Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

 ஆவுடை அக்காள் காட்டும் மானிட விடுதலை

ஆவுடை அக்காளின் காலம் குறித்து கருத்து வேறுபாடுகள் இருப்பினும் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரான சமூகத்தில், சிறுமி என்றறியப்படும் பருவத்திலேயே கைம்பெண்ணாகிப் போன ஆவுடை அக்கா, சமூகத்தின் திணிக்கப்பட்ட கொடுமைகளிலிருந்து போராடி வெளியேறித், ’தன்னை உணரும்’ தன்மை பெறுகிறாள், மானிட நோக்கிலான விடுதலையை தான் வாழும் சமூகத்திற்கு விளக்கிய உன்னத நிலை கொண்டதாக ஆவுடை அக்காளின் பாடல்கள் அமைகின்றன. 

கவிஞர், ஞானி என்ற பார்வைகளில் போற்றப்படும் ஆவுடையக்கா செங்கோட்டை அக்கிரகாரத்தில் ஆசாரமான ஓர் அந்தணக் குடும்பத்தில் பிறந்தவர். திருமண வாழ்க்கை, யார் தன்னுடைய கணவன், என்பது பற்றிய தெளிவு என்று எதுவுமறியாத பருவத்தில், வயதுக்கு வருமுன்பே பெற்றோர் அவளுக்கு அண்டை வீட்டுப் பையனை மணமுடித்து வைத்தனர். ஒரு நாள் தன் வீட்டில் அழுகையும், அதிகமான வருத்தமும் தொடர்ந்திருக்க, ஆவுடை அக்கா தாயிடம் அதற்கான காரணம் கேட்கிறாள். அடுத்த வீட்டுச் சிறுவன் இறந்து விட்டான் என்று தாய் சொல்ல. அடுத்த வீட்டுச் சிறுவன் இறந்ததற்கு நாம் ஏன் அழ வேண்டுமெனக் கேட்கிறாள். மகளின் கேள்வி தாய்க்கு நியாயமாகப் படுகிறது. மகளின் மனத் தெளிவு தாய்க்குப் புரிகிறது. தன்னாலியன்றவரை அக்காவின் கல்வியறிவிற்கு உதவுகிறாள். அக்கா வயதுக்கு வந்த பிறகு அவளுக்கு விதவைச் சடங்குகள் அனைத்தும் செய்யப்படுகின்றன. தன் விதியை நினைத்து நொந்து போவதைத் தவிர அக்காவிற்கு வேறு வழியில்லாமல் போகிறது.

திருவிசை நல்லூரைச் சேர்ந்த ஸ்ரீதர வேங்கடேச அய்யாவாள் நாம சங்கீர்த்த பரம்பரையைச் சேர்ந்தவர். ஞானியான அவர் அக்கலையில் வல்லவர். சிவராத்திரி நாளில் சிறப்பு வழிபாடு நடத்த அய்யாவாள் வர வேண்டுமென திருவாங்கூர் மன்னர் அவருக்கு அழைப்பு விட,  கும்பகோணத்திலிருந்து, தன் சீடர்களை அழைத்துக் கொண்டு அவரும் புறப்பட்டு வருகிறார். செங்கோட்டை அந்தணர் அக்கிரகாரத்தை கடக்கும் போது அந்தணர்கள் அவருக்குச் சிறப்பான வரவேற்புத் தருகின்றனர். அத்தெருவிலிருந்த அக்காவின் வீட்டை அவர் கடக்கும் போது, சுத்தம் செய்யப்படாமல், வாசலில் கோலம் இல்லாமலிருந்த வீட்டின் முன்பக்கத்தைப் பார்த்த அவர் கால்கள் மேலே நகர முடியாமல் அங்கேயே நின்று விடுகின்றன. அங்கேயே நின்று பாடுகிறார். அவரைப் பார்த்து விட்ட அக்கா அம்பிலிருந்து வெளிப்படும் வில் போல மிக வேகமாக வீட்டின் உள்ளேயிருந்து வெளியே ஓடி வந்து அவர் காலில் விழுந்து, தன்னைக் காப்பாற்றும்படி அழுகிறாள். இனிக் கவலைப்படத் தேவையில்லை என ஆறுதல் கூறுகிறார். மாலையில் ஆற்றின் கரையருகேயுள்ள மண்டபத்திற்கு வந்து பார்க்கும்படி சொல்கிறார். அந்தக் காட்சியைக்  கண்டவர்கள், அக்காவின் செயலால் வெறியடைந்து அவளை இழுத்து வீட்டுக்குள் தள்ளுகின்றனர். ஒரு விதவைக்கு ஆதரவு தருவது தவறென்றும், எந்த ஆறுதலுக்கும் அவள் தகுதியில்லாதவள் எனவும், இப்படியான ஒரு பேச்சு ஒரு ஞானியின் இடமிருந்து வருவது பாவம் என்றும் வெறியோடு சொல்கின்றனர். “அவள் தகுதியற்றவளெனில் அக்கிராமத்தில் இருப்பவர்கள் யாரும் எதற்குமே தகுதியில்லாதவர்கள். ஆண், பெண், திருமணமானவள், விதவை என்று மனிதர்கள் யாராக இருந்தாலும் உண்மையை அறிய விரும்புவதுதான் அறிவிற்கான ஒரே அளவுகோல்.” என்று விளக்கம் தருகிறார். இந்தப் பதிலால் ஆத்திரமடைந்த அந்தணர்கள், அய்யாவாளின் சொல் கேட்டு அவள் நடந்து கொண்டால் அவர்கள் குடும்பம் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பெற்றோரை பயமுறுத்துகின்றனர். ஆனால் அக்கா யாருமறியாமல் மாலையில் மண்டபத்திற்குப் போய் ’உபநிஷத மகாவாக்யத்தைப்’ பெற்று அவரை குருவாக ஏற்கிறாள். அதனால் அவர்கள் அக்கிரகாரத்திலிருந்து ஒதுக்கி வைக்கப் படுகின்றனர். ஆனால் குரு அவளைத் தன்னோடு திருவாங்கூர் அழைத்துச் செல்கிறார். தங்களின் ஆண் பரிவாரங்களுடன் ஓர் இளம் விதவை பங்கு பெறும் தன்மைக்கு அரண்மனைப் பெண்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால் அக்கா ஒரு ஞானி என குரு அழுத்தமாகச் சொல்லி, அதை உணர்த்தவும் செய்கிறார். சிவராத்திரி வழிபாட்டை அக்கா நடத்த வேண்டுமென்று அரசனிடம் அனுமதி பெற்று, அதை அவள் நடத்தும்படி செய்து, அவள் உயர்வை மக்களுக்குக் காட்சிப் படுத்துகிறார். பூஜைக்கு அரசன் கொடுத்த பொன் வில்வ இலைகளை வைத்து ஒருமுக நிலையில் சிவ வழிபாடு செய்த அக்கா, அடுத்த நாள் காலை எவ்வித மாறுபாட்டையும் உணராமல் சாதாரண மலர்களோடு பொன் வில்வ இலைகளையும் சேர்த்து ஆற்றில் விடுகிறாள். சாதாரண இலைகளுக்கும் பொன்னிற்கும் வேறுபாடு காட்டாத இயல்பைக் காட்டி குரு அனைவருக்கும் உணர்த்துகிறார். குருவின் அருளால் அத்வைத வேதாந்த   உண்மைகளை உணர்ந்து, அதன் வழியில் வாழ்ந்து ,பல உயர்ந்த தத்துவங்களை எளிமையான பாடல்களால் விளக்கியிருக்கிறார். ஆன்மீக நிறைவும், அமைதியும் கொண்ட அந்தப் பாடல்கள் சாதனை மார்க்கங்களைக் காட்டுகின்றன. அக்காவின் உன்மத்த பக்தி நிலைக்குச் சான்றாக ஒரு முறை அவள் காவிரிக் கரையில் தியானம்  செய்து கொண்டிருந்த போது, வெள்ளம் வேகமாகப் பெருக்கெடுக்கக் கூட இருந்த அனைவரும் ஓடி விடுகின்றனர். அக்கா தன் சூழலைப் பற்றி எதுவுமறியாமல் தியானத்திலிருந்தாள். வடிந்த ஆறு அவளைச் சுற்றிச் சதுர வடிவில் ஒரு தீவைப் போலச் சேற்றை குவித்து விட்டு மறைந்திருந்தது. காவிரிக் கரையில் வாழ்ந்து பரம தத்துவத்தை அனுபவித்த அக்காவின் சமாதி நிலையும் விந்தையானது தான். குற்றாலம் போவதாகவும் தன்னுடன் வர வேணடும் என்று சொல்லியும் மூன்று சிஷ்யப் பெண்களை அழைத்துப் போகிறாள். தேனருவி அருகே போன போது, இனி அவர்கள் தன்னைத் தொடர வேண்டாமென்று சொல்லி மேலே நடந்து போன அக்கா திரும்பி வரவேயில்லை. அந்தப் பெண்கள் வெகுநேரம் காத்திருந்து விட்டுத் திரும்புகின்றனர். அக்கா அங்கு இருந்ததற்கான தடயம் எதுவும் அங்கில்லை. அவள் பற்றிய செய்திகளும் எதுவுமில்லை. 

பெரும்பாலும் வாய்மொழியாக அமைந்த அக்காவின் பாடல்கள் திரட்டு நூல்களாகப் பதிக்கப்பட்டவை. அன்றைய கால கட்டத்தில் அந்தணர் சமூகத்தினரிடம் புழக்கத்திலிருந்த சம்ஸ்கிருதம் கலந்த மொழி நடையே பெரிதும் அக்காவின் பாடல்களில் வெளிப்படுகின்றன. பண்டிதன் கவி என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள 

    “ஐயா ஞானம் வந்த மாத்திரத்திலே தேகம் விழ வேண்டாமோ?

    தேகமிருந்த உளவு சொல்லும், நீர் தேசிகரே!

    அம்மா ஞானம் வந்த நேரத்திலே தேகம் விழுமானால்

    அஞ்ஞான ஜனங்களுக்கு யாராலே விமோசனமாம்?”

என்ற பாடலில் வட சொற்களும் இயல்பாய் வந்து விழுந்து மெருகூட்டுகின்றன்..

மனிதர்கள் ஓரளவு பக்குவம் பெறுகிற மனநிலையை அடையும் போது, தமக்குள் எழுகிற ஐயங்களைப் போக்குகிற வகையில் ’மெது மெதுவாக நீ அதுவாகவே இருக்கிறாய் ” என்ற எண்ணம் மனதில் ஊன்றி விடுவதை விளக்குவது அக்காவின் அத்வைத மெய்ஞான ஆண்டி பாடல்கள்.

  “ பையப் பைய இவன்தான்டி பரப்பிரும்மம் நீ என்று சொன்னான்டி                    ‘   யாரெனக் கேட்டான்டி— ஒன்றும் அறியாது போலிருந்தேன்டி”

“அகங்கார அனலைத் தாண்டி அவன் ஆற்றி அணைத்து விட்டான்டி         அகத்திலேயிருந்து கொண்டான்டி—அவன் அகமில்லை என்று பண்ணிவிட்டான்டி”

அக்காவின் இப்பாடல்களைப் படிக்கிற, கேட்கிற எந்தச் சாதாரண உள்ளங்களுக்கும் விரிவான விளக்கம் தேவையின்றிப் போகிறது. ’தன்னை உணர்தலை’ எளிமையாக்குகிறார்.

ஓசையிலும், சந்தத்திலும், சொற்கள் பயன்பாட்டிலும் சிறந்து விளங்குவதாக அக்காளின் வேதாந்த அம்மானைப் பாடல்கள் அமைகின்றன. சான்றாய்

“கூவும் குயிலேப் போலப் பாடி இவளாட
தாழாது அம்மானை தானும் கலகலவெனும்
சினத்துமெறிவாள் திரும்பி வந்து கையில் விழும்
மறித்துமெறிவாள் வணங்கி வந்து கையில் விழும்
அந்தரத்தில் போயொளிக்கும் ஆகாசத்திற் சுழலும்
கண் சிமிட்டும் போதுக்குள் கட்டழகி கையில் விழும்
சினத்துச் சினத்தெறிய திரும்பி வருகிறதும்
மறித்து மறித்தெறிய வணங்கி வருகிறதும்
மாது எறிகிறதும் அம்மானை வருகிறதும்
இவ்வகைகளில் இரண்டையும் எத்தோடு ஒப்பிடலாம்”

என்ற பாடலைக் காட்டலாம். அன்றாட வாழ்க்கையில் பெண்களின் இயல்பான விளையாட்டாயிருக்கிற அம்மானையை முன்னிறுத்தி வாழ்க்கையோட்டத்தைக் காட்சிப் படுத்துகிறார்.

ஒன்று போனால் இன்னொன்று வருகிற காலத்தால் அமைகிற இயற்கை நியதியான நிரப்பலை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை அவருடைய ’வேதாந்த ஆச்சே போச்சே ’ பாடல்கள்.

“ஆண் என்றும் பெண் என்றும் அலைந்து திரிந்ததும் போச்சே
அசையாமல் ஞான ஸ்தலத்தில் இருக்கவும் ஆச்சே
அகங்கார துக்கம் அசூயை இடும்புகள் போச்சே
தூங்காமல் தூங்கி சுயமாய் இருக்கவும் ஆச்சே
என்ன செய்வோம் என்று ஏக்கம் பிடித்ததும் போச்சே
ஏதேது வந்தாலும் எல்லாம் ஸ்வபாவமும் ஆச்சே
பொய்யை மெய் என்று எண்ணி போகம் புசித்ததும் போச்சே
மெய்யை மெய் என்று எண்ணி மெய்யாய் இருக்கவும் ஆச்சே”

இந்த வகையான ஆச்சே, போச்சே பாடல் பார்வையை, போக்கை பாரதியின் பாடல்களில் காண முடிகிறது. அக்காவிற்கும், பாரதியின் கருத்துகளுக்கும் பெருமளவில் ஒப்புமை இருப்பதையும் காண முடிகிறது.

   “ஜாதி வர்ணாசிரமம் போச்சே 
   வேத சாஸ்திரம் வெறும் பேச்சே”

என்று அக்கா சொல்ல

  “ஜாதிச் சண்டை போச்சோ—உங்கள்
  சமயச் சண்டை போச்சோ”

என்று பாரதி கேட்கிறான். வேதாந்தக் கும்மியில்

 “கும்மியடி பெண்கள் கும்மியடி
 அகோர சம்சார சாகரத்தில்
 ஜென்மக் கடலைக் கடத்தினவர் பாதம்
 சிந்தித்துக் கும்மியடியுங்கடி — தினம்
 வந்துதித்துக் கும்மியடியுங்கடி” 

என்று சிந்தித்துக் கும்மியடித்து மகிழ அக்கா வழி சொல்கிறாள்

   “வேதம் படைக்கவும்  நீதிகள் செய்யவும்
   வேண்டி வந்தோமென்று கும்மியடி
   சாதம் படைக்கவும் செய்திடுவோம்— தெய்வச்
   சாதி படைக்கவும் செய்திடுவோம்”

என பாரதி பெண்களுக்கு புதுவுலகம் காட்டித் தூண்டுகிறான். குயில்
கண்ணியில்

   “மனமும் பொய்யடியோ, குயிலே
   மனக்கூடும் பொய்யடியோ
   இனமும் பொய்யடியோ
   தனமும் பொய்யடியோ—“

என அக்கா கேள்விகள் கேட்கிறாள்

   “கோலமும் பொய்களோ அங்கு 
   குணங்களும் பொய்யோ”

என்பது பாரதியின் அணுகுமுறை. அனிருத்த மாலையில் அக்காவின்
தத்துவ வெளிப்பாடு மிகவும் அற்புதமான முறையில் அமைகிறது.

  “அம்புலியைத் தெய்வமென்று சாதிப்பார் சீமையிலே
   தாருவிலே தெய்வமென்று சாதிப்பார் வையகத்தே
   தாமிரத்தை தெய்வமென்று சாதிப்பார் தரணியிலே
   மிருத்யுவே தெய்வம் என்றிடுவார் உலகினிலே”

என்று உலகத்து மனிதர்களின் இயல்புகளைச் சொல்லி விட்டு

 “ தத்துவமாம் மெய்ப்பொருளைத் தப்ப விட்டு நின்றோமோ?”

என்ற கேள்வியில், அறிய வேண்டிய ஒன்றை அறியாமல் விலகி நிற்கிற
நிலையைக் கூறுகிறார். தத்துவத்தால் தன்னைத் தானறிய வேண்டியது மிக அவசியம் என்ற அக்காவின் பார்வையை பாரதியிடமும் காண முடிகிறது.

   உண்மையின் பேர் தெய்வம் அன்றி 
   ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்”

என்பதாக அது வெளிப்படுகிறது.

சித்தர்களின் மெய்ஞ்ஞானச் சிந்தனைகள் ஞானிகளுக்கும் எல்லாக் காலத்திலும் பொருத்தமுடையதாகவே இருக்கிறது. ஒரே மாதிரியான எண்ணங்களைச் சில தருணங்களில் காண முடிகிறது. மனிதர்கள் எச்சில் எச்சில் என்று பெரிதாகப் பேசித் தம் சுத்த நிலையைக் காட்ட, முயல்வது பொய்யான ஓர் உணர்வே, மூடச் சிந்தனையின் வெளிப்பாடே என்பதை சிவவாக்கியார் காட்டுகிறார்.

  “ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில்
  போதகங்களாவது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில்
  மாதிருந்த விந்து எச்சில் மதியும் எச்சில் ஒலியும் எச்சில்
  ஏதில் எச்சில் இல்லதில்லை இல்லை இல்லை, இல்லையே”

என்பது உலகமே எச்சில்தான் என உணர்த்துகிறது. இந்தக் கருத்தில்
அக்காவின் பாடலிலும் மிகத் தெளிவாய் வெளிப்படுகிறது. பராபரக்
கண்ணியில்

 “எச்சில் எச்சிலென்று புலம்புகிறாய் மானிடர் எச்சில்லில்லாத  
 இடமில்லை பராபரமே
 சில்லெச்சில் மூர்த்தி கையில் ஈ எச்சில் தேனல்லவோ
 மச்சமெச்சில் நீரில் வந்து மூழ்கும் மறையோர்கள் எச்சில்
 பச்சைக் கிளி கோதும் பழம் எச்சிலன்றோ பராபரமே
 தேரை எச்சில் தேங்காய் சிறு பூனை எச்சில்
 தேசமெல்லாமே எச்சிலென்றறிவேன் -- பராபரமே
 நாதமெச்சில் பிந்து எச்சில் நால்மறையோர் வேதம் எச்சில்
 மந்திரங்கள் சொல்லும் வாய் எச்சிலன்றோ--பராபரமே
 அண்ட பிண்ட லோகமெல்லாம் அடங்கலும் எச்சிலாச்சே
 வண்ட மத வாதிகட்கு வாயுண்டோ--பராபரமே
 என்றைக்கும் உண்ணும் தாய்முலை எச்சிலன்றோ --பராபரமே
 எச்சிலுன் வாயும் உடலும் ஏகமாயிருக்கையிலே 
 பாதம் எச்சிலென்று அலம்ப சுத்தமாச்சோ—பராபரமே
 ஈசரொருவர் உண்டே எச்சிலில்லாத வஸ்துதான் பாடக 
 வாசகரும் காணாத ஜோதி—பராபரமே

எச்சிலில்லாத உலகேயில்லை என்பதை இதை விடத் தெளிவாகச் சொல்ல இயலாது. தீவினைகள் அனைத்தும் செய்து, உடல் நித்தியமானது என்று எண்ணிக் கொண்டு வாழும் மனிதர்கள் பற்றி

  “காற்றுத் துருத்தி கடிய வினைக்குள்ளான ஊற்றைச் 
   சடலத்தை உண்டென்று இறுமாந்து”

என்று பட்டினத்தார் சொன்னதை

   “நாற்ற மலத்தினால் சேர்த்த பாண்டமிது ஆத்மாவாகுமோ
   புழு நெளியும் உளுத்த சடலத்தை தேர்த்தினாலாகுமோ
   காற்றுத் துருத்தியை மாத்த 
   கூற்றுவன் காத்திருக்கிறானிதோ” 

என்று அக்கா பேசுகிறாள்.

  “அண்ட பிண்டம் தந்த ஆதிதேவன்” 

என்று பாம்பாட்டிச் சித்தர் சொல்ல அக்காவின் சிந்தனையில் அது

  “அண்ட பிண்டம் அவருண்ட நாடு”

என மலர்கிறது.

தமிழில் முதல் முறையாக ஆச்சே, போச்சே, அடா, அடி,அன்னே, பின்னே என்னும் மனிதர்களின் அன்றாடப் பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது பின்னாளில் பாரதியாலும் தொடரப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. மனம், புத்தி சம்வாதத்தில்

 “என்னிடத்திலே உதித்து என்னைப் பயமுறுத்தி
 எனக்கு பயந்தொளித்த தெங்கடி அன்னே
 தன்னை மறந்தால் உருக்கும் தன்னை அறிந்தால் ஒளிக்கும்
 சற்று நீ உற்றுப் பார்த்து சந்தோஷி பின்னே”

என்ற சான்றைக் காட்டலாம். மெய்,பொய் விளக்கத்தில் பொய்யும்,
மெய்யும் அடுத்தடுத்து அறிவுரை போல இடம் பெறுகின்றன

  “ஜாதி வர்ண குலகோத்திர ஆசிரமாதிகள் பொய்யடா
  ஸத்ய ஞானானந்த ஸூகஸாகரம் நீ மெய்யடா”
 “பொய்யும் மெய்யுமாகத் தோன்றும் புத்தி கல்பிதம் பொய்யடா
 புத்தி விருத்திகளற்ற போதானந்த ஸூகபோதம் நீ மெய்யடா”

சொல் சிறப்பும், ஆழமும் கொண்டதற்குச் சான்றாக

 “கல்லிடுக்கில் பாசி நீர் கலங்கித் தெளிவது போல
 சொல்லறிந்த ஞானிகளுக்குத் தோன்றும்”
 “பொறுக்கி எடுத்த ஞானம் போகுமோ
 கறிக்கி பாதி போன சுரைக்காய் விரைக்கு ஆகுமோ?”

என்ற பாடலைக் காட்டலாம்.

’ஞான ரஸக் கீர்த்தனைகள்’ பகுதியில் அக்கா பூபாளம், ஆனந்த பைரவி, பைரவி, ஆரபி, தோடி, கல்யாணி, மோகனம், புன்னாக வரளி, சங்கராபரணம், தன்யாசி, சகானா முகாரி எனப் பல ராகங்களில் பல பாடல்களைப் படைத்துள்ளார்.. அது தமிழிசை மிகச் சிறப்பாக வளர்ந்த காலகட்டம் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. அக்காவின் பாடல்களை இன்றைய தலைமுறையினரான காயத்ரி வெங்கட்ராகவன், நிஷா, துஷ்யந்த் ஸ்ரீதர், விசாகா ஹரி உள்ளிட்ட பலர் பாடியும், கதாகாலட்சேபம் செய்தும் வருகின்றனர்.

தொகுப்புகள்

சிறிய அளவில் புத்தகங்களாக வெளி வந்த ஆவுடையக்காளின் பல பாடல்களை ஆய்குடி வெங்கட்ராம சாஸ்திரிகள் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

ஞானானந்த தபோவனத்தைச் சேர்ந்த சுவாமி நித்யானந்த கிரி செங்கோட்டை ஆவுடையம்மாள் பாடல் திரட்டு என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

ரிஷிகேசம் சிவானந்த சுவாமிகள் ’மகாத்மாக்கள் சரித்திரங்கள்’ என்ற நூலில் அக்காவின் வரலாற்றை எழுதியுள்ளார். ஔவைக்கு இணையாக அக்காவைக் கூறலாமென கோமதி ராஜாங்கம் குறிப்பிடுகிறார். சதாசிவ பிரம்மேந்திரருக்கு அடுத்தபடியாகவும் அக்காவை மதிப்பிடுகிறார் கோமதி ராஜாங்கம்.
பகவான் ரமணரின் முன்னால் அக்காவின் பாடல்களைப் பாடுவது வழக்கம். ரமணாசிரமக் காப்பகத்திலிருந்து சுந்தர ரமணன் அதைத் தொகுத்து உதவியிருக்கிறார்.

சிறு வயதிலிருந்தே பகவான் ரமணர் தன் தாய் அழகம்மை பாட, ஆவுடை அக்காளின் பாடல்களைக் கேட்டிருக்கிறார். அக்கா பயன்படுத்திய சொற்களை அவர் பேச்சுத் தமிழில் பயன்படுத்தியதாக நொச்சூர் சுவாமிகள் குறிபபிடுகிறார். ஒரு முறை ரமணாசிரமத்தில் ஜோஷி என்னும் பக்தர் பகவானிடம் “நான் இப்போதுதான் தொடங்கியிருக்கிறேன். எப்படி ஆரம்பிப்பது?” என்று கேட்டார். “நீ இப்போது எந்த நிலையிலிருக்கிறாய்? உன் லட்சியமென்ன?.. தன்னிலை என்பது, அடைய முடியாத தூரத்தில் எல்லாம் இல்லை.” என்று வழக்கம் போலத் தன் பாணியில் பகவான் பதில் சொன்னார். அப்போது அங்கு கூட்டத்திலிருந்த லோக்கம்மா ஒரு தமிழ்ப் பாடலைப் பாட, அது ஆவுடை அம்மாளின் பாடலென்பதை உணர்ந்து, “அம்மா இந்தப் பாடலை அடிக்கடி பாடுவார். நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கும் விஷயத்தைப் பற்றியதுதான் அது. அக்கா பல பாடல்கள் பாடியிருக்கிறார். மதுரை ,மற்றும் சுற்றுப் புறங்களில் பெண்களால் அவை பாடப்பட்டு வருகின்றன ” என்றும் சொன்னார்.

சில பாடல்கள்:

“வேதாந்தமான தொரு கப்பல் வருகுதப்பா
மெய்ஞ்ஞான ஜனங்களுக்கு பார்ப்பதற்கு மெய்ப்பாய்
மோஹாந்தகாரம் தள்ளி முக்தி வருகுதப்பா
ஏகாந்தமான துறை இறங்கியது காண் கப்பல்”
--வேதாந்த ஞான ரஸ கப்பல்
“அம்மா நீ கேளாய் ஆத்மா நாமரூபமாகும்
தப்பாமலே ஆத்மா நாமரூபமாகும்”
--கண்ணிகள்
“போதம் தெளிவேனோடி, போக்குவரத்தை விட்டு
தேறித் தெளிவேனோடி கிளியே சித்துதயத்தைக் கண்டு
செப்பிடி வித்தை போல இந்த ஸூத்திரமான தேகத்தை
எப்படி நான் சுமப்பேனடி, கிளியே—இனி என்னாலாகாதடி”
-----கிளிக்கண்ணி

“பிரம்மானந்தத்தைக் கண்டு பேசாதிரு மனமே”– மத்யமாவதி

“ஆனந்தம் ஆனேன் நானே ஸச்சிதாந்தம் ஆனேனே நானே
பரபிரமானந்தம் ஆனேன் நானே.”

Exit mobile version