சிறுகதை என்பது சிறு நிகழ்வையும், வாசகன் எதிர்பாராத திருப்ப இறுதியையும்,கச்சிதமாக சொல்வதெனில் புதினமோ, தனி மனித வாழ்வை/ பெரு நிகழ்வொன்றின் நீண்ட வர்ணனையை / ஏதோ ஊரொன்றின் வளர்மையை (அ) தாழ்மையை விரிவாக வாசகனுக்கு புலப்படத்துவது. சிறுகதைகளைவிடவும் இலக்கிய வாசகர்களிடம், நாவல் சென்றடைவதும், வெற்றியடைவதும் பலரும் அறிந்த காரணங்கள் தான்.நிலவியல் விவரணைகள், வாழ்வியல் பதிவுகள் எனப் பெருமளவு வாசகரையும் ஈர்க்கும் பெரியத் திரையே நாவல் வடிவம்.
புனைவுகளும் யதார்த்த உண்மைகளும் விகிதங்களில் கலந்த புதினங்கள் எனும் இலக்கிய வகைக்கு, தமிழின் இலக்கியப் பயணத்தில், வரலாற்று வாகனத்தில் மிக முக்கியமானதொரு இடமுண்டு. காரணம் புதினங்கள், பண்பாட்டு விழுமியங்களின் பதிவாகவும், காலத்தின் சுவடுகளாகவும், பாத்திரப் படைப்புகளின் வழியாக பதிவு செய்பவை
”ஒரு நாவல் என்பது நான்கு சுவர்களுக்குள் அமர்ந்துகொண்டு வெறும் கற்பனையில் புனையப்படும் எழுத்துக்கோவை தான் என்பதில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது. நாவல் புனைகதைதான். ஆனால் மனித வாழ்க்கையின் பல்வேறு பிரச்சனைகளிலும் நிலைகளிலும் ’பிரத்தியட்சங்கள்’ எனப்படும் உண்மை வடிவங்களை தரிசித்த பின்னர் அந்த அனுபவங்கள் எனது இதய வீணையில் மீட்டிவிட்ட சுரங்களைக் கொண்டு, நான் இசைக்கப் புகும் புதிய வடிவையே நாவல் என்று கருதுகிறேன்” என்னும் பிரபல படைப்பாளி இராஜம் கிருஷ்ணன் அவர்களின் மேற்கோளுக்கு எடுத்துக்காட்டாகதோல்பாவைக்கூத்து என்னும் மக்கள் மறந்த கலையைக் கதைக்களனாக கொண்டு புதினம் வழங்கியதற்காக படைப்பாளி இரா.சைலஜாசக்தி மற்றும் காவ்யா பதிப்பகத்துக்கு வாழ்த்துக்கள்
தமிழிலக்கிய நீண்ட வரலாற்றில் புனைவுகளால் நெய்த பதினங்களின் இருப்பும், வளர்ச்சியும் மிக முக்கியமான இடத்தைக் கைக்கொள்வன. காரணம் இத்தகையப் புதினங்கள் காலத்தின் பதிவுகள் என்பதோடு அந்தந்த காலக்கட்டத்தில் மொழி, பண்பாடு, வெகுமக்கள் வாழ்வியல் மற்றும் இனவரைவியல் என்கிற விழுமியங்களைப் பதிவு செய்யும் முக்கியப் பங்காற்றுகின்றன
“மானுடவியலின் முக்கியப் பிரிவுகளுள் ஒன்றாக இனவரைவியல் அமைகின்றது. ஒரு குறிப்பிட்ட மக்கள் குழு அல்லது பண்பாட்டை விவரிக்கும் கலை அல்லது அறிவியலே இனவரைவியலாகும். ஒரு தனிப்பட்ட சமூகத்தின் பண்பாட்டை முழுமையாகப் புரிந்து கொண்டு அவற்றை முறையாகத் தொகுத்து வழங்குதல் இனவரைவியலின் நோக்கமாதலால், இது அடிப்படையில் வருணனைத் தன்மை கொண்டதாகவே அமையும். ஒப்பீட்டு முறையிலான ஆய்வுகளுக்கும் கொள்கைசார் விளக்கங்களுக்கும் இதில் இடமில்லை. ஆனால் சமூக மானுடவியல், பண்பாட்டு மானுடவியல் மற்றும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வில் இனவரைவியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில் இம்மூன்று அறிவுத் துறைகளுக்கும் தேவையான முக்கியத் தரவுகளை இனவரைவியல் வழங்குகிறது.
இனவரைவியல் ஆய்வு தொடர்பாக ஒரு தனிப்பட்ட மக்கள் குழுவிடமிருந்து பின்வரும் செய்திகள் தரவுகளாகச் சேகரிக்கப்படுகின்றன
1.பொருள்சார் பண்பாடு
2.வாழ்க்கைப் பொருளாதாரம்
3.நுகர்வு முறை
4.பரிமாற்ற முறை
5.சமூகக் கட்டுப்பாடு
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினை ஊடுருவிப் பார்க்க மேற்கூறிய தரவுகள் பெரிதும் துணை புரிகின்றன. அத்துடன் அதன் பண்பாட்டையும் நாகரீகத்தையும் இத்தரவுகள் தெற்றெனப் புலப்படுத்துகின்றன.
ஓர் இலக்கியப் படைப்பு சிறந்து விளங்க வேண்டுமானால் அதில் இடம்பெறும் மாந்தர்களும், அம்மாந்தர்களின் பின்புலத்திலுள்ள சகல இயக்கங்களும் உரிய பொருட்களும் மிக நுணுக்கமாகச் சித்தரிக்கப்பட வேண்டும். இலக்கியத்தில் இடம்பெறும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றிய இன வரைவியல் செய்திகள் அவ்விலக்கியத்தில் இடம் பெறும் பாத்திரங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் பொருத்தமான பின்புலத்தை உருவாக்க உதவுகின்றன.”( இனவரையிலும் தமிழ் நாவலும் – ஆ.சிவசுப்பிரமணியன்)
தோல்பாவைக்கூத்து அல்லது பாவைக்கூத்து (Tholpavakoothu) என்பது உயிரற்ற பாவைகளை, உயிருள்ள பாத்திரங்களைப் போல் இயக்கி நிகழ்த்தப்படும் ஒரு கூத்து ஆகும். பதப்படுத்தப்பட்ட ஆட்டுத் தோலில் வரையப்பட்ட வண்ணப்படங்களை விளக்கின் ஒளி மூலம் திரைச்சீலையில் அதன் நிழல் தெரியுமாறு ஆட்டி நிகழ்த்துவது தோல்பாவை கூத்து. திரைப்படம்,தொலைக்காட்சி ஊடகங்களால் மக்கள் நினைவுகளிலிருந்து மறந்து போன ஓர்க் கலையைப் பின்புலமாகக் கொண்டு மிக அற்புதமான நாவலை தமிழுக்குத் தந்திருக்கிரார் சைலஜாசக்தி.பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் குறிப்பிடுகிற அத்துனை அம்சங்களும் கலந்ததொரு நாவலாக ராவண நிழல் நூல் படைக்கப்பட்டிருக்கிரது
” நாவல் நிகழும் காலத்திற்கும் நாவல் எழுதும் காலத்துக்கும் இடையே ஒர் இடைவெளி ஏற்படுவது இயல்பு. இதை இட்டு நிரப்ப கள ஆய்வும் நூலறிவும் அவருக்கு தேவைப்படுகின்றன” என்பார் பேரா. ஆ. சிவசுப்பிரமணியன் (இனவரைவியலும் தமிழ் நாவலும், ப. 23). பேராசிரியர் குறிப்பிடுகின்ற இடைவெளி நிரப்பும் கள ஆய்வின் அனுபவத் திரட்டலாக ராவண நிழல் நூல் முறையான கள ஆய்வோடு,முக்கியத்தகவல்களை சேகரித்து நெய்த நாவலில் அளவான பாத்திரங்கள்,வாசகருக்கு தோதான மக்கள் மொழியில் குறிப்பாக பேச்சுமொழியில் எளிய நடையில் நகரும் புதினம்.கதைப்போக்கினூடாக தொன்மக் கதைகளை இணைத்திருப்பது புதினத்தின் சுவாரஸ்யம் கூட்டுவது.
பாவைக் கூத்து, தோற்பாவைக் கூத்து, தோற்பாவை நிழற்கூத்து என்ற பெயர்களில் இக்கலை வழங்கப்படுகிறது. தோலினாலான உயிரற்ற
பாவைகளை உயிருள்ள மாந்தர்களாய் மாற்றிக் கலைஞர்களால்
நிகழ்த்தப்படும் கூத்தாக தோற்பாவைக்கூத்து விளங்குகிறது.
மராட்டியைத் தாய்மொழியாகக் கொண்ட ராவ் என்னும் பிரிவினரால்,
குடும்பக் கலையாக இது நிகழ்த்தப்படுகிறது. திரைகட்டி அதன் பின்னே
தோற்பாவைகளை இயங்கச் செய்து இக்கூத்து நிகழ்த்திக் காட்டப்படுகிறது
தோற்பாவைக் கூத்தில் இராமாயணக் கதைகளே மிகுதியும்
நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. சிறுவர்களை மகி்ழ்விப்பதற்காக
உச்சிக்குடும்பன், உழுவத்தலையன் என்ற நகைச்சுவைப் பாத்திரங்களும்
கிடாய்ச் சண்டை (ஆட்டுக்கிடாய்கள் சண்டையிடுவது) என்னும்
நிகழ்ச்சியும் இடம்பெறுகின்றன.தோற்பாவைக் கூத்து சீனாவில் தோன்றிப் பிறநாடுகளுக்குப் பரவியதாகக் கூறப்படுகிறது
”மிகவும் சிக்கலான மனித தொடர்புகள் ஊடக தளம் தோல்பாவை கூத்து காரணம் தொழில் நுட்பங்கள் அல்ல முக்கியமான தொடர்புகள் காரணியான காலம்தான் நிகழ்காலம் தான் இங்கு உண்டு தோல்பாவை கூத்தை பொருத்தவரை இவை கிடையாது”
பல்வேறு சமூகங்களின் பலதரப்பட்ட பண்பாட்டுக் கதைகளை கலைஞர்கள் சொல்வதுதான் அக்கலையை சிறப்பானதாக ஆக்குவதாக அவர் நம்புகிறார்.- கேரளாவில் 40 வருடங்களாக தோல்பாவைக்கூத்து நடத்திவரும் கலைஞர் ராமச்சந்திர புலவர். “நம் பண்பாட்டு பாரம்பரியத்தை பாதுகாத்து எதிர்கால தலைமுறைகளுக்கு கடத்துவதில்தான் அச்சிறப்பு இருக்கிறது. தோல்பாவைக்கூத்தின் வழியாக நாங்கள் சொல்லும் கதைகளில் ஆழமான அர்த்தம் இருக்கிறது. மக்கள் நல்லவர்களாக மேம்பட அவை ஊக்குவிக்கிறது,” என்கிறார் அவர்.
தோல்பாவைக்கூத்து தொடர்பான பல வரலாற்றுப் பின்புல தகவல்கள் அனைத்துமே கதாபாத்திரங்கள் வழியாக வாசகருக்கு கடத்தப்படுவது சிறப்பெனில் கள ஆய்வுக்கு உதவிய அ.கா.பெருமாள் அவர்களையும் பாத்திரமாக்கியது புதிய உத்தி.கதைசொல்லலினூடாக தொன்மக் கதைகளும்,கிளியும் புளிய மரமும் பேசும் மாய யதார்த்தமும் உண்டுஒவ்வொரு அத்தியாயத்திலும் தோற்பாவைக் கலைக் குறித்த முக்கியத் தகவல் குறிப்புகள் வாசகனுக்கு ஆவண முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.
”தோல்பாவைக்கூத்தைப் பொறுத்தவரை இத்தனை கால அளவுகளில் அளவுகளில் ஆளும் அளவுகளிலும் பங்களிப்பு செய்த நூற்றுக்கணக்கான தொழில்முறை கலைஞர்கள் கிடையாது ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கிடையாது கோடிகளில் அடையாளம் பெறும் சந்தைகள் சார்ந்த வெளியீடுகள் கிடையாது சுருங்கச் சொன்னால் திரை வேறு திரையின் முந்தைய நிலைகள் என்று அடையாளம் காட்டப்படும் தொடர்புகள் தளங்கள் வேறு தோல்பாவை கூத்து கூத்து என்னும் சங்க கால தொடர்பு எண் ஓர் அங்கம் மற்ற இனக்குழு மாந்தர்கள் காலம்தோறும் தமிழ்நாட்டில் கொண்டு சேர்த்த கலை அம்சங்களால் வளர்ச்சி அடைந்த வியப்பூட்டும் தொடர்பு எண் திரை இருப்பதால் பாவிகளின் மேல் ஒளி பட்டு மேல் பிம்பங்கள் ஆடுவதால் நகர்வதால் திரைசார் படிமங்கள் தோற்றுவிக்கப்படுவதால் திரைக்கு நாடியாக ஒளி ஒலி இருப்பதால் மட்டும் தோல்பாவை கூத்து முந்தைய திரை வடிவம் ஆகாது”என்பார் பேரா.கோபாலன் ரவீந்திரன்.02
ஒரு புதினத்துக்கு காலப் பின்னணி மிக முக்கியமானது; ஏனெனில் அதை சார்ந்தே பாத்திரங்களின் மொழி, மற்றும் வர்ணனைகள் அமையும். மட்டுமன்றி, சமகாலத்தை படைப்பாக்குதல் ஒரு சவால்! நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் முகங்களும், முகமூடிகளுமே அவர்தம் வாழ்வியலும்,பண்பாட்டு,பொருளாதாரச் சிக்கல்களுமே ’ராவணநிழல்’ எனும் படைப்பிலக்கியத்திற்கு அடிப்படையாய் அமைகின்றன என்பதை எவருமே மறுக்கவியலாது.
நூல் வடிவமைப்பு மிகச்சிறப்பு .வாசகரை ஈர்க்கும் எளிய மொழியும், நேரடியான கதை சொல்லும் படிப்பவரிடையே ‘ராவண நிழல் ’ நாவலுக்கான சிறப்பான ஓரிடத்தை பெற்றுத்தரும் என நம்பலாம்!
ஒருக் கள்வனின் மனைவி சாபத்தினாலேயே பெரும் ஜமீனுக்கு இவ்வளவு இன்னல்களும் நேர்கிறது எனும் கதை முடிச்சு மிகப் பலவீனமானது. காட்சிப்படிமமாக விவரித்த காட்சியையே மீண்டுமொருமுறை உரையாடலில் விவரிப்பது சலிப்பூட்டும் கூறியதுகூறல்கள் ஒரு சிறியக்குறை,ஆனால் அதையெல்லாம் கடந்து தோல்பாவைகள் வாசகன் மனதில் கூடுகட்டிக் கொள்கின்றன.
உசாத்துணை: பேராசிரியர் கோபாலன் ரவீந்திரன் ,
தலைவர் தொடர்புகள் துறை தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூர் தோல்பாவை கூத்து என்னும் முந்தைய திரை: பொருளக பார்வை
தமிழ்த் திணை //ஆர் கருத்தரங்க கட்டுரை தொகுப்பு// பக்கம் 79 80
நூலில் இருந்து ஒரு பகுதி:
- நூல்: ராவண நிழல்
- பதிப்பகம்: காவ்யா
- ஆசிரியர்: இரா.சைலஜா சக்தி
- பக்கங்கள்: 491
- ஆண்டு: 2023
- விலை: Rs.540.00
