- பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -1
- சிற்றின்பம் மற்றும் உணர்திறன்
- பழிவாங்கும் தீ – அம்பை
- காதலில் துறவி
- மணலில் கட்டப்பட்ட பாலம்
- கொக்கென நினைத்தாயோ ?
- கொலையாளியை ஜீரணித்தவர்
- பெரும் பசியை ஆற்றிய ஒரு பருக்கை
- ஏகலைவன்
- தவறாக விதிக்கப்பட்ட சாபம்
- பகைவனுக்கும் அருள்வாய்!
- கீசக வதம்
- வீரனாக மாறிய பேடி
- அஸ்வத்தாமனின் கோபம்
- முடிசூட்டப்படாத ஆட்சியாளர்
- தொடர்ந்த தூதுப்படலம்
- தொடரும் விதுர நீதி
மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா
தமிழாக்கம் : கார்த்திக்
திருதராஷ்டிரனின் தேரோட்டியான சஞ்சயன் அவன் கூறிய செய்தியை எடுத்துக் கொண்டு மத்ஸ்ய தேசத்திற்கு சென்றான். சிறப்பான முறையில் அவனை பாண்டவர்கள் வரவேற்றனர். அதன் பின் யுதிஷ்டிரன் அவனை நோக்கி ” நீங்கள் நல்ல செய்தியுடன் வந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். கந்தவர்களிடம் சிக்கிய சமயத்தில் தன்னை மீட்டது பீமன், அர்ஜுனன் மற்றும் நகுல சகாதேவர்கள் தான் என்பதை துரியோதனன் மறந்திருக்க மாட்டான் என எண்ணுகிறேன்” எனக் கூறினான்.
“திருதராஷ்டிரன், தன் அமைச்சர்களுடனும் அவையோருடனும் கூடிப் பேசி இந்த செய்தியை அனுப்பினார். அவர் உன் தர்மத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். நீ சகோதர்களிடையே போரை விரும்ப மாட்டாய் என எண்ணுகிறார்.”
அவர் கூறியது ” என் மகன்களுக்கு நல்லாசியை கூறுகிறேன். யுதிஷ்டிரா! உன்னிடம் அமைதியை வேண்டுகிறேன். நீ ஒரு நேர்மையான வாழ்க்கையை இதுவரை வாழ்ந்து விட்டாய். இப்பொழுது நீ பாவம் செய்தால் அது உன் பெயரை வாழ்நாள் எல்லாம் வீணடித்துவிடும். தன் குடும்பத்திற்காக தியாகம் செய்வதே வாழ்நாளில் ஒரு சிறந்த செயலாகும். நீ கௌவரவர்களுடன் போரிட்டால் அவர்களை நிச்சயம் தோற்கடிப்பாய். ஆனால், அது உன்னை நீயே தோற்கடிப்பதை போன்றது. உன் பக்கத்தில் வெற்றியைப் பெற்றுத் தரக்கூடிய பலசாலிகள் பல இருக்கிறார்கள். அதேபோல், கௌரவர்கள் பக்கத்திலும் வீரர்கள் பலர் உண்டு. கிருஷ்ணனும் , துருபதனும் போரைத் தவிர்க்க என்ன செய்ய விடுமோ அதை செய்வார்கள் என நம்புகிறேன்.”
திருதராஷ்டிரனின் வார்த்தைகளை கேட்டு வெறுப்படைந்த யதிஷ்டிரன் ” ஏன் என் பெரியப்பா என் மேல் குற்றம் சாட்டுகிறார்? நான் போரை எப்பொழுதும் விரும்பியதில்லை. நடந்ததை எல்லாம் கண்டப்பின்னும் நான் போரை விரும்புவேனா? நாங்கள் என்றும் தர்மத்தின் பக்கமே என்பதை இந்த உலகமே அறியும். என் பெரியப்பாவின் மனதானது எதிலும் திருப்தி அடையாத அக்னியை போன்றது என்பதை நான் அறிவேன். அவருடைய மகனின் பாவங்கள் அனைத்தையும் மறைத்துக் கொண்டு அவனைக் காப்பாற்றவே அவர் விரும்புகிறார். சிறந்த நீதிமானாகிய விதுரரின் வார்த்தைகளை அவர் எப்பொழுதும் மதிப்பதில்லை. அதற்கு நேர் மாறாக அவரை அவமதித்தே உள்ளார். சூதாட்டத்தின் பொழுது கூட யார் வெற்றிப்பெற்றனர் என்பதில்தான் அவரது குறி இருந்தது தவிர விதுரரின் வார்த்தைகளைக் கேட்டு ஆட்டத்தை நிறுத்துவதில் அல்ல. எனக்கு போரில் விருப்பம் இல்லை என அரசரிடம் சொல். இந்திரப்ரஸ்தத்தை எங்களுக்கு கொடுத்துவிட்டால் எப்பொழுதும் போர் இருக்காது என அவரிடம் சொல்” எனக் கூறினான்.
“அவருடைய முழு செய்தியையும் நான் இன்னும் கூறி முடிக்கவில்லை. வாழ்க்கை மிக சிறியது அதில் பகையை உருவாக்கிக் கொள்ளாதே. போரில் நீ வென்றால் ஒழிய கௌரவர்கள் ராஜ்யத்தை தர மாட்டார்கள். எனவே, நீ மீதி வாழ்க்கையை பிக்ஷை எடுத்து வாழ்வதே நல்லது. மண், பொன், பொருள் மீதான ஆசைகள் பாவத்தை தூண்டும். பதிமூன்று வருடங்களுக்கு முன்பு உனக்கு அநீதி இழைக்கப்பட்டபொழுது அமைதியாகத்தானே இருந்தாய். இப்பொழுது மட்டும் ஏன் போரை விரும்புகிறாய்? நீ மீண்டும் காட்டிற்கு சென்று தவ வாழ்க்கையை வாழ்வாயாக ” என சஞ்சயன் தான் கொண்டுவந்த செய்தியை கூறி முடித்தான்.
அவன் கூறிய செய்தியை கேட்டு பீமனும் அர்ஜுனனும் கோபத்துடன் நடந்தார்கள்.
“என்ன சொல்வது என எனக்குப் புரியவில்லை. இந்த தருணத்தில் கடவுளிடம் சரணடைய விரும்புகிறேன். கிருஷ்ணனே இதை முடிவு செய்யட்டும்” என தர்மன் கூறினான்.
“சஞ்சயா! முதலில் எனக்கு பாண்டவர்களின் நலனே முக்கியம். அவர்களுடன் கௌரவர்களும் வாழட்டும். எனக்கு அரசரின் செய்தி புரியவில்லை. பாண்டவர்கள் தேர்ந்தெடுத்த வழி உனக்கே தெரியும். அரசரிடம் தர்மம் என்பது துளியும் இல்லை. அதே சமயம் , யுதிஷ்டிரன் தர்மத்தின் மறுவடிவம் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, எது தர்மம் என்பதை அவர் சொல்லத் தேவை இல்லை. பாண்டவர்களுக்கு அவர்களுடைய இராஜ்ஜியத்தை தந்துவிட்டால் எங்களின் போர் ஆயுத்தங்களை நிறுத்திவிடுவோம் என சொல். நானே ஹஸ்தினாபுரத்திற்கு தூதுவனாக வருகிறேன் என அரசனிடம் சொல்” என கிருஷ்ணன் கூறினார்.
சோர்வாக கிளம்பிய சஞ்சயனை கண்ட தர்மன் ” உன் மேல் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. நீங்கள் உங்களுக்கு இட்ட பணியை செய்தீர்கள். வேறு எந்த வாய்ப்பும் இல்லையென்றால் ஐந்து கிராமங்களையாவது எங்களுக்குத் தர சொல்” எனக் கூறி வழியனுப்பினான்.
விதுர நீதி – 1
மத்ஸய தேசத்தில் இருந்து திரும்பிய சஞ்சயன் திருதராஷ்டிரனை சந்தித்து ” பாண்டவர்களும் கிருஷ்ணனும் நலமுடன் தர்மத்தின் பக்கத்தில் இருக்கின்றனர். பாவத்தின் வடிவமான நீங்கள் என்னை வெக்கமடைய செய்துவிட்டீர்கள். அவர்கள் கூறிய மறுமொழியை நான் அவையில் கூறுகிறேன். இப்பொழுது பேசக்கூட இயலாத அளவு களைப்படைந்துள்ளேன்” எனக் கூறி விடைபெற்றான்.
அவன் சென்ற பிறகு அவன் கூறியதை எண்ணி மிகவும் சஞ்சலம் அடைந்த திருதராஷ்டிரன் தூக்கம் வரமால் அவதிப்பட்டான். எனவே, தன் சகோதரனும் நீதிமானுமான விதுரனை அழைத்துவர சொன்னான். விதுரனிடம் நடந்ததைக் கூறி பின் நீ ஒருவனே எனது நலம் விரும்பி. என்னுடைய தவறுகளைக் கடந்து என்னை நேசிப்பவன் நீ. எனக்கு தூக்கம் வரமால் அவதிப்படுகிறேன். நல்வார்த்தைகள் கூறி என்னை அமைதிப்படுத்துவாயாக என வேண்டினான்.
“ஐந்துவிதமான நபர்கள் தூக்கம் வரமால் அவதிப்படுவார்கள். அடுத்தவன் மனைவியை விரும்புவர்கள், திருடன், தன் செல்வத்தை இழந்த அல்லது இழக்கப்போவதாக எண்ணுபவன், தோல்வியடைந்தவன் மற்றும் வாழ்க்கையில் கொடுமைப்படுத்தப்பட்டவன் ஆகியோரே அந்த ஐவர். கண்டிப்பாக அடுத்தவர் பொருள் மீது நீ ஆசைக்கொள்பவன் அல்ல” எனக் கூறி நிறுத்தினார் விதுரன்.
தன் தம்பியின் வார்த்தையில் தொனித்த நம்பிக்கையின்மை மற்றும் கிண்டலைக் கண்டு திருதராஷ்டிரன் வேதனை அடைந்து தன் மனதை அமைதிப்படுத்தி தூங்க வழி கூற வேண்டினான்.
“பல வருடமாக நீ தூங்குவதில்லை. பாண்டவர்கள் வனத்திற்கு சென்ற பொழுதில் இருந்து அல்ல எப்பொழுது துரியோதனன் பிறந்தானோ அப்பொழுதிலிருந்தே நீ தூங்குவதில்லை. அவன் அரச பதவியை அடைய இயலாது எனத் தெரிந்ததில் இருந்தே. அப்பொழுது இருந்தே உன் மனதில் பொறாமை பொங்கி வழிகிறது. இப்பொழுது பாண்டவர்களிடம் அவர்களுடைய உடமையான இராஜ்யத்தை அளித்து விட்டால் ஒரு குழந்தையை போல் எந்தக் கவலையும் இன்றி தூங்கலாம். நீ ஒரு முட்டாள்!” என்று தன் அண்ணனின் முட்டாள்தனத்தை கடிந்துரைத்தார் விதுரர்.
“ஒரு அறிவுடைய மனிதன் மற்றும் முட்டாளின் குணங்களை எனக்கு விவரிப்பாயாக விதுரா!” என வேண்டினான் திருதராஷ்டிரன்.
“கவனமாக கேள்! சிறந்த அரசனானவன் தன் நல்லறிவைக் கொண்டு நல்லது கெட்டது என்ற இரண்டை வேறுப்படுத்திப் பார்ப்பான். பரிசு, சமாதானம், வேறுபடுத்துதல் மற்றும் பலம் இவற்றை உபயோகப்படுத்தி நண்பர்கள் , எதிரிகள் மற்றும் அறிமுகம் இல்லாதவர்களை கட்டுப்படுத்துவான். தன் ஐம்புலன்களை கட்டுக்குள் வைத்திருப்பான். இராஜ்யங்களுக்கு இடையேயான ஆறுவிதமான உறவுகளை அறிந்திருப்பார்கள். ஏழு விதமான கெட்டவைகளிடம் இருந்து ( ஆசை, சூதாட்டம், வேட்டை, கொடுஞ்சொல் கூறுவது, குடி, கொடுமையான தண்டனைகள் விதிப்பது மற்றும் செல்வத்தை வீணடிப்பது) விலகி இருப்பான். இவ்விதம் இருந்தால் அரசன் மகிழ்ச்சியாய் இருப்பான். விஷமும் ஆயுதமும் ஒரு முறைதான் கொல்லும். ஆனால், முறையற்ற ஆலோசனை ஒரு ராஜ்ஜியத்தையே அழித்து விடும். மிகப்பெரிய நல்லது என்னவென்றால் நீதியின் வழியில் நடப்பதே மன்னிப்பதே உச்சகட்ட அமைதியாகும். அறிவே மிகப்பெரிய மனநிறைவாகும். இரக்கமே உச்சகட்ட மகிழ்ச்சியாகும்.
கொடுஞ்சொல் பேசாதிருத்தல் மற்றும் தீய செயலில் ஈடுபடாமல் இருத்தல் மூலம் ஒரு அரசன் சிறந்தவன் ஆகிறான்.
திருடுதல், அடுத்தவன் மனைவியை கவருதல் மற்றும் நட்பின் நம்பிக்கையைத் தகர்த்தால் மூன்றும் மிகப் பெரிய தவறுகள் ஆகும். காமம், கோபம் , தனக்கு சொந்தமில்லா பொருள் மீது ஆசைக் கொள்ளுதல் மூன்றும் ஒருவனின் ஆன்மாவை சிதைத்துவிடும். தன்னைப் பின்பற்றுபவன், தன்னிடம் அடைக்கலம் வேண்டுபவன் மற்றும் தன் வீட்டிற்கு வந்தவன் மூவரையும் ஒருவன் எப்பாடுபட்டாவது பாதுகாக்க வேண்டும்.
சிற்றறிவு கொண்டவர்கள், காரியத்தை ஒத்திப்போடுபவர்கள், சோம்பேறிகள் மற்றும் தேவையில்லாமல் புகழ்பவர்களை ஒரு அரசன் தள்ளி வைக்க வேண்டும்” எனக் கூறி நிறுத்தினார் விதுரன்.
