Site icon சொல்வனம் | இதழ் 368 | 14 ஜூன் 2026

புதிய லண்டன்

This entry is part 5 of 5 in the series காப்பிரைட் கதைகள்

அத்தியாயம் 5

தீயில் குளித்து, புதிதாய்ப் பிறந்த லண்டன்

சிறு பொறி

1666 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ம் நாள் நள்ளிரவு.

ஒரு அடுமனையின் அடுப்பில் கனன்று கொண்டிருந்தது முற்றிலும் அணைக்கப்படாத ஒரு கரிக்கங்கு. தாமஸ் பாரினர் நடத்தி வந்த அந்த  அடுமனையே அரண்மனைக்கு ரொட்டிகளைத் தயார் செய்து கொடுத்து வந்தது. நாள் முழுதும் வேலை பார்த்திருந்த களைப்பில் யாரோ ஒரு பணியாளர் அடுப்பை சரியாக அணைக்காமல் விட்டிருக்க வேண்டும் – அப்படித்தான் நம்பப்படுகிறது.

அந்தக் கோடை காலம் கடுமையாக இருந்தது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. தேம்ஸ் நதி அளவில் சிறுத்து ஓடிக் கொண்டிருந்தது. கிணறுகள் வற்றிப் போயிருந்தன. மரத்தால் ஆன வீடுகள். ஓலைக் கூரைகள். வெயிலில் காய்ந்திருந்தன.

களைப்பில் உறங்கிக் கொண்டிருந்த தாமஸ் சத்தம் கேட்டு விழித்தார். மரத்தூண்கள் தீயில் எரிந்து வெடிக்கும் ஒலி. சன்னலில் நிலவு புகையால் கலங்கி இருந்தது. கீழ்த்தளத்தை அடைய, தட்டுத் தடுமாறிப் படிகளைக் கண்டுபிடித்தார் தாமஸ். அவர் கண்ட காட்சி இதயத்தை உறையச் செய்தது. கீழ்தள அடுமனை முழுதும் எரிந்து கொண்டிருந்தது. சென்று அணைப்பதற்கு எதுவும் மீதமில்லை. நிலைமை கைமீறிப் போயிருந்தது.

இப்போது தாமஸுக்கு உயிர் பிழைப்பதே முக்கியம். தன் மகள் ஹென்னா, இன்னமும் எழுந்திருக்காது உறங்கிக் கொண்டிருந்த சில வேலையாட்கள், ஆகியரை எழுப்பினார். படியில் இறங்கிச் செல்ல முடியாது. மேற்கூரை வழியே தப்பிச் செல்வது ஒன்றே வழி. அப்படியே செய்தார்கள். அன்றைய லண்டனின் வீடுகள் ஒன்றையொன்று அடுத்திருக்கும். ஒரு வீட்டின் கூரையில் இருந்து அடுத்தடுத்த வீட்டின் கூரைகள் வழியே தெருவையே கடக்கலாம்.

தாமஸ் மற்றும் அவருடன் தப்பித்தவர்கள் உயிர் பிழைத்தோம் என்று நம்பியபோது, தீ அடுத்த மூன்று வீடுகளைப் பிடித்திருந்தது. தாமஸ் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தபோது அந்தத் தெருவே எரிந்து கொண்டிருந்தது.

தீ அந்தத் தெருவோடு நிற்கவில்லை.


மேயரின் அலட்சியம்

மக்கள் பீதியுடன் தெருக்களில் கூடினர். லண்டன் வாசிகளுக்கு தீ விபத்து புதியதல்ல. மரவீடுகள், ஓலைக் கூரைகள் — எப்போதும், எங்கேனும் தீப்பற்றுவது வழக்கம். காற்றில் தீ பரவும் வேகம் அவர்கள் அறிந்ததே. தீ பரவும் முன் அணைப்பது எளிது. இன்று அது கட்டுக்கடங்காததாகத் தோன்றியது.

மேயரை எழுப்பித் தகவல் சொன்னார்கள். அடுமனை இருந்த தெருவிற்கு அரைத் தூக்கத்தில் வந்து சேர்ந்த  அவர் “ச்சே, இதை மக்கள் அனைத்துவிடுவார்கள்” என்று சொன்னவாறு மீண்டும் தூங்கச் சென்றுவிட்டார்.

மேயர் ப்ளட்வொர்த் (Bloodworth) விவரம் அறியாதவர் அல்லர். அவர் ஒரு வணிகர். முன்னாள் மேயரின் உதவியாளர். தனது திறமை, அரசியல்திறம் இவற்றால் எளிய நிலையில் இருந்து உயர்ந்தவர். இத்தகைய தீ விபத்துகளை அவர் ஏற்கனவே பார்த்திருக்கிறார். பெரும்பாலும் அவை ஒரு கட்டத்தில் தானாகவே அணைந்து போகும். இப்போதும் அப்படி அணைந்துவிடும் என்று நினைத்தார்.

ஆனால்…

பொழுது விடிந்த போது, அடுமனை இருந்த தெருவின் சுற்றுவட்டாரமே தீக்கிரையாகி இருந்தது. அன்று மதிய வேளையில், தீ தேம்ஸ் நதி இருந்த பகுதிக்குப் பரவியிருந்தது. தேம்ஸ் நதிக்கரை லண்டனின் வியாபார மையம். எண்ணெய், தார், வாசனைத் திரவியங்கள் சேமிக்கப்பட்டிருந்த பீப்பாய்கள் தீயில் வெடித்தன.

சாம்யுவல் பீப்ஸ் (Samuel Pepyஸ்) நாட்குறிப்புகள் நேரில் கண்ட சாட்சியைப் பதிவு செய்திருக்கும் முக்கிய ஆவணம்.  வானுயர்ந்த எரிந்து கொண்டிருந்த தீ பாலத்தின் ஒரு மனையில் இருந்து மறு முனிவரை ஒரு வானவில் போலத் தோண்டியது என்று குறிப்பிடுகிறார் சாம்யுவல்.

அடுமனையின் அக்கினிக் குஞ்சு இப்போது காட்டுத் தீயாக மாறியிருந்தது.

Image : London Museum, Public domain, via Wikimedia Commons

வெந்து தணிந்த லண்டன்

அன்றைய லண்டன் நகரமைப்பு இத்தகைய தீ விபத்துக்களைக் கையாளும் வகையிலான வடிவம் பெற்றிருக்கவில்லை.

வீடுகள் நெருக்கமாக இருந்தன. கூரைகள் ஒன்றோடொன்று நெருக்கியடித்துக் கொண்டிருந்தன. மேற்கூரைகள் வழியே தீ வேகமாகப் வழியே பரவியது. தீயணைப்பு முயற்சிகள் மிக மெதுவாக நடைபெற்றன. ஏற்கனவே வறண்டிருந்த கிணற்றிலும், ஆற்றிலும் இருந்து பெறப்பட்ட நீர், தோல் வாளிகள் மூலம் கைகள் மாறின. கை பம்புகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு உதவில்லை. தீ பரவாமல் தடுக்க, அதன் பாதையில் இருந்த கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. அனால் தகர்த்த வேகம் போதவில்லை.

அரசர் இரண்டாம் சார்ல்ஸ் தானே காலத்தில் இறங்கினார். நகரெங்கும் பார்வையிட்டார். பணிகளை துரிதப்படுத்தினார். அவரது சகோதரரும் உதவிக்கு இணைந்து கொண்டார். அரசரின் மேற்பார்வை குழப்பம் குறைய உதவியது. நெருப்பை அணைக்க உதவவில்லை.

பரவிக்கொண்டிருந்த தீ, செப்டம்பர் 4 ஆம் தேதி, புனித பால் தேவாலயத்தை அடைந்தது.

1561 ஆம் ஆண்டில் இடிவிழுந்து சேதமடைந்திருந்த, லண்டனின் மிக உயர்ந்த அந்தத் தேவாலயக் கோபுரம் செப்பனிடப்படாமல் இருந்தது — அந்தத் தேவாலயத்தைச் சூழ்ந்தே ஸ்டேஷனர்ஸ் கம்பெனி காலத்தில் ப்ராட்டஸ்டண்ட் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.

ஆயிரக்கணக்கான மக்கள் வழிபடும் தேவாலயம், லண்டனில் தலைமுறைகளாக வாழ்ந்து மறைந்தவர்கள் புதைக்கப்பட்ட கல்லறைத் தோட்டம், நகரின் வணிக மையமாக விளங்கிய அந்த வளாகம் ஆகியவை தீக்கிரையாகின.

தீ விபத்து பற்றிய செய்தி அறிந்த புத்தக விற்பனையாளர்கள் தேவாலய வளாகமே பாதுகாப்பானது என்று கருதித் தங்கள் புத்தகங்களை அங்கே கொண்டு சேர்த்திருந்தார். கற்கட்டிடம் தங்கள் புத்தகங்களை நெருப்பில் இருந்து பாதுகாக்கும் என்று கருதி இருந்தனர். ஆனால், நெருப்பின் வெப்பம் தாளாமல் தேவாலயத்தின் கூரை சிதைந்தது. கற்சுவர்கள் விரிவடைந்து பிளந்தன. தரைத் தளம்  வெடித்து விரிசல் கண்டது. ஆயிரக் கணக்கான புத்தகங்கள், லண்டன் உற்பத்தி செய்த அறிவுச் செல்வம் தீக்கிரையானது.

செப்டம்பர் 5 ம் தேதி: தீ லண்டனின் இதயத்தைச் சுட்டிருந்தது.

நகரின் வங்கிப் பரிவர்த்தனைக் கட்டிடங்கள், அரசுக் கூடங்கள், எண்பத்தேழு சிறு தேவாலயங்கள், பதின்மூன்றாயிரம் வீடுகள் சாம்பலாகி இருந்தன.

காற்று திசை மாறியது. தீ தணிந்தது.

செப்டம்பர் 6 ம் தேதி: லண்டனின் பெருந்தீ அணைந்தது.


பெருந்தீயின் பின்

தீ அணைந்தபின் எஞ்சியிருந்த லண்டன், இங்கிலாந்து அதுவரை கண்டிராத ஒரு லண்டன்.

ஆயிரக்கணக்கான லண்டன்வாசிகள் தங்கள் நகரிலேயே அகதிகள் ஆகி இருந்தனர். அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களில் பலரும், உயிரைத்தவிற அனைத்தையும் இழந்திருந்தனர்.

தரைமட்டம் ஆகியிருந்த லண்டனை மீண்டும் எழுப்ப வேண்டி வந்தது. புதிய திட்டங்கள் தயாராகின. மரத்தாலான வீடுகள், நெறுக்கியடித்துக் கொண்டிருந்த கட்டிடங்கள் என பழைய லண்டன் போல இல்லாமல் புதிய நகரமைப்பு திட்டமிடப்பட்டது. திட்ட வரைபடங்கள் கட்டிடக் கலைஞர்களால் சமர்பிக்கப்பட்டன. தோட்டங்கள் கொண்ட அழகிய தெருக்கள், புதிய வணிக வளாகங்கள் என, லண்டன் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பை இப்போது பெற்றிருந்தது.

கட்டிட அனுமதிக்கான சட்டம் புதுப்பிக்கப்பட்டது. தீயினால் எரியாத செங்கல், கற்கள் போன்ற கட்டுமானப் பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப் படவேண்டும் என்று புதிய விதிமுறைகள்  சொல்லின. கட்டிடங்களின் உயரங்களையும் நிர்ணயித்தது.

தேவாலயங்கள் மீண்டும் கட்டப்பட்டன. புனித பால் தேவாலயம் புதுப் பொலிவுடன் கட்டப்பட்டது. அதன் கட்டுமானப் பணி 1710 ஆம் ஆண்டு, ஆன் காப்பிரைட் சட்டம் பிறந்த அதே வருடம் நிறைவடைந்தது.


புதிய லண்டனின் இசை

தீ விபத்து. லண்டனின்  கட்டிடங்களை மட்டும் சிதைக்கவில்லை.நகரின்  வாழ்க்கை முறையையும் சிதைத்திருந்தது.

விபத்திற்கு முன் லண்டன் வணிகக் கூடங்கள், தேவாலயங்கள் கொண்ட குறுகிய தெருக்கள் கொண்டிருந்தது. வியாபாரிகள் ஒருவரை ஒருவர் தெரிந்து வைத்திருந்தனர். அந்தப் பகுதிக்குப் புதியவர்கள் எளிதில் அடையாளம் காணப்பட்டனர். மாமிசம், மீன், மலர்கள், மலிவு விலைப் பொருட்கள் என்று ஒவ்வொன்றிற்கும் தனித்தனிப் பகுதிகள் இருந்தன.

புதிய லண்டன் மாறுபட்டிருந்தது. பாரம்பரிய மரபுப்படியான அமைப்பிற்குப் பதிலாக, வாணிபப் பொருளாதாரத்திற்கு நோக்கம் கொண்டு வணிகப் பகுதிகள் வடிவமைக்கப்பட்டன. இப்போது அரசின் வர்த்தக மையம் பெரிதாகக் கட்டப் பட்டிருந்தது. 1694 ல் உருவான இங்கிலாந்து வங்கி வணிக நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்யத் தொடங்கியது. காப்பீட்டுத் தொழில் உருவாகியிருந்தது. வியாபாரிகள் சந்தித்துப் பேசும் வாய்ப்பை புதிய காபிக் கடைகள் உருவாக்கின.

குறிப்பாக, இப்போது லண்டன்வாசிகளிடம் பணம் புழங்கியது.

அட்லான்டிக் கடல் வாணிபம் லண்டனை செழிப்பாக்கியது. கரீபியாவில் இருந்து சர்க்கரை, வர்ஜீனியாவில் இருந்து புகையிலை, இந்தியாவில் இருந்து ஆடைகள், ஆப்ரிக்காவில் இருந்து அடிமைகள் — இவை அனைத்தும் லண்டன் துறைமுகத்தை வந்தடைந்தன. வாணிபர்களும், நிதி கொடுத்த வங்கிகளும் லாபம் பெற்றனர். புதிய செல்வந்தர் வர்க்கம் மாளிகைகளைக் காட்டியது. ஓவியங்களை வாங்கியது. ஆடம்பரப் பொருட்கள், கலைப்பொருட்களைச் சேகரித்தது. புத்தகங்கள் வாங்கியது. புதிய, ரசனை கொண்ட, நாகரிக நடுத்தர வர்க்கம் ஒன்று உருவானது.

அந்தப் புதிய வர்க்கம் இசையை விரும்பியது.

முன்பெல்லாம் இசை அரசவைக்குள் அடங்கிவிடும். வெகுமக்களில் செல்வந்தர்களும் கூட, தேவாலயங்களில் மட்டுமே இசை கேட்க முடியும். புதிய லண்டன் இந்த நிலையையும் மாற்றியது — ஆனால் மெதுவாக.


முதல் இசை நிகழ்ச்சி

1672, டிசம்பர் 30.

ஜான் பானிஸ்டர் வீட்டின் முன் கூட்டம் கூடியிருந்தது. அரசவை வயலின் கலைஞராகப் பணியாற்றிய பானிஸ்டர் அரசவை அதிகாரிகளுடன் ஏற்பட்ட உரசலால் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

அன்று அவர் வீட்டின் முன் கூடியிருந்தவர்கள் அரச பிரபுக்களோ, பெரிய மனிதர்களோ  அல்ல. அவர்கள் வியாபாரிகள் மற்றும் நடுத்தர மக்கள். அன்று அவர்கள் ஒரு ஷில்லிங் கட்டணம் கொடுத்து பானிஸ்டரின் இசை கேட்கவிருந்தனர். அதற்கு முன் இங்கிலாந்தில் இப்படி நிகழ்ச்சிகள் நடந்ததில்லை. அதுவே முதல் இசை நிகழ்ச்சி. கட்டணம் செலுத்தும் எவரும் அனுமதிக்கப்பட்ட இசை நிகழ்ச்சி.

பாரிஸ்டர் நிகழ்ச்சிக்குத் தாயாராகி இருந்தார். திறமையான இசைக்கலைஞர்கள், நடுத்தர மக்கள் விரும்பக்கூடிய இசை எதுவென்றே திட்டம், இவற்றுடன் தயாராகி இருந்தார். நேரம், இடம், கட்டணம் இவற்றுடன் செய்தித்தாள் விளம்பரம் கொடுத்திருந்தார்.

அன்று அரச, பிரபு குடும்பங்கள், தேவாலயங்கள் என எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள் ஒரு ஷில்லிங் கொடுத்து இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த அவர்களுக்குப் அனுபவம் புதிதாக இருந்தது. மீண்டும் மீண்டும் விரும்பப்படும் அனுபவமாகவும் மாறியது.

1679 ஆம் ஆண்டு பாரிஸ்டர் மறைந்தார். அது வரை அவர் தொடர்ந்து கட்டணக் கச்சேரிகளை நடத்திவந்தார். புரவலர் ஒருவர் இல்லாமல் ஒரு இசைக்கலைஞர் புதில் லண்டனில் பிழைக்க முடியும் என்பதை நிரூபித்திருந்தார்.

அவருக்குப் பின் பலரும் அவர் வழியியைப் பின்பற்றினர்.


முதல் சந்தா இசை நிகழ்ச்சி

தாமஸ் பிரிட்டன் லண்டனில் அடுப்புக் கரி வியாபாரம் செய்துவந்தவர். முதுகில் கரி மூட்டையைச் சுமந்து கொண்டு லண்டன் முழுதும் சுற்றுபவர். கைகளில் கரி. ஆடையில் கருஞ்சாம்பல். இதுவே தாமஸ் பிரிட்டன்.

அவர் இசையில் ஆர்வம் கொண்டவர். அவருக்கு ஒரு கனவும் இருந்தது.

அவரது கரிக் கிடங்கின் மேல்தளம் சிறியது. குறுகிய படிக்கட்டுகள். கரிப்படிந்த உள்கூரை. அமர்ந்து கொள்ள மர பெஞ்சுகள். இந்த அறையில் 1678 ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு வாரமும்  இசை நிகழ்ச்சிகள் நடந்தன.

முதலில் இவை இலவச இசை நிகழ்ச்சிகளாக  இருந்தன. நிகழ்ச்சிகளுக்கான செலவைத்  தானே பார்த்துக் கொண்டார் பிரிட்டன். இந்தச் செய்தி பரவி நாளுக்கு நாள் அதிக ரசிகர்கள் வரத் தொடங்கினர். இப்போது பிரிட்டன் ஆண்டு சந்தா பெற்றுக் கொண்டு ரசிகர்களை அனுமதித்தார். பத்து ஷில்லிங் — ஒரு ஆண்டிற்கு.

இது எளிய தொழிலாளி ஒருவர் செலுத்தக் கூடிய சிறு தொகை. எளிய மக்கள் இப்போது இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், தங்கள் இசை ரசனை குறித்து விவாதிக்கவும் முடிந்தது.

இந்த இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற கலைஞர்கள் எளிய கலைஞர்கள். ஐரோப்பிய இசை வரலாற்றில் நிலையான இடம் பெற்ற  ஜார்ஜ் பிரெடரிக் ஹாண்டல், தாமஸ் பிரிட்டனின் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். நூறு பேர் அமரக்கூடிய நாற்பதடி நீள அறை. குறுகிய படிக்கட்டு. கறைபடிந்த சுவர்கள். அங்கு பிறந்த இசை அந்த அறைக்குள் அடக்க முடியாத பரிணாமம் கொண்டிருந்தது.

ஒரு புரவலர் மட்டுமே ரசிக்க முடிந்த இசை நிகழ்ச்சிகளை எளிய மக்கள், ஆண்டு சந்தா செலுத்தி  ரசிக்க முடிந்தது. புரவலரின் ரசனைக்கு ஏற்ப இசை படைத்த கலைஞர்கள் மக்கள் விரும்பும் இசையை இயற்றக் கற்றுக் கொண்டனர்.

இந்த மாற்றம் பின்வரும் பல நூற்றாண்டுகளுக்கு நீடித்திருக்கும் என்று தாமஸ் பிரிட்டன் நினைத்திருக்க மாட்டார்.

Image : Wikimedia Commons

சந்தா நிகழ்ச்சிகள்

சந்தா இசை நிகழ்ச்சிகள் லண்டன் முழுதும் பரவியது.

விடுதிகள், வளாகங்கள் ஆகியவற்றில் புதிய இசை அரங்கங்கள் தோன்றின. விருந்துகளில் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ஒரு காலத்தில் அரச குடும்பத்தினருக்கு மட்டுமே காணக் கிடைத்த ஆபராக்கள் (இசை நாடகம்)  இப்போது பொது நிகழ்ச்சிகள் ஆகின. முன்னெப்போதும் இல்லாத வகையில் வசூலைப் பொறுத்து அவை வெற்றி அல்லது தோல்வி கண்ட படைப்புகளாக அடையாளம் காணப்பட்டன.

ஜெர்மானிய இசையமைப்பாளர் ஜார்ஜ் பிரெடரிக் ஹான்டல் லண்டனில் புகழ்பெற்றார். ஒரு இசை வடிவம் தோல்வியடைந்தபோது , மற்றொரு வடிவத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். செல்வம் சேர்ந்தது. இசை நிகழ்ச்சிக் கட்டணம், ராயல்டி, முதலீடுகள் என்று பல வழிகளிலும் அவரது வருவாய் பெருகியது. ஒரு புரவலரின் தயவில்லாமல் இது சாத்தியமாக  லண்டன் காரணமானது. 1759 ல் அவர் மறையும்போது, அவர் விட்டுச் சென்ற சொத்தின் மதிப்பு இருபதாயிரம் பவுண்டுகள். அன்றைய நாளில் பெருஞ்செல்வம்.

அரசர்கள், பிரபுக்கள் இவர்களை அடக்கம் செய்யும் கல்லறைத் தோட்டத்தில் அடக்கமானார். சாம்பலில் இருந்து மீண்டெழுந்து கொண்டிருந்த லண்டனுக்கு ஐம்பது வருடங்களுக்கு முன் வாழ்வாதாரம் தேடி, ஜெர்மனியில் இருந்து வந்த ஹான்டல், ஆங்கிலக் கலாச்சாரத்தின் அழியாத அடையாளமானார்.

புதிய லண்டன் எங்கெங்கோ பிறந்த கலைஞர்களை உச்சத்திற்கு கொண்டு சென்றது. வெற்றி பெற்ற அனைவரையும் லண்டன் ஒன்று போலப் பார்த்தது.

புதிய லண்டனில், புதிய களவு ஒன்றும் பிறந்து வளர்ந்தது.


லண்டன் பைரேட்டுகள்

இசைக் கலைஞர்களின் வெற்றி, ஒரு புதிய களவுத் தொழிலை உருவாக்கியது.

ஒவ்வொரு புதிய இசைக்குறிப்பும் அனுமதி இன்றி பதிப்பிக்கப்பட்டது. பைரஸி பதிப்பாளர்கள் புதிய இசைக் குறிப்புகளை ஏதோ  ஒரு வழியில் கவர்ந்து கொண்டனர். பைரஸி இசைக் குறிப்புகள் சுடச்சுடத் தயாராகி விற்பனைக்கு வந்தன. இந்தப் பைரஸி பதிப்புத் தொழிலில் நட்டம் என்பது கிடையாது. வெற்றி பெற்றுத் தங்களை ஏற்கனவே நிரூபித்துக் கொண்ட படைப்புகள் மட்டுமே பதிப்பாகின — எனவே நட்டமில்லை.

இசைக்கலைஞர்களுக்கு பைரஸி தொழில் பெரிய பாதிப்பாக இருந்தது. தங்கள் பதிப்பு வருவாயில் பெரும்பகுதியை அவர்கள் இழந்தனர். கடுமையான உழைப்பைக் கொடுத்து உருவாக்கிய படைப்புகளே பெரும் நட்டத்தைக் கொடுத்தன — அவையே முதலில் திருடப்பட்டன.

லண்டனின் வெற்றிகரமான பைரஸி பதிப்பாளர்களில் முதன்மையானவன் ஜான் வால்ஷ். அரசவைக்கு இசைக்கருவிகள் தயாரிக்கும் தொழிலைச் செய்துவந்த வால்ஷ், சந்தையைக் கவனித்து வந்தான். இசை நிகழ்ச்சிகளைக் கேட்டு ரசித்த மக்கள், இசைக் குறிப்புகளை தங்கள் வசம் வைத்துக் கொள்ள விரும்பினார்கள். இசைப் பதிப்புத் தொழில் லாபம் கொடுப்பதாக இருந்தது (Sheet music). பைரஸி தொழில் கொள்ளை லாபம் கொடுப்பதாக இருந்தது.

வால்ஷ் பதிப்புத் தொழிலைத் தொடங்கினான்.

வால்ஷின் முக்கியக் குறி, லண்டனின் வெற்றிகரமான  இசைக்கலைஞர் ஹான்டல். அவரது இசை நிகழ்ச்சிகளுக்கு இசைக் குறிப்பெடுக்கும் ஆட்களை அனுப்பினான். சில வாரங்களில் அவரது இசை பதிப்பாகி சந்தைக்கு வந்தது. ஹான்டலிடம் அனுமதி பெற்ற பதிப்பாளர் வெளியிடும் பதிப்பைக் காட்டிலும் குறைவான விலையில் வால்ஷின் பதிப்புகள் கிடைத்தன.

ஹான்டல் தனது இசைக்குறிப்புகளைப் பாதுகாத்துக் கொள்ள அரசரிடம்  சிறப்பு அனுமதி பெற்றிருந்தார். ஆனால், அது வால்ஷிடமிருந்து அவர் படைப்புகளைக் காப்பாற்றவில்லை. வால்ஷ் மீது வழக்குத் தொடுப்பது செலவு பிடித்தது. வழக்குகளில் வெற்றியும் நிச்சயமில்லை. வழக்கு முடிவதற்குள், வால்ஷ் விற்றுத் தீர்த்திருப்பான்.

இறுதியில் ஹான்டல் வால்ஷிடமே சரணடைந்தார். வால்ஷைத் தனது அலுவல் பூர்வப் பதிப்பாளராக ஆக்கிக் கொண்டார். இப்போது அவருக்கு விற்பனையில் ஒரு பங்காவது கிடைத்தது.

ஆனால், ஹான்டல் போன்று ஒவ்வொரு இசையமைப்பாளரும் சமரசம் செய்து கொள்ளவில்லை.

காப்பிரைட் கதைகள்

தங்கக் கூண்டு
Exit mobile version