறுகதை கூறுகிறது. ” புலிக்கும் மீனுக்கும் வித்தியாசம் தெரியவில்லை உனக்கு, அரசி மீதுள்ள மயக்கத்தில்” என்று பாண்டியனிடம் சீறுகிறாள் கண்ணகி.

இதோ ” இந்தச் சிலம்பையும் ஜோடி சேர்த்து உன் அரசிக்குப் போட்டு அழகு பார் ! ” என்று கண்ணகி தன் கையில் உள்ள சிலம்பை மன்னனின் முன்னால் வீசி எறிகிறாள். ‘அரசி கனவில் கண்ட அதே சிலம்பு ! அதே குரல் ! ‘. சிலம்பு தரையில் விழுந்து உடைகிறது ; மாணிக்கப் பரல்கள்  தூள்தூளாகச் சிதறுகின்றன.

சிலப்பதிகாரக் காப்பியத்தில் கதையின் மைய முடிச்சுக்கு சிலம்பு ஒரு காரணம் அவ்வளவுதான். ஆனால் சி.சு. செல்லப்பா எழுதிய ‘ கனவின் எதிரொளி’ சிறுகதையில் சிலம்பே கதையின் மையமாக நின்று சுழல்கிறது. 

சிலப்பதிகாரத்தில் வரும் பாண்டி மாதேவி பாண்டிய நாட்டின் அரசி. அவள் நினைவில் நாடே நிறைந்துள்ளது. அது கனவிலும் எதிரொளிக்கிறது. ஆனால், சிறுகதையில் வரும் பாண்டியனின் மனைவி அரசியாக இல்லாமல் சாதாரணப் பெண்போலவே தென்படுகிறாள். அவளது கனவும் அவளைக் குறித்ததாகவே இருக்கிறது.

நாட்டை ஆளும் மன்னனின் பொறுப்பற்ற குணம் மீது சிறுகதைக்குக் மிகுந்த கோபம் இருக்கிறது.  சிலப்பதிகாரத்தில் தவறை உணர்ந்ததும் மன்னன் உடனே மயங்கி விழுந்து உயிர்விடுகிறான்.

 ( “கெடுகவென் ஆயுள்என மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே” )

ஆனால் சிறுகதையில் மன்னனின் முடிவு மிகக் கோரமாக இப்படிக் காட்டப்படுகிறது.

” நின்ற இடத்திலிருந்தே அரசன் ஏதோ பேச வாயெடுத்தான். வார்த்தை கிளம்பவில்லை. அவன் முகம் கறுத்து விகாரம் அடைந்தது. அரசி அதைக் கவனித்துவிட்டாள். பாய்ந்து வந்து கணவனைத் தாங்கிக் கொண்டாள். அரசனைக் கூப்பிட்டாள். அரசன் பேசவே இல்லை. அவன் கண்கள் நிலையாகக் கண்ணகியையே பார்த்தன. குபீரென்று அவன் நாசியிலிருந்தும் தொண்டையிலிருந்தும் ரத்தம் கொப்புளித்து வெளியேறியது.அவன் அரசியின் கைகளில் இருந்து நழுவிக் கீழே சாய்ந்தான், ரத்தம் பீறிட்டு. “

சிலப்பதிகாரத்தில் வரும் பாண்டியன், சிறுகதையில் வரும் பாண்டியன் ஆகிய இருவருமே நீதிமுறை என்ற உயரிய பொறுப்பைச் சொந்த சுகதுக்கத்திற்குப் பலியாக்குகின்றனர். பிறகு  தாமே அதற்குப் பலியாகின்றனர். எந்தக் காலத்திலும் நாட்டை ஆளும் பொறுப்புள்ள தலைவர்கள் கைவிடக் கூடாத ஒரு பண்பை சிலப்பதிகாரம் போலவே சி.சு.செல்லப்பாவின் ‘ கனவின் எதிரொலி’ சிறுகதையும்  ஆள்பவர்களுக்கு அச்சமூட்டி நினைவுபடுத்துகிறது.

மணி மீனாட்சிசுந்தரம்.

உதவிய நூல்கள் :

1. இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் மூலமும் உரையும்.

உரை : ந.மு. வேங்கடசாமி நாட்டார்,

ராமையா பதிப்பகம், சென்னை -14.

2. சி.சு.செல்லப்பா சிறுகதைகள்,

    எழுத்து பிரசுரம், ஜீரோ டிகிரி

‌‌    பதிப்பகம், சென்னை – 50.

Exit mobile version