Site icon சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026

கம்பனின் கவித் தீண்டலில் இராம காதை  

Source: The Rama Story as Embellished by Kamban
Delhi Journal of Comparative Studies
Volume01, Issue 01 August 2021

எண்ண முடியாத தொன்மையான காலத்தில் வாழ்ந்து வந்த பழங்குடியினரின் கூட்டு ஆழ்மனதில் இருந்து இராமரின் கதை ஒருவேளை தோன்றிருக்கலாம். நீண்ட காலம் வாய்மொழி மரபாகவே நீடித்த இந்தக் கதை, புத்தரின் ஜாதகக் கதைகள் (500 பொ.யு.மு.) வழியாக எழுத்து வடிவத்தை வந்தடைந்தது. இது பௌத்தத்தின் ஆன்மீகப் புராணக் கதைகளின் இன்றியமையாத பகுதியாக இருந்தது. எளிய, நேரடியான இந்தக் கதையில், கௌதம புத்தர் முக்தி  நிலையினை அடைவதற்கு முன் உள்ள பரிணாமத் தோற்றங்களில் ஒன்றாக இராமன் காண்பிக்கப்படுகிறார். தனது சாத்வீக மரபிற்கு பொருத்தமாக வன்முறையும் போரையும் வேண்டுமென்றே தவிர்த்து, வளர்ப்புத் தாயின் கோபத்தை தவிர்க்க இராமன் தானாகவே இமயமலைக்குச் செல்வதாக இந்தக் கதை மாற்றிமைக்கப்பட்டது .

‘ஆதிகவி’ என்று போற்றப்படும் வால்மீகி, தன் காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவி வந்த தொன்மங்களையும் வரலாற்றுக் கதைகளையும் சேகரித்து, அவற்றை இராமனின் கதையோடு ஒருங்கிணைத்தார். வடக்கே நேபாளம் முதல் தெற்கே இலங்கை வரை பரந்து விரிந்த பிரம்மாண்டமான பின்னணியில், இந்தக் கதைசொல்லலுக்குக் கருப்பொருள் தொடர்ச்சியை அவர் உண்டாக்கினார். இந்த உள்ளடக்கிய தன்மையால், அனைத்துப் பிராந்திய மக்களும் தங்களுக்கே உரிய தனித்தன்மையோடு இந்த காவியத்தோடு அடையாளப்படுத்திக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, அந்தந்தப் பகுதி மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டபோது, பல்வேறு கலாச்சார மற்றும் மொழி சார்ந்த பன்முகத்தன்மையின் பங்களிப்பினால் இக்கதை அகில இந்தியத் தன்மையை அடைந்தது. இவ்வாறாக, இராமாயணம் இந்தியக் கலாச்சார மனநிலையின் உள்ளமைந்த ஒன்றாக  மாறியது.

மேற்கத்திய நாடுகளில், ஹோமர் (Homer) மற்றும் வர்ஜில் (Virgil) ஆகியோரின் படைப்புகள் ஐரோப்பிய மொழிகளில் கொண்டு வரப்பட்டபோது, மூல வடிவத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் அவை எவ்வளவு நெருக்கமாக இருக்கின்றன என்பதே அப்படைப்புகளின் தரத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோலாகக் கொள்ளப்பட்டது. மாறாக இந்திய சூழலில், மூலக் கதையைத் தங்கள் மொழிகளில் மொழிபெயர்க்கும் மகத்தான பணியில் ஈடுபட்டவர்கள் இயல்பாகவே தம்மளவில் சிறந்த கவிஞர்களாகத் திகழ்ந்தமையால், நம்முடைய கலாச்சார மரபு இலக்கிய சுதந்திரத்தைச் சற்று தாராளமாகவே வழங்கியது.

பதிமூன்று மொழிகள், எண்ணற்ற நாட்டார் மரபுகள் எனப் பயின்று வந்திருக்கும் இராமாயணம், பலராலும் தங்களுக்குக்கே உரிய பிராந்தியத் தனித்தன்மையை முதன்மைக் கருப்பொருளோடு இயல்பாக இணைத்துப் படைக்கப்பட்டிருக்கிறது.

தொடக்க நூற்றாண்டுகளைச் சேர்ந்த சங்க இலக்கியங்கள் (பொ.யு.மு 200 – பொ.யு. 200), தனிமனித மற்றும் சமூக ஒழுக்கத்திற்கான இணையற்ற வாழ்வியல் வழிகாட்டியான திருக்குறள் (பொ.யு. 450 – 500), இளங்கோவடிகள் என்ற சேர மன்னரால் இயற்றப்பட்ட மிக நேர்த்தியான, நுட்பமான காப்பியமான சிலப்பதிகாரம் (பொ.யு. 200), எல்லாவற்றிற்கும் மேலாக பக்திக் காலத்து (பொ.யு. 500 – 1000) கவிஞர்களின் தன்னிச்சையான பக்திப்பெருக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ் இலக்கிய மரபின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கம்பனின் (பொ.யு. 12-ஆம் நூற்றாண்டு) காப்பியம் விளங்குகிறது. “மனிதர்களுக்கு இறைவனின் வழிகளை நியாயப்படுத்துவதற்காக” மட்டுமன்றி, “கதை சொல்வதில் இருந்த அளவற்ற ஈடுபாட்டினாலும்”, காப்பியத்தின் தொடக்கத்தில் கம்பரே  குறிப்பிட்டபடி “வால்மீகிக்கு செலுத்தும் மரியாதையாகவும் கவிதாஞ்சலியாகவும்” இராமனின் கதையை எழுதினார். வால்மீகி இராமாயணத்தை அப்படியே மொழிபெயர்க்காமல், மூலக் கதையின் கதைசொல்லல் வரிசையில் எந்த மாற்றமும் செய்யாது, ஆனால் தன் சொந்த இலக்கியக் கருத்துகளுக்கும், ரசனைக்கும் ஏற்ப, மிக நுண்ணிய வடிவமாற்றங்களுடன் தேர்ந்த மறு ஆக்கமாக படைத்தார்.

இராமாயணத்தை வெறும் சமய நூலாக இல்லாமல் ஓர் இலக்கியப் படைப்பாகவே எழுத வேண்டும் என்ற தீர்க்கமான பார்வை கம்பனிடம் இருந்தது. ஒருவேளை, வால்மீகிகூடத் தன் காப்பியத்தைப் படைத்தபோது அதைச்  சமய நூலாகக் கருதியிருக்க மாட்டார்; ஆனால் கம்பனின் காலத்தில் அது அப்படித்தான் அறியப்பட்டது. அதற்கு முக்கியக் காரணம், அக்காலத்து உரையாசிரியர்கள் தங்களின் குறுகிய மதக் கோட்பாடுகளை நிலைநாட்டுவதற்காக வால்மீகியின் வரிகளைத் தாராளமாகக் கையாண்டு, தங்களுக்குச் சாதகமாக வளைத்துக் கொண்டனர். இந்தச் சூழல் கம்பனைப் பெரிதும் பாதித்திருக்கக்கூடும். அதனால்தான், எவ்வித மத ஆக்கிரமிப்பும் அற்ற, சமரசமற்ற தூய இலக்கியமாக மட்டுமே தன் படைப்பு இருக்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தார்.

கம்பன், இராமாயணத்தை எழுதிய காலத்திலேயே, இராமனை விஷ்ணுவின் அவதாரமாக வழிபடப்படத் தொடங்கிவிட்ட போதிலும், அவர் தன் காவியத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல்களில் எந்தவொரு மதத் தெய்வத்தையும் குறிப்பிடவில்லை. மாறாக, பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழிக்கும் தொழிலைத் தன் எல்லையற்ற விளையாட்டாகக் கொண்டு விளங்கும் அந்தப் பரம்பொருளை மட்டுமே அவர் வணங்கினார். காவியம் நெடுக பல இடங்களில், பிரபஞ்சத்தை வழிநடத்தும் இந்த ஒற்றை முதன்மைக் கருத்துருவையே பேருண்மை என்று வகைப்படுத்திக் குறிப்பிடுகிறார்.

மதங்களைக் குறித்த கம்பனின் பார்வையை, இராமாயணத்தில் வரும் தருணம் ஒன்றினைக் கவித்துவமாகவும் தத்துவார்த்தமாகவும் அவர் விவரிக்கும் விதத்தில் அறியலாம்.  ஜனகரின் அரண்மனைக்குச் செல்லும் இராமனைக் காண, மிதிலை நகரின் அழகிய மங்கைகள் தங்கள் மாளிகையின் மாடி முகப்பிற்கு விரைகின்றனர். சுந்தர ரூபனான ராமனின் தோளைக் கண்டவர்கள் அதில் இருந்து தங்கள் பார்வையை எடுக்க முடியாமல் அத்தோளைப் பார்த்தபடி இருந்தார்கள். தாமரை போன்ற அவன் திருப்பாதங்களைக் கண்டவர்களும், அவனின் நீண்ட வலுவான கையைக் கண்டவர்களும் அதே நிலையில்தான் இருந்தார்கள். அயோத்தியின் இளவரசனை முழுமையாகக் கண்டவர்கள் அங்கே எவருமில்லை. இந்த அழகியல் விவரணையோடு நிற்காமல், மேலே சென்று  “பல்வேறு மதங்கள்  இருந்தாலும் ஏகமான பரம்பொருளை முழுமையாக உணராமல் போவதைப் போல, மிதிலையின் மாதர்களும் இராமனின் ஒரு பகுதியே மட்டுமே காண முடிந்ததே தவிர அவனது முழு உருவத்தையும் அவர்கள் பார்க்கவில்லை” என்று உரைக்கிறார். 

இராம கதாபாத்திரத்தைக் குறித்து விமர்சகர்கள் வைக்கும் பொதுவான கருத்து — வால்மீகி இராமனைச் சாதாரண மனிதனாகவே சித்தரித்தார், பின்னர் வந்த கவிஞர்கள் தங்களது மறு ஆக்கங்களில் அவனை விஷ்ணுவின் அவதாரமாக்கித் தெய்வ நிலைக்கு உயர்த்தினர் என்பதாகும். கம்பன் இராமாயணம் எழுதிய காலத்தில், ராமன் விஷ்ணுவின் அவதாரமாக வழிபடப்பட்டான் என்பது உண்மைதான். என்றாலும், கம்பனின் இராமன், உன்னத குணங்களை உடைய உத்தம உதாரண மனிதனாய், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் உற்றவராகவே எண்ணி உறவு பாராட்டுபவனாகப் புனைந்துள்ளார் என்பதே கம்பனின் தனிச்சிறப்பாகும்.

நதியைக் கடக்க உதவி செய்த, தன்னிடம் மிகுந்த அன்போடும் தோழமையோடும் இருக்கும் வேடனான குகனை, கம்பனின் இராமன் தனக்கு இணையானவராகவே கருதுகிறான். குகனிடம், “என் தம்பி இலக்குவன் உன் தம்பி, என் மனைவி சீதை உன் அண்ணி, நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்”[1] என்று கூறுகிறான். இராமனுக்கும் குகனுக்கும் இடையே கம்பன் காட்டும் இந்த நெருங்கிய உறவை வால்மீகியின் இராமாயணத்தில் ஏனோ காண முடிவதில்லை. குகன் மீது இராமன் கொண்ட அன்பு சீதையின் மனதில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், அவள் இராவணனால் அசோகவனத்தில் சிறைபிடிக்கப்பட்டிருந்தபோது, தன் கடந்த கால நினைவலைகளில் இந்தச் சம்பவத்தை உருகி நினைவுகூர்கிறாள்.

மிகச் சிறிய கதாபாத்திரங்களின் உளஅடுக்குகள் கூடக் கம்பனின் கவிதையில் திறமையாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. மூலத்தில் வெறுமனே வந்து போகும் கதாபாத்திரமாக இருக்கும் இராவணனின் தம்பியான கும்பகர்ணனை,  விசுவாசத்திற்கும் தர்மத்திற்கும் இடையே சிக்கி தவிக்கும் சோக நாயகனாக படைத்திருப்பார் 

வால்மீகியின் இராமாயணத்தில் கும்பகர்ணன் முரட்டுத்தனமான உருவம் கொண்டவனாகவும், மலை போன்ற உடலமைப்பும், பெருந்தீனியும் கொண்ட ஓர் அரக்கனாகவுமே சித்தரிக்கப்பட்டான். ஆனால், கம்பனின் கவி பொற்கரங்களின் தீண்டலில், அவன் புகழின் உச்சாணிக்கே உயர்ந்து, மகாபாரதத்தின் பீஷ்ம பிதாமகர் மற்றும் ராதேயனுக்கு (கர்ணன்) இணையான மாபெரும் கதாபாத்திரமாக உருவெடுத்தான். கம்பன் செதுக்கிய கும்பகர்ணனின் உருவத்தைப் பார்க்கும்போது, இந்த மூன்று கதாபாத்திரங்களுமே (கும்பகர்ணன், பீஷ்மர் மற்றும் கர்ணன்) விதியின் சாபத்திற்கு ஆளான குழந்தைகளோ என்று எண்ணத் தோன்றுகிறது; ஏனெனில், அவர்கள் மூவருமே அதர்மத்தின் பக்கம் நின்று போரிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டவர்கள். இந்தக் கோணத்தில் கும்பகர்ணனை வெளிப்படுத்துவதற்காக, கம்பன் மூலக் கதையிலிருந்து சற்றே விலகி ஓர் காட்சியை அமைக்கிறான்; சீதையை இராவணன் கடத்தி வந்ததை எதிர்த்த விபீஷணன், தன்னைப் போலவே அந்தச் செயலை எதிர்த்த கும்பகர்ணனைப் போர்க்களத்தில் சந்தித்து, அவனை இராமனின் பக்கம் சேருமாறு கோரிக்கை விடுப்பதாக அக்காட்சி அமைகிறது.

இக்காட்சியின் வழியே கம்பன் இரு முக்கிய நோக்கங்களை நிறைவேற்றுகிறான். முதலாவதாக, தன் உடன்பிறந்தானைத் துறந்து எதிரியோடு கைகோர்த்த விபீஷணனின் செயல் நியாயப்படுத்தப்பட வேண்டும்; இரண்டாவதாக, கும்பகர்ணனின் கதாபாத்திரம் மாபெரும் நேர்மையும், தன் சகோதரர்கள் மீது அளவற்ற அன்பும் கருணையும் கொண்ட வீரப் பெருந்தகையாக மகிமைப்படுத்தப்பட வேண்டும்.

இராமனின் முகாமில் இணைய மறுக்கும் கம்பனின் கும்பகர்ணன் இப்படிப் பதிலளிக்கிறான்: “இல்லை, நீ இராமனுடன் சேர்ந்தது முற்றிலும் சரியே. ஏனெனில், நீ எப்போதும் சமாதானத்தை விரும்புபவன், அதர்மமான போர்களுக்கு எதிரானவன். சீதையை விடுவித்துப் போரைத் தவிர்க்குமாறு இராவணனிடம் உன்னால் இயன்றவரை மன்றாடினாய்; ஆனால் அவனோ உன்னை நாட்டை விட்டுத் துரத்தியதோடு, வெளியேறாவிட்டால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினான். உன்னைப் பொறுத்தவரை, இது அறம் சார்ந்த போராட்டம் -தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையேயான யுத்தம். இத்தகைய மனிதர்களுக்குக் குடும்பத்தின் மீதோ அல்லது நாட்டின் மீதோ இருக்கும் பற்று பொருட்டல்ல. நீதியின் பக்கம் நிற்பவர்கள் இதுபோன்ற குறுகிய எல்லைகளைக் கடந்து விடுகிறார்கள். ஆனால் நானோ, நம் அண்ணன் ஈடுபட்ட அனைத்துப் போர்களிலும் – அது சரி, தவறு என்றெல்லாம் பாராது அவனுடன் நின்றவன். மற்றொருவனுடைய மனைவியைக் கடத்தி வந்த அவனுடைய இந்த அறமற்ற செயலை நான் எதிர்த்தது உண்மைதான். எனினும், இத்தனை காலமாக அவனோடு இணைந்து போரிட்டுவிட்டு, இப்போது அவனை விட்டு விலக முடியாது, அதுவும் அவன் தோல்வியை எதிர்நோக்கியிருக்கும் இந்தத் தருணத்தில் அவனைத் தனியே தவிக்க விட்டு வருவது சுயநலமாகிவிடும். எனவே, நான் என் விதி எதுவாகிலும் ஏற்றுக்கொள்ளுகிறேன். இந்த நொடி முதல் நாம் சகோதரர்கள் அல்ல, எதிரிகள். இராமனின் படையை வீழ்த்துவதற்கு நான் தயங்க மாட்டேன். வாழ்க்கை என்பது தற்காலிகமானது, ஆனால் விழுமியங்கள் என்றும் அழியாதவை.”[2]

 இறக்கும் தருவாயில், கம்பனின் கும்பகர்ணன் இராமனிடம், “உன்னிடம் இரண்டு வாக்குறுதிகளை கோருகிறேன். முதலாவதாக, சிதைந்துபோன என் உடலை என் எதிரிகள் பார்த்து எள்ளி நகையாடுவதை நான் விரும்பவில்லை; எனவே, உன்னுடைய அம்பால் என் உடலை அப்படியே கடலுக்குள் தள்ளிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இரண்டாவதாக, என் அன்பிற்குரிய தம்பி விபீஷணனை உன்னுடைய பொறுப்பில் ஒப்படைக்கிறேன்; ஏனெனில், உன்னோடு போரிட இராவணன் போர்க்களத்திற்கு வரும்போது, அவனுடைய முதல் இலக்கு விபீஷணனாகத்தான் இருக்கும் என்பதை நான் அறிவேன்.” என்று உரைத்தான்.[3]

விபீஷணனுக்காகப் பேசும் கும்பகர்ணனின் இந்தச் செயல், நவீனச் சூழலில் மிக முக்கியமான விவாதத்தை எழுப்புகிறது. தேசபக்தி என்றால் என்ன? ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் ஜெர்மனியை விட்டு வெளியேறிய குடிமக்கள் அனைவரும் தேசபக்தி இல்லாதவர்களா? கும்பகர்ணன் வழியாக கம்பன் இதற்குப் பதில் சொல்கிறான்; “நீதியின் பக்கம் நிற்பவர்கள் வீடு, நாடு போன்ற குறுகிய எல்லைகளைக் கடந்து விடுகிறார்கள்” [4]–  இதனுடன் தேசபக்தி, தேசியவாதம் போன்ற குறுகிய எல்லைகளையும் ஒருவன் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.

கம்பன் காட்டும் சகோதரத்துவக் கோட்பாடு, நாம் முன்பு குகனின் வரலாற்றில் கண்டதைப் போல சாதியக் கட்டுப்பாடுகளை மட்டுமல்லாது, நாட்டின் எல்லைகளையும் கடந்து நிற்பது. குரங்கு குலத் தலைவனான சுக்ரீவனைத் தனது ஆறாவது தம்பியாகவும், பின்னர் பரம எதிரியான இராவணனின் தம்பியும், அசுர குல இளவரசனுமான விபீஷணனைத் தனது ஏழாவது தம்பியாகவும் இராமன் ஏற்றுக்கொள்வதன் மூலம், கம்பன் இந்தச் சகோதரத்துவக் கருப்பொருளைத் தொடர்ந்து வளர்த்தெடுக்கிறான். “இப்போது நாம் எழுவர் ஆனோம், உன்னுடைய தந்தையான தசரதன் விண்ணுலகில் அளவற்ற மகிழ்ச்சி அடைவார்”[5] என்று விபீஷணனிடம் இராமன் உரைக்கிறான். கம்பனின் தேர்ந்த சொற்தேர்விற்கு இந்த உரையாடல் மிகச் சிறந்த சான்றாகும். தசரதனை விபீஷணனின் தந்தையாகக் குறிப்பிடுவதன் மூலம், விபீஷணனைத் தன்னோடு ஒன்றானவனாக இராமன் ஆக்குகிறான். இது, தன் அண்ணன் இராவணனைத் துறந்து வந்ததால் விபீஷணனுக்குள் ஏற்பட்டிருக்கக்கூடிய குற்ற உணர்ச்சியை நீக்கி, அவனுக்குப் பெருத்த மன அமைதியை அளிப்பதாக அமைகிறது.

“உலகம் யாவும் ஒரே குடும்பம்” என்ற உயரிய கருதுகோள் கம்பனுக்கு மிகவும் உகந்த ஒன்று என்பதை அவனது காவியத்தின் பல இடங்களில் நாம் காண முடியும். சங்க இலக்கியத்தின் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றான, கணியன் பூங்குன்றனாரின், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உன்னதமான வரிகளிலிருந்து கம்பன் இந்த ஈர்ப்பைப் பெற்றிருக்கக்கூடும்.[6]

தொலைதூர, கட்புலனாகாத விண்ணுலகில் தெய்வமாக இருப்பதை விட, இறைவன் இந்த மண்ணுலகில் மனிதனாக அவதரிப்பதே தமிழ் பக்திக் கவிகளான ஆழ்வார்களுக்கு (பொ.யு. 700-900) அதிகப் பொருத்தமுடையதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருந்தது. அவர்கள் பார்வையில், மனிதனுக்குள் அளப்பரிய ஆற்றல் மறைந்துள்ளது; அதனைச் சரியாக வெளிக்கொணர்ந்து பயன்படுத்தினால், அவனால் தெய்வநிலையை அடைய முடியும். இத்தகைய மனிதனின் முன்மாதிரியைக் கம்பன் இராமனின் வடிவில் நமக்குக் காட்டுகிறான்; நம்மைப் போலவே மனிதனான இராமன் எண்ணற்ற உணர்ச்சிப் போராட்டங்களையும் வாழ்வியல் தவிப்புகளையும் எதிர்கொண்டு, இறுதியில் அவற்றையெல்லாம் வென்று வெற்றியை அடைகிறான்.

கம்பனின் கதாபாத்திரங்கள் – அவர்கள் நாயகர்களாக இருந்தாலும் சரி, வில்லன்களாக இருந்தாலும் சரி – முற்றிலும் நற்பண்புகள் நிறைந்தவர்களாகவோ அல்லது முற்றிலும் தீயவர்களாகவோ படைக்கப்படவில்லை. இராமனேகூட சில கறைகளைக் கொண்டிருந்தான்; வாலி சற்றும் எதிர்பாராத தருணத்தில் அவனைக் கொன்றது அதற்குச் சான்றாகும். சுக்ரீவனுடன் போரிடுவதற்கான சவாலை ஏற்கும் முன்பு, சுக்ரீவனுக்கு இராமனின் ஆதரவு இருப்பதைத் தாரை நினைவூட்டுகிறாள். அப்போது கம்பனின் வாலி தன் மனைவியிடம், “தன் அரசாங்கத்தையே தன் தம்பிக்குத் தாரை வார்த்துக் கொடுக்கத் தயங்காத இராமனைப் போன்ற உன்னத ஆத்மா, இத்தகைய கொடிய பாவத்தைச் செய்யும் அளவிற்குத் தாழ்ந்து போவான் என்று நீ நினைக்கிறாயா?” என்று கேட்கிறான்.[7]

ஆனால், அங்கேதான் விதியின் முரண் நகையாக, இராமன் வாலியை மறைந்திருந்து கொன்றான். பெரும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த வாலி, தன் ஏமாற்றத்தைக் கொஞ்சமும் தயக்கமின்றி அடுக்கடுக்கான கேள்வி கணைகளாய் தொடுத்தபோது, இராமனால் தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவே முடியாமல் போனது. குற்ற உணர்ச்சியில் தவிக்கும் இராமனின் நிலையைக் கம்பன் மிக நுட்பமாகவும் அசாத்திய கலை உச்சத்தோடும் செதுக்கியிருக்கிறான்.

கம்பன் காட்டும் இராவணன் வெறும் காமமும் வன்முறையும் மட்டுமே கொண்ட, இரக்கமற்ற, கொடூரமான வில்லன் அல்ல. அவன் மாபெரும் வீரன்; சீதையை நேரில் காண்பதற்கு முன்பே அவள் மேல் அவன் கொண்ட காதல்தான் அவனுடைய பேரிழப்பிற்கு அடித்தளமிட்டது. அவன் தங்கை சூர்ப்பணகை சீதையின் பேரழகைக் கண்முன்னே நிறுத்துவது போல விவரிக்கும் வேளையிலேயே, இராவணனின் அகம் சீதையைக் கண்டுவிட்டது. தன் மனக்கண்ணில் தோன்றும் அந்த உருவம் சீதைதானா என்று அவன் கேட்க, அவளோ “இல்லை, அது இராமன்” என்று பதிலளிக்கிறாள்; ஏனெனில், அவள் சீதையை வர்ணித்துக் கொண்டிருந்தாலும், சிந்தனை முழுவதும் தன் மனத்தில் நிறைந்திருக்கும் இராமனையே எண்ணிக் கொண்டிருந்தாள்! கம்ப இராமாயணத்தின் மிக அழகான, காதல்நயம் ததும்பும் பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்தக் குறிப்பிட்ட நிகழ்வு இராவணனின் விதியைத் தீர்மானிக்கப் போகிறது என்பதால், கம்பன் இக்காட்சியை அசாத்திய நாடகத் தன்மையோடும் கலைத்தன்மையோடும் படைத்திருப்பார்.

காதலுக்காகத் தனது பேரரசையே இழக்கத் தயாராக இருந்தான் இராவணன். போரில் கிட்டத்தட்டத் தோற்கும் நிலையை எட்டியிருந்த தருணத்தில், அவன் மகன் இந்திரஜித் சீதையை விட்டுவிடுமாறு அவனிடம் கூறினான். அதற்கு இராவணன், “நீயும், உன் சித்தப்பாக்களும், எனது மாபெரும் சேனையும் எனக்குத் துணையாக நிற்பீர்கள் என்ற நம்பிக்கையில் நான் என் எதிரியைத் தேர்ந்தெடுக்கவில்லை; மாறாக, எல்லாவற்றையும் விழுங்கி நிற்கும் பேராற்றல் கொண்ட காதல் உணர்வால் உந்தப்பட்டு, என் சொந்த மனவலிமையின் மீதே நான் இந்த முடிவை எடுத்தேன். தன் மனைவியை மீட்பதற்காக இறுதிவரை போராடினான் என்று இராமனின் பெயர் எப்போதெல்லாம் நிலைத்து நிற்குமோ, அப்போதெல்லாம் கடைசி வரை பணிய மறுத்தான் என்று என் பெயரும் அதனுடன் இணைந்தே நிற்கும்” என்று பதிலளித்தான்[8]. இது மில்டனின் ‘பாரடைஸ் லாஸ்ட்’ காவியத்தில் வரும் சாத்தானின் (Satan) இடிமுழக்கத்தை நமக்கு நினைவூட்டுகிறது:

களமிழந்தாலென்ன
அனைத்தையும் இழக்கவில்லை.
வெல்லவியலா உறுதி,
தீராப் பழிவெறி, தணியா வெறுப்பு,
பணியாமை, கைவிட மறுக்கும் துணிவு
இன்னும் நம்மிடமே. [9]

Milton, J. Paradise Lost, “Book I”, lines 105-108. 1667

சீதையின் மீது இராவணன் கொண்ட காதல் வெறும் உடலின் மீதான மோகம் மட்டுமல்ல; அது மனத்தில் தோன்றிய, எவ்விதக் கலப்புமற்ற தூய்மையான, மென்மையானதொரு உணர்வு என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதற்குரிய எந்தவொரு வாய்ப்பையும் கம்பன் தவறவிடவில்லை. சீதையை அசோகவனத்தில் சிறை வைப்பதற்கு முன்பே, அவன் அவளைத் தன் இதயத்திற்குள் சிறை வைத்திருந்தான்! அதனால்தான், போரின் இறுதியில் இராமனின் அம்பு இராவணனின் மார்பைத் துளைத்தபோது, அது அவனது ஆழமனதில் சீதையின் மீது வைத்திருந்த காதல் உணர்வைத் தேடிப்பிடித்து, அதை அப்படியே அள்ளிக்கொண்டு முதுகின் வழியே வெளியேறியது என்று கம்பன் பாடுகிறான்! சிவனின் உறைவிடமான கயிலை மலையையே பெயர்த்தெடுத்த அந்த மாவீரனின் புகழ்பெற்ற கடந்த காலத்தோடு, அவனது இந்த மாபெரும் வீழ்ச்சியை ஒப்புநோக்கி கம்பன் மிக அழகாகப் படம்பிடித்துள்ளார். எத்தகையதொரு வீழ்ச்சி, எல்லாமே காதலுக்காக!

சோழப் பேரரசுகளின் பொற்காலத்தில் கம்பன் வாழ்ந்தபோதிலும், தனது காவியத்தில் சாதாரண, எளிய கொடைவள்ளலின் பெயரைப் பத்து இடங்களில் குறிப்பிட்டுத் தனது காவியத்தை அவனுக்குக் காணிக்கையாக்கியுள்ளார். இதைக் காணும்போது, அவரது காலத்தில் வாழ்ந்த ஏனைய இலக்கியத் தரம் குறைந்த புலவர்களைப் போலக் கம்பன் அரச ஆதரவைப் பெற்றிருக்கவில்லை என்ற முடிவுக்கு வர நமக்குத் தோன்றுகிறது. இந்த உன்னதப் பெருங்கவியைப் பற்றிய வாய்மொழிக் கதைகளும் இக்கருத்தை உறுதிப்படுத்தவே செய்கின்றன.

தேவையான கம்பராமாயண மேற்கோள்களைத் தந்து உதவிய பேரா. ஜி. ராஜகோபாலுக்குக் கட்டுரையாசிரியரும், சஞ்சிகையாசிரியரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள். 

Notes

[1] Kamban. Sri Kambaramayanam. “Ayodhya Kandam” (Canto II), Gangaippadalam section (6th chapter), poems 73–74. Commentator Vai.Mu. Gopalakrishna Achariyar. Chennai: Vai.Mu. Gopalakrishna Achariyar & Company, 1966.

[2] Ibid. “Yuddha Kandam” (Canto VI), Kumbakarnan Vadaippadalam section (1st part, 15th chapter), poems 156–167. Commentator Vai.Mu. Gopalakrishna Achariyar. Chennai: Kuvai Publications, 1970.

[3] Ibid. “Yuddha Kandam” (Canto VI), Kumbakarnan Vadaippadalam section (1st part, 15th chapter), poems 356–360. Commentator Vai.Mu. Gopalakrishna Achariyar. Chennai: Kuvai Publications, 1970.

[4] Ibid. “Yuddha Kandam” (Canto VI), Kumbakarnan Vadaippadalam section (1st part, 15th chapter), poem 160. Commentator Vai.Mu. Gopalakrishna Achariyar. Chennai: Kuvai Publications, 1970.

[5] Ibid. “Yuddha Kandam” (Canto VI), Vibhishanan Adaikkalappadalam section (1st part, 4th chapter), poem 146. Commentator Vai.Mu. Gopalakrishna Achariyar. Chennai: Kuvai Publications, 1970.

[6] Punkunranar, Kaniyan. Purananuru, poem 192. Translators G.L. Hart & H. Heifetz. Delhi: Penguin Books India, 2002. Also see Avvai S. Duraisamy Pillai, commentator. Purananuru. Chennai: The South India Saiva Siddhanta Works Publishing Society, 1947.

[7] Kamban, Sri Kambaramayanam, “Kishkinda Kandam” (Canto IV), Vali Vadaipadalamsection (7th chapter), poems 33–35. Commentator Vai.Mu. Gopalakrishna Achariyar. Chennai: Noble Press, 1931.

[8] Ibid. “Yuddha Kandam” (Canto VI), Indrajit Vadaippadalam section (2nd part, 27th chapter), poem 10. Commentator Vai.Mu. Gopalakrishna Achariyar. Chennai: Kuvai Publications, 1970.

[9] Milton, J. Paradise Lost, “Book I”, lines 105-108. 1667. London: Penguin Classics, 2000.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: 

வி. வெங்கட பிரசாத் சென்னையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர்; தற்போது கனடாவில் வசித்து வருகிறார். தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்தாலும், இலக்கிய மொழிபெயர்ப்பின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். ஆங்கிலத்தில் உள்ள சிறந்த சிறுகதைகள் மற்றும் ஆளுமைகள் குறித்த கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதில் தொடர்ந்து இயங்கி வருகிறார். சமகாலத் தமிழ்க் கவிதைகள் (தேவதேவன், தேவதச்சன், யுவன் சந்திரசேகர், இசை போன்றோரின் படைப்புகள்) மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இவருடைய மொழிபெயர்ப்புக் கதைகளும் கவிதைகளும் சொல்வனம், பதாகை, மற்றும் கவிதைகள்.இன் ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன.

Exit mobile version