Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

தமிழ்க் கவிதை சில குறிப்புகள்

ஒலிக்கும் அர்த்தத்துக்கும் இடையிலுள்ள தயங்கிய வெளியாகக் கவிதையை அடையாளம் காட்டுகிறார் பால் வெலேரி. நினைவுக்கும் செயலுக்கும் இடையே நேரக்கூடிய தயக்கமும் கவிதையாகி விடக்கூடும் என்று தோன்றுகிறது. சுயம்வர மண்டபத்தில் அங்க தேச அரசன் முன் ஒரு கணம் தயங்கி நிற்கும் இந்துமதி, பின் தோழி சுநந்தையை நோக்கி “மேலே செல்” என்று சொல்லும் போது, கண நேரத் தயக்கம் அர்த்தம் உள்ளதாகிறது. அஜனுக்குத்தான் அவளுடைய மாலை என்ற போதிலும் அங்க தேச அரசனும் ஒதுக்கத் தகுந்தவன் அல்லன். அவளும் பரிசீலனை செய்ய அறியாதவளும் அல்லள். இதைச் சொல்லிவிட்டுக் காளிதாசர் : “உலகம் வெவ்வேறு வகையான ருசியை உடையது” என்ற தனது புகழ் பெற்ற வரியை வைக்கிறார். இந்துமதி அங்க தேச அரசன் முன் நன் கண்ணை நிறுத்திப் பின் எடுக்கும் அந்தக் கண நேரம் கவிதையம்சம் பொருந்தியது. 

தயக்கங்கள் நிறைந்த மன இயக்கத்தை ஒரு முத்தொள்ளாயிரக் கவிதை இயல்பாகக் காட்டிவிடுகிறது.

ஆய் மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்றேன் கதவடைத்தேன் நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வரும் செல்லும் பேரும் என் நெஞ்சு

பெருஞ் செல்வர் இல்லத்தின் முன் வறியவனின் நடைத் தயக்கம் போல, அரசனுடைய அழகைக் காண விரைவதும், பின் கதவடைப்பதும் ஆன பெண்ணின் அகத்தயக்கம் கவிதையாகி விடுகிறது. தயக்கங்கள் தின்றுவிடும் உறவு பற்றி எழுதும் போது எனக்கு அந்தத் தயக்கத்தை வெளிப்படுத்த, சொற்களின் இடையே இருக்கும் வெளி உதவுவதாக நகுலன் குறிப்பிட்டார். எமிலியின் கவிதைகளில் விரவிக் கிடக்கும் கிடைகோடுகள், குரல் நிறுத்தத்தை, சிந்தனை மாற்றத்தை உணர்த்துவதோடு, மனத் தயக்கத்தையும் தெரிவிப்பனவாக இருக்கலாம் என்று சொல்லும் விமரிசகர்களும் இருக்கிறார்கள். 

வீரை வெளியனாரின் புறநானூற்றுக் கவிதையில் வேட்டுவப் பெண் ஒருத்தியின் நடைத் தயக்கம் நுட்பமாகப் பதிவாகியிருக்கிறது. முன்னைக் கொடியும், முசுண்டைக் கொடியும் பிணைந்த பந்தலின் கீழ், யானை வேட்டுவன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறான், அருகே பெண்மானைத் தழுவி விளையாடி அயர்ந்திருக்கிறது ஆண்மான். அவற்றின் புணர்ச்சி நிலையைக் கண்ட வேட்டுவன் மனைவி, தன் கணவன் உறக்கம் நீங்கி எழக் கூடும் என்று அஞ்சியும், கலைமான் பிணைமானை விட்டு அகன்று விடும் என்று அஞ்சியும் மனையிடத்தே நடமாடாமல் ஒதுங்கி நிற்கிறாள். இவ்வாறு செல்கிறது வித்தியாசமான அந்தப் புற நானூற்றுப் பாடல் அந்த வேட்டுவப் பெண்ணின் செயல் தயக்கத்தில் கவிதை இருக்கிறது. 

முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
பந்தர் வேண்டாப் பலாத்தூங்கு நீழல்
கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர்
தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட

இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக், கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி யாவதும்
இல்வழங்காமையின்…
(புறநானூறு 320)

பக்திக் கவிதைகளில் ஒலிக்கும் தயக்கம் வேறு வகையானது.

தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கு என்று
தாம் செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
யாம் செய்வது இவ்விடத்து இங்கு யாது?

என்று பெரிய திருவந்தாதியின் ஈற்றடியில் உள்ள தயக்கம் நம்மாழ்வார் காலத்துக்கு மட்டுமில்லை, இருபத்தோராம் நூற்றாண்டில் வாழ்வோருக்கும் உரியதே. இந்தத் தயக்கம் இயல்பான கவிதையாகி இருப்பதுதான் வியப்பளிக்கிறது.

-தொடரும்.

தமிழ்க் கவிதை சில குறிப்புகள் - ந.ஜயபாஸ்கரன்

பழையவரால் என்ன பயன்?
Exit mobile version