இப்படி பல எச்சரிக்கைகளுடன் கவனமாக தேடுங்கள் என்று சொல்லி அனுப்பினாள். அந்த பெரியவர்கள் அவள் சொல்வதின் உட் பொருளை உணர்ந்து கொண்டனர். நலம் விரும்பியாக நாம் தேடுவதை அறிந்தால், எதிரிகளின் ஒற்றர்களும் கண்டு கொள்வார்கள், அவர்களின் உள் நோக்கம் வேறாக இருக்கும் என்று இந்த பெண் பயப்படுகிறாள். அவர்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்த கிராமங்கள், துறவிகள் வாழும் இடங்கள், மாட்டு கொட்டகைகள், என்று சென்ற இடங்களில் எல்லாம் தமயந்தி சொன்னபடியே செய்தியை பரப்பினர்.
நாட்கள் கடந்தன. பல மாதங்களுக்குப் பின் ஒரு பர்ணாதா என்ற அந்தணன், விதர்ப தேசம் வந்து தமயந்தியை தனியாக சந்தித்தான். ‘ஓ தமயந்தி! நானும் நளனைத் தேடி அயோத்யா வந்தேன். பாங்காசுரன் என்பவன் மகனைச் சந்தித்தேன். போற்றத் தகுந்த பெண்மணியே! ருது பர்ணன் என்பவரும், நான் உன் வாசகங்களைச் சொல்லும் பொழுது உடனிருந்தார். அவரோ, அவர் சபையில் இருந்த மற்றவர்களோ எதுவும் சொல்லவில்லை. காதில் வாங்கிக் கொண்டதாக கூட தெரியவில்லை. பல முறை சொன்னேன். ஆனால் என்னை விரட்டி விட்டனர்.
வெளியில் வந்த என்னை ரிது பர்ணனிடம் பணி செய்யும் ஒருவன் அணுகினான். தன் பெயர் வாஹுகன் என்றான். அந்த அரசனின் தேரோட்டியாம். குட்டையான கைகள். திடமான சரீரமும் இல்லை. ஆனால், தான் வேகமாக தேரோட்டுவேன், நல்ல சமையல் காரன் என்று சொல்லிக் கொண்டான். ஏனோ இந்த செய்தி கேட்டு கண்களின் நீர் பெருக நின்றிருந்தான். ஒரு நிலையில் விசித்து அழ ஆரம்பித்தான். நீ யார், எங்கிருந்து வருகிறாய் என்று பல கேள்விகள் கேட்ட பின் தான் என்னை நம்புவது போல இருந்தான். இந்த செய்தியைச் சொன்னான்.
“கற்புக்கரசியே! நீ நிச்சயம் சுவர்கம் போவாய். இந்த அளவு வாழ்வில் அடி பட்டு வருந்தினாலும், நல்லவர்கள் நிலை தடுமாற மாட்டார்கள் என்று அறிவேன். தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் தைரியமே துணையாக காப்பாற்றுவார்கள். அரசனோ, உடன் இருப்பவர்களோ கை விட்டாலும், கோபம் கொள்ள மாட்டார்கள். அவர்கள் தன்னம்பிக்கை அவர்களுக்கு கை கொடுக்கும். மனதார நம்பும் நல் ஒழுக்கமும், நல்ல நடத்தைகளுமே அவர்களுக்கு ஆயுதம், பாதுகாப்பு கவசம் ஆகும். எனவே பெண்மணியே! வருந்தாதே. சந்தேகம் இன்றி, உன் கணவன் உன்னைத் தேடி வருவான். யார் அறிவர், அவன் எந்த விதமான கஷ்டங்களை அனுபவிக்கிறானோ, யார் அவனை தொடர்ந்து துன்புறுத்துகிறானோ, தாயே, பொறுத்துக் கொள். பிரிந்து சென்றாலும் மனதால் உன்னோடு தான் எங்கேயோ இருப்பான். திரும்பி வர வழி தேடிக் கொண்டிருப்பான்.ஒரு நாள் பறவைகள் அவன் ஆடையை பிடுங்கிக் கொண்டு சென்றன. உயிர் தரிக்கவே சிரமப் பட்டானே. எங்கிருந்து இழந்த வாழ்வை மீட்பான்? . மன உறுதியை இழக்காமல் போராடிக் கொண்டிருப்பான். கண் முன் இல்லையே என்று வருந்தாதே. அவன் மனதில் உன்னைத் தவிர எதுவும் இல்லை. அவன் பலமே நீயாகத் தான் இருப்பாய். தொடர்ந்து அவனை வாட்டிய துன்பங்கள், மற்றொருவன் நிலை குலைந்து போய் இருப்பான். இந்த பலம் தான் அவனை வாழ வைத்திருக்கிறது. செல்வந்தனாக அரசனுக்கு இணையாக வாழ்ந்தவன். காலத்தின் செயல், வீழ்ச்சியை சந்தித்தான். அதோடு நிற்காமல் விரோதிகள் அவனையே அழிக்கத் துடித்தனர். பசியுடன் உணவைத் தேடி அலைந்தவனை யார் என்று அறியாத மக்கள் தயவில் உயிர் தரித்து எங்கேயோ இருப்பான். கருணை உள்ளம் படைத்த பெண்ணே, அவனை கோபிக்காதே, அவன் அறிவான், நீ வெகுண்டால் தாங்க மாட்டான். அது சாபமாக அவனை பொசுக்கும். “
இதை கேட்ட பின், நான் விரைவாக இங்கு வந்தேன். இளவரசி! உனக்கு இதில் ஏதாவது பொருள் இருப்பதாகத் தெரிந்தால் அரசனிடம் சொல்.
தமயந்தி அந்த பர்னாதன் என்பவரை இருக்கச் சொல்லி விட்டு உள்ளே வந்து தாயிடம் சொன்னாள். தனிமையில் அவளுடன் உரையாடினாள். அம்மா, அரசனை இந்த விஷயத்தில் தலையிடாமல் இருக்கச் சொல். எந்த விஷயமும் அவர் தெரிந்ததாக கூடக் காட்டிக் கொள்ள வேண்டாம் சில செயல்களை நான் சுதேவர் முதலான சிலருடன் கலந்து கொண்டு செய்யப் போகிறேன். எதுவானாலும் உனக்குத் தெரிந்ததை யாரிடமும் சொல்லாதே. தனி ஆளாக ஒரு சிலர் உதவியுடன் ஸுதேவர் முதலானோர் மட்டும் எனக்கு உதவியாக இருக்கட்டும் என்றாள்.
பின், அவரை வரவழைத்து அவரிடம் சொன்னாள். சுதேவா! நீங்கள் என் நலனை விரும்பவர் என்பதால் தைரியமாக இந்த உதவியைக் கேட்கிறேன். நீங்கள் உடனே அயோத்தி செல்லுங்கள்.
பர்ணாதருக்கு உணவு முதலியன அளித்து அவர் களைப்பை நீக்கிய பின் அவரை வணங்கி, தாராளமாக தனம், மற்ற பொருட்கள் கொடுத்து விட்டு , பெரியவரே! நான் நளனுடன் சேர்ந்த பின் உங்களுக்கு மேலும் தனமோ எது வேண்டுமானாலும் தருகிறேன். நீங்கள் செய்த பேருதவி இதை என்றும் மறக்க மாட்டேன். வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். என் வாழ் நாள் முழுவதும் உங்களுக்கு நன்றியுடையவளாக இருப்பேன். என்றாள்.
அவரும் உணர்ச்சி வசப் பட்டார். என்னாலும் ஒரு உதவி செய்ய முடிந்ததே என்று எண்ணியவர் போல, அவளுக்கு வாழ்த்துச் செய்திகள் சொல்லி, பலவிதமாக ஆசிகள் அளித்து விட்டு தன் வழி சென்றார்.
அதன் பின் திரும்ப சுதேவரிடம் வந்தாள். சுதேவரே! பறவை பறக்கும் வேகத்தில் அயோத்யா செல்லுங்கள். அரசன் ருதுபர்ணனிடம் யதேச்சையாக சொல்வது போல பின் வருமாறு சொல்லுங்கள். ‘ பீம ராஜாவின் மகள்,தமயந்திக்கு மற்றொரு சுயம்வரம் நடக்கப் போகிறதாம். அரச குமாரர்கள், மற்றும் பலர் அங்கு போய் கொண்டிருக்கிறார்கள். என் கணக்குப் படி நாளை அந்த சுயம்வரம் நடக்கும் என்று தோன்றுகிறது,’
மேலும் சொல்லுங்கள் அரசனே! நீங்களும் நல்ல வீரர். பலரை வெற்றி கொண்டு நல்ல முறையில் ஆட்சி செய்கிறவர். போய் பாருங்களேன். விடியற் காலையிலேயே அவள் தன் இரண்டாவது கணவனைத் தேர்ந்தெடுப்பாள் என்றனர். முதல் கணவன் நளன் உயிருடன் இருக்கிறானா என்பதே தெரியவில்லையே, வேறு என்ன செய்வாள்.
சுதேவரும் நன்றாக அவள் சொன்னதை திருப்பிச் சொல்லி உறுதி படுத்திக் கொண்டு உடனே புறப்பட்டார். ருதுபர்ண அரசனை சந்தித்து அப்படியே சொன்னார்.
ருது பர்ண அரசனும் இதைக் கேட்டு வாஹுகனை அழைத்து, ‘வாஹுகா! நீ குதிரைகளை வசப் படுத்த தெரிந்தவன் என்று அறிவேன். தமயந்திக்கு இரண்டாவது சுயம்வரமாம். அதுவும் நாளை விடியலில். அதற்குள் குண்டின புரம் போய் சேர வேண்டும். ரதத்தை வேகமாக ஓட்டிக் கொண்டு என்னை அங்கு கொண்டு போய் சேர்க்க உன்னால் தான் முடியும், வா’ என்று அழைத்தான்.
நளன் மனம் பட்ட பாடு, வருந்தியது என்றால் போதுமா? தவித்தான்.
மனதை சமாதானப் படுத்திக் கொண்டான். ‘ஒரு வேளை அவளால் தாங்க முடியாமல் போயிருக்கும். அல்லது என்ன உசுப்பி எழுப்பவே கூட செய்திருக்கலாம். ஆ! வேறு விதமாக விதர்ப ராஜ குமாரி நினைத்திருந்து என்னை விலக்கி விட்டால் என்ன செய்வேன். நான் அவளுக்கு இழைத்த துரோகத்தை விடவா? என் பாப செயல்கள், அறிவில்லாமல் நடுக் காட்டில் கை விட்டது – இவைகளை எந்த அளவு தான் பொறுக்க முடியும், உலகில் சாதாரண பெண்கள் செய்யலாம், இவளுமா?’
என் தவறுகளே ஏராளம். அவளை ஏன் குறை சொல்கிறேன். ஒரு வேளை இந்த இடைப் பட்ட நாட்களில் என் மீதுள்ள பற்றுதலே இல்லாமல் போய் இருக்கலாம். என்ன இன்னல்களைச் சந்தித்தாளோ, அரசன் பீமனுக்கு உயிருக்கு உயிரான மகள், இவள் அறியாமல் அவரே கூட ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால், என் குழந்தைகளுக்குத் தாய், அவள் ஏன் ஒப்புக் கொள்கிறாள்.
எதுவானாலும், நேரில் போய் தெரிந்து கொள்கிறேன். ருதுபர்ண அரசனே கேட்கும் பொழுது மறுக்கவா முடியும்? நடப்பது நடக்கட்டும்.
தன்னை சுதாகரித்துக் கொண்டு கை கூப்பி அரசனிடம் ‘அரசே! நான் யார் மறுத்துச் சொல்ல. ஒரே நாளில் உங்களை விதர்ப தேசத்தில் கொண்டு சேர்க்கிறேன். அரசே நான் தயார் என்றான். ‘
அரசன் பங்காசுரனின் மகன் ருது பர்ணன் மகிழ்ந்தான். வாஹுகனும் குதிரை லாயத்துக்குச் சென்று சிறந்த குதிரையை தேர்வு செய்யச் சென்றான். ருது பர்ணனொ, பர பரத்துக் கொண்டிருந்தான். கிளம்பு கிளம்பு, ஏன் தாமதிக்கிறாய் என்று வினவிக் கொண்டிருந்தான். குதிரைகள் அதிக கனமில்லால், சீரான உடலமைப்பு கொண்டதாக இருக்க வேண்டும். வெகு தூரம் பயணிக்க ஏற்றதாக, தாங்கும் சக்தி உடையதாக, எளிதில் வாட்டமடையாத உடல் பலம், உறுதி இருக்க வேண்டும். நல்ல ஜாதிக் குதிரை, சரியான அங்க அடையாளங்கள், குறிகள் உடலில் இருக்க வேண்டும், முகவாயும், கன்னங்களும் காற்றின் வேகத்தை தாங்கும் படியும், வீக்கங்கள் இல்லாமலும் பார்த்து தேர்ந்தெடுத்தான். பிடறி மயிர் கூட ஒரு அளவு உண்டு, பத்து கொத்துக்களாக இருப்பது நலம் என்றான். சிந்து தேசத்து குதிரைகள் காற்று போல பறக்கும் என்றான்.
இப்படி குதிரைகளைத் தேடிக் கொண்டிருந்தவனிடம் ருது பர்ணன் கோபித்தான். என்ன இது, ஏன் தாமதிக்கிறாய். இந்த குதிரைகள் பலமற்றவையே. எவ்வளவு தூரம் செல்ல வேண்டும், இவைகள் தாங்குமா, மூச்சு திணறி வழியில் விழுந்தால்/ என்ன செய்வோம் என்றான்.
இந்த குதிரைகள், ஒவ்வொன்று ஒரு விதமான நல்ல தகுதி கொண்டிருக்கின்றன. அனைத்துமாக ஒரு இடத்தில் இருப்பது தான் நலம். ஒன்றில் முன் நெற்றி நன்றாக இருக்கிறது, அடுத்து அவ்வளவு நன்றாக இல்லை. பக்கங்கள் நன்றாக இருந்தால் முதுகு பலம் இல்லை. ஆனாலும் நான் கொண்டு சேர்க்கிறேன். அரசே! இவை தவிர வேறு உண்டானால் காட்டுங்கள். என்றான்.
ருது பர்ணன், நான் என்ன சொல்ல. நீ அறிந்தவன், நீயே சொல். குதிரைகளை பராமரிப்பதிலும், வேகமாக செலுத்தவும் உன்னால் முடியும், அதற்கான திறமை உடையவன் என்று அறிவேன். அதனால் வாக்கு வாதம் வேண்டாம். உன் விருப்பப்படி தேர்ந்தெடுத்து சீக்கிரம் தயாராக வா. என்றான்.
நளனும், சரியான குதிரையை தேர்ந்தெடுத்து, சேணங்களை பூட்டி, ரதத்துடன் இணைத்து விட்டு, தயாரானதும் ருது பர்ண அரசன் ஏறி ரதத்தில் அமர்ந்தான். உடனே சொல்லி வைத்தாற் போல அந்த குதிரைகள், ஏனோ பொத்தென்று விழுந்தன. நளன் அவைகளை எழுந்து நிற்கச் செய்து, வார்ஷ்னேயனை அழைத்து ரதத்தில் சாரதியாக அமரச் செய்து விட்டு, தான் குதிரையின் மேல் ஏறிக் கொண்டு, அவைகளை மனோ வேகத்தில் பறந்து செல்வது போல செலுத்தினான்.
வெகு வேகமாக சென்ற ரதம், அதை செலுத்திய வாகுகன், சாரதியாக அமர்ந்திருந்த வார்ஷ்னேயன் யோசித்தான். ருது பர்ணனோ, திகைத்து, அந்த வேகத்தை ரசித்தபடி அமர்ந்திருந்தான்.
வார்ஷ்னேயன் யோசித்தான். யார் இது, இந்திரனின் தேரோட்டி மாதலியா? வாகுகன் யார்? மாதலியின் திறமை இவனுக்கு எப்படி வந்திருக்கும். சாலி ஹோத்ர என்ற ஒருவர் தன் குதிரைகளை பழக்குவது பற்றியும், வேகமாக அவை தேரை இழுத்துசெல்ல பழக்குவது பற்றியும் ஆராய்ந்து அறிந்தவர். அவர் மனித உருவில் வந்து விட்டாரா? அல்லது அரசன் நளன் தானோ, எதிர்த்த அரசர்களை எல்லாம் விடாமல் வென்றவன், அல்லது இந்த வாகுகன் நளனை அறிவானா? அவரிடம் கற்றுக் கொண்டு வந்திருப்பானோ, இவனிடம் நள ராஜாவின் திறமையைக் காண்கிறேனே, ஆனால் இருவரும் ஒத்த வயதினராக இருக்கலாம், ஒரே குருவிடம் கற்றவர்களாக இருக்கலாம், எப்படி கண்டு பிடிப்பேன்.
ஒத்த வயதினராக, ஒரே குருகுலத்தில் கற்றவர்களாக இருந்தாலும் அரசன் நளன் எங்கே, இந்த உடல் அழகற்ற வாகுகன் எங்கே? சில சமயம் ரிஷிகள், சிறந்த அறிஞர்கள் கூட மாறு வேடத்தில் பூமியில் நடமாடுவதாகச் சொல்வார்களே. சில சமயம் அவர்கள் தாங்க முடியாத எதிர்ப்புகளைச் சந்தித்தாலும், வெளியில் தெரிவிக்க முடியாத சில சக்திகளை காட்ட முடியாமல் வேடம் போட்டு வருவார்கள் என்று கேட்டிருக்கிறேன்.
ரதம் வான வெளியில் வேகமாக பயணிக்கும் பறவை போலவே சென்றது. நதிகள், மலைக் குன்றுகள் இவைகள் எதிர் திசையில் பறப்பது போல இருந்தன. காடுகள் தென்பட்டன, மறைந்தன, பெரிய ஏரிகளைஅதன் அலைகள் சளசளக்க நீருடன் கண்ணில் பட்டவுடனேயே கடந்து சென்றனர் போல இருந்தது. அந்த அரசன் ருது பர்ணனின் மேலாடை திடுமென காற்றில் பின் புறமாக பறந்து சென்று எங்கோ விழுந்தது.
அந்த அரசன் ருது பர்ணன் தன் மேலாடை இன்றி சபை நடுவே செல்வதை தவறாக நினைத்தான் போலும். நளனிடம் ஆணையிட்டான். வார்ஷ்னேயா, ரதத்தை திருப்பு. கயிறுகளை இழுத்து பிடி, நான் இறங்கி எடுத்துக் கொண்டு வருகிறேன், என்றான். நளன் சொன்னான்:வெகு தூரம் வந்து விட்டோம். ஒரு யோஜனை தூரத்திற்கு மேல் ஆகியிருக்கும். அதை தேடி கண்டு பிடிப்பது சிரமம் என்றான். என்றாலும் ரதம் திரும்பி மேலாடையைத் தேடி வந்தனர். .
அந்த சமயம் அவர்கள் கடுக்காய் மரம் – கலி அமர்ந்த்திருந்த இடம்- அதன் பழங்களுடன் இருந்த இடத்திற்கு வந்திருக்கின்றனர். ருதுபர்ணன் பெருமையாக, வாகுகா, உனக்கு மட்டும் தான் திறமை இருப்பதாக எண்ணாதே. உலகில் எல்லா கல்விகளும், அறிவுகளும் எல்லோருக்கும் அமையாது. ஒரு சிலர் ஒரு விதத்தில் திறமையுடையவர்களாக இருப்பர். மற்றவர் வேறு சில விக்ஞானங்கள் அறிந்திருப்பர். அறிவுடமை ஒருவருக்கு மட்டுமே என்பது தவறு. நான் எண்ணிக்கையில் புலி. இந்த மரத்தில் உள்ள இலைகளும் காய்களும், கீழே விழுந்திருப்பதைக் காட்டிலும் நூற்று ஒன்று அதிகம். இந்த இரண்டு கிளைகளிலும் ஐம்பது கோடி இலைகள் உள்ளன. இரண்டாயிரத்து தொன்னூற்று ஐந்து பழங்கள் உள்ளன. சந்தேகம் இருந்தால் எண்ணிப் பார்.
வாகுகன் சொன்னான்: ஓ அரசனே, நீ எதிரிகளை தோற்கடித்த வெற்றி வீரன் தான் சந்தேகமேயில்லை. நான் அறியாத ஒரு விஷயத்தில் என்னிடம் சவால் விடுகிறாய். நான் இந்த பிபீதிகா- கடுக்காய் மரத்தின் கிளைகளை வெட்ட அனுமதியுங்கள். இந்த இரு கிளைகளும் கீழே விழுந்தவுடன் எண்ணிச் சொல்கிறேன். உங்கள் எதிரில் எண்ணி தவறானால் ஏற்றுக் கொள்கிறேன். நான் இவைகளை எண்ணும் வரை வார்ஷ்னேயன் குதிரைகளின் கடிவாளத்தை பிடித்துக் கொண்டு இருக்கட்டும்.
நேரமாகிறதே, நமக்கு அவசரமாக செல்ல வேண்டுமே.
கொஞ்ச நேரம் தான். அவசரமானால் வார்ஷ்னேயர் ஓட்டுவான் நீங்கள் சென்று கொண்டே இருங்கள். நேர் எதிரில் தானே பாதை இருக்கிறது.
ருது பர்ணன் வாஹுகனை சமாதானப் படுத்தும் விதமாக சொன்னான்: வாகுக! நீ தான் ஒரே ரத ஓட்டி. வேறு எவரும் இந்த வேகத்தில் இனத அளவு திறமையாக ஓட்டியதை, குதிரைகளைச் செலுத்தியதை நான் கண்டதுமில்லை,. கேட்டதும் இல்லை. நீ என்னை விதர்ப தேசம் கொண்டு விடுவதாக வாக்களித்தாய். என்னை உன்னிடம் ஒப்படைக்கிறேன். உனக்கு எந்த இடையூறும் என்னால் வராது. விடியும் முன் நான் விதர்ப தேசத்தில் இருந்தாக வேண்டும் என்பது ஒன்றே என் வேண்டு கோள். எதுவானாலும் கேள். தர சித்தமாக இருக்கிறேன்.
வாஹுகன் சொன்னான். இதோ, இந்த காய்களையும், இலைகளையும் எண்ணி முடிக்கும் வரை பொறுங்கள். அதன் பின் என் பொறுப்பு.
ருது பர்ணன் சொன்னான். அது தான் சரி. ஒரு கிளையை எண்ணி விட்டாலே, மொத்த எண்ணிக்கையை கணக்கெடுத்து விடலாம். அப்பொழுது நான் சொன்னது உண்மை என்று அறிவாய்.
வாஹுகன் வேகமாக இறங்கி மரத்தின் கிளையை வெட்டினான். கீழே விழுந்த கிளைகளில் இலைகளையும், காய்களையும் எண்ணி முடித்து, அரசன் சொன்ன கணக்குப் படி மரத்தின் மொத்த இலைகளும் அதே கணக்கில் கண்டு பிடிக்க முடியும் என்பதையும் அறிந்து அதிசயித்தான்.
அரசே! உங்கள் கணித அறிவு அதிசயமானது. இந்த கலையை எனக்கு கற்றுத் தர வேண்டும்.
ருது பர்ணன் தான் விதர்ப தேசம் போவதிலேயே கவனமாக இருந்தான். பெருமையாக, வாஹுக! இது தவிர நான் ஸூதாட்டத்தின் விதி முறைகளையும் அறிவேன். ஏனெனில் அதுவும் கணித அறிவுக்கு உட்பட்டதே. வாஹுகன்: ஓ அப்படியா, எனக்கு அந்த கலையும் கற்றுத் தாருங்கள். மனிதருள் காளை போன்ற பலம் உடைய அரசனே, இதில் உங்களுக்கு எதுவும் நஷ்டமில்லை. நான் என் பங்குக்கு குதிரைகள் பற்றிய அறிவை , வேகத்தை கணக்கிடுவது, தூரத்தை முன் கூட்டியே அறிவது போன்ற விஷயங்கள் எனக்குத் தெரியும். அதை உங்களுக்கு கற்றுத் தருவேன்.
அரசன் அறிவுத் தாகம் உடையவன் போலும். அப்படியே ஆகட்டும், நான் இதோ உனக்கு ஸூதாட்டத்தில் வெற்றி பெறும் அறிவு பூர்வமான வழிகளைச் சொல்லித் தருகிறேன். அதை கவனமாக கேட்டுக் கொள்.
ருது பர்ண அரசன் வாஹுகன் விரும்பிய வித்தையை சொல்லிக் கொடுத்தான். அந்த அறிவு உள் இறங்க இறங்க கலி அவன் உடலில் இருந்து வெளியேறினான். கார்கோடக பாம்பின் விடம் அவன் வாயிலிருந்து வாந்தியாக விழுந்தது. கலி இதுவரை கார்கோடகனால் ஆக்ரமிக்கப்பட்டிருந்தான். தமயந்தியின் சாபம் அது. கலியின் தாக்கம் என்ற நாட்களும் முடிந்து விட்டதால், வேறு வழியின்றி அவன் அந்த உடலில் இருந்து விலகவும் நிஷதர்களின் குல விளக்கானவன் நளன் அங்கு வந்து சேரவும் சரியாக இருந்தது. கோபத்துடன் கலியை சாபமிட துணிந்தான். நடுங்கிய கலி புருஷன், ‘கை கூப்பி வணங்கினான்.
‘அரசனே! கோபிக்காதீர்கள். இந்திரசேனின் தாய் என்னை சபித்தாள். நளன் விட்டுச் சென்ற பின், கார்கோடகன் என்னை ஆக்ரமித்து இருந்தான். இந்த பாம்பின் விஷத்தால் சுடப் பட்டு, இரவும் பகலும் வெந்து கொண்டு இருந்திருக்கிறேன். அரசே, இணையில்லாத வீரர் நீங்கள், என்னிடம் தயை காட்டுங்கள். நான் ஒரு வரம் அளிக்கிறேன். உங்களை நினைத்தாலே கலி என்ற என்னிடம் பயமின்றி இருப்பார்கள். அவர்களை நான் அணுக மாட்டேன். அதன் பின் கலி அந்த கடுக்காய் மரத்தில் ஏறிக் கொண்டான். நிஷத ராஜனும் அவனும் பேசிக் கொண்டதை மற்றவர் அறியவும் இல்லை. கண் மறைவாகவே இருவரும் பேசிக் கொண்டார்கள் என்று சொல்கிறார் கவி.
ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக மகிழ்ந்தனர். ருது பர்ணன் புதிதாக ஒரு விஷயம் கற்றுக் கொண்டதில், வாஹுகன், கணித அறிவை பெற்றதில், கலி கார்கோடகனிடமிருந்து விடுபட்டதில், என்று அனைவரும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர். கலி இருந்த மரமும் உடைந்து விழுந்தது.
வேகமாக, காற்றின் வேகத்தில் ருது பர்ணனின் ரதம் வானத்தில் பறவைகள் பறப்பது போல பறந்தது. கலி விலகி வெகு தூரம் சென்று விட்டாலும், வாஹுகனாகவே இருந்த நள மகாராஜா தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
ருது பர்ணனின் குழு அயோத்யாவிலிருந்து குண்டின புரம் வந்துள்ளதை அரசன் பீமனுக்குத் தெரிவித்தனர். ருது பர்ணனோ தான் வந்த தூரம், நேராக வந்த தூரம், சுற்றி வந்தது, கிடையாக வந்த தூரம் என்று பத்து விதமான பிரயாணத்தை கணக்கிட்டுக் கொண்டிருந்தான். கடிவாளம் இழுபட்ட ஒலியைக் கொண்டு குண்டினபுர மக்கள் நளனை நினைத்தனர். தமயந்தி அறிந்தாள், இது நளனின் செயலே – மேகத்தின் நடுவில் எதிர் பாராமல் இடி இடித்தாற் போன்ற நாதம். அடுக்கடுக்காக மேகங்கள் நகர்ந்து கீழ் ஸ்தாயியில் கேட்கும் தொடர் இடி ஓசை. (அடுக்கடுக்காக மலைகள் உள்ள இடங்களில் , ஊட்டியைச் சொல்வார்கள் – அது போன்ற இடங்களில் இடியோசை மலைக்கு மலை நகர்ந்து செல்வது போல கேட்குமாம்) அடித் தொண்டையில் யாரோ பாடுவது போல. இதற்கு முன் இது போன்று நளன் தானே ஓட்டிக் கொண்டு வரும் சமயங்களில் கேட்டிருந்ததை அனைவரும் நினைத்தனர். கொட்டில்களில் இருந்த குதிரைகள் அறிந்தன, யானைகள் பிளிறின, மயில்கள் தெரிந்த எதுவோ ஒன்று பரவசமாகின – என்று கவியின் வர்ணனை.
(வளரும்)
