Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

அக்ஷய அக்ஷரம்

புத்தக அறிமுகம்
நூல்: துப்பாக்கிப் போல சொகுசாய் பேனா
ஆசிரியர் : திரு ரா. கிரிதரன்
வகைமை :கவிதை, அபுனைவு, விமர்சனக் கட்டுரைகள்

அகமொழிகள் பேசும் ஒரு  நூலை அறிமுகப்படுத்தும் கட்டுரைக்கு இப்படி ஒரு தலைப்பை ஏன் கொடுத்திருக்கிறேன்?

கவிதை அபுனைவு விமர்சனக் கட்டுரைகள் என்று பல தளங்களில் அர்த்தமுடன் பயணித்துள்ள இந்தப் பேனா, அகத்தை அடிப்படையாகக் கொண்டு அல்லது அக மொழியை ஒரு சரட்டில் கோர்த்து படைக்கப்பட்டிருப்பதால், இந்தத் தலைப்பு பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றியது. உலகில் பற்பல மொழிகள் பல கோடிக்கணக்கான மக்களால் பேசப்பட்டு வருகின்றன ஆனால் உள்ளார்ந்த மொழி என்பது மனித குலத்திற்கு ஒன்றாக இருக்கிறது என்பதும் இந்த நூலில் கூறப்பட்டுள்ளது.

மனித குலத்திற்கான அக மொழி , ஒன்றாகவே இருக்கிறது என எடுத்துக் கொண்டாலும் அட்சய அட்சரம் என்று ஏன் தலைப்பு கொடுத்தேன்? என் நண்பர் ஒருவர் ஒருமுறை சொன்னார்: ‘பல சொற்கள் தமிழ் புழங்கும் சூழலில் இருந்து வெளியேறி வருகின்றன; அவற்றை ஒரு அகராதியாக தொகுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார் அவர். தமிழில் எழுதும் வகையில் இந்த சொல் இருப்பதால் இந்தப் பெயரை வைத்தேன் என்று பணிவோடு சொல்லிக் கொள்கிறேன்.

திரு கிரிதரன் ராஜகோபாலன் அவர்களிடம் துப்பாக்கிப் போல சொகுசாய் பேனா மட்டுமல்ல, தூரிகையும்தான் அவரிடம் இருக்கிறது. அழகான முகப்போவியம் அவர் வரைந்ததுதான்.

கவிதைகள், கலைகள், இசை, வரலாறு, சூழியல், அறிவியல், நினைவலைகள், நூல் அறிமுகம் என்று பல தலைப்புகளில் செறிவாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

பாரதி என்ற மகாகவிஞனை, குயில் பாட்டு, பாரதி கருவூலம், அருந்தவப்பன்றி, கோயில் யானை வைபவம் என்ற கட்டுரைகளில் ஒரு அழகிய கோணத்தில் நமக்கு அறிமுகம் செய்கிறார்.

குயில் பாட்டின் மொழி உலகிற்குள் ரசித்தும் லயித்தும் நம்மை பயணிக்க வைக்கிறார். பாரதியின் ‘அந்தரங்கக் குரல் குயில் பாட்டு ‘என்று இந்திரா பார்த்தசாரதி சொல்லி இருப்பதும், ஹரி கிருஷ்ணனின் கட்டுரைகள் பாரதியின் பல சொல்லாடல்களுக்கு புது அர்த்தங்கள் தருவதையும் சிறப்பாகக் குறிப்பிடும் கட்டுரை இது.

தத்துவ நோக்கிலும் குயில் பாட்டை பார்க்கலாம். மறுபிறவி என்பதில் பாரதிக்கு இருக்கும் நம்பிக்கையை இது காட்டுகிறது. போர் முனைக்குச் சென்று உயிர் நீக்கும் ஆண்களின் தியாகத்திற்கு, குறைவில்லாமல் பெண்களும் தங்கள் வாழ்க்கையை பிறர் வற்புறுத்தும் வழியில் அமைத்துக் கொள்வதையும் குயில் பாட்டு சொல்கிறது. உறவுகள் தரும் அழுத்தத்தையும் அதற்கு உடன்பட வேண்டிய அவசியத்தையும் ஒரு கரையில் கொண்டுள்ள பெண் எனும் நதி மறு கரையில் பெருங்காட்டுமர வெளியில் தன் காதலுக்காக அலைமோதுகிறது. அதிலும் கவிஞன் காணும் அந்த சூரிய உதயம் ‘புல்லை நகையுறுத்தி, பூவை வியப்பாக்கி, மண்ணைத் தெளிவாக்கி, நீரில் வளர்ச்சி தந்து, விண்ணை வெளியாக்கும் விந்தை செய்யும் ஜோதியினை காலைப் பொழுதினிலே கண் விழித்து நான் தொழுதேன், உயிர் நாதங்கள் ஓங்கிடவும் இன்பக் களியில் இயங்கும் புவி கண்டேன்.’ என்று ஒலிக்கிறது.

காதலையே காதலித்த மனப் பக்குவம் கவிஞருக்கு வாய்த்துள்ளது பற்றி
கிரி அழகாக எழுதியிருக்கிறார். பாரதியின்  அற்புதமான ஆங்கில எழுத்தும் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது “for soul have no castes and no nationality according to our Shastras”.

ஆ. இரா. வேங்கடாசலபதி எழுதியுள்ள ‘பாரதி கருவூலம்’ கட்டுரையில் ஓரிடம் நம்மை அசைத்துப் பார்த்து விடுகிறது ‘பல வேறு தாவல்களை நிகழ்த்திய கவி மனதில் ஞானத்தின் கீற்று தொட்ட இடமெல்லாம் தமிழ் இலக்கியத்தின் நவீனத்துவ உச்சம் மட்டுமல்ல மானுட மனசாட்சியில் வீற்றிருக்கும் உண்மையின் உரைகல் ஆகவும் இருந்தது . மகாகவிகள் நாற்று நடுவது போல் நம் உள்ளே தான் எத்தனை ஆழமான உலகை விதைத்து விட்டு போய்விடுகிறார்கள்?’

பாரதி கிருஷ்ணகுமார் எழுதியுள்ள ‘அருந்த வப்பன்றி,’ கவிதா தேவியின் அருள் தனக்கு கிடைக்கவில்லை என்று பாரதி தவித்ததை  அழகாகச் சொல்கிறது.
’காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்,’ என்ற பாடிய பாரதி, மதம் பிடித்த கோவில் யானையால் துன்புறுத்தப்பட்டதை யார் எப்போது சொன்னாலும் நம் மனது வலி கொண்டு கதறுகிறது

வானம்பாடி காலத்தில் கவிதைகளில் இருந்த வடிவம் சார்ந்த எதிர்பார்ப்பு, நவீன கவிதைகளின் வரவின் போது மிகை உணர்ச்சிகளின் மீதான எதிர்பார்ப்பு என ஒவ்வொரு காலகட்டத்திலும், முந்தைய அமைப்புகளை, புது வகைகள் மீது போட்டுப் பார்க்கிறாராம் கிரி. இசையின் கவிதைகள் இயல்பிற்கும் கற்பனைக்கும் இடையே சஞ்சரிக்கும் வேடிக்கை உலகத்தைப் பற்றி பேசுகின்றன என்று அவதானிக்கிறார். நம் முன்னே இருக்கும் தருணங்களை ,மொழி  உருவாக்கும் கட்டமைப்புகளையும் மீறி பல்லூடக ஆக்கிரமிப்பு இல்லாமல் காண முடியாது என்பதுதான் இன்றைய கால நிலை இசையின் கவிதைகள் அங்கதச்சுவைக்கும் அவலத்திற்கும் இடையே எங்கோ மறைந்திருக்கும் பாதச்சுவடுகள் என்று விவரிக்கத் தோன்றுகிறது.

சுப்பிரமணியன் ரமேஷ் கவிதைகள் கிரிக்கு மிகவும் ரசமாக உள்ளன. ‘கணங்களில் தளிர்க்கின்றது ஜீவிதம்’ என்ற கவிதை சிலிர்க்க வைக்கிறது. மண்ணெண்ணெய் லாரியைத்தான் கவலையுடன் ஓட்டி வருகிறான் அவன்; இடுங்கிய கண்களால் சிரிக்கும் சீன தாத்தாவின் சிரிப்பு, பிரிந்து எங்கோ தாய் நாட்டில் வளரும் மகளின் புன்னகையை நினைவில் கொண்டு வருகிறது  உறவுகளைப் பிரிந்த ஏக்கம், நாடு விட்டு நாடு பிழைப்பு தேடும் அவலம் என்ற இக்கட்டிலும் முதுமையின் சிரிப்பும் குழந்தையின் புன்னகையும் ஒன்று என்று சொல்லாமல் சொல்கிறது கவிதை. கவிஞர் சொல்கிறார் ‘நான் யாருக்கேனும் எழுதும் வரிகளிலும் உனக்கான வார்த்தைகள் இருக்கும்; ஆழ்பரப்பில் அர்த்தப்படுகின்ற எல்லா வரிகளும் எல்லாருக்குமான பாடல்கள்.’ சிறந்த கவிஞரை சிறப்பாக விமர்சித்துள்ள கட்டுரை இது.

பூவுக்கும் வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு வேருக்கும், வெட்டி வேருக்கும் வாசனை உண்டு அல்லவா? நோபல் பரிசு பெற்ற ஷேமஸ் ஹீனி அவர்களின் படைப்புகள் மண் கரைசலின் வாசமாக கிரிக்கு நாசியை நிரப்புகின்றன. அயர்லாந்து நாட்டு நில வடிவங்களையும் ஒவ்வொரு பருவங்களிலும் மாறுபடும் மண்ணின் செழுமையையும் ஷேமஸ் ஹீனியின் கவிதைகள் படம் பிடிக்கின்றன கற்பனாவாதம் மட்டுமல்லாது, நிலப் பகுதியின் மாற்றங்களை, தென் அயர்லாந்துக்கும் வட அயர்லாந்துக்கும் இடையே நிலவிய அரசியல் பகையை, வன்முறைகளை, அவற்றின் பாதிப்பால் மக்களின் எளிமைக்கு ஏற்பட்ட தசம மாற்றங்களை இவரது கவிதைகளில் முக்கிய கருப்பொருட்களாக எடுத்தாண்டிருக்கிறார். நன்றாக விவசாயம் செய்த தலைமுறையில் பிறந்த கவிஞருக்கு ஏர் எதுவும் கிட்டவில்லை; விரலுக்கும் கட்டை விரலுக்கும் இடையே சொகுசாய் கிடக்கிறது பேனா; அவர் அதைக் கொண்டு நோண்டுகிறார்..

பிளாக்பெர்ரி பழங்கள் நம் இலந்தைப் பழங்களை ஒத்திருக்கும் என்று நினைக்கிறேன். ஓடியாடி சிரமப்பட்டு சேகரித்த பழங்கள் தொழுவத்தில் மறைக்கப்பட்டன; அந்தப் புதையலில் புழங்கிற்று எலிநிற பழுப்பு பச்சையம்; இனிப்புச்சுவை, புளிப்புச் சுவையானது. வாழ்க்கை காட்டும் அவலச் சுவைகள்.

கண்டராதித்தனின் கவிதை மொழி படிமங்களால் ஆனது. அன்றாட வாழ்க்கைத் தருணங்களைப்பாடும் கவிதைகளில், மரபின் ஒலி நயமும், தொன்மைக் காட்சியும் இயல்பாகவே பிணைந்து வருகின்றன. அவரது கவிதை தொகுப்பான திருச்சாழல் மாணிக்கவாசகரின் கேள்வி பதில்கள் பாணியில் அமைந்த ஒன்று. வரம் தரவும், காத்திருந்து காலத்தில் கொல்வதும் செய்யாத தெய்வங்கள், சிறு புன்னகையை வாயோரம் தேக்கி வைத்திருக்கும் தெய்வங்கள், நம் இயலாமையை தரிசனம் செய்து விட்டுப் போகின்றன. இந்தப் பகடி எங்குமே நிலவும் கையறு நிலையை சிறப்பாகச் சொல்கிறது.

எஸ். ராஜம் என்ற அபூர்வமான கலைஞரைப் பற்றிய கட்டுரை சிறப்பாக வந்திருக்கிறது. ‘மந்திரஸ்தாயி பஞ்சமத்தில் இருந்து தார ஸ்தாயி மத்தியமம் வரை அவர் பாடும் போது மிக இயல்பாக எந்த விதமான பாவனைகளும் அற்றதாக இருக்கும்’ என்று என் ராமநாதன் சொல்லியிருக்கிறார். சொந்த  விருப்புவெறுப்புக்களுக்கு அப்பாற்பட்ட கலை மதிப்பீடுகள் கொண்ட ஆளுமையாக அவர் இருந்திருக்கிறார். மேலும் துல்லியமான நினைவு சக்தி உள்ளவர். சங்கீத விற்பன்னர், ஓவியர், சிற்பங்களை அணு அணுவாக ரசித்து அதை தனது ஓவியங்களிலும் பாவ பூர்வமாக கொண்டு வந்தவர்; மயங்கிச் சரியும் நீளமான கண்கள், தொட்டால் சிலிர்த்துக்கொள்ளுமோ எனத் திகைக்கும் வகையில் மேனி வளைவுகள், அபாரமான அங்க வடிவங்கள், ஆகியவை நிறைந்துள்ள  அவரது ஓவியங்களை ரசித்துக்கொண்டே இருக்கலாம். சங்கீத மும்மூர்த்திகளை அவர் வரைந்ததும், பாரம்பரியக் கலை பாதுகாப்பும் அவரது சிறப்பை என்றுமே கூறும். அதை மேலும் எடுத்துக்காட்டும் விதமாக லலிதாராமும் எஸ்பி காந்தனும் இயக்கிய ஆவணப்படம் இனி வரும் அடுத்த தலைமுறைகளுக்கும் அவரது பெருமையைக் கொண்டு சேர்க்கும்.

‘செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்

படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே’- குலசேகர ஆழ்வார்


அடியார்கள் பாதம் படும், கல்லால் ஆன படியாகக் கிடந்தாவது உறுதியுடன் உன் பவள வாயை நான் காண்பேன் என்பது வெறும் பக்திரசத்தை மட்டும் காட்டாமல் வல்வினைகள் நீக்கும் பெருமாள் அவரை வணங்குபவர்கள் இன்னார் இன்னார் என்று காட்சிப்படுத்துகிறார் ஆழ்வார். ஏ கே ராமானுஜன் தமிழின் செழுமையான இலக்கியங்களை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார் வேதம் மற்றும் வேதாந்தங்களின் சாரத்தை நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் எளிதாக அனுபவிக்க முடியும் தமிழின் செறிவான சங்கப் பாடல்களையும், தமிழரின் பண்பாட்டுக் குறியீடுகளையும், பாரதப் புராணங்கள், இதிகாசங்கள் இவற்றை சேர்த்தமைத்து ஒரு பெரும் அனுபவப் பகிர்வாக படிப்பவர்களுக்கு நம்மாழ்வாரின் பாசுரங்களைHymns for the drowning என்று ஏ கே ஆர் வழங்கியிருக்கிறார்.

“The four castes uphold all clans…. if they are the intimate henchmen of our lord, with the wheel in his right hand his body dark as blue sapphire then even the slaves. of that slave are our masters.”

ஏ கே ஆரின் மொழியாக்கங்கள் இனிய இசை ஒலியுடன், எளிமையாக, மனதைக் கவர்வதோடு உணர்ச்சியையும் கடத்த வல்லமையாக இருக்கின்றன.

காவேரியே ஒரு சங்கீதக் கச்சேரி என வியந்து சொல்கிறார் கிரி. எழுதியவர் திஜா அதை எடுத்துச் சொல்பவரோ கிரிதரன் இசையும் திசையும் இணைந்து பயணிக்கின்றன. பயண நூல்கள் எப்படி இருக்க வேண்டும் ?அதற்கான இலக்கணத்தை கிரி சொல்கிறார் :அனுபவங்கள் புனைவுகளாக மாறுவதைவிட வரலாறு மற்றும் சமூகப் பிரக்ஞையோடு குறிப்புகளாக இருந்தால் பரந்த அனுபவச் சுரங்கத்தை அளிப்பது போல் தோன்றுகிறது கண்ணகி ,கோவலன், கரையோரக்  கோயில்கள், எங்கும் இராமாயண, மகாபாரதக் கதைகள், மனித எதார்த்தங்கள், அவர்களது உபசரிப்பு, இயற்கை எழில் என்று திஜா, சிட்டி, ராஜகோபாலன் விவரிக்கையில் அந்தக் குழுவுடன் நாமும் பயணம் செய்கிறோம் மக்களின் வாழ்வில் வளம் சேர்க்கும் காவிரியானவள், அருகில் உள்ள இயற்கை அழகுகளையும் செழிப்பாக்குகிறாள். நதிப் படுகை அருகே நறுமணப் பூக்கள் நிரம்பி இருப்பதால் காற்றில் ரம்யமான மணம் வீசுகிறது இரவில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களைப் பற்றி பேசும் போது காற்றில் கலக்கும் பூவின் நறுமணம், நதி ஓட்டத்தின் ஓசை என புலன்களுக்குப் பெரிய விருந்து ஒன்றைக் காவிரி படைப்பது போல் பயண நூல் எழுத்தாளர்களுக்குத் தோன்றியிருக்கிறது. தமிழ் அறிந்த அனைவரும் படிக்க வேண்டிய பயண நூல்.

சில பயணங்கள் மட்டுமே கால தேச வர்த்தமானங்களைக் கடந்து மனிதரின் பெரும் இச்சையின் தேடலாக அமைகின்றன. காவிரி என்பது ஆறு மட்டுமல்ல அதன் கரையில் வாழும் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று ஓவியம் அதைப்போலவே, மலையாளத்தில் ‘ஹைமத பூவில் ‘என்ற பெயரில் மாத்ரு பூமி பத்திரிக்கையின் நிர்வாகத் தலைவரான எம் பி வீரேந்திர குமார் எழுதிய அற்புத நூலை சிற்பி பாலசுப்ரமணியன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். காலம் முடிவுறாத கதைகளைக் கொண்டிருக்கிறது. பயணம் செய்பவன் அதைக் கேட்டு நம்மிடம் சொல்கிறான். அதுவும் ஒரு கலாச்சாரத்தை மொழி மூலம் விரிவாக அறிமுகம் செய்து கொள்ளும்போது பல நூற்றாண்டுகளாக அது சுட்டும் பொருளும் நம்முடன் பயணிக்கிறது. வெள்ளிப் பனிமலையின் மீது உலாவும் பாரதியின் ஏக்கம் இதில் உள்ள இலக்கியச் சுவையால் வசப்பட்டு இருக்கிறது. தில்லி முதல் ரிஷிகேஷ், ஹரித்வார் , கங்கோத்ரி, பத்ரிநாத், யமுனோத்ரி என்று ஒரு ஆன்மீக சுற்றுலா .ஆனால் இதில் எழுத்தாளரின் மனம் பேசுபொருளுடன் இரண்டறக் கலந்து இருக்கிறது. பாகீரதி, அலகநந்தா, நந்தாகினி சப்த சங்கமமாக இணையும் பிரயாகை, மலை மேல் உள்ள ஆலயங்கள், பள்ளத்தாக்குகளில் பூக்கும் பல வகைப்பட்ட பூக்கள் என்று ‘சார்தாம்’ பயணம்.

தில்லி எப்படி ஆட்சியாளர்களின் கனவாக இருந்தது என்பதையும் அது பலமுறை எரிந்து அழிந்த பின்பும் பல அரசர்கள் அதைக் கைப்பற்றுவதற்கு வலம் வந்த வரலாற்றையும் தில்லி தர்பார் உருவான கதையின் மூலம் கட்டடக்கலை வல்லுநர்கள் பற்றிய சுவையான செய்திகள் போன்ற  நல்ல தகவல்களை இந்த நூல் தருகிறது அதேநேரம் தண்ணீரை வணிகமாக மாற்றியதில் அரசுக்கும் பன்னாட்டு தொழிற்சாலைக்கும் இருக்கும் தொடர்புகள் மனதை வருத்துகின்றன. கங்கையின் நீர் தொழிற்சாலைகளுக்காகத் திருப்பப்படுவதை எதிர்த்தும், கங்கைக் கரையோரம் கசடுகள் சேர்ந்து நிலங்களை பாதிப்பதைப் பற்றியும் அதற்காக உயிரைக் கொடுக்கும் சாதுக்களைப் பற்றியும் இன்றுவரையும் நாம் படித்துக் கொண்டே இருக்கிறோம் ஆகினும் சூழியல் அக்கறையோ, நீண்ட நாள் மனித நலனோ ஆளும் அரசுகளுக்கு பொருட்டாக இருப்பதில்லை. யமுனையில் அவர் பயணிக்கும் போது ஜெயதேவரின் கீத கோவிந்தம் அதன் அழகுகள், சந்தஓசை  நயம் எழுத்தாளரை கவிஞர் ஆக்கி விடுகிறது வேகமாக ஓடும் யமுனை நதியும் அந்தப் பாடல்களை முணுமுணுத்தபடி செல்கிறதாம். இன்று யமுனையில் நீரில்லை; சாக்கடைக் கழிவுகள் அதிகமாக இருக்கின்றன. புனித நதிகள் என்று முன்னோர்கள் சொல்லி வைத்ததை நம் பேராசைகள் மறக்க வைத்து விட்டன. இந்தக் கட்டுரையில், புத்தகத்தின் சாரமாக ‘பிரபஞ்ச கீதம் இதயத்தின் தாளம்’ என்ற பகுதி தத்துவ விவாதம் போல் இந்திய சமயங்கள் அனைத்தையும் தொட்டுச் செல்கிறது. தமிழர்கள் குறிப்பாக சித்தர்கள் கேதார்நாத்தில் வாழ்ந்து சைவ சமயத்தை வளர்த்துள்ளார்கள் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.
பயணம்  சென்றவர் அவ்வவ்விடங்களின் வரலாறு, மக்களின் வாழ்வு, அங்கு நிலவும் துன்பங்கள், இயற்கை சீர்கேடுகள், சூழியல் பற்றிய அக்கறையின்மை என்று பதிவு செய்துள்ளதை சிற்பி பாலசுப்பிரமணியன் திறம்பட மொழி பெயர்த்துள்ளார்.

மாபெரும் கலைஞர்களான சத்யஜித் ரே, பண்டிட் ரவிசங்கர் இவர்களுக்கு இடையே இருந்த நட்பும் புரிதலும், இணைந்து பணியாற்றியதும், அறிவுப் பரிமாற்றமும் கலைத்துறைக்கு எத்தனை உதவிகரமாக இருந்திருக்கிறது என்பதைச் சொல்கிறது கிரியின் ஒரு கட்டுரை. பொடுவா கலைஞர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா?  கட்டுரையைப் படியுங்கள். நாட்டார்மரபு வழியாக இந்தக் கலைகள் உருவாகி காலத்துக்கு ஏற்ற சில மாறுதல்களையும் ஏற்றுக் கொண்டுள்ளன. ஓவியம், பாடல்கள், கவிதைகள், கோயில் சுவர் ஓவியங்கள், சிலைகள் என வங்கத்தின் பாணியை பிரத்தியேகமாக இவற்றில் பார்க்க முடிகிறது. கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில், உளவு பார்க்க வருபவர்கள் ஓவியம் தீட்டுபவர்களாகவோ கதைகள் சொல்லும் பாணர்களாகவோ இருப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொடா என்ற நிகழ்த்துக்கலை, பாடலும் ஓவியமுமாக பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறது.

நிலவை நோக்கி ஒரு கனவுப் பயணத்தை மேற்கொண்ட விண்வெளி வீரர்களின் செயல்பாட்டையும் அதற்கு இணையாக பூமியில் இருந்தே உழைத்த மனிதர்களையும் சிறந்த தகுதி இருந்தும் நாசா பெண்களை விண்வெளியில் அனுப்பத் தயங்கியதும் அபோலோ11 படக்கதை புத்தகத்தில் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அறிவியல் பூர்வமாகவும் அதன் பின்னே இருக்கும் தத்துவங்களின் மூலமாகவும் இந்த கட்டுரையில், கிரி ஒரு நல்ல அறிமுகம் செய்கிறார். படக்கதை நூலுக்கு ஒரு தனி மொழி அமைந்துள்ளதை இந்தப் புத்தகத்தில் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது சாதாரண கார்ட்டூன் போல வரும் பல கிராபிக் நாவல்களுக்கு மத்தியில் பல கோணங்களை ஒன்றாகத் தொடர்புறுத்துகிறது. இது போன்ற நூல்கள் திரைப்படம் கதை புத்தகம் போன்றவற்றையும் தாண்டி மற்றொரு பரிமாணத்தை அளிக்கின்றன. இந்தக் கட்டுரையிலும் நிலவில் தெரியும் முயலின் உருவை பற்றி பல இலக்கியங்களில் வாய்மொழிக் கதைகளில் சொல்லப்படுவதை சுட்டிக்காட்டி கம்ப ராமாயண பாடலையும் இவர் தந்துள்ளார் 

*முயல் கறை மதி தவழ் மூரிக் குன்றுகள் அயக்களின் முகில் குலம் அலறி ஓடின” வெறும் கருங்கல் எப்படி இருளாகவும் பால் நிலவாகவும் உயிர்ப்புள்ள கோளாகவும் தோற்றம் கொள்கிறது என்பது இன்றளவும் மனிதனை வசீகரிக்கிறது.

ராமன் ராஜாவின் கைகளில் என்ன இருக்கிறது? சிலிக்கான் கடவுளே இருக்கிறார். குறிப்பாக அறிவியல் கட்டுரைகளை எளிமையான சொற்களைக் கொண்டும் புழக்கத்தில் இருக்கும் சொற்களைக் கொண்டும் முடிந்தால் சற்று நகைச்சுவை கலந்தும் கொடுத்தால் வாசகர்களுக்கு நல்விருந்தாக இருக்கும்.  டிஷ்யூ இன்ஜினியரிங் ,எபி ஜெனிடிக்ஸ், இயற்கையை மனிதன் சுயநலத்திற்காக அழிப்பது, பரிணாம வளர்ச்சி என்று பலவற்றை அருமையாகப் புரியும் விதத்தில் அவர் எழுதியிருக்கிறார். ஒரு நாட்டின் ஜிடிபி யை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலமும் அளப்பது சிறந்ததென்று ‘பளிச்சென்று எரிந்த பொருளாதாரம்’ கட்டுரையில் ஒரு புதிய கோணத்தை காட்டுகிறார். சொல்வனம் சிலிக்கான் கடவுள் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. 

(கிரி, இவரில் ஆயிரத்தோரு பங்கு கூட இல்லாவிட்டாலும் நானும் சிறிது அறிவியல் தொழில்நுட்பக் கட்டுரைகளை மொழியாக்கம் செய்து சொல்வனத்தில் வெளியிட்டுள்ளேன். அவற்றின் பக்கமும் உங்கள் பார்வை படட்டும்.!!) 

நாடகாசிரியரையும் கவிஞரையும் ஒப்பிட முடியுமா ?அதைத் திறமையாகச் செய்து காட்டியிருக்கிறார் பேராசிரியர் நடராஜன். 96 வகையான சந்தங்களில் விருத்தப்பாவாக பாடல்களை எழுதி இருக்கிறார் கம்பன். தமிழர் வாழ்விலே பின்னிப் பிணைந்து கொண்டாடப்படும் மாபெரும் காப்பியத்தை கவிதையாய் தந்தவருக்கு ஸ்ரீரங்கத்தில் கம்ப மண்டபம் அஞ்சலி செலுத்திக்கொண்டே இருக்கிறது. 37 நாடகங்களை எழுதியவர் ஷேக்ஸ்பியர், எத்தனையோ நவீன பின் நவீன, இன்று முழங்கும் பின் -பின்- நவீன நாடகங்கள் இயற்றி நடிக்கப்பட்டாலும், ஷேக்ஸ்பியரை இன்றளவும் மக்கள் பார்த்து ரசிக்கிறார்கள். பார்வையாளர்கள் பங்கேற்கும் விதத்தில் அவரது நாடகங்கள் நடிக்கப்படுகின்றன ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்றவாறு உடனுக்குடன் எதிர்வினையாற்ற பார்வையாளர்கள் வெகு ஆவலோடு இருக்கிறார்கள்.
கம்பராமாயணம் கம்ப நாடகம் என்றே சொல்லப்படுகிறது.

அதில் உயர்வு நகிற்சி அணியும் ,அதீதங்களின் ருசியும் இடம்பெறுகின்றன . கம்பனின் காப்பியத்தை எட்டிப்பிடித்து தொடர வேண்டும்; ஷேக்ஸ்பியரின் சானெட்டுகளில் உணர்ச்சிகள் அதீதமாக இருந்தாலும் மக்களிடம் கடத்தும் தன்மையில் சமநிலை மாறாமல் அவை அமைந்துள்ளன. ஷேக்ஸ்பியர் வலியுறுத்தும் நட்பும் உறவும் கம்பன் கொண்டாடும் தத்துவங்களுக்கு அருகே வந்தாலும் முன்னவர் பின்னவரைப் போல் பகைவனுக்கு அருள்வதில்லை, சரணம் என்று சொல்லிவிட்டால் மன்னிக்கும் தன்மையும் இல்லை.  தாய் தந்தையரின் கட்டளைகளைப் பின்பற்றுவது, சகோதரர்கள் ஒருவருக்கொருவர் மேம்பட்ட பாசத்தை செலுத்துவது போன்ற வாழ்வியல் முக்கியத்துவங்கள் கம்பனில் காணப்படுகிறது சூர்ப்பனகை கூட லேடி மாக்பெத்தை போல்  கருணையற்று இல்லை. இருவருமே கலை உலகம் கண்டெடுத்த பொக்கிஷங்கள் ஷேக்ஸ்பியரின் பாத்திரங்கள் இயல்பான நிலையில் உயிர்ப்பாக அமைந்திருக்கும் கம்பனின் காட்சிகளும் உணர்வுகளும் பிரம்மாண்டமான பின்புலத்தில் அமைந்திருக்கும். ஒரு சாதாரண விருந்தை எதிர்பார்த்து செல்பவர்களுக்கு இரு பெரும் ஆளுமைகளைப் பற்றிய சித்திரத்தை அளித்து பெரும் விருந்து படைத்துள்ள நடராஜனும் அதைப்பற்றி அழகாக சொல்லி இருக்கும் கிரியும் நம் நன்றிக்கு உரியவர்கள்.

1965ல் சினிமா மோகம் தலைவிரித்தாடிய போது நாடகத்திற்காக தன் வாழ்நாளில் பெரும் பகுதியை செலவழித்த பம்மல் சம்பந்த முதலியார் அவர்களைப் பற்றிய கட்டுரை மனதை அசைக்கிறது. நாடகங்களை நவீன மயமாக்கியவர், மரப்பாவை போல் சொற்பாவை அமைத்தவர் நாடகக் கலை என்னும் இயலை மீட்டெடுத்து பல நூல்களை வெளியிட்டவர் என்ற பல சிறப்புகள் அவருக்கு உண்டு. சமஸ்கிருத நாடகங்களும் ஆங்கில நாடகங்களும் நமது மண்ணில் அரங்கேற்றப்பட்டதால் தான், தமிழ் நாடகங்களில் வசனங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றதாக அவர் சொல்கிறார். பல நாடகங்களை அவர் மொழியாக்கம் செய்துள்ளார்.  தமிழ் நாடகங்களுக்கு இவரது பங்கு அளப்பரியது.

நடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே கனக சபையில் ஆனந்த நடனம் ஆடினார் என்ற பாடலை பலரும் கேட்டிருக்கிறோம். காளிங்கன் பொய்கை கலங்க அதில் தாவி பாம்பின் நீள்முடி ஐந்திலும் நின்று நடனம் செய்த கண்ணனைக் கொண்டாடாதவர் யார்? முனைவர் ரகுராமன், தமிழர் நடன வரலாற்றை எழுதியுள்ளார் தொல்காப்பியத்தில் நடனம் பற்றிய குறிப்புகள் தொடங்கி, பஞ்ச மரபு கூத்துக்கலை, பரதசேனாபத்யம் எனும் பண்டைய நடன நூல்களில் வரும் குறிப்பிடத்தக்க செய்திகளை ஆசிரியர் விளக்கியுள்ளார் .ஆடும் போது உடல் உறுப்புகளின் நிலை, 16 வகையான தாண்டவங்கள், ஆண் பெண் அலி என்னும் பாகுபாட்டை ஒட்டிய நடன முறைகள் என்று பல தலைப்புகளில் அசாத்திய தகவல்களைத் தருகிறார். சிலப்பதிகார மாதவி அவரது மகளான மணிமேகலை இருவருமே நடனத்தில் பெற்றிருந்த தனி சிறப்புகளை இந்த நூல் அழகாகச் சொல்கிறது. வேத்தியல், பொதுவியல் தூக்கு, 121 விதமான கணிகையர் என்று சுவாரசியமான செய்திகள் அடங்கியிருக்கின்றன.

ஒட்டுக்கல்லு சேர்க்காமல் ஒரே கல்லைத் தேர்ந்தெடுத்து சிலைகள் செய்த மாமல்லபுரத்து பல்லவர்கள், அவர்களின் சிறப்புகள் என்று மேலோட்டமாக இல்லாமல் அங்குள்ள புலி குகையைப் பற்றியும் கிருஷ்ண மண்டபத்தை பற்றியும் பாலுசாமியின் நூல் பேசுகிறது. அவரது ஆய்வு, சிற்பங்களின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் கொண்டு அமைந்த ஒன்றல்ல; புராணக் கதைகள் இதிகாச நிகழ்வுகள் சங்க இலக்கியங்கள் பல்லவ சிற்பம் சார்ந்த பொதுப்பாங்கு ஆகியவற்றின் கலவையில் பல அவதானிப்புகளை முன்வைக்கிறார் புலிக்குகையின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை யானை மற்றும் வெள்ளை குதிரை மீது இருப்பவர் இந்திரனே என்று சொல்கிறார் நூலாசிரியர். மாமல்லபுரத்தின் மற்றொரு சிறப்பான சிற்பத் தொகுதி கிருஷ்ண மண்டபமாகும். அந்த சிற்பத்தில் ஆயர்களின் பண்பாடு சிறப்பாக சமைக்கப்பட்டுள்ளதாக தரவுகளோடு நிறுவுகிறார். கோடரி, கோல், மண்பானைகள்  தயிர் வெண்ணெய் உரிகள், கன்றை நக்கும் பசு, செழுமையான எருது, நகை அலங்காரங்கள், வளைகள் அணிந்திருக்கும் கோபியர்கள் என்று உயிரோட்டம் உள்ள சிற்பமாக, மாறுபட்ட கோணங்களில் உடல் அசைவுகளை சுட்டிக் காண்பிப்பவையாக அந்தக் கோயில் தொகுதி  அமைந்துள்ளது. மரபில் அமைந்த கோயில்கள் மட்டுமல்லாது, புதுமையான வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உருளைக் கோயில், சிம்மவாகனங்களின் மார்பில் சதுர பிளவுக்கு உள்ளே உருவாக்கப்பட்டுள்ள கோயில் என்று பலவகைக் கோயில்களைக் குறிப்பிடுகிறார். சிற்பம் மற்றும் வரலாற்றில் அதிக ஆர்வம் உடையவர்கள் தவற விடக்கூடாத நூல் மற்றும் கட்டுரை.

பிஷன் நாராயண் டாண்டன், எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி அலுவலகத்தில் துணைச் செயலாளராகப் பணியாற்றியவர். அக்கால கட்டத்தில் பிரதமரின் செயலாளர் குழு எனும் அமைப்பாக இது இயங்கி வந்தது.. ஜெயபிரகாஷ் நாராயணன் மார்ச் 13 1971 ஆம் வருடம் இந்திரா காந்திக்கு ஒரு சிறப்பான கடிதம் எழுதி இருக்கிறார். பெருவாரியான வெற்றிகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்ற அவரது அறிவுரை, அதிகார செருக்கில், இந்திராவின் காதுகளில் ஒலிக்கவில்லை. 1975 அக்டோபர் 17 அன்று மிசா சட்டத்தில் ஒரு அச்சுறுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி நீதிமன்றங்களில் எவ்விதமான சாட்சியமும் இல்லாமல் ஒரு கைதியை மிசா சட்டத்தின்படி தண்டிக்க முடியும். காவல் துறையினர் கைது செய்த நபரை நீதிமன்றத்தில் விடுதலை செய்ய முடியாது. அரசின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

சர்வாதிகாரமான கொடுங்கோன்மையான சட்டங்கள் பல மாநில அரசுகளிலும் மத்தியிலும் வெவ்வேறு வடிவங்கள் எடுத்து உலாவுகின்ற நேரத்தில், இந்தியா என்னும் தேசத்தை முதன்மை எனக் கருதும் மனநிலை இந்தியர்கள் அனைவருக்கும் வரவேண்டும்.

எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட போது தி ஹிந்து நாளிதழ் எதையும் அச்சடிக்காமல் முதல் பக்கத்தை வெளியிட்டது அதைப்போலவே, இக்கட்டுரையைத் தொடர்ந்து ஒரு பக்கம் எதுவும் அச்சிடப்படாமல் இருக்கிறது.

அம்பேத்கரின் தீண்டாமை அனுபவங்களை பற்றிய பீமாயணம் எனும் சித்திர புத்தகம், மத்திய இந்தியாவின் பிரதான் கோண்ட் கலை எனும் வகை மாதிரியின் அடிப்படையில் உருவானது; ஒரு விழுமியத்தின் அடையாளமாகக் கருதப்படும் ஆளுமையை உணர்த்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கருவியும் அதே விழுமியத்தை கொண்டுள்ளது நல்ல பொருத்தம் .மரபான சட்டகங்களை உடைக்கப் பார்த்த அம்பேத்கரின் சிந்தனைகளை சித்திரச்சட்டகங்களுக்குள் அடைக்கக்கூடாது என்று டிக்னா வகை வடிவங்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். சித்திரங்கள் வழக்கமான பாணியில் அல்லாது, கருத்தின் தன்மையைப் பொறுத்து அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. அம்பேத்கரின் வாழ்வையும், அவரது கருத்துக்களையும் மட்டுமே சித்திரமாக்கி இருந்தால் இக்கால இளைய தலைமுறையிடம் சரியான மனத் துணிவை கொண்டு வர முடியாது. தீண்டாமைக்கு எதிராக அயராது பாடுபட்ட, அதை சந்திக்க, எதிர்க்க வழி கூறிய ஆளுமையை இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும் என்று கதை ஆசிரியர்கள் ஸ்ரீவித்யா நடராஜன், எஸ் ஆனந்த் இருவரும் தீர்மானித்து இந்த சித்திர புத்தகத்தை சிறப்பாக கொண்டு வந்துள்ளார்கள். கொள்கைகளுக்காகப் பதவியையும் துறந்த அவரை ஒரு சிறு குடுவைக்குள் இன்றைய அரசியல்வாதிகள் அடக்கப் பார்ப்பது மிகவும் சோகம்.

ஒதுக்கப்படுவது வலி நிறைந்தது. இளம் வயதிலிருந்து மனதிற்கு பழக்கப்பட்ட வாழ்வியல் முறைகள் மறுக்கப்படும் போது மனிதன் மறுகுகிறான். டாக்டர் தி. சே. சௌ. ராஜன் எழுதிய நினைவு அலைகள் என்ற புத்தகத்தின் பின்னட்டையில் இருக்கும் வாசகங்கள் நம்மை இறுக்கும் வாசகங்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது .
’பிரபல வைத்தியனாக இருந்து, காங்கிரஸில் ஈடுபட்டு, சத்யாகிரகம் செய்து, தீண்டாமையை ஒழிக்க பல முறை சிறை சென்று, அரசாங்க மந்திரியாக சில காலம் உத்தியோகம் வகித்த நான் முதுமைப் பருவத்தில் என்னை விவசாயியாக எண்ணி இந்த கிராமத்தில் வாழ்வதற்கு போய் சேர்ந்தது ஒரு பெரிய விந்தை. எனது வரவை உற்சாகத்தோடு கிராமவாசிகள் வரவேற்கவில்லை. அந்த ஊர் வேசிகளுக்கு கூட என்னிடம் நன்மதிப்பு இல்லை.”

இந்தப் புத்தகம் அவரின் சுயசரிதை மட்டுமல்ல நமது சமூகப் பின்புலனில் சத்தியத்தை தேட முற்பட்டவரின் கதை. ஸ்ரீரங்கத்தில் வைதீகமான குடும்பத்தில் வளர்ந்தவர். மருத்துவ படிப்பு பெற்றவர் அகோபிலமட ஜீயர் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். பர்மாவில் மருத்துவ வேலைக்காக சென்ற அவர் சவக்கிடங்கு போன்ற மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். பெரிய டாக்டரின் தவறான அணுகுமுறை அவருக்குப் பிடிக்கவில்லை.  வேலையை விட்டுவிடுகிறார். லண்டனுக்கு படிக்கச் சென்றது அவரது குடும்பத்தையே வைதீக சமூகத்தை விட்டு விலக்கி வைத்து விட்டது. மண்ணில் இருந்து வேருடன் பிடுங்கி எறியப்பட்ட செடியாக அவர்கள் உணர்ந்தார்கள். காங்கிரசிலும் ஈடுபாடு வந்தது; ராஜாஜியின் மூலமாக காந்தியுடன் தொடர்பு கொண்டார். அவரது உரைகளை இவர் தமிழில், கூட்டங்களில் வழங்கினார். தனது பிறப்பு அடையாளங்களை துறப்பதில் இருக்கும் கஷ்டங்கள் அவற்றை மீட்பதிலும் இருக்கின்றது என்பது எவ்வளவு கசப்பான உண்மை!

பனங்காடை இறகிற்கு மருத்துவ குணம் இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தவிட்டுப்புறா, தேன் சிட்டு, மாம்பழச் சிட்டு, வாலாட்டி குருவி, வானம்பாடி பட்டாணி குருவி ,ஆனைச் சாத்தன் அனைத்தைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கு மா.கிருஷ்ணன் எழுதியுள்ள பறவைகளும் வேடந்தாங்கலும் அபூர்வமான தகவல்களைக் கொண்டிருக்கிறது.

All I want to say is that the only possibly teacher except torture is fine art-Bernard Shaw.
வதை முகாம்களின் கொடுமைகள் ஒரு நூற்றாண்டுகளாய் கற்றுக் கொடுத்த பாடங்கள் இன்னும் நமக்கு பிடிபடாமல் இருக்கும் நிலையில் ஷாவின் வாசகம் முக்கியமானது. நவீன ஓவியங்கள் என்ன சொல்ல வருகின்றன என்று புரிந்து கொள்வதே தனிக்கலையாக இருக்கிறது. என்றுமே பழசிலிருந்து தான் புதியது தோன்றும் ஆனால் கணக்கில் அடங்காத மாற்றங்களை அணைத்து எடுத்துச் செல்லும். டென்மார்க் ஓவியங்கள் அதன் புகழ்பெற்ற ஓவியர்கள் என்ற கட்டுரை மிக அருமையான தகவல்களைக் கொண்டுள்ளது. ஒரு காலகட்டத்தில் உருவான வடிவ மோஸ்தர்களை வேறொரு காலகட்டத்திற்கு கொண்டு வந்து சங்கமம் வழியில்  கிர்கெபி வரைந்துள்ளார். பாப்புலர் ஆர்ட் என்னும் வடிவத்தில் இருந்து விலகி கச்சிதமான வடிவங்களால் ,நவீன ஓவியப் போக்காக, ஓவியக்கலையை மாற்றியுள்ளார் புரியும் படியான ஓவியங்களும் சிற்பங்களும் இல்லாமல் வித்தியாசமானவையே மேலானது என்ற பார்வை தவறு என்று உணர்ந்த அற்புதக் கலைஞர். ஓவியங்களில் உண்மையும் வடிவழகும், அன்றாட வாழ்வை  அரசியல் பாதிக்கும் விதத்தையும், கலையின் மொழியோடு நாம் இயல்பாக உரையாடும் தன்மையையும் அவரது ஓவியங்கள் பிரதிபலிக்கின்றன.

பேட்ரிக் கெடிஸ் என்ற நகர வடிவமைப்பாளர் நகரேஷு காஞ்சியை எப்படிப் பார்த்திருக்கிறார் தெரியுமா? உயிர் இயக்க தோற்றம் கொண்டிருந்த அதை அடிப்படையாகக் கொண்டே அவர் டெல் அவிவ் நகரை அமைத்திருக்கிறார். நகரம் என்பது நமது உடலில் நரம்பு மண்டலத்தை போன்றதாம் ; சுத்தப்படுத்தும் இயக்கம் ஒருபுறம் அழுக்குகளை வெளியேற்ற  முனையும் இழை, அதேநேரம் பழசைக் கலைந்து புது செல்களை உருவாக்கும் இது போன்ற ஒரு அமைப்பே பண்டைய கால காஞ்சிபுரம் என்று அவர் கண்டிருக்கிறார் .எறும்பு முதல் யானை வரை, அண்டம் முதல் பிண்டம் வரை என நமது வாழ்வின் சகல பரிமாணங்களுக்கும், முழுமை நோக்கிய பயணம் இருந்ததையே அவர் காரணமாக காட்டுகிறார். கோயில் எனும் அமைப்பும் அதைச் சுற்றி அமையும் சமூக வட்டங்களும் மனிதனின் தனித்தன்மையை விட்டுக் கொடுக்காத ஒரு அபாரமான பேரியக்கமாக அவனை உயர்த்தியதை மெய் அறிவின் கொடை என்கிறார். இந்திய அறிதல் முறைகள் என்ற கட்டுரை எப்படி ஒரு மாபெரும் வலைப் பின்னலாக சட்டகங்கள் ஒன்றே ஒன்று தொடர்புறுத்தி அமைந்திருக்கின்றன என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்என்று சொல்கின்றன. இந்திய அறிதல் முறைகள், டார்வின் பரிணாமக் கொள்கையை இன்னும் விரிவான தளத்தில் பேசி முன் நகர்த்தியுள்ளது. ஆல வித்தில் மரமே அடங்கியுள்ளதல்லவா.? வேட்டுவச்சடங்கில் உக்கிரமான சிறு தெய்வ வழிபாடும், வேதாந்தப் பெண் வழிபாடும் இணைந்திருந்த சித்திரத்தை அரவிந்தன் நீலகண்டன் ,சாந்தினி தேவி ராமசாமி இணைந்து எழுதி இருக்கும் இந்திய அறிதல் முறைகள், பக்கச் சார்புகள் எடுக்காமல் மூடநம்பிக்கைகளின் குழப்பங்களில் சென்று விடாமல், ஆழமாக நம் அறிதல் முறைகளை எடுத்துரைக்கின்றது. பாரம்பரிய கல்வியை இழந்ததால், நாம் இழந்தது பன்முகப் பண்பாடு உருவாக்கித் தந்த வேளாண்மை அறிவு , சூழியல் ஞானம், நீர் வேளாண்மை முறைகள், நமது தத்துவ அடிப்படை மீது எழும்ப வேண்டிய சிந்தனைகள் பறி போன அவலம் என பற்பல இழப்புகள் என்பதையும் சுட்டிக்காட்ட அவர்களின் நூல் மறக்கவில்லை.

காடு என்ற சூழியல் சிற்றிதழ் ஒரு கட்டுரையில் அறிமுகமாகிறது. ஈ ஆர் சி , தாவிதர், பேரா. கு வி கிருஷ்ணமூர்த்தி, தியடோர் பாஸ்கர், ஏ. சண்முகானந்தம், ப.அருண்குமார், சு பாரதிதாசன், முருகவேள், பகத்சிங் போன்றவர்கள் அயராது சூழியல் பற்றிய அறிவை நமக்கு ஏற்படுத்தப் போராடுகிறார்கள் கிரி கேட்கும் ஒரு கேள்வி கேட்கப்பட வேண்டிய ஒன்றுதான் இயற்கையை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் எனும் அறைகூவல்களில் நியாயம் இருந்தாலும் இன்று நம்மிடையே இருக்கும் அறிவியல் பெருக்கத்தைக் கொண்டு அதைச் செய்வது எப்படி என்பதும் ஒரு முக்கியமான கேள்விதான். அறிவியல் தொழில்நுட்பம் வழியே இயற்கை பாதுகாப்பிற்கு ஒரு வழியை உருவாக்க வேண்டும்.

நாரைகள் தண்ணீரில் ஏன் ஒற்றைக் காலில் நிற்கின்றன? ஒவ்வொரு நாளும் பல நூறு மைல்கள் நடந்து புலப்பெயர்வு செய்யும் மிருகங்களின் வாழ்வு ஏன் தினப்போராட்டமாக இருந்து வருகிறது? டேவிட் அட்டன்பரோ எடுத்துள்ள த பிளானட் எர்த், லைப் இன் கோல்ட் பிளட், தி ப்ளூ பிளானட் வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? கோபோஅபே எழுதியுள்ள த உமன் இன் சேண்ட் ட்யூன்ஸ் புத்தகத்தில் வரும் ‘without the threat of punishment there is no joy in flight’’ மனதை அசைக்கவில்லையா? உயிர் வாழ்வின் ஆதாரமாக தந்திரமும் தாயுள்ளமும் ஒன்றையொன்று நிரப்பி இயற்கையின் இந்த தன்மையை மனிதனுக்கு அடிப்படை தத்துவமாக சொல்லிக் கொண்டிருக்கிறது.

நடீன் கோர்டிமர் என்ற எழுத்தாளரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? சட்டென விலகிய மேகத்திரள் போல , காலனி ஆதிக்கத்தின்  பிடிப்பிலிருந்து விடுபட்ட கருப்பின மக்களின் சிக்கல்களைப் பேசுவதாகட்டும், ஆப்பிரிக்க நாட்டு பிரஜைகளிடம் எஞ்சியிருந்த பழக்கங்களையும் பிரிவுகளையும் எதிர்கொண்ட நவீன மனிதனின் பார்வையை சித்தரிப்பதாகட்டும், காலனியச் சிறையில் தமது இறக்கைகளை இழந்த நவீன பெண்களின் நிலையை விவரிப்பதாகட்டும், நடீன் ஒவ்வொரு வகையான வாழ்க்கையைப் பற்றியும் மிக விரிவாக பதிந்துள்ளார். நீண்ட மரபை கொண்ட கருப்பின ஆப்பிரிக்கா தனது அடையாளங்களை இழந்து நவயுக தொழில் நுட்பங்களில் தஞ்சம் புகுந்திருப்பதையும், அடிப்படை நியாய உணர்வையும் மனிதத்துவத்தைத் தேடப் புறப்படும் மேற்கத்திய மனோபாவத்தையும் அவரது எழுத்து கேள்வி கேட்கிறது. பரந்த காட்டை அளக்க முற்படும் சிறு நத்தை போல அவ்வப்போது எல்லை வந்து விட்டதா என எட்டிப் பார்க்கிறது என்று கவிதையாய் இங்கு சொல்கிறார் கிரி.

ஆயிரத்தொரு இரவுகளையும் அரபு இலக்கியத்தையும் பிரிக்க முடியுமா? மூடிய பொக்கிஷங்களாக இருந்த அரபு இலக்கியம் சிறிது வளைந்து, ஆங்கில மொழியாக்கத்திற்கு இடம் கொடுத்திருக்கிறது. எகிப்தின் புகழ்பெற்ற நாவலாசிரியரான நகூப் மஹ்ஃபோஸ்  இதில் முன்னோடியாகத் திகழ்கிறார். அரபு இலக்கியங்கள் பெரும்பாலும், பெண்களுக்கான அதீத கட்டுப்பாடுகள், சமூகத்தில் உள்ள சர்வாதிகார ஆண்கள் அல்லது ஆட்சியாளர்கள், மதத்தின் பெயரால் அடையாளங்கள் உருவாக்கி தனிப்பட்ட மனிதரிடம் திணிக்கும் மதவாதிகள், சமூக ஏற்றத்தாழ்வு, மதப்பற்று பெண்களின் ஊமைக் காயங்கள் ,ஆழமான விவரணைகளில் வெளியாகின்றன. மொராக்கோ எழுத்தாளர் முகமது ஹெர்ராரா எழுதிய மறதியெனும் விளையாட்டு நாவலில் அரபு வாழ்வில் ,கடும் வெயிலென சுட்டெரித்த சுதந்திரதிரப் போராட்ட நாட்களை காட்டுகிறார். அரசியலே அரபு இலக்கியத்தின் மையமாக இருக்கிறது. ஒரு புரட்சி இயக்கத்தின் நடைமுறைகளை மட்டுமல்லாது அதன் நீட்சியான தனிமனிதனின் தோல்விகளை எழுதியதன் மூலம் ஹாசன்ஃபெனி, அறம் அரசியல் இலக்கியம் சார்ந்த படைப்புகளின் முன்னோடியாகவும் இருக்கிறார். 22 நாடுகள் சேர்ந்து உருவாக்கும் அரபு இலக்கியம் ஒற்றைக் கோணத்தில் மட்டுமல்லாது சகலவிதமான விஷயங்களைப் பற்றி பேசும் நாள் கண்டிப்பாக உருவாகும்.

கதையை எழுத்தாளர் எப்படி எழுத வேண்டும்? அந்த எழுத்திலிருந்து ஒரு கதையை நாம் உற்பத்தி செய்ய முடியும் என்றால் அது சிறப்பாக இருக்குமோ? உச்சகட்ட முடிவுகளை சேர்ப்பது என்பது நடைமுறை இயல்பை மீறிய செயல்தான் என்றாலும் வாசகர்களை ஈர்த்து வசப்படுத்துவதற்கு அது ஒரு வழி என்று  சொல்கிறார் சாமர்செட்மாம். கண்களை குருடாக்கிய குண்டு விட்டுச் சென்ற பெரிய காயத் தடம் மூடிய அந்த 18 வயது கூட நிரம்பாத இளைஞன், சலனமற்ற பாவம் கொண்ட கண்களுடன் பாடிய காட்சியை மாம் விவரிக்கும் போது இயல்பான மனித இரக்கம் சுரக்கிறது  அவனது பாடல் தனிமையை, பதனப்படாத தன்மையை, கைவிட்டவர்கள் கதறும் ஒலியை , தனிமையான பள்ளத்தாக்குகள், முடிவடையாத காடுகள், ரஷ்யாவின் அகலமான நதிகள், கிராமப்புறத்தின் கரடு மேடுகள், உழப்படும் நிலங்கள், சோளப் பதிய காலம், மரக்கிளைகளில் புகுந்து வரும் காற்று, பனிக்காலத்தின் நீல இரவுகள் என்று காட்சிப்படலமாக விரிகின்ற அந்த பகுதியை கண்ணெதிரே நாம் அனுபவிக்கலாம்.

பல்கலைகளில் அருமையான நூலகங்கள் உண்டு. எதைப் பற்றியும் ஆழமான கட்டுரைகளும், மனித வாழ்வின் அபத்தங்கள், அவலங்கள், வாழும் இச்சை இவற்றை ஆழமாகக் கூறும் கதைகளும் ,அறிவியல், தொழில்நுட்பம், இசை, ஓவியம், சிற்பம், நடனம், நாடகம் போன்ற துறைகளைச் சார்ந்த புத்தகங்களும், பாடப்புத்தகங்களின் அணிவகுப்பும் இன்னும் எத்தனை எத்தனையோ கிடைக்கும். நமக்கு ஒரு துறையில் சிறிது அறிமுகம் இருந்து அதைப்பற்றி ஆழமாக அல்லது தெளிவாக அறிந்து கொள்வதற்கு நாம் நம் நண்பர்களை நாடுவோம் அவர்கள் பரிந்துரைத்த புத்தகங்கள் உண்மையிலேயே நமக்கு உதவும் வகையில் இருக்கும்.

கிரியின் இந்த கட்டுரைத் தொகுதி ஒரு நூலகம் போன்றதே. அமுத சுரபியாக, கற்பக விருட்சமாக நாம் தேடுவதையும் நினைப்பதையும் வஞ்சனை இன்றி, சார்புகள் இன்றி, இனிய தமிழில் இயல்பான எழுத்தில் நமக்குத் தருகின்றன கட்டுரைகளின் அடியில் எந்த பிரசுரம் அல்லது இதழ் என்பது போன்ற விவரங்களும் தரப்பட்டுள்ளன.
விண்வெளியில் ஆய்வகம் அமைத்து ஆராய்ச்சி செய்து வரும் இந்தக் காலகட்டத்திலும் கூட பூக்களாய் சிரிக்கும் வானம் நம்மைக் கவர தவறுவதில்லை இயற்கையையும் அதன் இயல்புகளையும் இணைத்துக் கொண்டு வாழ்வதும் சுவாரஸ்யமான வாழ்க்கை தான் எத்தனையோ சஞ்சலங்களுக்கு இடையே இளம் தென்றல் போல் இந்த கட்டுரைத் தொகுப்பு நம்மை ஆற்றுப்படுத்துகிறது இதை எனக்குப் பரிசாகத் தந்த கிரிதரன் ராஜகோபாலனுக்கும் அவரது சகோதரருக்கும் சிறப்பு நன்றிகள்.

Exit mobile version