秋風に
折れて悲しき
桑の杖
அகிகஸெனி
ஒரெத்தேகனஷிகி
குவனொட்சுயெ
காற்றில்
உடைபட்டது
ஊன்றுகோல்
கவிஞர் பாஷோ (1644-1694)
akikaze ni / orete kanashiki / kuwa no tsue
புலவர்கள் தங்கள் கைகளில் நாவல் மரக்கிளையை ஊன்றுகோல் போல ஏந்தி வருகின்றனர். புகார் நகரில் மக்கள் கூடுகின்ற இடங்களில் நின்று அந்தக் கிளையை நட்டு நின்றுகொண்டே தங்கள் வாதத்தை முன்வைக்கின்றனர். சமயக் கோட்பாடு தொடர்பான வாதங்களும் தத்துவங்கள் தொடர்பான வாதங்களும் புலவர்களிடியே நடக்கின்றன. வென்றவர் வெற்றியின் அடையாளமாக நாவல் மரக்கிளையை எடுத்துக்கொண்டு நடக்கிறார். சிலப்பதிகாரக் காலகட்டத்தில் புலவர்களுக்குக் வாதத்திறனின் அடையாளமாகக் கையில் நாவல் மரக்கிளை இருந்திருக்கிறது.
தமிழ் நாவல்கள் மணிபல்லவத்திலும், பொன்னியின் செல்வனிலும் இந்தக் காட்சி பேசப்படுகிறது. மணிபல்லவத்தில் இளங்குமரன் புகார் நகரத்து பூத சதுக்கத்தில் புலவர்களை வென்று ‘நாவலோ நாவல்’ எனக் குரலெழுப்பி நாவல் மரக்கிளையை எடுத்துச் செல்கிறான். பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் வீரநாராயண ஏரிக்கரையில் ‘ நாவலோ நாவல்’ என நாவல் மரக்கிளையை நட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பார். பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரம் கையில் ஒரு ஊன்று கோலை வைத்திருக்கும். அந்த ஊன்றுகோல் ஒரு நாவல் மரக்கிளை.
தமிழ் கூறும் நல்லுலகில் வாதிடும் புலவர்க்கு அடையாளமாக நாவல் மரக்கிளை ஊன்றுகோல் இருந்துள்ளது. ஜப்பானிய ஹைக்கூவில் சீன கலாசாரத்திலுள்ள முசுக்கட்டை ஊன்றுகோல் (Mulberry stick) இடம்பெறுகின்றது.
ஆண்குழந்தை பிறந்தால் முசுக்கட்டைக் குச்சியால் வில் செய்து அதிலிருந்து அம்பு எய்வது சீன கலாசாரத்தில் உள்ளது. முசுக்கட்டைக் குச்சி ஆண்குழந்தையின் எதிர்கால வெற்றிக்கு ஓர் அடையாளம். ஜப்பானில் கவிஞர் பாஷோவின் காலகட்டத்தில் முசுக்கட்டைக் குச்சி ஊன்றுகோலாகவும் பயன்பட்டுள்ளது.
‘உடைபட்ட ஊன்றுகோல்’ ஹைக்கூவிற்குள் நுழையும் முன், முசுக்கட்டைக் குச்சி ஊன்றுகோல் தொடர்பான பின்னணி தெரிந்திருப்பது புரிதலை இன்னும் ஆழமாக்கலாம்.
இந்த ஹைக்கூ எழுதப்பட்டது 26 செப்டம்பர் 1693க்கு பின். அன்று கவிஞர் பாஷோ தன்னுடைய ஹைக்கூவின் முதல் வரி பின்னாளில் ஜப்பானியப் போர்க்கப்பலுக்குப் பெயராக வைக்கப்படும் என நினைத்திருக்கமாட்டார்.
‘அகி கஸெ’. இலையுதிர் காலக் காற்று. அகி – இலையுதிர் காலம், கஸெ – காற்று, இலையுதிர் காலக் காற்று.
முதல் உலகப்போர் முடிவை நெருங்கிய காலகட்டத்தில் உருவான ஜப்பானியப் போர்க்கப்பலின் பெயர். இந்தப் பெயருள்ள ஒரு போர்க்கப்பல், இரண்டாம் உலகப் போரில் ‘பேர்ல் ஹார்பர்’ குண்டு வீச்சின்போது ரோந்துக் கப்பலாக இருந்தது. 1693 இல் ஹைக்கூவில் ஒரு ஊன்றுகோலை உடைத்த இலையுதிர் காலக் காற்று, முதலாம், இரண்டாம் உலகப் போர்களில் போர்க் கப்பல்களாக மிதந்து அழிவுக்குக் காரணமாக இருந்தது.
பருவகால மாற்றத்தில் வீசும் இலையுதிர் காலக் காற்று மரங்களிடையே ஓசையை எழுப்பியும், வீழ்ந்திருக்கும் இலைகளைச் சுழன்றெழவைத்தும், எப்போது விழலாம் என ஒட்டிக்கொண்டிருக்கும் இலைகளை ஊதித்தள்ளிச் செல்லும். சில நேரங்களில் காட்டுத்தீயையும் உருவாக்கும். தாழ்வழுத்த மண்டலங்களால் புயலும் மழையும் கடற்கரைப் பகுதிகளில் சேதத்தை உண்டாக்கும்.
அழிக்கின்ற போர்க் கப்பலுக்கு ‘அகிகஸெ’ எனப் பெயரிட்டது பொருத்தமானது.
秋 – அகி – இலையுதிர் காலம்
冬 – ஃபுயு – குளிர்காலம்
春 – ஹாரு – வசந்தகாலம்
夏 – நட்சு – கோடைக்காலம்
ஹைக்கூவின் முதல் அடி, ‘அகிகஸெனி’. 秋風に, இதில் இரண்டு காஞ்சி எழுத்துருக்களும், ஒரு ஹிராகனா எழுத்துருவும் இடம்பெற்றுள்ளன. 秋 (あき) அ கி – இலையுதிர் காலம். 風 (かぜ) க ஸெ – காற்று. に னி – ஆனது. அகிகஸெனி – இலையுதிர் காற்றானது.
秋風に – あき かぜ に – அகிகஸெனி – இலையுதிர் காலக் காற்றானது.
இரண்டாம் அடி, ‘ஒரெத்தேகனஷிகி’. 折れて悲しき, இதில் இரண்டு காஞ்சி எழுத்துருக்களும், நான்கு ஹிராகனா எழுத்துருக்களும் உள்ளன. 折 (お) れ て ஒ ரெ தெ. ஒரி – உடைத்தல், மடித்தல் எனப் பொருள்படும். முன்பு பார்த்த சில ஹைக்கூ விளக்கங்களில் காகிதம் மடிக்கும் கலையை ஒரிகமி என ஜப்பானிய மொழியில் குறிப்பிடுவதைப் பார்த்தோம். ஒரி – மடித்தல், கமி – காகிதம், தாள். அதே ஒரி இங்கு உடைதலைக் குறிக்கும். おれる – ஒரெரு – உடைத்தல், ஒரெதெ – உடைக்கப்பட்டது. 悲 (かなし)き – க ன ஷி கி. கனஷியி எனும் சொல் வருத்தம், துயரம், வேதனை ஆகியவற்றைக் குறிக்கும். கனஷி’யுடன் ‘கி’ き சேருவது மனதில் உண்டாகின்ற துயரத்தை இக்கவிதையில் குறிப்பிடும். கனஷிகி – பெருந்துயர் தர.
折れて悲しき – おれてかなしき – ஒரெதெகனஷிகி – பெருந்துயர் தர உடைக்கப்பட்டது.
மூன்றாம் அடி, ‘குவனொட்சுயெ’. 桑の杖, இதில் இரண்டு காஞ்சி எழுத்துருக்களும் ஒரு ஹிராகனாவும் உள்ளன. 桑 (くわ) குவ, இது மல்பெரி மரத்தைக் குறிக்கும். のனொ – ஐந்தாம் வேற்றுமை உருபு ‘இன்’. குவனொ くわの மல்பெரி மரக்கிளையின். 杖 (つえ) ட்சு யெ – கைத்தடி, ஊன்றுகோல்.
桑の杖 – くわのつえ – குவனொட்சுயெ – மல்பெரி மரக்கிளையின் ஊன்றுகோல்
வேகமாக வீசிய இலையுதிர் காலக் காற்று மல்பெரி மரக்கிளை ஊன்றுகோலை உடைத்துப் பெருந்துயரத்தைத் தந்தது என்னும் பொருளில் இந்த ஹைக்கூ ஊன்றுகோல் இழந்த ஒரு மனிதனைக் காட்சிப்படுத்துகிறது. இது ஹைக்கூ எழுதப்பட்ட காலகட்டத்தில் கவிஞனுடைய வாழ்வில் நடந்த எதுவும் வாசகனுக்குத் தெரியாமற்போனாலும், கவிதை அதனளவில் முழுமையாகப் பொருளை உணர்த்துகிறது.
இந்த ஹைக்கூ எழுதப்பட்டது 26 செப்டம்பர் 1693க்குப் பின்.
பாஷோவுக்கு ரான்ரான் என்னும் சீடர் உண்டு. பாஷோவின் சீடர்களுள் மூத்தவர் அவர். பாஷோவுக்கு உதவியாக இருந்தவர். 26 செப்டம்பர் 1693இல் ரான்ரான் மரணம் அடைகிறார். பாஷோ மிகுந்த துயரத்தில் தன்னுடைய ஊன்றுகோல் உடைந்ததாக இந்த ஹைக்கூவை எழுதுகிறார். இயற்கையின் சீற்றத்தைப் பாடிய ஹைக்கூவுக்கு இன்னொரு பரிமாணம் கிடைக்கிறது.
அகிகஸெனி – இலையுதிர் காற்றில்
ஒரெதெகனஷிகி – பெருந்துயர் தர உடைபட்டது
குவனொட்சுயெ – முசுக்கட்டை மரக்கிளையின் ஊன்றுகோல்
இலையுதிர் காற்றில்
துயர் தர உடைபட்டது
முசுக்கட்டை ஊன்றுகோல்
ஹைக்கூவை உள்வாங்கிய மொழிமாற்றமெனில்,
காற்றில்
உடைபட்டது
ஊன்றிகோல்
