- கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை
- இமானுவல் கன்ட்டின் அழகியல் தத்துவம்
- இமானுவல் கன்ட்டின் உணர்வோங்குப் பெருநிலை
- கிரேக்கத்து ஸிஸிபஸும் கேரளத்துப் ப்ராந்தனும் – அல்பேர் கமூவின் அபத்தவாதம்
- சபலங்களைக் கடத்தல்
- எங்கிருந்து வந்தோம்? நாம் யார்? நாம் எங்கு செல்கிறோம்?
- எதற்காக உயிரைத் துறக்கலாம்? – 1
- எதற்காக உயிரைத் துறக்கலாம்? – 2
- பாவம், மரணம், நரகம்
- கானலின் நீரோ, காட்சிப்பிழையோ?
- இருளையும் ஒளியையும் வென்றவன்
- கண்டுணரும் நொடிப்பொழுதின் காட்சி
- ஒழுங்கின்மையின் உன்னதம்
- காலம் எரித்ததும், கணினி மீட்டதும்
ஜெர்மானிய அறிஞர் இம்மானுவல் கன்ட் (Immanuel Kant) உலகின் மிகச் சிறந்த தத்துவ ஞானிகளுள் ஒருவாராக அறியப்படுகிறார். அவரது தத்துவம் நுட்பச் செறிவும் மொழிக்கூர்மையும் கொண்டது. நெறிமுறைகள் குறித்த அவருடைய தத்துவப் படைப்புகள் இன்றளவும் சமூகத்தையும் அன்றாட நடப்புகளையும் பகுத்தறிய உதவுகிறன. மெய்மை, அறிவு, அழகியல் இவற்றைக்குறித்த வரையறைகள் அவருடைய அறிவாய்வியல் (epistemology) ஆக்கங்களில் முக்கியமானவை. அழகுணர்வு மற்றும் இறையுணர்வு குறித்த அவரது தத்துவ வரையறைகள் ஓவியம், கலை, இசை, இலக்கியம் உள்ளிட்ட பல ஆக்கங்களை இன்று நாம் அறுதியிடுயும் முறையில் தவிர்க்கமுடியாத தாக்கங்களைச் செலுத்தியிருக்கிறன.
கன்ட்டின் ‘தீர்ப்பின் மீதான விமர்சனம்’ (Critique of Judgement) ஒரு முழுப்புத்தகம் அளவுக்கு நீளும் தத்துவக் கட்டுரை. இதில் அவர் அழகியலை வரையறுக்கும் படிநிலைகளை முன்வைக்கிறார்.
நாம் ஒரு காட்சியைக் காணும்பொழுது கீழ்க்கண்ட படிநிலைகள் நிகழ்கின்றன:
- நம் புலன்கள் புற உலகிலிருந்து பல தரவுகளைப் பெறுகின்றன. உதாரணமாக அதிகாலையில் ஒரு கடற்கரையில் நிற்கும்பொழுது பெருமளவிற்குக் கறுத்த வானமும், அடிவானத்தில் தெறித்தெழும் சிவப்பையும், தொலைவில் ஒரு படகையும் காண்கிறோம். அலைகளில் இரைச்சல் நம் காதுகளில் விழுகிறது. கூடவே, கடற்காற்று நம் சருமத்தைக் குளிர்விக்கிறது.
- நம் மனம் இவை எல்லாவற்றையும் ஒருசேர கிரகித்து, நடப்பை உணர முயல்கிறது.
இதைக் கன்ட்டின் தத்துவார்த்த மொழியில் சொன்னால்: புலனைச் சேரும் புறஉணர்வுகள் நம் அகமனதினால் வடிவம் பெறுகின்றன.
- இவை ஒருசேர நடக்கும்பொழுது நம் மனம் இதனை நமக்குப் பரிச்சயமான ஒரு கருத்தாக்கத்துடன் பொருத்திப் பார்க்கிறது. அடிவானச் சிவப்பும், அலையோசையும், குளிர்க்காற்றும் நாம் சூரியோதயத்தைக் காண்கிறோம் என்றும் நமக்குச் சொல்கின்றன. நம் கண்முன்னே பரந்து விரிவது பாலைவனம் இல்லை; பெருங்கடல் என்று நிச்சயிக்கிறோம். அந்நிலையில் இதற்கு முன் நகர்ந்தால் நாம் கடலில் மூழ்குவோம் என்றும் அறிகிறோம்.
நமக்கு எப்பொழுதும் இத்தகைய நிச்சய உணர்வுகள் தேவையாக இருக்கின்றன. அது நமக்கு ஒரு மனநிறைவைத் தருகின்றது. இப்படி எதிலும் நிறைவைத் தேடுவதை மனித மனத்தின் இயல்பு என கன்ட் முன்வைக்கிறார்.
- இது இத்துடன் நிற்பதில்லை. நாம் வானத்தையும், மணலையும், கடலையும், அலைகளையும் தாண்டிய ஒன்றைக் காண்பதை அறிகிறோம். அதையே நாம் சூரியயோதயமாக அறிகிறோம். அலைகள் ஏன் தீராத இயக்கத்தில் இருக்க வேண்டும்? குளிர்காற்று எங்கிருந்து வருகிறது? சூரியன் தோன்றுமுன் ஏன் அடிவானம் சிவக்கிறது? இவற்றில் பலவற்றை நாம் அறிவதில்லை. (தற்கால அறிவியல் இவற்றில் பலவற்றுக்கு நமக்கு விடை சொல்லிவிட்டது. ஆனால், மேலதிகமான கேள்விகளும் கூடவே எழும்பிக் கொண்டிருக்கின்றன. அலைகளின் உயரம், இரைச்சலின் அதிர்வெண், ஏன் இன்றைக்குக் கடற்காற்று இத்தனை குளிர்ச்சி? என்று பல புதிய கேள்விகள்). இவைகளுக்கு விடை தெரியாவிட்டாலும் நாம் அந்தக் காட்சி அழகாக இருப்பதாக உணர்கிறோம்.
- வெறும் கடல், அலை, மணல், சிவப்பு, குளிர் இந்த வார்த்தைகளைக் கடந்து காட்சி விரிகிறது. ஒரு நிலையில் அதை விவரிக்க நாம் வார்த்தைகளற்று நிற்கிறோம். புலன்களின் உணர்வும் மூளையின் கிரகிப்பும் ஒருங்கே களிநடம் புரிகின்றன. இந்த நடனம் நமக்கு மகிழ்வைத் தருகிறது. நம் பகுத்தறிவைப் புறந்தள்ளி உணர்வுகள் மேலோங்குகின்றன. இதுவே பேரழகு; இதை நாம் பேரானந்தமாகச் சொல்கிறோம்.
படம் -2: ‘சூரியோதயம், கருத்தோவியம்’ (Impression, soleil levant), க்ளாட் மோனே (Claude Monet), 1872, சீலையில் நெய்ப்பூச்சு ஓவியம். இப்பொழுது Musée Marmottan Monet, Paris அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
- இந்தப் பேரழகிற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அது என்ன என்று அறிந்துகொள்ள நாம் அறிவியலின் துணையை நாடுகிறோம். கன்ட் ‘பெருநோக்கம்’ (purposefulness) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ஒன்றின் நோக்கம் என்ன என்று நமக்குத் தெரியவேண்டியதில்லை, ஆனாலும் அதற்கு நோக்கம் இருக்கிறது என்றே கொள்கிறோம். ஒவ்வொன்றுக்கும் நோக்கம் இருக்கும் உலகையே நம் மனம் விழைகிறது, இவையெல்லாம் ஒரு பேரமைப்புக்குக் கட்டுப்பட்டவையாகத் தோன்றுகின்றன – அது என்னவென்று நமக்குத் தெரியாவிட்டாலும்கூட.
- இந்த ஆனந்தத்தை நாம் பிறருடன் பகிர்ந்துகொள்கிறோம். அழகுணர்வு மானுடத்திற்குப் பொதுமையானது என்று இமானுவல் கன்ட் சொல்கிறார். நம் சுவைகள் பொதுவானவை; அவை நம்மை இணைக்கின்றன. புரியாதவற்றைப் பகுத்தாய்வதும் மனித மனத்தின் அடிப்படைதான். ஒருவகையில் அழகுணர்வு ஓயாத பகுப்பாய்விலிருந்து நமக்குத் தற்காலிக விடுதலையைத் தருகிறது. கட்டுக்கோப்பான வாழ்விலிருந்து அழகின் களிநடனம் நம்மை விடுவிக்கிறது.
அழகு, வெறும் உணர்வுகளாலானத் தரவுகளில் தொடங்கி அவற்றைத் தர்க்கபூர்வமாகப் புரிந்துகொள்ளும் முயற்சியில் தோற்கும்பொழுது நம் ஏமாற்றத்தின் வடிகாலாக அமைகிறது என்கிறார் கன்ட். ஒன்றை அறிந்துகொள்வதில் நாம் தோற்று நிற்கும்பொழுது அழகுணர்வின் பேரானந்தம் நம்மை விடுவிக்கிறது.
கன்ட்டின் தத்துவம் கீழ்க்கண்ட நான்கு அடிப்படைகளில் அழகை வரையறை செய்கின்றது:
- முதலில் நாம் எந்தவித உள்நோக்கமும் இன்றிக் காட்சியைப் பார்க்கிறோம். நம் தேவைகளை ஒதுக்கிவைத்துவிட்டு அதன் அழகை நிச்சயிக்கிறோம் (Disinterested judgement).
- அழகுணர்வு பொதுமையானது (Universality of aesthetics). அழகு பார்ப்பவரின் கண்களில் இருக்கிறது என்று சொன்னாலும்கூட. அழகான ஒன்றைப் பொதுவில் எல்லோரும் அழகானதாகவே ஏற்றுக்கொள்கிறோம். (இதற்கு முதல் வரையறையான நோக்கம் கடந்து பார்ப்பது முக்கியம். பொதுவில் அழகானது என்று எல்லோராலும் சொல்லப்பட்டதை ஒருவர் அழகற்றது புறந்தள்ளினால் அவருக்கு ஒரு உள்நோக்கம் இருக்கக்கூடும்).
- அழகியல் உணர்வு தேவையானதும்கூட (Necessity of aesthetics). நாம் நோக்கங்களையும், தர்க்கங்களையும், புரிதல்களையும் மீறி கையறுநிலையில் இருக்கும்பொழுது அழகு நம்மை அந்தச் சலிப்பிலிருந்து விடுவிக்கிறது.
- தேவை கடந்த நோக்கம் (Purposive without purpose) அழகின் அடிநாதமாக இருக்கிறது. அழகான ஒன்றின் நோக்கம் நமக்குப் புரியாதபோதும் அதற்கு ஒரு நோக்கம் இருப்பதாகவே நாம் ஏற்றுக்கொள்கிறோம். கவனிக்கவும்; நோக்கம் (purpose) பயன்பாடு (utility) இரண்டும் வேறுவேறானவை.
* * *
பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பாவின் அழகியல் ஒரு மாற்றம் கொள்ளத் துவங்கியது. பிரான்ஸில் பதினான்காம் லூயியின் ஆட்சி 72 வருடங்களுக்கு நீண்டது. தொடர்ச்சியான போர் வெற்றிகளின் மூலம் அவர் பிரான்ஸின் உலகளாவிய செல்வாக்கை நிலைநிறுத்தினார். ஒருபுறம் பக்திமானாக கத்தோலிக்கத்தில் தோய்ந்த 14-ஆம் லூயி, மறுபுறம் எல்லைகளற்ற காதல் களியாட்டக்காரராகவும் இருந்தார். இரண்டு மனைவிகள் (முதல் மனைவியின் மறைவிற்குப் பிறகே இரண்டாமவர் – கத்தோலிக்கம் வரையறுத்தபடி), எண்ணற்ற ஆசைநாயகிகள் என்று திளைத்திருந்தார். இவர் ஆட்சியில் கலைகள் செழித்திருந்தன. இதற்கு முதன்மை உதாரணமாக வெறும் வேட்டை மாளிகையாக இருந்த வெர்ஸாய்-கட்டிடத்தை, மாபெரும் வெர்ஸாய் அரண்மனையாக (Palace of Versailles), கனவுக்கோட்டையாகக் கட்டியெழுப்பியதைச் சொல்லலாம். இவர் காலத்தினல் பரோக் (Baroque) எனப்படும் கலைவடிவம் மேலோங்கியிருந்தது. பரோக்கை ‘நுண்ணமைப்புகளால் வார்த்தெடுக்கப்பட்ட பிரம்மாண்டம்’ எனச் சொல்லலாம். அது ஆழமான அதீத வண்ணக் கலவைகளையும், நுணுக்கமான வார்ப்புகளையும், அசைவுகள் மற்றும் இயக்கங்கள் கொண்டு நிரப்பப்பட்ட பிரமாண்ட வடிவங்களையும் கொண்டது. அக்காலங்களில் ஓவியம், கட்டிடக்கலை, இசை, சிற்பம் என்று எல்லாவற்றிலும் பரோக் வியாபித்திருந்தது.
படம் 3: பரோக் கலைவடிவத்தில் கட்டியெழுப்பப்பட்ட வெர்ஸாய் அரண்மனையின் கண்ணாடி மாளிகை, பிரான்ஸ். பொதுயுகம் 1660 ஆம் ஆண்டு கட்டத் துவங்கப்பட்டது. Galerie des Glaces (Hall of Mirrors) in the Palace of Versailles, Versailles, France.
பதினைந்தாம் லூயி 1722-ல் முடிசூட்டிக் கொள்ளும்பொழுது பிரமாண்டத்தில் சலிப்பு தோன்ற, பரோக் உருமாறி ரொகுக்கு (Rococo) என்னும் உத்தி உருவாகத் தொடங்கியது (இதை ரொக்கொக்கொ என்றும் சொல்வார்கள். பிரஞ்சில் இது ரொ-குக்கு). இதில் அதீத வண்ணக்கலவைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன, மென்மையான, இயற்கையின் வெளிர்வண்ணங்கள் (pastel colours) முக்கியத்துவம் பெற்றன. காட்சிப்பொருட்களின் இயக்கம், முரணியக்கம், மென்வளைவுகள், வழுக்கிச் செல்லும் காட்சிமாற்றங்கள் போன்றவை ரொக்குக்கு வடிவத்தின் முக்கிய அம்சங்கள். இதன் முழுவடிவத்தை ழான்-ஆனொரெ ஃப்ராக்நார் (Jean-Honoré Fragonard) வடித்த ‘ஊஞ்சல்’ (L’escarpolette) என்ற அற்புதமான ஓவியத்தில் காணலாம்.
படம் 4: ஓவியர் ழான்-ஆனொரெ ஃப்ராக்நார் (Jean-Honoré Fragonard). பொதுயுகம் 1780 ஆம் ஆண்டு கரிக்கோல் கொண்டு வரையப்பட்ட சுயஓவியம் இது. ஃப்ராக்நார் 550-க்கும் மேற்பட்ட ஓவியங்களைப் படைத்திருக்கிறார். பரோக் முறையிலிருந்து ரொகுக்கு வடிவத்திற்குக் கலைப்போக்கை முன்னெடுத்துச் சென்றதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.
செழித்த தோட்டத்தில் அழகும் நளினமுமான ஒரு யுவதி ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கிறாள். நெடிதுயர்ந்த மரத்தின் கிளையொன்றில் நீளமான கயிறுகள் இரண்டினால் கட்டப்பட்ட ஊஞ்சல் அது. நுட்ப வேலைப்பாடுகளால் நிறப்பப்பட அதன் இருக்கையில் வெல்வெட் மெத்தை. வலதுபுறத்தில் அவளைவிட மிக முதிர்ந்த மனிதர் ஒருவர் கல்லிருகையில் உட்கார்ந்து அந்த ஊஞ்சலை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர் தன்கயிற்றை தளர்த்த யுவதியின் ஊஞ்சல் மேலெழும்பிச் செல்கிறது. அந்த வேகத்தில் அவள் பின்னோக்கிச் சரிய அவளது பாதணி விடுபட்டுக் காற்றில் பறக்கிறது. பாதணியின் வெளிர்சிவப்பு நிறம் அவளது ஆடைக்குப் பொருத்தமாக இருகிறது. ஆடைகள் அவளது செல்வச் செழிப்பைக் காட்டுகின்றன, ஓரங்களில் லேஸ்-களால் இழைக்கப்பட்டிருக்கின்றன. அதிகம் அணிகலன்கள் தேவையில்லை; கழுத்தில் இறுக்கமான லேஸ்-முடிச்சு தன் அழகின்மீது அவள் கொண்ட அலட்சியமான கர்வத்தைக் காட்டுகின்றது. பறக்கும் காலணி நம் கவனத்தை அங்கிருக்கும் சிலையின்மீது ஈர்க்கிறது. சிலையினடியில் ரோஜாப்புதரின் மறைவில் ஒரு இளைஞன் இருக்கிறான். அவனுடைய கண்கள் விலகும் அவள் ஆடை காட்டும் கால்களின்மீது பதிந்திருக்கின்றன.
படம் 5: ஊஞ்சல் (L’escarpolette) ஓவியர் ழான்-ஆனொரெ ஃப்ராக்நார் (Jean-Honoré Fragonard), பொதுயுகம் 1767-68.
1767-68 வருடங்களில் வரையப்பட்ட இந்த ஓவியம் படச்சீலையில் (canvass) நெய்ப்பூச்சு (oil paint) கொண்டு வரையப்பட்டது. பரோக் ஓவியர்கள் பொதுவில் பல அடிகள் நீள அகலமுள்ள பிரமாண்ட சீலைகளில் வரைவார்கள். அவற்றிலும் பார்க்க இது மிகச் சிறியது என்றே சொல்லலாம். 81 செமீ × 64.2 செமீ அளவே உள்ள இந்த ஓவியம் இப்பொழுது லண்டனின் வாலஸ் தொகுப்பு (The Wallace Collection, London) என்ற அருங்காட்சியகத்தில் இருக்கிறது. இந்த ஓவியத்தில் இருக்கும் மனிதர்களில் யாரும் அடையாளம் காணப்படவில்லை. இந்த யுவதியும், யுவனும், பெரியவரும் யாராக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இந்தத் தோட்டமும் கற்பனையே. இமானுவல் கன்ட்டின் தத்துவப் பார்வையில், இதிலிருப்பவை மெய்யா பொய்யா என்ற கேள்வி தேவையில்லை. இதனால் நமக்கு என்ன பயன் என்று நாம் யோசிப்பதில்லை. ஆனாலும் இந்த ஓவியம் அழகாக இருக்கிறது என்று உணர்கிறோம்.
இதுபோன்ற விளையாட்டுத்தனமான, கிளர்ச்சியூட்டும் ஓவியங்கள் அக்காலங்களில் மிகப்பிரபலமாக இருந்தன. கனவான்கள் ஆகச்சிறந்த ஓவியர்களை பணியிலமர்த்தி இதுபோன்று வரைந்துகொள்வார்கள். இவற்றைப் பெரும்பாலும் பொதுவிடங்களில் காட்சியில் வைக்கமாட்டார்கள்; அவை கனவான்களின் பிரத்தியேக அறைகளை மாத்திரமே அலங்கரிக்கும். சமூகம் விதிக்கும் கட்டமைப்புகளையும் தனிமனித (குறிப்பாக பெண்கள் மீதான) ஒழுக்கநெறிகளையும் மீறும் இவற்றைப் பொதுவில் வைக்க முடியாது. அவை நெருங்கிய நண்பர்களுடன் மாத்திரமே பகிர்ந்துகொண்டு இரசிக்கப்படும். ஓவியங்கள் சொல்லும் கதைகளும் காட்சிகளும் அந்த அறைக்குள் மாத்திரமே பேசப்படும்.
காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் தோட்டத்தில் ஒருவித இரகசியத்தன்மை பொதிந்திருப்பதைக் காணலாம். இரண்டு ஆண்களும் அரையிருளில்தான் இருக்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதற்கான சாத்தியங்கள் இல்லை. இருவரின் கண்களும் அந்த அழகியின்மீதுதான். தெரித்து விழும் சூரியனின் கிரணங்கள்கூட அவளை மட்டுமே ஒளியூட்டுகின்றன. ஒருவருக்கு அவள் பின்புறம் மட்டுமே காணக்கிடைக்கிறது. இளைஞனின் கண்களுக்கோ விலகும் ஆடைகள் வெளிச்சமிட்டுக் காட்டும் கால்கள். சொல்லப்போனால் அந்த முதியவர் அவள் கணவராக இருக்கலாம். அவர் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார், அந்தப் பெண்ணின் மகிழ்ச்சி அவருக்குப் போதுமானதாக இருக்கிறது. இளைஞன்? அவளுடைய கள்ளக் காதலனோ? இல்லையென்றால் ஏன் புதரில் மறையவேண்டும்? அவளுடைய கண்களும் அவனைத்தான் பார்க்கின்றன; அவற்றில் குறும்பு தெறிக்கிறது.
காலணி பறக்கும் திசையிலிருப்பது காதல் குழந்தை கூபிட் (Cupid). கூபிட், காதல் கடவுள் வினஸ்க்கும் போர்க்கடவுள் மார்ஸ்க்கும் பிறந்தவன். அவன் ஆசை, காமம், ஈர்ப்பு, நேசம் இவற்றின் ஒட்டுமொத்த வடிவம். ஓவியர் ஃப்ராக்நார் இதற்கு எட்டியென்-மாரீஸ் ஃபால்கொனே (Etienne-Maurice Falconet) என்ற சிற்பி 1755-ஆம் ஆண்டு பேரரசர் பதினைந்தாம் லூயியின் ஆசைநாயகி பாம்பதூர் சீமாட்டி (Madame de Pompadour)-க்காக வடித்த கூபிட் சிற்பத்தை மாதிரியாகக் கொண்டார். கூபிட் தன் ஒரு கைச்சுட்டுவிரலை மூடிய வாயின்மீது வைத்திருக்கிறது. இது இரகசியத்திற்கான குறியீடு. மறுகை தன் அம்புறாத்துணியிலிருக்கும் காதல் அம்பை எடுக்கத் தயாராகிறது. கூபிட், யுவதி இருவருமே காக்கவேண்டிய இரகசியம் கீழே ரோஜாப்புதரில் ஒளிந்திருக்கிறது – அந்த இளைஞன். அகலவிரியும் அவன் கண்கள், விலகிய ஆடைகள் சுட்டும் மென்கால்களை இச்சையுடன் நோக்குகின்றன. அவள் ஆடைகள் அப்புதரில் இருக்கும் ரோஜாப்பூக்களின் இதழ்களைப்போல விரிகின்றன – அவளுடைய இளமை மற்றும் செல்வச் செழிப்புகளின் குறீடுகளாக ஆகின்றன.
படம் 6: அமர்ந்திருக்கும் கூபிட், சிற்பி – எட்டியென்-மாரீஸ் ஃபால்கொனெ, ரெய்ஸ்மியூஸியம், ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்தில் காட்சியிலிருக்கிறது.
காட்சியமைப்பில் எல்லைகளற்ற வேட்கைக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கும் குறியீடுகள் நிரம்பிக் கிடக்கின்றன. ஒருபுறம் கவனமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்கள், வளர்க்கப்பட்ட ரோஜாச் செடிகள், மூவருக்கும் மேலடுக்குச் செழிப்பைக் காட்டும் ஆடைகள், ஊஞ்சலைப் பிணைக்கும் கயிறுகள். இவை சமூகம் அவர்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளை ஒத்தவை. மறுபுறத்தில் அதே ரோஜாச்செடி புதராக மண்டிக்கிடக்கிறது – அவர்களுக்குள்ளே பெருகியோடும் வேட்கையைப்போல. ஆடைகள் விலகுகின்றன; சமூக விதிமுறைகள் புறந்தள்ளப்படுகின்றன. அந்தத் காலங்களில் இந்த ஓவியம் பெரும் சலனத்தை ஏற்படுத்தியது. பெண்களின் கால்களை அப்படிக்காட்டுவது மேலடுக்கு விழுமியங்களில் கொச்சையாகக் கருதப்பட்டது. ஆனால்…? காதல் கடவுளின் அம்புகள் பாயும்பொழுது இரகசியமாக விதிகள் தளர்த்தப்பட்டால்தான் என்ன? கயிறுகளால் பிணையப்பட்ட ஊஞ்சலும் அதை இயக்கும் கணவானும் கட்டமைப்பின் குறீடுகளாக ஆகும்பொழுது, கால்களிலிருந்து விடுபட்டுக் காற்றில் அலையும் காலணி பெருகியோடும் இச்சையைச் சுட்டிநிற்கிறது. ஊஞ்சல் இருவருக்கும் இடையில் ஊசலாடும் அவளுடைய மனதின் குறீயீடும்கூட. ஒற்றைக்காலணி விட்டுப்பறந்தாலும் இன்னொன்று அவள் நிலையை உணர்த்தக் கால்களிலேயே கட்டுண்டுகிடக்கிறது. பெருசு இருளில் சந்தோஷமாக இருந்தாலும், காதலன்தான் அவள் மனதில் ஒளிர்கிறான். அவளுடைய பேரொளி அவனில்தானே பிரதிபலிக்கிறது! கவனமாகப் பார்க்காவிட்டால் பெரியவரின் காலடியிலிருக்கும் நாயை நாம் தவறவிடுவோம். தொடர்பில்லாமல் ஏன் ஒரு நாயை இங்கே வரையவேண்டும்? நாய்கள் எப்பொழுதும் தங்கள் எஜமானர்களுக்கு நம்பிக்கையானவர்கள். மேலைச் செவ்வியல் கலையில் நாய் விசுவாசத்தின் குறியீடு. இன்னும் கவனித்துப்பார்த்தால் நாய் குரைப்பது தெரியவரும். மறைந்திருக்கும் கள்ளக் காதலனைத் தன் எஜமானனுக்குக் காட்டிக்கொடுக்க முயல்கிறதோ? கூபிட்-ன் பார்வைக் கோணத்தில் நேரடியாக நாய் இருக்கிறது. அடடா! குரைக்கும் நாயை அமைதியாக இருக்கச் சொல்லித்தான் காதல்தூதன் கூபிட் தன் வாயில் விரலைவைத்துச் சைகை செய்கிறானோ? காதலர்கள் களித்திருக்கும்பொழுது உதவவேண்டியது கூபிட்-ன் கடமையல்லவா?
ரொகுக்கு வடிவத்திற்கேயான வெளிர் நிறங்கள், அதிக வண்ணமாறுபாடுகள் இல்லாதத் தீட்டல்கள், ஊஞ்சல் காட்டும் இயக்கம் போன்றவை படத்தை நிரப்புகின்றன. ரொகுக்கு வடிவத்தில் விளையாட்டுத்தனத்திற்கு நிறையவே இடமுண்டு. புதரினருகில் அலட்சியமாக விடப்பட்டுக் கிடக்கும் இலைவாரி (rake), இரகசியம் சுட்டும் கூபிட், பறக்கும் காலணி, குரைக்கும் நாய் என விளையாட்டுத்தனம் விரவிக்கிடக்கிறது. சொல்லப்போனால் இரகசியக் காதலே ஒரு விளையாட்டுதானே! செவ்வியல் ஓவியங்களின் கூறுகளும் இதில் நிறைய உண்டு. இளைஞன், யுவதி, பெரியவர் மூவரும் ஒரு பிரமிட் போன்று முக்கோணத்தின் உச்சிகளாலான கட்டமைப்பில் இருக்கிறார்கள். ஒற்றைக் கயிறு நேர்கோடாக செவ்வியல் அமைப்பிலும், மறுகயிறு ரொகுக்கு வடிவத்தின் இழையும் நெகிழ்ச்சியுடனும் இருப்பதையும் காணலாம். மரக்கிளைகூட நேராக இல்லாமல், நெகிழ்சிதரும் வளைவுகளைக் கொண்டிருக்கிறது.
பரோக் ஓவியர்கள் பெரும்பாலும் வரலாற்றுக் காட்சிகளையும் மதபோதனைகளையுமே கருப்பொருட்களாகக் கொண்டார்கள். அதன் முடிவில் தோன்றிய ரொக்குக்கு இவற்றை நெகிழ்த்தித் தனிநபர்களையும் அவர்களது அந்தரங்களையும் காட்சிப்படுத்தியது. கற்பனையும் கலைத்திறனும் பெருக்கெடுத்தோடும் இந்த ‘ஊஞ்சல்’ காலத்தால் அழியாத காவிய ஓவியமாக நிலைத்திருக்கிறது. ழான்-ஆனொரெ ஃப்ராக்நார் இதே அமைப்பிலான இன்னும் பல ஓவியங்களைப் படைத்திருக்கிறார். பிரஞ்சுக் கலைகளை பரோக் முறையிலிருந்து ரொகுக்கு முறைக்கு நகர்த்திச் சென்ற மேதையாக அறியப்படுகிறார்.
* * *
இதுதான் அழகின் உச்சமா?
துவக்கத்தில் சொன்ன இமானுவல் கன்டின் அழகுணர்வுக்கான வரையறைகளைப் பொருத்திப்பாருங்கள். ஊஞ்சலையும், கதைமாந்தர்களையும், ரோஜாச்செடியையும், கயிறுகளையும், கூபிட்-ஐயும், குரைக்கும் நாயையும், விலகும் வெளிர்சிவப்பு ஆடையையும், கிளர்வூட்டும் கால்களையும், ஏங்கித் தவிக்கும் இளைஞனின் கண்களையும் தனித்தனியே காண்கிறோம். இவற்றை ஒருசேரப் பொருத்தி நம் மனம் நமக்கு ஒரு கதை சொல்கிறது. காட்சிப்பொருட்கள் நிறைக்கும் வெளி மாபெரும் அழகைக் காட்டுகிறது. பெரியவரை ஏமாளியாகவும், இளைஞர்களை விதிகளை மீறும் விளையாட்டுக்காரர்களாகவும் நாமாகவே ஒரு கதையைச் சொல்லிக் கொள்கிறோமா? இல்லை என்றால் வேறெப்படி இருக்கமுடியும். முற்றிலும் கற்பனைகளாலான காட்சியமைப்புதான் என்றானபோதும் அதில் நாம் ஏன் ஒரு கதையைத் தேடுகிறோம்? ஏன் இந்த நிச்சய உணர்வு நமக்குத் தேவையாக இருக்கிறது? இது சுட்டும் காட்சியிலும் நாம் தேடும் கதையிலும் நமக்கு என்ன பயனிருக்கிறது? என்றாலும் நாம் இதில் ஈடுபடுகிறோமே! தர்க்கங்களையும் தேவைகளையும் தள்ளிவிட்டால் அழகைத் துய்ப்பதில் தடைகள் இல்லைதானே!
இந்த ஓவியத்தை அழகற்றதாகச் சொல்பவர்கள் மிகச் சிலராகத்தான் இருக்கமுடியும். இதைத்தான் கன்ட் அழகுணர்வின் பொதுமையாக முன்வைக்கிறார். நினைவில் கொள்ளுங்கள், இது வரையப்பட்ட அதே நூற்றாண்டின் இறுதியில்தான் பிரஞ்சுப் புரட்சி நடந்தேறியது. இதில் காணப்படும் கனவான்களையும் சீமாட்டியையும் ஒத்தவர்கள்தான் பொதுவீதிகளில் கியட்டீனால் (guillotine) கழுத்தை வெட்டிக் கொல்லப்பட்டார்கள். இதை நான் கடைசியாகச் சொல்வதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. பிரஞ்சுப் புரட்சியைப் பற்றிச் சொல்லப்படும்வரை நாம் அழகுணர்வில் மாத்திரமே திளைத்திருந்தோம். இன்னும் சொல்லப்போனால் இந்த வரலாறுகளையும் கியட்டீன்களை இயக்கிக் கழுத்தை வெட்டியவர்களின் நியாயங்கள் எல்லாம் தெரிந்தபிறகும்கூட என்னால் இந்த ஓவியத்தை இரசிக்க முடிவது ஏன்? காரண, காரிய, காலத்தைக் கடந்து நிற்பது அழகுணர்வு.
இதுதான் அழகின் உச்சமா? இல்லை, இதையும் கடந்த ஒரு பெருவுணர்விற்கு நம்மை இமானுவல் கன்ட் இட்டுச் செல்கிறார்.
