
எனது பெரும் மதிப்புக்குரிய ஆளுமை இந்திரா பார்த்தசாரதி (இனி ‘இபா’) அவர்களுடன் எனக்கு நீண்ட காலம் தொடர்புள்ளது. அவர் குறித்த சிறப்பிதழ் வெளிவருவது மிகவும் மகிழ்ச்சி. இந்த இதழில் அவர் நாடகங்கள் குறித்த எனது அனுபவங்களை எழுதக் கிடைத்தது எனக்குப் பெருமை தரும் விடயம்.
இபா அவர்களை முதலில் ஒரு சிறுகதை, நாவல் எழுத்தாளராகத்தான் அறிந்திருந்தேன். பின்னர் “கசடதபற” இதழில் அவரது “மழை’ நாடகம் வெளிவந்த போது வாசிக்கக் கிடைத்தது. அதனை 1976 ஆம் ஆண்டு இலங்கையில் எமது பேச்சு வழக்கு மற்றும் சில மாற்றங்களுடன் மேடையேற்றிய போது மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்தது. கொழும்பில் உள்ள சிறந்த அரங்கமான ‘லயனல் வென்ட்’ அரங்கில் முதலில் இந்த நாடகம் மேடையேற்றப்பட்டது.
இபா அவர்கள் எழுதிய முதல் நாடகம் ‘மழை’. என்னுடைய நாடகப் பயணத்தில் முதல் வெற்றி நாடகம் “மழை”. இது இலங்கையிலேயே பல தடவைகள் பல இடங்களில் மேடை கண்டது. பின்னர் புலம்பெயர்ந்த பிறகு பல நாடுகளுக்கு இந்த நாடகத்தை எடுத்துச் சென்றோம். இது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
1994 ஆம் ஆண்டு நாம் லண்டனில் இருந்து சுவிற்சர்லாந்து நாட்டிற்குச் சென்று ஐந்து நாட்கள் நான்கு நகரங்களில் நாடகவிழாக்களை நடத்திய போது இபா எங்களுடன் வந்து எல்லா ஆற்றுகை களையும் பார்வையாளர்களோடு இருந்து பார்த்தார். அங்கு நடந்த எல்லா நிகழ்வுகளிலும் ‘மழை’ நாடகம் மேடையேறியது. அவரது ‘பசி’ நாடகமும் மேடையேறியது.
சூரிச் நகரில் பத்து நாட்கள் எம்முடனேயே தங்கியிருந்தார். எல்லோரிடமும் மிகவும் தோழமையுடன் பழகினார். என்னோடும் எனது மனைவி ஆனந்தராணியுடனும் அவர் ஒரு குடும்ப நண்பர் போலவே பழகுவார். அவர் எங்களை ஆனந்தி, பாலா என்று உரிமையுடன் நட்பு ரீதியாக அழைப்பது எனக்கு மிக நெருங்கிய உணர்வைத் தந்தது. 1994 இல் தனது ‘கொங்கைத் தீ’ நாடக நூலை சூரிச் நகரில் எமக்குப் பரிசளித்தார்.
‘இபா’ அவர்களுடைய ‘பசி’ நாடகத்தையும் நாங்கள் இலங்கையிலும் புகலிட நாடுகளிலும் பல தடவை மேடையேற்றி இருக்கிறோம்.
2004 இல் என நினைக்கிறேன், அவர் அமெரிக்காவில் இருந்த பொழுது ‘சூறாவளி’ என்ற நாடகத்தை எழுதி முடித்திருந்தார். அது பிரசுரம் ஆவதற்கு முன்னரே எனக்கு அந்தப் பிரதியை அனுப்பி இருந்தார். அதனை நாங்கள் 2013ஆம் ஆண்டு லண்டனில் மேடையேற்றினோம். மேடையேற்றக் காணொளியை அவருக்கு அனுப்பிய போது அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
எமது புகலிட நாடக விழா மலர்கள் பலவற்றில் அவரது வாழ்த்துச் செய்தி பிரசுரமாகி இருக்கிறது. 2023-இல் நான் இலங்கையில் வெளியிட்ட ‘அரங்க கட்டுரைகள்’ நூலில் அவரது அணிந்துரை இடம் பெற்றிருப்பது எனக்கு மிகவும் பெருமை தருகிறது.
“நாடகம் என்றால் அது மேடை ஏறுவதில் தான் முழுமை பெறுகின்றது என்பது என் கருத்து.
நாடகம் எழுதுவதை நான் மிகவும் விரும்புகிறேன் ஆனால் எனது பல நாடகங்கள் தமிழ்நாட்டில் நான் எழுதிய மொழியில் மேடை ஏறவில்லை என்ற குறை எனக்கு உண்டு” என்று இந்திரா பார்த்தசாரதி அவர்கள் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ‘இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள்’ என்ற அவருடைய முழு நாடகங்கள் அடங்கிய தொகுப்பு 2007 வெளிவந்த போது எழுதியுள்ளார்.
தான் எழுதிய நாடகங்கள் தமிழில் இந்தியாவில் பரவலாக மேடையேறாத சூழலில் நாம் அவற்றைப் பல தடவைகள் பல நாடுகளில் மேடையேற்றி வருகிறோம் என்பதில் அவருக்கு மகிழ்ச்சி.
சில வருடங்களுக்கு முன்னர் அவரது நாடகங்களில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்தது . அந்த நூலில் ‘மழை’, ‘பசி’ ஆகிய நாடகங்களின் எமது மேடையேற்ற விபரங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன.
நான் சென்னை செல்லும்போதெல்லாம் அவரைச் சந்திப்பதுண்டு. அவருடைய எண்பதாவது பிறந்தநாள் நிகழ்வில் நாங்கள் கலந்து கொண்ட போது அங்கு வந்திருந்தவர்கள் மத்தியில் ‘இபா’ உரையாற்றிய போது எம்மை அறிமுகப்டுத்திப் பேசினார் .
2010இல் எமது ‘மழை’ நாடகம் சென்னை பெசன்ட் நகரில் மேடையேற்றப்பட்ட போது அங்கு பார்வையாளர்களுடன் அமர்ந்திருந்து நாடகத்தைப் பார்த்து ரசித்தார்.
இந்த ஆண்டு எனது நெறியாள்கையில் பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் முதன்முதலில் எழுதிய ‘மழை’ நாடகம் இலங்கையில் மேடையேறி ஐம்பது ஆண்டுகள் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த ஆண்டு அதைக் குறிக்கும் முகமாக எமது ‘புலம் பெயர் ஆற்றுகை’ என்ற எனது நூலை ‘போதிவனம்’ வெளியீடாக சென்னை நாடகர் திரு. கருணபிரசாத் சென்னை கோடம்பாக்கம் ‘படைப்பகம்’ அரங்கில் வெளியிட்டார்.
‘மழை’ நாடகம் எனது நெறியாள்கையில் பல நாடுகளில் 40-க்கும் மேற்பட்ட மேடைகள் கண்டது.
‘மழை’ நாடகத்தில் நடிப்பவர்களுக்குத் திருமணம் ஆகிவிடும் என்று ‘இபா’ அவர்கள் நகைச்சுவையாகக் கூறுவார். இது டெல்கியிலும் இலங்கையிலும் நடந்தது. ‘மழை’ நாடகத்தில் நடித்த நானும் ஆனந்தராணியும் பின்னர் திருமணம் செய்து கொண்டோம். இது குறித்து ‘இபா’ கூறியதை அண்மையில் சென்னையில் நடந்த எனது நூல் வெளியீட்டு வைபவத்தில் உரையாற்றிய ஆவணத் திரைப்பட இயக்குநர் திரு. அம்ஷன் குமார் நினைவுபடுத்தினார்.
இந்த வருடம் பிப்ரவரி மாதம் சென்னை சென்றபோதும் அவரைப் பார்த்து உரையாடினோம். தன்னுடைய 96 வது வயதிலும் வழமை போல நகைச்சுவை உணர்வுடன் உரையாடினார். அவருடைய நினைவாற்றல் அபரிதமானது. இப்போது தான் வாழும் சூழலில் அந்தச் சூழல் பற்றி ஒரு நாடகம் எழுத இருப்பதாகவும் எழுதினால் அதனைத் தயாரிப்பதற்கு எனக்குத் தருவதாகவும் கூறினார்.
இந்த வருடம் நாங்கள் திருவனந்தபுரத்தில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்றிருந்தோம். அங்கு எம்மைக் கண்ட முன்னர் அறிமுகம் இல்லாத ஒருவர், தான் “மழை” நாடகத்தை லண்டனில் 40 வருடங்களுக்கு முன்பு பார்த்ததாகவும் அது இன்னும் தனது மனதில் பசுமையாக இருப்பதாகவும் கூறினார். இது இபா-வின் ‘மழை’ நாடகத்தின் ஒரு சிறந்த விமர்சனமாக எனக்கு பட்டது.
ஏப்ரல் 2026 , லண்டன்
க. பாலேந்திரா
க. பாலேந்திரா ஈழத்து தமிழ் நவீன நாடக முன்னோடிகளில் ஒருவர். இவர் ஒரு பொறியியலாளர். எழுபதுக்கு மேற்பட்ட நாடகங்களை நெறிப்படுத்தி மேடையேற்றியுள்ளார். இவை சுமார் ஆயிரம் மேடைகள் கண்டுள்ளன. இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் புதிய கருத்தோட்டங்களும், அணுகுமுறைகளும்கொண்ட நாடகங்களை உருவாக்கி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக புலம்பெயர் தமிழர்களிடையே ஒரு செறிவான நாடக இயக்கத்தை முன்னெடுத்ததில் பாலேந்திராவின் பங்கு முக்கியமானது. மொழிபெயர்ப்பு என்பது நாடக மொழி மட்டுமின்றி பண்பாட்டு மீள் கட்டமைப்பு ஆகிய நிலைகளிலும் செயல்படுகிறது. உலக நாடக ஆசிரியர்கள் இப்சன், ப்ரெக்ட், ரென்னஸி வில்லியம்ஸ், கார்சியா லோரக்கா, ஹெரால்ட் பின்டர், செகாவ், ஆகியோரின் நாடகங்கள் மற்றும் இந்திய நாடகாசிரியர்கள் மோகன் ராகேஷ், பாதல் சர்க்கார், கிரிஷ் கர்னாட், இந்திரா பார்த்தசாரதி, அம்பை மற்றும் முத்துசாமி ஆகியோரின் நாடகங்களை எடுத்தாள்வதின் மூலம் மாறுபட்ட பிரதிகளில் வெளிப்படும் வாழ்க்கை நிலைகள் பாலேந்திராவின் நாடக வெளிப்பாடுகளுக்கு ஒரு பன்முகத்தன்மை வழங்குவதைப் பார்க்கமுடியும். இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து 40 வருடங்களுக்கு மேலாக லண்டனில் வாழும் இவரது நாடகங்கள், லண்டனிலும் பல ஐரோப்பிய நாடுகளிலும், கனடா அவுஸ்திரேலியா இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலும், மேடையேறியுள்ளன.
