Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

தேவதச்சனின் கவியுலகம்

சமீபத்தில் தென்றல் இதழில் ஒரு பேட்டி வந்திருந்தது.  அக்னிபாவி மலை முகட்டில் இருக்கும் சிறு பள்ளம் தான் சுற்றிலும் உள்ள மக்களுக்கான நீராதாரம். எல்லோரும் அங்கே நடந்து வந்து தண்ணீர் எடுத்துப் போவார்கள். காடு வறண்டு போகும் காலத்திலும் அந்த பள்ளம் தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொண்டே இருக்கும். நீர் சுண்டிப் போகும் கோடை காலங்களில் யானைகளும் பிற மிருகங்களும் கூட அந்த பள்ளத்தில் நீரருந்த வருவதாக அங்குள்ள மக்கள் சொல்லி இருந்தார்கள். அதை புனரமைத்து கொடுத்தது – மது மஞ்சரியும அவர்கள் குழுவும்.  இது போல் அவர்கள் மேலும் பல கிணறுகளை  புனரமைப்பு செய்து இருக்கிறார்கள். 

பார்க்க போனால், கவிதையும் இந்த சுனை போல் தான் – மொழிக்கு ஓயாமல் கொடுத்துக் கொண்டே இருக்க கூடியது. கவிஞர்கள் மது மஞ்சரிகளைப்  போன்றவர்கள் – அதை இன்னும் புனரமைத்து பரவலாக்கி பலரிடம் கொண்டு செல்பவர்கள். அப்படிப்பட்ட பெரு கவிஞர்கள் நிரையில் இருப்பவர் தேவதச்சன் 

நம்  எல்லோருக்கும் தெரிந்த Google Earth view, பூமியை ஒரு முப்பரிணாமமாக  காட்டக்கூடிய ஒன்று. முதலில் அது நட்சத்திரங்கள் சூழ இருக்கும் பூமியை காண்பிக்கும். அதை நாம் பெரிதாக்கி கொண்டே செல்ல, விண்ணில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக இடங்கள்  துலங்கி வரும், முதலில்  நாடு, பின்  மாநிலம், நகரம், தெரு என்று இறுதியாக நம் வீட்டின் வாசல் வரை காட்டும், யோசித்து பார்த்தால்  ஒவ்வொரு வீடும் ஒரு உலகம். சொல்ல போனால்  அங்கே வசிக்கும் ஒவ்வொருவரும் ஒரு உலகமே. இந்த பெரும் உலகம் என்பது அப்படி எண்ணற்ற பல உலகங்கள் தான். இப்பொழுது அதை அப்படியே தலைகீழாக  செய்து பார்த்தால்  ஒரு தனி மனிதன் உலகத்தில் இருந்து தொடங்கி மேலே மேலே சென்று  எங்கிருந்து தொடங்கினோமோ அங்கே போய் முடிவோம். தேவதச்சனின்  கவிதைகள் இது போல் தனி மனித உலகத்தில் இருந்து சென்று ஒரு முழுமையான ஒன்றை நோக்கி செல்பவை என்று நான் நினைக்கிறேன். 

எப்படி ஒரு சிறு உலகத்தில் இருந்து பிரபஞ்சம் முழுமைக்கான தரிசனம் நோக்கி செல்லும் ஒரு நீண்ட பயணம் சாத்தியம்? வெண்முரசில் பீமன், உணவின் மணத்தை வைத்து, சமைக்கப்பட்ட ஆட்டின், முழு சித்திரத்தை – அதுவும் அது என்ன மாதிரியான புற்களை உண்டிருக்கும் என்கிற வரையில் சொல்வது போல் ஒரு இடம் வரும் .  அதே போல்  தேவதச்சனும் தன்னை சுற்றி நிகழும் தருணங்களில் இருந்து, பொருட்களில் இருந்து ஒரு பெரும் தூரத்தை கவிதையின் வழியாக செய்கிறார். 

எழுபதுகளில் எழுத ஆரம்பித்தவர், 1982 ல் “அவரவர் கைமணல்” என்கிற முதல்  தொகுப்பு வருகிறது, பின் அவருடைய அடுத்த தொகுப்பு வெளியீடுவதற்கு சுமார் 18 வருடங்கள் எடுத்துக்கொள்கிறார் 

தேவதச்சனின் கவிதைகளில் பொதுவாக 

  1. துயர் என்பது கிடையாது 
  2. மேலதிக அர்த்தங்களை ஏற்றி சொல்வதை பெரும்பாலும் தவிர்த்து விடுவது 
  3. சரி, ஓகே – என்ன இப்ப ? என்ற தொனியை உடையது 

அவருடைய ஆரம்பக் கால கவிதைகள் சற்றே எடைக்கூடிய, ஒரு சில கவிதைகள்  அவர் சொன்னது போல் சற்றே முக்கியம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கிறது. உதாரணத்திற்கு.  

நகத்தை நகத்தை கடிக்கும் பெண்ணே
என் அகத்தையும் சேர்த்து கடிக்கிறாயே

ஆனாலும் அந்த தொகுப்பிலே பின்னாளில் எதை நோக்கி அவர் நகர இருக்கிறார் என்பதை உணர்த்தும் கவிதைகளும் இருக்கவே செய்கிறது. 

அவரவர் கைமணலைத் துழாவிக்கொண்டிருந்தோம்
எவரெவர் கைமணலோ இவை என்றேன்
ஆம் எவர் எவர் கைமணலோ இவை என்றான்
பிறகு
மணலறக் கைகழுவி விட்டு
எங்கோ சென்றோம்

18 வருட இடைவெளிக்கு பின் வந்த தொகுப்பில் உள்ள கவிதைகள் கண் முன்னே தெரிகின்ற காட்சிகளை சொல்லி செல்லுகிறது – அதிகமான எடைகளை கவனமாக கழற்றி வைத்து, அனுபவத்தை நமக்கு நிகழ்த்தி காட்டுவதை மட்டுமே செய்கிறது. ஜெயமோகன் சொல்வது போல் – ததாகார விருத்தியில் இருந்து அந்தகரண விருத்திக்கு கொண்டு செல்கிறது    

மதியம் 

பொதுவாக அதிகாலை, அந்தி, இரவு இவை தான் பல கவிதையில் கையாள பட்டிருக்கும். ஆனால்  அவரின் கவிதையில் மதியம் என்பது மீண்டும் மீண்டும் வரும் ஒன்று.  

7 வயது மத்தியானப் பையனாக, வெங்கரிசலாக,  தன் கழுத்தை விட உயரமாக இருக்கும் சைக்கிள் பிடித்திருக்கும் பெண், இன்னொரு பகலில் இருக்கும் பெண்ணை பார்ப்பது என்று மதியம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.  பெரும்பாலும் மேகம் இல்லாமல் வெட்ட வெளியில் நின்று எரியும் சூரியனைக் கொண்ட இடத்தில் இருந்து வந்தவர்களின் படைப்புகளில் அவை தொடர்ந்து வருவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஒரு விதத்தில் மதியம் என்பது கவிதையில் தேவதச்சன் தனக்கென்று போட்டுகிட்ட ராஜபாட்டை என்றே தோன்றுகிறது 

டவுள் விடுகிற மூச்சைப் போல் காற்று வீசும்
கரிசல்வெளி
வெயிலின் சமுத்திரத்தில் யாவும் முங்கிய நிஸ்பதம்
கருஞ்சாம்பல் மண் பரப்புக்குள் மெல்ல முனகும்
சிருஷ்டி சாகரம்
தொலைதூரத்து எந்திரம் ஒன்றின் குதுகுதுகுது மந்திரம்
பருத்தி பறித்து மடித்துணியில்
துருத்திக்கொண்டிருக்கும் பார்வதி
அவளோடு சேர்ந்து குனிந்திருக்கும் அத்துவான வெளி
யாரும் அழைக்காது திரும்பிக் கொண்டிருக்கும் காலம்

 

மழை 

வெம்மை இருந்தாலும் கவிகள் மழையை விடுவதே இல்லை. மேலிருந்து வீழும் மழைக்கு போட்டியாக கவிஞர்களும் கவிதைகளை மேலே அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். ஊரில்  நம்முடைய  வீட்டில் இருக்கிற கதவு, கைப்பிடி கிரிலில் நாம் பாத்திருக்கலாம் – மழை பெய்யும் போதோ, இல்லை அது நின்ற  கொஞ்ச நேரத்திற்கு பிறகோ, நிறைய  துளிகள்  ஒரு நத்தையின் முதுகு போல உண்டாகிருப்பதை, அதை தொட்டால் உடைந்துவிடும். ஒரு வேளை  மெல்லிய காற்று ஒன்று அதை தொடும் போது, உடையாமல் அப்படியே அது சிலிர்ப்பதை பார்க்க முடியும், அப்படிப்பட்ட  ஒன்றை  

ததும்பல் 

யாரிடம் என்ன பேசவேண்டியிருக்கு
நீர்த்துளிக்கு
மழை ஓய்ந்த மாலை நேரத்தில்
தேநீர்க் கடைக்கு
மேலே ஓடும்
எலெக்ட்ரிக் கம்பியின் நீளங்களில்
ஆரோகணித்து இருக்கிறது அது
ஊருக்கு வெளியே தொலைவான
தொலைவில்
தெரியும் கண்மாயில்
இங்கிருந்தே ததும்பிக்
கொண்டிருக்கிறது
இங்கிருந்தே இங்கிருந்தே இங்கிருந்தே

இந்த கவிதையை வாசிக்க,  ஆனந்த் குமார் ஒரு கவிதையில்,  

நகர் நடுவே ஏரி
சிறை
தொட்டில்லுக்குள் எழுந்த குழந்தையாய்
அழவில்லை சமர்த்து

சாலை தாழும்
ஒரு பழைய
ஓடையருகே
விரல்விட்டு வெளியே
மணலை அளைந்து கொண்டிருந்தது
ஏரி  

தேவதச்சன் இருந்த இடத்தில இருந்து கண்மாயில் ததும்பும் நீரை பார்க்க, ஆனந்த் குமார் எறும்பு போல் ஏரியை பின் தொடர்ந்து செல்கிறார் 

நீரின் இன்னொரு குணம், அது ஒன்றை இன்னொரு இடத்திற்கு மாற்றிக்கொண்டே இருக்கும். ஓடிக்கொண்டே இருக்கும் ஆற்றில், நாம் பார்க்கும் நீர் ஒன்று, கையில் எடுக்கும் நீர் ஒன்று என சொல்வார்கள். அதைப்  போல் நீர் ஒன்றின் மேல் தொடர்ந்து பட, ஒன்று அது நகர்ந்து போகும், கரைந்து போகும், உருவழிந்து போகும், 

பாலபாடம்

இன்னுமா குளிக்கிறாய் என்று
கத்துகிறாய்
குளியலறைக் கண்ணீர்கள் \
குளியலறைப் பாடல்கள்
குளியலறை முணுமுணுப்புகள்
குளியலறைக் காமங்கள்
வனப்பூச்சிகள் போல் என்னைச் சூழப் பறக்கின்றன.
ஒருதுளி தண்ணீர். ஒரு
சின்னஞ்சிறு அறையாகிறது
குளியலறையில் குப்புறக்கிடக்கும்
கண்ணாடிபோல சதா
தெரிந்து கொண்டிருக்கிறேன் நான்
என் கோபங்களை நீரின் ஓசையில் ஒளித்து வைக்கிறேன்
என் பாடல்களை நீருக்கு ஓசையாக்குகிறேன்
நீரோசைகளைக் கேட்டபடி, நீ
வெளியே காத்திருக்கிறாய்
உன்னைப் பார்த்து முறுவலிக்கிறேன்,
என் இடத்திற்கு நீயும்
உன் இடத்திற்கு நானும்
மாறுகிறோம்
ஒரு இடத்தை, இன்னொரு இடத்திற்கு
எடுத்துச் செல்லும் பாலபாடத்தை
தண்ணீர் எனக்குக்
கொஞ்சம் கொஞ்சமாக
கற்றுத் தந்து
விட்டது

ஒருவர் இன்னொரு இடத்திற்கு மாறுகிறார், முன்பிருந்தவரின் அதே செயல்களை இவரும் செய்யலாம். நீர் நம் உணர்வுகளை உண்ணும், கரைக்கும், பலவாக அதிகரிக்கும், உடன் சேர்ந்து தானும் ஓசை எழுப்பி எதுவும் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்ளும். 

காதல், நினைவு 

ஞானக்கூத்தனின் ஒரு கவிதை போராட்டம் என்ற தலைப்பில் 

கைவசமிருந்த காதற்
கடிதங்கள் எரித்தேன் வாசல்க்
கதவுமுன் குவித்துப் போட்டு
காகிதம் எரிந்து கூந்தல்
சுருளெனக் காற்றில் ஏறி
அறைக்குள்ளே மீளப் பார்க்க
கதவினை தாழ்ப்பாளிட்டேன்

வெளிப்புற தாழ்ப்பாள் முன்னே
கரிச்சுருள் கூட்டம் போட்டு
குதித்தது அறைக்குள் போக
காகிதம் கரியானாலும்
வெறுமனே விடுமா காதல்  

ஆனால் தன்னுடைய எந்த கவிதையிலும் துயரத்திற்கு இடமளிக்காத தேவதச்சன், அதை பார்க்கின்ற பார்வை –  

அன்பின் எழுத்துகள்

எங்கு வைப்பேன் உன் அன்பின் எழுத்துக்களை
யாருக்கும் தெரியாத ரகசிய இடம் ஒன்று
வேண்டும் எனக்கு. சின்ன
குருவிக்குஞ்சை வைப்பது போல அங்கு
உன் கடிதத்தைச் சேர்க்க விரும்புகிறேன்
எங்கு இருக்கிறது அது
எங்கும் இல்லை
என் நினைவுகளில் அது வளரட்டும் என்று
கடந்து செல்லும் அந்திக் காற்றில்
விட்டுவிடச் செல்கிறேன்
என் உடலிலிருந்து நீண்டு செல்கிறது
உன் நிழல்
வெளியே வெளியே தெரிந்தாலும்
நிழல்கள்
ஒளிந்திருப்பதற்கு
உடலைத் தவிர வேறு இடம்
ஏது

வெளியே (அல்லது ) விலகி விலகி நீங்கள் போனாலும், உங்களை தொடர்ந்தே வரும் ஏனென்றால் அது உங்களுக்கு உள்ளே தான் இருக்கிறது. இதை சொல்லும் பொது அவருடைய இன்னொரு கவிதையில் நினைவு என்றால் என்ன என்று  ஒரு கேள்வி கேட்டு  ஒரு நினைவின் தவறான முகவரி  (மற்றுமொன்றில் நினைவு ஒரு நீர் அருந்தும் மீன் வாய்) என்கிறார்

அரசியல் 

தேவதச்சன் எழுத வந்த காலங்களில் உலக அரசியல் என்பது உணர்ச்சி கொப்பளித்து கொண்டிருந்த ஒன்று. புரட்சி, வேலை இல்லா திண்டாட்டம், அவசர நிலை. கவிதையில் அரசியல் பேசு பொருளாக இருப்பது புதிதும் அல்ல, ஒப்புநோக்க எளிமையான ஒன்று. பல முகநூல் அட்டைக்கத்திகள் வாள் வீசுவதை பார்த்து கொண்டு இருப்பதை அறிவோம். கவிதை என்ற உச்ச நிலையில் இருக்கும்  கருவியை திறமையானவன் கையாள, ஆழமாக தைக்கும் . இதற்கு  இளங்கோ கிருஷ்ணன் தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி  கவிதை ஒரு நல்ல உதாரணம். அரசியல் எழுத வேண்டும் என்று எந்த ஒரு கட்டாயமும் கிடையாது. இங்கே அவருடைய கவி உலகத்தை ஒட்டுமொத்தமாக பார்த்து வருவதால், இதை குறிப்பிடுகிறேன். 

மிக சில கவிதைகள் தான் எழுதியிருக்கிறார். 

ரெண்டு சூரியன் – 

இந்தியாவில் இரண்டு சூரியன்கள் உதிக்கின்றன
பினாமிகளுக்கு ஒன்றும்
சாதாரணர்களுக்கு ஒன்றும்
சாதாரண நம் சூரியனை இழுத்து செல்வது
ஏழு குதிரைகள் அல்ல
ஏழு நாய்கள்

அதே போல் “மணல்  துகள்” என்ற கவிதையில் 

கடற்கரையில்
ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருக்கிறன்றன
மின்விளக்குகள் படர்ந்து எரிகின்றன
இன்னும் சில நேரத்தில்
ஜனத்திரள் கூடிவிடும்
மேடைக்கு வந்துவிடுவார்கள்
மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும்
சாதி ஆர்வலர்களும்
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை
ஏகமாய்
பரந்திருக்கும்
பழுப்புநிற மணல் வெளி
பின்மாலை நேரம் என்பதால்
காற்று பலமாய்
வீசத் தொடங்குகிறது
எழுந்து பறக்கத் தொடங்குகிறது
மாபெரும் மணல்வெளி அல்ல
மணல் துகள்கள்
சின்னஞ்சிறு மணல் துகள்கள்
தன்னந்தனியாய்
தனித் தனியாய்

     

தத்துவம் 

அடிப்படை கேள்விகள் இல்லாமல் கவிதைகள் இல்லை, மீமெய்யியல், மீபொருண்மை, தத்துவம் என்ற  தளத்தை தொடாமல் போவதில்லை. தத்துவ பட்டம் பெற்ற தேவதச்சன்   

வீடு

நள்ளிரவில் விழித்து எழும் போது
அடுப்படி
சுவர்க்கோழி கீச் கீச் என்று கத்துகிறது
இது யாருடைய வீடு?
கையில் இருந்து தவறி விழுந்த
டம்ளர்
க்ளிங் ளிங் மொழியில் சொல்கிறது
இது உன்னுடைய வீடு இல்லை என்று
தெருமுனையில் நிற்கும்
விசிறி எந்திரங்கள் இரைகின்றன
இங்கு உன்னுடைய வீடு இல்லை என்று
எப்போது வேண்டுமானாலும் விடைபெற்று செல்லும் யத்தனத்தில்
மொட்டைமாடியில் சுற்றிக்கொண்டிருக்கிறது
சாம்பல் நிற புறா ஒன்று
தீடீர் என்று அதுவும் கேட்கிறது
இது யாருடைய வீடு
உன் கூட யார் யார் இருக்கிறார்கள் என்று

உலகம் என்ற வீடா, உடல் என்ற வீடா – இங்கு எது கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது.  இந்த ஆதார கேள்வியை தொடர்ந்து கவிகள் விசாரித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். வேணு தயாநிதி எழுதிய வேதாளத்தோடு செல்லும் விதிகள் என்ற கவிதை தொகுப்பில் 

விழிப்பு 

யாமத்தில் மர்மமான கணம் ஒன்றில்
காரணம் இன்றி கண்விழித்தேன்
இந்த அறைக்கு எப்படி வந்தேன்
இந்த படுக்கையில் ஏன் கிடக்கிறேன்
நான் யார்?

கண் மூடி துயிலில்
ஆழ்ந்த பின்
நான் இல்லை
கேள்விகளும் இல்லை

நிறைவாக, ஒரு மலையின் உச்சிக்கு சென்ற பின் அடுத்து செய்ய கூடிய ஒன்று- கீழே வருவது தான் – ஆனால் மேலே சென்றவனில்லை கீழே வருபவன். போகும் போது இருந்த எதிர்பார்ப்புகள், பதற்றங்கள், கேள்விகள் என்று எதுவும் இல்லை.

தேவதச்சன் , சீட்டி அடிக்கிற பையன் சுதந்திரத்தை அனைத்திற்கும் மேலான  ஒன்றாய் வைக்கிறார்.  

ஹேய் ஜாலி, எந்த
கேள்விக்கும் விடை இல்லை
எந்த குடையும் மழையை
நிறுத்துவதில்லை, ஓஹோஹோய்

கடலில் சுமார் 26.8 septillion அளவு நீர் துளிகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதை ஒட்டுமொத்தமாக தான் நாம் காண முடியும் அல்லது மனதில் நிறுத்திக் கொள்ளவும் முடியும். தனியாக பிரித்து பார்க்க நம் புறக்  கண்களுக்கு தெரியாது, அது போல் இங்கே என்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் மெல்லிய, சிறிய விஷயங்களை, தனித்  தனியாக இருக்கின்றவைகளை  எடுத்துக் கொண்டு  ஒரு முழுமையான ஒன்றை காணச் செய்யும் கண்கள் அல்லது பார்ப்பவை தான் தேவதச்சனின் கவிதைகள்.

Exit mobile version