பாதி வாசிப்பின் போது இந்நூல் விரிவான வரலாறு என்று தோன்றியது. செறிவாக வரலாற்று ஓட்டத்தை சுவாரஸ்யமாக கூறுவதால் அவ்வாறு தோன்றியிருக்கலாம். இந்திய வரலாற்றை ஓரளவிற்கு நாம் அறிந்திருந்தாலும் சமகால தன்மையுடன் வாசிக்கும்போது புதியதாக தோன்றுகிறது. இடையில் இருக்கும் சின்ன சிடுக்குகளை விலக்கி அறியும் போது அதில் ஒரு புனைவின் வேகமிருப்பதையும் சிறப்பான வரலாற்று தருணங்கள் இருப்பதையும் அறிய முடிகிறது.
ஹரப்பா காலகட்டத்தில் தொடங்கும் இந்திய நாகரிகத்திலிருந்து தொடங்கி சமய புரட்சிகள், செவ்வியல் யுகம், இஸ்லாமிய வருமை, முகலாயர் வருகை, வணிகர்களும் கூலிப்படைகளும், திரியில் பற்றிய நெருப்பு (1857 நிகழ்வு), விடுதலையை நோக்கிய நெடும்பாதை, தேசிய அரசின் உருவாக்கம், புதிய இந்தியா என்று அத்தியாயங்கள் விரிந்து செல்கின்றன.
முக்கியமான இடங்கள் சற்று விரிவாக பேசப்படுகின்றன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் தகவல்களுடன் அதன் பண்பாட்டு சூழலையும் கணக்கில் கொண்டு பேசுகிறார் ஆசிரியர் ஜான் ஜூபர்ஸிக்கி. ஆசிரியர் இந்தியாவில் வாழ்ந்தவர் என்பதால் அவருக்கு இந்திய பன்முகத் தன்மைப் பற்றி விரிவாக தெரிகிறது. தமிழில் எழுத்தாளர் அரவிந்தன் மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பு நூல் என்ற நினைவு தோன்றாத வாசிப்பு சாத்தியமாகியிருக்கிறது.
5000 ஆண்டுகளிலிருந்து இன்றுவரை நடந்தவை ஒரே நூலில் அமைந்த பூசரடுகள் போல நீண்டு வருகின்றன. இடுபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி மொகசந்தாரோ, ஹராப்பா நாகரிகத்திலிருந்து இன்று நடக்கும் அரசியல் மாற்றங்கள் வரை சமகாலதன்மையை உணர்ந்தும் வகையில் அமைந்திருக்கிறது.
வடஇந்திய வரலாறு தென்னிந்திய வரலாறு என்று பொதுவாக பிரித்தே பேசும் வரலாற்று பதிவுகளை போலல்லாமல், அதே அத்தியாயத்தில் நிகழ்வுகளை ஒப்பிட்டே பேசுகிறார். அதனால் தனியாக நிகழ்ந்ததாக, மற்ற வரலாற்று நூல்களைப் போல், உணரமுடிவதில்லை.
ஆரம்ப நாகரிகம் காலகட்டத்திற்கு பின்னால் புத்தர், வர்த்தமானர் போன்றவர்களின் தோற்றம் துணைக் கண்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கூடியவை. அசோகர், கனிஷ்கர், சந்திரகுப்தர், ஹர்ஷர் காலகட்டதில் வரலாறு வேகம் கொண்டுவிடுகிறது. இந்த இரண்டு காலகட்டத்தையும் விரிவாக பேசுகிறது, அதில் பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்டிருக்கின்றன.
நாகரிகம், சமயப்புரட்சிகள், செவ்வியல் யுகம் என்று தொடங்கிய அத்தியாயங்கள், சட்டென இஸ்லாமிய வருமை என்று முகலாயர்களின் வருகை என்று தொடங்குவது சற்று நெருடலாக இருக்கிறது. இடைப்பட்ட காலங்களை இன்னும் பேசியிருக்கலாம்.
முகலாயர்களைப் பற்றி அதிகம் பேசுவதற்கு காரணம் கிடைத்திருக்கும் தகவல்கள்தாம். அந்த காலகட்டத்தில் ஆங்கியலேயர்களின் வருகையும் கிழக்கிந்திய கம்பெனியின் கால் பதிப்பும்தாம் காரணம். அவர்கள் எழுதிய முக்கிய குறிப்புகள் இந்த அத்தியாயத்தில் நிரம்பியுள்ளன.
பாபர்-ஹுமாயுன், காந்தி-ஜின்னா முரண்பாடு மோதல்களையும் காங்கிரஸ்-பிஜேபியின் தற்கால அரசியல் வாழ்வையும் பேசுகிறது. அதாவது இணையானவற்றையும் எதிர்தன்மையானவற்றையும் இரு கோடுகளாகவும் பின்னிச்செல்லும் கயிறுகள் போலவும் கூட்டிச்செல்கிறது.
பொதுவாக, வரலாற்று நூல்களில் இருக்கும் வெறுமையான தகவல்கள் அடுக்கப்படாமல் சுவாரஸ்யமான அடிதகவல்களை சேர்த்தும், சமகாலத்தில் அது என்ன பொருள் கொள்கிறது என்பது நம் வாசிப்பை சுவாரஸ்யப்படுத்துக்கின்றன.
இந்திய வரலாற்றை சுவாரஸ்யமாக படிக்க இந்த நூல் உதவும். வரலாற்றின் முழுமை சித்திரத்தை அறிந்து கொள்வதற்கு பயன்படும். ஆனால் முழுமையாக அறிய வேறு துணை நூல்களை வாசிக்க வேண்டும். புதியதாக வரலாற்றை வாசிப்பவர்களுக்கு நல்ல தொடக்கமாக அமையும். எல்லாவற்றையும் பேசுவதனால் சில விடுபடல்கள் இருப்பதையும் காணமுடிகிறது.
பொதுவாக வரலாற்று நூல்களில் இருக்கும் சார்புதன்மையும் நம்பகமின்மையும் இந்நூலில் இல்லை என்று சொல்லிவிடலாம். வழிபாட்டு உணர்ச்சியோடோ அல்லது வெறுப்போடோ சொல்லப்பட்ட வரலாற்று தகவல்களை இதில் காணமுடியவில்லை. எல்லா தகவல்களும் ஒருமாதிரியான உணர்ச்சிகளால் சொல்லப்பட்டாலும் அதில் இருக்கும் முக்கியத்துவத்திற்கும் அதிகம் இடமளிக்கப்பட்டுள்ளது.
சீரான நீண்ட ஒரு ரயில் பயணத்தைப் போன்ற வாசிப்பில் முழு இந்திய வரலாற்றை அறிந்துக் கொள்ளும் அதீத சுவாரஸ்யம் இந்நூல்.
