சந்திரா தங்கராஜின் ’கனவிலிருந்து புறப்பட்ட மஞ்சள் முகங்கள்’ – மதிப்புரை
மனிதனுக்கு அவனது கடந்த கால நினைவுகள் எதற்காகத் தேவைப்படுகின்றன? நிகழ்காலத்தில் ஒருவனுக்குக் கிடைக்கப்பெறும் சுய ஆளுமை, குடும்பம், நட்பு, சமூகம் அவனைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் இவையனைத்தையும் கட்டமைத்திருக்கும் அந்தக் கடந்தகாலம், வெறும் பழைய ஞாபகங்களின் சேமிப்பாக மட்டும் அமைவதில்லை. கடந்தகால நினைவு என்பது முதலில் தன் சுய அடையாளத்தின் வேர்ப்புலம். “நான் யார்?” என்ற கேள்விக்கு மனிதன் தரும் பதில், அவன் இன்று என்ன செய்கிறான் என்பதில் மட்டும் இல்லை. அவன் எதைத் தாண்டி வந்தான், எதை இழந்தான், யாரால் காயமடைந்தான், யாரால் நேசிக்கப்பட்டான், எந்த இடங்கள் அவனை உருவாக்கின என்பதிலும் இருக்கிறது. நினைவுகள் என்பது சம்பவங்களின் வெறும் பட்டியல் மட்டும் அல்ல. மாறாக அது நம்முடைய அக வடிவம். அந்தக் கடந்தகாலத்தை நினைவுகூறுவதன் வழியாக மனிதன் தன்னைத் தானே மீண்டும் உருவாக்கிக்கொள்ளும் இடமாக, அந்த வாழ்வை மீண்டுமொருமுறை வாழ்ந்து பார்க்கக்கூடிய காலவெளியாக அந்நினைவுகள் அமைகின்றன.
நாம் நினைவுகளை விரும்புவதற்கு காரணம் அவை இனிமையானவை என்பதாலேயே அல்ல. உண்மையில், பல நினைவுகள் இனிமையானவை அல்ல. சில நினைவுகள் வலி, வெட்கம், பயம், குற்ற உணர்வு, இழப்பு, ரணம் ஆகியவற்றோடு இணைந்திருக்கின்றன. ஆனாலும் அவற்றையும் மனிதன் மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்கிறான். மனதிற்கு என்றும் இனிமையான தருணங்களாக அமையும் நினைவுகள் மட்டுமின்றி ஒருபோதும் திரும்பிப் பார்த்துவிடக் கூடாதென்று ஆழ்மனம் தன் காலடியில் புதைத்து வைத்திருக்கும் கசடுகளையும் அவமானங்களையும் ரணங்களையும் கூட கடந்தகாலத்தில் இருந்து மீட்டு எடுத்து அதில் அவன் மீண்டும் வாழ்வது ஏன்? ஏனெனில் துண்டுதுண்டாகச் சிதறிக் கிடக்கும் நம் வாழ்விற்கு நினைவுகளே ஒரு தொடர்ச்சியைத் தருகின்றன. வாழ்க்கை நிகழ்காலத்தில் பலமுறை உடைந்துபோனதாகத் தோன்றும். நாம் விரும்பிய மனிதர்களை இழக்கிறோம். நாம் இருந்த இடங்களை விட்டுச் செல்கிறோம். நாம் இருந்த உடல், மனம், உறவுகள் மாறிவிடுகின்றன. அப்போது நம் கடந்தகால நினைவுகள் மட்டும், “இவை எல்லாம் இருந்தன; நீ அவற்றின் வழியாக வந்தவன்” என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டிருக்கும். நினைவுகள் என்பன காலத்தை மீட்பவை அல்ல; தன்னையே மீட்பவை.
எனில் நினைவுகள் தஞ்சமாகவும் ஆகக்கூடும் அல்லவா? குறிப்பாக நிகழ்காலம் வெறுமையாக இருக்கும்போது, நினைவு ஒரு தஞ்சமாக மாறுகிறது. ஆனால் நிகழ்காலத்தில் இருந்து தற்செயலாக கடந்த காலத்தின் நினைவுகளுக்குச் சென்று மீண்டுவருவது போலன்றி, வலுக்கட்டாயமாக அந்த பழைய நினைவுகளின் ஏக்கத்திலேயே, அந்த நினைவுகளைக் கொண்டு தானே வெளியிலிருந்து கட்டமைத்துக் கொண்ட கனவுகளிலேயே தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் மனநிலை என்னவாக இருக்கும்? அந்த நினைவுகளில் மட்டும்தான் அவளால் இயல்பாக இருக்க முடிகிறது என்றால் அவளது நிகழ்காலத்திற்கு என்ன பொருள்?
இந்த கேள்விகளுக்கான விடையைத் தேடும் படைப்பாக சந்திரா தங்கராஜின் கனவிலிருந்து புறப்பட்ட மஞ்சள் முகங்கள் அமைந்திருக்கிறது. நூறு பக்க அளவுள்ள இந்தக் குறுநாவலில் ஆசிரியர் சந்திரா, லீலா என்னும் பெண்ணின் வளர்பருவத்தை அவளது ‘காலம் வெளிக்கனவு’களின் வழியாக முன்வைக்கிறார். நாவலின் தொடக்கத்தில் நாற்பதை நெருங்கும் பெண்ணாக அறிமுகமாகும் லீலா தன் கடந்த காலத்தை நினைவுகூறுவதன் வழியாக, அவளது குழந்தைப் பிராயம், பதின்ம வயது மாற்றம் பின் இளவயதிலேயே திருமணம் எனத் தன் வாழ்வை மீண்டும் மீண்டும் கனவுகளாலேயே அர்த்தப்படுத்திக் கொள்ள முயல்வதாக இந்தக் குறுநாவல் அமைந்திருக்கிறது. லீலா தனது நினைவுகளை மீட்டெடுக்கும் விதம், அவளுக்கு கடந்தகாலம் என்பது நினைவுகள் அல்ல; காலத்தின் முன் எப்போதும் பதினாறு வயதுப் பெண்ணாகத் துள்ளிக்குதிக்க விரும்புகின்ற அவளால், இயல்பாக சுவாசிக்க முடிகின்ற ஒரே உலகம் எனக் காட்டுகிறது. தன்னுடைய அப்பா, பெரியப்பாக்கள், சித்தப்பாக்கள், அத்தைகள், அப்பத்தாக்கள் எனத் தன்னை பால்யத்திலேயே தொடர்ந்து தக்கவைத்த உறவுகள் ஒவ்வொன்றாக இந்த உலகைவிட்டுப் போய்கொண்டேயிருப்பது லீலாவை நிகழ்காலத்தின் முன் மண்டியிட்டு சோர்வுறச் செய்கிறது.
தினமும் சலவை செய்த தூய ஆடைகளை உடுத்திக்கொண்டு ஒரு மருத்துவராகவோ பொறியாளராகவோ அல்லது வழக்கறிஞராகவோ வேலைக்குச் செல்லவேண்டுமென்று ஆரம்பத்தில் ஆசைப்பட்ட லீலாவின் கனவு மெல்ல சரிந்து குறைந்தபட்சம் ஒரு டீச்சராகவோ அல்லது நர்சாகவோ என மாறி, அதற்கும் வழியில்லாமல் உசிலம்பட்டியில் ஒரு நடுநிலைப்பள்ளி ஆசிரியருக்குக் கட்டிக்கொடுக்கப்பட்டு அனுப்பப்படுகிறாள். ஒவ்வொரு நாளும் பொழுது கழிந்துகொண்டிருப்பதையே அச்சத்துடன் பார்க்கும் அந்த நிகழ்கால வாழ்வு அவளை மூச்சுமுட்டச்செய்கையில் அவளின் கடந்த கால நினைவுகளைக் கொண்டு அவள் உருவாக்கிக்கொள்ளும் கனவிற்குள் அவள் நுழைந்து பார்க்கிறாள். மிக இயல்பாக லீலா சிறுமியாக இருந்தபோது நடந்த நிகழ்விலிருந்து தொடங்கும் நினைவுகள், அவள் தனது பள்ளி, ஊர், வீடு, நட்பு, உடல், காதல், குடும்பம், வன்முறை, பயம், பிரிவு ஆகியவற்றின் வழியாக மெல்ல மெல்ல ஊர்ந்து சென்று தன் உலகை அறிந்து கொள்கிறாள். ஆனால் இது வழக்கமான Coming-of-Age வகைக் கதை அல்ல. இங்கே ஆசிரியர் காட்டும் லீலாவின் வளர்ச்சி என்பது வெளிச்சத்துக்குச் செல்வது அல்ல; மாறாக, ஒவ்வொரு பருவத்திலும் ஒரு சிறு இருள் அவள் மனத்துக்குள் சென்று சேர்வது.
நாவலின் ஐந்து “காலம் வெளிக்கனவு” பகுதிகளும் லீலாவின் வாழ்க்கையின் ஐந்து வயது அடுக்குகளாக மட்டும் அமைவதில்லை. அவை அவளது மனத்தின் ஐந்து நிலப்பரப்புகளாக விரிகின்றன. ஒவ்வொரு அத்தியாயமும் லீலாவின் அகஉலகத்தில் ஒரு புதிய அடுக்கை உருவாக்குகிறது.
முதல் வெளிக்கனவில் லீலாவின் உலகம் இன்னும் குழந்தையின் கண்களில் இருக்கிறது. பள்ளிக்கூடம், நண்பர்கள், தெருக்கள், மழைக்குப் பிறகான நிலம், விளையாட்டு, சிறுவயதின் காரணமற்ற மகிழ்ச்சி ஆகியவை ஒரு மயக்கமான வெளிச்சத்துடன் வருகின்றன. இந்தப் பகுதி நாவலின் அப்பாவித்தனத்தின் அடித்தளமாக நிற்கிறது. தன் அக்காவைக் கட்டிக்கொண்ட முட்டைக்கண் மாமா முதலில் அக்காவிடமும் பின் திடீரென்று தன்னிடமும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டு லீலாவின் உதட்டில் மாறி மாறி கடிப்பதைப் போல முத்தம் கொடுக்கும் போது, “இவன் என்னைக் கடிச்சுட்டான், அப்பா அம்மா கிட்ட சொல்வேன்” என்றுதான் அவள் அழுகிறாள். ஒரு பெருமழைக்குப் பின்னர் காட்டுவெள்ளம் பொன்னென மின்னும் குறுமணல் கொண்டுவந்து அவள் ஊரையே ஒரு கனவுலகமென அழகாக்குவதைப் போல, பெரியவர்களின் உலகம் இன்னும் முழுமையாக உள்ளே நுழைந்திருக்காத அவளது குழந்தைப்பருவ நினைவுகள் அவளுக்கு யானை மேலேறி உலகைக் காணும் உற்சாகத்தைத் தருகின்றன.
இரண்டாவது வெளிக்கனவில் அந்த அப்பாவித்தனத்துக்குள் முதல் முறையாக அச்சம் நுழைகிறது. தனது ஊரிலிருந்து மூன்று மணிநேரத் தொலைவில், ஒரு குன்றின் மீது அமைந்திருக்கும் வறண்ட மலைக்கிராமமான மேட்டுப்பட்டிக்கு தன் அப்பத்தாவுடன் சில நாட்கள் இருப்பதற்காக வேண்டாவெறுப்பாக சென்று சேர்கிறாள் லீலா. ஆனால் மிக எளிய மண்ணாலான குடிசை வீடாக இருந்த போதும் அவளது நாட்கள் அங்கிருந்த காய்கறித்தோட்டம், பூச்செடிகள், மரங்களோ புதர்களோ எதுவுமில்லாத நீண்டு விரிந்த வறண்ட புல்வெளிகள், பள்ளத்தாக்கின் மீது பறந்து செல்லும் பறவைக்கூட்டங்கள் என மனதிற்கு ஆனந்தம் தரும் நினைவுகளால் நிரம்புகின்றன. குன்றும் பள்ளத்தாக்குமான நிலப்பரப்பு, அன்பான உறவுகள், புதிய நண்பர்கள், இயற்கையின் சுதந்திரம் ஆகியவற்றுக்கிடையே, அக்காவின் தோழிகள் இருவர் ஒரு சிறுவனை பாலியல் ரீதியாகத் தொட்டுக் கொண்டிருக்கும் காட்சி லீலாவை உலுக்குகிறது. பின்னர் யாரிடமும் அதைச்சொல்லக்கூடாதென அவர்கள் அவளை மிரட்டும் தருணம், அவளது குழந்தை உலகின் பாதுகாப்பு முதன்முறையாக உடையும் கணமாக மாறுகிறது.
மூன்றாவது வெளிக்கனவு லீலாவிற்குக் குடும்பத்தின் பிளவுகளை அறிமுகப்படுத்துகிறது. எப்போதாவது மதுவருந்தும் அப்பா ஒருமுறை அம்மாவைக் கைநீட்டி அடித்துவிட, லீலாவின் அம்மா யாருக்கும் சொல்லாமல் வீட்டைவிட்டுச் சென்றுவிடுகிறாள். எப்போதும் அப்பாவின் செல்லமென இருக்கும் லீலா முதன்முறையாக அம்மா இல்லாத வெறுமையை உணர்கிறாள். அப்பாவோடு சேர்ந்து அம்மாவைத் தேடி அலைவதும், அக்கறையோடும் வெறுப்போடும் தங்களிடம் நடந்து கொள்ளும் உறவுகளைக் கண்டுகொள்வதும், தன் தவறுக்காகக் கண்ணீர் விட்டு அழும் அப்பாவையும், தான் எங்கிருந்தாலும் அப்பாவே தேடிக்கண்டுபிடித்து வந்து கூட்டிச்செல்ல வேண்டுமென்கின்ற அம்மாவின் பிடிவாதத்தையும் அறிந்துகொள்கிறாள். இவை அனைத்தும் குடும்பம் என்பது நிரந்தரமான பாதுகாப்பிடம் அல்ல என்பதை லீலாவுக்கு உணர்த்துகின்றன. அதே சமயம் மதுரை போன்ற ஒரு நகரத்தை முதன்முறையாகப் பார்ப்பது போன்ற தருணங்கள், லீலாவின் உலகம் தன் கிராம எல்லைகளைத் தாண்டி விரிவடைந்து கொண்டிருப்பதையும் காட்டுகின்றன. அப்பாவின் கம்யூனிச பின்னணியும் அதன் மூலமாக அவளுக்கு அறிமுகமாகும் புத்தகங்களும் லீலாவின் மனதை விரிவாக்கிக்கொண்டே செல்கின்றன. சிறுவயதிலிருந்தே விரிந்த உலகைக் கற்பனை செய்துவைத்திருக்கும் லீலாவிற்கு அவளுக்குக் கிடைத்தது எப்போதுமே சொற்பமானதென்ற எண்ணமே இருக்கிறது.
லீலாவின் நான்காவது வெளிக்கனவு பெண்ணுடலின் விழிப்புணர்வைச் சுற்றி நகர்கிறது. பிரியதர்ஷினியின் வருகை இந்த நாவலின் முக்கியமான மாற்றுப்புள்ளிகளில் ஒன்று. லீலாவின் ஊரில் நெடுநாட்களாகப் பூட்டப்பட்டே இருந்த பெரிய வீட்டிற்கு வந்து சேரும் வங்கி மேலாளரின் மகளான பிரியதர்ஷினி, லீலாவிற்கும் அவளது தோழிகளுக்கும் வேறு ஒரு உலகினை அறிமுகப்படுத்துகிறாள். பிரியதர்ஷினியின் வீடு, அவர்கள் வீட்டிலிருக்கும் டிவி, அவளது நாகரிகமான உடைகள், அவள் தெருவில் ஓட்டிச்செல்லும் சைக்கிள், அவளுக்கு வரும் காதல் கடிதங்கள், வளர்பருவத்தில் பெண்ணுடலில் வரும் மாற்றம் குறித்த அவள் பேச்சுகள் என இவை அனைத்தும் லீலாவின் உலகிற்குள் நவீனத்தன்மையை கொண்டு வருகின்றன. ஆனால் அதே உலகு பெண் விருப்பத்தை கண்காணிக்கவும் தண்டிக்கவும் செய்கிறது. அவர்கள் சைக்கிள் பழகுகையில் பின்னால் வந்து பாட்டுப்பாடி கிண்டலடிக்கும் பையன்களாலும் காதல் கடிதம் கொடுக்கும் பள்ளி நண்பர்களாலும் தெருவிலும் வீட்டிலும் புதிய கட்டுப்பாடுகள் முளைக்கின்றன. லீலாவின் தோழிகள் பள்ளிக்கு அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டுத் திருமணத்திற்குத் தயார்செய்யப்படுகிறார்கள். உடன் படிக்கும் மாணவன் ஒருவன் கொடுத்த ஒரு வாழ்த்து அட்டைக்காக அண்ணன் கொடுக்கும் அறை, லீலாவிற்கு அந்த சமூக கட்டுப்பாட்டின் வெளிப்பாடாக நினைவில் பதிகிறது.
ஐந்தாவது வெளிக்கனவில் நாவல் மிக மென்மையான உணர்ச்சி நிலைக்குச் சென்று சேர்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலைச்சரிவின் கிராமம் ஒன்றில் மிளகுத்தோட்டம் வைத்து வாழும் தன் பெரியம்மாவின் ஊருக்கு விடுமுறைக்கு வரும் லீலாவிற்கு அந்த மலைப்பிரதேசத்தின் ஈரமான இயற்கை, எப்போதும் விலகாத மலையின் குளிர்ச்சி, கண்களைக் கவரும் ரோஜாப்பூக்களின் நிறங்கள் என எல்லாமே மனதிற்கினிய நினைவுகளைத் தருகின்றன. லீலாவிற்கு அந்த இனிய நினைவுகளின் மிக இயல்பான நீட்சியாக அந்த ஊரில் இருக்கும் உன்னி அறிமுகமாகின்றான். மலை, பறவைகள், நீரோடைகள், காட்டுப்பூக்கள், பெயர் தெரியாத பறவையின் ஒரு மஞ்சள் சிறகு என உன்னி லீலாவிற்கு இயற்கையையும் கற்பனையையும் அறிமுகப்படுத்தி, அவளை ஒரு ரசனை மிகுந்த பெண்ணாக மாற்றுகிறான். உன்னியுடன் உருவாகும் சொல்லப்படாத காதல், இயற்கையை ரசிக்கக் கற்றுக்கொடுக்கும் அந்த உறவு லீலாவின் மனத்தில் முதன்முறையாக ஒரு அகவயமான பரவசத்தை உருவாக்குகின்றன. உன்னி பறித்துக்கொடுத்த மருதாணியை ஆசையோடு விரல்களில் இட்டுக்கொள்ளும் லீலாவின் மனதில், அந்த மருதாணிச் சிவப்பைப் போல உன்னியின் நினைவுகள் ஆழ்ந்து இறங்குகின்றன. ஆனால் மருதாணிச் சிவப்பு என்றென்றைக்குமாக நிலைத்திருப்பதில்லை. போலவே உன்னியுடனான உறவும் திடீரென்று முடிந்து போகிறது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு, உடனே திருமணம் என்ற வாழ்க்கை நிர்ணயங்கள் லீலாவின் முன் வந்து நிற்கின்றன. நாவல் அங்கேயே முடிகிறது. அதன்பின்னே லீலாவின் வாழ்வில் இருப்பெல்லாம் கடந்த கால வாழ்வின் நினைவுகளை தன் கனவுகளாக மீட்டிக்கொண்டே இருப்பது மட்டுமே.
சந்திரா தங்கராஜின் இந்தக் குறுநாவல் ஒரு வகையில் அவரது தன் வரலாற்றுக் குறிப்பாகவோ அல்லது நினைவுப் பதிவுகளின் தொகுப்பாகவோ வாசிக்கப்படக்கூடும். ஆனால் ஒரு தனிமனிதனின் அல்லது குடும்பத்தின் நினைவுத்தொகுப்பெனத் தொடங்கும் இந்த நாவல், உண்மையில் மனிதமனம் கடந்தகால ஞாபகங்களை எவ்விதம் பொருள்கொள்கிறது என்று ஆராய்கிறது. ஒரு பெண்ணின் வளர்பருவ மாற்றத்தில் அந்த நினைவடுக்குகளின் கீழே புதையுண்டுள்ள வாசனைகளையும் ருசிகளையும், அவை நிகழ்ந்த நிலவெளிகளையும் பருவநிலைகளையும் மற்றும் அவை தந்த மகிழ்ச்சி, வலி ஆகிய எல்லா உணர்வுகளையும் அகழாய்வு செய்து தோண்டியெடுக்கிறது.
இந்த நாவலின் மிகப்பெரிய பலம் சந்திரா, லீலாவின் நினைவுகளின் இயல்பைப் பிரதிபலிப்பதில் உள்ளது. அவர் கடந்தகாலத்தை வெறும் வரலாற்றுப் பதிவாக நினைவுகூறுவதில்லை. மாறாகத் தன் ஞாபகங்களைத் துல்லியமாகச் சித்தரிப்பதன் வழியாக அவள் வாழ்ந்த நிலப்பரப்பு, உணர்ந்த குளிர்ச்சி, பெற்ற வாசனை, அடைந்த உடல் உணர்வு, வெட்கம், அருவெறுப்பு, அச்சம், ஈர்ப்பு என இவற்றின் வழியாக லீலாவின் நினைவுகளை வாசகர்களையும் மீண்டும் வாழச்செய்கிறார்.
சந்திரா காட்டும் இந்த உலகம் கிராமத்துப் பின்னணி கொண்ட கதைக்களம்தான் என்றாலும், தமிழிலக்கியத்தில் அவ்வளவாக இடம் பெறாத புதியதொரு நிலவெளியை அறிமுகம் செய்திருப்பதும், கிராமத்து மக்களைப் பற்றிய உணர்ச்சிமயமான மிகைச்சித்திரமாக மாற்றிவிடாமல் தவிர்த்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் நினைவில் மீளும் அந்த உலகம் செழுமையானது, புலனுணர்வுகள் நிரம்பியது, மனதிற்கு நெருக்கமானது. ஆனால் அது ஒருபோதும் அப்பாவியானது அல்ல. முதல் வெளிக்கனவில் வரும் சீந்தலார் பகுதி இதற்கு மிகத்தெளிவான உதாரணம். அந்த நினைவு குளிர்ந்த மழை, தேயிலைத் தோட்டத்தின் பசுமை, ஈரம், மலர்கள், மணம், உணவு ஆகியவற்றில் தொடங்குகிறது. இவை அனைத்தும் நாம் கை நீட்டினால் தொட்டுவிடக்கூடிய உணர்வு தரும் செறிவான மொழியில் சொல்லப்படுகின்றன. பிறகு திடீரென்று, எந்த மிகை நாடகத்தன்மையும் இல்லாமல், அவர் உள்மனதில் புதைந்திருந்த காயம் வெடித்து மேலெழுகிறது. முட்டக்கண் மாமா நிகழ்த்தும் வன்முறையான பாலியல் தாக்குதல். தலைவலியும், வாந்தியுமென உடல் அந்த நினைவை முதலில் கண்டுகொண்டு தன் ஒவ்வாமையைக் காட்டுகிறது. அதன்பின்னரே மனம் அதைக் கண்டுகொள்கிறது என அந்தப் பகுதி சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.
மேலும் காட்டுவெள்ளம் கொண்டுவரும் புதுமணல், தனித்து நிற்கும் வறண்ட குன்றும் அங்கிருந்து காணக்கூடிய பள்ளத்தாக்குமான நிலவெளி, உலகத்தில் இத்தனை மனிதர்கள் இருக்கிறார்களா என ஒரு மலைக்கிராமச் சிறுமியை வியக்கச் செய்யும் புறவுலகம், அந்தச் சிற்றூருக்குப் பொருத்தமில்லாத பெரிய பங்களா வீடு, காட்டுப்பூக்களும் மிளகு தோட்டங்களும் நிறைந்த குளிரும் அமைதியும் கொண்ட மலைப்பகுதி என ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரும் அந்த இயற்கைப் பின்னணிகள் லீலாவின் மனநிலையின் வெளிப்பாடுகளாக வெகு இயல்பாகவும் சிறப்பாகவும் அமைந்திருக்கின்றன.
இந்த நாவலின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்பது இது பெண்களின் வளர்பருவத்தை வெளிப்படையான கருத்தியல் மொழியில் பேசுவதில்லை. ஆனால் அதன் அடித்தளத்தில் முழு சமூக அமைப்பும் எவ்வாறு ஒரு பெண்ணின் நினைவுகளைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டும் கட்டமைத்துக் கொண்டும் இருக்கிறது என்பதைச் சொல்கிறது. பெண்ணுடலின் மீதான கண்காணிப்பு, சொல்லப்படாத பாலியல் வன்முறைகள், குடும்பத்தின் ஆணாதிக்கம், பெண் விருப்பத்தின் மீதான பயம், திருமணம் என்ற தவிர்க்க முடியாத முடிவு என எதையுமே நாவல் உரக்கச் சொல்வதில்லை. மாறாக ஒவ்வொரு நினைவின் பின்னாலும் அவை நிழல்போல நிற்கின்றன.
சந்திரா தங்கராஜின் மொழி இந்த நாவலின் இன்னொரு முக்கியமான பலம். அது மிகை கவித்துவத்திற்கோ செயற்கையான இலக்கியத்தொனிக்கோ செல்லாமல், நினைவுகளின் ஒழுக்கத்தில் இயல்பாக நகர்கிறது. ஆயினும் சில அத்தியாயங்களில் தினசரிக்குறிப்புகள் போன்று நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன என்பதையும், பல இடங்களில் உரையாடல்கள் இன்னும் செறிவுமிக்கவையாக அமைந்திருக்கலாம் என்று தோன்றுவதையும் தவிர்க்கமுடிவதில்லை.
ஒவ்வொரு கனவிலிருந்தும் லீலாவிற்கு வெளியாகும் முகங்கள், அவற்றோடு மீண்டு வரும் நினைவுகள், நிகழ்காலத்தின் இறுக்கத்திலிருந்து அவள் ஒளிந்துகொள்ளும் அகஇடங்களாகின்றன. ஆனால் அந்த தஞ்சம் முழுமையான ஆறுதல் அல்ல. அது ஆபத்தானதும்கூட. ஏனெனில் நினைவு அவளை காப்பாற்றுவதோடு, மீண்டும் மீண்டும் அதே காயங்களின் முன் அழைத்துச் செல்கிறது. நாவலின் இறுதியில் அவளே அறிந்துகொள்வதுபோல், உயிர்த்துடிப்போடு ஒளிவீசும் நிகழ்காலத்திற்கும் அவளுக்கும் இடையே ஒரு மெல்லிய கண்ணாடிச்சுவர் மட்டுமே நிற்கிறது. அந்தச் சுவரை உடைத்தெறிந்து, நனவின் வெளிக்குள் அவள் ஒருநாள் பிரகாசிக்கக்கூடும்.
