
பேரழிவின் கலை
இந்த ஆண்டு (2025) இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரியைச் சேர்ந்த நாவலாசிரியர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய் (László Krasznahorkai)க்கு அளிக்கப்பட்டுள்ளது. அமைதியின்மையின் அடர்த்தி மற்றும் இருண்மையின் அதிசயம் ஆகியவற்றின் மீதான அவரது படைப்புகளின் தனித்துவமான பார்வைக்காக அளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி குறிப்பிடுகிறது. அவரது படைப்புகள் நேர்த்தியான முடிவுகளை வாசகனுக்குத் தர மறுப்பவை; ஒன்றையொன்று பின்னிக்கொண்டோடும் ஆறுகளைப் போன்று முடிவில்லாத நீண்ட வாக்கியங்கள் கொண்டவை; அவற்றின் கற்பனைத்திறனின் வீச்சு பருப்பொருள் மற்றும் எதிர்ப்பொருள் ஆகியவற்றின் பிரபஞ்ச அளவிலான பிரச்னைகளுக்குத் ஆணி அடித்தாற்போல தீர்வு காணும் அளவுக்கு விரிகின்றவை.
இக்கட்டுரையில் க்ராஸ்னஹோர்காயின் படைப்புலகம் குறித்து சற்றே அலசலாம். அவரது படைப்புகளின் எரிச்சலூட்டும், அதே நேரத்தில் ஒளி கொண்டதுமான இலக்கிய நுட்பங்களையும், அவை சென்று தொடும் தத்துவ தளங்களையும், அவற்றுக்கான புனைவு உத்திகளையும் உசாவி அறிய முற்படலாம்.
லாஸ்லோ ஹங்கேரியின் க்யூலாவில் 1954-ல் பிறந்தார். கிழக்கு ஐரோப்பாவின் கம்யூனிஸ்ட் கலாசாரம் தவழ்ந்த நிலப்பரப்பில் வளர்ந்து, அதன் சமரசமற்ற நாவலாசிரியர்களில் ஒருவராக உருவெடுத்தார். அவரது முதல் நாவலான சாடண்டாங்கோ (Satantango (1985) அவரை அடர்த்தியான மொழியில், நீண்ட வாக்கியங்கள் கொண்ட உரைநடையில் பேரழிவுகள் குறித்து நுண்ணுணர்வுடன் எழுதும் எழுத்தாளராக உலகிற்கு அறிவித்தது. தொடர்ந்து அவரது பல்வேறு நூல்கள் வெளியாகின. The Melancholy of Resistance, War and War, Seiobo There Below, Baron Wenckheim’s Homecoming, and more recently Herscht 07769 and reportage such as Destruction and Sorrow Beneath the Heavens போன்ற நாவல்கள். இவற்றை லாஸ்லோ மீண்டும் மீண்டும் பல்வேறு பாவனைகளையும், திட்டங்களையும் கைக்கொண்டு புனையப்பட்ட ஒரே நூலின் பல்வேறு பிரதிகளாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
ஹங்கேரிய திரைப்பட இயக்குனர் பெலா தார் (Béla Tarr) உடன் லாஸ்லோ இணைந்து பணியாற்றிய காலத்தில் அவரது புகழ் பன்மடங்கு உயர்ந்தது. லாஸ்லோவின் மிக மெதுவான, அடர்த்தியான உரைநடையை திரைமொழிக்கு கொண்டு வந்ததிலும், பேரழிவு என்ற நிகழ்வை வெறும் காட்சிப்படுத்தலுக்கும் மேலாக உயர்த்தியதிலும் தாரின் பங்கு இன்றியமையாதது. லாஸ்லோவை ஆங்கிலத்தில் முதன்மையாக மொழியாக்கம் செய்தவர்கள், George Szirtes, Ottilie Mulzet, இன்ன பிறர். இவர்களே லாஸ்லோவின் மொழியின் அடர்த்தியான இசைத்தன்மையையும், முடிவிலாது தொடரும் சொற்றொடர்களின் அழகியலையும் அபாரமான நம்பகத்தன்மையுடன் மொழிபெயர்த்தவர்கள். லோஸ்லோ “பல தசாப்தங்கள், பல்வேறு நிலப்பரப்புகள் தாண்டி தன் கடுமையான பரிசோனைமுறை எழுத்தைத் தக்கவைத்துக் கொண்டவர் என்றும், புனைவெழுத்துக்கும், செய்தித்தாள் அறிக்கை எழுத்துக்கும் இடையிலும், ஹங்கேரி, கிழக்கு ஆசியா மற்றும் ஜெர்மனி போன்ற நிலங்களுக்கு இடையிலும் சகஜமாக நகர்ந்தவர்” என்றும் நோபல் கமிட்டி குறிப்பிடுகிறது.
லாஸ்லோவின் உரைநடை தனித்துவம் வாய்ந்ததும், உடனடியாக அடையாளம் காணக்கூடியதுமாகும். மிகவும் நீண்டு, அகண்ட, திருகிச் செல்லும் சொற்றொடர்கள்; முடிவிலாது நீளும் பத்திகள் வாசகர் மனத்தை ஒரு விசித்திரமான காலத்துள் சென்று உறைய வைக்கின்றன. இந்த வகைப் பத்திகளை “பரந்த விரிந்த கருப்பு நதிகள்” என்று அழைக்கிறார்கள். சொற்றொடர்கள் ஓர் எரிமலைக் குழம்பு போல மெல்ல நகர்கின்றன. வாசகனின் இயல்பான விரைவு வாசிப்பைத் தடுத்து அவனை ஆகர்ஷித்துக் கொள்கின்றன. வாசகனுக்கு பத்தி பிரித்து எளிமைப்படுத்தி புனைவில் ஓர் இசைவுத்தன்மையை ஏற்படுத்துவதற்கு பதிலாக, லாஸ்லோவின் புனைவெழுத்து சொற்றொடரின் உட்பிரிவுகள், அடைப்புக்குறிகள், திரும்பத் திரும்பத் தோன்றும் படிமங்கள் ஆகியன நெருக்கமாகப் பின்னப்பட்டு நகரும் ஓர் பிரமாண்டமான இசைக்கோவையைப் போல தோற்றமளிக்கின்றன. இலக்கிய விமர்சகர்கள் லாஸ்லோவின் இந்த நீண்டு செல்லும் சொற்றொடர் உத்தி அவரது புனைவுலகுக்கு ஓர் அடர்த்தியான பாகுத்தன்மையை உருவாக்குவதைக் கண்டறிந்து சொல்கின்றனர். வாசகனுக்கு மூச்சு விடக்கூட அவகாசம் தராத வாக்கிய நீளம், அதனால் பிரதியோடு அவனுக்கு ஏற்படும் இன்றியமையாத நெருக்கத்தின் அழுத்தம் இவை அவனிடத்து பிரேமை, பிரமிப்பு, அச்சம் ஆகிய உணர்வுகளை இயல்பாக உருவாக்குகின்றன.
லாஸ்லோவின் முதல் நாவலான Satantango ன் துவக்கத்தில் வரும் மழையின் நனைந்த ஹங்கேரிய கிராமத்தின் காட்சியும், அதன் தலைவிதி மெல்ல மெல்ல அவிழ்க்கப்படுவதும் அவரது புனைவுலகக் கட்டுமானத்துக்கான சிறந்த எடுத்துக்காட்டுகள். வெறும் சேற்றையும், நிலவும் கால நிலையையும் மீபொருண்மை என உணரவைக்கும் தன்மை கொண்டது அவரது புனைவுத்தி. இந்த நாவலின் டாங்கோ வடிவ அமைப்பு (முன்னோக்கிய ஆறு அத்தியாயங்கள், பின்னோக்கிய ஆறு அத்தியாயங்கள்) சமூகத்தின் சீரழிவை சடங்குகளுடன் கூடிய தோல்வியுற்ற நம்பிக்கையின் நடனமாக நிகழ்த்திக் காட்டுகிறது.
The Melancholy of Resistance ல் லாஸ்லோ ஆன்மாவின் மீதான தியானங்களெனவே தனது பிரமாண்டமான பத்திகளை எழுதுகிறார். சுத்தியலால் ஆணி அடிப்பதுகூட இருப்பின் தியானமாக மாறுகிறது. துணி திணிக்கப்பட்ட திமிங்கல உருவம் ஒன்று கூட்டுப்பைத்தியக்காரத்தனத்தின் குறியீடாக மாறுகிறது. நூலின் நீண்ட பத்திகள் வாசகனுக்கு மெதுவாகச் சிந்திப்பது எப்படி என்றும், அறத்தின் சிக்கல்களை அளவிடவும் சொல்லித் தருகின்றன.
லாஸ்லோவின் Seiobo There Below நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கலைப்படைப்பையோ அல்லது அதன் படைப்பாளியையோ மையமாகக் கொண்டிருக்கிறது. நாவல் ஷாங்க் வம்சம் துவங்கியதிலிருந்து தற்போதைய காலகட்டம் வரை, ஜப்பானிலிருந்து ஸ்பெயின் வரை யுரேஷிய கண்டம் முழுவதும் பரந்து விரிகிறது. நாவலின் பதினேழு அத்தியாங்களும் பெரும்பாலும் ஒற்றை வாக்கியங்களாலானவை, மேலும் 1 முதல் 2584 வரை ஃபிபோனச்சி வரிசையின் படி அமைக்கப்பட்டுள்ளன. இதனால் நாவலை வாசிக்கும் தருணத்தில் ஒளி ஆண்டுகளினூடாகப் பயணம் செய்யும் வினோதமான அனுபவம் ஏற்படுகின்றது.
அதன் ஒரு கதையில் ஒருவன் பார்தெனானுக்குச் செல்கிறான். அங்கு கண்ணாடி அணியாமல் சூரிய ஒளியால் கண்குருடாக்கப்பட்டு ஏதென்ஸ் நகரப் போக்குவரத்தில் கொல்லப்படுகிறான். இன்னொன்றில் வேறொருவன் வெனிஸில் ஒரு கேலரியில் ஓவியத்தில் உள்ள கிறிஸ்துவின் கண்கள் தன்னையே பின்தொடர்வதை உணர்ந்து கொடுந்துயரை அனுபவிக்கிறான். இன்னொன்றில் ஆன்றெய் ருபேலோவின் விக்ரகம் உயிர் பெறுவதைக் காணும் ஓர் ஏழைக் குடியேறி சித்தம் பிறழ்கிறான். லூவர் அருங்காட்சியகத்தில் உள்ள காவலரொருவர் தன் பொறுப்பாளர் வீனஸ் டி மெலோவைக் குறித்து இவ்வாறு சிந்தித்து முடிவெடுக்கிறார்: “அவள் இவ்வுலகத்தில் எந்த இடத்தையும் சார்ந்தவள் அல்ல. அவள் குறித்த எல்லாமுமே மறைந்து போன ஒரு மாய உலகத்தைச் சார்ந்தது.”
பாரிஸ் ரிவியூவுக்குக் கொடுத்த நேர்காணலில் லாஸ்லோ இவ்வாறு குறிப்பிடுகிறார். “இதுவரை ஆயிரம் முறையாவது குறிப்பிட்டிருப்பேன், நான் எழுத விரும்புவது ஒரே ஒரு நூலை மட்டும்தான். எனது முதல் நூலில் நான் திருப்தி அடையாததால் இரண்டாவதை எழுதினேன். அப்புறம் மூன்றாவது. இப்படியேதான் என் எல்லா நூல்களும் எழுதப்பட்டன.
லாஸ்லோவின் படைப்புகளோடு இணைத்துக் காணும் ஒரு சொல் “பேரழிவு.” அவரது நூல்கள் பிரபஞ்ச ஒழுங்கிற்கும், எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்ட்ரொபிக்கும் இடையிலான மோதலைக் குறித்து உசாவுகின்றன. Seiobo There Below நாவலில் வலிக்கும், மரணத்துக்குமான கலையை ஒரு பரோக் பாணி ஓவியத்தைப் போன்றும், Melancholy of Resistance நாவலில் சமூங்களின் சிதைவை வர்ணிக்கும் லெவியாதன்-திமிங்கிலம் சாகசமாகவும் காட்டுகின்றது. லாஸ்லோவின் பேரழிவின் கலை என்பது இறையியலுக்கும், இசைக்கும் மிக அணுக்கமானது. அவரது பாத்திரங்கள் கலைப்படைப்புகளிலும், இசையிலும், மற்ற மீபொருண்மை அமைப்புகளிலும் தங்களுடைய எழுச்சியையும், மீறலையும் காண்கிறார்கள். Herscht 07769 நாவலில் அதன் நாயகன் ஃப்ளோரியனுக்கு இசைக்கலைஞர் யோஹன் செபாஸ்டியன் பாக் மீபொருண்மையை நிலைப்படுத்தும் வசிப்பிடமாக மாறுகிறார். பாக்கின் இசை அவனுக்கு தன்னைச் சுற்றி விகாரமாக அவிழ்ந்து கொண்டிருக்கும் தீமையை விரட்டும் ஒரு நிலையான அமைப்பாகச் செயல்படுகிறது. மனிதர்கள் எவ்வாறு அழகியலிலும், கருத்தியலிலும், அறிவியலிலும் மீட்பைத் தேடுகிறார்கள் என்றும், அத்தேடல்கள் எவ்வாறு திசைதிருப்பப்படுகின்றன, புனிதப்படுத்தப்படுகின்றன, அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன என்றும் லாஸ்லோவின் பேரழிவு குறித்த சிந்தனை விசாரணை செய்கிறது.
லாஸ்வோவின் புனைவுகில் திரும்பத் திரும்பத் தோன்றும் படிமங்கள்: எந்தப் பாதுகாப்புமற்ற தேவதையின் உருவம், பெரிய குழந்தை போன்ற, சவலையான, கனவுகள் காணும் மனிதன். ஹங்கேரிய குக்கிராமங்களின் அப்பாவி மனிதர்களிலிருந்து ஃப்ளோரியன் ஹெர்ஷ்ட் வரை இந்த உருவங்கள் சமூகத்தின் சக்திகள் சார்ந்திருக்கும் ஒழுக்க விதிகளின் ஆதார நிலைக்குக் குறியீடுகளாக நிற்கின்றன. லாஸ்லோ தன் பாத்திரங்களை தஸ்தோயெவ்ஸ்கியின் மிஷ்கினைப் போன்றவர்கள் என்று குறிப்பிடுகிறார். பாதுகாப்பற்றவர்கள், எளிதில் உடைந்து விடக்கூடியவர்கள், உலகுக்கு எளிதில் இரையாகி விடக்கூடியவர்கள்.
இப்பாத்திரங்கள் லாஸ்லோவின் புனைவுலகில் இயங்குவதன் மூலம் வாசகனுக்கு சமூக அமைப்புகள், அதன் அரசியல், பொருளாதார, கருத்தியல் இவற்றில் நிகழும் கொடுமை விளங்குகிறது. வாசகனும் இந்தக் கொடுமைகளுக்கு உடந்தையாயிருக்கிறான் என்பதை அவனுக்கு நினைவுறுத்துகிறது. பலவீனர்கள் தாக்கப்படுவதை நாம் அவரது நாவல்களில் காண்கிறோம். நமது அனுதாபங்கள் (அந்த உணர்வு எழுவதன் மூலம் நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி) இவற்றின் வரம்பு சோதனைக்குள்ளாக்கப்படுகிறது. Herscht 07769ன் ஃப்ளோரியன் அண்டத்தின் பேரழிவு குறித்து எழுதும் அவசரக் கடிதங்களால் ஒரே நேரத்தில் பாதுகாக்கப்படவும், சித்திரவதைக்குள்ளாக்கப்படவும் செய்கிறான். ஒழுக்கத்தின், தார்மீகத்தின் சமூக இயந்திரம் வன்முறையை நோக்கித் திரும்பும்போது அது மீட்பு மற்றும் தார்மீக ரீதியான அழிவின் மயக்கங்கள் குறித்து சங்கடமான கேள்விகளை எழுப்புகிறது.
இசையின் மீபொருண்மைத் தன்மை, வடிவியலின் ஆன்மிக ஒழுங்கு, சொல்முறையின் நெறிநிலை ஆகிய தன்மைகள் லாஸ்லோவின் மொழிக்கு நவீனத்துவத்தை நினைவூட்டும் ஓர் அறிவுசார் அடர்த்தியைக் கொடுக்கின்றன. அவரது புனைவுலகக் கட்டுமானம் தத்துவ தளத்தில் நிற்பது. அவரது இலக்கிய இடம் என்பது மீபொருண்மை குறித்தான அவரது கவலைகளையும், குழப்பங்களையும் பரிசோதிப்பதற்கான ஓர் ஆய்வகம் போன்றது.
ஆங்கில உலகம் லாஸ்லோவை ஒரு மனதாக உடனே ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது ஒற்றை வாக்கிய பரிசோதனையும், பேரழிவு குறித்த அவரது சொற்களஞ்சியமும் நிலைத்து நிற்கும் அழகியல் உணர்வை உருவாக்குகிறதா என்ற கேள்வியை விமர்சகர்கள் எழுப்புகின்றனர். தாராளவாதத்தைக் குறித்த அவரது அங்கதங்கள் பரிதாபத்துக்குரியவனின் வெற்றுப் புலம்பல் என்பதைத் தாண்டி ஏதேனும் அர்த்தம் தருகின்றனவா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சிலர் லாஸ்லோ பக்கம் நிற்கின்றனர். அவரது உரைநடையின் அழுத்தமும், திரிபும் வரலாற்றின் அழுத்தத்தையும் திரிபையும் குறிப்பதாகக் கூறுகின்றனர். அவரது நாவல்களின் நீளமும், தொனியின் தீவிரமும், நாவல் உசாவும் கேள்விகளுக்கான விடையறியும் சரியான ஊடகமென்றே அவர்கள் கருதுகின்றனர். அவரது நூல்களில் இழையோடும் தார்மீகக் கற்பனைகள், வன்முறையையும், மென்மைத்தன்மையையும் ஒருங்கே வெளிப்படுத்தும் பாங்கு, பாத்திரங்களின் ஆன்மிகப்பசி போன்றவை வாசகர்களை எதிர்பாராத எல்லைகளுக்குத் தள்ளுவதாகக் குறிப்பிடுகின்றனர்.
லாஸ்லோ வாசகனுக்கு எளிய ஆறுதல்களை அளித்து ஆற்றுப்படுத்தும் நாவலாசிரியர் அல்லர். பொறுமையைக் கோரும் வாக்கியங்களாலும், மீட்பின் மொழியை அதி சிக்கலாக்கும் தரிசனங்களாலும், வாசகனின் இரட்டை நிலையைப் பரிசீலனை செய்யக்கோரும் பாத்திரங்களாலும் அவரது நாவல்கள் நம்மை எதிர் கொள்கின்றன. இந்த நோபல் பரிசு சொற்றொடர்களை தத்துவ அலசலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் நுட்பத்திற்காகவும், அறத்தின் மீதான அவரது லட்சியத்திற்கான அங்கீகாரமாகவும் அளிக்கப்பட்டிருக்கிறது.
லாஸ்லோவை வாசிப்பதென்பது அவருக்கே உரிய உரைநடையின் தர்க்கத்துக்கு தன்னை ஒப்புக்கொடுப்பதாகும். மிகப்பொறுமையாக, கவனம் கொடுத்து வாசிப்பவருக்கு அவரது நூல்கள் அளிக்கும் வெகுமதி அளப்பரியது. அறத்தின், மீபொருண்மையின் விசாரணையை மேற்கொள்பவை அவரது நூல்கள். கலையும், இசையும், வடிவியலும் மனிதச் சிறுமைகளை மீறிய உண்மைகளை வெளிப்படுத்துவதற்கான கருவிகள் என்பதைக் காட்டுகின்றன அவரது நூல்கள். மனிதனின் பலவீனங்களையும், பிடிவாதத்தையும் சமரசமற்ற தீவிரத்துடன் எதிர்கொள்பவை லாஸ்லோவின் படைப்புகள். புனைவின் சாத்தியங்களுக்கும், அறத்தின் அழகியலுக்கான மறுமலர்ச்சிக்கும் அவரது படைப்புகள் உதாரணம்.
கட்டுரையின் தலைப்பு: https://www.ndbooks.com/article/herscht-07769/#:~:text=within%20nothing%20out%20of%20nothing
உசாத்துணை:
- Viscous Apocalypse — The Exploded View
- Ange Mlinko · Germans don’t get toothache: Krasznahorkai’s Antimatter
- [REVIEW] “Taken as Strictly True: Neuroscience and Sinology in László Krasznahorkai’s 𝐷𝑒𝑠𝑡𝑟𝑢𝑐𝑡𝑖𝑜𝑛 𝑎𝑛𝑑 𝑆𝑜𝑟𝑟𝑜𝑤 𝐵𝑒𝑛𝑒𝑎𝑡ℎ 𝑡ℎ𝑒 𝐻𝑒𝑎𝑣𝑒𝑛𝑠” by Lucas Klein | Cha
- László Krasznahorkai’s Melancholy of Resistance
- Against High Brodernism | Los Angeles Review of Books
- ‘Herscht 07769’ by László Krasznahorkai (Review) – Tony’s Reading List
- László Krasznahorkai, world author (II.)
- László Krasznahorkai’s Herscht 07769 – The Brooklyn Rail
- Nothing Lasts Forever: The Work of Laszlo Krasznahorkai. – Document – Gale Academic OneFile
- The Yale Review | László Krasznahorkai on hope, apocalypse, and his…
- Nobel Prize in Literature 2025 – Biobibliography – NobelPrize.org
