மொழிபெயர்ப்புப் படைப்புகளை வாசிக்கும்போதெல்லாம், மகாகவி பாரதிதான் நினைவுக்கு வருவார். உலகத்து இலக்கியச் செறிவுகளையெல்லாம் தமிழில் கொண்டு வரவேண்டும்; அதுபோலவே, தமிழின் சிறப்புகளெல்லாம், உலகத்து மொழிகளில் எதிரொலிக்கச் செய்ய வேண்டும் என்று விரும்பி, எழுதியவன் அல்லவா?
‘வெளிநாட்டு இலக்கியப் பத்திரிகைகளில் வரும் பல நாட்டு மொழிகளில் மொழிபெயர்த்து வரும் சிறுகதைகளும், கட்டுரைகளும் சுவாரஸ்யமாக இருக்கும். தமிழ் மொழிபெயர்ப்பு எங்காவது கண்ணில்படுமா என்று தேடுவேன். ஏமாற்றம்தான் மிஞ்சும்’ என்று ஆதங்கப்படும் அ.முத்துலிங்கம் அவர்கள் மொழிபெயர்த்துள்ள (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு) உலகச் சிறுகதைகளின் தொகுப்பு நூல் ‘பூனை மனிதன்’.
கதைகளைவிட, முத்துலிங்கம் அவர்களின் முன்னுரையில் குறிப்பிடும் சம்பவங்களும், ஒவ்வொரு கதாசிரியரின் மனோபாவம் மற்றும் அவர்களது அனுபவப் பகிர்வுகளும் மெல்லிய நகைச்சுவையுடன் கூடிய சுவாரஸ்யங்கள்! ஜெர்மனியில் பெர்லின் நகரில் வசிக்கும் எழுத்தாளர் ஒருவர் முத்துலிங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், ‘எப்போது பெர்லின் நகருக்கு வந்தாலும் தன் வீட்டு அழைப்பு மணியை அடியுங்கள்’ என்று கரிசனையுடன் அழைத்திருந்தாராம் – ‘ஆனால் வீட்டு முகவரியைத் தர மறந்துவிட்டார்’ என்று அ.மு. குறிப்பிடுகின்றார்!
வெவ்வேறு வகையான மனிதர்கள், கலாச்சாரம், மொழி, சிந்தனை என வருவதால், இத்தொகுப்பின் கதைகளை ஒரு வகைமைக்குள் கொண்டுவர முடியாது! கதைகளின் சிறப்பு, அவை சொல்லப்படும் உத்தியிலும், வாசகனை உள்ளிழுத்து அவனுக்குள் கேள்விகளை எழுப்புவதிலும், யதார்த்த நிலையில் நடமாடும் பாத்திரங்களின் முரண்களிலும் உள்ளது.
“தொகுப்பில் காணப்படும் கதைகள் எல்லாம் அதிஉயர்ந்த கதைகளாக இல்லாவிட்டாலும், உலகத்துச் சிறுகதைகளின் வளர்ச்சி, வித்தியாசமான களங்கள், நம்மை அதிசயிக்கவைக்கும் எத்தனை விதமான மனிதர்கள், ஆசிரியர்களின் மாறுபட்ட குணாதிசயங்கள்” என வியக்கிறார் அ.மு.
பதினாறு எழுத்தாளர்கள் (முத்துலிங்கம் அவர்களையும் சேர்த்து) – சைமன் ரிச், ஃபாரா அஹமெட் (ஆங்கிலம்), ஜேசிப் நோவாகோவிச் (யூகோஸ்லாவியா), டொலி ரீஸ்மான் (ஆங்கிலம்), டேவிட் செடாரிஸ் (அமெரிக்கா), குழலி மாணிக்கவேல் (கனடாவில் பிறந்த இந்தியர்), தோமஸ் கோர்ஸ்கார்ட் (டேனிஷ்), மொஹமட் நசீகு அலி (அமெரிக்கா), கிரிஸ்டென் ரூப்பினியான் (ஆங்கிலம்), சமன்ரா ஸ்வெப்லின் (ஸ்பானிஷ்), ஹன்னா கிராப்ட்ஸ் (அமெரிக்கா), டேவிட் பெஸ்மொஸ்கிஸ் (லற்வியா – கனடா), அனெற் சான்போஃர்ட் (அமெரிக்கா), எட்வர்ட் பி.ஜோன்ஸ் (அமெரிக்கா), அ.முத்துலிங்கம் (கனடா), ஜனிகா ஓசா (கனடா) – எழுதிய கதைகளின் ஆங்கில வடிவிலிருந்து, தமிழுக்கு மொழிபெயர்த்தவர் அ.முத்துலிங்கம். அவரது நேரடிக் கதை, ‘சைபர் தாக்குதல்’. ஒரு சைபர் கம்பெனியின் சொந்தக்காரர், சைபர் குற்றங்களை நொடியில் தகர்த்துவிடும் திறமைசாலி, “அற்ப விசயம் ஒன்று கொடுக்கும் அற்ப சந்தோசத்துக்காக அற்ப காரியம் ஒன்றைச் செய்யலாம். தப்பே இல்லை” என்று சொல்லும் தருணத்தை நோக்கிச் செல்லும் சுவாரஸ்யமான கதை!
‘சைமன் ரிச்’ எழுதியுள்ள ‘எடிசன் 1891’. நகரும் படங்களைப் படைக்கவல்ல ஒரு கருவியை – ‘கினெட்டோ கிராஃப்’- உருவாக்கி, அதில் தனது முட்டாள் உதவியாளரை நடிக்க வைக்கிறார். பரிதாபமாகக் கம்புகளைச் சுழற்றும் அந்தப் பையன் நடித்த திரைப்படத்திற்கு ‘நியூயார்க் விளையாட்டு வீரன்’ எனக் கேலியான பெயரை வைக்கிறார். பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த கருவியைவிட அதில் நடித்த முட்டாள் பையனை அனைவரும் பாராட்டி மகிழ்ந்து அவனுக்குப் பின்னால் ஓடுகின்றனர். மக்கள் மீது இன்றைய சினிமாவின் தாக்கத்தை அன்றே எடிசனை உணர வைத்ததாகக் கூறப்படும் சிறுகதை நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது.
வண்டார்குழலி மாணிக்கவேல் கனடாவில் பிறந்து, 13 வயது வரை வாழ்ந்த பிறகு, தன் சொந்த நாடான இந்தியாவுக்குத் திரும்புகிறார். அங்கேயே படித்து முழுநேர படைப்பாளராக இன்று நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என எழுதி வருகிறார். அவருடைய ‘சிலை விளையாட்டு’ சிறுகதை இந்தியாவில் நடக்கிறது – திருநெல்வேலிக்கும் நாகர்கோயிலுக்கு இடையில் நடப்பதாகக் கொள்ளலாம்! 2010ல் வெளியாகிய இந்தக் கதையில் காட்டப்படும் இந்தியா, சிதைந்தபோன கிருஷ்ணர் சிலை பற்றிய விவரணைகள் கதாசிரியரின் இடதுசாரி சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றன. ‘கனடாவில் பேகல் சாப்பிடுவது, நாயை மிருக வைத்தியரிடம் கூட்டிப்போவது, மதுக்கடையில் பீர் அருந்தியபடி ஹாக்கி விளையாட்டுகளைப் பார்ப்பது இவற்றைத்தான் செய்கிறாய்’ என்று சொல்லும் கதைசொல்லியை, ‘மூடத்தனம்’ என்கிறாள் அஞ்சலி – முக்கிய கதாபாத்திரமாக வரும் அஞ்சலி, கதாசிரியர்தானோ என எண்ண வைக்கும் கதையோட்டம். நவீன இலக்கியம் என்பது ஏதாவது ஒன்றைச் சார்ந்தோ அல்லது எதிர்த்தோ இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு மதம், ஒரு நாடு, ஒரு கலாச்சாரத்தைப் பகடி செய்வது இக்கதையின் நோக்கமாக இருக்கலாம் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
‘பெண்களுக்கு இடமில்லை’ (லாகூர் கோர்ட் வளாக அனுபவக் கட்டுரை என்கிறார் அ.மு.), ‘அல்லாவே கருணை செய்யும்’ இரண்டு கதைகளும் இசுலாமிய சித்தாந்தங்கள், குடும்பங்கள், கட்டுப்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. ஒரு சிறுவனின் பார்வையில் சொல்லப்படும் ‘அல்லாவே கருணை செய்யும்’ கதையின் இறுதியில் வரும் பிரார்த்தனை, மனதைக் கலங்க வைப்பது – எல்லா மதங்களிலும், குழந்தைகள் கருணையுள்ளம் கொண்ட தெய்வங்களே!
‘பூனை மனிதன்’ – நியூயார்க்கர் பத்திரிகையில் வெளியான சிறுகதை – இரண்டு வாரங்களில் 1.5 மில்லியன் மக்கள் படித்த சிறுகதை. உலகத்தின் முதல் வைரல் சிறுகதை என்ற பட்டத்தைப் பெற்ற கதை! இந்தச் சிறுகதை 20 வயது மாணவிக்கும், 34 வயது ஆணுக்குமிடையில் நடந்த உடலுறவு பற்றியும், அதனால் ஏற்படும் உளவியல் ரீதியான மன மாற்றங்களையும் விவரிக்கிறது. “ஆண்களுக்குப் பெண்கள் தங்களைப் பற்றி நகைப்பார்கள் என்று பயம். பெண்களுக்கு ஆண்கள் தங்களைக் கொலை செய்துவிடுவார்கள் என்று பயம்” என்று இக்கதையைப் பற்றிச் சொல்கிறார் கனடாவின் சிறந்த எழுத்தாளரான மார்கிரட் அட்வுட். இக்கதையைத் தமிழில் மொழிபெயர்க்க அனுமதி வாங்க அ.மு. பட்ட சிரமங்கள், கதையை விட சுவாரஸ்யமானவை!
டேவிட் செடாரிஸ் எழுதியுள்ள (‘இப்பொழுது நாங்கள் ஐவர்’) அவருடைய 25 வருடத்து டைரிக் குறிப்புகளை “Theft by Finding’ என்ற புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். வித்தியாசமான டைரிக் குறிப்புகள். தான் கண்ட அபூர்வமான காட்சி, விநோதமான சம்பாசணை, கேள்விப்பட்ட நகைச்சுவைத் துணுக்கு, தொலைபேசி மிரட்டல்கள், வாசகர் கடிதங்கள் என்று டைரியை நிறைத்திருக்கும். பாரிஸில் இவருக்கு பிரெஞ்சு சொல்லிக்கொடுக்கும் கண்டிப்பான ஆசிரியை பற்றிய குறிப்பு சுவாரஸ்யம். (அ.மு. இந்த டைரிக் குறிப்புகளின் சுவாரஸ்யம் கருதி ‘சிறுகதைத் தொகுப்’பில் சேர்த்திருக்கலாம்).
‘அதிர்ஷ்டமில்லாத மனிதன்’ கதையில் மறைமுகமாகத் தெரிவிக்கும் பல விஷயங்கள், வாசகனைத் தொடர்ச்சியாக சிந்திக்க வைக்கின்றன. பெற்றோரின் பதட்டம், போலீஸின் கண்காணிப்பு, பிறந்தநாள் பரிசு, பாலியல் சீண்டல்கள் என கதை சொல்லிக்கு இணையாக வாசகன் வெவ்வேறு தளங்களில் பயணிக்க முடிகிறது.
அ.மு. சில கதாசிரியர்களுடன் அவர்களின் கதைகளைப் பற்றி உரையாடியவை சுவாரஸ்யம் மட்டுமல்ல, சிந்தனையைத் தூண்டுபவையாகவும் உள்ளன.
வித்தியாசமான தொகுப்பு.
