Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

ஸ்வப்ன வாசவ தத்தா – 8

This entry is part 8 of 9 in the series ஸ்வப்ன வாசவதத்தா

பாகம்-5

பத்மினிகா என்ற ஒரு பணிப்பெண்  மதுகரிகா என்ற மற்றொருவளை தேடியபடி வருகிறாள்.  மதுகரிகா சீக்கிரம் வா.  மதிகரிகா- என்ன அவசர காரியமா? 

பத்மனி: ஆமாம், இளவரசி தலைவலி என்று தவிக்கிறாள். நீ போய்  ஆர்யா அவந்திகாவிடம் விஷயத்தைச் சொல்லு.  வேறு எதுவும் சொல்ல வேண்டாம். அவர்களாகவே வருவார்கள். 

மதுகரி- அவங்க வந்து என்ன செல்வாங்க? வைத்யம் தெரியுமா அவங்களுக்கு?

பத்மினி- அவங்க கிட்ட தானே இளவரசி பத்மாவதி நெருக்கமாக இருக்காங்க. இரண்டு பேரும் எப்பவும் சேர்ந்தே இருக்காங்க. அவங்க வந்து பேச்சுக் கொடுத்தாலே போதும். மனமுவந்த தோழிகள் பேசிக் கொள்ளட்டும். நமக்கு என்ன? இட்ட வேலையைச் செய்வோம்.

எங்க இருக்காங்க?

கடற்கரை மாளிகையில்

சரி நீ போ, நானும் வசந்தகனைத் தேடி, அவர் மூலம் அவள் கணவன் உதயண ராஜாவிற்கு செய்தி சொல்லி அனுப்புகிறேன்.

இந்த வசந்தகனை எங்கே என்று தேடுவேன். மாளிகை, தோட்டம் என்று ஒரு இடம் விடாமல் சுற்றிக் கொண்டே இருக்கிறார். அவள் வெளியேறிய பின், வசந்தகன் வருகை. 

வசந்தகன் (தனக்குள்) பல நாட்களுக்குப் பின் நம் அரசன் மனைவியைப் பிரிந்த துக்கத்திலிருந்து மீண்டு விட்டார் போலும். பத்மாவதி நல்ல மனைவி. அயி, பத்மினி, எங்கு வந்தாய்? 

ஆர்ய! உங்களைத் தான் தேடினேன். எங்கள் இளவரசி தலை வலியால் வருந்துகிறாள். வைத்யரிடம் போய்க் கொண்டிருக்கிறேன். பூச்சு மருந்து அல்லது உட் கொள்ள மருந்தோ அவர் தருவார்.  உங்கள் அரசனிடம் விஷயம் சொல்லுங்கள். அதற்குத்தான்  உங்களைத் தேடிக் கொண்டே இங்கு வந்தேன்.

வசந்தகன்: அடடா, கஷ்டம். எங்கு இருக்கிறார்.

பத்மினி- கடற்கரை மாளிகையில்

வசந்தகன்: சரி, நீ போ, நானும் அரசனிடம் தெரிவிக்கிறேன்.

வத்ஸ தேசத்து அரசன் உதயணன்  ஏதோ யோசித்தபடியே அங்கு வருகிறான். (தனக்குள்)  காலம் தான் வலியது. அவந்தி இளவரசி லாவணகம் என்ற இடத்தில் தீ விபத்தில் மாண்டது இன்று போல இருக்கிறது. அதன் வலி என் மனதில் சற்றும் குறையவில்லை.  வாஸவதத்தாவின்  நினைவு  பனியில் வாடிய பத்மம் போல் கண் முன் தெரிகிறது. மறு படியும் என் வாழ்வில் ஒரு பெண்ணை ஏற்றுக் கொண்டிருக்கிறேனே, என்ன மனிதன், நான்.   (அதே போல குணவதியான  மனைவி, அவளைப் போலவே பிரியமாக இருந்தாலும், மறுமணம் செய்து கொள்ள அவசரப் பட்டு விட்டோமோ என்று தோன்றுவதும் இயல்பே.) 

வசந்தகனின் குரல், அரசே! வேகமாக வாருங்கள்.  ராணி பத்மாவதி தலை வலியால் சிரமப்படுகிறாராம்.

எப்படித் தெரியும் உனக்கு?

பணிப்பெண் பத்மினி சொன்னாள்.

அஹோ, கஷ்டம். எங்கு இருக்கிறாள். வழி காட்டு?

கடற்கரை மாளிகையில், இதோ, வாருங்கள்.  வசந்தகன் முன்னால் வழி காட்டியபடி செல்கிறான். இதோ வந்து விட்டோம். நீங்கள் உள்ளே போகலாம்.

நீ முன்னால் போ.

அரசே, நிதானமாக பார்த்து போங்கள். வெளிச்சம் அதிகம் இல்லை. ஏதோ அசைகிறது, எனக்கு சந்தேகமாக இருக்கிறது. பூச்சியோ, வேறு எதுவோ? 

அசடு,  வாசலில் கட்டியுள்ள தோரணம்  கடற்கரை காற்றில் அசைகிறது.  விளக்கு வெளிச்சத்தில் அதன் நிழல் தரையில் அசைவது போல தெரிகிறது.  நீயும் உன் சந்தேகமும்.  சிரித்துக் கொண்டே உதயணன் மாளிகையினுள் செல்கிறான்.  பத்மாவதியைக் காணவில்லை. வசந்தகன் தானும் எட்டிப் பார்க்கிறான். 

உதயணன்-  இன்னும் இங்கு வரவில்லை, பார் – படுக்கை விரிப்புகள் போட்டு, தயார் செய்து விட்டு, அழைத்து வரப் போய் இருப்பார்கள் போலும். 

சற்று நேரம் காத்திருப்போம். நீங்கள்  உட்காருங்கள்.  நான் போய் பார்க்கிறேன். 

சரி, போ. எனக்கும் தூக்கம் வருகிறது. சற்று நேரம் இந்த படுக்கையில் படுக்கிறேன்.

வசந்தகா, முதன் மந்திரி  யௌகந்தராயன் என் விருப்பதையறிந்து அவள் தன் பெற்றோர், உறவினர்கள் அனைவரையும் விட்டு என்னுடன் வரும் படி செய்து விட்டார். அவளும் யாருமறியாமல் என்னை நம்பி வந்தாள். கண்களில் நீர் வழிய, பிரியமான தாயை, தந்தையை, சகோதர்களை துறந்து வந்து விட்டாளே தவிர, அவளால் அந்த பிரிவை தாங்க முடியவில்லை.  அவர்கள் என்ன நினைப்பார்கள்.  தந்தை இதை அவமானமாக கொள்வார். திரும்ப வரவும் இயலாது.  கண்ணிர் விட்டபடி இருந்தவளை நான் மார்போடு அணைத்து சமாதானம் செய்தேன்.  என்னிடம் கொண்ட அன்பினால் தன் மக்களைத் தியாகம் செய்யக் கூட துணிவு  வந்ததே  அதை நினைத்தால் என் மனம் வெடித்து விடும் போல இருக்கிறது.  உஜ்ஜயனியின் பேரரசன், ப்ரத்யோத மகாராஜா மகள்,  என் புஜங்களில் தலை வைத்து கண்ணீர் விட்டாள். ஹா, ப்ரியே! வாஸவதத்தா! எப்படி இதை எண்ணிப் பார்க்காமல் என் சுய நலமே பெரிதாக எண்ணி அவளை  கடத்திச் செல்லத் துணிந்தேன். ஒவ்வொரு கண்ணீர் துளியும் சம்மட்டியாக மாறி என்னை தாக்கின – அன்றிலிருந்து நானே அவள் தந்தையாக, சகோதரனாக, தாயாகவும் இருந்து வந்திருக்கின்றேன். 

வீணை வாசிக்க நான் சொல்லும் விஷயங்களை கவனமாக கேட்பாள்.  விரல்கள் மீட்டியபடியே இருக்கும். பிசகினால் நான் கோபிப்பேன் என்ற பயத்தால் கண் கொட்டாமல் நான் வாசிப்பதைப் பார்த்துக் கொள்வாள்.சில சமயம் ஸ்வரம் அல்லது தப்பாக ஆகும்.  அந்த நினைவில் மூழ்கி விட்ட அரசனை திசை திருப்ப விதூஷகனான வசந்தகன் பேச்சுக் கொடுத்தான். 

விடுங்கள், வேறு ஏதாவது பேசுவோமா?  ப்ரும்ம தத்தா என்ற ராஜ்யம். அதன் அரசன் காம்பில்யன், 

அரசன்: என்ன சொல்கிறாய், திருப்பிச் சொல்லு.   ஓ, காம்பில்யம் என்ற ராஜ்யம் அங்கு அரசன் ப்ரும்ம தத்தன்.  வசந்தகன்:  தொண்டையில் இருக்கிறது, வாயில் வரும் பொழுது தவறாக வருகிறது. காம்பில்யம் ராஜ்யம், அரசன் ப்ரும்ம தத்தன்.  மேலும் பலமுறை சொல்லிப் பார்த்துகொண்டிருந்தவன், அரசன் தூங்கி விட்டான் என்பதை சற்று பொறுத்து தான் கவனித்தான்.

இனி இங்கு இருந்து என்ன செய்யப் போகிறேன், வெளியில் சுற்றி விட்டு வருகிறேன், என்று கிளம்பி விட்டான்.   சற்று போறுத்து அந்த இடத்துக்கே பணிப்பெண் வழி காட்ட, அவந்திகா  (வாஸவதத்தா) 

பத்மாவதியைக் காண வந்தாள்.  அவள் அறைக்குள் நுழைந்ததும், உடன் வந்த பணிபெண், நீங்கள் இங்கு இருங்கள், நான் வைத்யரிடம் இருந்து மருந்தை வாங்கி வருகிறேன் என்று சொல்லி விடை பெற்றாள்.

தனக்குள்- தெய்வங்கள் என்னை ஏன் இப்படி சோதிக்கின்றன.  பாவம்  ஆர்யபுத்ரன்  (இது கணவனை மனைவி விளிக்கும் சொல் – பெரியவரின் மகனே என்று பொருள்)  மனம் குழம்பி இருந்த சமயம் இந்த பெண் பத்மாவதி ஆறுதலாக இருந்தாள்.  அவரும் மலர்ந்த முகத்துடன்  அவளுடன்  மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தார்.  அவள் இப்படி தலை வலி  வந்து அவதிப் படுவானேன். 

அறைக்குள் நுழைந்தவள், என்ன இது, பத்மாவதியை தனியே விட்டு அனைவரும் வெளியேறி விட்டார்களா?பணிப்பெண்களின் கவனக் குறைவு.  உடல் நலம் இல்லாதவளைத் தனியாக ஒரே ஒரு விளக்கை வைத்து விட்டு நகர்ந்து விட்டார்களா? ஏதேனும் தேவையானால் என்ன செய்வாள்? அருகில் இருந்த ஆசனத்தில் அமர இருந்தவள், அருகிலேயே வந்து அமர்ந்தாள். தள்ளி இருப்பதை விட அருகில் இருப்பது அவளுக்கு இதமாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டாள்.  நல்ல வேளை.  நன்றாக தூங்குகிறாள். தூங்கட்டும். தலவலி குணமாகி விட்டது போலும்.  தலையில் கை வைத்து  பார்க்கப் போனவள், ஏதோ நினைத்தபடியே அதே படுக்கையில் அருகே படுத்துக் கொண்டாள். 

கனவில் வாஸவதத்தாவைக் கண்டு, ஹா ப்ரியே! வாஸவதத்தே!    என்று புலம்பிய குரலால் திடுக்கிட்டு எழுந்தாள்.  பத்மாவதியை அழைக்கிறாரா? என்ற சந்தேகம் வர, தாமதித்தாள். 

ஹா என் பிரிய மாணவியே, அவந்தி ராஜ குமாரி எனத் தொடரவும் , நல்ல வேளை, கனவு தான். :   

அடுத்து கனவிலேயே உதயணன் சொன்னான், யாரது விரசிகாவா ?  

அவந்திகா, வேகமாக கட்டிலை விட்டு இறங்கி கை கூப்பி மனதால் வணங்கி விட்டு வெளியேறினாள். இவ்வளவு கஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு முதன் மந்திரி செய்த திட்டங்களுக்கு ஒத்துக் கொண்டு இங்கு வந்து பணிப்பெண் போல இருந்து வருகிறேன், அனைத்தும் வீணாகும் என்ற எண்ணம் அவளை உந்தித் தள்ளியது. இருந்தும் கட்டிலில் தேடுவது போல இருந்த உதயணனின் கையை எடுத்து  அருகில் படுக்கையில் வைத்து விட்டு, யாரும் பார்க்கும் முன் போய் விட வேண்டும் என்ற பரபரப்புடன் வெளியேறவும்.  உதயணன் விழித்துக் கொண்டு யாரது,  வாசவதத்தே என்று அழைக்கவும் சரியாக இருந்தது.  

நில். நில் என்று கத்தியபடி வந்தவன், வாசல் கதவில் முட்டிக் கொண்டான்.

அதேசமயம் வசந்தகனும் திரும்பி வந்தான்.  அரசே! தூங்கிக் கொண்டு இருந்தீர்கள், அதனால் சற்று வெளியில் சுற்றி விட்டு வரப் போனேன். 

அதனால் பரவாயில்லை. ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்கிறேன், கேள். அவந்தி ராஜ குமாரி உயிருடன் இருக்கிறாள்.

வசந்தகன்: வாசவதத்தாவா?  அவர்கள் மறைந்து பல நாட்களாகி விட்டனவே.  திரும்பி வரவா முடியும்? 

ருமன்வான் சொன்னது தானே. வாஸவதத்தா தீ விபத்தில் மாண்டாள் என்பது. பொய் சொல்லி என்னை ஏமாற்றி இருக்கிறான். 

அரசே! கனவில் அவர்களைக் கண்டீர்களா? அதே நினைவாக தூங்கினால் கனவில் வரும் என்பார்கள். 

கனவு என்றா சொல்கிறாய். அப்படியானால் நான் கனவிலேயே ஆழ்ந்து கிடக்கிறேன். விழிக்கவே வேண்டாம். புத்தி பிசகி விட்டது எங்கிறாயா,  அப்படியானால் அந்த ப்ரமை எனக்கு தீரவே வேண்டாம்.

கனவு இல்லை. மையிடாத கண்கள், கேசத்தை அலங்கரிக்காமல் விட்டிருந்தாள். என் கையை எடுத்து சரியாக வைத்தாள். அது கூட கனவா? 

வசந்தகன்: பத்மாவதி வந்திருப்பாள்.  அசந்து தூங்கும் உங்களை எழுப்பாமல் போய் விட்டிருப்பாள். 

இல்லை. அவள் தான். நான் விழித்துக் கொண்டு விடுவேன் என்று பயந்தாளோ, யாரும் பார்த்து விடப் போகிறார்களே என்று தயங்கினாளோ, தூங்கும் சமயத்திலும் என் புஜங்களில் அவள் கரம் பட்ட உணர்வு என் உடல் புல்லரித்தது தான் நிஜம்.  இன்னமும் எனக்கு அந்த இன்ப அனுபவம் உடலில் உள்ளதே, எப்படி கனவாகும். கனவில் கண்டது என்றால் விழிப்பு வந்தவுடன் மறைந்திருக்குமே. 

வசந்தகன்: அரசே! இது உங்கள் மன ப்ரமைதான்.  மேலும் அதையே எண்ணி வருந்த வேண்டாம். ஆழ் மனதில் உள்ளது தான் கனவாக வரும் என்பார்கள். அத்துடன் விட்டு விடுங்கள். வாருங்கள், போகலாம்.  

கஞ்சுகி வருகிறாள். ஜயது – வாழ்க நம் அரசன்.  ராஜா தர்சகன்  உங்களிடம் ஒரு செய்தி சொல்ல பணித்திருக்கிறார்.  உங்கள் மந்திரி ருமன்வான் வந்திருக்கிறாராம். பெரும் படையை சேர்த்துக் கொண்டுஆருணி என்ற உங்கள் எதிரியை எதிர் கொள்ளத் தயாராக இருக்கிறாராம்.  அத்துடன் யானை படை, குதிரைப் படை, கால் நடை வீரர்கள் அனைவரும் தயாராக இருக்கின்றனர், நமது வெற்றி நிச்சயம். அதனால் அரசர் வந்து பொறுப்பேற்றுக்  கொள்ள வேண்டும் என்றார். அது தவிர, 

“உங்களை எதிர்த்து நின்றவர்களும் தற்சமயம் கூட்டாக இல்லை. ப்ரஜைகள் உங்கள் ஆதரவாளர்கள், உங்களிடம் நம்பிக்கையும் அன்பும் உள்ளவர்கள் உங்கள் பக்கம். மேலும் நடு நிலைமை வகித்த சில சிற்றரசர்களும் உங்களை ஆதரிக்க வந்துள்ளனர்.  என்னால் முடிந்தவரை எதிரி படையை முறியடிக்கத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து விட்டேன். அரசே, வத்ஸ ராஜ்யம் உங்களுக்காக காத்திருக்கிறது. நம் படை வீரர்கள் கங்கை நதிக் கரையை தாண்டி விட்டார்கள்.  உங்கள் வரவு தான் அவர்களுக்கு உத்சாகமூட்டும்”

இது தான் அவர் சொன்னது.

உதயணன் எழுந்து நின்றபடி, ஆஹா, அப்படியா. இதோ நான் தயார். ஆருணி கொடுங்கோலன். அவனை முறியடிக்க நமது படை வீரர்களை தலைமை தாங்கி நடத்திச் செல்ல இதோ வந்து விட்டேன். ஆஹா, படைகளை என் மனக் கண்ணில் காண்கிறேன்.  உயர்ந்த யானைகளும், குதிரைகளும் கடல் போல பெருகிச் சென்று ஆருணியின் கர்வத்தை அடக்குவோம். அவன் ஆயுதங்கள் விழ, பெரும் சமுத்திரம் போன்ற போர்க் களத்தில் அவனை வதைக்கிறேன். 

ஸ்வப்ன வாசவதத்தா

பாரிஜாத புஷ்பங்கள் எனக்கும் பிடிக்கும் ஸ்வப்ன வாசவ தத்தா – 9
Exit mobile version