- காலகாலம் – நெடுங்கதை – பகுதி 1
- உற்றது உணராது, உயிர் உலைய வெய்துயிர்ப்பாள்
- துயர்வண்ணம் உறுவது உண்டோ?
- வரைநிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே
- எவ்வினையும் என் செய்கேன் (current post)
ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம்
காலபைரவாஷ்டகம்
கணாதரின் குரல் நின்ற பிறகும் அந்தச் சிறுவன் தரையில் அமர்ந்து அழுதது என் கண்ணுக்குள் இருந்தது, அவனுக்காக நான் அழவில்லை, ஆனால் தொண்டைக்குள் ஏதோ அடைத்திருந்தது, ஜன்னலுக்கு வெளியே இரவு சூரியன் வானத்தின் நடுவுக்கு வந்திருந்தது, அதன் மங்கலான வெளிச்சத்தில் வயல்களும் மரங்களும் ஒன்றன்பின் ஒன்றாகக் கடந்தன, அப்போதுதான் ஒன்றைக் கவனித்தேன், இன்றிரவு அவர் சொன்ன ஒவ்வொரு கதையிலும் நான் இருந்தேன், நேற்றைய வாதத்தை மறுநாளும் சொல்லிக்கொண்டிருந்த அந்த அண்ணனைப் போல நானும் அறைக்குள் போய் அடுத்த சண்டைக்கான பதில்களை அடுக்கியிருக்கிறேன், தடாகக் கரையில் பறவையுடனும் பழங்களுடனும் சிறுவயதுக்கும் போய்விட்ட அந்த இளைஞனைப் போல என் மனமும் எங்கெங்கோ போயிருக்கிறது, அம்மாவின் இருபத்தைந்தும் என் இருபத்தைந்தும் ஒன்றுதான் என்று அவர் சொன்னபோது கோபம் வந்தது, இப்போது அது கோபமாக இல்லை, நீங்கள் சொன்ன எல்லாக் கதைகளிலும் நான் இருந்தேன் என்றேன், அவர் கண்ணாடியில் என்னைப் பார்த்தார், நீ கேட்டதால் அவை உன் கதைகள் ஆயின என்றார், பேருந்து நீண்ட வளைவொன்றில் திரும்பியது, உடல் சாய்ந்தது, முன்னிருக்கையின் கம்பியைப் பற்றிக்கொண்டேன், வளைவு முடிந்த பிறகும் கையை எடுக்கவில்லை, ஒரே இரவில் எத்தனை உலகங்களுக்குள் போய் வந்துவிட்டேன், எண்ணுபவர்களின் உலகம், மூச்சைக் கவனிப்பவர்களின் உலகம், வாதிடுபவர்களின் உலகம், பிரித்தறிபவர்களின் உலகம், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குப் போகும்போது முந்தையது கொடுத்த பார்வையும் சேர்த்துக் கொண்டே வந்தேனா எனத் தெரியவில்லை, எதையும் பற்றிக்கொள்ளவில்லை, வீட்டையும் பற்றிக்கொள்ளவில்லை, என்னையும் பற்றிக்கொள்ளவில்லை, கம்பியைப் பற்றியிருந்த என் கையைப் பார்த்துக்கொண்டே, நகரும் எதற்கும் பிடிமானம் வேண்டும் அல்லவா என்றேன், அவர் தலையசைத்தார், விசோனியர்கள் இத்தனை பார்வைகளுக்குள் நூற்றாண்டுகளாக நகர்ந்துகொண்டிருந்தார்களே, அவர்கள் எதைப் பற்றிக்கொண்டிருந்தார்கள் என்று கேட்டேன், வேரை என அவர் சொன்னதும், எந்த வேர் என தொடர்ந்தேன், அதற்கு அவர்கள் வைத்த பெயர் ஸ்ரத்தை எனச் சுட்டினார், அந்தச் சொல்லைக் கேட்டதும் என் கை கம்பியில் இறுகியது, நம்பிக்கை வைத்துவிட்டால் கேள்வி கேட்க வேண்டியதில்லை என்றேன், அவர் சிரித்தார், நீ பற்றியிருக்கும் கம்பி உன்னை எங்காவது இழுத்துச் செல்கிறதா எனக் கேள்வி கேட்டதும், இல்லை என்றேன், அது உன்னை விழாமல் வைத்திருக்கிறது, ஜன்னலுக்கு வெளியே பார்க்கவும் என்னிடம் கேள்வி கேட்கவும் அது தடையாக இருக்கிறதா என சொன்னதற்கு இல்லை என்றேன், அதற்கு மேல் அவர் எதுவும் சொல்லவில்லை, வெளியே இரவு சூரியன் தன் வழியில் சென்றுகொண்டிருந்தது, விசோனின் மறுபுறத்தில் பகல் சூரியன் இந்நேரம் யாருக்கோ எழுந்துகொண்டிருக்கும், நான் கேட்காமலேயே அந்த ஒழுங்கு என்னைச் சுற்றி நடந்துகொண்டிருந்தது, நான் தூங்கினாலும் விழித்திருந்தாலும், வீட்டுக்குத் திரும்பினாலும் திரும்பாவிட்டாலும், நீங்கள் சொன்ன கதைகளுக்கெல்லாம் அந்த வேர் எங்கே இருந்தது என்று கேட்டேன், மிகப் பழையது என்றார், இந்தக் கதைகளின் விதைகள் எல்லாம் மிகப் பழையவை, எண்ணுபவர்களுக்கும் பிரிப்பவர்களுக்கும் முன்பே, மனத்தை அசைவற்று நிறுத்தத் தெரிந்தவர்கள் அவற்றைக் கண்டார்கள், கவிதைகளாகக் கண்டார்கள் என்றார், கவிதைகளா, உண்மையைக் கண்டவர்கள் அதை நேராகச் சொல்லியிருக்கலாமே என்றேன், கவிதைகள் பிரபஞ்சத்தைக் காணக்கூடியவர்களுக்கானவை என அவர் முன் வைத்ததும், அப்படியென்றால் எனக்கு அல்ல, எனக்குப் பிரபஞ்சம் தெரியவில்லை, இந்தப் பேருந்து எங்கே போகிறது என்றுகூட எனக்குத் தெரியவில்லை என்றேன், அதனால்தான் மற்றவர்கள் அவற்றை உன்னிடம் சுமந்து வந்தார்கள் என பதில் வந்ததும், யார் என்றேன், வேறு எந்தத் தொழிலையும் செய்யாமல் அவற்றை மட்டுமே சுமந்த குடும்பங்கள், பிறர் கொடுத்ததை உண்டு வாழ்ந்தவர்கள், கவிதையை ஓர் எழுத்தும் ஒரு ஸ்வரமும் பிறழாமல் ஆயிரம் ஆண்டுகள் சுமந்தவர்கள் பற்றிச் சொல்லவும், வியப்புடன் ஒரே ஒரு கவிதையையா எனக்குள் தோன்றியதும், அவர் விடாமல் பல கவிதைகளை எனச் சொல்லி மௌனம் காத்து, மௌனம் உடைத்து நான் அதில் உனக்கு ஒன்றைச் சொல்கிறேன், ஒரு பெண் கண்ட கவிதை, அதில் சொல் தன்னையே நான் என்று சொல்லிக்கொள்கிறது என சொல்லத் தொடங்க, கம்பியிலிருந்து கையை எடுக்காமலேயே நான் கேட்கத் தொடங்கினேன்.
விசோனின் பெருநதி கடலைச் சேரும் இடத்தில், இனி நதியா கடலா என்று சொல்ல முடியாத நீர்ப்பரப்பு ஒன்று இருந்தது. அம்பிருணனின் மகள் அங்கே விடியலில் அமர்வாள். அவளுக்கு ஒரு பெயர் இருந்தது. காலம் அதை மறந்தது. பிற்காலத்தவர்கள் அவள் கண்ட கவிதையின் பெயராலேயே அவளை அழைத்தார்கள். வாக்.
அந்தப் பாடலை இயற்றியதாக அவள் சொல்லவில்லை. அலைகளின் ஒலியும், தன் மூச்சின் ஒலியும் அடங்கி, தன் பெயரும் நினைவுக்கு வராத விடியலொன்றில் கவிதை என அவள் அதை கண்டாள்.
அஹம் ருத்ரேபிர் வஸுபிஸ் சராம்யஹம் ஆதித்யைருத விஸ்வதேவை: நான் ருத்ரர்களுடனும் வசுக்களுடனும்,ஆதித்யர்களுடனும் ,எல்லாத் தேவர்களுடனும் உலவுகிறேன். வாக் தேவியின் குரல் விசோனின் நதிக்கரைகளை நிறைத்தது.
கேட்டவர்கள், “நான் என்று யாரைச் சொல்கிறாய்?” என்றார்கள்.
“என்னை அல்ல,” என்றாள். “சொல் தன்னைச் சொல்லிக்கொண்டது.”
எட்டுப் பாடல்களாக கவிதை சொல்லப்பட்டது. கடைசிப் பாடலில் அது காற்றைப்போல் வீசி எல்லா உலகங்களையும் பற்றிக்கொண்டது, வானத்திற்கு அப்பாலும் இந்த நிலத்திற்கு அப்பாலும் விரிந்து நின்றது.
அவள் அதைச் சிலருக்குச் சொல்லிக்கொடுத்தாள். அவர்கள் அடுத்தவர்களுக்கு.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, நதிக்கரை ஊர் ஒன்றில், மண் சுவர் கொண்ட சிறிய வீட்டின் நடுவில் நெருப்பொன்று எரிந்தது. அது அணைந்ததை அந்த வீட்டில் யாரும் பார்த்ததில்லை. சுமேதாவின் பாட்டி பார்த்ததில்லை. பாட்டியின் பாட்டியும் பார்த்ததில்லை என்று சொல்வார்கள். விடியலிலும் அந்தியிலும் அதில் சுள்ளிகளை இட்டார்கள்.
அந்த வீட்டில் இன்னொன்றும் அணையாமல் இருந்தது. வாக் கண்ட எட்டுப் பாடல்கள்.
சுமேதாவுக்கு ஐந்து வயதானபோது பாட்டி அவளை நெருப்பின் அருகே அமர்த்தினாள். முதல் நாள் ஒரே ஒரு சொல்.
“அஹம்.”
சுமேதா சொன்னாள்.
“இல்லை.”
மீண்டும் சொன்னாள்.
“இல்லை.”
அன்று அந்தி வரை அந்த ஒரு சொல் மட்டும். அதன் ஒலியின் துல்லியம் அவளில் அமையும் வரையிலும், அது நினைவில் நீங்காமல் நிரந்தரம் கொள்ளும் வரையிலும் தொடர்ந்தது.
ஆண்டுகள் சென்றன. சுமேதா எட்டுப் பாடல்களையும் கற்றாள். பிறகு பாட்டி அவற்றை உடைத்தாள். ஒவ்வொரு சொல்லையும் தனித்தனியாகச் சொல்லச் சொன்னாள். பிறகு இரண்டிரண்டாக. பிறகு முன்னும் பின்னுமாகப் பின்னி, ஒன்று இரண்டு, இரண்டு ஒன்று, ஒன்று இரண்டு.
“ஒரு முறை சரியாகச் சொன்னால் போதாதா?” என்று சுமேதா கேட்டாள்.
“நேராகச் சொல்லும்போது தவறு ஒளிந்துகொள்ளும். பின்னிச் சொல்லும்போது அதற்கு இடமில்லை.”
“தவறு யாரிடமிருந்து வரும்? நாம் பொய் சொல்வதில்லையே.”
பாட்டி நெருப்பில் சுள்ளியை வைத்தாள்.
“பொய்யிலிருந்து மட்டும் தவறு வருவதில்லை.”
அவள் பழைய கதையென ஒன்றைச் சொன்னாள். அவளறிந்த தந்தை ஒருவன், அணையா நெருப்பினை காப்பவன், அவன் பகலில் சொந்த வயலில் வேலை செய்தான், மீதமிருக்கும் வாழ்நாளில் ஆயிரம் முறை இந்தப் பாடல்களை உச்சரித்திருந்தான். முதுமையிலோ களைப்பிலோ ஒருநாள் ஒரு ஸ்வரத்தைச் சிறிது தாழ்த்திவிட்டான். அவனுக்குத் தெரியவில்லை. அருகிலிருந்த மகனுக்கும் தெரியவில்லை. அன்று கேட்டதே மகனுக்குப் பாடலாகியது. பல தலைமுறைகளுக்குப் பிறகு, ஒரே மூலத்திலிருந்து வந்த இரண்டு குடும்பங்கள் சந்தித்தபோது, ஒரே வரியை இருவிதமாகச் சொன்னார்கள். இருவரும் தங்களுடையதே சரி என்றார்கள்.
“யாரும் பொய் சொல்லவில்லை,” என்றாள் பாட்டி. “அதுதான் அவர்களை அச்சப்படுத்தியது.”
அதன்பிறகு தொலைவில் வாழ்ந்த குடும்பங்கள் குறிப்பிட்ட காலங்களில் சந்தித்தன. தங்கள் வழியாக வந்ததை மற்றவர்களின் வழியாக வந்ததுடன் ஒப்பிட்டன. இரண்டில் ஐயம் வந்தால் மூன்றாவதைக் கேட்டன. எந்த மனிதனின் நாவின் பிழையும், எந்த குடும்பத்தின் பழக்கமும் பாடலின் இயல்பாகிவிடாமல் பார்த்துக்கொண்டன.
அந்தக் குடும்பம் வேறு எந்தத் தொழிலும் செய்யவில்லை. வயல் இல்லை, கடை இல்லை, தறி இல்லை. விடியலில் நெருப்பு, பிறகு கற்றல், பிறகு கற்பித்தல். ஊர் அவருக்கு தேவையானதை கொடுத்தது. கொடுத்தால் வாங்கிக்கொள்வார். கொடுக்காவிட்டால் கேட்பதில்லை.
“நாளை யாரும் கொடுக்காவிட்டால்?” என்று சுமேதா ஒருமுறை கேட்டாள்.
“கொடுப்பார்கள்,” என்றார் தந்தை.
“எப்படித் தெரியும்?”
தந்தை பதில் சொல்லவில்லை. பாட்டி சொன்னாள் “நாமும், அவர்களும் சொல்லால் நெய்யப்பட்டுள்ளோம். சொற்கள் காக்கும்.”
காலையில் நெருப்பை மூட்டும்போது பாட்டி ஒவ்வொரு நாளும் ஒரு வரியை முணுமுணுப்பாள். அது வாக்கின் பாடலில் இல்லை. வேறொரு குடும்பம் சுமந்த பாடலிலிருந்து வந்தது.
ஸ்ரத்தயாக்னி: ஸமித்யதே. ஸ்ரத்தையால் நெருப்பு மூள்கிறது.
ஒவ்வொரு ஆகுதியின் போதும் பாட்டி சொல்வாள், “இதம் ந மம.” இது என்னுடையது அல்ல.
சுமேதாவுக்குப் பதினான்கு வயதானபோது நதி குறைவாக ஓடியது. வயல்கள் பாதி விளைந்தன. ஊரில் வாசல்கள் திறந்திருந்தன. ஊரின் கைகள் குறுகின.
மூன்றாம் நாள் இரவு சுமேதாவின் தம்பி தூக்கத்தில், “பசிக்கிறது,” என்றான். விழித்த பிறகு அவன் அதைச் சொல்லவில்லை.
அதே வாரம் குலத் தலைவனின் ஆள் வந்தான். தலைவனின் இல்லத்தில் சடங்குகள் நிகழும்போது இந்தப் பாடல்களை உச்சரிக்க ஒரு குடும்பம் அருகில் இருக்க வேண்டும் என்று தலைவன் விரும்பினான். வீடு இருக்கும். நிலம் இருக்கும். தானியக் குதிரில் இருந்து உணவு வரும்.
சுமேதாவின் சித்தப்பா அன்றிரவு நெருப்பின் அருகே அமர்ந்திருந்தார். அவருடைய மகன் உக்ரதேவன் மடியில் உறங்கிக்கொண்டிருந்தான். உக்ரதேவனும் அந்த வாரம் வெறும் வயிற்றுடன் உறங்கியிருந்தான்.
“பாடல் அங்கேயும் உச்சரிக்கப்படும்,” என்றார் சித்தப்பா. “இங்கே பசியில் உச்சரிப்பதைவிட அங்கே நன்றாக உச்சரிக்கலாம்.”
பாட்டி பதில் சொல்லவில்லை.
சித்தப்பாவின் குடும்பம் தலைவனின் இல்லத்திற்குச் சென்றது. பாட்டி செல்லவில்லை.
“அவற்றை வேண்டாம் என்று நான் சொல்லவில்லை,” என்றாள் சுமேதாவிடம். “அவை தேவைப்படாதபடி வாழ்கிறேன்.”
தலைவனின் இல்லத்தில் சித்தப்பா ஒவ்வொரு சடங்கிலும் உச்சரித்தார். தலைவன் ஒருபோதும் எதையும் மாற்றச் சொல்லவில்லை. ஆனால் மூன்றாவது பாடலின் முதல் சொற்கள்
அஹம் ராஷ்ட்ரீ ஸங்கமனீ வஸூனாம். நானே அரசி, செல்வங்களைக் கூட்டுவிப்பவள்.
என ஒலித்த பொழுது தலைவன் முகம் சிறிது இறுகியது.
சித்தப்பா அதைப் பார்த்தார். ஆண்டுகள் சென்றன. அந்த வரியை அவர் சிறிது வேகமாகச் சொன்னார். அதன் உயரும் குரல் சிறிது தாழ்ந்தது. தான் மாற்றுகிறோம் என்று அவர் நினைக்கவில்லை. அவருக்கு அருகில் அமர்ந்து கற்ற உக்ரதேவனுக்கு அதுவே பாடமாகியது.
பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, தொலைவிலிருந்த குடும்பங்கள் நதிக்கரையில் கூடின. மழைக்கு முந்தைய மாதம். பல ஊர்களிலிருந்து பல நெருப்புகளின் புகை எழுந்தது.
ஒவ்வொரு குடும்பமும் வேறு வேறு பாடல்களைச் சுமந்து வந்தது. ஒரு குடும்பம் இருப்பும் இல்லை இன்மையும் இல்லை என்று தொடங்கும் படைப்பின் பாடலைச் சுமந்தது. இன்னொன்று ஒரே மரத்தில் அமர்ந்த இரண்டு பறவைகளின் பாடலை; ஒன்று பழம் உண்கிறது, மற்றது பார்த்துக்கொண்டே இருக்கிறது. மற்றொன்று நெருப்புக்கான பாடல்களை. சுமேதாவின் குடும்பம் எட்டுப் பாடல்களை மட்டும் சுமந்தது. அவளுக்கு அதுவரை தெரிந்த உலகம் அணையா நெருப்பும் எட்டுப் பாடல்களும். அன்று அவள் கரை முழுவதும் பார்த்தாள். நூறு நெருப்புகள். ஒவ்வொன்றின் அருகிலும் ஒரு குடும்பம்.
வாக்கின் பாடல்களைச் சுமந்த நான்கு குடும்பங்கள் அருகருகே அமர்ந்தன. ஒவ்வொன்றாக உச்சரித்தன.
மூன்றாவது பாடலில் உக்ரதேவனின் குரல் தாழ்ந்தது.
சுமேதாவின் குரல் தாழவில்லை. கிழக்குக் கடற்கரையிலிருந்து வந்த குடும்பத்தின் குரலும் தாழவில்லை. மலைச்சரிவிலிருந்து வந்தவர்களின் குரலும் தாழவில்லை.
அமைதி விழுந்தது.
“நாங்கள் தலைவனின் இல்லத்தில் இருக்கிறோம்,” என்றான் உக்ரதேவன். “ஒவ்வொரு நாளும் உச்சரிக்கிறோம். நாங்கள் தவறு இழைப்பதில்லை?”
பாட்டிக்கு அப்போது வயது எண்பதுக்கு மேல். அவள் மெல்லச் சொன்னாள்:
“நாம் மறப்பதால் மட்டும் சப்தம் திரிவதில்லை.”
“வேறு எதனால்?”
“நமக்குப் பசிப்பதாலும்.”
உக்ரதேவன் எழுந்து சென்றான். மறுநாள் திரும்பி வந்தான். சொல்லவேண்டிய முறையில் அந்த வரியை மீண்டும் கற்றான். அவனுடைய உச்சரிப்பு திருந்தியது. அவனுடைய முகச் சுளிப்பு நீங்கவில்லை.
அவ்வூரில் வருடத் திருவிழா வரும் நாள் நெருங்கியது. தச்சர்கள் குடி வழி வந்த பத்ரன் உக்ரதேவனின் வீட்டுக்கு தூண்களை சரி செய்ய வந்திருந்தான். வேலை முடிந்து அங்கேயே அமர்ந்து உக்ரதேவன் மாறா சொற்களை காலகாலமென மாறா ஸ்வரத்தில் கேட்டான்.
சுமேதா மாலையில் பூப்பறிக்க வருகையில் பத்ரனை கண்டு, அவன் சொற்களில் ஆழ்வதை கண்டு புன்னகைத்தாள்.
மறுநாளும் , அதன் மறுநாளும் பத்ரன் வந்தான். மாறா முறையில் ஒலிக்கும் ஓசை அவனில் நிலைத்தது.
அப்படியான ஒரு நாளில் “ஒரு சொல்லும் மாறாமல், உங்கள் பாட்டி சொன்னபடியே சொல்கிறீர்கள் அல்லவா?” என்று கேட்டான் பத்ரன்.
சுமேதா தலையசைத்தாள்.
“அதுபோல மாறாமல் செய்ய வேண்டிய செயல்களும் உண்டா? மாற்றினால் அவற்றின் பொருள் குலைந்துவிடும் செயல்கள்…?”
சுமேதா அவன் கேள்வியின் புதிரைக் கண்டு தடுமாறினாள்
பத்ரன் அருகில் ஓடும் நதியைப் பார்த்தான். “நமக்குப் பிடிப்பதால் செய்வதும், பிடிக்காததால் விட்டுவிடுவதுமாக இல்லாமல்… இந்த நதி ஓடுவதுபோலத் தொடர்ந்து செய்ய வேண்டியவை.”
“இருக்கலாம்,” என்றாள் சுமேதா.
“இருந்தால் இக்கவிதைகள் சொல்லுமல்லவா?”
“சொல்லக்கூடும்.”
“சொல்வதை எப்படிப் பொருள் கொள்வது?”
“நாம் பிறப்பதற்கு முன்பே
சொல்லுக்கும் பொருளுக்கும்
உறவு இருந்தது.
நம் நாவில்
ஒரு கணம் தங்கி
நமக்குப் பின்னும் செல்கிறது சொல்” என சுமேதா பாடினாள்
“ஆகவே…” எதையோ சொல்லவும் தொடங்கினாள். முடியாமல் நதியின் ஓட்டத்தினை நோக்கினாள். நதி ஓடிக் கொண்டே இருந்தது.
பத்ரனின் கேள்வியை போல விசோனில் தொடர் கேள்விகள் எழுந்தன. அவைகளை மீள மீள கேட்டு கத்தியின் கூரென ஆக்கும் தன்மையினர் ஜைமினிகள் என விசோனில் அமைந்தனர். அவர்கள் கேள்விகளும் பல நூறு ஆண்டுகள் நீண்டன.
***
அன்றிலிருந்து நூறாண்டுகளுக்கு மேல் சென்று பல சுமேதாக்களும், உக்ரதேவன்களும், பத்ரன்களும் விசோனில் வந்து சென்றனர்.
அதில் ஒரு உக்ரதேவன் முதல் மூங்கில் சடங்குகளை செய்து வைக்க ஆர்வமாக இருந்ததை சுமேதா காலையிலேயே கவனித்திருந்தாள். அவனுக்கு தேவையான சடங்கு பொருள்களுடன் மூங்கில் தோப்பிற்குள் நுழைந்ததும் சுமேதாவுக்குக் குளிர்ந்தது. வெளியே வெயில் ஏறியிருந்தது. இங்கே மேலே பின்னிக்கிடந்த கழிகளுக்கிடையில் வெளிச்சம் சிறு திட்டுகளாகத் தரையில் விழுந்தது. உலர்ந்த இலைகளுக்குக் கீழே மண் ஈரமாக இருந்தது.
முன்னால் சென்ற தச்சர் தாழ்ந்த மூங்கிலொன்றைக் குனிந்து கடந்தார். அவரது தோளிலிருந்த அளவுக்கயிறு அதில் சிக்கியது. பின்னால் வந்த பத்ரன் அதை விடுவித்தான். சுமேதா அவர்களைத் தொடர்ந்து நடந்தாள்.
காற்று வீசியபோது மூங்கிலின் உச்சிகள் அசைந்தன. ஒன்றின்மேல் ஒன்று அழுந்திய மூங்கில்கள் நீளமாகக் கிரீச்சிட்டன. ஓசை எங்கிருந்து வருகிறது என்று அவள் மேலே பார்த்தாள். நெருங்கி நின்ற கழிகளுக்கு நடுவே வானம் தெரியவில்லை.
குலமூத்தவரான அதியன் முன்பே அங்கே வந்திருந்தார். அவருடைய தோட்டக்காரர்கள் இரண்டு மூங்கில் புதர்களைச் சுற்றியிருந்த முட்களை அகற்றியிருந்தார்கள். வெட்டிய கிளைகள் பாதையோரம் குவிக்கப்பட்டிருந்தன. ஓரத்தில் நீர்க்குடமும் வாழைப்பழங்களும் வைக்கப்பட்டிருந்தன.
தேருக்கான முதல் மூங்கிலை அதியன் தொட்டுக் கொடுப்பார் என்று பத்ரன் வழியில் சொல்லியிருந்தான். தச்சர்கள் அதை அறுத்த பிறகு அவர் தோளில் வைத்துச் சுமந்துவருவார். அந்த மூங்கிலில்தான் தேர் வேலை தொடங்கும்.
தச்சர் கைக்காட்ட பத்ரன் மூங்கிலின் அடிப்பகுதியில் கத்தியால் செதுக்கினான். மஞ்சள் பொடி உதிர்ந்தது. தச்சர் மேலே தட்டிப் பார்த்தார். அடுத்த கழிக்குச் சென்றார்.
அதியன் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
“அது நல்ல தடியாக இருக்கிறதே.”
தச்சர் கணுவின் கீழே கத்தியைச் செலுத்தினார். பெயர்ந்த சிறு துண்டை அதியனிடம் நீட்டினார்.
அவர் வாங்கிப் பார்த்தார். விரலால் தேய்த்தபோது அதன் ஓரம் நொறுங்கியது.
“இன்னும் உள்ளே போய்ப் பாருங்கள்.”
உதவியாளர்கள் புதர்களுக்கிடையில் பிரிந்து சென்றார்கள். அவர்களில் ஒருவன் அரிவாளால் முட்களை விலக்கிக்கொண்டு சரிவில் இறங்கினான். அவன் தலை மறைந்த பிறகும் இலைகள் அசைந்துகொண்டிருந்தன.
சுமேதா நீர்க்குடத்தின் அருகே நின்றாள். பழங்கள் மீது சிறிய ஈக்கள் அமர்ந்திருந்தன. யாரும் அவற்றைத் தொடவில்லை.
திரும்பிவந்த உதவியாளன் தச்சரின் அருகே சென்று தாழ்ந்த குரலில் பேசினான்.
“என்ன?” என்று அதியன் கேட்டார்.
தச்சர் நிமிர்ந்தார்.
“இங்கே பார்த்ததில் தேருக்குத் தேவையானது தேறவில்லை.”
“மேற்குப்புறம்?”
“அங்கேயும் பார்த்தார்கள்.”
உதவியாளன் ஏதோ சொல்ல முயன்றான். தச்சர் அவனைப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தார்.
“துந்துபியார் தோட்டத்தில் நல்ல மூங்கில் இருக்கிறது என்கிறார்கள்.”
அதியன் கையிலிருந்த துண்டைத் திருப்பினார்.
“அங்கே யார் போனது?”
“நான்தான் பார்க்கச் சொன்னேன்.” தச்சர் குரலை தாழ்த்திச் சொன்னார்.
“எப்போது?”
“நேற்று மாலை.”
அதியனின் பார்வை தச்சரிடமிருந்து உதவியாளனிடம் சென்றது. அவன் கீழே பார்த்தான்.
சற்றுத் தள்ளி நின்றிருந்த துந்துபி முன்னால் வந்தார்.
“தேருக்குத்தானே. எடுத்துக்கொள்ளுங்கள்.”
அதியன் அவரைத் திரும்பிப் பார்த்தார்.
“என் தோட்ட மூங்கில் வேண்டாம் என்று முடிவாகிவிட்டதா?”
“வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை.” துந்துபி அதியனை பார்த்து கோபமாக சொன்னார்.
“பிறகு எதற்கு உன் தோட்டத்தில் எடுத்துக்கொள்ளச் சொன்னாய்?”
துந்துபி அண்ணனின் முகத்தைப் பார்த்தார்.
“நான் உன் தோட்டத்தில் உள்ள மூங்கில் வேண்டாமென சொல்லவில்லையே! என் தோட்டத்து மூங்கிலை தேருக்குக் கேட்டால் இல்லை என்று எப்படிச் சொல்வது?”
அதியன் கையிலிருந்த மூங்கில் துண்டைத் தரையில் போட்டார். முகம் கருத்தது.
தச்சர் “நாளைக்குள் வெட்டி எடுத்தால்தான்…” என ஆரம்பித்தார்.
“உன்னை நான் கேட்கவில்லை.” அதியன் குரல் உயர்ந்தது.
தச்சர் பேச்சை நிறுத்தினார்.
மேலே அழுந்தியிருந்த மூங்கில் ஒன்று விடுபட்டுத் திரும்பியது. அதன் இலைகள் கீழிருந்த கழிகளில் அடித்தன. அந்த ஓசையில் சுமேதாவுக்குத் துந்துபி ஏதோ சொன்னது கேட்கவில்லை.
துந்துபிக்கு பின்னால் நின்றவன் இடுப்பிலிருந்த அரிவாளை எடுத்தார். அதைச் சுற்றியிருந்த துணியை அவிழ்த்து மடித்தான். அதியனின் பின்னால் நின்றவர் ஒருவர் தரையில் கிடந்த கோடரியை எடுத்துக்கொண்டார்.
சுமேதா பத்ரனின் கையைப் பற்றினாள். உக்ரதேவன் மெல்ல நகர்ந்து சுமேதாவுக்கு பின்னால் நின்றுக் கொண்டான்.
பத்ரன் இன்னும் அதியனைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் பிடி இறுகியதும் திரும்பினான். அவள் பார்வை சென்ற இடத்தைப் பார்த்தான்.
“ஜைமினிகளை அழைத்து வா,” என முணுமுணுத்தாள்.
அவன் தச்சர்களுக்குப் பின்னால் நகர்ந்து பாதையில் இறங்கினான்.
தச்சர் தனது உதவியாளர்களிடம் கிளம்புமாறு சைகை செய்தார். “நாங்கள் பிறகு வருகிறோம். நீங்கள் பேசிக்கொள்ளுங்கள்.” என சொல்கையில் அவர் உடலில் அவசரம் கூடியது
அவர்கள் கிளம்பத் திரும்பியபோது பாதையில் அதியனின் ஆட்கள் கூடினார்கள். அவர்கள் பார்வை துந்துபியின் மீது இருந்தது.
“எங்கே போகிறாய்?” என்று அதில் ஒருவன் தச்சரைக் கேட்டான்.
“வேலை செய்யத்தான் வந்தோம்.”
“வேலை இங்கேதான் இருக்கிறது” பாதையை மறித்தவர்களின் குரல் மேலே மூங்கில் உரசும் சப்தத்தினை தாண்டி ஒலித்தது.
துந்துபியின் ஆட்களும் பாதையை நோக்கி நகர்ந்தார்கள். சுமேதா அவர்கள் கால்களைப் பார்த்தாள். உலர்ந்த இலைகள் நொறுங்கின. அதியனுக்கும் துந்துபிக்கும் நடுவில் இருந்த இடம் மட்டும் காலியாக இருந்தது.
சுமேதா ஒரு படி பின்னால் நகர்ந்தாள். அவள் பின்னால் உக்ரதேவனும் நகர்ந்தான். சடங்குக்கு எடுத்து வந்த பொருள்கள் மூங்கிலின் அருகே தனித்து இருந்தன. அவள் தோள் மூங்கிலில் பட்டது. அவள் நின்ற இடத்திற்கு மேலிருந்து உலர்ந்த இலைகள் உதிர்ந்தன.
பாதை தெரிந்த இடத்தில் இப்போது ஒருவருடைய முதுகு இருந்தது. பத்ரன் வெளியே சென்றுவிட்டானா என்று அவளால் பார்க்க முடியவில்லை.
“பிள்ளைகளை வெளியே விடுங்கள்,” என்றார் தச்சர்.
அதியன் அப்போதுதான் அவளைப் பார்த்தார். அவருடைய ஆள் ஒருவன் ஒதுங்கினான். சுமேதா நகர முயன்றபோது துந்துபியின் பக்கத்திலிருந்தவன் குறுக்கே வந்தான்.
“அவளை விடு,” என்றார் துந்துபி.
அதியன் அவரை நோக்கித் திரும்பினார்.
சுமேதா அப்படியே நின்றாள். ஈரமான மண்ணுக்குள் கால்களை அழுத்திக்கொண்டாள்.
பாதையின் கீழிருந்து பத்ரனின் குரல் கேட்டது.
“இங்கேதான்.”
முதலில் பத்ரனின் தலை தெரிந்தது. பிறகு மூத்த ஜைமினி வந்தார். இளைய ஜைமினி அவருக்குப் பின்னால் நடந்துவந்தார். ஆட்கள் ஒதுங்கி வழி விட்டார்கள். பத்ரன் அந்த இடைவெளியில் புகுந்து சுமேதாவை நோக்கி வந்தான்.
“வந்துவிட்டார்கள்,” என்றான். உக்ரதேவன் முகம் மலர்ந்து முன்னே வந்தான்.
அவர்கள் அருகில் வந்த மூத்த ஜைமினி தரையில் கிடந்த மூங்கில் துண்டை எடுத்தார். அதன் ஓரத்தைத் தொட்டுப் பார்த்துவிட்டு தச்சரிடம் கொடுத்தார்.
“என்ன ஆயிற்று?”
அதியனும், துந்துபியும், தச்சரும் ஒரே நேரத்தில் பேசத் தொடங்கினார்கள்.
“முதலில் இவர் சொல்லட்டும்,” என்று அதியனைச் சுட்டினார்.
அதியன் சொல்லும்போது துந்துபி இரண்டு முறை குறுக்கிட முயன்றார். இளைய ஜைமினி அவரிடம் அமைதியாக இருக்குமாறு சைகை செய்தார்.
அதியன் பேசி முடித்ததும் தச்சர் தாம் பார்த்ததைச் சொன்னார். இளைய ஜைமினி உதவியாளனுடன் மூங்கில் புதரின் அருகே சென்றார். மூங்கிலின் கணுக்களைப் பார்த்தார்.
மூத்த ஜைமினி அதியனிடம் “விழாவில் மூங்கிலைப் பெறும்போது என்ன சொல்வார்கள்?” எனக் கேட்டார்.
அதியன் “குலமூத்தாரே தேரின் மூங்கிலுக்குப் பொறுப்பு என்பது எங்கள் ஊர் திருவிழாவின் விதி.” என பதில் சொன்னார்.
அதியனின் குரலுக்கு பின் நீண்ட அமைதி நிலவியது. சுமேதா மூத்த ஜைமினியைப் பார்த்தாள். அவர் அருகில் இருந்து மூங்கில் ஒன்றை நெருங்கி அதனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் ஏதோ சிந்தனையில் இருந்தது அவளுக்கு தெரிந்தது.
அவள் மூத்த ஜைமினியை நெருங்கி வணங்கினாள். அவர் அவளை கேள்வியுடன் பார்த்தார்.
“ஊர் விதி குலமூத்தாராக இருப்பவர்கள் தேரின் மூங்கிலுக்குப் பொறுப்பு என்றுதானே சொல்கிறது” என்று கேட்டாள். “அதை இவர் தோட்டத்து மூங்கிலில்தான் தேர் செய்ய வேண்டும் என்று பொருள் கொள்ளலாமா?”
உக்ரதேவன் “வாக்கியம் பொருள் கொள்ளும் முறை என்ன?” என சுமேதாவுடன் சேர்ந்துக் கொண்டு கேள்வி கேட்டான்.
அவர் அவளைப் பார்த்தார்.
“யாகஸ்தம்பமே சூரியன் என்று சொல்வதை, யாகஸ்தம்பம் நேரடியாகச் சூரியன்தான் என்று எண்ணுவதுபோல ஆகாதா?” அவள் அடுத்தக் கேள்வியை மூத்த ஜைமினியிடம் முன் வைத்தாள்.
“குணவாதம்…” என்று மூத்த ஜைமினி தனக்குள் முணுமுணுத்தார். அவர் உதட்டசைவில் அச்சொல் சன்னமாக ஒலிப்பதை சுமேதா கேட்டாள். அவர் கைகள் அவள் தலையில் வாஞ்சையுடன் படிந்தன.
அவர் ஆமோதிப்பாக தலை அசைத்து இளைய ஜைமினியை நோக்கினார்.
உடனே இளைய ஜைமினி அதியனைப் பார்த்தார். “குலமூத்தாரே தேரின் மூங்கிலுக்குப் பொறுப்பு என்ற ஐதீகத்தைத்தான் நீங்களும் சொல்கிறீர்களா? உங்கள் தோட்டத்திலிருந்தே பெற வேண்டும் என்று வேறு விதி உண்டா?”
“எப்போதும் இங்கிருந்துதான் பெற்றிருக்கிறார்கள்.” என அதியனின் பின்னால் இருந்த அவரது ஆள் சொன்னார்.
“அப்படித்தான் செய்திருக்கிறார்கள். அப்படித்தான் செய்ய வேண்டும் என்று வேறு சொல் இருக்கிறதா?” இளைய ஜைமினி அடுத்த கேள்வியை வைத்தார்.
அதியன் பதில் சொல்லவில்லை.
“என்ன சொல்கிறார்?” என்று உக்ரசேனன் சுமேதாவிடம் கேட்டான்.
“கவித்துவமான கூற்றுகளைச் சட்டவிதியாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்கிறார். யாகஸ்தம்பமே சூரியன் என்றால், யாகஸ்தம்பம் வானில் உலவும் கோள் என சொல்லவில்லையே.”
அதற்குள் அதியன் கண்கள் கலங்க இரு கரம் கூப்பி மூத்த ஜைமினியை நோக்கி வந்தார்.
அதியன் “என்னை ஊரில் யாரும் மறுப்பதில்லை. என் தோட்ட மூங்கில்தான் வேண்டும் என்பார்கள். இது என் பொறுப்பு. அதுவே ஊரின் விதிமுறை. அதை மீறுவது ஊர் வழக்கத்துக்கு பொருந்தாத ஓன்றாகும்.” குரலில் மன்றாடும் தொனியில் சொன்னார். துந்துபியை நோக்கி “இவன் இருக்கின்றானே இவனை…” என கோபமாக சொல்லத் தொடங்கி பின்னர் சொல்வதை நிறுத்திக் கொண்டார்.
மூத்த ஜைமினி “நீங்கள் சுட்டும் பொருத்தமின்மை இங்கே ஏற்படாது,” என்று அதியனிடம் சொன்னார். “மூங்கிலைப் பெற்றுத் தரும் பொறுப்பு உங்களுடையது என்பதே விதிமுறை. உங்கள் தோட்டத்தில்தான் வெட்ட வேண்டும் என்று அது சொல்லவில்லை.”
அவர் துந்துபியைப் பார்த்துவிட்டு மீண்டும் அதியனிடம் திரும்பினார்.
“இருவருக்கும் தந்தை ஒருவர்தானே. உங்கள் குடும்பத் தோட்டத்திலிருந்து பெறுவதில் வழக்கம் கெடவில்லையே.”
தச்சர் தோளிலிருந்த அளவுக்கயிற்றை எடுத்தார்.
“அவன் என் தம்பி இல்லை.”
கயிற்றை விரித்த கை நின்றது.
அதியன் துந்துபியைப் பார்க்கவில்லை. “அவன் அம்மா என் அம்மா இல்லை.” என சொல்கையில் வானத்தினை பார்த்தார்.
சுமேதா துந்துபியின் முகத்தைப் பார்த்தாள். அவரது கீழ்த்தாடை இறுகியது. அவருக்குப் பின்னால் நின்றவர் அரிவாளுடன் ஓரடி முன்னே வந்தார். அதியனின் அருகில் இருந்தவரின் கோடரியின் பிடி உயர்ந்தது.
“என் தோட்டத்து மூங்கில்கள் துந்துபியின் மூங்கில்கள் என்று ஏற்கப்படுவதைத்தான் நான் விரும்புகிறேன்.” சொல்கையில் துந்துபியின் கண்கள் சிவந்திருந்தன. இறுகிய கரங்களைப் போலவே குரலும் இறுகியிருந்தது. மூத்த ஜைமினியிடமிருந்து பார்வையைத் திருப்பினார்.
“அமைதி. அமைதி.”
இளைய ஜைமினி இருவருக்கும் நடுவில் நகர்ந்தார். “அவற்றைக் கீழே வையுங்கள்.” குரலில் பதற்றம் இருந்தது.
அரிவாளுடன் நின்றவன் துந்துபியைப் பார்த்தான். துந்துபி அவனைப் பார்க்கவில்லை. அரிவாளை இறுக்கிப் பிடித்தான். கோடாலியும் எதிர்புறம் உயர்ந்தது.
தச்சர் அளவுக்கயிற்றைச் சுருட்டி நெஞ்சோடு பிடித்திருந்தார். அதன் நுனி நடுங்கியது. உதவியாளன் அவரது முழங்கையைத் தொட்டான். அவர் கையை விலக்கிக்கொண்டார்.
மூத்த ஜைமினி கனத்தக் குரலில் செருமினார்.
அவர் செருமல் முடியும் தருணம் ஆயுதங்கள் தரையில் விழும் ஒலி கேட்டது. அதியன் குனிந்து கோடரியை எடுக்கப் போனார், அவர் பின் நின்றவன் கீழே விழுந்த கோடரியை அவருக்கு முன் எடுத்து தூரத்தில் இருந்த புதரில் போட்டான். அதியன் தடுமாறி நின்றார். இருதரப்பிலும் பாதையை மறித்து நின்றவர்கள் விலகிக் கொண்டார்கள். துந்துபியும், அதியனும் தலை குனிந்து நின்றார்கள்.
இளைய ஜைமினி மூத்தவரிடம் திரும்பி ஏதோ மெதுவாகச் சொன்னார். அவர் கேட்டுவிட்டுத் தலையசைத்தார்.
“துந்துபி கொடுப்பதாகவே பெறலாம்,” என்றார் இளைய ஜைமினி.
அதியனின் உதடுகள் இறுகின.
“அக்னிக்குச் செய்யும் வேள்வியின் முறையைச் சூரியனுக்குச் செய்யும்போது எடுத்துக்கொள்கிறோம். அப்போது ‘அக்னயே ஜுஷ்டம் நிர்வபாமி’ என்ற இடத்தில் ‘சூர்யாய ஜுஷ்டம் நிர்வபாமி’ என்று மாற்றிச் சொல்கிறோம். கொடுப்பது சூரியனுக்கென்றால் அக்னியின் பெயரையே சொல்லிக்கொண்டிருப்பதில்லை.”
அவர் துந்துபியைப் பார்த்தார்.
“இங்கே அளிப்பவர் துந்துபி. அவர் அளித்ததாகவே சொல்லிப் பெறலாம். நடக்கும் செயலுக்குப் பொருந்தச் சொல்லை சொல்வது வேத நெறி.”
துந்துபி மூத்த ஜைமினியிடம் திரும்பினார்.
மூத்த ஜைமினி ஆமோதிப்பாக தலையசைத்தார்.
அதியன் தன் காலருகே கிடந்த பொடியைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
மூத்த ஜைமினி சைகையால் தச்சரை அழைத்தார்.
“அதியனின் தோட்டத்தில் இருப்பதில் தேர் செய்ய முடியுமா?” மெல்லியக் குரலில் கேட்டார்.
“இழுக்கும்போது தாங்காது.” சொல்லி முடிக்கையில் தச்சர் தொண்டையைச் செருமினார்.
“துந்துபியின் தோட்டத்தில்?”
“பார்த்து வந்திருக்கிறார்கள். தேறுகிறது.”
மூத்த ஜைமினி அதியனிடம் திரும்பினார். “தாங்காது என்று தெரிந்தும் இவற்றில் செய்யச் சொன்னால், நாளை ஊரார் இழுக்கும்போது என்ன ஆகும்? விழாவை முன்னின்று நடத்துபவர் நீங்கள். தேர் முறையாக ஓடுவதும் உங்கள் பொறுப்புதானே?”
அதியன் புரியாமல் பார்த்தார்.
“விழா முறையாக நடந்தால்தான் உங்களுக்கும் புண்ணியம் உண்டு. அது உங்களுடையது மட்டுமே” இளைய ஜைமினி சொன்னார்.
நீண்ட நேரம் யாரும் பேசவில்லை.
மேலே மூங்கில் உச்சிகள் உரசின. ஒரு சிறிய உலர்ந்த கிளை முறிந்து கூட்டத்திற்கு வெளியே விழுந்தது. சுமேதா அதன் ஓசைக்குத் திரும்பினாள். அருகிலிருந்த உதவியாளனும் திரும்பியிருந்தான்.
தச்சர் மூச்சை நீளமாக விட்டார். அளவுக்கயிற்றைப் பற்றியிருந்த விரல்களை ஒவ்வொன்றாகத் தளர்த்தினார். உள்ளங்கையை வேட்டியில் தேய்த்துக்கொண்டார்.
துந்துபி தன் ஆளிடம் தோட்டத்திற்குப் போகச் சொன்னார். “தச்சர் வருகிறார். எந்தப் புதர் என்று காட்டு.”
அவன் அரிவாளை எடுத்தபோது இளைய ஜைமினியைப் பார்த்தான். அவர் பாதையை நோக்கிக் கையசைத்தார்.
ஆட்கள் பாதையிலிருந்து விலகினார்கள். துந்துபி முன்னால் நடந்தார். அதியன் அவரைப் பின்தொடரவில்லை. நீர்க்குடத்தின் அருகே சென்று நின்றார். அவரது தோட்டக்காரன் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துக் கொடுத்தான்.
சுமேதா மூத்த ஜைமினியுடன் பாதையில் இறங்கினாள். திரும்பிப் பார்த்தபோது அதியன் இன்னும் குவளையைக் கையில் வைத்திருந்தார்.
தோப்பிற்கு வெளியே வெயில் முகத்தில் பட்டது. அவள் கண்களைச் சுருக்கிக்கொண்டாள். பத்ரன் முன்னால் நடந்துகொண்டிருந்தான். அவனுடன் பேசிக் கொண்டு உக்ரதேவன் சென்றுக் கொண்டிருந்தான். பத்ரனின் கையில் இருந்த கயிற்றின் நுனி மண்ணில் இழுபட்டது.
அதைக் கூப்பிட்டுச் சொல்ல அவள் வாயெடுத்தாள். குரல் வரவில்லை. விரைந்து சென்று அவன் கையைத் தொட்டாள்.
***
மூங்கில் தோப்பில் நிகழ்ந்தது போன்ற வழக்குகள் விசோனின் ஊர்கள்தோறும் நிகழ்ந்தன. ஒவ்வொன்றிலும் ஜைமினிகள் ஒரே கேள்வியைக் கேட்டார்கள். சொல் என்ன சொல்கிறது? எதைச் செய்யச் சொல்கிறது? ஒவ்வொரு தீர்ப்பும் அடுத்த தீர்ப்புக்கு வழியானது. காலகாலமாக மறைச்சொற்களின் பொருள் கொள்ளும் முறை இவ்வாறு உருவானது. அதை அறத்தின் நெறியாகப் பேண, ஜைமினிகள் அதைச் சடங்குகளில் நிலைபெறச் செய்தனர்.
பத்ரனின் கேள்விக்குச் சுமேதா சொல்லி முடிக்காமல் விட்ட பதிலை அவர்கள் தலைமுறைகளாகச் சொல்லி முடித்தார்கள்.
ஆகவே,
சொல்
செவியில் நின்றுவிடுவதில்லை.
செய்யப்பட வேண்டிய ஒன்றை
நம்முன் வைக்கிறது.
அதை நோக்கி
நம் கைகள் நீளும்போது
அறத்தின் பாதை தொடங்குகிறது.
என அறத்தின் நெறியை அவர்கள் விசோனியர்களிடம் சொன்னார்கள்.
சொல் செயலைச் சுட்டும் தருணங்களை அவர்கள் ஒவ்வொன்றாகத் தொகுத்தனர். அவற்றிலிருந்து அறத்தின் பாதையை உசாவினர்.
பல தலைமுறைகளுக்குப் பிறகு, அவ்வரிசையில் வந்த ஜைமினி ஒருவர் மரபின் ஒட்டுமொத்த சாரத்தையும் சூத்திரங்களாகத் தொகுத்தார்.
மறைகளின் வெளிச்சத்தில்,
வாழ்வின் பொருள் தேடி
மனதிற்குள் ஒரு கேள்வி முளைக்கிறது.
“எது அறம்?”
அதை அறிந்துகொள்ளும் வேட்கையே
இனி நம் பயணம்.
அந்தக் கேள்வியையே அவர் தன் முதல் சூத்திரமாக அமைத்தார்.
“அதாதோ தர்மஜிக்ஞாஸா.”
அது விசோனில் நிலைபெற்றுத் தொடர்ந்தது. விசோனியர்கள் அதைச் “சிந்தித்து, ஆய்ந்தறியும் வழி” என அறிந்தார்கள்.
