(இ.மு: இணையத்துக்கு/இண்டர்னெட்டுக்கு முன்)
‘மை டியர் உமா, ….’ – ம்ஹூம். ‘டியர்’ போதாதோ? ‘டியரஸ்ட்’ இன்னும் சிறந்ததாக இருக்குமோ? தூக்கம் வருவதற்குள் இன்றாவது இந்த முதல் வரியைத் தாண்ட முயற்சி செய்ய வேண்டும். நாம் இரண்டாம் வரி எழுதுவதற்குள் உமாவிற்குக் கல்யாணம் ஆகிவிடாமல் இருக்கவேண்டும்.
ஓ! முதலில் தமிழில் எழுதுவதா, ஆங்கிலத்தில் எழுதுவதா என்ற கேள்விக்கே விடை கிடைத்த பாடில்லை. உமாவின் ஆங்கில அறிவு எவ்வளவு விசாலமானது என்று தெரியவில்லை.
தமிழும் ஆங்கிலமும் நன்றாகத் தெரிந்த பலர் கடிதங்களை ஏனோ ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார்கள். சில நுணுக்கமான விஷயங்களை எழுத ஆங்கிலம் வசதிதான். சந்தேகமில்லை. ஆனால் ஆங்கிலத்தில் எழுதுவது தமிழில் எழுதுவதைவிட எளிதானதா? இது பற்றிச் சாவகாசமாய் ஒரு நாள் யோசிக்க வேண்டும்.
அல்லது ஒரு கட்டுரை எழுதலாம். ஒப்பியல் கட்டுரை. ஏற்கனவே எழுத நினைத்து பரணில் போட்டுவைத்திருக்கும் தலைப்புகள் பெருகிவிட்டன. ‘தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் – நான் ஒருவன்தான் பாக்கி’, ‘பிறமொழிப் பெயர்களைத் தமிழில் எழுதுவதன் சிரமங்கள்’, ‘பேச்சுத்தமிழும் செந்தமிழும்’, ‘தமிழ் இலக்கியத்தில் பிராமணச் சித்திரங்களின் மிகுதி’, இத்தியாதி. இதுவும் சேர்ந்து கொள்ளட்டும்.
‘அன்புள்ள உமாவுக்கு, அனேக ஆசீர்வாதம். உபயகுசலோபரி. க்ஷேமம். க்ஷேமத்திற்கெழுதவும்….’ இதுமாதிரித் தான் அப்பா அந்தக் காலத்தில் அம்மாவுக்கு எழுதியிருப்பாரென்று நினைக்கிறேன். இன்று இது போல் எழுதினால் பெண்கள் ஓடிவிடுவார்கள் (அது சரி, உபயகுசலோபரியென்றால் என்ன அர்த்தம்?)
‘டியரஸ்ட் உமாவே’ பரவாயில்லை. அதுவே இருந்துவிட்டுப் போகட்டும். ‘நான் உன்னைக் காதலிக்கிறேன், நீ என்னைக் காதலிக்கிறாயா?’ ப்ராத்மிக்’கின் ஆரம்ப ஹிந்திப் பாடமொன்றில் இப்படித்தான் வரும். ‘மேம் தும்ஸெ ப்யார் கர்தா ஹூம். க்யா தும் முஜ்ஸே ப்யார் கர்தி ஹோ?’ By the way, காதலிப்பதற்கு ஹிந்தியில் வேற்றுமை உருபு ‘ஸே’ வா? அல்லது ‘கோ’ வா? உமாவின் அம்மா பாலக்காட்டுப் பக்கமோவென்று ஒரு சந்தேகம். அப்படியென்றால் “ஞான் நின்னெ ப்ரேமிக்குன்னு. நீ என்னெ ப்ரேமிக்குன்னோ? எண்டெ பொன்னே, வேகம் பரயு’ என்று மலையாளத்தில் கூட கடிதத்தில் கேட்டுப்பார்க்கலாம்.
முதல் முதலாய்க் காதலிக்குக் கடிதம் எழுதுகிற லட்சணமா இது? சிருங்கார ரசத்திற்கு வடமொழிதான் சிறந்ததோ? ஆனால் அந்தக் காலத்தில் பண்டைத் தமிழர்கள் செய்யாத காதலா, வீரமா? ஆறாங் கிளாஸிலிருந்து எஸ்.எஸ்.எல்.ஸி. வரை வருடம் தவராமல் படித்ததல்லவா? ஆனால், பண்டைத் தமிழர்கள் இதுமாதிரிக் காதல் கடிதம் எழுதினார்களா தெரியவில்லை. மேகத்தையோ, அன்னத்தையோ தூதுவிட்டுவிட்டுப் பேசாமல் இருந்திருப்பார்கள். அல்லது இலக்கண சுத்தமாய் வெண்பாவிலோ, கொச்சகக் கலிப்பாவிலோ எழுதித் தள்ளியிருப்பார்கள். ஆமாம், காதல் கடிதத்திற்கு என்ன பா? இப்போது யாராவது தமிழ்க் கவிஞரைக் கூப்பிட்டு, நாம் வெண்பாவில் காதல் கடிதம் எழுதச் சொன்னாலும், அவரால் எழுத முடிந்தாலும், உமாவுக்கு, உடன் ஒரு கோனார் நோட்ஸும் அல்லவா அனுப்பவேண்டி வரும்?
அன்று டன் டன்னாய், அற்புதமான செய்யுள்கள் கம்பன் எழுதினான் என்றால், ‘தெண்டிரை’யை எப்படிப் பதம் பிரித்து எழுதுவதென்று எந்தத் தமிழ் ஆசிரியரும் பரீட்சையில் கம்பனைக் கேட்டிருக்க மாட்டார். தமிழன்னையை நோக்கி (அல்லது தமிழ்க் கன்னியை நோக்கி – if you prefer) ஒரு ஜன்மம் கடுந்தவம் புரிந்தாலும் இன்று யாராவது கம்பன் மாதிரி எழுத முடியுமா? இன்றையப் புதுக் கவிஞர்களையெல்லாம் கூப்பிட்டு ஒரு நாள், எண்சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்தில், ஐன்ஸ்டைனின் ‘E=mc2’ பற்றி எழுதச் சொல்லணும்.
பேசாமல், உமாவிடம் நேரிலேயே கேட்டிருக்கலாம். ‘Do you love me?’ நாலே வார்த்தை. As simple as that. ஆனால், சந்தர்ப்பம் எங்கே வாய்த்தது? சினிமாக்களில் காதலர்களிடையே தனிமைக்குப் பஞ்சமிருப்பதில்லை. முதல் சந்திப்பு முடிந்ததுமே, சட்டென்று, ஸ்லோ-மோஷனில், அவர்களுக்குக் கடற்கரைக்குக் கிளம்பிவிடமுடிகிறது. அவர்கள் சந்தித்தது வாடிப்பட்டி, பள்ளபட்டி போன்ற கிராமமென்றாலும். உமாவின் குடும்பம் மாதிரி, கல்லான அம்மா, வியாதி வெக்கையில்லாமல் ரிட்டயராகி வீட்டை விட்டு நகராத அப்பா, தாரளமாய்ச் சகோதர சகோதரிகள் எந்தக் காதலிக்கு இருந்திருக்கிறார்கள்? லெட்டர் கொடுக்க, தூது விடச் செளகரியமாய் ஒரு விஷயம் புரியாத தம்பி இருப்பான். Of course, அப்பாவோ, அண்ணாவோ சற்று முரட்டு ஆசாமியாய் இருக்கலாம்.
ஆனால், அதெல்லாம் முடிவில் சரியாகிவிடும். களங்கமில்லாத காதல் வெளிப்படும் வகையில், காதலன் முன்னேற்பாடாய் நடந்து கொண்டிருந்தால் போதும் – காதலி ஃப்ளாஷ்பாக்கில் யோசித்துப் பார்க்க வசதியாய். முக்கியமாய், அந்த சினிமாக்களில் காதலனும் காதலியும் அடிக்கடி சந்தித்துக் கொள்ள வசதியாய் ஒரே ஊரில் இருப்பார்கள். இருவருக்கும் வேறு வேலை, வெட்டி இருக்காது.
நம் கேஸில் ஆரம்பத்திலிருந்தே எல்லாம் தப்பு. பேச வாய்த்த சந்தர்ப்பங்கள் தான் குறைவு என்றால், அதையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள நமக்குத் துப்பில்லை. சபாபதி படத்தின் ராமச்சந்திரன் மாதிரி திருட்டு முழி முழித்து, அசடு வழிந்து காரியத்தைக் கெடுத்துவிட்டோம். ஆனால், உமாவாவது அப்பாவி – பரிதாபக் காதலன் ரூட்டில் வந்திருக்கலாம். அப்புறம் காதலியைத் திருவானைக்காவலில் தவிக்க விட்டுவிட்டுக், காதலன் இடித்த புளியாய், ஜாம்ஷெட்பூரில் இருக்கக் கூடாது – முதல் லெட்டர் எழுத ஆறு மாதமாய் யோசித்துக்கொண்டு. ஆறுமாதப் பிரிவால் காதல் கருகிவிடுமா? “Absence makes the hearts grow fonder” என்று எவனோ சொல்லவில்லை?
புதுக் காதலியிடம், காதல் மலர ஆரம்பிப்பதற்கு சற்று முன்பு அல்லது மலர ஆரம்பித்த பின்பு, என்ன பேசுவது? அவளோடு இருந்த பாதி நேரமும் என்ன பேசுவதென்றே புரியவில்லை. நமக்கு மட்டும் ஏன் இப்படி? கண்ணோடு கண்ணிணை நோக்கிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை. தலையைத் தூக்கிப் பார்க்கமுடிந்தால்தானே?
விஷயமே இல்லாமல் பெரும்பாலான ஜனங்கள் நாளின் பெரும்பான்மையான பகுதியை, எப்படிப் பேசியே கழிக்கிறார்கள்? ‘முப்பது நாட்களில் காதல் பேச்சு’ என்று ஏதாவது புத்தகம் விற்கிறதா என்று பார்க்க வேண்டும்.
எழுதுவதில் ஒரு செளகரியம். அடித்துத் திருத்தி, சரியான மனதிற்குப் பிடித்த பதம் வரும்வரை மாற்றிக் கொண்டே இருக்கலாம். நேரில் பேசும்போது உளறினால் உளறியதுதான். சினிமாவில் வசனகர்த்தா, மணிக்கணக்காய் யோசித்து, காப்பியோ டீயோ லிட்டர் கணக்கில் குடித்துவிட்டு, காதல் சொட்ட வசனம் எழுதிவிடுகிறார். காதலர்களும் ஏழெட்டு டேக்குகளில் சரியாகப் பேசிவிடுகிறார்கள்.
அவளிடமும் போய், கிரிக்கெட் பற்றியும், அக்னி நட்சத்திர வெய்யில் பற்றியும், தங்கம் விலையேறிவிட்டது பற்றியும் உப்புசப்பில்லாத மொக்கை விஷயங்களாகப் பேசி… சே!
‘இந்த சந்தனக் கலர் தாவணி உனக்கு, உன் கலருக்கு எவ்வளவு எடுப்பாக இருக்கிறது தெரியுமா’ என்றோ, ‘இரட்டைப் பின்னல் உனக்கு ஒற்றைப் பின்னலை விட மிகவும் அழகாக இருக்கிறது’ என்றோ இன்னும் இதுமாதிரி எவ்வளவோ suggestive ஆகச் சொல்லியிருக்கலாம். அவளுக்கு நாம் காதல் வயப்பட்டிருப்பதே தெரியுமோ என்னவோ? அவளது reactions ஐ நினைவு படுத்திப் பார்த்தால் இந்த எண்ணம் அவளுக்கும் தோன்றியிருக்க வேண்டுமென்றுதான் படுகிறது. ஆனால், நிறையப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்ததிலிருந்து இப்போதெல்லாம், பெண்களின் சாதாரணப் புன்னகைக்கும் தலையசைப்பிற்கும் கூட விசேஷ அர்த்தங்கள் தென்படுகின்றன. அவளிடம் நான் reactions இருந்ததாக நம்புவதுகூட, வயதுக்கோளாறால் இருக்கலாம். கண்ணால் கதைகள் பேசுவதெல்லாம் சரிதான். ஆனால், முன்கதைச் சுருக்கமாவது, வாயால் தெளிவாய் மொழிந்து விட்டால் நல்லது. பல குழப்பங்களைத் தவிர்க்கலாம்.
பெரிய குடும்பமாய் இருப்பதும் ஒருவிதத்தில் நல்லதுதான். விட்டுக் கொடுத்து, அனுசரித்துப் போகும் பழக்கம் இருக்கும்.. சமையல், தையல், வீட்டுவேலை தெரிந்த பி.ஏ. படிக்கும் பெண் போதாதா? சற்றுக் குட்டையென்றாலும் பாதகமில்லை. நாமொன்றும் அமிதாப் பச்சனில்லை. ஐந்து வயது வித்தியாசம். ஐடியல். சகோத்திரமில்லை. இதையெல்லாம் பார்த்தபிறகு ஏற்படுவது காதலா? அல்லது காதல் வந்ததால் இதையெல்லாம் பார்க்கிறேனா?
அந்த ஜூலை மாத மாலையில், மூர்த்தியுடன் பழைய நண்பர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்று நோஸ்டால்ஜிக்காய் பட்டியல் போட்டுக்கொண்டிருந்த போது, காப்பி கொண்டு வந்த அந்த முகத்தைப் பார்த்ததும், மின்னல் வெட்டிய மாதிரி, பிரமிப்பும், அவஸ்தையும், சங்கடமும், அதீத மகிழ்ச்சியும் கலந்து ஒரு உணர்ச்சி தாக்கியதே – அதுதான் காதலா? The proverbial love at first sight?
‘சரியாக எந்தச் சந்திப்பின் போது உங்களிடையே காதல் ஏற்பட்டதென்று சொல்லமுடியுமா?’ என்று ஆல் இண்டியா ரேடியோவில் கிராம சமுதாயத்தில் கேட்பது மாதிரி, அம்பிகாபதியையும் அமராவதியையும் கேட்டிருந்தால், அவர்கள் என்ன பதில் சொல்லியிருப்பார்கள்? ‘இது காவியக் காதல் – ஜென்ம ஜென்மமாய் வருவது’ என்று சொல்லியிருக்கலாம் ஒரு வேளை. ஜனனம் மாதிரி இதெல்லாம் உண்டான பிறகுதான் தெரிகிறதே ஒழிய, சரியாக எப்போது ஜனித்ததென்று எப்படிச் சொல்வது?
‘டியரஸ்ட் உமா, உன் அண்ணனும் எனது கல்லூரி நண்பனுமான மூர்த்தியைப் பார்க்க வரும் சாக்கில் நான் திருச்சியில் இருந்த பதினைந்து நாளும், ஒரு மாலை தவறாமல், 1 ஆம் நம்பர் பஸ்ஸைப் பிடித்து, திருவானைக்கோவிலில் உங்கள் வீட்டிற்கு வந்தது, உன்னைப் பார்க்கத்தான் என்று புரிந்துகொண்டிருப்பாய்….’
புரிந்துகொண்டிருப்பாளா? நானும் மூர்த்தியும் அவ்வளவு இணை பிரியாத் தோழர்களென்று நினைத்திருந்தால்? நான் இது மாதிரி ஏதாவது எழுதப் போக, அவள் மூர்த்தியிடம், ‘உன் நண்பன் செய்திருக்கும் வேலையைப் பார்’ என்று சொல்லி விட்டால், காரியம் குட்டிச்சுவராகி விடும். என்னதான் BHEL பற்றி நிறையப் பேசி போரடிக்கக்கூடியவன் என்றாலும், மூர்த்தி இன்னும் தொடர்பு விட்டுப் போகாமல் எஞ்சியிருக்கும் வெகு சில உண்மையான நண்பர்களில் ஒருவன். அவனை இழக்க முடியாது.
அவள் கல்லூரிக்காவது எழுதலாமென்றால், அந்தப் பிரபல கல்லூரியில், மாணவிகளுக்கு வரும் எல்லாக் கடிதங்களையும் பிரித்துப் படித்துப் பார்ப்பார்கள். ஆனாலும், மாணவிகளின் கற்பை இவ்வளவு கஷ்டப்பட்டுக் காப்பாற்ற வேண்டாம்.
நம் அப்பா, தாத்தாவின் மணிப்பிரவாளத் தமிழில், ‘உன்னைப் பார்யாளாக வரித்து விட்டேன். என்னைப் பதியாக ஏற்றுக்கொள்ளச் சம்மதமா? சம்மதமென்றால், உன் மாதா, பிதா, சஹோதர சஹோதரிகள் யாரிடமும் இது பற்றி மூச்சு விடாமல், சம்மதமென்று எனக்கு இரண்டு வரி லிகிதம் அனுப்பவும். அப்புறம், இதர லெளகீக விஷயங்கள் பற்றி, உன் கிருஹத்திற்கு வந்து நேரில் பேசிக் கொள்கிறேன்’ என்று சட்டென்று எழுதிப் போட்டுவிடலாம். ஆனால், அவளது பண்டைத் தமிழறிவு பற்றித் தெரியாது.
முதலில் அவளுக்குப் பெர்ஸனலாய் லெட்டர் எழுதுவது எப்படி? அவள் வீட்டில் பிரளயத்தை ஏற்படுத்தாமல் இது முடியாது. மேலும், அதற்குமுன், நம் அம்மா அப்பாவிடம் பேசிச் சம்மதம் வாங்க வேண்டாமா? அம்மா இன்னும் பழைய நினைப்பில் முப்பது பவுன் தங்கம், இரண்டு கிலோ வெள்ளியென்று ஆரம்பித்துவிட்டால்?
காதல் என்றால் திருட்டுத்தனமான சந்திப்பு, பெற்றோர்களின் எதிர்ப்பு இதெல்லாம் வேண்டாமா? பெற்றோர்களின் சம்மதத்தை முதலில் வாங்கிக்கொண்டு கல்யாணம் பற்றி எடுத்த எடுப்பிலேயே யோசிப்பது தலைகீழல்லவா?
இருந்தாலும், உமாவின் பெற்றோர்களுக்கு என்னை நிராகரிக்கக் காரணங்கள் இருக்க முடியாது அதிகமாய். இன்ஜினியர். கை நிறையச் சம்பளம் (வரி போகவும்). பீகார் மாதிரி மானிலத்தில், ஜாம்ஷெட்பூர் மாதிரி ஊரில் இருக்கும் மாப்பிள்ளையென்றாலும், இலவஸ க்வார்ட்டர்ஸ் தந்திருக்கிறார்கள். தங்கமான பையன். (அவ்வப்போது ஹெரால்ட் ராபின்ஸ், எரிகா யாங், சாண்டில்யன் எல்லாம் படிப்பதால் தங்கத்திற்குக் குறை ஏற்படுமா?) தங்கத்திலே சிறு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ என்று பெண் பார்க்கும்போது பாடிவிட்டால் போகிறது. பார்க்க சற்று முன்னப் பின்ன இருந்தால் என்ன? ஆம்பிளைக்கு அழகென்ன வேண்டியிருக்கிறது? மேல் ஷோவனிஸம் வாழ்க.
‘டியரஸ்ட் உமா, ‘உமா’ என்ற பெயரே எவ்வளவு இனிமையாக, தெய்வீகமாக ஒலிக்கிறது தெரியுமா?’ – ஐயோ, வேண்டாம். ‘தெய்வீகம்’ மிகவும் வலுவான வார்த்தை. தி. ஜானகிராமனின் கதாநாயகிகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். தெய்வீகப் பெண்களைக் கல்யாணம் செய்து கொள்வதும் சிரமம். பரமஹம்சர் மாதிரி ஆட்களுக்குத்தான் அது முடியும். மேலும், ‘உமா மகேஸ்வரி’ என்ற பெயரே அவளுக்குப் பிடிக்காத பெயராய் இருக்கலாம்.
பாலசுப்பிரமணியன் என்ற மைல் நீளப் பெயர் நமக்குப் பிடிக்காத மாதிரி. பாலு, சுப்பு, மணி என்று மூன்று கூறு போட்டு, ஒவ்வொருவனும் சமயத்துக்குத் தோன்றியபடிக் கூப்பிடுகிறான். பாதி சமயம் நம்மைத்தான் கூப்பிடுகிறானா என்பது கூடத் தெரிவதில்லை. ஒரு குறிப்பிட்ட நீளத்திற்கு மேல் பெயர் வைக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வரவேண்டும்.
உமா – பாலசுப்பிரமணியன்! பெயர்ப் பொருத்தம் சரியாக இல்லையோ? அம்மா – பிள்ளை உறவாகவல்லவா இருக்கிறது! ‘ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ்’ பற்றி உமாவுக்குத் தெரிந்திருக்குமா? தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், தாய் மாதிரிக் கவனித்துக் கொண்டால் சரி. பரமஹம்ஸர் கூட மனைவியைத் தாயாய்த்தான் கருதினார். ஆனால், அவருக்கு சக்தியிலிருந்து எல்லாப் பெண்களுமே தாய் வடிவாய்த் தோன்றினர். நமக்கெல்லாம் ஒத்து வருகிற சமாச்சாரமில்லை இது. ஆனால், சற்று யோசித்துப் பார்த்தால், பெயரில் பெரிதாய் என்ன இருக்கிறது? நாம் எல்லோருமே ஒரே சத்தியத்தின் வெறும் நாம, ரூப வேறுபாடுகளன்றி வேறென்ன? ஒரே சத்தியம். It’s a big deal. இப்போதைக்கு வேண்டாம் நமக்கு.
பேசாமல் உண்மையை அப்படியே எழுதிவிட்டாலென்ன?
‘டியரஸ்ட் உமா, உன்னை நினைத்து சில மாதங்களாய் நான் படும் அவஸ்தைக்குப் பெயர்தான் காதலாவென்று தெரியவில்லை. ‘காதல்’ என்ற வார்த்தையைக் கவிஞர்களும், கதாசிரியர்களும் கறைப்படுத்தி விட்டார்கள். இரவில் தூங்கச் செல்லுமுன்பு தினமும், உன் முகம் நினைவில் முகிழ்க்கிறது. இடுப்புக் குழந்தையாய் இறங்க மறுக்கிறது. பல முறை உன்னை மனைவியாய்க் கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். (ப்ரீ-மாரிடல் உறவுக்கு மன்னிக்கவும்) உன் நினைவுகள் ஏக்கம் மிகுந்த மகிழ்ச்சியை என்னுள் எப்போதும் ஏற்படுத்துகின்றன. இதெல்லாம் காதலின் இலட்சணங்கள் தானென்று நினைக்கிறேன். நிச்சயமாகத் தெரியவில்லை. சொல்லப் போனால், எது பற்றியும் எனக்கு நிச்சயமான அபிப்பிராயங்கள் கிடையாது. இது போல், என்னைப் பற்றி, நீ எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறாயா?’
முதல் கடிதத்திற்கு இது கொஞ்சம் ராடிகலாகப் படவில்லை? சற்று செயற்கையாகவும் இருக்கிறதோ? காதலே இயல்பில் செயற்கையானதுதானா? என்ன முரண்பாடு இது? இயல்பாகவே செயற்கையாக – what an oxymoron? – எதுவாவது இருக்க முடியுமா? ஹார்மோன்கள், கெமிக்கல்கள் கிளப்பிவிடும் செக்ஸ் சார்ந்த ஆண், பெண் ஈர்ப்புக்குத் தரப்படும் இடக்கரடக்கல் பெயர்தான் காதலா? காமத்திற்கும் காதலுக்கும் இடையே எவ்வளவு தூரம்? ஃப்ராய்ட் காதல் பற்றி என்ன சொல்லியிருக்கிறான்? கனவுகள் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறான் தெரியும். உமா ஃப்ராய்ட் படித்திருப்பாளா?
நம் பார்வையில்தான் கோளாறோ? காதல் செயற்கை இல்லையென்றால், எதார்த்தக் காதல் என்று ஏதாவது இருக்கிறதா? மூர்த்திக்கு இந்த ‘யதார்த்தம்’ என்ற வார்த்தையைக் கேட்கவே பிடிக்காது. ‘It sounds corny and phony’ என்பான். யதார்த்தக் கதைகள் அவனுக்கு அலர்ஜி. சுவையான, விறுவிறுப்பான சம்பவத்தையும் ஜீவனைப் பிழிந்தெடுத்து விட்டு, சக்கையாய், அறுவையாய்த் தருபவைதானே உன் யதார்த்தக் கதைகள் என்பான். யதார்த்தப் பத்திரிகைகள் காதலுக்கு அதிகமாய் ஆதரவு தராததிலிருந்து, காதல் யதார்த்தமானதில்லையென்ற முடிவுக்கு வரலாமா?
மூர்த்தியைப் பொறுத்தமட்டில் இலக்கியமும், தத்துவமும் மனிதனுக்குத் தேவையில்லாத சமாச்சாரங்கள். எத்தனை மனித மணி நேரங்கள் இது போன்ற வெட்டிச் சிந்தனைகளால் விரயமாகின்றன என்பான். அந்த நேரத்தில் இன்னும் சில லட்சம் திருகாணிகள் செய்யலாம் என்பது அவனது எண்ணமாயிருக்கலாம். அவனுக்குப் ப்ரொடக்ஷன் போனஸ் அதிகமாகக் கிடைக்கும். சில லட்சம் அதிகம் திருகாணிகளால் மனித இனத்தின் நிலை முன்னேறுமா? ஆனால், இலக்கியத்தாலும், தத்துவத்தாலும் மனிதனின் நிலையில் என்ன பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது?
உமா, மூர்த்தி மாதிரி ப்ராக்டிகலானவளா? நம்மை மாதிரி அவளும் மோட்டு வளை ரகமாயிருந்தால் ஆபத்துதான். ரசம் பொங்குவதிலும், கத்தரிக்காய் வதங்கிச் சுருங்குவதிலும் கவிதையைக் காணும் மனைவி நமக்கு வேண்டாம். குடும்பத்தில் ஒரு கிறுக்கு போதும். ஆனால் ரொம்ப ப்ராக்டிகல் என்றாலும் வம்புதான். ஒரு நல்ல கவிதையையோ கலைப் படைப்பையோ ஆசையுடன் பகிர்ந்து கொள்ள மனைவி வேண்டாமா?
காதலிக்காமல், சரியாய்த் தெரிந்து கொள்ளாமல், முன்பின் தெரியாத பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வது பெரிய ஆபத்துதான். சந்தேகமில்லை.
ஆனால் ரசனைப் பொருத்தமெல்லாம் யார் பார்க்கிறார்கள் இன்னாளில்? ரசனைப் பொருத்தத்தை விட, ரஜ்ஜூப் பொருத்தம் முக்கியமானதாக இருக்கிறது. நம் பெற்றோருக்கு உமாவையும், உமாவின் ஜாதகத்தையும், உமாவின் பெற்றோருக்கு என்னையும், என் ஜாதகத்தையும் பிடிக்க வேண்டும் முதலில். ஜாதகங்கள் பொருந்தவேண்டும்.
இப்படியே யோசித்தால், இதில் காதல் என்ன இருக்கிறது வெண்டைக்காய்? பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்றால், மேலே தொடர்ந்து போராடும், பெற்றோர்களைப் பகைத்துக் கொள்ளும் தைரியம் நமக்கு இருக்கிறதா? சந்தேகம்தான்.
அப்புறம், எனக்கெல்லாம் காதல் என்ன வேண்டியிருக்கிறது காதல்? அதற்கெல்லாம் ஒரு romantic outlook வேண்டும். குறைந்த பட்சம் தைரியம் வேண்டும். காதல் நம்மை மாதிரிக் கன்யா லக்கின பொட்டைப் பசங்களுக்காக ஏற்பட்டதில்லை. இவ்வளவு யோசனை, அலசலுக்குக் காதலில் இடமிருக்க முடியாது. எனக்குத் தேவை கல்யாணம். காதல் அல்ல. கல்யாணமான பின்பு, நல்ல பையனாய் மனைவியைக் காதலிக்க வேண்டியதுதான். கல்யாண நினைப்பில்லாமல் art for art’s sake மாதிரி love for love’s sake இருக்க முடியுமா? மறுபடியும், அம்பிகாபதி, அமராவதியைத் தான் விசாரிக்கணும் என்று நினைக்கிறேன்.
கல்யாணத்திற்குப் பின் காதல் – அதுதானே தங்கமான பையனுக்கு அழகு? தங்கமான பையன் யார்? சிகரெட், மது, சைட் அடித்தல், கல்யாணத்திற்கு முன் காதல் இது போன்ற “கெட்ட” பழக்கங்கள் ஏதும் இல்லாதவன். மீசை, தாடி, பாகவதர் க்ராப் இல்லாமல், ஒட்ட வெட்டப்பட்ட முடியுடன் அப்பாவித்தனம், வம்பு தும்புக்குப் போகாத்தனம் போன்ற நற்குணங்கள் கொண்டவன்? இப்பேர்ப்பட்ட தங்கமான பையனை இந்தக் காலப் பெண்கள் விரும்புகிறார்களா முதலில்? இது போன்ற அப்பாவிப் பையன் இன்றைய எலிப் பந்தய உலகில் பெரும்பாலும் பிழைக்கத் தெரியாதவனாகத்தான் இருப்பான் என்று சொன்னால், நம் பெற்றோர்கள் ஒப்புக் கொள்வார்களா? நம் பெற்றோர்களின் அகராதிப்படி ‘ரவுடி’ப் பட்டம் பெறக் கூடியவர்கள்தான் இன்று street-smart ஆக இருக்கிறார்கள்.
‘டியரஸ்ட் உமா, எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போலிருக்கிறது. காதலோ, கல்யாணமோ, எப்படியும் …’ ஓ! மை காட்! மணி ஒன்று இருபதா? இனிமேல் தூங்க முயற்சி செய்து, இரண்டு மணிக்குத் தூங்க ஆரம்பித்து, நாளைக் காலை ஆறு மணிக்கு எழுந்திருப்பதா? பிரும்மப் பிரயத்தனம்தான். பேசாமல் நாளை – ஐ மீன் இன்று – காஷுவல் லீவு போட்டு விட்டால் என்ன? ஆனால், அந்தக் கடுவன் பூனை சீஃப் என்ஜினியருக்கு நாளை என்ன பதில் சொல்வது? போலீஸ் ஸ்டேஷனில் கைதியை விசாரிப்பது மாதிரிக் கேள்வி கேட்டுக் கடுப்படிப்பான்.
தயாள் சர்மா என்று பெயர்வைத்த அவன் பெற்றோர்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருந்திருக்கவேண்டும். ஒவ்வொரு வாக்கியத்தின் தொடக்கத்திலும் ஒரு ‘ஸாலா’, ஒரு கெட்ட வார்த்தை. ‘ஸாலா, உங்களுக்கெல்லாம் பொறியியல் கல்லூரியில் என்னதான் சொல்லித் தந்திருக்கிறார்களோ’ என்று அலுத்துக் கொள்வான். இவன் ஜாம்ஷெட்பூரில் ஒரு டப்பாக் கல்லூரியில் காசு கொடுத்து டிகிரி வாங்கியது எங்களுக்கெல்லாம் தெரியாதென்று அவன் நினைப்பு.
‘டியரஸ்ட் உமா, சற்றுப் பொறுத்துக்கொள். திடீரென்று கல்யாணம் செய்து விடுமளவிற்கு உன் அப்பாவிடம் காசு இல்லையென்று அறிவேன். தங்கமும் தக்காளியும் விற்கிற் விலையில்! இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் சரி, தேசிங்கு ராஜன் மாதிரி, ஒரு நாள், வெள்ளைப் புரவியில் வந்து, உன்னை அப்படியே தூக்கிக் கொண்டு போய்விடுவேன், கவலைப்படாதே…’
வெயிட்… சுயம்வர மண்டபத்துக்கு வெள்ளைப் புரவியில் வந்தது தேசிங்கு ராஜனா? கல்கி அவதாரமா? வந்தியத்தேவனா? இல்லை இது யாருமே இல்லையா? இதென்ன? ஏதோ சரியில்லை. வந்தியத்தேவன் எங்கிருந்து வந்தான் இங்கே? தூக்கம் வந்து விட்டதோ?
கல்கி வெள்ளைக் குதிரையில் வரப் போவதாக யார் சொன்னது? விஷ்ணு புராணத்தில் சொல்லியிருக்கிறதா? Why not a black stallion, may I ask? சரி, கல்கி அவதாரம் எடுக்க ஏன் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறார்? ‘கலி’ இன்னமும் சரியாய் முற்றவிலையா? அல்லது வெள்ளைக் குதிரை கிடைக்கவில்லையா?
வெள்ளைக் குதிரையெல்லாம் என்ன விலை இப்போது? திருச்சி காந்தி மார்க்கெட்டில் கிடைக்குமா? நல்ல விலையில் கிடைத்தால் ஒரு டஜன் வாங்க வேண்டும். அப்புறம் ஒரு குதிரைப் பண்ணை.
‘டியரஸ்ட் நித்திராதேவி, அஹம் த்வாம் ப்ரேமம் கரோமி… அதற்கு மேல் சமஸ்கிருதம் தெரியாது. ‘டியரஸ்ட்டிற்கு சமஸ்கிருதத்தில் என்ன? தமிழுக்கு சமஸ்கிருதத்தில் என்ன?
சே! நாளையாவது எப்படியும் நித்திரா தேவிக்கு, ஐ மீன், உமாவுக்கு லெட்டர் எழுதி முடிக்கணும். ….. முடித்து …. விடலாம் …. அலார்ம் வைக்கணும்…. ஸாலா தயாள் ஷர்மா … மாரோ ஸாலே கோ …..
*************
பின்குறிப்பு: பல வருடங்களுக்குப் பின், வேண்டாத பழைய பேப்பர்க் குப்பைகளையெல்லாம் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்த போது, எனது மார்க்-ஷீட்ஸுக்கு நடுவில் தற்செயலாய் எனது இ.மு. காலத்து இந்தக் கதை கிடைத்தது. பொறுமையாய் அழகான கையெழுத்தில் எழுதியது. ஏதோ பத்திரிகைக்கு அனுப்பி, அவர்கள் பிரசுரிக்க முடியாததற்கு வருந்தித் திருப்பி அனுப்பியது மெதுவாக நினைவுக்கு வந்தது. ஒரு பழைய நண்பனை மீண்டும் சந்தித்த மகிழ்ச்சியுடன், கதையை மீண்டும் படிக்க ஆரம்பித்து, பழைய நினைவுகளில் ஆழ்ந்து போனேன். திடீரென்று எனக்கு வெகு அருகில் என் மனைவி உமாவின் குரல் கேட்டது.
“பாலா, எத்தர ப்ராவஸ்யம் உங்கள கூப்பிடறது? பாலா, சுப்பு, மணி’ ன்னு உங்க மூணு பேரையும் சொல்லிக் கூப்பிட்டாச்சு. பதிலே காணோம். உறங்கிட்டேளோன்னு ஸம்ஸயம் வந்துதான் இங்க உங்க ஓஃபீஸ் முறிக்கு வந்தேன். காப்பி போட ஆத்தில பால் இல்லயாக்கும். வேகம் போய் வாங்கிண்டு வாங்கோ. ரிட்டயர்தான் ஆயாச்சே”
