- அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்
- செயற்பாலது ஓரும் அறன்
- நுண்பொருள் காண்பது அறிவு
- வகையறச் சூழ்ந்தெழுதல்
- தூய்மணி சிந்திடும் தோய்ந்த நெருப்பு
- ஒருமையுள் ஆமைபோல்
- நெஞ்சம் நிமலமாய் நிலைபெறின்…
- எழுதாக்கிளவியும், ஏனைய நூற்களும்
- கர்மத்தின் வகையறிதல்
- செயல் என்னும் நிவேதனம்
- ஒன்றே நினைந்திருக்க உள்ளம் கனியும்
- ஞானம், ஞேயம், ஞானகம்யம்
- சத்யம், ஞானம், அனந்தம் பிரம்ம
சென்ற பகுதியில், வந்து செல்லும் குணங்கள் ஒரு பொருளை வரையறுக்கும் இலக்கணங்களாக இருக்க முடியாது என்றும், பிரம்மத்தையும், ஆத்மாவையும் விளக்கும்போது அவற்றின் குணங்களை அவற்றை விளக்கும் வரையறைகளாக எடுத்துக் கொள்ள இயலாது என்றும், எக்காலத்திலும் மாறாதிருக்கிற அதன் இயல்புகளைத்தான் நாம் இலக்கணங்களாக வரையறை செய்ய வேண்டும் என்றும் பார்த்தோம். ஒரு பொருளின் எக்காலத்திலும் மாறாதிருக்கிற இயல்புகள் அப்பொருளின் “ஸ்வரூப லக்ஷணம்” என்று குறிப்பிடப்படுகிறது.
பிரம்மத்தினுடைய இலக்கணத்தை “சத்யம்-ஞானம்-அனந்தம் பிரம்ம” என்று தைத்திரீய உபநிஷத் வரையறை செய்கிறது. இதுவே பிரம்மத்தின் ஸ்வரூப லக்ஷணம். மேலும் ஆத்மா மற்றும் பிரம்மத்துடைய இலக்கணமாக சத்-சித்-ஆனந்தம் என்பதையும் அத்வைத வேதாந்தம் வரையறை செய்கிறது. சத்-சித்-ஆனந்தம் ஆகிய மூன்று சொற்களும்தாம் பிரம்மத்தை அறிந்து கொள்வதற்காக துல்லியமான வரையறைகளை அளிக்கின்றன. பிரம்மம் என்பது இருக்கின்ற ஒரே உண்மையைக் குறிப்பதற்கான ஒற்றைச் சொல். அதை மூன்று சொற்களாக சத்-சித்-ஆனந்தம் என்றும் புரிந்து கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட இரண்டு இலக்கணங்களுமே ஒன்றைத்தான் குறிக்கின்றன. முதலில் சத்யம்-ஞானம்-அனந்தம் பிரம்ம என்பதிலிருந்து ஒவ்வொரு சொல்லாக எடுத்துக் கொண்டு பிரம்மத்தின் விளக்கத்தைப் பார்ப்போம்.
முதலில் சத்யம் என்ற சொல். இந்த இடத்தில் இது வாய்மை என்ற பொருளில் வரவில்லை. சத்யம் அல்லது சத் என்றால் இருப்பு என்று பொருள். ஒரு பொருள் எக்காலத்திலும், எவ்விடத்திலும் மாறாமல் இருந்தால் அந்தப் பொருள் சத்யம் எனப்படும். பிரம்மத்தினுடைய முதல் இலக்கணம் அது சத் ஆக இருக்கிறது என்பதுதான். அதாவது இந்த உலகத்தில் உள்ள எல்லாப் பொருட்களையும், இந்த உலகத்தையுமே கூட எடுத்துக் கொண்டால் அவற்றில் மாறாது இருப்பது இந்த சத் என்ற இருப்பு என்னும் தன்மைதான். உதாரணத்துக்குத் தங்கம் என்ற பொருளை எடுத்துக் கொள்வோம். தங்கம் என்ற பொருள் உண்மையில் என்ன? தங்கம் என்ற பெயர், அதன் அப்போதைய வடிவம், மற்றும் அது தங்கமாக இருக்கும் தன்மை இவை மூன்றும் சேர்ந்துதான் அப்பொருளை தங்கம் என்று அழைக்க வழிகோலுகிறது. இந்தத் தங்கத்தை உருக்கி ஆபரணமாக மாற்றி விட்டால் அதன் வடிவம் மாறிவிடுகிறது. அதன் வடிவத்துக்கு ஏற்றாற்போல அதன் பெயரும் வளையல், அட்டிகை என்று மாறிவிடுகிறது. ஆனால் இங்கு மாறாது அந்த ஆபரணத்திலும் தொடர்ந்து இருப்பது தங்கம் என்ற தன்மைதான். மீண்டும் அந்த ஆபரணத்தை உருக்கி வேறு வடிவங்களுக்கு மாற்றினாலும் அதன் பெயரும், வடிவமும்தான் மாறுமே தவிர அதன் தங்கம் என்ற தன்மை மாறாது. எக்காலத்திலும் மாறாதிருக்கிற இந்தத் தன்மைதான் சத் எனப்படுகிறது.
அனைத்துப் பொருட்களிலும் இந்த சத் என்ற அம்சம் இருப்பதைக் காணலாம். ஒவ்வொரு பொருளின் வடிவமும், அந்த வடிவத்துக்கேற்ற பெயரும் மாறலாம். ஆனால் அந்தப் பொருளின் இருப்பு என்ற அம்சம் மாறாமல் இருக்கிறது. ஒரே பொருள் ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்துக்கு மாறினாலும் அதன் இருப்பு என்ற அம்சம் மாறாதிருக்கிறது. நீங்கள் ஒரு பொருளின் வடிவத்தை அழிக்கலாம், அதன் பெயரை மாற்றலாம். ஆனால் அதன் இருப்பு என்ற தன்மையை உங்களால் அழிக்கவே முடியாது. ஒரு பொருளின் வடிவமும், பெயரும் (நாமரூபம்) தாம் மாறுகின்றனவே ஒழிய, அதன் சத் அம்சம், இருப்பு என்ற தன்மை எப்போதும் மாறாதிருக்கிறது. எப்படி நீருக்கு திரவத்தன்மை இயல்பாக இருக்கின்றதோ, நெருப்புக்கு உஷ்ணம் இயல்பாக இருக்கின்றதோ, அதே போல நான் என்று உணரும் இந்த ஆத்மாவிலிருந்து, பிரபஞ்சத்திலுள்ள அனைத்துக்கும் பொதுவாக இருப்பது இந்த சத் அம்சம் மட்டுமே. இதுவே ஆத்மா மற்றும் பிரம்மத்தினுடைய இயல்பாகவும் இருக்கின்றது. சத் என்பதே ஆத்மாவின் முதல் இலக்கணமாகும். இவ்வுலகில் எல்லாமுமே மாறும் தன்மை கொண்டவை. மாறிக்கொண்டிருக்கும் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக மாறாத ஒன்று இருந்து வருகிறது. அதுவே சத் எனப்படுகிறது. அதுவே ஆத்மாவின் தன்மையுமாகும். அவஸ்தாத்ரய விவேகத்தில் ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷூப்தி ஆகிய மாறிக்கொண்டே இருக்கின்ற மூன்று நிலைகளுக்குள்ளும் மாறாத இருக்கின்ற அந்த நான் என்ற உணர்வே ஆத்மா எனப்படுகிறது. அதுவே சத் எனப்படுகிறது. சத் எக்காலத்திலும் உள்ளது, அழிவற்றது என்பதை உணரும்போது அந்த சத் தன்மை கொண்ட நானும் எக்காலத்திலும் இருப்பவன், அழிவற்றவன் என்ற உண்மையை ஒருவன் அறிந்து கொள்கிறான். அதுவே அவனை சகல தளைகளிலிருந்தும் விடுவிக்கிறது.
ஆத்மாவின் இரண்டாவதான அம்சம் சித் அல்லது ஞானம் என்பது. இந்தச் சொல்லுக்கு உணர்வு என்று பொருள். சாஸ்திரங்கள் சித் அம்சத்தை சைதன்யம் என்ற சொல்லால் குறிக்கின்றன. ஞானம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுவதும் இந்த சித் அம்சம்தான்.
ஆத்மாவுக்கு சத் அல்லது இருப்பு என்பது ஓர் இலக்கணம் என்பதை முன்பு நிலைநாட்டினோம். அந்த இருப்பு எத்தன்மையிலான இருப்பு? உண்மையில் ஒரு பொருளின் இருப்பு எங்ஙனம் நிலை நிறுத்தப்படுகிறது? ஒரு பொருள் இருக்கிறது என்பதை நான் உணர்ந்து சொல்லாவிடில் அந்தப் பொருளுக்கு இருப்பு என்பதே இல்லை. அதே நான் இருக்கிறேன் என்பதை நான் எவ்வாறு உணர்கிறேன்? நான் இருக்கிறேன் என்பதை எனக்கு அறிவிக்க புறக்கருவிகளின் அவசியமே இல்லை. ஏனெனில் நான் என்று நான் உணரும் அந்தப் பொருள் உணர்வு மயமானது. அதாவது சைதன்ய ரூபமானது. நான் இருக்கிறேனா என்பதில் நமக்கு எப்போதும், எந்த ஐயமும் எழுவதில்லை. நாம் நம்மை “நான்” என்று உணர்வதற்கு புறக்கருவிகளின் அவசியமே இல்லை. விழிப்பு நிலை, கனவு நிலை, உறக்க நிலை ஆகிய மூன்றிலும் தொடர்ந்து இருக்கும் நான் எப்போதும் என்னை முதலில் ஒரு விழிப்புணர்வாகவே அறிகிறேன். விழிப்புணர்வாக இருந்து அந்த மூன்று நிலைகளையும் அறிகிறேன். என்னுடைய மனம், புலன்கள், உடல் ஆகியனவற்றையும் அந்த சைதன்யம்தான் எனக்கு விளக்குகிறது.
எனவே ஆத்மாவினுடைய முதல் இலக்கணம் இருப்பு என்றால், அதன் இரண்டாவது இலக்கணம் அது ஓர் உணர்வுப்பொருளாக இருக்கிறது என்பதுதான். ஆத்மாவின் இந்த அம்சத்தைத்தான் வேதாந்தம் சித் என்றும், ஞானம் என்றும் கூறுகிறது. நான் என்பதை நாம் உணருவது இந்த சைதன்ய அம்சத்தினால்தான். இந்த உலகமும், அதன் பொருள்களும் “ஜடம்” என்று வரையறுக்கப்படுகிறது. அவைகள் உணர்வற்றவை; தாங்கள் இருக்கிறோம் என்பதை அவைகளால் உணர்ந்து கொள்ள இயலாது. ஆனால் ஆத்மா சைதன்ய வடிவாக இருக்கிறது. நான் இருக்கிறேன் என்ற உணர்வு நமக்கு எப்போதும் இருக்கின்றது.
இங்கு உணர்தல் என்பதை ஒரு பொருளை உய்த்துணரும் அறிவு என்று அத்வைதம் வரையறுக்கவில்லை. சித் என்பது அறியும் கருவிகள் அனைத்தும் செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கும் உணர்வு ஆகும். இந்த சித் என்பதே நமது உண்மையான ஸ்வரூபம். வேதாந்தம் ஆத்மாவை ஆத்ம சைதன்யம் என்றே அழைக்கிறது. எப்படி ஒரு அறையில் உள்ள பொருட்கள் அவ்வறையிலுள்ள விளக்கின் ஒளியால் புலனாகின்றனவோ அப்படியே இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் சைதன்யம் என்ற ஒளியாலேயே விளங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஒளி விளங்குவதற்கு வேறெந்த புறக்கருவிகளின் அவசியமும் இல்லை. அதே போலத்தான் ஆத்ம சைதன்யம் விளங்குவதற்கும் புறக்கருவிகளின் அவசியம் இல்லை. ஆத்மா எல்லாவற்றையும் விளக்குகிறது, அதே நேரம் சுயமாகவும் விளங்கி வருகின்றது.
ஒருவன் தன்னை ஆத்மா என்று அறிய வேண்டுமெனில் தான் சத் ரூபமாகவும், சித் ரூபமாகவும் இருப்பதை அறிய வேண்டும். சத் என்பது எக்காலத்திலும் அழிக்க முடியாதது என்பதைப் பார்த்தோம். அதே போல சித் ஆன சைதன்யமும் மாறாதது. நமது எண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. மாறிக்கொண்டே பிரவகிக்கும் எண்ணங்களின் மாறாது தொடர்ந்து இருப்பது சைதன்யம் மட்டுமே. “பிரதிபோத விதிதம் மதம்” என்று கேனோபநிஷத் கூறுகிறது. தோன்றும் ஒவ்வொரு எண்ணத்திலும் எது அறியப்படுகிறதோ அதுவே உண்மையான அறிவு என்று உபநிஷத் கூறுகிறது. நாம் எந்த ஒரு பொருளைப் பார்க்கையிலும் நமது மனதில் அது குறித்த ஒரு எண்ணம் தோன்றுகிறது. இது விருத்தி எனப்படுகிறது. உதாரணமாக ஒரு பானையை (கடம்) பார்க்கும்போது நம் மனதில் கட விருத்தி தோன்றுகிறது. வேதாந்தம் இந்த விருத்தியை நீ எவ்வாறு அறிகிறாய் என்று கேட்கிறது. ஒவ்வொரு முறை ஒரு எண்ணம் தோன்றும்போதும், அந்த எண்ணத்தைப் பிரகாசிக்கச் செய்ய அங்கே ஒரு உணர்வு (சைதன்யம்) இருக்க வேண்டும். இந்த உணர்வு எல்லாவற்றுக்கும் சாட்சியாக எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து இருக்கின்றது. அந்த உணர்வு இல்லையென்றால் “எனக்கு இந்த எண்ணம் தோன்றியது” என்று நம்மால் எவ்வாறு கூறமுடியும்? எண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கலாம். சினம், மகிழ்ச்சி, துக்கம், ஒரு பொருளை அறியும் அறிவு ஆகியன மாறிக்கொண்டே இருக்கலாம். ஆனால் அந்த எல்லா எண்ணங்களிலும் மாறாது தொடர்ந்து இருப்பது அந்த உணர்வு. அதுதான் சைதன்யம் எனப்படுகிறது. நாம் உறங்கும்பொழுதும், நாம் கனவு காணும் பொழுதும், விழிப்பு நிலையில் பல்வேறு செயல்களைச் செய்து கொண்டிருக்கும் பொழுதும் அந்தந்த அவஸ்தைகளுக்கு சாட்சியாக இந்த சைதன்யமே நின்றிருக்கிறது. எல்லாக் காலங்களையும் இது சாட்சியாகப் பார்த்து நிற்பதால் இது எல்லாக் காலங்களிலும் இருக்கிறது. எனவே இதற்கு அழிவு என்பதே கிடையாது. இந்த சைதன்யமே நான் என்று உணருபவனுக்கும் அழிவு என்பதே கிடையாது. இந்த சைதன்யத்தை நாம் நேரடியாகக் காணமுடியாது. அதாவது சைதன்யத்தை ஒரு பொருளாக நாம் அறிய முடியாது. ஏனெனில் சைதன்யம் ஓர் அறிபடுபொருள் அல்ல. அது அறிபவனாகவே இருக்கின்றது. அந்த சாட்சி சைதன்யமாகவே நான் இருக்கின்றேன் என்று உணர்ந்தாலே ஒருவன் சகல தளைகளிலிருந்தும் விடுதலை அடைகிறான். ஒவ்வொரு எண்ணம் தோன்றும்போதும், அந்த எண்ணம் சைதன்யம் என்ற ஒளியால்தான் பிரகாசிக்கிறது. எனவேதான் உபநிஷத், ஒருவன் ஆத்மாவை ஒவ்வொரு எண்ணத்தையும் அறியும் அறிவிலிருந்து அறிந்து கொள்ளலாம் என்று கூறுகிறது. அறிவின் அறிவாக இருப்பதே ஆத்மா.
வேதாந்தத்தின் மற்றொரு கற்பித்தல் கருவி த்ருக்-த்ருஷ்ய விவேகம் எனப்படும். த்ருக் என்றால் பார்ப்பவன் என்றும், த்ருஷ்யம் என்றால் பார்க்கப்படுவன் என்றும் பொருள். பார்ப்பவனுக்கும், பார்க்கப்படும் பொருளுக்கும் இடையேயான வேறுபாட்டை விசாரம் செய்வதின் மூலம் நமது உண்மையான அடையாளமான ஆத்மாவை அறிய த்ருக்-த்ருஷ்ய விவேகம் உதவுகின்றது.
த்ருக்-த்ருஷ்ய விவேகத்தில் இரண்டு அடிப்படையான விதிகள் உள்ளன. ஒன்று பார்ப்பவனாகிய நான் வேறு; நான் பார்க்கும் பொருள் என்னிடத்திலிருந்து வேறானது. இரண்டு, பார்க்கப்படும் பொருள் நான் அல்ல ஆகையால் அந்த பார்க்கப்படும் பொருளின் குணங்கள் என்னைப் பாதிக்காது. த்ருக்-த்ருஷ்ய விவேகத்தின்படி நான் உண்மையான “நான்” என்பதை எது என்று அறிய வெளிஉலகப்பொருட்களிலிருந்து உள்நோக்கிப் பயணிக்க வேண்டும். நான் என் கண்களின் உதவிகொண்டு இந்த வெளிஉலகத்தைப் பார்க்கிறேன். இப்போது நான் என்னை என் கண்களுடன் அடையாளப்படுத்திக்கொண்டு என் கண்கள் வேறு, நான் பார்க்கும் இந்தப் புறவுலகம் வேறு என்ற முடிவுக்கு வருகிறேன். நான் இந்தப் புறவுலகினின்றும் வேறுபட்டவன் என்பதை அறிகிறேன். இங்கு நம் கண்களால் நம் உடலையே காணமுடிகிறது. பார்க்கப்படும் அனைத்தும் த்ருஷயம், அதாவது நான் அல்லாதது என்ற கூற்றுப்படி, நம்முடைய இந்த ஸ்தூல உடலும் நாம் அல்ல என்ற முடிவுக்கு நம்மால் வர இயலும்.
பின்னர் நாம் கண்களையே ஆராய்வோம். நம் கண்கள் நமக்கு சரியான காட்சிகளைக் காட்டித் தருகின்றனவா, அல்லது மங்கலான காட்சிகளைக் காட்டுகின்றனவா என்பதையும் நம்மால் அறிய முடிகின்றது. இதை எப்படி அறிகிறோம்? இங்கு நம் கண்களைப் பார்த்துக் கொண்டிருப்பது எது? நமது மனம்தான் நம் கண்களை அறிகிறது. எனவே இவ்விடத்தில் நமது கண்கள் திருஷ்யம், நமது மனம் த்ருக், அதாவது பார்ப்பவன். இப்போது மேலும் உள்ளே செல்வோம். நம் மனதில் எழும் எண்ணங்களான மகிழ்ச்சி, துக்கம், பயம், அறிவு போன்ற எண்ணங்களை நம்மால் கவனிக்க முடிகிறது. இன்று என் மனம் அமைதியாக இருக்கிறது அல்லது குழப்பமாக இருக்கிறது என்று நம்மால் கூற முடிவது எதனால்? நம் மனதை உள்ளிருந்து பார்க்கும் ஒரு சாட்சி உணர்வினால்தான். இந்த சாட்சி உணர்வே சைதன்யம். இங்கு மனம் திருஷ்யம் – பார்க்கப்படும் பொருள், சைதன்யம் த்ருக் – பார்ப்பவன். எனவே இறுதியாக இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமுமே நம்மால் பார்க்கப்படுவதாகவே இருக்கிறது. “பார்க்கப்படுவது” என்ற சொல்லை இங்கு “உணர்தல்” அல்லது “சாட்சியாக இருந்து பார்த்தல்” என்ற பொருளில் இங்கு கையாளுகிறேன். பார்க்கப்படும் அனைத்தும் அழிவுக்குட்பட்டது, காலத்தால் மாற்றத்துக்குட்பட்டது. அதே நேரம் பார்க்கும் அந்த ஒரு சாட்சி சைதன்யம் மாறாதது, எல்லாக் காலங்களிலும் இருப்பது.
சரி, இந்த சைதன்யம் இருப்பதை எவ்வாறு அறிகிறோம்? இன்னொரு சைதன்யம் இருப்பதால்தான் இந்த சைதன்யத்தை அறிகிறோம் என்று கூற முடியாது. பின் அந்த சைதன்யத்தை அறிவது இன்னொரு சைதன்யத்தால்தான் என்று கூற வேண்டியிருக்கும். முடிவில்லாமல் சைதன்யத்திலிருந்து, சைதன்யத்துக்கு சென்றபடியே இருக்க வேண்டியிருக்கும். இது Infinite Regression என்ற குறையைக் கொண்டிருக்கும். இதற்கு சம்ஸ்கிருதத்தில் அனவஸ்தா தோஷம் என்று பெயர். எனவே ஒரு சைதன்யத்தை இன்னொரு சைதன்யத்தால் விளக்க இயலாது, இருப்பது ஒரே சைதன்யம்தான் என்ற முடிவுக்கு இதிலிருந்து வரமுடியும். எனவே இருப்பது ஒரே ஆத்மாதான். இதைத்தான் அனந்தம் என்ற சொல்லால் உபநிஷத் குறிப்பிடுகிறது. அனந்தம் என்ற சொல்லுக்கு அலகிலி, எல்லைகளற்றது, வரம்புகளற்றது என்று பொருள்.
ஒரு பொருள் சாதாரணமாக மூன்று விதமான வரம்புகளுக்குட்பட்டதாகவே இருக்கும். தேச பரிச்சேதம், கால பரிச்சேதம், வஸ்து பரிச்சேதம். பரிச்சேதம் என்றால் வரம்பு என்று பொருள். தேச பரிச்சேதம் என்பது இடத்தைப் பொருத்து ஒரு பொருள் வரம்புக்குட்பட்டது என்று பொருள். அதாவது, ஒரு பொருள் இப்போது ஒரு இடத்தில் இருக்கிறது என்றால், அது மற்றோரிடத்தில் இருக்க முடியாது. இது தேச பரிச்சேதம். ஆனால் ஆத்மாவின் தன்மை சைதன்யம் என்ற உணர்வுப்பொருளாக இருப்பதால் அது எல்லா இடங்களிலும் இருக்கிறது. சொல்லப்போனால் எல்லா இடங்களுமே அதனுள்தான் இருக்கின்றன. எனவே அதற்கு தேச பரிச்சேதம் என்பது கிடையாது.
மற்றொன்று கால பரிச்சேதம். உலகில் தோன்றும் அனைத்துப் பொருட்களுக்கும் ஒரு உற்பத்தித் தேதியும், அழிவுத் தேதியும் உண்டு. இது கால பரிச்சேதம் எனப்படும். ஆனால் ஆத்மா பிறப்பும், இறப்பும் அற்றது (நித்யம்). எல்லாக்காலங்களிலும் இருப்பது. ஏனெனில் மூன்று காலங்களையும், ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷூப்தி ஆகிய மூன்று நிலைகளையும் அது சாட்சியாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறது. உலகம் தோன்றுவதற்கு முன்பும் அது இருந்தது, இப்போதும் இருக்கிறது, பிரளய காலத்திற்குப் பிறகும் இருக்கும். காலமே என்ற கருதுகோளே சைதன்யத்துக்குள்தான் இயங்குகிறது. எனவே, ஆத்மாவுக்கு கால பரிச்சேதம் கிடையாது.
மூன்றாவது வஸ்து பரிச்சேதம். “ஒரு பொருள் மற்றொன்றாக இருக்க முடியாது” என்பதுதான் பொருளின் எல்லை. உதாரணமாக, ஒரு பேனா என்பது புத்தகம் அல்ல. பேனாவின் எல்லை தொடங்கும் இடத்தில் புத்தகத்தின் எல்லை ஆரம்பமாகிறது. இதனால் உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் மற்றொன்றினால் வரம்புக்குட்படுத்தப்படுகிறது. ஆனால் அத்வைதத்தின்படி, ஆத்மாவைத் தவிர வேறு ஒரு பொருளே தனித்து இல்லை. ஏனெனில் ஆத்மா எல்லாவற்றையும் விளக்கும் சைதன்ய வடிவாக இருப்பதால், அதை விளக்குவதற்கு இன்னொரு சைதன்யம் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று முன்னரே பார்த்தோம். எனவே ஆத்மாவுக்கு வஸ்து பரிச்சேதம் என்பதும் கிடையாது.
இந்த மூன்று வரம்புகளும் அற்று இருப்பதால் ஆத்மாவின் இலக்கணமாக அனந்தம் என்பது சொல்லப்படுகிறது. எனவே சத்யம் – ஞானம் – அனந்தம் ஆகிய மூன்றும் ஆத்மாவை, பிரம்மத்தைக் குறிக்கும் இலக்கணங்கள் ஆகும். ஒரு ஆன்ம சாதகன், அதாவது வேதாந்த மாணவன் செய்ய வேண்டியது இந்த மூன்று இலக்கணங்களும் ஆத்மாவான என்னையே குறிக்கின்றன, எனவே நான் எந்தக் குறைகளுமற்றவன், அழிவற்றவன், என்றுமுள்ளவன் என்று அறிந்து கொள்வது மட்டும்தான். இங்கு அறிதலே, அடைதலாகிறது (இதை இதுவரை எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் என்று தெரியவில்லை. இன்னும் பலமுறை குறிப்பிடுவதற்கும் வாய்ப்புண்டு.)
சத்யம் – ஞானம் – அனந்தம் பிரம்ம என்றுதானே உபநிஷத் குறிப்பிடுகிறது? அதெப்படி இவை மூன்றும் ஆத்மாவின் இலக்கணங்களாகும்? ஆத்மா என்றால் நான் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இந்த பிரம்மம் என்பது என்ன? ஆத்மாவும், பிரம்மமும் எப்படி ஒரே இலக்கணங்களைக் கொண்டிருக்கின்றன? என்றெல்லாம் ஒரு வேதாந்த மாணவனுக்குக் கேள்விகள் எழுவது இயல்பு. எல்லாக் கேள்விகளுக்கும் அத்வைத வேதாந்தம் தன்னுள்ளே பதில்களைக் கொண்டிருக்கிறது. பின்வரும் பகுதிகளில் அவை குறித்துத் தெளிவாகக் காண்போம்.
