உருவ அமைதி வாய்க்கப்பெற்ற பல குறுந்தொகைக் கவிதைகளில் ஒன்று உறையூர் முதுகொற்றனுடையது.
அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை இடைமகன் சென்னிச்
சூடிய வெல்லாம் சிறுபசு முகையே.
எளிமையான, அதே சமயம் நுட்பமான இந்தக் கவிதையில், வாச்சியப் பொருளே வியங்கியப் பொருளை உணர்த்தி விடுகிறது. முதலடியில் பூத்த முல்லை மலர், கார் காலம் வந்தும் தலைவன் வராததை உணர்த்துகிறது. இறுதி அடியில் இடை மகன் தலையிலுள்ள முல்லை முகைகள் தலைவியின் துயரத்தை அதிகரிக்கச் செய்யக் கூடியவை. பால் கொடுத்துப் பண்டமாற்றாய்க் கூழ் பெற்றுச் செல்லும் இடைமகன் துன்பத்தையும் அளித்துச் செல்கிறான்.
கிடைபொருளுக்கு அப்பால் பெறுபொருளாக நிறைய விஷயங்களைக் கொண்டுள்ளது இந்தக் கவிதை. அகவல் பாவின் பேச்சுநடையும் அலங்காரமற்ற தன்மையும் இதைச் சாதிக்க உதவுகிறது.
அகவல்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா – என்ற நான்குவகைப் பாக்களுக்கு அப்பால் பா இனமாக விரிந்தவற்றில் விருத்தம் மிகுந்த செல்வாக்குடன் தமிழ்க் கவிதையில் ஆட்சி செலுத்தியது. காவிய காலம் பக்திப்பாடல் காலம் தொடங்கி பாரதிதாசன் காலம் வரை விருத்தத்தின் ஆட்சி என்றே சொல்லலாம். விருத்தம் என்ற சொல்லுக்கு செய்தி என்றும் பொருள் உண்டு. ஒரு செய்தியை விரித்துப் பாட விருத்தம் என்ற பா இனம் மிகவும் உதவியான கருவியாக இருந்திருக்கிறது.
கரனையும் மறந்தான்; தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான்
உரனையும் மறந்தான்; உற்ற பழியையும் மறந்தான்; வெற்றி
அரனையும் கொண்ட காமன் அம்பினால், முன்னைப் பெற்ற
வரனையும் மறந்தான்; கேட்ட மங்கையை மறந்திலாதான்
என்ற கம்பர் (‘விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பர்’) கவிதையில், இராவணனால் சீதையை மறக்க முடியவில்லை என்பதை உணர்த்த எதிர்மறைத் தொடர்களை வரிசையாக அடுக்கிவைக்க வேண்டியிருக்கிறது. கவிச் சாதுரியத்தில் கவிதையின் அடர்த்தி தணிந்து போய் விடுகிறது.
உணர்ச்சியை நீட்டிச் சொல்ல உதவும் விருத்தம், அதை நுட்பமாக விரித்துக் கொடுக்கவும் உதவுகிறது என்பதை ஒரு திருவாய்மொழிப் பாசுரம் உணர்த்தி விடுகிறது. ‘காலைப் பூசல்’ என்று பெயர் பெறும் அந்தப் பாசுரம்:
தகவில்லை தகவிலையே நீ கண்ணா !
தடமுலை புணர் தொறும் புணர்ச்சிக்காரா
சுக வெள்ளம் விசும்பிறந் தறிவை மூழ்க்கச்
சூழ்ந்து அது கனவென நீங்கி யாங்கே
அக வுயிர் அகம் தோறும் உள் புக்கு
ஆவியின் பரம் அல்ல வேட்கை யந்தோ !
மிக மிக வினி யுன்னைப் பிரிவையாமால்
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே
வேட்கையானது உயிரின் மர்மமான இடங்களில் புகுந்து ஆன்மாவுக்குப் பொறுக்க முடியாத இன்ப அவஸ்தை ஆகும் நிலையும், அது நிலைத்து நிற்காமல் மறையும் துயரும் மிக நுட்பமாகப் பதிவாகியிருக்கிறது பாசுரத்தில். இரவு முழுதும் கிளைத்த இன்பத்தை விட, விடிந்ததும் பெற்றம் மேய்க்கச் செல்ல இருக்கும் பெருமானின் பிரிவு பற்றிய அச்சம் மேலிடுகிறது. அருளனுபவத்தின் அடுக்குகளை முன் வைக்க விருத்தப்பா இங்கு உதவுவதை உணரலாம். இதுபோல் சுப்ரதீபக் கவிராயரின் தனிப்பாடல் ஒன்று விருத்தப்பாவின் வெற்றியாக அமைந்து விடுகிறது. சின்னரங்கள் என்ற வள்ளல் இறந்தபோது கவிராயர் பாடிய சரம கவிதை:
“தென்னரங்கன் அரங்கன் என்பான் வாய்திறவான்
கண்விழியான், திரும்பிப் பாரான்
என் அரங்கன்? தூங்கு அரங்கன்; ஏழையர்பால்
கருணையுடன் இரங்கா ரங்கன்;
மன்னன் அரங்கன் தமிழ்ப்பெருமான்; பழவரங்கன்
அருளித்தரும் மைந்தனான
சின்னரங்கா எனக்கு இரங்காய், கொண்டு வந்த
தமிழுக்கு இரங்கிக் குழைந்து எழாயே”
தென் அரங்கனை எதிரே நிறுத்தி, வள்ளல் சின்ன ரங்கனைத் தமிழ் பாட்டுக்காகவேனும் உயிர்த்தெழ வேண்டும் கவிதை. எள்ளல் தொனி இருந்தாலும் அரங்கன் மீதுள்ள ஆராக் காதலும் (அது தான் வசவாக வெளிப்படுகிறது), சின்னரங்கன் மீதுள்ள அன்பும் கவிதையாய் உருக்கொள்ள விருத்தப்பா உதவுகிறது. நவீன கவிதையில் சரமகவிதையைக் கட்டியெழுப்ப ஈழத்துக் கவிஞர் பா. அகிலனால் முடிந்திருக்கிறது.
(தொடரும்)
