Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

காவேரி

“காப்பாத்துங்க..ஐயோ…யாராவது வாங்களேன்” பிஞ்சுக் குழந்தைகளின் கூக்குரல்கள் ஓங்கி ஒலித்தன.

என் மண்டைக்குள் பதிந்த அந்தக் குரல்களின் வயதோ, கிட்டத்தட்ட நாற்பது…ஆம்.  நாற்பது வருடத்திற்கு முன்பு உதிர்ந்தச் சொற்கள் அவை. இன்றும், என் அடி வயிற்றைப் பிசையும், ஆழமான அபயக் குரல்கள். கண்களில் நீர் சுரக்க, பரந்து விரிந்தக்  காவேரியின் முன் மண்டியிட்டுக் கொண்டிருந்தேன், அகிலாவாகிய நான். 

வெள்ளை நிறத்தினுள் தான் அத்தனை நிறங்களும், ஒளிந்து கொண்டிருக்கிறது, என்றால் நம்ப முடியுமா? அப்படித்தான் இந்த வெண்ணாடைப் போர்த்திய  காவேரியின் உள்ளும். அகண்ட காவேரிக்குத்தான் அத்தனைப் பசியோ? எத்தனைப் பேரைக் காவு கொண்டதோ?. யாருக்குத் தெரியும் அந்தக் கணக்கு? அந்தப் பல பெற்றோர்களின் சாபம் தான், பல நாட்கள் காவேரி சுத்தமாக வறண்டு போனாளோ ? ஒரு வேளை, தப்பித்தவர்களின் ஆசீர்வாதத்தில் தான், சில நாட்கள் மட்டும் வழிந்தோடுகிறதோ?  

இன்று காவேரிப் பாட்டியின் எண்பதாவது பிறந்த நாள்.  பாட்டியைப் பற்றி நினைத்தாலே, முதலில் நினைவுக்கு வருவது காவேரி தான். 

                                                                   ————————

சாயம் போனப்  பச்சை நிறத்தில், சிகப்பு பார்டர் போட்ட புடவை அணிந்து, ஒல்லியான தேகமுடைய அந்தக் கரிய முகத்தில், பெரிய வரிசையானப் பற்கள் முத்துப் போல் ஜொலிக்க , இரண்டு பக்கமும்  தங்க மூக்குத்தி, சிப்பியைப்  போல் காட்சிக்  கொடுக்க  , என்றும் பொங்கி வழியும் சிரிப்புடன், நுரைத்துப் பொங்கும் காவேரிக்குப் போட்டி, காவேரிப் பாட்டி தான்.

“ஏண்டி. உன் பையன் சுரேஷ் ஏழு மணிக்கே, காவேரிக்குப் போனானே? இன்னும் காணோமே? “

” ஆமாம் பாட்டி. நானும் வேலையா இருந்துட்டேன். மணி ஒன்பது ஆகப்போறது.”

“அவனுக்கு இத்தனை நாள், நீந்தத் தெரியல. அதனால, நிம்மதியா இருந்தே. இனிமேதான் ஆபத்தே..என்னைக் கடந்துடுவியான்னு காவேரி ஒரு மோகினிப் பிசாசுப் போல், அவ அழகைக் காட்டி, அவனைத் தூண்டில் போட்டு மயக்குவா. அவனும், அந்த மாயச் சுழலுல சிக்கிடக் கூடாதுடீ..பாத்து.” என்று சொல்லி விட்டு ” சரி நான் போய், கூட்டிக்கிட்டு வரேன்.” 

வேகு வேகுவென்று ஓட்டமாக ஓடி, மின்னல் வேகத்தில், காவேரியை அடைந்து, சுரேஷப்   பிடித்து “ராஸ்க்கல். உனக்கு நீந்தத் தெரியும்ன்னா இவ்வளவு தூரம் போவியா?” என்று  கேட்டு இழுத்து வருவாள். பல நாட்கள், காலை ஏழு மணி முதல், ஒன்பது வரைக் காவேரிக் கரையில் தான் அவளின்  வாசம். இதுவரை காவேரியில் முழுகியவர்கள் கணக்கு இருக்குமோ இருக்காதோ, காவேரி பாட்டி காப்பாற்றியவர்கள் கணக்குச் சதம் அடித்து இருக்கும். 

“ஏன் பாட்டி..யாரையாவது காப்பாத்தப் போகும்போது, உன்னைக் காவேரி கொண்டு போய்ட்டா? எத்தனை பேர் சும்மாக் கரையில நின்னு வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு நீச்சலே தெரியாதேன்னு ஒருத்தர். எங்கம்மாக்கு நான் ஒரே பிள்ளைன்னு இன்னொருத்தர். எனக்கு ஒடம்பு நோவு, அம்புட்டு தூரம் போய்ட்டா காப்பாத்த முடியாது, எனக்குத் தண்ணியிலே கண்டம்னு இப்படிப் பல காரணங்கள். உனக்கு மட்டும் என்ன? “ நான் ஒரு நாள் கோபமாகக் கேட்டேன்.

“ விடுடா… நான் தனி மரம். நான் போனால், யாருக்கு நஷ்டம்? “ என்பாள். 

தன்னைத்  தனி மரம் என்று சொல்லிக் கொண்டாலும், அவளைச் சுற்றி எப்போதும் மனிதர்கள் ஈக்கள் போல  மொய்த்தனர்.  

அந்த ஊரிலேயே பெரிய மாடி வீடு காவேரிப் பாட்டியுடையது தான். பணம் பத்தும் செய்யும். ஆனால் பணத்தை வைத்துக் கொண்டு, பாட்டி பத்தும் செய்வாள். யாருமே இல்லாத அந்த  வீட்டில்,  முறுக்கு, அதிரசம் எனப் பாட்டி செய்த தின்பண்டங்கள் நிரம்பி வழியும். 

“டேய்! இங்க கிரிக்கெட் விளையாட வேண்டாண்டா..பந்து, டீச்சர் வீட்டுக்குள்ள விழுந்துட்டா திரும்பி வராது” என்றான் சுரேஷ், என்னிடம்.

“பாட்டி வீட்டு வாசலண்டே போலாம். பந்து திரும்ப வரும். பேட் ஒடைஞ்சா வாங்கித்தரும். ஒரு கை குறைஞ்சா விளையாடவே வரும். அவுட்டா இல்லையான்னு வேற அம்பயரிங் பாத்து சொல்லுண்டா அது .” இது இன்னொரு பையன்.

“ டேய் அது, இதுன்னெல்லாம் பேசக் கூடாது. மரியாதையாய் பாட்டின்னு சொல்லணும்”. என்றான் சுரேஷ் அவனிடம்.

இப்படியாகப் பசங்களிடையேப்  பாட்டி பிரபலம். நீச்சல் அடிப்பது மட்டுமன்றி கில்லி, பாண்டி போன்றவற்றிலும் கில்லாடி அவள். மைதானம் தான் பாட்டியின் கோவில். விளையாட்டு தான் பாட்டியின் பூஜை. பாட்டி கந்த சஷ்டி கவசம் சொல்லிக்கிட்டே சிக்ஸ்  அடிப்பாங்கடா. நீ வேணாப் பாரேன்.”

இப்படிச் சிறுவர்கள் இடையே மிகப் பிரபலமாக இருந்த காவேரிப் பாட்டியின் பூர்வீகம் ஒரு மர்மம் தான். காவேரிப் பாட்டிக்கு கல்யாணம் ஆகிவிட்டதா, ஆகவில்லையா, குழந்தைகள் உள்ளதா, இல்லையா, எதுவும் தெரியாது. ஆனால், ஊரில் பலருக்கு உதவினாள். அந்த காரணத்தினால் மதிப்பிற்குரிய காவேரிப் பாட்டியாக இருந்தாள்.

“காவேரிக்கு, பத்து வயசுலேயே கல்யாணம் ஆயிருச்சு. ஆனா அவங்க வீட்டுக்காரர் ஓடிட்டார்”.

“அதெல்லாம் இல்ல. அவளுக்குக் கல்யாணமே ஆகல. சும்மா புருடா. இது அவ அத்தை வீடு”. 

“காவேரிக்கு ஒரு குழந்தை பிறந்துச்சு. அது காவேரியோட போய்டுச்சு. அதான் அது காவேரியேக் கதியாக்  கிடக்கு” 

இப்படிப் பல விஷயங்கள் உலா வந்தன. காவேரி என்றாலே, ரகசியங்கள் நிறைந்தது. அமைதியான காவேரியில், எங்கே எத்தனைச்  சூழல்கள் உள்ளது எனக் கணிக்க முடியுமா என்ன? 

ஆனால் ஒன்று, அந்த ஊரில் எல்லோருக்கும் மிக நிதர்சனமாகத் தெரிந்தது. காவேரிப்  பாட்டி சிறு வயதினரிடமும், பெண்களிடமும் மட்டும் தான் பேசுவாள். ஆண்களைக் கண்டால், தூர விலகிடுவாள். அதனால் தான், பாட்டியை இந்த ஊரில் யாரும் வெறுத்ததில்லை, குறிப்பாகப் பெண்கள். 

நடந்தாய் வாழிக் காவேரி என்றக் கூற்றுக்கு ஏற்ப, காவேரியையேச் சுற்றி வந்தப் பாட்டி, திடீரென்று ஒரு மும்பைக்காரருக்கு, அவள் வீட்டை விற்று விட்டு, அந்த ஊரிலிருந்தே மாயமானாள். 

அதற்குப் பாவியான நான் தான் காரணமாவேன் என்று அப்போது அப்பாவியான நான் அறிந்திருக்கவில்லை. 

                                                                  —————-

அந்த ஊருக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும்போது, நான் வந்தேன். பசங்களுடன்  கில்லி ஆடுவதும், பாண்டி ஆடுவதும், கிரிக்கெட்  ஆடுவதுமாக இருந்த எனக்கு, அந்த அகண்ட  காவேரியில்  குளிக்கக் கூடப் பயம். அதனால், பாட்டியுடன் சென்று வேடிக்கை மட்டும் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தேன்.

“டேய். பொட்டப் புள்ளைங்கக் கூடத் தைரியமாக் குளிக்குதுங்க. நீஞ்சுதுங்க.  உனக்கு என்னடா ? “ என நண்பர்கள் கேலி பண்ணுவதால், ஆண்கள் படித்துறைக்குப் போகவே மாட்டேன்.

“பாட்டி. இன்னும் மூணு வருஷந்தான். பதிமூணு வயசுக்கப்புறம் அவனை ஆம்பளைங்க  படித்துறைக்குத்தான் அனுப்பணும். வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியாது. இறங்கி குளிக்கணும்” என்றான் சுரேஷ்.

“சரி. சரி. பார்க்கலாம்” என்றாள் பாட்டி.

பதிமூன்று வயசில், முதலில் அம்மா தான் என்னிடம் உள்ள மாற்றத்தைப் பார்த்தாள். அப்பாவிடம் எப்போதும் என்னைப் பற்றி ரகசியமாக ஏதோப் புலம்பிக் கொண்டிருப்பாள். “என்னங்க இது?” என ஆரம்பித்து, “ என்னப் பாவம் பண்ணினோமோ?’ என்று தான் அந்த உரையாடல் முடியும்.

ஏன் இப்படிப் பேசுகிறார்கள். அகிலன் எல்லாத்துலயும் என்னைப் போல், என உச்சி முகர்ந்த அம்மாவா இப்படி ?. கட்டி அணைத்துக் கொஞ்சிய அம்மாவா இவள்? 

ஒரு நாள் காலை ஆறு மணிக்குக் காவேரிக்குப் போன நான், எல்லோரும் குளித்து முடித்துவிட்டுப் போன பின்னும், அமைதியாகக் கரையிலேயே அமர்ந்து இருந்தேன். காவேரிப் பாட்டி, அவளுடையப் புடவைத் தலைப்பை உதறினாள். அதில் இருந்து ரொட்டியும், பிஸ்கட்டுகளும் விழுந்தன. 

“அம்மா என்னை சாயங்காலம் ஆறு மணி வரை, இங்கேயே இருக்கச் சொன்னாங்க” என்றேன் .

“ தெரியும்டா. பசிக்குமேன்னு கவலைப் படாதே..நான் புளி சாதம், தயிர் சாதம் எல்லாம் எடுத்துட்டு வந்துருக்கேன். இன்னிக்கு ஆடிப் பதினெட்டுன்னு நினைச்சுக்க.”

“ஆடிப் பதினெட்டுன்னா, எல்லோரும் சேர்ந்து தானே வரணும். வீட்டுல அக்காவைப் பொண்ணு பார்க்கும்போது, நான் இல்லாமையா? அம்மாவே ஏன் என்னை ஒதுக்கி வெக்கறாங்க? பாட்டி, ஒரு நாளைக்கு, எல்லோரும் சேர்ந்து என்னைக் காவேரியோடப் போயிடுன்னு சொல்லிடுவாங்களோன்னு பயம்மா இருக்கு”. அகிலன் கண்கள் குளமானது.

“அப்படியேச் சொன்னாலும் நீ கலங்கக் கூடாதுடா. உலகம் ரொம்பப் பெருசு. நான் இருக்கேன். காவேரியோட இந்தப் பக்கம் நின்னு பார்க்கறச்சே, உலகமே முடிஞ்ச மாதிரி தான் இருக்கும். ஆனாப் பாரு, இத  விட அழகான ஊர்கள் பலது அக்கரையில் இருக்கு.”

“ஆனா அங்கெல்லாம் என்னோட அம்மா அப்பா இருக்க மாட்டாங்களே?” கால் முட்டிகளைக் கைகளால் அணைத்து, அதன் மேல் தலை வைத்துக் கொண்டு, காவேரியை வெறித்துப்  பார்த்து கொண்டிருந்தான், ஒல்லியான உருவம் உடைய அகிலன்.

“அம்மாவுக்கு ஒரு நாள் என்னைச் சுத்தமாப் பிடிக்காமப்  போயிடுந்தானே?”

“உங்கம்மா தான் என்ன பண்ணுவா? கையிலக் காசு இல்ல. மூணு பசங்க. உன்னால மத்தவங்களுக்கு அவமானம் ஆகிடும்ன்னு உள்ளுக்குள்ளாற பயம். ஆனா உங்க அம்மா புத்திசாலி. உன்னை மாத்த முடியாதுன்னு புரிஞ்சுக்கிட்டா. அதான் உன்னை, அடிக்கறதோ, திட்டறதோ இல்லை. கையாலாகாத்தனம். உங்க அப்பா கிட்ட புலம்பறா. ”

“பாட்டி. நான் அகிலனா இருக்கணும். அப்படி இருந்தாத்தான், மதிப்புன்னு எனக்குப்    புரியுது. ஆனா, நான் மாறிக்கிட்டு இருக்கேன். உனக்குத் தெரியுதா?.”

“எனக்குப் புரியுது. ஆனா எல்லோருக்கும் புரியாது. நீ இந்த ஊர்லயே இருக்காதே. எங்கேயாவது ஓடிப் போயிடு. நீ படிச்சு, பெரிய ஆளா , இல்லை பெரியப் பெண்ணா, அகிலாவா மாறின பிறகு, இந்த ஊருக்கு வா. இப்ப இருக்கற காலக் கட்டத்துல, உன்னோட உடலமைப்பையோ, உளக்கூற்றையோ புரிந்து கொள்ள இங்கு யாரும் இல்லை. உனக்கான காலம் வரும். அது வரை, எங்கேயாவது மறைஞ்சு இரு. உன்னை நான் கரை சேர்க்கிறேன்”. 

இது நடந்து,  சில மாதங்களுக்குப் பிறகு, என் அக்காவின் கல்யாணத்திற்கு முன்  நான் காவேரியில் மூழ்கினேன். உடனே காப்பாற்றப் பட்டேன். அல்லது காப்பாற்றுவதற்காக, மூழ்கடிக்கப் பட்டேன். 

                                                           ——————

அந்தச் சிறுமிக்கு அப்போது பத்து வயது. அம்மாவும் அத்தையும், அடுத்த அடுத்த ஊரில் இருந்ததால், மாறி மாறிக் கொஞ்சித் தான், அந்தச் சிறுமியை வளர்த்தார்கள். கூடவே அத்தையின் பையனான கேசவ்வும் வளர்ந்தான். விதி வலியது. அம்மாவும் அப்பாவும் சென்ற வண்டி விபத்துக்குள்ளானதில், அந்தச் சிறுமி அனாதையானாள். அத்தையிடம் தஞ்சம் புகுந்தாள்.

அத்தை பையனுக்கும், மாமா பையனுக்கும் மணம் முடிப்பது தான் அன்றைய வழக்கம். குழந்தைத் திருமணத்தைத் தடை செய்திருந்தது அரசு. ஆனால், பெண்களுக்கான வயது வரம்பு பதினான்காகத் தான் இருந்தது. கேசவ்விற்கு அப்போது தான் பதினாறு வயது. ஆண்களுக்கான வயது பதினெட்டு என்பதைப் பற்றி, யாரும் கவலைப் படவில்லை.  பஞ்சும் நெருப்பும் ஏன் பக்கத்தில் இருக்கணும், என ஊரார் பேசியதில், விதவையான அத்தை, அவசரமாக இருவருக்கும் ஊர்ப் பெரியவர்களின் தலைமையில் மணம் முடித்தார்.       

திருமணம் முடிந்த பிறகும் கூட குழந்தைகள் இருவரும் உற்றத் தோழர்களாகச் சிரித்து, மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பா அம்மா விளையாட்டைத் தவிர. சிறுமி குமரியானப் பிறகும் இதுத் தொடரவே, அத்தை கேசவிடம் மெதுவாக வினவினாள்.

“ நான் இன்னொரு ஆணைத் தான் மணந்திருக்க வேண்டும். ஏன் என்னை எல்லோரும் அவசரப்  படுத்தினீர்கள்? ” என்ற பதில், அத்தையைப் புரட்டிப் போட்டது. அவனைக்  கம்பு எடுத்து விளாசினாள். கெஞ்சினாள். கொஞ்சினாள். மிஞ்சினாள்.  சூடு போட்டாள்.

“பரவால்லை அத்தை. விடுங்க“ என அந்தச் சிறுமி எவ்வளவோ கெஞ்சியும், தினம் இந்தக் கூத்து நடந்தேறியது. 

ஒரு நாள் காலை, ‘ என்னைத் தேடாதீர்கள் “ என எழுதி வைத்து விட்டு, கேசவ் ஊரை விட்டு ஓடி விட்டான். குற்ற உணர்ச்சியில் அத்தை மனசு ஒடிந்து, தன் பெயரில் உள்ளச்  சொத்துக்களை, அந்தச் சிறுமியின் பெயரில் எழுதி விட்டு மறைந்தாள். பல வருடங்கள், ஒரு தோழியைக் காணவாவது கேசவ் வருவான் என அந்தச் சிறுமி காத்திருந்தாள். காத்திருக்கிறாள். குமரியான அந்தச் சிறுமி, தான் இந்தக் காவேரி. நாற்பது வயதிலேயே, பாட்டி என்ற அடைமொழியைத் தானாகவே சுவீகரித்துக்கொண்டாள். அது தான் அவளுக்கு அரண். 

                                               ————————-

“உடல் ரீதியாக, இப்படிப்பட்ட மாறுதல்கள் வருவதற்கு, நீங்கள் காரணமில்லை என உலகம்  உணர வேண்டும். படிப்பும், வேலையும், பணமும் கண்டிப்பாக உங்களை உயர்த்தும். உங்களையும் மக்கள் ஏற்றுக்கொண்டு, நீங்கள் மூன்றாம் இனத்தவர் என்று  கடந்து போக வேண்டும். உங்களுக்கென்று சட்டங்கள் வர வேண்டும். பாவம் கேசவ் “ என்றாள் பாட்டி.  “ஆமாம் ஆமாம்” என்று சொல்வது போல காவேரி நீரின் சுழிகள் “லபக் லபக்” என்று படித்துறையை தொட்டு விலகின. பாட்டியை உற்று நோக்கிக் கொண்டிருந்தான் அகிலன். அவன் கண்களில் நீர் கோர்த்திருந்தது. 

“எங்களைத் தான் எல்லோரும் கேலி பண்றாங்களே. எப்படிப்  படிப்பது, எப்படி முன்னுக்கு வரது?” என்றான். “பாட்டி! முதல் கிண்டலே, பள்ளியில் தானே ஆரம்பிக்கும்?” என்றான்.

பாட்டி யோசித்தாள். திட்டம் தீட்டினாள். “காப்பாத்துங்க” என்றுக் காவேரியில் குழந்தையைத் தொலைத்து அழுதவர்களில், ஒரு நீதிபதியும் இருந்தார். மும்பையைச் சேர்ந்த அவரின் பையனை, ஆறு மாதம் முன்னர், காப்பாற்றியதால் ஏற்பட்ட அறிமுகம். அவருக்குக் கடிதம் எழுதி, அவர் மூலமாக மும்பைக்குச் சென்று, அகிலனை அவர் தயவில் பள்ளியில் சேர்த்தாள். பாட்டி எந்த வேலையும் செய்யத் தயாராக இருந்ததால், மும்பை அவளை இருகரம் நீட்டி வரவேற்றது. நீதிபதியின் நண்பர், ஊரில் உள்ள அவளுடைய வீட்டையும் சொத்துக்களையும் வாங்கி கொண்டார். அந்த நீதிபதி தன்னுடைய  அவுட்ஹவுஸில், பாட்டியைத் தங்க வைத்துக் கொண்டார். பாட்டியின் வழிகாட்டுதலின் பேரில், நன்கு படித்து அகிலன் மிகப் பெரிய கல்லூரியில் சட்டம் சேர்ந்தான். சிறப்புத் தகுதியின் அடிப்படையில், மேல் படிப்புக்காக அமேரிக்கா சென்ற அவன், அங்கே முழுமையாக அகிலா ஆனாள். 

பாட்டியும் அட்லாண்டாவிற்கு, அகிலாவுடன் சென்று ஐந்து வருடங்கள் ஓடி விட்டன. “பாட்டி, உனக்குன்னு ஏதாச்சும் கேளேன் “ என்றாள் அகிலா. “ எண்பது வயது ஆனவுடன், இந்தியா போய், காவேரியில் குளிக்கணும்டி. இப்பவும் என்னால் முன்ன மாதிரி நீஞ்ச முடியுமான்னு பார்க்கணும். நீயும் உன் அம்மாவைப் போய்ப் பார். இவ்வளவு உயரத்திற்கு வந்துவிட்டதைச் சொல் “ என்றாள் பாட்டி.  

                                                                 —————–

இன்று அகிலாவாகிய நான்,  அட்லாண்டாவில் இருந்து கிளம்பி வந்து, காவேரி முன்னால்  தனியாக நிற்கிறேன். காவேரியைப் பார்த்தவுடன் என்னுள்ளே பலக்  கேள்விகள் . அன்பே உருவான, யாரையுமே தண்டிக்கத் தெரியாத, பெரிய எதிர்பார்ப்பு இல்லாத பாட்டிக்கு, ஏன் சிறு வயது முதல் இவ்வளவு கஷ்டம் கொடுத்தாய்? பாட்டியின் கடைசி ஆசைக் கூட நிறைவேறாதபடி, ஏன் ஜுரத்தைக் கொடுத்து, அழைத்துக் கொண்டாய்? பாட்டியின் மேல் உனக்கு என்னக்  கோபம்? உன்னையேச் சுற்றிச் சுற்றி வந்தாளே. உனக்கே இது அடுக்குமா?” அகிலாவின் கோபம் காவேரியின் நுரை போலப் பொங்கியது. கடவுளிடம் தானே இந்தக் கேள்விகளைக் கோபத்துடன் கேட்க வேண்டும்? ஏன் காவிரியிடம் கேட்கிறேன்? 

ஏனெனில், எனக்குக் காவிரி தானே கடவுள். கடவுள் போலவே காவிரியும் அமைதி காத்தாள். 

“காப்பாத்துங்க!..ஐயோ…” எங்கேயோ கேட்கும் குரல். பிரமையா அல்லது நிஜம்தானா ? தூரத்தில் ஒரு தலை நீரில் மிதப்பது போல் தெரிந்தது. நிஜம் தான். 

திடீரென்று, அகிலா நீரில் குதித்து, மூழ்கும் உருவத்தை நோக்கி நீந்தி, அந்த உருவத்தை மீட்டுக் கரையிலிட்டாள். 

“பரவாயில்லைடீ. நீயும் என்னை  மாதிரியே  நல்லா நீஞ்சற.” என்றுக் காவேரி படித்துறையை உரசியபடியே கூறுவது போல் இருந்தது. அதுவும் பாட்டியின் குரலில்.       

அச்சம் தவிர்த்து, இரும்புப் பெண்மணியாக மாறிய என்னிடம் மிச்சம் இருந்த ஒரே அச்சமும் விலகியது… 

Exit mobile version