ஆன்ம விடுதலையை நோக்கிப் பயணிக்கும் சாதகன் புரிய வேண்டிய முக்கியமான சாதனைகளாக கர்மயோகம், ஞானயோகம் இரண்டும் கீதையில் சொல்லப்படுகின்றன. இவற்றில் கர்மயோகம் குறித்து சென்ற அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்தோம். ஒரு வசதிக்காக கர்மயோகத்தை மேலும் ஒரு கிளையாக உபாசனா யோகம் என்று பிரிக்கலாம். கர்மயோகம் ஒரு செயலைப் புரிவதில் நாம் மேற்கொள்ளும் பாவனையை அடிப்படையாகக் கொண்டது. மேலும் கர்மயோகம் முக்கியமாக மனத்தூய்மையை இலக்காகக் கொண்டே இயற்றப்படுகின்றது. மேலும் கர்மயோகத்தில் புரியப்படும் செயல்கள் வெளியுலகத்தில் ஒருவன் அன்றாடம் ஆற்றும் செயல்களாகவே இருக்கின்றன. மாறாக உபாசனா யோகம் என்பது தன்னுடைய ஆளுமையை சீரமைத்துக் கொள்வதற்காக தன்னுடைய உடல், வாக்கு, மனம் ஆகியவற்றின் மீது புரியும் செயல்களை உள்ளடக்கியது. கர்மயோகத்தில் மனத்தூய்மை அடையப்படுகின்றது எனில், உபாசனா யோகத்தில் மன ஒருமுகப்பாடு அடையப்படுகின்றது. சங்கரர் இந்த யோகத்தை சமாதி யோகம் என்று அழைக்கிறார்.
கட உபநிஷத் ஒரு மனிதனுடைய ஆளுமையை ஒரு வாகனத்துக்கு ஒப்பிடுகிறது. உடல் என்னும் இந்த வாகனமே நம்மை நம் இலக்கில் கொண்டு சேர்க்கிறது. ஒரு மனிதனுடைய ஆளுமை என்பது அவனுடைய உடல், வாக்கு, மற்றும் மனம் என்ற மூன்று அடுக்குகளிலாலானது. இதை காயிகம் (உடல்), வாசிகம் (வாக்கு), மானசம் (மனம்) என்ற சொற்களால் குறிக்கப்படுகிறது. இங்கு மனம் என்னும் அடுக்கு அது செயல்படும் விதத்தைப் பொறுத்து மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் என்று பிரிக்கப்படுகின்றது.
லௌகீகமான இலக்குகளுக்கு மட்டுமல்ல, ஆன்மிக இலக்கை அடைவதற்கும் உடல் நலமும், அதன் வலிமையும் இன்றியமையாதவை. உபநிஷத் வகுப்புகள் துவங்குவதற்கு முன்பாக பாடப்படும் சாந்தி பாடங்கள் சிலவற்றில் உடல்நலமும், வலிமையும் முதன்மையாக வேண்டப்படுகின்றன. உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக முறையான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை ஓர் ஆன்மிக சாதகன் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு உடல் நலத்தை இழந்த பின்னர் அதை மீட்டெடுப்பதற்காகப் போராடுவதைவிட, ஆரோக்கியத்தைக் காப்பது எளிதானது, செலவு குறைந்தது, காலத்தை மிச்சப்படுத்தக் கூடியது. ஆன்மிக சாதகன் சாத்விகமான உணவுகளையே உட்கொள்ள வேண்டும். அன்றாடம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். ஹடயோகப் பயிற்சிகளும் உடல் வலிமைக்காகவே செய்யப்படுகின்றன. முழு அஷ்டாங்க யோகமுமே உபாசனா யோகம் என்ற வரையறைக்குள் அடங்கி விடும். உடல், மன வலிமைக்காக ஹடயோகப் பயிற்சிகளும், பிராணாயாம, தியானப் பயிற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
உடல்நலம் மற்றும் அதன் வலிமை மட்டும் முக்கியமல்ல. உடல் உறுப்புகளுக்கும், புலன்களுக்கும் நல்லவனவற்றையே அளிக்க வேண்டும். ஓர் உபநிஷத் சாந்திபாடம் ஒன்று இவ்வாறு துவங்குகிறது: “பத்ரம் கர்ணேபி ஸ்ருனுயாம தேவா: காதுகள் நல்லனவற்றைக் கேட்கட்டும். “பத்ரம் பஸ்யே மாஅக்ஷபிர் யஜத்ரா:” கண்கள் நல்லவனவற்றையே காணட்டும். “ஸ்திரை ரங்கைஸ் துஷ்டுவாம் ஸ்ததனூபி:” உறுதியான உடல் உறுப்புகளுடன் உங்களைப் போற்றித் துதித்தபடியிருப்போம். “வ்யஸேம தேவஹிதம் யதாயு:” எங்களுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட வாழ்நாள் முழுக்க நற்செயல்களில் ஈடுபட்டபடியிருப்போம். இந்த மந்திரத்தில் உடல் உறுப்புகளின் வலிமையும், புலன்கள் நல்லவனவற்றில் ஈடுபட வேண்டிய அவசியத்தையும் கூறப்படுகிறது. இன்னொரு சாந்திபாடம், “ஆப்யாயந்து மமாங்கானி வாக் ப்ராண சக்ஷுஸ்ஸ்ரோத்ரமதோ பலமிந்த்ரியானி சர்வானி” என்று துவங்குகிறது. என் உறுப்புகள், வாக்கு, பிராணன், காதுகள், கண்கள் போன்ற புலன்கள் அனைத்தும் பலமுடன் விளங்கட்டும் என்று கூறுகிறது. ஆன்மிகப் பயணத்தில் உடல் மற்றும் புலன்களின் நலன் வகிக்கும் பங்கை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது.
உபாசனா யோகம் செயல்பட வேண்டிய இரண்டாவது அடுக்கு நமது சொல்லின் மீது. இதை வாக்குத் தவம் என்றே வேதாந்த நூல்கள் குறிப்பிடுகின்றன. விவேகசூடாமணியில் சங்கரர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “யோகஸ்ய ப்ரதமம் த்வாரம் வாங் நிரோத பரிக்ரஹ:” ஆன்மிகத் தேடலின் முதல்படியே ஒருவன் தன்னுடைய சொற்களைக் கையாளும் முறையை ஒழுங்குபடுத்துவதுதான். வாக்தபஸ் எனப்படும் இந்த வாக்குத்தவம் குறித்து கிருஷ்ணர் கீதையில் இவ்வாறு கூறுகிறார். “அனுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத்.” அனுத்வேககரம் என்றால் நமது பேச்சு மற்றவர்களுடைய மனதில் கலக்கத்தையோ, பயத்தையோ அல்லது வலியையோ ஏற்படுத்தக் கூடாது. சத்யம் என்பது உண்மையைப் பேசுதல். ப்ரியம் என்றால் பேசப்படும் உண்மையைக் கடினமாகப் பேசக் கூடாது; அந்த உண்மை இனிமையாகவும், அன்பாகவும் சொல்லப்பட வேண்டும். ஹிதம் என்றால் நமது பேச்சு கேட்பவருக்கு நன்மையைத் தரக்கூடியதாக இருக்க வேண்டும். பயனில்லாத பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும். மேலும் மௌனம் மற்றும் கட்டுப்பாடு, அதாவது தேவையற்ற பேச்சைக் குறைத்து, அவசியமானதை மட்டும் பேசுவது உபாஸனை யோகத்தின் முக்கியமான அங்கமாகும். “ஸ்வாத்யாயாப்யஸனம் சைவ வாங்மயம் தப உச்யதே.” இங்கு ஸ்வாத்யாய அப்யஸனம் என்பது வேதாந்த நூல்கள் மற்றும் பிற புனித நூல்களைப் பாராயணம் செய்வதைக் குறிக்கின்றது. மேற்சொன்ன அனைத்து தகுதிகளையும் உள்ளடக்கியதைத்தான் “வாங் மயம் தப:” வாக்குத்தவம் என்று கிருஷ்ணர் குறிப்பிடுகிறார்.
மனித ஆளுமையின் மூன்றாவது அடுக்காக மனம் வருகின்றது. எல்லாவித தியான முறைகளும் மனத்தை ஒழுங்குபடுத்துவதற்காகவும், ஒருமுகப்படுத்துவதற்காகவும், மனவலிமையைக் கூட்டுவதற்காகவும் செய்யப்படுகின்றன. வேறு முறைகளைப் பயன்படுத்தியும் நம்மால் மனவலிமையை அடைய இயலும் என்றாலும்கூட, தியானமுறைகளே முதன்மையாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. உபாசனா என்ற சொல்லுக்கே முதன்மையாக மனதைச் செம்மைப்படுத்த இயற்றப்படும் தியானம் என்று பொருள். ஆனால் உடல், வாக்கு இவற்றின் போக்கை முறையாக ஒழுங்குபடுத்துவது உபாசனா யோகத்தின் முதல்படியாக வருகின்றது. இதற்குப் பின்னரே மனத்தை ஒழுங்குபடுத்தும் தியானமுறைகள் நன்கு வேலை செய்யும். மனம் என்பது மிக நுட்பமான ஒரு கருவி. அதை நேரடியாகக் கட்டுப்படுத்துவது கடினம். மனத்தைக் கட்டுப்படுத்துவதற்கு கீதையில் கிருஷ்ணர் இரண்டு விதமான உபாயங்களைத் தருகின்றார். ஒன்று வைராக்யம், மற்றொன்று அப்யாசம். வைராக்யம் என்றால் இவ்வுலகத்தில் எந்தப் பொருளும் என்னை நிறைவு செய்யாது என்ற தெளிவிலிருந்து பிறக்கும் பற்றின்மை. இது குறித்து சாதன சதுஷ்டயம் என்ற தலைப்பின் கீழ் விரிவாகப் பார்த்தோம். அப்யாசம் என்ற சொல் தொடர்ந்த தியானப் பயிற்சியைக் குறிக்கின்றது.
பலவகையான தியானப்பயிற்சிகள் உள்ளன. அஷ்டாங்கயோகம் தியானம், தாரணா, சமாதி போன்ற பலவகையான பயிற்சிகளை மனஒருமுகப்படுத்துதலுக்கும், மனத்தை வலிமைப்படுத்தவும் அளிக்கிறது. ஒரு வேதாந்த மாணவனுக்குத் தேவையான தியானப் பயிற்சிகளைப் பொதுவாக நான்கு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை தளர்வு தியானம் எனப்படுகிறது. இதன் நோக்கம் மனதையும், உடலின் பிற பகுதிகளையும் தளர்த்துவதாகும். இது மனம் மற்றும் உடல் மீது அனுதினமும் படிந்து வரும் அழுத்தங்களைத் தளர்த்துகிறது. தியானம் செய்வதற்கான வழிமுறைகளை கீதை விஸ்தாரமாக அளிக்கிறது. முதலில் தூய்மையான, அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் அமரும் ஆசனம் அசையாமல் உறுதியாக இருக்க வேண்டும். உயரமாகவோ, மிகத் தாழ்வாகவோ இருக்கக் கூடாது. தர்ப்பைப்புல் அடுக்கி மான்தோல் போர்த்தி அமர வேண்டும். (இந்தமுறை அந்தக் கால வழக்கத்திற்கேற்ப கொடுக்கப்பட்டது. நமக்கு சௌகர்யமான இடத்தில், இருக்கையில் அமரவேண்டும் என்பதாக இதைப் புரிந்து கொள்ளவேண்டும்.)
சௌகர்யமான இருக்கையில் அமர்ந்தபின்னர் மெல்ல சுவாசத்தைச் சீராக்கி, உடல் உறுப்புகளைத் தளரச் செய்து வெறுமனே ஆசனத்தில் அமர்ந்திருக்க வேண்டும். மெல்ல நமது சுவாச ஓட்டம் நிகழ்வதை கவனிக்கத் துவங்க வேண்டும். துவக்கத்தில் மனம் வெளியில் ஓடும். அவ்வாறு ஓடும் எண்ண ஓட்டங்களை மெதுவாக தன் வசம் இழுத்து, சுவாசத்தின் மீது கவனத்தைப் பதியச் செய்ய வேண்டும். இவ்வாறு சுவாசத்தின் மீது ஒரு குறிப்பிட்ட காலம் மனதைச் செலுத்தும்போது, நமது எண்ண ஓட்டங்களின் வேகம் இயல்பாகவே குறைவதைக் காண்போம். தியானப்பயிற்சியின் முதன்மையான இரு பலன்களாக சித்த நைஸ்சல்யம் மற்றும் சித்த ஏகாக்ரதா ஆகியன கூறப்படுகின்றன. சித்த நைஸ்சல்யம் என்றால் மனத்தினுடைய தெளிவும், அமைதியும். சுவாசத்தை கவனித்தபடி அமரும் இந்த தியானத்தில் ஒருவனுக்கு சித்த நைஸ்சல்யம் வாய்க்கிறது. சுவாசத்தை கவனிக்கும் இந்த தியானத்துக்கு ஆனாபானசதி தியானம் என்று புத்தமதம் பெயர் கொடுக்கிறது. ரமண மகரிஷி இந்த தியானத்தை பிராண ஈக்ஷணம் என்று அழைக்கிறார். மற்றொரு தியானத்தில் நமது எண்ணங்களையே கவனிக்கிறோம். முதலில் நம் உடல் மீது நம் கவனத்தைச் செலுத்தி, பின்னர் அந்த கவனத்தை சுவாசத்தின் ஓட்டத்துக்கு மாற்றி, இறுதியாக நமது எண்ணங்களின் ஓட்டத்தின் நம் கவனத்தை வைக்கும்போது இயல்பாகவே எண்ண ஓட்டங்களின் தீவிரம் குறைகிறது. இந்த வகை தியானம் விபாசனா தியானம் என்றழைக்கப்படுகிறது. பிராண ஈக்ஷணமும், விபாசனா தியானமும் ஒன்றையொன்று இட்டு நிரப்புபவை. எண்ணங்களின் ஓட்டத்துக்கும், நமது சுவாசத்தின் ஓட்டத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை இந்த தியானங்களின்போது நம்மால் அறியமுடியும். இந்த தியானத்தின்போது எந்த குறிப்பிட்ட செயலையும் நாம் செய்வதில்லை. எந்தச் செயலும் உடலாலோ, மனத்தாலோ செய்யாது வெறுமனே அமர்ந்து இருத்தலே இந்த வகை தியானப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.
தியானத்தின் இன்னொரு வகை ஏகாக்ரதா தியானம் எனப்படுகிறது. இதற்கு ஒருமுகப்படுத்தும் தியானம் என்று பொருள். மனித மனதின் இயல்பான குணம் ‘சஞ்சலத்துவம்’ (அலைபாயும் தன்மை). இதைச் சரிசெய்து, மனதை ஒரு புள்ளியில் நிலைநிறுத்தப் பழக்குவதே ஏகாக்ரதா தியானத்தின் நோக்கமாகும். இதற்கான பயிற்சி முறைகளாக மானச பூஜை அதாவது ஒரு தெய்வ உருவத்தையோ அல்லது ஒரு பொருளையோ மனக்கண்ணால் பார்த்து, மனதிற்குள்ளேயே அதற்குச் சடங்குகளைச் செய்வது மற்றும் ஜபம் அல்லது பாராயணம் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு மந்திரத்தையோ அல்லது ஸ்லோகத்தையோ மனதிற்குள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தால் சிதறி ஓடும் எண்ணங்களை அது கட்டுப்படுத்தி ஒரு நேர்க்கோட்டில் கொண்டு வரும். இந்தத் தியானத்தைச் செய்வதன் மூலம் ‘ஏகாக்ர சித்தம்’ (திறன்மிக்க மற்றும் கூர்மையான மனம்) கிடைக்கிறது. இது ஆன்மீக ஞானத்தைப் பெறுவதற்கும், லௌகீக காரியங்களில் வெற்றி பெறுவதற்கும் மிக அவசியமான ஒன்றாகும்.
அடுத்தவகை தியானம் விஸ்வரூப தியானம் எனப்படும். இதற்கு விஸ்வரூப ஈஸ்வர உபாசனை என்றும் பெயர். இது ஒருவருடைய குறுகிய மனப்பான்மையை மாற்றி, அகண்டமான (பரந்த) பார்வையைக் கொடுக்கும் ஒரு பயிற்சி. பொதுவாக மனிதர்களாகிய நாம் “நான்”, “எனது குடும்பம்”, “எனது பிரச்சனை” என்ற குறுகிய வட்டத்தில் சிக்கிக்கொள்கிறோம். இந்தச் சிறுமை உணர்வுதான் பயம், பொறாமை மற்றும் கவலைகளுக்குக் காரணமாகிறது. விஸ்வரூப தியானம் இந்தச் சிறு வட்டத்தை உடைத்து, நம் மனதை பிரபஞ்சத்தோடு இணைக்க உதவுகிறது. இந்தத் தியானத்தில், ஒரு நபர் தன்னை ஒரு சிறிய உடலாக மட்டும் பார்க்காமல், இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு அங்கமாகப் பாவிக்க வேண்டும். தியான ஆசனத்தில் அமர்ந்தபடி தன்னை இயற்கையோடு இணைத்துக்கொள்ள வேண்டும். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், ஆறுகள் மற்றும் மலைகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ‘விஸ்வரூப’ இறைவனை அல்லது இயற்கையைத் தியானிக்க வேண்டும். “நான் இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு துளி, அதே சமயம் இந்தப் பிரபஞ்சமே என்னுள் இருக்கிறது” என்ற உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். விஸ்வரூப தியானத்தினால் ஒருவருக்குப் பலவிதமான பலன்கள் கிடைக்கின்றன. நாம் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்று உணரும்போது, தனிமை உணர்வும் பாதுகாப்பற்ற உணர்வும் நீங்குகிறது. பிரம்மாண்டமான விண்வெளியுடனும், கோடிக்கணக்கான நட்சத்திரங்களுடனும் நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ளும்போது, நமது அகங்காரம் எனப்படும் தன்முனைப்பு மிகவும் வலுவிழந்து, முக்கியத்துவம் குறைந்துபோகும். நமது சிறிய பிரச்சனைகள் எவ்வளவு சாதாரணம் என்பது புரியும். ஏகாக்ரதா தியானம் மனதை ஒருமுகப்படுத்த உதவுகிறது என்றால், விரிவாக்கத் தியானம் மனதை விரிவுபடுத்த உதவுகிறது.
அடுத்தவகையான தியானம் நற்பண்புகளின் மீதான தியானம் எனப்படுகிறது. மனதை அமைதிப்படுத்தல், ஒருமுகப்படுத்துதல், விரிவுபடுத்தல் இவற்றை மட்டும் அடைந்து விட்டால் போதாது. அந்த மனம் நற்பண்புகளின்பால் ஈர்ப்பு கொண்டிருக்க வேண்டும். எப்படி ஒரு துணிக்கு சாயம் ஏற்றப்படுவதற்கு முன்னால் அதிலுள்ள அழுக்குகள் அகற்றப்பட வேண்டுமோ அதேபோல மனஒருமுகப்பாட்டை அடைவதற்கும் முன்னால் மனதை நற்பண்புகளால் தூய்மைப்படுத்த வேண்டும். அதற்காக இயற்றப்படும் தியானமே ‘மதிப்புத் தியானம்’ (Value Meditation) என்றழைக்கப்படுகிறது. கீதையில் கிருஷ்ணர் நற்பண்புகளை தைவீ சம்பத் என்று அறிமுகப்படுத்துகிறார். மனம் எத்தனை வலிமையாக இருந்தாலும், நமது சுபாவம் சரியில்லை என்றால் நம்மால் அமைதியாக வாழ முடியாது. மேலும் பிற தியானங்களுக்கு கோபம், பொறாமை, பேராசை போன்ற எதிர்மறை எண்ணங்கள் தடையாக இருக்கும். இந்தத் தடையை நீக்க ‘மதிப்புத் தியானம்’ ஒரு மருந்தாகச் செயல்படுகிறது. இந்த தியானத்தைப் பின்வருமாறு செய்ய வேண்டும்: முதலில் உங்களுக்கு எந்த நற்பண்பு தேவையோ (உதாரணமாக, பொறுமை), அந்த ஒரு பண்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து அந்தப் பண்பின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். “பொறுமை இருந்தால் என் மனம் எவ்வளவு அமைதியாக இருக்கும்? கோபப்படுவதால் நான் எவ்வளவு இழக்கிறேன்?” என்று பகுத்தறிய வேண்டும். பின்னர் “இன்று முழுவதும் நான் பொறுமையைக் கடைப்பிடிப்பேன். இக்கட்டான சூழலிலும் நான் நிதானமாக இருப்பேன்” என்று மனதிற்குள் உறுதிமொழி எடுக்க வேண்டும். தொடர்ந்து இந்த மதிப்பு தியானப்பயிற்சியைச் செய்யும்போது, ஒரு கட்டத்தில் அந்த நற்பண்புகள் நம்முடைய இயல்பாகவே மாறிவிடுவதைக் காணலாம். மேலும் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து மனம் தூய்மை அடையும். இந்த மனத்தூய்மை வாய்த்த சாதகர்களுக்கு ஆத்ம ஞானம் எனப்படும் தன்னை அறிதல் நிகழும்.
தியானங்களிலேயே மிக உயர்ந்ததும், இறுதியானதுமான தியானம்தான் அடுத்து வரக்கூடியது. இதற்கு “ஸ்வரூப தியானம்” என்று பெயர். மேற்குறிப்பிட்ட ஏகாக்ரதா, விஸ்வரூபம், மற்றும் மதிப்பு தியானங்கள் மனதை விடுதலைக்காக ஆயத்தப்படுத்துகின்றன. ஆனால், ஸ்வரூப தியானம் என்பது அகவிடுதலை அடைந்த ஞானியின் இயல்பான நிலையைக் குறிக்கிறது. சாதகனொருவன் ஸ்வரூப தியானத்தை ஒரு பயிற்சியாகவும் மேற்கொள்ளலாம். ஸ்வரூப தியானத்தில் தியானிப்பவன் மீதே தியானம் நடக்கிறது.
உபநிஷத்துகளின் சில மந்திரங்கள் ஆத்மாவினுடைய தன்மையை விளக்குகின்றன. தனிப்பட்ட “நான்” என்று உணரும் இந்த ஆத்மாவுக்கும், எங்கும் பரம்பொருளாக நிறைந்திருக்கிற பிரம்மத்துக்கும் உள்ள ஐக்கியத்தை, ஒருமைத்தன்மையை விளக்கும் உபநிஷத் மந்திரங்கள் மகாவாக்கியங்கள் என்றழைக்கப்படுகின்றன. அஹம் பிரம்மாஸ்மி, தத்வமசி, பிரக்ஞானம் பிரம்ம, போன்றவை அந்த மகாவாக்கியங்கள். இவ்வாக்கியங்கள் தியானிப்பவனுடைய தன்மையையே விளக்குவதால், ஸ்வரூப தியானத்தில் இவற்றை எடுத்துக்கொண்டு தியானிக்கப்படுகிறது. “நான் இந்த உடல் அல்ல, இந்த மனம் அல்ல, இந்த அறிவும் அல்ல. “மாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகிற்கு ஆதாரமாக, மாறாமல் இருக்கும் சாக்ஷி (Witness) அல்லது சைதன்யம் (Consciousness) நானே,” என்று சிந்திப்பது ஸ்வரூப தியானம் ஆகும். இந்தத் தியானம் செய்வதற்கு முன்னால் ஞானயோக சாதனைகளான ‘சிரவணம்’ (கேட்டல்) மற்றும் ‘மனனம்’ (சிந்தித்தல்) ஆகிய நிலைகளை ஒருவன் கடந்திருக்க வேண்டும். ஞானயோக சாதனையின் மூன்றாவது நிலையாக இந்த தியானமே வருகின்றது. இதற்கு நிதித்யாசனம் என்று பெயர். இந்த தியானம் பின்வருவனவற்றை உள்ளடக்கியது: நித்தியானுசந்தானம்: தான் கற்ற வேதாந்த உண்மைகளை (நான் பிறப்பு, இறப்பு அற்ற ஆத்மா போன்றவற்றை) அமைதியாக அமர்ந்து மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வது. நிதித்யாசனம்: ஆத்ம ஞானத்தை ஆழ்மனதில் நிலைநிறுத்துவது. அதாவது, தியானத்தில் எந்த ஒரு எண்ணமும் தோன்றினாலும், அந்த எண்ணத்திற்கு ஆதாரமாக இருக்கும் ‘அறிவு’ (Awareness) நானே என்று உணர்வது. ஜீவன்முக்தி எனப்படும் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே மன அமைதியையும் விடுதலையையும் அடைதல் இந்த தியானத்தின் பலனாகும். இந்த தியானத்தின் மூலம் மரணம் என்பது உடலுக்குத்தான், ஆத்மாவிற்கு அல்ல என்ற தெளிவு பிறப்பதால் மரண பயம் முற்றிலுமாக நீங்கும். வெளி உலக விஷயங்களால் கிடைக்கும் சிற்றின்பங்களை விட, தன்னுள் இருக்கும் பேரின்பத்தை, ஆனந்தத்தை ஒருவன் அனுபவிப்பான். முந்தைய தியானங்கள் எல்லாம் மனதைப் பலப்படுத்துவதற்காகவும், தூய்மைப்படுத்துவதற்காகவும் செய்யப்படுபவை. ஆனால் ஸ்வரூப தியானம் என்பது மனதைக் கடந்து செல்வதற்காகச் செய்யப்படுவது. “நான் ஒரு தியானி” என்ற எண்ணம் கூட மறைந்து, “நான் அந்தத் தூய அறிவாகவே இருக்கிறேன்” என்ற நிலையில் நிலைத்திருப்பதே இதன் உச்சக்கட்ட நிலை.
இவ்வாறு உபாசனா யோகத்தில் தியானங்களாக தளர்வுபடுத்தும் தியானம், ஏகாக்ரதா தியானம், விஸ்வரூப தியானம், மதிப்பு தியானம் ஆகியவை கூறப்பட்டன. ஸ்வரூப தியானம் என்பது ஞானயோக சாதனைகளில் ஒன்றாக இருப்பினும் தியானவகைகளில் அதுவும் ஒன்றாகத் திகழ்வதால் அதையும் இங்கு குறிப்பிட்டோம்.
ஓர் ஆன்மசாதகனுக்கு பயிலப்பட வேண்டிய யோகங்களாக கர்மயோகம், ஞானயோகம் என்ற இரண்டே பாதைகள் தாம் உண்டு என்றும், இவ்விரண்டு யோகங்களும் தனித்தனி வழிகளாக இல்லாமல் படி நிலைகளாக இருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தோம் (முதலில் கர்மயோகத்தை முடித்த பின்னர் ஞானயோகத்தைத் துவங்கவேண்டும்). இங்கு உபாசனாயோகமும் செயலில் அடிப்படையில் அமைவதால் அதுவும் கர்ம யோகத்துள்ளேயே அடங்கிவிடும். சாதகன் ஒரு குறிப்பிட்ட நிலையில் கர்ம யோகத்தில் ஆழ்ந்து கவனம் செலுத்துபவனாகவும், இன்னொரு நிலையில் உபாசனையில் கவனம் செலுத்துபவனாகவும் இருப்பான். இது அவனது ஆன்மிக வளர்ச்சியைப் பொறுத்தே அமையும்.
கர்மயோகமும், உபாசனாயோகமும் அடுத்த யோகமான ஞானயோகத்துக்காக சாதகனொருவன் தன்னைத் தயாரித்துக் கொள்வதற்கான சாதனைகளே. தன்னை அறியும் பயணத்தில் ஞானயோகமே அதிமுக்கியமானதும், இன்றியமையாததுமான சாதனையாகும். வேதாந்தக்கல்வி என்பதே ஞானயோக சாதனையில்தான் அடங்கியிருக்கிறது. ஞானயோக சாதனை குறித்து அடுத்த அத்தியாயத்தில் விரிவாகக் காண்போம்.
[தொடரும்]
