Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

கானலின் நீரோ, காட்சிப்பிழையோ?

This entry is part 10 of 14 in the series குடாகாயம்

பிரபஞ்சம் மெய்யாயிருப்பின், தானற்ற ஆழ்நிலையில்கூட அது உணரப்பட்டிருக்கும்; அந்நிலையில்கூட உணரப்படவில்லை என்பதால், அது ஒரு கனவுபோல உண்மையற்றதாகவே இருக்க வேண்டும்.-

சுலோகம் 234, விவேகசூடாமணி, ஆதி சங்கரர்.

மெய்யுலகில் காட்சிக்குப் பொருந்தும் இயற்பியல் விதிகள் ஓவியரைக் கட்டுப்படுத்துவதில்லை.  அவர் இயற்பியல் விதிகளுக்குக் கட்டுப்படும் காட்சியை வரையலாம், அல்லது விதிகளைத் தன்னிச்சையாக மீறிச் செல்லலாம்.  இருபதாம் நூற்றாண்டில் வலுப்பெற்ற ஆழ்மனப் பதிவியம் (Surrealism), சதுரவியம் (Cubism), கருத்துப்பதிவியம் (Impressionism) போன்ற கலை உத்திகளில் பெரும்பாலும் இயற்பியல் விதிகள் இயல்பாக மீறப்பட்டன.  சாத்தியமற்ற நிழல்கள், வண்ணங்கள், பிரதிபலிப்புகள், புற எல்லைகள் போன்றவற்றைப் பல நேரங்களில் பார்வையாளர் பொருட்படுத்துவதில்லை, ஆனால் ஓவியத்தின் மையக் கருத்தை அவர் எளிதாக உள்வாங்கிக் கொள்கிறார்.  இயற்பியல் தோற்றப்பிழைகள் பல நேரங்களில் ஓவியத்தின் கருத்தைச் சுருங்கச் சொல்லி உணர்த்த ஏதுவாகின்றன.  எனவே காட்சியின் பகுதிகளைத் தன் தெரிவுப்படி மாற்றிக்கொள்ளும் சுதந்திரம் ஓவியரின் கற்பனையை நீட்டிக்கப் பெரிதும் உதவுகிறது. 

பார்வையாளனின் மூளை படைப்பை எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும், அதை எப்படி அவருக்குக் கடத்துவது எனத் தனக்கென விதிகளை உருவாக்கிக்கொள்வதனால் நவீன ஓவியர் ஒரு தேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி (Neuroscientist) போலச் சிந்திக்கிறார்.  எதை வரைவது, எதை விடுப்பது அல்லது சிதைப்பது என்று அவர்  கருதும் பொழுது, அந்த விடுதலும் சிதைத்தலும் எப்படிப் பார்வையாளானின் மூளையால் இட்டு நிரப்பப்படும் அல்லது சரிகட்டப்படும் என்று அவர் தீர்மானித்தாக வேண்டும்.  மூளை எப்படிச் செயல்படுகிறது  என்பது நரம்பியல் கேள்வியல்லவா?

இயற்பியல் விதிகளை மீறும் கற்பனைகளை அவற்றின் உச்சங்களுக்கு இட்டுச் சென்றவர் ரெனே மக்ரிட் (René Magritte). இங்கே நாம் பார்ப்பது அவர் வரைந்த ‘மனித இயல்நிலை’ (La condition humaine) என்ற ஓவியத்தை. (உண்மையில் நாம் இங்கே காண்பது ஓவியரால் வரையப்பட்ட ஓவியத்தின் கணினி வரைவு!).   இந்த ஓவியத்தைப் பற்றி அறிந்துகொள்ளுமுன் படிப்பதைச் சற்று  நிறுத்திவிட்டு ஓவியத்தைப் பார்க்கக் குறைந்தது இரண்டு நிமிடங்கள் செலவிடுங்கள். அதைப்பற்றி உங்கள் மனதில் என்னென்ன தோன்றுகின்றன என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

படம் -1 ‘மனித இயல்நிலை’ (La condition humaine), ரெனெ மக்ரிட், 1933-ல் வரைந்த தொடர் ஓவியங்களுள் ஒன்று. 

இது 1933-ஆம் ஆண்டு பெல்ஜியன் ஓவியர் ரெனெ மக்ரிட்டால் வரையப்பட்டது. 100 செமி × 81 செமி அளவுள்ள இந்த ஓவியம் திரைச்சீலையில் நெய்ப்பூச்சு கொண்டு வரையப்பட்டது.  தற்பொழுது அமெரிக்காவின் தேசிய கலைக்காட்சிக் கூடத்தில் (National Gallery of Art, Washington DC) பார்வையில் இருக்கிறது.  ஓவியம் குறித்து மக்ரிட் இப்படிச் சொன்னார்; “அறையினுள் சன்னலின் முன்னே நான்  தான் மறைக்கும் காட்சியை காட்டுகின்ற ஒரு ஓவியத்தை வைத்த்திருக்கிறேன்.  எனவே ஓவியத்தில் இருக்கும் மரம் அதன் பின்னே வெளியில் இருக்கும் மரத்தை மறைக்கிறது.  பார்ப்பவரைப் பொருத்தவரை அது என் ஓவியத்தில் இருக்கிறது, கூடவே அது மெய்யான வெளிக் காட்சிப்பரப்பில் இருக்கிறது”

ஓவியத்தினுள்ளே ஓவியம் என்ற கருத்துருவாக்கம் ரெனெ மக்ரிட்டின் பல படைப்புகளில் திரும்பத் திரும்ப வருகிறது.  மனித மனம்  எப்படிச் செயல்படுகிறது என்பதைக் கேள்விக்குள்ளாக்க அவர் இந்தக் கருத்தைக் கையாண்டார்.  இன்னொரு சமயத்தில் அவருடைய நண்பரும் கவிஞருமான அக்கில் ஷாவே (Achille Chavée) என்பவருக்கு எழுதிய கடிதத்தில் மேற்க்கொண்டு இந்த ஓவியத்தை விவரிக்கிறார்; “இப்படித்தான் நாம் ஒற்றை உருவமைப்பில் நமக்கு வெளியிலிருக்கும்  உலகைப் பார்க்கிறோம்.  இதைப்போலவே கடந்தகால நிகழ்வுகளை நிகழ்காலத்தில் நடப்பனபோல நினைவுபடுத்திக் கொள்கிறோம்.  காலமும் வெளியும் அவற்றின் முக்கியத்துவத்தை இழக்க,  தினசரி அனுபவங்களே நமக்குப் பெரிதாகின்றன…”

படம் -2 ஓவியர் ரெனெ மக்ரிட் (René Magritte, 1989-1967)

ரெனே மக்ரிட்டின் பல ஓவியங்கள் இப்பொழுது மூளை, நரம்பியல், உளவியல், பார்வை அறிவியல், கணினி வரைகலையியல், போன்ற துறைகளின் முன்னணி ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன.  ரெனே 1898-ஆம் ஆண்டு பெல்ஜியத்தின் லெஸின் (Lessines) என்ற ஊரில் பிறந்தார். அவருடைய ஆரம்ப வாழ்க்கை குறித்த தகவல்கள் நமக்கு அதிகம் கிடைக்கவில்லை. பதினோறாவது வயதில் ஓவியம் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.  அவருக்குப் பதின்மூன்று வயதிருக்கும்பொழுது அவருடைய தாய் ஊருக்கு அருகிலிருந்த ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்துகொண்டார்.  இரண்டு வாரங்கள் கழித்து அவருடைய சடலம் மீட்டெடுக்கப்பட்ட பொழுது ரெனே ஆடையால் மூடப்பட்ட தன்னுடைய தாயின் சடலத்தைப் பார்க்க நேரிட்டது. அந்த பிம்பம் அவருடைய மனதில் படிந்துபோக பின்னாட்களில் அவருடைய பல ஓவியங்களில் துணியாலும், பிற பொருட்களாலும் மறைக்கப்பட்ட முகங்களைக் கொண்ட ஓவியங்களை வரைந்தார்.  கருப்பொருட்களையும் ஒளியையும் நேரடியாகச் சித்தரிக்காமல், அவை மனதில் தோற்றுவிக்கும் உணர்வுகளை வரையும் வெளிப்பாட்டியம் (Impressionism) அந்நாட்களில் மிகவும் பிரபலமாக இருந்தது. ரெனேயும் ஆரம்பகால ஓவியங்களில் அதே உத்தியையே கையாண்டார்.  பின்னர் ஓவியத்தின் கருப்பொருட்களைப் பகுதிகளாக்கி அவற்றை வெவ்வேறு கோணங்களில் ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கியும், ஒன்றையொட்டி ஒன்றாகவும் வரையும் க்யூபிஸ முறையில் சில ஓவியங்களை வரைந்தார்.  1920-ஆம் ஆண்டு பெல்ஜியன் நாட்டுப் போர்ப்படையில் சேவையாற்றினார். அதன்பின் தன் சிறுவயதுத் தோழி ஜார்ஜெட் பெர்கரை (Georgette Berger) மணந்தார். பிறகு சில வருடங்கள் ஒரு விளம்பரக் கலைஞராக வேலை செய்தார். அப்பொழுது பிரஸல்ஸ் நகரில் அவருடைய ஓவியங்களுக்குப் பெரிய வரவேற்பு ஏதுவும் கிடைக்கவில்லை.  எனவே, பாரிஸிக்கு இடம்பெயர்ந்தார். அங்கே  ஆழ்மன வெளிப்பாட்டியம் (Surrealism) என்ற இயக்கம்  இலக்கிய, கலை, ஓவியத் துறைகளில் ஒரு சூறாவளியைப்போல வலுப்பெற்று வளர்ந்தது. மக்ரிட்க்கு பல சர்ரியலிஸ நண்பர்கள் கிடைத்தார்கள். அதன்பின் அவருடைய ஓவியங்கள் முற்றிலும் புதிய வடிவம் கொள்ளத் துவங்கின.  1930-ல் பெல்ஜியம் திரும்பிய மக்ரிட் விளம்பரத் துறையில் மீண்டும் வேலைக்குச் சேர்ந்தார்.  இரண்டாம் உலகப்போருக்குப் பின் அவருடைய ஓவியங்கள் பரவலான வரவேற்றைப் பெறத்தொடங்கின.  1967-ஆம் ஆண்டு புற்றுநோயினால் மக்ரீட் இறந்துபோனார்.  இப்பொழுது சர்ரியலிஸ ஓவியங்கள் என்றாலே நம் நினைவுக்கு வருபவர்கள் சால்வடோர் டலியும், ரெனெ மக்ரிட்டும்தான். இருவரும் முற்றிலும் மாறுபட்ட வரைதல் உத்திகளைப் பயன்படுத்தினார்கள். 

மக்ரிட்டின் ஓவியங்கள் மற்ற சர்ரியலிஸ ஓவியங்கர்களின் படைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன.  சால்வடோர் டலி, ஹுவான் மிரோ (Joan Miró), ஈவ் டாங்கி (Yves Tanguy) போன்ற பிற முன்னணி ஓவியர்கள் தங்களுடைய வரைதல் உத்திகளில் பெரும் கவனம் செலுத்தினார்கள்.  மாறுதலாக, மக்ரிட் ஓவிய உத்திகளுக்கு மேலாக கருப்பொருட்களின் அமைப்பிலேயே முழுக்கவனம் செலுத்தினார்.  எனவே மக்ரிட்டின் ஓவியங்களில்,  பொதுவில் சர்ரியலிஸத்தில் தோன்றும் விசித்திரமான, சிக்கலான வடிவங்களைக் காணமுடியாது.  மாறாக சாதாரணக் காட்சியின் ஒரு பகுதியை மறைப்பது, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பொருட்களை சேர்த்து வரைவது போன்ற உத்திகளால் நம் மனதில் தோன்றும் எண்ணங்களைத் தட்டியெழுப்ப மக்ரிட் முயன்றார்.  அவர் ஒரு ‘சர்ரியலிஸ ஓவியர்’ என்று அழைக்கப்படுவதைக் காட்டிலும், தானொரு ‘காட்சிக் கவிஞர்’ (Visual Poet)  என்று சொல்லிக்கொள்வதிலேயே பெருமை கொண்டார். 1924-ஆம் ஆண்டு பாரீஸில் ஆந்ரே பிரெடான் (André Breton) என்ற எழுத்தாளர் ‘ஆழ்மன வெளிப்பாடு அறிக்கை’ (Manifeste du surréalisme) என்ற கட்டுரையை வெளியிட்டார். அது சர்ரியலிஸத்தின் வரையறை, நோக்கம், போக்குகள், போன்றவற்றை உரைநடை மற்றும் கவிதைகளின் உதாரணங்களுடன் அறுதியிட்டது.  அதன் அடிப்படையில் பாரீஸை மையமாகக் கொண்டு செயற்பட்ட  பல முன்னணி எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், புகைப்படக் கலைஞர்கள் ஒன்று திரண்டனர்.  இவர்களில் சால்வடோர் டலி, மாக்ஸ் எர்ன்ஸ்ட், ஈவ் டாங்கி போன்ற ஓவியர்கள் முக்கியமானவர்கள்.   பிரெடான் வரையறுத்த ஆழ்மனத் தானியக்கம் (Surrealist automatism) என்பது கலைஞன் தன் வெளிப்பாட்டின் மீதான கட்டுப்பாட்டை முழுமையாகப் புறந்தள்ளி,  சுயாதீனமில்லாத தன் ஆழ்மனத்தின் வெளிப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  இதை மந்திரமாகக் கொண்ட சர்ரியலிஸ்ட்கள், ஓவியங்களில் ஆழ்மனத்தின் எண்ணவோட்டங்களைக் காட்ட கருட்பொருள்களை வடிவ மற்றும் பார்வைக்கோண சிதைவுகளுடன் வரைந்தார்கள்.   அப்பொழுது மிகக் கவனம் பெற்றுவந்த சிக்மண்ட் ஃப்ராய்டின் மனோதத்துவக் கோட்பாடுகளும் சர்ரியலிஸ்ட் கலைஞர்களை வெளியே இருந்து வழிநடத்தியது என்று சொல்லலாம்.  இவர்கள் ஒரு சர்ரியலிஸக் குழுவாக இணைந்து செயல்பட்டார்கள்.

பிரெஸல்ஸில் வாழ்ந்த மக்ரிட் இதற்கெல்லாம் வெளியே, அந்தக் குழுவுடன் மேம்போக்கான தொடர்பிலேயே இருந்தார்.  மக்ரிட் மிக விரைவாக ஓவியங்களை வரைபவராக இருந்தார்.  அவர் நானூறுக்கும் மேற்ப்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறார். சில சமயம் ஒரே நாளில் ஒரு ஓவியத்தை வரைந்து முடித்திருக்கிறார். அவரைப் பொருத்தவரை தத்துவத்தை முன்வைப்பதற்காகத்தான் ஓவியங்களை வரைந்தாரே ஒழிய, ஓவியத்த்தில் தத்துவத்தைச் சொல்ல முற்படவில்லை.   எனவே மக்ரிட்டை ஓவியத்தைப் பயன்படுத்திய மெய்யியல் அறிஞர் என்று சொல்லலாம்.  அவருடைய படைப்புகள் நம் இதுநாள் வரை கற்ற விஷயங்களை மறந்து காட்சியைக் காணும்பொழுது நம் ஆழ்மனதில் என்ன தோன்றுகின்றது என்பதை அறிவதன் மூலமான அதிர்ச்சியைத் தூண்டுகின்றன. 

படம் -3 ‘கூட்டுக் கண்டுபிடிப்பு’ (The collective invention), 1934-ஆம் ஆண்டு ரெனெ மக்ரிட் வரைந்த ஓவியம். திரைச்சீலையில் நெய்ப்பூச்சு கொண்டு வரையப்பட்ட 73.5 x 97.5 செமீ அளவுள்ள இந்த ஓவியம் இப்பொழுது ஒரு தனியாரின் தொகுப்பில் இருக்கிறது. 

உதாரணத்திற்கு அவருடைய “கூட்டுக் கண்டுபிடிப்பு” என்ற ஓவியத்தைப் பார்க்கலாம்.   இந்த ஓவியத்தைப் பார்க்கும் யாரும் இதன் மையக் கருப்பொருள் அழகாக இருக்கிறது என்று நினைக்கமாட்டார்கள்.  இது பெண்ணுடலும் மீனும் கலந்த வடிவம்.  மச்சக்கன்னி (mermaid) என்ற இந்தக் கற்பனை பல நூறு ஆண்டுகளாக ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றின் புராணங்கள், நாட்டார் கலைகள், செவ்வியல் படைப்புகள், ஓவியங்கள், கவிதைகள், ஒபராக்கள்,  சிம்பொனிகள் போன்றவற்றில் திரும்பத் திரும்ப வருகிறது. இவற்றில் பெரும்பாலானவை கிளர்ச்சியூட்டும் அழகிய உருவமாகவே சொல்லப்பட்டிருக்கின்றது.  மச்சக்கன்னியின் பல ஓவியங்கள் அவற்றின் அழகுணர்வுக்காகப் போற்றப்படுகின்றன.  ரெனெ மக்ரிட் வரைந்த இந்த ஓவியமும் மச்சக்கன்னிதான்.  இதை நாம் பார்க்கும்பொழுது அதிர்ச்சி, வெறுப்பு, அல்லது குறைந்த பட்சம் கரையொதுங்கிய மீனின் மீது எழக்கூடிய இரக்கம் போன்ற உணர்வுகள்தாம் வெளிப்படுகின்றன.  மக்ரீட்டின் பல ஓவியங்கள் சாதாரணப் பொருட்களில் பொதிந்து கிடக்கும் விசித்திரங்கள் வெளிப்படுகின்றன.  இங்கே உலகம் முழுவது மனிதக் கற்பனை உருவாக்கிய மச்சக்கன்னி திருப்பிப் போடப்பட்டுள்ளது;  இது மீனின் மேலுடலும், பெண்ணின் கீழுடலும் கொண்டது.  அழகு என்று நாம் வரையறுப்பதை எதிர் கோணத்தில் முன்வைப்பதன் மூலம் முற்றாக நீக்கியிருக்கிறார்.  இன்னும் ஒருபடி மேலே போனால், இது கரையில் ஒதுங்கிக் கிடக்கிறது. பொதுவில் மச்சக்கன்னி உயிர்ப்புடன் பேரழகனான ஆண்மகனைக் கவர்ந்திழுக்கும் வடிவிலேயே சொல்லப்படும். இங்கே கரையில் கிடத்தப்பட்ட உருவத்தில் கவர்ச்சி சற்றும் கிடையாது, அவலம்தான் மேலோங்குகிறது.  நூற்றாண்டுகளாக நம் கூட்டுக் கண்டுபிடிப்பில் உருவான மாபெரும் கலைவடிவத்தை, சற்று திருப்பி வைப்பதன்மூலம் அதன் மீதான கேள்விகளை நம் மனதில் எழுப்புகிறார் மக்ரிட்.  மச்சக்கன்னியின் அழகு மீனும் பெண்ணும் கலந்த வடிவம் என்பதாலா, அல்லது அதன்மீது நம் கற்பனைகள் கட்டியெழுப்பும் உணர்வுகள்தானா? 

படம் – 4: பெண்ணின் மேலுடலும் மீனின் வால் பகுதியும் கொண்ட மச்சக்கன்னியின் உருவம் அழகும் கவர்ச்சியும் பொருந்தியதாகவே எல்லா நாடுகளிலும் காலந்தோறும் சித்தரிக்கப்பட்டுள்ளது.  தாய்லாந்தின் வாட் ஃப்ரா கயிவ் (Wat Phra Kaew) என்ற கோவிலின் சுவரோவியத்தில் சுவண்ணமச்சா (Suvannamaccha) இராமருக்கு உதவக் கடற்பாலம் கட்டும் அனுமாரைத் தன் அழகினால் கவர முயலும் காட்சி. 

அறிவியலின் அடிப்படையும் இதுதான்; நாம் காலம் காலமாக அறிந்தவற்றை கேள்விகளுக்கு உள்ளாக்குவது.  1976-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஹாரி மெக்குர்க் (Harry McGurk), ஜான் மெக்டொனால்ட் (John MacDonald என்ற இரண்டு உளவியல் அறிஞர்கள் ‘கேட்கும் உதடுகளும் காணும் குரலும்’ என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார்கள் [1].  அதன் அடிப்படையில் எழுந்த புரிதல் இப்பொழுது ‘மெக்குர்க் விளைவு’ (McGurk effect) என்று அழைக்கப்படுகிறது.  ஒரு ஒலியை அதற்குத் தொடர்பில்லாத, ஆனால் நெருக்கமான வேறொரு காட்சியின்மீது பொருத்துவதன் மூலம் அதை பார்க்கும்+கேட்கும் பொழுது மாயை உண்டாகிறது.  இங்கே இருக்கும் காணொளித் துண்டு அதை அற்புதமாக விளக்குகிறது.  இதில் விசேடம் என்னவென்றால் நமக்கு இதைப் பற்றி நன்றாக தெரிந்தபொழுதும், இந்தக் காணொளியை எத்தனைமுறை பார்த்தாலும்+கேட்டாலும், நம்மால் இந்த மாயையிலிருந்து விலகமுடிவதில்லை. 

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
-மஹாகவி பாரதியார்

இனி மீண்டும் ‘மனித இயல்நிலை’ (La condition humaine) ஓவியத்துக்குத் திரும்பலாம்.   இது ‘ஓவியத்தினுள்ளே இருக்கும் ஓவியம் எதை மறைக்கிறதோ அதையே காட்டும்’ முரண்பாட்டைக் கொண்டது.  இது உண்மைக் காட்சிக்கும் ஓவியத்துக்கும் இடையே உள்ள பிரிவை நம் மூளை பகுத்தறிவதில் இருக்கும் சிக்கலைக் காட்டுகிறது.  நமக்குக் காட்சியையும் அது மனதில் தோற்றுவிக்கும் வர்ணனைகளையும் பிரித்தறிவதில் இருக்கும் குழப்பங்களை உணர்த்துகிறது.   இதில் வரைபலகை ( Easel) எதை மறைக்கிறதோ அதைக் காட்டுகிறது.  அதாவது ஒளிபுகாத வரைபலகை ஒளி ஊடுருவும் கண்ணாடியைப் போலச் செயல்படுகிறது.   ஒளிபுகா வரைபலகை அங்கே இருக்கிறது என்று காட்ட அவர் ஓவியத்தில் ஆறு நேரடிக் கருவிகளைக் கையாண்டிருக்கிறார். சன்னல் திரைக்கும் வரைபலகையின் விளிம்புக்கும் இடையே இருக்கும் தெளிவான எல்லைகள்  (படத்தில் 1, 2 எனக் குறிக்கப்பட்டவை), பலகையில் வரைசீலையைத் தாங்கியிருக்கும் கிளிப் (3), வரைபலகையின் மேல் மற்றும் கீழ் விளிம்புகள் (4,5), வெள்ளையாக இருக்கும் வரைபலகையின் வலதுபுற ஓரம் (6). இவை எல்லாவற்றையும் விட அவர் காட்டமல் மறைத்திருப்பதான் மிகவும் முக்கியமானது; ஒளிபுகாத வரைபலகை முற்றாக மறைக்கப்பட்டிருக்கிறது.  

படம் – 5  அறையினுள்ளே இருக்கும் வரைபலகையில் வரையப்பட்ட ஓவியமும், அதன் தொடர்ச்சியாக சன்னலுக்கு வெளியே இருக்கும் காட்சியும் ஒன்றுடன் ஒன்று அற்புதமாக இயைந்துபோகின்றன. ஆனால் வரைபலகை இருப்பதைக் காட்ட ஓவியர் மக்ரிட் பல துப்புகளைக் கொடுத்திருக்கிறார். 

வரைபலகையில் இருக்கும் திரைச்சீலையில் (canvas) மக்ரீட் இரண்டு உத்திகளைக் கையாண்டிருக்கிறார்.   முதலாவதாக,  வரைபலகையில் இருக்கும் காட்சி சன்னலுக்கு வெளியேயும் தொடர்கிறது.  இது இயற்பியல் விதிகளுக்கு முரணானது.   உதாரணமாக, படத்தில் A என்று குறிக்கப்பட்டிருக்கும் புதர்களை உற்றுக் கவனியுங்கள். வரைபலகையில் இது ஓவியருக்கு மிக அருகில் இருக்கிறது.   வரைபலகையின் விளிம்புக்கு வெளியேயும் அது தொடர்கிறது; இங்கே இது ஓவியரைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறது (வரைபலகைக்கு அடுத்தது சன்னல், தொடர்ந்து புல்வெளி, நடைபாதை இவற்றுக்கு பிறகுதான் புதர் இருக்கிறது).  ஆனால் வெளியில் இருக்கும் அதே அளவில்தான் வரைபலகையிலும் இருக்கிறது. (நம் பார்வையில் தொலைவிலிருக்கும் காட்சிகள் சிறிதாகத்தான் தெரியும்).  இதே முரணை அவர் வெகுதொலைவிலிருக்கும் மலையிலும், மேகக்கூட்டங்களிலும் பயன்படுத்தியிருக்கிறார். 

படம் – 6  கனிஸா முக்கோணம் (Kanizsa Triangle).  முழுமையற்ற மூன்று வட்டங்களையும், மூன்று சோடி நேர்க்கோடுகளையும் காணும் நாம் இங்கே மூன்று வட்டங்கள், இரண்டு முக்கோணங்கள், ஒரு நட்சத்திர வடிவம் இருப்பதை எளிதில் ஊக்கிக்கிறோம். சர்ரியலிஸ, க்யூபிஸ ஓவியர்கள் இந்த பார்வை அறிதிறனைத் திறமையாகப் பயன்படுத்தி காட்சிக்கு மேற்பட்ட கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். 

இரண்டாவதாக, சன்னல்திரை.  வரைபலகையின் கீழும் மேலும் அது இருப்பதால் அது வரைப்பலகையின் பின்னால் இருக்கிறது என்பதை நாம் ஊகித்துக் கொள்கிறோம்.  பார்வை அறிவுதிறனில் (visual cognition) துண்டான வடிவங்களால் பிற வடிவங்களை ஊகிக்கும் திறனை ஆராய்ந்திருக்கிறார்கள்.  இதைவிளக்க கனிஸா முக்கோணம் (Kanizsa Triangle) என்ற வடிவவியல் அமைப்பு உதவுகிறது [3].  இதில் மூன்று குறைபட்ட வட்டங்களும், ஆறு கோடுகளும்தான் இருக்கின்றன. ஆனாலும் நம் மூளையில் மூன்று முழுமையான வட்டங்கள், கோடுகளால் தீர்மானிக்கப்படும் (கறுப்பு விளிம்புகளைக் கொண்ட) ஒரு முக்கோணம், அதன் மீது ஒரு வெள்ளை முக்கோணம், பிறகு இந்த இரண்டு முக்கோணங்களையும் சேர்த்துப் பார்ப்பதால் தோன்றும் ஆறு மூலைகளை உடைய நட்சத்திரம் என்று பல வடிவங்களை நாம் எளிதில் ஊகிக்க முடிகிறது.  இதில் விடுபட்ட பகுதிகள் நம் பார்வையில் இல்லை என்றாலும் நம் மூளை இவற்றை அறிவதில் எந்தக் குழப்பமும் இல்லை.  ஒருபடி மேலே சென்று பார்த்தால் இதில் வெள்ளை முக்கோணம் கறுப்பு முக்கோணத்தின் மேலே இருக்கிறது, எனவே நமக்கு இந்த எளிதான துண்டுகளால் முப்பரிமாணத்தைக்கூட அறியமுடிகிறது.    இந்த மறைபொருள் காணும் ஒளியியல் மாயையை (Optical Illusion) மக்ரீட் திறமையாகப் பயன்படுத்தியிருக்கிறார்.  வரைபலகை ஒளிபுகும் ஊடகத்தைப்போல அதன் பின்னால், சன்னலுக்கு வெளியே இருக்கும் இயற்கைக்காட்சியைத் தெளிவாகக் காட்டுகிறது. அதே சமயத்தில் ஒளிபுகா ஊடகமாக, வலப்புற சன்னல் திரையை மறைக்கிறது.  ஆனாலும் இவையெல்லாம் நம் மூளைக்கு இதெல்லாம் அவசியமில்லை. அது பிழையான தகவல்களைத் தானாக இட்டு நிரப்பிக்கொள்ளும்.  

இதைச் சாத்தியமாக்குவது அவரது வரைகலை மேதைமை; அது ஓவியத்தைத் துல்லியமான வண்ண மாறுபாடுகளுடன் (Colour Contrast) வரைந்தது.  ஓவியத்தில் புல்வெளி மற்றும் தாவரங்களின் பச்சை, நடைபாதையின் மண்ணின் பழுப்பு நிறம், வானத்தின் நீலம், மேகங்களின் விளிம்புகள் போன்றவற்றை இன்னும் சற்றே அதிக வண்ண மாறுபாடுகளுடன் வரைந்திருந்தால் நமக்கு மேலே சொன்ன தொலைவு அதிகமாகும் பொழுது பொருட்கள் சிறிதாகத் தோன்றும் என்ற காட்சிக்கோணத்தில் அவர் செய்த குழப்பம் மிக எளிதாக வெளிப்பட்டுவிடும்.  சொல்லப்போனால் திரைச்சிலையின் ஓவியம் அறையின் உள்ளிருக்கும் விளக்குகளாலும், வெளியே இயற்கைப்பரப்பு சூரியனாலும் ஒளியூட்டப்பட்டிருக்கின்றன.  ஆனாலும் இவை இரண்டுக்கும் இடையே எந்தவிதமான நிறங்காட்டு (Colour Rendering) மாறுபாடுகளும் இல்லை. 

ரெனெ மக்ரிட்டின் இந்த உத்திகள் இன்றுவரை மூளை-நரம்பியல், கணினி வரைகலை, பார்வை அறிவியல், ஒளியியல் உள்ளிட்ட பல துறை அறிவியலாளர்களால் ஆராயப்பட்டு வருகிறது [4].  ரெனே ‘மனித இயல்நிலை’ என்ற தலைப்பில் இன்னும் சில ஓவியங்களை வரைந்திருக்கிறார்.  இதைப்போலவே ‘சிறைப்பட்ட அழகு’ (La Belle Captive) என்ற தலைப்பில் “காணும் பொருட்கள் காணக்கூடிய பிறபொருட்களை எப்பொழுது மறைக்கின்றன” என்ற தனது கோட்பாட்டை நிறுவ வரைந்திருக்கிறார். இவை எல்லாவற்றிலுமே  ஓவியத்தினுள்ளே ஓவியம் என்ற உத்தியும், மறைக்க வேண்டியவற்றை காட்டும் உத்தியும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.  ஆனால் இவை வெறும் மேம்போக்காக நம்மைக் களிப்பூட்டுவதற்காக வரையப்பட்டவை அல்ல.  மக்ரிட் தீர்க்கமான அமைப்புகளுடன்  நமக்கு நன்றாக பரிச்சயமான பொருட்களை சற்றே மாற்றியமைப்பதன் மூலமும், அவற்றின் பண்புகளை மாற்றியமைப்பதன் ஊடாகவும், நம் ஆழ்மனதில் தோன்றும் சர்ரியலிஸ எண்ணங்களை நாமே அறிந்துகொள்ளத் தூண்டுகிறார்.  பிற சர்ரியலிஸ ஓவியர்கள் தங்களுடைய ஆழ்மனக் கற்பனைகளையே வரைந்தபொழுது மக்ரிட் நம் ஆழ்மனக் கற்பனைகளைத் தட்டியெழுப்பும் தூண்டுகோல்களை வரைந்தார். மக்ரிட்டின் மேதைமை நாம் காலந்தோறும் அறிந்தவற்றைச் சற்றே கலைத்து மாற்றியமைப்பதன் மூலம் அதில்  காணுதல், அறிதல், உணர்தல், அழகு, தத்துவச் சிந்தனை எனப் பல்லடுக்கு ஆழ்மன எண்ணங்களை நம்மில் ஊற்றெடுக்க வைக்கிறது

மேலதிக வாசிப்புக்கு

[1] McGurk, H., MacDonald, J. Hearing lips and seeing voices. Nature, Vol. 264, Page 746 (1976). 

[2] Tiippana K. What is the McGurk effect?  Frontiers in Psychology, Vol. 5, Page 725, (2014).

[3] Kanizsa, G., and W. Gerbino, 1982. ‘Amodal Completion: Seeing or Thinking?’ in Organization and Representation in Perception, J. Beck (Ed.)  Lawrence Earlbaum: NJ. pp. 167–190.

[4] Hamer, R.D. The Surreal Art of Rene Magritte and Visual Processing: Analysis of Two Iconic Paintings, Article ID: HVEI-205, Electronic Imaging, Vol. 36, Page 205, (2024).




குடாகாயம்

பாவம், மரணம், நரகம் இருளையும் ஒளியையும் வென்றவன்
Exit mobile version