Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

சீட்டுக்கட்டு ராஜ்ஜியம்

கட்டுப்பாட்டின் உலகில் சிந்தனையின் குரல்

ரபீந்திரநாத் தாகூரின் சீட்டுக்கட்டு ராஜ்ஜியம் எனும் படைப்பை மொழிபெயர்ப்பிற்காக நான் தேர்ந்தெடுத்தது அரசியல் சார்ந்த அம்சங்களையும், பண்பாட்டு கூறுகளையும், சமூக உளவியல் பரிமாணங்களையும், நாகரிக மரபுகளையும் ஒருங்கிணைத்து ஆராய வேண்டுமெனும் என் நோக்கத்தினால்.

சீட்டுக்கட்டு ராஜ்ஜியம் என்பது ரபீந்திரநாத் தாகூர் அவர்கள் 1892ஆம் ஆண்டு எழுதிய தாஷேர் தேஷ் என்ற சிறுகதையின் மொழிபெயர்ப்பாகும். இந்தப் படைப்பை எனக்கு அறிமுகப்படுத்தியவர் என் நண்பரும் சக ஆசிரியருமான டாக்டர்.விஜய் விஸ்வநாதன்  (சென்னை அல்கெமி பிளாக் பாக்ஸ் ஸ்டூடியோ-வின் நிறுவுனர்). அவரது இந்தப் பரிந்துரை, ஒரு சாதாரண வாசிப்பு அனுபவமாக மட்டும் இல்லாமல், ஆழமான சிந்தனைகளுக்கும் புதிய பார்வைகளுக்கும் வழிவகுத்தது.

அவரது அறிவும், உணர்வும், இலக்கியத்தின் மீதான ஆழ்ந்த பற்றும், இந்த மொழிபெயர்ப்பை உருவாக்கும் என் முயற்சியில் ஒரு முக்கியத் தூண்டுகோலாக அமைந்தது. இந்தப் படைப்பின் அரசியல், பண்பாட்டு, சமூக உளவியல் அடுக்குகளை உணர்ந்து அணுகும் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக, அவருக்கு என் மனமார்ந்த நன்றியும் மரியாதையும். இந்த மொழிபெயர்ப்பை டாக்டர் விஜய் விஸ்வநாதன் அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

வெளிப்படையாக எளிமையான உவமைக்கதையாகத் தோன்றும் தாகூரின் இந்த படைப்பு, நிலையான விதிமுறைகளை மட்டும் கடைப்பிடிக்கும் ஒரு கட்டுப்பட்ட ராஜ்ஜியத்தை விவரிப்பதன் மூலம், ஒழுங்கை கட்டாயப்படுத்தி, முழுமையான ஒற்றுமையை வலியுறுத்தி, சிந்தனை அற்ற விசுவாசத்தை கோரும் அமைப்புகள் எவ்வாறு தங்களது கட்டுப்பாட்டை நிலைநிறுத்துகின்றன என்பதைக் கூர்மையாக ஆய்வு செய்கிறது. இது அனைத்து பண்பாடுகளிலும் காணப்படும் சமூக நடத்தைக் கூறுகளை பிரதிபலிக்கிறது. ஏனெனில் அமைப்புகள், நம்பிக்கைக் கோட்பாடுகள், பண்பாட்டு நடைமுறைகள் ஆகியவை வழிகாட்ட வேண்டிய இடத்தில் மனித சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் அளவுக்கு உறைந்து விடுகின்றன.

இந்த படைப்பு, அதிகார அமைப்புகள் தங்களை நிலைநிறுத்தும் இரு முக்கிய முறைகளை வெளிப்படுத்தும் நிலையான பார்வையை எனக்கு வழங்கியது. சீட்டுக்கட்டுக்கள் என்பது கதாபாத்திரங்களாக மட்டுமல்லாது, உளவியல் நிலைகளாகவும், சமூகப் பங்குகளாகவும், மரபாகப் பெற்ற நடத்தைகளாகவும் செயல்படுகின்றன. அவை மனிதர்கள் தங்கள் நிகழ்கால உரையாடல்களை உருவாக்க பயன்படுத்தும் கருவிகளாகும்.

இந்தப் படைப்பை மொழிபெயர்ப்பது, அதன் இன்றைய காலப்பயனை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக எனக்கு அமைந்தது. தாகூரின் ஆய்வை நவீன மொழிநடைகளிலும், தற்போதைய பண்பாட்டு சூழல்களிலும் மீளுருவாக்குவது அவசியமாகிறது. ஏனெனில் சமூகமே தாகூரின் காலத்திலிருந்து எவ்வளவு குறைந்த முன்னேற்றமே கண்டுள்ளது என்பதை இன்றைய வாசகர்கள் உணர வேண்டும். இன்றைய உலகில் மனிதர்கள் உறுதியான அடையாளக் குழுக்களாகவும், பிரிந்த கருத்தியல் அணிகளாகவும் பிரிக்கப்படுகின்ற சூழலில், இந்த உரை நிஜத்தின் பிரதிபலிப்பாகவும், அதேசமயம் எச்சரிக்கை குரலாகவும் விளங்குகிறது.

பாரம்பரியம் நிலைத்த ஒன்றாக அல்லாது, தொடர்ச்சியான மறுபரிசீலனையை வேண்டிய இயக்கமான செயல்முறையாகவே நான் அணுகுகிறேன். தாகூரின் மரபைப் பின்பற்றுவோர், அனைத்து மரபுகளையும் தங்களுடைய தற்போதைய அறிவுடன் ஒப்பிட்டு மதிப்பிடுவதில்தான் உண்மையான பண்பாட்டு வலிமை இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த மொழிபெயர்ப்பு மொழி எல்லைகளைத் தாண்டி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலாக அமைகிறது.

அதிகாரக் கட்டுப்பாட்டு அமைப்புகள் முழு சமூகங்களின் மீது தங்களது ஆதிக்கத்தை நிறுவுகின்றன. அடக்குமுறையால் நிறுவப்பட்ட நடைமுறைகள் அவற்றின் செயல்பாட்டை நிர்ணயிக்கின்றன. ரபீந்திரநாத் தாகூரின் தாஷேர் தேஷ் எனும் படைப்பு, சுய சிந்தனையை விட்டு கட்டுப்பாட்டுக்குள் உள்ள நடத்தை முறைகளையும், உயிருள்ள மனிதர்களை நிரந்தரமாக உறைந்த அமைப்புகளாக மாற்றிய சமூகத்தையும் ஆய்வு செய்யும் ஒரு கதை வடிவத்தை முன்வைக்கிறது. இந்த நிலைமை, கற்பனைக் கதை போல இல்லாமல் ஒரு ஆன்மப் பரிசோதனை போல தன்னை வெளிப்படுத்துகிறது.

சீட்டுக்கட்டுக்களின் ராஜ்ஜியம், தனி ஒரே அடக்குமுறை ஆட்சியாளரால் கட்டுப்படுத்தப்படுவதில்லை. அதன் உறுப்பினர்களே தங்களுக்காக உருவாக்கிய விதிகளின் மூலம் இயங்குகிறது. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட பங்கு வழங்கப்படுகிறது. அது அவர்களின் செயல்களையும், மற்றவர்களுடன் அவர்கள் தொடர்பு கொள்ளும் முறையையும் தீர்மானிக்கிறது. இந்த நிலைமை, மனிதர்களின் இயல்பான மன செயல்பாடுகளை அனுபவிக்க முடியாத மன அடிமைத்தனத்தை உருவாக்குகிறது. நிறுவன விதிகள் மனக்கட்டமைப்புகளாக மாறும் போது, மனித மனம் நிரந்தரமாக கட்டுப்பாட்டுக்குள் சென்று விடுகிறது.

மனிதர்கள் தங்களது வாழ்க்கையை ஒரு நிலையான நிலையாகவே உணரத் தொடங்குகிறார்கள். அது அவர்களுக்குப் பொதுவான வாழ்க்கை முறையாக மாறுகிறது. இளவரசன் ஒரு வெற்றிகரமான ஆட்சியாளராக இல்லாமல் ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புபவனாக களத்தில் நுழைகிறான். இந்த நிலைமை முன்பு இருந்த எதையும் விட அதிக ஆபத்தை உருவாக்குகிறது. கடுமையான கட்டமைப்புகளை சார்ந்த அமைப்புகள், நேரடியாக எதிர்க்கும் மனிதர்களைவிட, மனித ஆர்வத்திலிருந்து அதிக பாதிப்பை அனுபவிக்கின்றன. ஆர்வம் மனிதர்களின் பழக்கப்பட்ட நடைமுறைகளை உடைக்கிறது. அது புதிய வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் உண்மையான மனித இயல்பை வெளிப்படுத்துகிறது.

ஒவ்வொரு சமூகத்திற்கும் அதன் இளவரசன் என்ற ஒரு புரட்சிகர இளைஞனது உருவகம் இருக்கும். அது மக்களை நிலைநிறுத்தப்பட்ட அமைப்புகளை சந்தேகிக்கத் தூண்டும். திணிக்கப்பட்ட அடையாளங்களை சவாலுக்கு உட்படுத்தும். கீழ்ப்படிதலை ஒரு பலவீனத்தின் அறிகுறியாக மாற்றும். இந்த உலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது புரட்சிகள் இல்லை. மனித விழிப்புணர்வே ஆகும். சீட்டுக்கட்டுக்களின் மக்கள் கோபத்தில் பொங்கி எழுவதில்லை. அவர்கள் உணரத் தொடங்குகிறார்கள். கடுமையான கட்டமைப்பின் மீது அமைந்த ஒரு அமைப்பு, உணர்ச்சி, தன்னிச்சை, தனித்துவம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் தருணத்தில் உடையத் தொடங்குகிறது. அமைப்புகள் தங்களது கட்டுப்பாட்டை நிலைநிறுத்த, நிகழ்வுகள் இடையறாத ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். கணிக்க முடியாத நிகழ்வுகள் தொடங்கும் போது, அந்த அமைப்பு தனது கட்டுப்பாட்டை இழக்கிறது.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி அரசியல் கட்டுப்பாட்டை மட்டுமில்லை, மக்களின் மனநிலையிலும் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தியது. புதிய அமைப்பு, சமூக உறவுகளை கட்டுப்படுத்தும் ஒரு படிநிலைக் கட்டமைப்பை உருவாக்கி, படைப்பாற்றலின் மூலம் வெளிப்படுத்தும் திறனை இழந்த மக்களிடம் கீழ்ப்படிதலை கட்டாயப்படுத்தியது.

பிந்தைய காலனித்துவ சமூகங்களில் உண்மையான போராட்டம் அரசியல் போராட்டங்களை விட மனப்போராட்டங்களால் உருவாகியது. இந்த போராட்டங்கள் மூன்று முக்கியமான கட்டங்களாக வெளிப்படுகிறது: மரபாக வந்த கட்டமைப்புகள் மீண்டும் கண்டறியப்படும் அடையாளத்துடன் மோதுவது, அமைப்புக்களின் கடினத்தன்மை பண்பாட்டுத்தன்மைக்கு எதிராக நிற்பது, இந்திய நாகரிக நினைவுகளின் அடுக்குகள் மேற்கத்தியக் கருத்துருவாக்கக் கதைவடிவங்களுடன் முரண்படுவது. இந்த இருதரப்பட்ட எதிர்மறை சக்திகளுக்கிடையேயான முரண்களின் போராட்டங்கள் இந்தியாவில் இன்றும் காணப்படுகிறன. சுதந்திரத்திற்குப் பிறகும் பிரிட்டிஷ் உருவாக்கிய நிர்வாக அமைப்புகளையும் சட்ட வடிவங்களையும் கல்வி மாதிரிகளையும் தொடர்ந்து போற்றிப் பின்பற்றும் நாடாக அது உள்ளது. ஸ்வதேசி இயக்கமும் தற்போதைய பண்பாட்டு மறுமலர்ச்சி முயற்சிகளும் இணை பாதைகளாக வளர்ந்து, தாயக அறிவு முறைமைகளையும் மொழிகளையும் மீட்டெடுத்து, நாகரிக தன்னம்பிக்கையை மீண்டும் நிறுவ முயல்கின்றன. சில சமூகக் குழுக்கள் சுதந்திரத்தின் ஆரம்ப ஆண்டுகளில் உருவான நிறுவன அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு தங்களது நிலைத்தன்மையை உருவாக்குகின்றன. மற்ற குழுக்கள் காலனித்துவத்திற்கு முந்தைய பண்டைய நாகரிக அமைப்புகளுடன் உள்ள தொடர்புகளின் மூலம் தங்களது வலிமையை உருவாக்குகின்றன. முதல் அணுகுமுறை அனைத்திற்கும் மேலாதிக்கம் செலுத்துகிறது. இரண்டாவது அணுகுமுறை முழு சமூகத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.

தாகூர் தனது மேதைமையை அரசியல் அதிகாரத்தை நேரடியாக எதிர்கொள்ளாமல் உளவியல் உண்மைகளை வெளிப்படுத்தும் திறன் மூலம் நிரூபிக்கிறார். சமூக அமைப்புகள் தங்களது நிலைப்பாட்டை இரு முக்கியக் கருவிகளின் மூலம் தக்கவைத்துக்கொள்கின்றன என்பதை அவரது ஆய்வு காட்டுகிறது. முதல் கருவி கட்டாயப்படுத்தும் அதிகாரத்தைச் சார்ந்தது. இரண்டாவது கருவி மனிதர்களின் சிந்தனைகளையும் செயல்களையும் வடிவமைத்து, மனித திறன்களுக்கு வரம்புகளை விதிக்கும் அமைப்பின் திறனைச் சார்ந்தது. இந்திய வரலாற்றின் முழுப் பயணத்திலும், பிரிட்டிஷ் காலனித்துவ காலத்திலிருந்து சுதந்திர இந்திய ஆட்சிக் காலம் வரை, இன்றைய கல்வி மற்றும் பண்பாட்டு தேசிய அடையாள விவாதங்கள் வரை, இரு எதிர்மறை உளவியல் கோட்பாடுகளுக்கு இடையேயான மோதல் தொடர்கிறது. சீட்டுக்கட்டுக்களின் ராஜ்ஜியம் குடிமக்களின் மனப்போக்கு, நீண்ட காலமாக நிலைத்திருக்கும் வலிந்து நிறுவப்பட்ட அமைப்புகளின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையின் மூலம் தனது அதிகாரத்தை நிறுவுகிறது. விழித்தெழும் நாகரிகம் என்ற மனப்போக்கு, பல்வேறு ஆதாரங்களிலிருந்து தனது சக்தியை உருவாக்குகிறது.


மூலம் : ரபீந்திரநாத் தாகூர்

தமிழாக்கம் : விதூஷ்

I

ஒரு காலத்தில் தொலைதூரக் கடலில் தனிமையாக இருந்த ஒரு தீவில் சீட்டுக்கட்டுக்களின் ராஜ்ஜியம் எனும் நாட்டில் ராஜாக்களும் ராணிகளும், ஏஸ்களும் நாவ்களும் (ஜாக்) வாழ்ந்து வந்தனர். பத்துகளும் ஒன்பதுகளும், இரண்டுகளும் மூன்றுகளும், மேலும் பிற உறுப்பினர்களும் பல காலங்களுக்கு முன்பே அங்கே குடியேறி இருந்தனர். ஆனால் இவர்கள் புகழ்பெற்ற அரசச் சீட்டுக்களைப் போல இரண்டாம் பிறப்பினராக இருக்கவில்லை.

ஏஸ், ராஜா, நாவ் ஆகியோர் மூன்று உயர்ந்த ஜாதிகளாக இருந்தனர். நான்காவது ஜாதி கீழ்மட்டக் சீட்டுக்கட்டுக்களின் கலவையால் உருவானது. இரண்டுகளும் மூன்றுகளும் அனைத்திலும் தாழ்ந்தவர்களாக இருந்தனர். இந்தத் தாழ்ந்த சீட்டுக்கள், உயர்ந்த அரசச் சீட்டுக்களுடன் ஒரே வரிசையில் உட்கார அனுமதிக்கப்படவில்லை.

அந்தத் தீவு ராஜ்ஜியத்தின் விதிமுறைகளும் ஒழுங்குகளும் உண்மையிலேயே அதிசயமானவை. ஒவ்வொரு மனிதனின் நிலையும் காலம் தொட்டே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவருக்கும் அவரவர் நியமிக்கப்பட்ட வேலை இருந்தது. அவர்கள் வேறு எதையும் செய்யவில்லை. அவர்கள் செல்லும் இடமெல்லாம் காணாத ஒரு கை விதிகளின்படி அவர்களை வழிநடத்துவது போல இருந்தது.

சீட்டுக்கட்டுக்களின் ராஜ்ஜியத்தில் யாருக்கும் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. யாருக்கும் எந்தத் தீர்மானத்தையும் எடுக்க வேண்டியதில்லை. யாரும் புதிய விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டியதில்லை. குடிமக்கள் அனைவரும் எந்தச் சொல்கூட இல்லாமல் சோர்வான ஓட்டத்தில் நகர்ந்தனர். அவர்கள் விழுந்தாலும் சத்தமில்லை. அவர்கள் முதுகில் படுத்து வானத்தை நோக்கி, ஒவ்வொரு முகமும் என்றென்றும் உறைந்தபடி அமைந்திருந்தது.

சீட்டுக்கட்டுக்களின் ராஜ்ஜியத்தில் ஒரு விசித்திரமான அமைதி நிலவியது. திருப்தியும் நிறைவும் முழுமையாக இருந்தன. எந்தக் கலவரமோ வன்முறையோ எப்போதும் இல்லை. எந்த உற்சாகமோ பரவசமோ எப்போதும் இல்லை.

மிகப்பெரிய கடல், இடைவிடாத ஒரே தாலாட்டுத் தாளத்தில் பாடியபடி, தனது அலைகளின் வெண்மையான கைகளால் ஆயிரம் மென்மையான தொடுதல்களால் அந்தத் தீவைத் தூக்கத்தில் ஆழ்த்தியது. பரந்த வானம், தன் குட்டியை பாதுகாக்கும் தாய் பறவையின் விரிந்த நீலச் சிறகுகளைப் போல, அந்தத் தீவைச் சுற்றி மென்மையான இறகுகளால் தழுவியது. தொலைதூரக் கரையோரத்தில் ஒரு ஆழ்ந்த நீலக் கோடு மற்றொரு கரையைச் சுட்டிக்காட்டியது. ஆனால் எந்தத் தகராறோ சண்டையோ அந்தக் சீட்டுக்கட்டுக்களின் தீவுக்கு வந்து அதன் அமைதியை குலைக்க முடியவில்லை.

II

அந்தக் கடலைத் தாண்டியத் தொலைதூர அந்நிய நாட்டில், ஒரு இளம் இளவரசன் வாழ்ந்து வந்தான். அவன் தாய் துயரத்தில் மூழ்கிய ராணி. இந்த ராணி அரசவையில் இருந்து ஒதுக்கப்பட்டு, தன் ஒரே மகனுடன் கடற்கரையில் வாழ்ந்து வந்தாள். இளவரசன் தனது சிறுவயதை தனிமையிலும் துயரத்திலும் கழித்தான். துயரமுற்ற தாயின் அருகில் அமர்ந்து, தனது பெரிய ஆசைகளின் வலையினை நெய்துக் கொண்டிருந்தான். பறக்கும் குதிரையைத் தேடி செல்ல வேண்டும் என்ற ஆசை அவனுக்கிருந்தது. நாகத்தின் முத்திரையில் உள்ள மணியைப் பெற வேண்டும் என்ற எண்ணம். வானத்தின் ரோஜாவை அடைய வேண்டும் என்ற விருப்பம். மாயப்பாதைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம். அதோடு பதின்மூன்று நதிகளையும் ஏழு கடல்களையும் கடந்த அரக்கனின் கோட்டையில் உறங்கிக் கொண்டிருக்கும் அழகிய இளவரசியைத் தேடிப் பிடிக்க வேண்டும் என்ற ஏக்கம் அவனுக்கிருந்தது.

பள்ளியில் வியாபாரியின் மகனிடமிருந்து இளம் இளவரசன் வெளிநாட்டு ராஜ்ஜியங்களின் கதைகளை அறிந்தான். கோத்துவாலின் (கோட்டைப் பாதுகாவலர்) மகனிடமிருந்து விளக்கின் இரு ஜின்னிகளின் சாகசங்களை அறிந்தான். மழை பெய்து கொண்டிருந்தபோது, மேகங்கள் வானத்தை மூடியபோது, அவன் கடலை நோக்கி வாசற்படியில் அமர்ந்து, தன் துயரமுற்ற தாயிடம், “அம்மா, மிகவும் தொலைவில் உள்ள ஒரு நாட்டின் கதையைச் சொல்லுங்கள்” என்று கூறுவான்.

அப்போது அவன் தாய், தனது சிறுவயதில் கேட்டிருந்த கடலுக்கு அப்பாலுள்ள ஒரு அதிசய நாட்டின் முடிவில்லா கதையை அவனுக்குச் சொல்லுவாள். அங்கு அழகிய இளவரசி வாழ்ந்து வந்தாள். அந்தக் கதையை கேட்டு கொண்டிருக்கும் இளம் இளவரசனின் மனம் ஏக்கத்தில் துடித்தது. அவன் வாசற்படியில் அமர்ந்து கடலை நோக்கி பார்த்தபடி, தாயின் அதிசயக் கதையை கேட்டு கொண்டிருந்தான். வெளியில் மழை இடியுடன் பெய்து கொண்டிருந்தது. சாம்பல் நிற மேகங்கள் வானத்தை மூடியிருந்தன.

ஒருநாள் வியாபாரியின் மகன் இளவரசனை அணுகி துணிவுடன் கூறினான்: “நண்பனே, என் படிப்புகள் முடிந்துவிட்டன. இப்போது என் அதிர்ஷ்டத்தைத் தேடி கடலில் பயணம் செய்யப் புறப்படுகிறேன். உனக்கு விடை கொடுக்க வந்தேன்.”

இளவரசன் கூறினான்: “நானும் உன்னுடன் வருவேன்.”

அப்போது கோத்துவாலின் மகனும் கூறினான்: “நண்பர்களே, நம்பிக்கையுடன் இருக்கும் நீங்கள் என்னை விட்டு செல்ல மாட்டீர்கள். நானும் உங்கள் துணையாக இருப்பேன்.”

பின்னர் இளம் இளவரசன் தன் துயரமுற்ற தாயிடம் கூறினான்: “அம்மா, நான் இப்போது என் அதிர்ஷ்டத்தைத் தேடி பயணம் செய்யப் புறப்படுகிறேன். நான் மீண்டும் திரும்பி வரும் போது, உன் துயரத்தை அகற்றும் வழியை நிச்சயமாக கண்டுபிடித்து வருவேன்.”

அவ்வாறு அந்த மூன்று நண்பர்களும் ஒன்றாகப் பயணத்தைத் தொடங்கினர். துறைமுகத்தில் வியாபாரியின் பன்னிரண்டு கப்பல்கள் நங்கூரமிட்டிருந்தன. அந்த மூன்று நண்பர்களும் அவற்றில் ஏறினர். தெற்குக் காற்று வீசியது. இளவரசனின் மனதில் எழுந்த ஆசைகள் எவ்வளவு வேகமாக இருந்ததோ, அதே வேகத்தில் அந்த பன்னிரண்டு கப்பல்களும் பயணித்தன.

சங்கு தீவில் அவர்கள் ஒரு கப்பலை சங்குகளால் நிரப்பினர். சந்தனத் தீவில் இரண்டாவது கப்பலை சந்தன மரங்களால் நிரப்பினர். பவளத் தீவில் மூன்றாவது கப்பலை பவளங்களால் நிரப்பினர்.

நான்கு ஆண்டுகள் கடந்தன. மேலும் நான்கு கப்பல்களை அவர்கள் நிரப்பினர். ஒன்றில் யானைத் தந்தங்கள், ஒன்றில் கஸ்தூரி, ஒன்றில் கிராம்பு, ஒன்றில் ஜாதிக்காய் நிரப்பினர்.

ஆனால் இந்தக் கப்பல்கள் அனைத்தும் நிரம்பியபோது, ஒரு பயங்கரப் புயல் எழுந்தது. கிராம்பு, ஜாதிக்காய், கஸ்தூரி, யானைத் தந்தங்கள், பவளம், சந்தனம், சங்கு ஆகிய அனைத்தும் நிரம்பியிருந்த அந்தக் கப்பல்கள் அனைத்தும் மூழ்கின. ஆனால் அந்த மூன்று நண்பர்களைக் கொண்டிருந்த கப்பல் ஒரு தீவின் பாறையில் மோதிக் கொண்டு, அவர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்து, தானோ உடைந்து சிதறியது.

அது சீட்டுக்கட்டுக்களின் தீவு என்ற புகழ்பெற்ற இடம். அங்கு ஏஸ், ராஜா, ராணி, நாவ் ஆகியோரும், ஒன்பதுகள், பத்துகள் மற்றும் பிற உறுப்பினர்களும், தங்கள் விதிகளின்படி, வாழ்ந்து வந்தனர்.

III

இதுவரை அந்தத் தீவின் அமைதியை குலைக்கும் எதுவும் நிகழ்ந்ததே இல்லை. எந்தப் புதிய விஷயமும் நடந்ததில்லை. எந்த விவாதமும் நடத்தப்படவில்லை.

அவ்வாறிருக்கையில் திடீரென கடல் தூக்கி எறிந்த மாதிரி அந்த மூன்று நண்பர்கள் தோன்றினர். பெரும் விவாதம் ஆரம்பமானது. விவாதத்தின் மூன்று முக்கிய அம்சங்கள் இருந்தன.

முதலில், இந்த வகைப்படுத்தப்படாத அந்நியர்கள் எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்? அவர்கள் அரசச் சீட்டுகளுடன் சமமாக இருக்க வேண்டுமா? அல்லது ஒன்பதுகளும் பத்துகளும் உள்ள கீழ் ஜாதியில் சேர்க்கப்பட வேண்டுமா? இந்த முக்கியமான கேள்விக்கு தீர்வு காண எந்த முன்னுதாரணமும் இல்லை.

இரண்டாவது, அவர்களின் குலம் என்ன? அவர்கள் ஹார்ட்ஸ் போல ஒளிரும் நிறத்தையும் அழகிய தோற்றத்தையும் கொண்டவர்களா, அல்லது கிளப்ஸ் போல கருமையான நிறத்தையுடையவர்களா? இந்தக் கேள்வியைச் சுற்றி முடிவில்லாத விவாதங்கள் எழுந்தன. தீவின் முழு திருமண அமைப்பும் அதன் சிக்கலான விதிமுறைகளுடன், இந்த நுணுக்கமான தீர்மானத்தின் மீது சார்ந்திருந்தது.

மூன்றாவது, அவர்கள் என்ன உணவு உட்கொள்ள வேண்டும்? யாருடன் அவர்கள் வாழவும் உறங்கவும் வேண்டும்? மேலும் அவர்கள் தங்கள் தலைகளை தென்மேற்கு, வடமேற்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்க வேண்டுமா? சீட்டுக்கட்டுக்களின் ராஜ்ஜியத்தில் இவ்வளவு முக்கியத்துவமுள்ள, இவ்வளவு கடுமையான பிரச்சினைகள் முன்பு ஒருபோதும் விவாதிக்கப்பட்டதில்லை.

ஆனால் அந்த மூன்று நண்பர்களுக்கு கடும் பசி ஏற்பட்டது. எப்படியாவது உணவு கிடைக்க வேண்டியது அவசியமாகியது. ஆகவே இந்த விவாதம் முடிவில்லாத அமைதியுடனும் இடைவெளிகளுடனும் நீடித்துக்கொண்டிருக்கிறது. ஏஸ்கள் தனியாக கூட்டம் கூட்டி, இந்தக் கேள்வியைப் பற்றிய ஏதோ பழைய விதியைத் தேடிக் கண்டுபிடிக்க குழுவாக அமைந்துகொண்டிருந்தனர். அப்போது, அந்த மூன்று நண்பர்கள் கிடைத்ததை எல்லாம் சாப்பிட்டனர், கிடைத்த பாத்திரங்களில் எல்லாம் குடித்தனர், அனைத்து விதிகளையும் மீறினர்.

இந்தத் தாராளமான நடத்தையால் இரண்டுகளும் மூன்றுகளும் கூட அதிர்ச்சியடைந்தனர். மூன்றுகள் கூறின: “இரண்டு சகோதரர்களே, இவர்கள் துளியும் கூட வெட்கமில்லாதவர்கள்!” இரண்டுகள் கூறின: “மூன்று சகோதரர்களே, இவர்கள் நம்மைவிடக் கீழ் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகிறது!” அவர்கள் உணவை முடித்த பின், அந்த மூன்று நண்பர்களும் நகரத்தில் நடைபயணம் மேற்கொண்டனர்.

அவர்கள் சோகமான அணிவகுப்பில், கடுமையான முகங்களுடன் நகரும் கனமான மக்களைப் பார்த்தபோது, இளவரசன் வியாபாரியின் மகனையும் கோத்துவாலின் மகனையும் நோக்கி, தன் தலையைப் பின்னால் தூக்கிக் கொண்டு, ஒரு அதிர்ச்சிகரமான பெரிய சிரிப்பை வெளிப்படுத்தினான்.

அரசர் தெருவிலிருந்து ஏஸ் சதுக்கம் வரை, அங்கிருந்து நாவ் கரைப்பகுதி வரை, இந்த விசித்திரமான, முன்பு எப்போதும் கேட்கப்படாத சிரிப்பு அதிர்வாய் பரவியது. அது தன்னையே ஆச்சரியப்படுத்திக் கொண்டபடி, அமைதியின் பரந்த வெற்றிடத்தில் மறைந்தது.

அந்தச் சூழலில் நிலவிய பேய் போன்ற அமைதியால் கோத்துவாலின் மகனும் வியாபாரியின் மகனும் எலும்பு வரை உறைந்தனர். அவர்கள் இளவரசனை நோக்கி, “நண்பனே, நாம் இங்கிருந்து போய்விடுவோம். இந்த பயங்கரமான பேய்களின் நாட்டில் ஒரு நொடியும் தங்க வேண்டாம்” என்றனர்.

ஆனால் இளவரசன் கூறினான்: “நண்பர்களே, இவர்கள் மனிதர்களைப் போலத் தோன்றுகின்றனர். ஆகவே அவர்களை தலைகீழாகவும் மேலும் கீழும் உலுக்கிப் பார்த்து, அவர்களின் நரம்புகளில் இன்னும் ஒரு சொட்டு உயிருள்ள சூடான இரத்தம் உள்ளதா என்பதை நான் கண்டறிவேன்.”

IV

நாட்கள் ஒன்றன் பின் ஒன்றாகக் கடந்தன. அந்தத் தீவின் அமைதியான வாழ்வு பெரும்பாலும் எந்த அலைச்சலும் இன்றி தொடர்ந்தது. அந்த மூன்று நண்பர்களும் எந்த விதிமுறைகளையும் கடைப்பிடிக்கவில்லை.

உட்கார்வதிலும், நிற்பதிலும், திரும்புவதிலும், முதுகில் படுப்பதிலும் கூட அவர்கள் எதையும் சரியாகச் செய்யவில்லை. மாறாக, இவை அனைத்தும் விதிகளின்படி மிகத் துல்லியமாக நடைபெறுவதை அவர்கள் எங்கு கண்டார்களோ அங்கே அவர்கள் அடக்கமுடியாத வெடிச்சிரிப்பில் மூழ்கினர். அந்த நிரந்தரமான விதிகளின் நிரந்தரமான தீவிரத்தால் அவர்கள் முற்றிலும் பாதிக்கப்படவில்லை.

ஒருநாள் பெரிய அரசச் சீட்டுக்கள் கோத்துவாலின் மகனையும், வியாபாரியின் மகனையும், இளவரசனையும் அணுகினர்.

“நீங்கள் ஏன் விதிகளின்படி நகரவில்லை?” என்று அவர்கள் மெதுவாகக் கேட்டனர்.

அந்த மூன்று நண்பர்களும் பதிலளித்தனர்: “அது எங்கள் இச்சை என்பதால்.”

பெரிய அரசச் சீட்டுக்கள், நீண்ட கால கனவிலிருந்து மெதுவாக விழித்தெழுவது போல ஒலிக்கும் ஒற்றை ஒலியில் கூறின: “இச்சை! இச்சை யார்?”

அப்போது இச்சை யார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் பின்னர் முழுத் தீவும் அதை ஒரு பொருளாக உணர்ந்தது. இளவரசனின் செயல்களை கவனித்து, தாங்கள் இதுவரை சென்ற திசைக்கு எதிராக நேராக நகர முடியும் என்பதை அவர்கள் உணர்ந்தபோது, அவர்களின் மனதின் வாசலில் முதல் ஒளி நுழைந்தது. பின்னர் அவர்கள் இன்னொரு அதிர்ச்சியான கண்டுபிடிப்பைச் செய்தனர். சீட்டுக்களின் இதுவரை கவனிக்கப்படாத மற்றொரு பக்கம் இருப்பதை. இதுவே மாற்றத்தின் தொடக்கம்.

மாற்றம் ஆரம்பித்த பிறகு, அந்த மூன்று நண்பர்களும் இச்சையின் மர்மங்களை அவர்களுக்கு மேலும் மேலும் ஆழமாக அறிமுகப்படுத்தினர். சீட்டுக்கள் படிப்படியாக வாழ்க்கை விதிகளால் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதை உணரத் தொடங்கினர். தாங்களே தேர்வு செய்யும் அரச அதிகாரத்தில் ஒரு மறைமுகமான திருப்தியை அவர்கள் அனுபவிக்கத் தொடங்கினர்.

ஆனால் இச்சையின் முதல் தாக்கத்திலேயே முழுச் சீட்டுக்களும் மெதுவாக குலுங்கத் தொடங்கின. பின்னர் தரையில் சரிந்தன. அது நீண்ட உறக்கத்திலிருந்து விழித்தெழும் ஒரு பெரும் பாம்பு தனது எண்ணற்ற வளையங்களைக் மெதுவாக விரித்து அசையும் காட்சி போன்றதாகத் தெரிந்தது.

V

இதுவரை ஸ்பேட்ஸ், கிளப்ஸ், டையமண்ட்ஸ் மற்றும் ஹார்ட்ஸ் ராணிகள் திரைகளின் பின்னால் இருந்து, வெறுமையை நோக்கி பார்வையை நிலைநிறுத்தியவாறோ, அல்லது தரையில் நிலைத்தபடி இருந்தவாறோ இருந்தனர்.

இப்போது, திடீரென, வசந்த காலத்தின் ஒரு பிற்பகலில், ஹார்ட்ஸ் ராணி மாடிப்படியில் இருந்து தன் கருந்தோன்றும் புருவங்களை ஒரு கணம் உயர்த்தி, கண்களின் ஓரத்திலிருந்து இளவரசனை ஒருமுறை பார்த்தாள்.
“அடக் கடவுளே,” என்று இளவரசன் கத்தினான், “இவர்கள் எல்லாம் ஓவியப்படங்கள் என்று நினைத்தேன். ஆனால் நான் தவறாக இருந்தேன். இவர்கள் உண்மையில் பெண்களே.”

அப்போது இளம் இளவரசன் தன் இரு நண்பர்களையும் அருகில் அழைத்து, ஆழ்ந்த சிந்தனையுடன் பேசினான்: “நண்பர்களே! இந்தப் பெண்களில் முன்பு நான் கவனிக்காத ஒரு மயக்கம் தருவது போல இருக்கிறது. ராணியின் அந்த கருமையான, ஒளிரும் கண்கள் புதிய உணர்ச்சியுடன் பிரகாசித்ததை நான் கண்டபோது, அது புதிதாக உருவான உலகில் உதிக்கும் விடியலின் முதல் மங்கலான கோடு போல எனக்குத் தோன்றியது.”
இரு நண்பர்களும் அர்த்தமுள்ள புன்னகையுடன், “உண்மையிலேயே அப்படியா தோன்றுகிறது, இளவரசே?” என்று கேட்டனர்.

அந்த நாள் முதல் அந்த பாவப்பட்ட ஹார்ட்ஸ் ராணியின் நிலை மேலும் மேலும் சீர்குலைந்தது. அவள் அனைத்து விதிகளையும் முற்றிலும் அவமதிப்பதாக மறந்து விடத் தொடங்கினாள். எடுத்துக்காட்டாக, அவள் வரிசையில் நாவ் அருகில் நிற்க வேண்டிய இடத்தில், திடீரென தவறுதலாக இளவரசன் அருகில் நின்றிருப்பதை கண்டாள். இதைக் கண்டு, அசைவில்லாத முகத்துடனும் தீவிரமான குரலுடனும் நாவ் கூறினான்: “ராணி, நீங்கள் தவறு செய்துள்ளீர்கள்.”

அப்போது அந்தப் பாவப்பட்ட ஹார்ட்ஸ் ராணியின் சிவந்த கன்னங்கள் மேலும் சிவந்தன. ஆனால் இளவரசன் வீரமாக அவளை காப்பாற்றி, “இல்லை! இதில் எந்தத் தவறும் இல்லை. இன்றிலிருந்து நானே நாவாக இருப்பேன்!” என்றான்.

இதனால், ஹார்ட்ஸ் ராணியின் தவறுகளைச் சரிசெய்ய அனைவரும் முயன்று கொண்டிருக்கையில், அவர்கள் தாமும் தவறுகளைச் செய்யத் தொடங்கினர். ஏஸ்கள் தங்களை ராஜாக்களால் ஒதுக்கப்படுவதை கண்டனர். ராஜாக்கள் நாவ்கள் பற்றிக்  குழப்பமடைந்தனர். ஒன்பதுகளும் பத்துகளும் தங்களை அரசச் சீட்டுக்களாகக் கருதும் போக்கைக் கொண்டனர். இரண்டுகளும் மூன்றுகளும் நான்குகளுக்கும் ஐந்துகளுக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களை ரகசியமாக பிடித்துக் கொண்டனர். இதுவரை இல்லாத அளவுக்கு குழப்பம் ஏற்பட்டது.

அந்த சீட்டுக்கட்டுக்களின் தீவில் பல வசந்த காலங்கள் வந்து சென்றிருந்தன. வசந்தத்தின் பறவையான குயில் ஆண்டுதோறும் தனது பாடலைப் பாடியிருந்தது. ஆனால் அது இப்போது போல ரத்தத்தை கொந்தளித்து எழுச்சி கொள்ளச் செய்ததில்லை. கடந்த நாட்களில் கடல் தனது சோர்வற்ற இசையைப் பாடியிருந்தது. ஆனால் அப்போது அது விதியின் மாறாத ஒரே மாதிரியான தன்மையை மட்டுமே அறிவித்தது. இப்போது திடீரென அதன் அலைகள் ஒளி மின்னல்களாலும் ஒளிரும் நிழல்களாலும் எண்ணற்ற குரல்களாலும் காதல் இதயத்தின் ஆழ்ந்த ஏக்கங்களை வெளிப்படுத்தின!

VI

இப்போது அவர்களின் ஒழுங்கான, வட்டமான, முறையான, திருப்தியூட்டும் முகப்புகள் எங்கே மறைந்துவிட்டன? இங்கே காதல் வேதனையில் ஏங்கும் ஒரு முகம் உள்ளது. இங்கே வருத்தங்களால் கொதிக்கும் ஒரு இதயம் உள்ளது. இங்கே சந்தேகங்களால் வாடும் ஒரு மனம் உள்ளது. இசையும் நெடும் பெருமூச்சும், புன்னகையும் கண்ணீரும் காற்றை நிரப்புகின்றன. வாழ்க்கை துடிக்கிறது. இதயங்கள் உடைகின்றன. உணர்ச்சிகள் எரிகின்றன.

ஒவ்வொருவரும் இப்போது தமது தோற்றத்தை நினைத்து, தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடத் தொடங்கினர். கிளப்ஸ் ஏஸ் தனக்குள்ளேயே சிந்திக்கிறான், “ஸ்பேட்ஸ் ராஜா சுமாராக அழகானவனாக இருக்கலாம்”,  “ஆனால்,” என்று அவன் சொல்கிறான், “நான் தெருவில் நடக்கும் போது மக்கள் கண்கள் என்னை நோக்கித் திரும்புவதை நீ பார்த்தாலே போதும்.” ஸ்பேட்ஸ் ராஜா சொல்கிறான்: “இந்த கிளப்ஸ் ஏஸ் எப்போதும் கழுத்தை நீட்டி மயில்போல் நடப்பது ஏன்? எல்லா ராணிகளும் அவனை நேசித்து அவனுக்காக உயிரைவிட்டு மயங்குகிறார்கள் என்று அவன் நினைக்கிறான். ஆனால் உண்மையில்”,  இப்போது அவன் சிறிது நிதானமாக, “கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாலே போதும்” என்று எக்களித்தான்.

ஆனால் ராணிகள் எல்லாவற்றிலும் மோசமானவர்கள். அவர்கள் தங்களை முழுமையாக அலங்கரிப்பதில் தங்கள் நேரத்தைச் செலவழிக்கத் தொடங்கினர். ஒன்பதுகள் அவர்களின் நம்பிக்கையற்ற அடிமைகளாக மாறின. ஆனால் ஒருவரைப் பற்றி ஒருவர் கூறிய கசப்பான குறிப்புகள் இன்னும் அதிர்ச்சியூட்டின.

இளம் ஆண்கள் மரங்களின் கீழ் இலைகளில் சோர்வாக அமர்ந்து, காட்டுமரங்களின் நிழலகளில் கால்களை நீட்டிக் கிடந்தனர். இளம் பெண்கள் இளஞ்சிவப்பு நீல ஆடைகளில், அதே காட்டின் அதே மரங்களின் நிழலில் தற்செயலாக நடந்து வந்து, அங்கே யாரும் இல்லாதது போல கண்களைத் திருப்பி, எதையும் பார்க்க வராதது போல நடித்தனர். பின்னர் மற்றவர்களைவிட துணிவாக இருந்த ஒரு இளைஞன், திடீர் உந்துதலால் ஒரு நீல ஆடையணிந்த பெண்ணை அணுகத் துணிந்தான். ஆனால் அருகில் சென்றபோது, அவனிடம் சொற்கள் மறைந்துவிட்டன. அவன் பேச முடியாமல் அங்கே நின்றான். அந்தச் சிறந்த அற்புதத் தருணம் கடந்துவிட்டது.

மேலே கிளைகளில் குயில் பறவைகள் பாடின. கிண்டலான தெற்குக் காற்று வீசியது. அது முடியைக் கலைத்தது. காதில் ஏதோ இரகசியமாகச் சொன்னது. ரத்தவோட்டத்தில் இசையை எழுப்பியது. மரங்களின் இலைகள் சலசலப்புடன் மகிழ்ச்சியைக் கிசுகிசுத்தன. கடலின் இடைவிடாத ஒலி, ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள இதயத்தின் சொல்லமுடியாத ஏக்கங்களை, காதலின் நிறைந்த வசந்த அலைபோல முன்பும் பின்பும் அசைத்தது.

அந்த மூன்று நண்பர்களும், சீட்டுக்கட்டுக்களின் ராஜ்ஜியத்தின் உலர்ந்த வாய்க்கால்களில், புதிய வாழ்க்கையின் முழு பெருக்கை கொண்டு வந்தனர்.

VII

அலை முழுமையாக உயரத்தில் அடித்துக் கொண்டிருந்திருந்தாலும், அது நுரைக்காமல் ஏதோ என்றைக்குமாக நிறுத்தப்பட்டதுபோல் ஒரு இடைவெளி நிலவியது.
வெளிப்படையான சொற்கள் எதுவும் இல்லை. ஒரு படி முன்னேறி இரண்டு படி பின்வாங்கும் எச்சரிக்கையான நகர்வு மட்டுமே. நிறைவேறாத ஆசைகளை வானில் கட்டப்பட்ட அரண்மனைகளாகவோ மணலில் கட்டப்பட்ட கோட்டைகளாகவோ குவிப்பதில் அனைவரும் மூழ்கியிருந்தனர். அவர்கள் வெளிருண்டு போயும் மௌனமாகவும் இருந்தனர். அவர்களின் கண்கள் எரிந்தன. சொல்லப்படாத ரகசியங்களால் அவர்களின் உதடுகள் நடுங்கின.

எது தவறு என்பதை இளவரசன் கண்டான். அவன் தீவிலுள்ள அனைவரையும் கூடி வரச்செய்து, “இங்கே புல்லாங்குழல்களையும் தாளங்களையும், ஊதுகருவிகளையும் முரசுகளையும் கொண்டு வாருங்கள். எல்லாவற்றையும் ஒன்றாக வாசியுங்கள். பெரும் மகிழ்ச்சிக் குரல்களை எழுப்புங்கள். ஏனெனில் இன்று இரவே ஹார்ட்ஸ் ராணி தன் துணையைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்!” என்று கூறினான்.

அப்போது பத்துகளும் ஒன்பதுகளும் புல்லாங்குழல்களையும் ஊதுகருவிகளையும் ஊதத் தொடங்கினர். எட்டுகளும் ஏழுகளும் தங்கள் இசைக்கருவிகளை வாசித்தனர். இரண்டுகளும் மூன்றுகளும் கூட பித்தர்களைப் பேய்பிடித்த மாதிரி முரசுகளை அடிக்கத் தொடங்கினர்.

இந்தப் பெரும் இசை அலை எழுந்தபோது, அது ஒரே வீச்சில் அந்த நெடும் பெருமூச்சுக்களையும் சோர்வையும் அகற்றியது. பின்னர் சிரிப்பும் சொற்களும் பெருக்கெடுத்து பாய்ந்தன! துணிச்சலான காதல் மொழிவுகளும் உறுதியான மறுப்புகளும், வதந்திகளும் உரையாடல்களும், நகைச்சுவையும் மகிழ்ச்சியும் எங்கும் நிரம்பின. அது கோடைக்கால புயலில் அடர்ந்த காட்டில் கோடிக்கணக்கான இலைகளும் கிளைகளும் அசைந்து ஒலிக்கும் அதிர்வைப் போன்று இருந்தது.

ஆனால் ஹார்ட்ஸ் ராணி, ரோஜா சிவப்பு ஆடையில், தனது அந்தப்புர மண்டபத்தின் நிழலில் அமைதியாக அமர்ந்து, இசையும் மகிழ்ச்சியும் கலந்த அந்தப் பெரும் ஒலியை கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் கண்களை மூடி தனது கனவுகளில் மூழ்கினாள். அவள் கண்களைத் திறந்தபோது, இளவரசன் அவள் முன் தரையில் அமர்ந்து அவள் முகத்தை நோக்கி இருந்தான். அவள் இரு கைகளாலும் கண்களைப் பொத்தி மூடி, உள்ளார்ந்த மகிழ்ச்சியின் அதிர்வில் நடுங்கி பின்வாங்கினாள்.

இளவரசன் முழு நாளையும் தனியாகக் கடலோரத்தில் நடந்து கழித்தான். ராணியின் அதிர்ச்சியடைந்த பார்வையும், அவள் பின்வாங்கிச் சென்றதையும் மனதில் கொண்டு, அவன் இதயம் நம்பிக்கையால் துடித்தது.

அந்த இரவு அழகாக அலங்கரிக்கப்பட்ட இளைஞர்களும் இளம்பெண்களும் அரண்மனை வாயிலில் புன்னகையுடன் காத்திருந்தனர். அரண்மனை மண்டபம் விளக்குகளால் ஒளிர்ந்தது. வசந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மெதுவாக ஹார்ட்ஸ் ராணி உள்ளே வந்தாள். அனைவரும் எழுந்து அவளை வரவேற்றனர். மல்லிகைப்பூ மாலையுடன், அவள் தாழ்மையான பார்வையுடன் இளவரசன் முன் நின்றாள். தன் நாணத்தில், அவள் தேர்ந்தெடுத்த துணையின் கழுத்தில் மாலையை வைக்க முடியாமல் இருந்தாள். ஆனால் இளவரசன் தன் தலையை குனிந்தான். மாலை தானாகவே அதன் இடத்தில் அமர்ந்தது.

இளைஞர்களும் இளம்பெண்களும் அவளது தேர்வுக்காக ஆவலுடன் அமைதியாகக் காத்திருந்தனர். தேர்வு செய்யப்பட்டவுடன், அந்தப் பெரும் கூட்டம் மகிழ்ச்சியின் அதிர்வில் ஆர்ப்பரித்தது. அவர்களின் ஆரவாரக் குரல் தீவின் அனைத்துப் பகுதிகளிலும், கடலில் தொலைவில் இருந்த கப்பல்களிலும் கேட்டது. சீட்டுக்கட்டுக்களின் ராஜ்ஜியத்தில் இதுபோன்ற ஒரு குரல் முன்பு ஒருபோதும் எழுந்ததில்லை.

அவர்கள் இளவரசனையும் அவன் மணமகளையும் தோள்களின் சுமந்து சென்று, அந்தப் பழமையான சீட்டுக்கட்டுக்களின் தீவில் சிங்காசனத்தில் அமர்த்தி அங்கேயே அவர்களை முடிசூட்டினர்.

தொலைதூரக் கடற்கரையில் இருந்த துயரமுற்ற தாயாரான ராணி, பொன்னால் அலங்கரிக்கப்பட்ட கப்பலில் தன் மகனின் புதிய ராஜ்ஜியத்திற்குத் திரும்பி வந்தாள்.

இப்போது அந்த ராஜ்ஜியத்தின் குடிமக்கள் விதிகளின்படி அல்லாமல், தங்கள் இச்சையின் படி நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ அல்லது இரண்டுமாகவோ உள்ளனர்.

Exit mobile version