அக்டோபர் 12 வெள்ளிக்கிழமை அதிகாலை, பொழுது புலர்ந்து வெளிச்சம் வந்ததுமே வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் மிக அழகிய தீவுக்கூட்டமான லுகாயோஸின் (Lucayos) ஒரு பகுதியான, அங்கிருந்த பழங்குடியினரால் ‘குவானாஹானி’ என அழைக்கப்பட்ட, அவர்கள் முதன்முதலில் நிலம் பார்த்த அந்தத்தீவில் இறங்க கப்பல் குழுவினர் தயாரானார்கள்.
தீவுக்கு சற்று முன்னரே கப்பலை நிறுத்திவிட்டு மிகச்சிறிய மரப்படகுகளை கப்பலிலிருந்து இறக்கி, அதில் குறிப்பிட்ட சிலருடன் ஆயுதங்கள் தரித்து, முழு அரச உடையில் கொலம்பஸ் முதலில் சென்று நிலத்தில் காலடி எடுத்துவைத்தார். அவரைப் பின்ஸோன் சகோதரர்கள் பின்தொடர்ந்தனர்.
இத்தனை நாட்கள் உயிரைப் பணயம் வைத்து, கடலில் தத்தளித்து, ஒருவழியாக நிலத்தைக் கண்டடைந்த அந்தப் பெரு மகிழ்ச்சியிலும் நிம்மதியிலும், கொலம்பஸ் உடனடியாக மண்ணில் மண்டியிட்டு கண்ணீர் வழிந்தோட, தங்களைக் காத்த இறைவனுக்கு நன்றி கூறி உணர்ச்சிப்பூர்வமாகப் பிரார்த்தனை செய்தார்.
பிரார்த்தனை செய்து முடித்த கையோடு எழுந்து நின்று, ஸ்பெயின் நாட்டின் அரச தம்பதியரின் பெயரால் எந்த எதிர்ப்புமில்லாமல் அந்த நிலத்தைக் கைப்பற்றுவதாகவும், உரிமை கோருவதாகவும் அதிகாரப்பூர்வமாக உரக்க அறிவித்தார்.
கொலம்பஸ் குழுவினரை, அந்தத் தீவின் முழு நிர்வாணமாயிருந்த பழங்குடியினர் சற்றுத் தொலைவில் குழுமியிருந்து எச்சரிக்கையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
பின்னர் ஸ்பேனிஷ் அரசக்கொடியை கொலம்பஸும், அரசகுடும்பத்தினரின் இலச்சினைகளும், பச்சை நிறச் சிலுவை மற்றும் அரசரைக் குறிக்கும் F, Y என்னும் மகுடம் சூட்டப்பட்ட எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பயணக் குழுவின் சிறப்புப் பதாகையை (The Expedition Banner) பின்ஸோன் சகோதரர்களும் கொண்டுவந்து அங்கே கம்புகளில் கட்டி மண்ணில் நட்டுவைத்தனர்.
பதாகையில் இருந்த F என்பது அரசர் பெர்டினாண்டையும் , Y என்பது ராணி இஸபெல்லாவையும் (அக்கால ஸ்பானிஷ் எழுத்துப்படி Ysabel) குறிக்கும் குறியீடுகள்.
கொலம்பஸ் கையில் வைத்திருந்த அரசக்கொடியில் காஸ்டில் (Castile) பேரரசின் சின்னமான நீலநிறச்சாளரங்கள் கொண்ட பொற்கோட்டை மற்றும் லியோன் (León) பேரரசின் சின்னமான ஊதா நிறச் சிங்கம் ஆகிய இரண்டும் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்ட ஒரே துணியில் தைக்கப்பட்டிருந்தன. இதுவே ‘The Royal Standard of Spain’ எனப்பட்ட ஸ்பேனிஷ் அரசக் கொடி.
இரு வேறு அரசின் இலச்சினைகள் ஒரே கொடியில் இருந்ததற்கு ஒரு சுவாரசியமான வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. ஸ்பெயின் இன்று ஒரே நாடாக இருந்தாலும், 1492-ல் கொலம்பஸ் கடற்பயணம் புறப்பட்டபோது அது பல தனித்தனி அரசுகளாக இருந்தது. அதில் மிகவும் சக்திவாய்ந்த இரண்டு பேரரசுகள் தான் காஸ்டில் மற்றும் லியோன்.
இந்த இரண்டு பேரரசுகளும் ஏன் ஒரே கொடியில் இணைந்தன என்பதைப் பார்க்கலாம்:
காஸ்டில் பேரரசு (The Kingdom of Castile) – பொற்கோட்டை
அந்தப் பகுதியில் தற்காப்புக்காக நூற்றுக்கணக்கான ராணுவக் கோட்டைகள் கட்டப்பட்டிருந்ததால் அந்தப் பெயர் வந்தது. எனவே, அவர்கள் தங்கள் நாட்டின் சின்னமாக சிவப்புப் பின்னணியில், மூன்று கோபுரங்கள் கொண்ட பொற்கோட்டையை வைத்திருந்தனர்.
லியோன் பேரரசு (The Kingdom of León) – ஊதா நிறச் சிங்கம்
ஸ்பானிஷ் மொழியில் ‘León’ என்றால் “சிங்கம்” என்று பொருள். தங்களின் வீரத்தையும் போர்க்குணத்தையும் காட்ட, அவர்கள் வெள்ளை நிறப் பின்னணியில், தலையில் தங்கக் கிரீடம் அணிந்த அடர் ஊதா (அல்லது சிவப்பு) நிறச் சிங்கத்தைச் சின்னமாகப் பயன்படுத்தினர்.
இந்த இரண்டும் ஒரே கொடியாக மாறியதுதான் கூடுதல் சுவாரஸ்யம்;
1469-ல் காஸ்டில் பேரரசின் இளவரசி இஸபெல்லாவும், அரகான் பேரரசின் இளவரசர் பெர்டினாண்ட்டும் திருமணம் செய்து கொண்டனர். அரகானும் காஸ்டிலுக்கு இணையான மற்றொரு பேரரசுதான்.
முதலில் காஸ்டில் மற்றும் லியோன் ஆகிய இரண்டு ராஜ்ஜியங்களும் இணைந்து ஒரே பெரிய கூட்டணியாக (Crown of Castile) மாறியிருந்தன. அதனால் இவர்களது கொடியில் கோட்டையும் சிங்கமும் இணைந்திருந்தன. இதன் பிறகு இவர்களது திருமணம் நடந்தபோது, இந்த மூன்று ராஜ்ஜியங்களும் ஒரே குடையின் கீழ் இணைந்து இன்றைய ஸ்பெயின் என்ற பெரிய நாடு உருவாக அடித்தளம் அமைந்தது.
காஸ்டில்-லியோன் கூட்டணியின் அரசியாக இஸபெல்லாவும் அரகான் ராஜ்ஜியத்தின் அரசராக பெர்டினாண்டும் பொறுப்பேற்றார்கள்.
கொலம்பஸின் நாட்குறிப்புகளின்படி, அந்தப்பயணத்துக்கு முழு நிதி உதவியும், ஆதரவும் வழங்கியது முதன்மையாக ராணி இஸபெல்லா தான். எனவே அவர் தரை இறங்கியபோது ராணி இஸபெல்லாவின் முதன்மை ராஜ்ஜியங்களான காஸ்டில் மற்றும் லியோன் ஆகியவற்றின் கூட்டுச் சின்னத்தைக் கொண்ட “கோட்டை மற்றும் சிங்கம்” சித்தரிக்கப்பட்டிருந்த கொடியை கையில் ஏந்திச்சென்றார்.
பயணத்தில் கண்டுபிடிக்கப்படும் நிலப்பகுதிகள் அனைத்தும் ஸ்பெயின் நாட்டு அரச தம்பதியரின் ஆட்சிக்கு உட்பட்டவை என்பதை உலகிற்கு அறிவிக்கவே இந்தக் கொடி பயன்படுத்தப்பட்டது. ஸ்பெயின் நாட்டின் அரச ஆவணக் காப்பகங்களில் இன்றும் இந்த கொடிகள் மற்றும் பதாகைகளின் விவரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஐரோப்பியக் கடற்பயண வரலாற்றில், ஒரு புதிய நிலப்பகுதியைக் கைப்பற்றுவதைக் குறியீடாக உணர்த்திய முதல் கொடி இதுதான்
புதிய நிலத்தைக் கைப்பற்றிய அந்த வரலாற்றுத் தருணத்தை அரச செயலாளர் ரோட்ரிகோ டி எஸ்கோபெடோ (Rodrigo de Escobedo) சட்டப்பூர்வ ஆவணமாக அங்கேயே எழுதி அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்தார். அவர் முழு பயணக் குழுவிற்கும், ஸ்பெயின் அரசுக்கும் “அரசப் பதிவாளர்” (Royal Scrivener / Notary of the Fleet) ஆகச் செயல்பட்டார்.
அந்த ஆவணத்தில் முதல் சாட்சிக் கையெழுத்திட்டவர் , ஸ்பெயின் அரச குடும்பத்தால் நேரடியாக அனுப்பப்பட்ட அரச மேற்பார்வையாளரான ரோட்ரிகோ சான்செஸ் (Rodrigo Sánchez). இவர் பயணத்தின் அனைத்துச் செயல்பாடுகளையும் கண்காணிக்க அரசால் நியமிக்கப்பட்டவர். (இவர்கள் இருவரின் பெயர்களின் ஒற்றுமையால் பல வரலாற்றுப்பதிவுகளில் இரண்டுமே ஒருவரின் பெயர்தான் எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டது) அடுத்து சாட்சிக் கையெழுத்திட்டவர்கள் பின்ஸோன் சகோதரர்கள்.
வந்து இறங்கியதுமே கொலம்பஸ் அந்த தீவை நன்றாக நோட்டமிட்டிருந்தார். அந்தத் தீவு சுண்ணாம்புப்பாறை மற்றும் பவளப்பாறைகளால் உருவாகியிருந்தது. அங்கு மலைகளோ , ஆறுகளோ இல்லை. தட்டையான நிலப்பரப்பும், சுற்றிலும் தெளிவான நீல நிறக் கடலுமாக அற்புதமான தீவு அது. தீவின் உட்பகுதிகளும் கடற்கரைகளும் அடர்ந்த அலையாத்திக் காடுகளால் சூழப்பட்டிருந்தன
கொலம்பஸ் அக்டோபர் 13, 1492 அன்று குவானாஹானி தீவைப் பற்றி எழுதும்போது;
“இந்தத் தீவு மிகவும் பெரியது, தட்டையானது, இங்கே பசுமையான மரங்களும், நீர்நிலைகளும் நிறைந்துள்ளன. “மரங்கள் அனைத்தும் மிகவும் பசுமையாக, நம் ஸ்பெயினின் மே மாத மரங்களைப் போல இலைகள் நிறைந்து காணப்படுகின்றன” இங்கே மலைகள் ஏதும் இல்லை’’ என்கிறார்.
அங்கு வாழ்ந்து வந்த பூர்வகுடி மக்கள் அமைதியான குணம் கொண்ட அரவாக் (Arawak) மொழி பேசும் லுகாயன் மக்கள் (Lucayans). அவர்கள் அந்தத் தீவை ‘குவானஹானி’ (Guanahani) என்று அழைத்தனர். கைப்பற்றிய பிறகு கொலம்பஸ் அதற்கு ஸ்பானிய மொழியில் ‘புனித மீட்பர்’ – holy saviour என்று பொருள்படும் ‘சான் சால்வடர்’ (San Salvador) என்று மறுபெயரிட்டார்.
தொலைவில் இருந்த பூர்வகுடிமக்கள் மெதுவாக அருகில் வந்து கொலம்பஸ் குழுவினரை வேடிக்கை பார்த்தார்கள். கொலம்பஸ் அவர்களைக் குறித்து அவரது நாட்குறிப்பில் இப்படி எழுதுகிறார் “அவர்களில் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் முழு நிர்வாணமாக, மிகவும் வறியவர்களாக இருந்தார்கள். நான் அந்தக்குழுவில் ஒரே ஒரு இளம் பெண்ணை மட்டுமே பார்த்தேன், மற்ற ஆண்கள் அனைவருமே இளைஞர்களாக, 30 வயதிற்குள்தான் இருப்பார்கள் என்னும் தோற்றம் கொண்டிருந்தார்கள். ஆயுதங்கள் ஏதும் அவர்களிடம் இல்லை, ஆயுதங்களைக் குறித்து அவர்கள் அறிந்திருப்பதாகவும் தெரியவில்லை. அவர்களிடம் நான் சில குறுவாள்களைக் காண்பித்தபோது, அவர்கள் அதன் கூர்மையான பகுதியை பிடித்து வாங்கி கையை கீறிக்கொண்டதிலிருந்து ஆயுதங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது உறுதியானது.’’
’’நல்ல புத்திசாலிகளாக இருக்கிறார்கள், எனவே சிறந்த அடிமைகளாக இருப்பார்கள் என நம்புகிறேன். அவர்களுக்கென்று மதம் இருப்பதுபோல தெரியவில்லை; எனவே மிக எளிதாக அவர்களைக் கிறித்தவத்திற்கும் மாற்ற முடியும். கடவுள் அருள் இருந்தால், நான் நாடு திரும்புகையில் இவர்களில் 6 பேரையாவது உடன் அழைத்து வருகிறேன்; அவர்களுக்கு நம் மொழியைப் பேசக் கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கிறது.”
இவற்றை எழுதிய கொலம்பஸ் அந்தத் தீவுவாசிகளை அவர் இந்தியக் கடற்கரையில் இருப்பதாக நம்பியதால், ‘இந்தியர்கள்’- இண்டீஸ் எனத் தன் நாட்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
“அந்தப் பழங்குடி மக்கள் எல்லா விதத்திலும் வறியவர்களாக இருக்கிறார்கள். நம் மொழி அவர்களுக்குப் புரியவில்லை; நான் அவர்களுடன் சைகையில்தான் பேசினேன். “வெறும் 50 சிப்பாய்களை வைத்துக்கொண்டு நான் முழுத்தீவையும் என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும்’’ என அரசருக்கு எழுதிய கடிதத்தில் கொலம்பஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
(இதில் ‘நான்’ ‘என்’ [I] என்பதைப் பலமுறை கொலம்பஸ் தனது பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறார்)
பழங்குடியினர் கொலம்பஸ் குழுவினருக்கு விருந்தினர்களுக்குச் செய்யும் மரியாதைகளைச் செய்து பருத்திப்பந்து,- கனிவகைகள், மீன் எலும்பு, மண் மற்றும் சிப்பிகளில் செய்த பரிசுப்பொருட்களை வழங்கினார்கள். அவர்கள் கப்பல் பயணியரை தொட்டுப்பார்க்க மிகவும் விரும்பினார்கள்,
பதிலுக்கு இவர்களும் பறவைக் கால் மணிகளையும், கண்ணாடிப் பாசிகள் கோர்த்த கழுத்து மாலைகள் மற்றும் சிவப்புத் தொப்பிகளையும் அளித்தபோது, அவர்கள் ஆர்வமுடன் அவற்றைப் பெற்றுக்கொண்டார்கள். அவர்களில் பலர் பொன்னாலான சிறு மூக்குத்திகளை அணிந்திருந்ததைக் கொலம்பஸ் கவனித்திருந்தார்.
அம்மக்கள் ஐரோப்பியர்களை ஏதோ வானத்திலிருந்து வந்த தேவதூதர்கள் என்று நினைத்துத் தங்களின் மிக உயரிய விருந்தோம்பலை வழங்கினர். கொலம்பஸ் அவர்களுக்குக் கொடுத்த கண்ணாடிப் பாசிகளும், சிவப்புத் தொப்பிகளும் ஐரோப்பாவில் மிக மலிவான பொருட்கள். ஆனால், கண்ணாடி போன்ற பளபளப்பான பொருட்களை அதுவரை பார்த்திராத லூகாயன் மக்கள் அவற்றை ஆச்சரியத்தோடு வாங்கிக்கொண்டனர்.
கரையிறங்கியவர்களுக்கு பரிசளித்ததோடு, அவர்கள் கட்டுமரங்களில் கப்பல்களைச் சூழ்ந்துகொண்டு பழக்கப்படுத்திய கிளிகள், பருத்திப்பஞ்சு உருண்டைகள் மற்றும் மீன் பற்களை நுனியில் சொருகிய குத்தீட்டிகள் ஆகியவற்றை கப்பலில் இருந்தவர்களுக்கும் பரிசளித்தார்கள்.
பழங்குடியினரிடம் மொழி புரியாததால் சைகைமொழியிலேயே அனைவரும் தொடர்புகொண்டார்கள். ஆண்களின் உடலில் இருந்த தழும்புகளைப் பற்றிக் கொலம்பஸ் கேட்டபோது, அருகிலிருக்கும் தீவினரோடு சண்டையிட்ட காயங்களின் தழும்புகள் என அவர்கள் சைகை மொழியில் பதிலளித்தார்கள்.
அவர்களின் விருந்தோம்பலையும் அறியாமையையும் கள்ளமற்ற அன்பையும் கொலம்பஸ் பலவீனம் என்றும் அடிமைப்பண்பு எனவும் கணக்கிட்டார். மனிதாபிமானமற்ற கொலம்பஸின் அத்தகைய கணக்கீடுகளால்தான் அந்த இனமே மெல்ல மெல்ல அழிந்தது. அவர்கள் மூக்கில் அணிந்திருந்த அந்தச் சின்னஞ்சிறு தங்கமூக்குத்திகள் கொலம்பஸின் பேராசையைத் தூண்டின. அந்தத் தங்கம் எங்கே கிடைக்கிறது என்று அவர் கேட்கத் தொடங்கியதே அந்த நாகரிகத்தின் அழிவுக்கு முதல் புள்ளியாக அமைந்தது.
கொலம்பஸ் ஆசியாவை (குறிப்பாக இந்தியா ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளை) நோக்கியே பயணம் செய்தார். மார்க்கோ போலோ போன்ற பயணிகளின் குறிப்புகளைப் படித்துவிட்டு, ஆசிய மக்கள் பட்டாடைகளுடனும், பெரும் செல்வத்துடனும், பெரிய அரண்மனைகளில் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையோடுதான் அவர் கிளம்பினார். ஆனால், அந்தத் தீவின் எளிய பூர்வகுடிகளைப் பார்த்தவுடன், அவர் எதிர்பார்த்த அந்த “ஆசிய நாகரிகம்” அங்கே இல்லாததால், அவர்களை மிகவும் நாகரிகமற்றவர்களாகவும், தாழ்ந்தவர்களாகவும் அவர் தன் நாட்குறிப்பில் பதிவு செய்தார்.
கொலம்பஸ் கண்டுபிடித்தது அந்நியர்கள் கால் வைத்திருக்காத ஒரு கன்னித்தீவுதானே தவிர மனிதக் காலடி பட்டிருக்காத ஒரு புதிய உலகம் அல்ல; தனி மொழியும், விவசாயமும், அரசியலும் கொண்டிருந்த ஒரு பழங்குடி சமூகம் அங்கே ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருந்தது. கரீபியன் தீவுகளில் வாழ்ந்த பூர்வகுடிகள் ஒட்டுமொத்தமாக ‘தைனோ மக்கள்’ (Taíno) என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவருமே ஒரே கலாச்சாரம், ஒரே மொழிக்குடும்பம் (Arawakan) மற்றும் ஒத்த வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தனர்.
15ம் நூற்றாண்டின் மாபெரும் பழங்குடி இனமாக இருந்த இவர்களை, கொலம்பஸ் “நாகரிகமற்றவர்கள்” என்று சித்தரித்தாலும், உண்மையில் தைனோ சமூகம் ஒரு மிகச்சிறந்த அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தது. கசீக்குகள் (தலைவர்கள்), நிதைனோக்கள் (பிரபுக்கள்), பெஹிக்குகள் (சாமியாரடிகள்/மருத்துவர்கள்) மற்றும் சாமானிய மக்கள் எனப் பிரிந்து, சட்டதிட்டங்களுடன், பெரும் போர்கள் ஏதுமின்றி அமைதியான, கட்டுக்கோப்பான ஒரு வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தனர்.
இந்தத் தைனோ இன மக்கள் பல்வேறு தீவுகளுக்குப் புலம்பெயர்ந்தபோது, அவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்து வெவ்வேறு பெயர்களால் அறியப்பட்டனர். அதில், இன்றைய பஹாமாஸ் தீவுகளில் குடியேறிய தைனோ பிரிவினருக்குத்தான் ‘லூகாயன்கள்’ என்று பெயர். ‘லூகாயன்’ (Lucayan) என்ற சொல் ‘Lukkunu-kairi’ என்ற மூல வார்த்தையிலிருந்து வந்தது. அதற்குத் தைனோ மொழியில் “தீவு மக்கள்” என்று பொருள்.
கொலம்பஸ் கால்பதித்த சான் சால்வடர் தீவு பஹாமாஸ் தீவுக்கூட்டத்தில் உள்ளதால், அவர் அங்கு முதன்முதலில் சந்தித்ததும், தனது நாட்குறிப்பில் “மிகவும் வறியவர்களாக, நிர்வாணமாக இருந்தார்கள்” என்று குறிப்பிட்டதும் இந்தத் தைனோ இனத்தின் பிரிவான லூகாயன் மக்களைத்தான்.
தைனோ பழங்குடியினர், தென்னமெரிக்காவின் ஒரினோகோ (Orinoco) நதிக்கரையிலிருந்து வடக்கு நோக்கி நூற்றாண்டுகளாகப் புலம்பெயர்ந்தபடியே இருந்தார்கள். அவர்களின் சிறு சிறு பிரிவுகள் ஒவ்வொரு தீவிலும் குடியேறின.
விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்வது ஆகியவை அவர்களின் முதன்மைத் தொழில்களாக இருந்தன. ஒவ்வொரு இனக்குழுவிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இருந்தார்கள். தீவுக் கிராமத்தின் மத்தியில் பெரும் மைதானம் ஒன்று இருந்தது. அதில் அவர்களின் விழாக்கள், கொண்டாட்டங்கள், வழிபாடுகள் ஆகியவை நடந்தன.
பனையோலைகள், மரக்கட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்ட வட்டவடிவ குடிசைகள் சாதாரண மக்களுக்காகவும், செவ்வக வடிவக் குடிசைகள் தலைவர்களுக்காகவும் இருந்தன. தைனோ மொழியில் இவை பொஹியோஸ் (Bohíos) எனப்பட்டன. இரவில் குடிசைகளில் உறங்காமல் ஹேமக் (Hamaca / Hammock) எனப்படும் மரங்களுக்கு இடையே கட்டப்பட்டிருக்கும் தூளிகளில் அவர்கள் உறங்கினார்கள். இந்த ‘ஹேமக்’ என்னும் சொல் ஐரோப்பிய மொழிகளுக்குள் நேரடியாக நுழைந்தது. ஐரோப்பியர்கள் தூளிகளை அதுவரை பயன்படுத்தியதில்லை என்பதால், கொலம்பஸ் இதனை மிகுந்த ஆர்வத்துடன் தனது நாட்குறிப்பில் பதிவு செய்திருந்தார். இந்தத் தைனோ இனத்திடமிருந்தே நாம் hurricane , canoe, hammock, barbecue, tobacco போன்ற பல சொற்களைப் பெற்றோம்.
தைனோ மொழியில் யுக்கா என்றழைக்கபட்ட மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், பருத்தி ஆகியவை அங்கே பயிராயின. 100 பேர் வரை அமர்ந்து பயணிக்கும் பெரிய கட்டுமரங்களைச் செய்வதில் அவர்கள் தேர்ந்தவர்களாக இருந்தார்கள். இரும்பு உள்ளிட்ட எந்த உலோகமும் அவர்களிடம் இல்லை; எனவே கற்கள், எலும்புகள், சிப்பிகள் மற்றும் மரக்கட்டைகளில் கருவிகளைச் செய்து பயன்படுத்தினார்கள். வழிபாட்டுக்காக அழகிய மட்பாண்டங்களைச் செய்தார்கள்.
பருத்தி அங்கே காடுகளில் இயற்கையாக வளர்ந்தது, அவர்கள் பயிரிடவும் செய்தனர். இதைக் கொண்டுதான் அவர்கள் மீன்பிடி வலைகள் மற்றும் ‘ஹேமக்’ தூளிகளைச் செய்தனர்.
மக்காச்சோளம் இவர்களின் முக்கியமான தானிய உணவு. தைனோ மொழியில் சர்க்கரைவள்ளிக் கிழங்கிற்கு ‘படாதா’ (Batata) என்று பெயர். இந்தசொல்லிருந்தே ஆங்கிலத்தின் Potato என்ற சொல் உருவானது. அவர்கள் வழிபாட்டுச் சடங்குகளுக்கும், மருத்துவத்திற்கும், புகைப்பிடிப்பதற்கும் புகையிலையைப் பயன்படுத்தினர்.
உணவில் காரத்திற்காக மிளகாயைப் பயன்படுத்தினர். தைனோ மொழியில் இதற்கு ‘அஹி’ (Ají) என்று பெயர். சோளக் கொல்லைகளுக்கு இடையே பூசணிக்காய் மற்றும் பீன்ஸ் வகைகளை ஊடுபயிராகப் பயிரிட்டனர். இவை தவிர, கொய்யா பப்பாளி போன்ற பழ மரங்களும் அங்கே செழித்து வளர்ந்திருந்தன.
ஸெமிஸ் (Zemis) எனப்படும் மூத்தோரின் ஆன்மாக்கள் இயற்கையின் அம்சங்களுடன் இணைந்த தெய்வத்தை அவர்கள் வழிபட்டார்கள். மரக்கட்டையினாலோ அல்லது கற்களாலோ தெய்வ உருவங்களை வடித்து நிறுவி, பருத்தியினால் அலங்காரம் செய்தார்கள்.
தைனோ மக்கள் மரவள்ளிக்கிழங்கு விளைச்சல்செழிக்க ‘யுகாஹு’ (Yúcahu) என்ற ஆண் தெய்வத்தையும், கடல் சீற்றங்கள் மற்றும் சூறாவளிகளைக் கட்டுப்படுத்த ‘குவாபான்செக்ஸ்’ (Guabancex) என்ற பெண் தெய்வத்தையும் வழிபட்டார்கள். அவர்கள் செதுக்கிய பல ஸெமிஸ் சிலைகள் இன்றும் தொல்பொருள் அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கொலம்பஸ் காலடி பட்ட 30 வருடங்களிலேயே, அந்த இனம் முற்றிலுமாக அழிந்தது. ஐரோப்பியர்களால் அறிமுகமான, அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாத, அம்மை (Smallpox) போன்ற நோய்களாலும், கட்டாயப்படுத்தப்பட்டுத் தங்கச் சுரங்கம் தோண்டுவது உள்ளிட்ட பலவிதமான கடின உழைப்புகளாலும், விவசாய வேலைகள் தடைப்பட்டு, ‘குடும்பம்’ என்னும் அமைப்பு உடைந்து, விளைச்சல் குறைந்து, உடல் நலிந்து, ஸ்பானிஷ் படையெடுப்பை எதிர்க்கும் திராணியற்றுப் பலரும் மடிந்தனர்.
மிக அமைதியான கண்டுபிடிப்பு எனக் கொலம்பஸ் தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டிருந்தாலும், நிலம் தொட்ட ஒரு மணி நேரத்திலேயே கொலம்பஸ் தனது அதிகாரத்திற்குள் அந்தப் பழங்குடியினரைக் கொண்டு வந்திருந்தார்.
ஆசியாக் கண்டத்தின் கிழக்குப் பகுதிக்கு வந்திருப்பதாக (தன் இறுதிக்காலம் வரைக்குமே) நம்பிய கொலம்பஸ், அந்தத் தீவின் அருகிலிருந்த சில தீவுகளுக்கும் சென்று அங்கே பொன், மிளகு போன்ற மசாலாப் பொருட்கள் இருக்கிறதா எனச் சுற்றிப்பார்த்தார்.
தீவிலிருந்த புத்தம் புதிய பழங்களை, மரவள்ளிக்கிழங்கு மாவில் செய்த ரொட்டிகளை, மாவு மூட்டைகளை, தூய குடிநீரை மூன்று கப்பல்களிலும் நிரப்பினார்கள். பசியிலும் பட்டினியிலும் நோயிலும் இருந்த கப்பல் பயணிகள் ஒரே நாளில் புத்துணர்வடைந்தார்கள்.
ஆனால், அந்த முதல் நாளில் இருந்தே இரவில் கொலம்பஸும் பிறரும் தீவில் தங்கவோ உறங்கவோ இல்லை. அவரது குழுவினருடன் மீண்டும் கரைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்களில்தான் உறங்கினார்கள். அச்சுறுத்தல் ஏதும் இல்லாவிடினும் அறிமுகமற்ற தீவுவாசிகளை கொலம்பஸ் முழுவதுமாக நம்பவில்லை. ஏதேனும் பெரிய தாக்குதலென்றால் கப்பல் உடனடியாகப் புறப்படத் தயாரான நிலையிலும் இருந்தது.
கொலம்பஸ் என்னும் கடலோடி கப்பல்களைத் தனது பாதுகாப்பிற்காகவே அந்நாட்களில் பயன்படுத்தினார். மேலும், கப்பலில் மட்டுமே தன் கட்டுப்பாட்டுக்குள் மற்றவர்கள் இருப்பார்கள் என்பதையும் அவர் அறிந்திருந்தார். தீவின் பல இடங்களில் குழுக்களாக பிரிந்து இருக்கையில் அவர்களைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியாது என்பதால், தேவையானவற்றை எடுத்துக்கொண்டு கட்டுமரங்களில் பயணித்து, முழுக்க இருட்டுவதற்குள் அவர்கள் அனைவரும் கப்பலுக்கே சென்றார்கள்.
அந்த நாட்களிலும் அன்றாடப் பிரார்த்தனைகள் ஒரு தொய்வுமின்றி நடந்தன. வழக்கம்போலவே புலரியிலும் அந்திசாய்கையிலும் பிரார்த்தனைப் பாடல்கள் பாடப்பட்டன.
புனித மீட்பரின் தீவில் கொலம்பஸின் குழு மூன்று நாட்கள் மட்டுமே இருந்தது. அவர்கள் எதிர்பார்த்த தங்கம் அங்கு எங்குமே இல்லை என்பதால், பழங்குடியினர் அணிந்திருந்த சிறு மூக்குத்திகளையும் காதணிகளையும் கட்டாயப்படுத்தி கழற்றச் சொல்லிச் சேகரித்துக்கொண்டார்கள்.
அக்டோபர் 14 அன்று அவர்கள் அங்கிருந்து அருகிலிருக்கும் தீவுகளில் இருக்கும் தங்கத்தைத் தேடுவதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன் 7 பெண்கள் ,அவர்களின் மூன்று குழந்தைகள் மற்றும் 5 ஆண்களைக் கட்டாயப்படுத்திச் சிறைபிடித்துச் சென்றார்கள். குடும்பமாக சிறைப்பிடித்தால்தான் அவர்கள் பெரிதாக எதிர்க்காமலிருப்பார்கள் என்று கொலம்பஸ் கணக்கிட்டிருந்தார்.அக்டோபர் 14 அன்று தீவின் பிற பகுதிகளைப் படகுகள் மூலம் சுற்றிப் பார்த்துவிட்டு, அன்று மதியத்திற்கு மேல் அடுத்த தீவுகளை நோக்கிப் புறப்பட்டார்.
வடகிழக்குத் திசையில் இருக்கும் தீவுகளுக்குச் சிறு படகுகளில் சென்ற கொலம்பஸ், அங்கே தங்கம் அல்லது மிளகு இருக்கிறதா எனத் தீவிரமாகத் தேடினார். அங்கு எங்கு பலத்த வலுவான கோட்டையை உருவாக்க முடியும் என்று மண்பரிசோதனைகளையும் அவர் செய்தார். அவர் கவனித்தவற்றை, கப்பல்களில் நடந்த நிகழ்வை , தீவில் நடந்தவை என அனைத்தையும் விவரமாக தனது நாட்குறிப்பில் (Log book) பதிவு செய்திருந்தார்.
கொலம்பஸ் தன் கைப்பட எழுதிய அந்த நாட்குறிப்புகள் மாயமாக மறைந்துபோயின.அவற்றின் நகலும் காணாமல் போனது. அப்படியானால் நமக்கு பயணநிகழ்வுகளைக் குறித்து எப்படி இத்தனை தகவல்கள் கிடைத்தன?
மேலும் தீவில் இறங்கியதும் கொலம்பஸ் உடைவாளை நிலம் நோக்கித் தாழ்த்தி, ஸ்பானிஷ் கொடியருகே வலதுகையை உயர்த்தி, தொப்பியைக் காலடியில் போட்டுக்கொண்டு நிற்கும், பின்னணியில் சாண்டா மரியா கப்பல் தெரியும் புதிய நிலத்தைக் கைப்பற்றியதைக் குறிக்கும் ஓவியங்கள் பிற்பாடு பல பிரபல ஓவியர்களால் வரையப்பட்டாலும், அப்படி ஏதும் நடந்ததாக அவரது குறிப்புகளில் இல்லவே இல்லை.
ஒரு தேசத்தின் வரலாறு எப்படி ஒருசிலரால் கட்டமைக்கப்பட்டு நிறுவப்படுகிறது, நாடகீயமாக, உணர்வுபூர்வமாகச் சொல்லப்பட்டுத் தலைமுறைகளாகப் பரப்பப்படுகிறது என்பதற்கு இந்த விவரணைகளும் அவற்றைத் தொடர்ந்து உருவான ஓவியங்களும் நல்ல உதாரணங்கள்.
காணாமல் போன நாட்குறிப்பு மற்றும் இந்த உணர்வுபூர்வமான புனையப்பட்ட சித்திரம் ஆகியவற்றை குறித்து அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்.
-தொடரும்…
