- உதயத்தில் ஓர் அஸ்தமனம்
- பிரம்மாஸ்திரம்
- ஒரு கடிதம் – டெம்சுலா ஆவ்
- விமான தளத்தை விற்ற சிறுவன்
- துக்கம்
- காளையும் காளை சார்ந்ததும்…..[அஸ்ஸாமிய சிறுகதை]
- என் தலைக்கான கொன்றை
- என் குழந்தைகளின் புகைப்படங்கள்
- வேட்டை நாய்
- வரிசையில் ஒரு சிநேகம்
- குடியுரிமை 150 டன் எடைத் தொன்னில்
- தீப்பெட்டி
- சௌவாலி
- டிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது
- வைரஸ்
- ஒரு பெண் பற்றிய சொற்சித்திரம்
- ஐந்து பெண்கள்
- நெடுஞ்சாலையின் மேல் காய்ந்த சருகுகள் – என்.மோகனன்
- மனிதர்கள் விளையாடுகிற விளையாட்டு
- காட்டு மல்லி
- குங்கும பரணி
- மர பொம்மைகள்
- வக்கீலின் கடிதம்
- தொலைந்து போன பொருள்
- உங்கள் கதை [ என்னுடையதும் ]
- கருப்பு எஜமானி
- ஹெட்மாஸ்டர்
- ஏழாவது மலர்
- விற்பனை
- இலக்கு – சேது
- பெருங்காய கச்சோடி
மூலம் : இ. ஹரிகுமார்
ஆங்கிலம் : அசோக குமார்
தமிழாக்கம் : தி.இரா.மீனா
அம்மாவைக் கூட்டிக் கொண்டு வருவதாக அப்பா சத்தியம் செய்து விட்டு
பங்களாவிற்குப் போனார். சுலு வராந்தாவில் அரையாக உடைந்து நின்ற
சுவரில் உட்கார்ந்திருந்தாள். அப்பாவின் உருவம் நடை பாதையிலிருந்து
மறைந்த பிறகு, அந்த சுவரிலேயே படுத்துக் கொண்டு முன் தினம் இரவு
வந்த கனவை நினைத்துப் பார்த்தாள். அம்மா திரும்பி வந்து அவளை
அணைத்துக் கொண்டிருந்தாள்! அவள் இந்தக் கனவை இப்போது அடிக்கடி
பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மாவின் முகத்தை ஞாபகத்திற்கு கொண்டு
வரமுடியவில்லை. கனவில் வரும் அம்மாவின் செல்லம் மட்டும்,
அருகாமை மட்டும் அவளுக்கு சந்தோஷம் தருவதாக இருந்தது. காலை
கண் விழித்ததும் ’அப்பா, நான் அந்த கனவு கண்டேன்’ என்பாள். தமிக்கு
அது தெரிந்திருந்ததால் என்ன கனவென்று ஒரு போதும் கேட்க மாட்டான்.
அரைச் சுவரில் படுத்துக் கொண்டே கனவில் மட்டும் வந்து போகும்
அம்மாவிற்காக காத்திருந்தாள். அந்தக் குடிசையில் சுலு மட்டுமே நாள்
முழுவதும் தனியாக இருப்பாள். அப்பா வேலை முடிந்து திரும்பும் போது
இருட்டி விடும். அந்த நான்கு வயதுக் குழந்தை குடிசையில் தனியாக
விளையாடிக் கொண்டு, பசித்த போது பானையில் இருக்கும் கஞ்சியைக்
குடித்துக் கொள்ளும்.
அந்தப் பெரிய பங்களாவின் முற்றத்தில் தமி சுற்றிக் கொண்டிருப்பான்.
தலைக்கு மேல் சூரியன் சுட்டெரிக்கும். காம்பவுண்டின் உள்ளேயுள்ள
மரங்கள் தம் நிழலில் வந்து நிற்கும்படி அழைக்கும் .ஆனால் அவனுக்கு
தன் இடத்திலிருந்து நகர தைரியமிருக்காது; எஜமானர் இன்னொரு தடவை
வெளியே வந்தார். “காத்திருக்க வேண்டாம். நீ போகலாம் தமி” எஜமானர்
சொன்னார் .அரைமணி நேர கெஞ்சல் எந்தப் பலனையும் தரவில்லையே.
எப்படி அப்படியே போக முடியும்?
“எப்பொழுது நீ பணத்தை திருப்பித் தருகிறாயோ அப்போது அவளை
அழைத்துக் கொண்டு போகலாம்.’ என்று தானே அவளை அழைத்துப்
போகும் போது அவர் சொன்னார். அவன் இன்று பணம் கொண்டு
வரவில்லை. எங்கிருந்து அவன் இரண்டாயிரம் ரூபாயைத் திரட்டுவான்!
எவ்வளவு வட்டி கட்ட வேண்டுமென்றும் தெரியாது. இருந்தும் கெஞ்சிக்
கொண்டிருக்கிறான். குறைந்தது ஒரு வாரத்திற்காவது அவளை தன்னோடு
அழைத்துக் கொண்டு போக முடியுமா? இல்லை; இது போன்ற ஒரு
வாழ்க்கையை இனி அவனால் வாழ முடியாது.
வடக்கு பகுதி வராந்தாவின் திறந்த கதவை பார்க்கும் போது ஒருவருக்கு
இருட்டுதான் தெரியும். கதவை விட்டு வெளியே வந்த போது தான்
அவனால் எஜமானியம்மாவைப் பார்க்க முடிந்தது.
“ஏன் தமி, இங்கே இப்படி நின்று கொண்டிருக்கிறாய்?”
“ஒன்றுமில்லை அம்மா”
“போன தடவை வந்தபோது நந்தினி, அந்த பசு பிரசவித்ததாய் என்னிடம்
சொன்னாய். எப்போது இங்கு கொண்டு வரப் போகிறாய்?”
“இரண்டு நாட்களுக்குப் பிறகு அம்மா. இன்னும் இரண்டு நாட்களுக்கு
அவளுக்கு மருந்து கொடுக்கும்படி வேலாயுதன் வைத்தியர் சொல்லி
இருக்கிறார்.”
“அவளை நீ இங்கு சீக்கிரமாக அழைத்து வந்து விடவேண்டும். பாலின்
தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.”
“கண்டிப்பாக அம்மா.”
“நீ இன்னமும் என்னிடம் சொல்லவில்லை, எதற்காக காத்துக் கொண்டு
இருக்கிறாயென்று.”
தமி பதில் சொல்லாமல் தலையைச் சொறிந்தான்.
“எதுவாக இருந்தாலும் நீ என்னிடம் சொல்லலாம்,”
“நான் லச்சுமியைப் பற்றி எஜமானரிடம் பேச வேண்ண்டும்.”
எஜமானியம்மாவின் முகபாவம் மாறியது. ஒரு வார்த்தையும் பேசாமல்
உள்ளே போய் விட்டாள். தமியின் கண்கள் ஒரு கணம் வீட்டின் இருளைத்
துளைத்தன. மற்ற நாட்களில் அவனை சமையறைக்குள் அழைத்து சாப்பிட
ஏதாவது தருவார்கள். சாப்பாட்டு சாமான்களை பொட்டலமாகக் கட்டி
வீட்டில் காத்திருக்கும் அவன் மகளுக்குத் தருவார்கள். இன்று அப்படி
எதுவுமில்லை.அவன் வீட்டிற்கு திரும்பிப் போகலாம். வீட்டிற்குப்
போன பிறகு மகளிடம் ”இன்னொரு நாள் வீட்டிற்கு வருவதாய் உன்
அம்மா சொன்னாள்.” என்று சொல்லலாம். அவன் மெதுவாக திரும்பி
நடந்தான்.
கேட்டைக் கடந்து மரங்களுக்குப் பின்னால் மறைந்த தமியை, மேல்மாடி
வரந்தாவிலிருந்து உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த ஒரு ஜோடி
விழிகள் பார்வையை விலக்கிக் கொண்டன. லச்சுமி வேகமாக கீழே
இறங்கி வந்தாள். எஜமானர் மதிய உணவை முடித்துக் கொண்டு திரும்பி
வரும் நேரமிது . வீட்டின் முகப்பிலிருந்து சிறிய வௌவால்கள்
தொங்கிக் கொண்டிருக்கும் வெளிச்சம் குறைவான மத்திய பகுதிக்கு
போனாள். சமையலறையின் அருகிலிருந்த மாமரத்தைச் சுற்றியிருந்த
இளம் வெற்றிலை தளிர்களைப் பறித்து, ஒரு தட்டில் பரப்பி வைத்தாள்.
அதனருகே கொட்டை பாக்கையும், சுண்ணாம்பையும் வைத்தாள்.பிறகு
சுவரையொட்டி இருந்த அலமாரியில் வைத்திருந்த ரோஜா சென்ட்டை
உடலில் தடவிக் கொண்டு கையில் வெற்றிலைத் தட்டோடு மாடிக்கு
போனாள்.புளி போட்டு தேய்த்த அந்த வெங்கலத் தட்டு மின்னியது.முதல்
மாடியிலிருந்த அந்த பெரிய அறையில். தோட்டத்து குளிர் காற்றின்
பரவல் தேக்கு மரத்தாலான ஜன்னல்களை ஊடுருவிக் கொண்டு வந்தது.
தலையணைகள் மென்மையாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள்.
படுக்கையை சுருக்கமில்லாமல் நீவி விட்டாள். எஜமானர் வரும் வரை
அவளுக்கு ஓய்வுதான். பளபளப்பான தரையில் ஜன்னலருகே
உட்கார்ந்தாள். குரோவ் மரங்களுக்குப் பின்னால் வயல்வெளி நீண்டிருந்தது.
தன் கணவன் இந்நேரம் வீட்டிற்கு போயிருப்பான் என்று நினைத்தாள்.
நான்கு வயது மகள் தன் தாயைப் பற்றி கேட்டிருப்பாள். “அம்மா சீக்கிரம்
வந்து விடுவாள், சுலு மோளே’ என்று சொல்லியிருப்பான். அதற்கு
சுலுவி்ன் பதில் என்னவாக இருந்திருக்கும்?
மாடிப்படியில் யாரோ ஏறும் சப்தம் கேட்டு லச்சுமி எழுந்தாள். அவர்
திறந்திருந்த கதவின் வழியாக உள்ளே வந்து கதவை சாத்தி தாழிட்டார்.
வேட்டியை அவிழ்த்து ,சுவரில் பொருத்தப்பட்டிருந்த கம்பியில் தொங்க
விட்டு குளியலறைக்குள் போனார். லட்சுமி கட்டிலின் முனையில்
உட்கார்ந்து கொண்டு அவருக்கு தாம்பூலம் தயார் செய்தாள்.
குளியலறையிலிருந்து வந்த அவர் தன் மார்பைத் துடைத்துக் கொண்டு
கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு லட்சுமியைப் பார்த்தார்.அவள்
எதுவும் பேசாமல் தாம்பூலத்தை அவர் கையில் கொடுத்து விட்டு
அவரருகே உட்கார்ந்தாள். தாம்பூலத்தை வாயில் அடக்கிக் கொண்டு
உரையாடலை ஆரம்பித்தார்.
“தமி வந்திருந்தான்.”
அவள் எதுவும் பேசவில்லை.
“அவன் ஏன் வந்தானென்று உனக்குத் தெரியுமா?”
“ஹூம்.”
“நான் அப்படியே உன்னை போக விட்டு விடுவேன் என்று நினைக்கிறாயா?”
அவள் எதுவும் பேசவில்லை: பதிலாக தனது கருமையான விரல்களை
அவன் நெஞ்சில் அளைந்தாள். ரவிக்கையை அவர் அவிழ்க்க
அதற்கேற்றபடி இடம் கொடுத்தாள்.
அவளுக்கு அந்த வெற்றிலைச் சாற்றின் மணம் பிடிக்கும். எஜமானரின்
வாசமும்தான். அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டு,ஆடையை
நெகிழ்த்தினார்.வெற்றிலைச் சாற்றை முழுங்கியபடி எஜமானர் சொன்னார்.
“நான் இரண்டாயிரம் ரூபாய் தமிக்கு கொடுத்திருக்கிறேன். உனக்குத்
தெரியும் அல்லவா? ”
அவள் தலையாட்டினாள். தன் வார்த்தைகளுக்கு மறுப்பு சொல்வதை அவர்
விரும்ப மாட்டார்.
“தமி அந்த சமயத்தில் என்ன சொன்னான், உனக்கு ஞாபகமிருக்கிறதா?”
அவள் அதை சரியாக கவனிக்கவில்லை.அந்த நாளில் எஜமான் சொன்ன
எல்லாவற்றுக்கும் தமி தலையாட்டினான். முற்றத்தின் நடுவில் நின்று
கொண்டிருந்த தமியின் முதுகுக்குப் பின்னால் நடுங்கியபடி அவள்
நின்றிருந்தாள். அந்த பெரிய பங்களாவிலிருந்து எஜமானர் வெளியே
வருவதை அவள் பார்த்தது கூட் இன்னும் ஞாபகத்திலிருந்தது.
“எல்லாவற்றிற்கும் நீ சம்மதித்து இருக்கிறாய் என்பது உனக்கு
ஞாபகத்திலிருக்கிறதா தமி ?’ எஜமானர் கேட்டார்.
“உம்.”
“எப்போது வட்டியுடன் நீ பணத்தை திருப்பித் தருகிறாயோ அன்று அவளை
அழைத்துப் போகலாம். புரிந்ததா?”
“உம். தமி மரியாதை காட்டும் வகையில் தோளிலிருந்த துண்டால்
வாய் பொத்தி சொன்னான்.
“சரி” என்று சொல்லி விட்டு அவள் பக்கம் திரும்பி “ உன் பெயர் என்ன ?’
என்றார்.
“லச்சுமி”
“லட்சுமி, சமையலறையின் வடக்குப் பக்கத்திலிருக்கிற வராந்தாவிற்கு
போ. அங்கே எஜமானி அம்மா இருப்பார்கள்.”
அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் பலவித
உணர்வுகளோடு அவளை வரவேற்றனர். நெல் குத்திக் கொண்டிருந்த
பெண்கள் அவளை புறக்கணித்தனர். சிலருக்கு அவளை நன்றாகத்
தெரியும். அவள் அந்த இடத்தில் ஒரு துறவி போல இருந்தாள்.வேலை
செய்யும் பெண்களின் பேச்சுக் குரல், உலக்கை உரலோடு உரசும் ஒலி,
நெல் குத்தும் போது எழும் சப்தம் ஆகியவை ஒரு சோகமான இசைத்
தன்மையை நாள் முழுவதும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. மதிய
வேலையில் அவள் மற்ற பெண்களுடன் பருப்பு கஞ்சி குடித்தாள்.
மாலையில் அவர்கள் தங்கள் அன்றாடக் கூலியை பெறச் செல்லும்
போது அவள் தனித்து விடப்பட்டாள். மகளையும், கணவனையும்
நினைத்துக் கொண்டாள். இருட்டு படர அவளுக்குள் ஒரு விதமான
சோகம் பதட்டமாய் வெளிவர அழுதாள்.
இரவில் என்ன செய்வதென்று லச்சுமிக்கு தெரியவில்லை. எஜமானியம்மா
எந்த பரிவையும் காட்டவில்லை.அவள் மற்றொரு பணிப் பெண்ணோடு
சமையலறையில் பேசிக் கொண்டிருந்தது லச்சுமிக்கு கேட்டது. அவள்
பெயர் மாதவி என்றறிய முடிந்தது. மரச் சட்டங்களின் இடையில்
தெரிந்த மண்ணெண்ணய் விளக்கொளியில் அவர்கள் இருவரும்சேர்ந்து
இரவு உணவு தயாரிப்பது தெரிந்தது.
மேற்கு பகுதியிலிருந்து அரிக்கேன் விளக்கின் வெளிச்சம் அசைந்தது.
அவள் நிற்குமிடம் அருகே வந்த போது விளக்கு அவள் முகத்தி்ல்
உயர்த்தப்பட்டது .எஜமானரின் முகத்தில் ஏராளமான கேள்விக் குறிகள்.
பேச்சு எதுவுமில்லை. விளக்கின் வெளிச்சம் அங்கிருந்து நகர்ந்தது.
ஐந்து நிமிடத்தில் எஜமானியம்மாவும்,மாதவியும் சமையலறையிலிருந்து
வெளியே வந்தார்கள். துண்டு, எண்ணெய், வாசனை சோப், இஸ்திரி
செய்யப்பட்ட முண்டுடன் வந்து, பணிப்பெண் அவளை குளத்துக்கு
அழைத்துப் போனாள். குளித்தவுடன் அந்துருண்டை வாசமிக்க
புதிய ஆடைகளை அணிந்து கொண்டாள். சமையலறையில் அவளுக்கு
விஷேஷ சாப்பாடு தரப்பட்டது. பணிப்பெண்ணின் பார்வையில் ஒரு
மாற்றம் தெரிந்தது. மற்ற பெண்களுடன் சேர்ந்து மதியம் கஞ்சி
பரிமாறிய போது தெரிந்த அந்த முகபாவம் அதை வெளிப்படுத்தியது.
எஜமானியம்மாவும் அன்பாக நடந்து கொண்டாள்.
எஜமானரின் படுக்கையில் படுத்திருந்த அவளுக்கு தான் வந்த பாதை
மனதில் ஓடியது. என்ன நடக்கிறதென்றே தெரியாத நாட்களும்,
மாதங்களும் கடந்த போது, நெல் குத்தும் பிரிவிலிருந்து சமையல்
அறை, பின்பு முதல் மாடி, பின்பு எஜமானர் அறை என்று அவள் பயணம்
அமைந்தது. காலம் எல்லாவற்றையும் இயல்பாக்கி இருந்தது ;
யதார்த்தத்தின் ஒளியில் அவள் செய்து கொண்டிருப்பதும் மங்கிப் போனது.
குடிசையில் தனக்காக காத்திருக்கும் கணவன் அல்லது அன்பான மகள்
நினைவு வரும் போது ’கடவுளே, இதெல்லாம் என்ன ’என்று மனம்
ஓலமிடும்.
“ஏன் அமைதியாக இருக்கிறாய்?”எஜமானர் திரும்பவும் கேள்வியைக்
கேட்டார். “அன்று தமி ஒப்புக் கொண்டது உனக்கு ஞாபகம்
இருக்கிறதல்லவா?”
“ஹூம். இருந்தாலும் என் மகளைப் பார்க்க விரும்புகிறேன். ஒரு
தடவையாவது.’
“ஹும். எஜமானரின் குரலில் ஒரு வித அழுத்தம் தெரிந்தது.
மறுநாள் அவள் எஜமானருக்காக சமையலறையில் தேநீர் தயாரித்துக்
கொண்டிருந்த போது,” இன்றுதான் உன் மகள் உன்னைப் பார்க்க
வருகிறாள் இல்லையா?’ என்று எஜமானி கேட்டாள்.
“அப்படியா?” என்று கேட்டாள்.
“யாரும் உன்னிடம் சொல்லவில்லையா?’
“எஜமானர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை.”
“தமிக்கு சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். நீ உன் மகளைப் பார்த்து
எவ்வளவு நாளாயிற்று?”
இரண்டு வருடங்கள்! மூன்று வருடங்களுமிருக்கலாம்! அவள்
வருடங்களைக் கணக்கிட மறந்து விட்டாள். சுலு இப்போது
வளர்ந்திருக்கலாம். தேநீரை எடுத்துக் கொண்டு அவள் மாடிக்கு
போனாள். எஜமானர் அவளுக்காக காத்திருந்தார். தலையணையில்
சாய்ந்து கொண்டு அவர் தேநீர் அருந்த, அவள் கட்டிலின் நுனியில்
உட்கார்ந்தாள்.
“என் மகள் இன்று இங்கு வருகிறாளா?” அவள் குரலில் நன்றி
வெளிப்பட்டது.
’ஹும்.” அவர் குரலில் வழக்கத்துக்கு மாறான அழுத்தம் தெரிந்தது.அவள்
காலையில் வந்து விட்டு மாலையில் திரும்பிப் போகட்டும்.”
“நிச்சயமாக.’
“உன் மகளுக்கு இரண்டு ஜோடி உடைகள் வாங்கி வரும்படி கனரனிடம்
சொல்லியிருக்கிறேன்.”
“அப்படியா?” அவள் முகத்தில் தெரிந்த பிரகாசத்தை எஜமானர் கவனித்தார்.
“இதையெல்லாம் நான் ஏன் செய்கிறேன் என்று உனக்குத் தெரியுமா?”
“ஹூம்”
“ஏன் இதைச் செய்கிறேன் என்று சொல்.”
“ஏனென்றால் என்னை உங்களுக்குப் பிடிக்கும்.”
“உனக்குத் தெரியும். அதனால் அன்போடு நடந்து கொள்.”
“ஹும்.”
இலக்கின்றி நடந்தாள்; தாழ்வாரம், அறைகள், சமையலறை என்று
எங்கும். ..கண்கள் பொறுமையின்றி கேட்டையே பார்த்துக் கொண்டிருந்தன,
அதற்கு அப்பாலும். சூரிய கதிர்கள் நடனமாடுகிற வயல் வெளியிலும்,
அதற்கு அப்பாலும், அவள் மனம் மட்டுமே போகிற இடமாய் ;
சிறுமியின் பாதங்கள் சிறு அடி எடுத்து வைக்கும் நடைபாதைக்கு
அப்பால், வேலிக்கு அப்பால் பரந்திருக்கும் வயல் வெளியில், தொலை
தூரத்தில் தன் மகள் நடந்து வருவதை பார்க்க முடிந்தால் எவ்வளவு
நன்றாக இருக்கும். ஆனால் அது அவளுக்கு தடை செய்யப்பட்ட பகுதி.
எஜமானரும் சொல்லி இருக்கிறார்.
“குளத்திற்கு குளிக்கப் போவதைத் தவிர நீ வீட்டை விட்டு வேறு் எங்கும்
வெளியே போகக் கூடாது. முற்றத்திற்கு கூடப் போகக் கூடாது. தமி
உன்னைப் பார்க்க வாய்ப்பே தரக் கூடாது. புரிந்ததா?”
அதற்குப் பிறகு காம்பவுண்டில் தமி வேலை செய்வதை பல முறை
பார்த்திருக்கிறாள்; அவன் தன்னைப் பார்த்து விடக் கூடாது என்பதில் மிக
கவனமாக இருந்திருக்கிறாள். ஓய்வெடுக்கும் நேரத்தில் மண்வெட்டியில்
கையைச் சாய்த்துக் கொண்டு அவள் எங்காவது தென்படுவாளா என்று
பங்களாவைப் பார்ப்பான். முதல் மாடியிலுள்ள ஒரு ஜன்னல் வழியாக
அவனை பார்த்துக் கொண்டிருக்கும் அவள் வேகமாக பின் வாங்கி
நிற்பாள். எஜமானனைக் கண்டு அவளுக்கு பயம். ஆனால் அது
பயமட்டுமில்லை, சொல்லத் தெரியாத ஏதோ ஒன்று. வெளியில்
எஜமானனைப் பற்றி சொல்லப்படும் கதைகள் மிக மோசமானவை.
எல்லோருக்கும் அவரைக் கண்டால் பயம். ஆனால் அவளுக்கு அவர் மிக
வித்தியாசமான மனிதர் ; அவளால் புரிந்து கொள்ள முடியாத மனிதர்.
இரண்டாயிரம் ரூபாயை வட்டியுடன் கொடுத்து விட்டு தமி அவளை
அழைத்துப் போகும் நாள் வருத்தமானதாக இருக்குமென்று அவள்
உணர்ந்தாள். உடனடியாக எஜமானரின் வார்த்தைகள் அவள் காதில்
கேட்கும்,” உன்னை அப்படியே போக விட்டு விடுவேனா?” எஜமானர்
எப்போது அப்படிச் சொன்னாரென்று அவளுக்கு நினைவிலில்லை.
கடனை அடைக்காமல் போக விடமாட்டேன் என்பதானதா?
கடன் அடைக்கப்பட்டால் அவள் திருப்பி அனுப்பப் படுவாளா ?அப்படி
ஆகக் கூடாதென்று அவள் விரும்பினாள். அதே நேரத்தில் அவளுடைய
மகளின் ஞாபகம் வரும்.அந்த மாதிரி நினைத்ததற்காக குற்றவுணர்வு
அவளை பழிக்கும்.
சமையலறையின் அருகே வந்த கனரன் அவளை அழைத்து ஒரு
பொட்டலம் தந்தான். அவள் பிரித்துப் பார்த்தாள்.இரண்டு அழகான
உடைகள்,ஒன்று நீல பின்னணியில் சிவப்பு பூக்கள், மற்றொன்று மஞ்சள்
பின்னணியில் பச்சை படங்கள்.இரண்டு உள்ளாடைகளும். சுலு அந்த
உடைகளில் மிக அழகாய் இருப்பாள். அவள் இந்த மாதிரியான
உடைகளை ஒரு போதும் அணிந்ததில்லை.
சுலுவை அழைத்துக் கொண்டு தமி சமையலறை அருகே வந்த போது.
மாதவிதான் சுலுவை உள்ளே அழைத்துச் சென்றாள்.மாதவியின்
கைகளைப் பிடித்துக் கொண்டு சுலு சமையலறைக்குள் வந்ததைப் பார்த்து
லச்சுமி மெதுவாக அழுதாள் .தன் மகளின் முகத்தைக் கூட மறந்ததை
உணர்ந்து லச்சுமி வருந்தினாள். சுலு தன் அம்மாவை வியப்பாகப்
பார்த்தாள்.அடையாளம் கண்டு கொண்ட எந்த அறிகுறியுமில்லை.
சுற்றிலும் பார்த்தாள், வேறு யாரையோ தேடுவதாய்.
“கண்ணே, வா ” சுலுவை அருகில் இழுத்து அணைத்துக் கொண்டாள்.
தன்னை அன்போடு அணைத்துக் கொள்ளும் இவள் யாராக
இருப்பாளென்று சுலு வியந்தாள்.அந்தப் பெண்ணிடமிருந்து சோப்,
எண்ணெய் வாசனை வந்தது, முண்டும்,அழகான ரவிக்கையும்
அணிந்திருந்தாள். அவளைப் போல அழகான ஆடையணிந்திருந்த
பெண்ணை சுலு பார்த்ததேயில்லை.
உள்ளேயிருந்து இன்னொரு எஜமானி வெளியே வந்து அவள் முன்
நின்றாள்.
“லட்சுமியின் மகள் வந்து விட்டாளா?” அவள் கேட்டாள்.
சுலு குழம்பி நின்றாள். அவள் பார்க்க விரும்பிய அம்மா அவள்.
தரையில் வைக்கப்படிருந்த தட்டில் இருந்த உணவைச் சாப்பிடும் போதும்
கூட அவள் குழம்பினாள். யார் இந்த மனிதர்கள்!
சாப்பிட்டு முடிந்த பின்னர் லட்சுமி அவளுக்கு வாசனையான எண்ணெய்,
சோப் தேய்த்து குளிப்பாட்டினாள். அவள் தன் பழைய உடையை
அணியும் போது” அம்மா உனக்காக புது உடைகள் வாங்கியிருக்கிறேன்”
என்று லட்சுமி சொன்னாள்.
அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.புது உடை என்பது மட்டுமில்லாமல்,
அவள் அம்மா வாங்கித் தந்தது என்பது மகிழ்ச்சியாக இருந்தது. அறையில்
புது உடைகளை அணியும் போது கூட அவள் யாரையோ தேடினாள்.
ஆனால் அதைக் கேட்பதற்கு தைரியமில்லாமல் நின்றாள்.
மாலை சூரியனின் கதிர்கள் வயல் பயிர்களில் பரவின. அந்த பரந்த
வயல் வெளிக்கு அப்பால், நெல் குத்தும் பெண்கள் தங்கள் பணியிலிருந்து
மரத்தினடியில் நின்று நின்று திரும்பி வந்தனர். வயல் பகுதியின்
ஒதுக்குப்புறமான குடிசைகளின் வெளிப்புறப் பகுதிகளிலிருந்து மெல்லிய
தீ துளிகள் தெரிந்தன. தோட்டங்களிலிருந்து சேகரித்த காய்ந்த இலைகளை
எரித்து, அவர்கள் கஞ்சி தயாரிக்க, நீரை கொதிக்க வைத்திருக்க வேண்டும்.
தமி தன் மகளுக்காக காத்திருந்தான். எஜமானர் அவன் மகளுக்காக புதிய
உடைகள் வாங்கியிருந்ததை கனரன் சொல்லியிருந்தான். ”உன் மனைவி
கொடுத்து வைத்தவள். இனி நீ அவள் வழிக்கு போகாதே. அவள் மூலம்
உன் மகளுக்கும் நல்லது கிடைக்கும்.”
தமி ஒன்றும் சொல்லவில்லை.அவனால் என்ன சொல்ல முடியும்?
எப்போது அவனால் இரண்டாயிரம் ரூபாயை வட்டியோடு திருப்பித் தர
முடியும்? அவனால் அந்த பணத்தை திருப்பித் தர முடியாது. லச்சுமி
அவர்களின் குடிசை வீட்டிற்கு வரவே மாட்டாள்.
சில பணிப்பெண்களுடன் சுலு வருவதை தொலைவிலிருந்தே தமி
பார்த்து விட்டான். அவள் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.அருகே
வந்தவுடன் அவளை தூக்கிக் கொண்டான். சுலுவின் உடைகள் இருந்த
பையை அந்தப் பெண்கள் கொடுத்தனர். ”இவளுக்கு இரண்டு ஜோடி
புதிய உடைகள் கிடைத்திருக்கின்றன.” சொல்லி விட்டு அந்தப் பெண்கள்
போய் விட்டார்கள்.
அவன் அவளை அன்பாக முத்தமிட்டான்.
“அம்மாவைப் பார்த்தாயா?” அவன் கேட்டான்.
’அம்மா!” ஆச்சர்யத்தோடு கேட்டாள். ”நான் அம்மாவைப் பார்க்கவில்லை.”
“அப்புறம் அந்த பங்களாவில் யார் இருந்தார்கள்?”
“ஒரு சிவப்பு எஜமானியும், ஒரு கறுப்பு எஜமானியும் இருந்தார்கள்.” ஒரு
கணம் நிறுத்தி விட்டு பிறகு தொடர்ந்தாள். “ அந்த கருப்பு எஜமானிதான்
என்னைக் குளீப்பாட்டி உடை அணிவித்தார்கள். அவர்கள் என்னிடம்
அன்பாக இருந்தார்கள்.”
“அது உன் அம்மா .அப்படித்தானே?”
“இல்லை அப்பா. அவர்கள் அங்கே எஜமானி ; கருப்பு எஜமானி.”
திடீரென்று அவள் பேசுவதை நிறுத்தி விட்டு யோசித்தாள். தமி
மண்ணெண்ணை விளக்கை ஏற்றினான்.அந்த மங்கிய வெளிச்சத்தில்
அவளுடைய எண்ணெய் படர்ந்திருந்த முகத்தைப் பார்த்தான். சுலு
இன்னமும் யோசித்துக் கொண்டிருந்தாள். மனதில் ஓடிக் கொண்டிருந்த
பலவிதமான எண்ணங்களை ஒரு கணத்தில் அவளால் தொடர்புபடுத்த
முடியவில்லை. யார் அந்த கருப்பு எஜமானி? ஏன் அவள் மீது அத்தனை
அன்பு காட்டினாள்? ஏன் அவளுக்கு புது உடைகள் வாங்கித் தர வேண்டும்?
திருப்திகரமான பதில் தனக்கு கிடைக்கவில்லை என்று உணர்ந்த பிறகு
அவள் கேட்டாள்.
“அப்பா ,என் அம்மா எப்போது வருவாள்?”
—————————————
நன்றி : மலையாள மனோரமா ,ஆண்டு இதழ் — 2000
