MARSHLAND
எழுதியவர் : Otohiko Kaga
ஜப்பனீஸ் மொழியில் இருந்து மொழிபெயர்ப்பு ஆல்பர்ட் நோவிக்
புத்தக விமர்சனம் ஜாக் ராக்வெல்
தமிழில் புத்தக விமர்சனம் : சித்ரா பாஸ்கரன்
லீலாண் டி லா டூரென்டயே தன்னுடைய 2013 ஆம் ஆண்டு நவுஸ்கர்ட்யின் மை ஸ்ட்ரகல் புத்தகத்தின் இரண்டாம் பாகத்தின் விமர்சனத்தில் ஒரு கேள்வியை முன்வைக்கிறார்:
“ஆறு பாகங்கள் கொண்ட ஒரு 3600 பக்க நார்வீஜிய புதினத்தை எழுதும் ஒரு மனிதனைப் பற்றிய புதினத்தை, ஆறு பாகங்கள் கொண்ட ஒரு 3600 பக்க நார்வீஜிய புதினமாக நாம் ஏன் படிக்க வேண்டும்?”
ஒடோஹிகோ காகாவின் மார்ஷ்லாண்ட் ஒரே பாகத்தில் 1035 பக்கங்கள் கொண்ட புதினம். இவ்வளவு நீண்ட வடிவத்தின் தேவை என்ன? இவ்வளவு நேரத்தை நாம் அதற்கு கொடுக்கும் பட்சத்தில் நமக்கு அது எதை திருப்பி கொடுக்கிறது?
துக்கங்கள் நிறைந்த கடந்த காலத்தை சுமக்கும் அட்சுவோ யுகிமோரியுடன் நாவல் தொடங்குகிறது. ஒரு இயந்திர வல்லுநராக வாழ்க்கையின் ஒரு அமைதியான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அவரின் பழைய கூட்டாளி ஒருவரின் வருகை அவரின் வாழ்க்கையை திசை மாற்றுகிறது. அவரின் குடும்பம், நண்பர்கள் மற்றும் வாக்காகோ இகேஹாதா ஆகியோருடன் அவருக்கு இருந்த உறவில் சிக்கல்கள் விழ ஆரம்பிக்கிறது. டோக்கியோவிற்கும் தனது சொந்த ஊரான நேமுரோவிற்கும் இடையில் பயணிக்கிறார்.
அவர் நினைவுகள் மெல்ல அவரின் கடந்தகால குற்ற சரித்திரத்தை வெளிக்கொணர்கிறது. 1968 மற்றும் 1969 ல் டோக்கியோ மற்றும் ஜப்பானின் இதர பகுதிகளில் நடந்த மாணவ கலவரம் நாவலின் மூன்றில் ஒரு பகுதியாக அமைகிறது.ஒரு ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு அட்சுவோ, வாக்காகோ, அவர்களுக்கு அறிமுகமானவர்கள் மற்றும் தீவிர மாணவப் பிரிவினை சேர்ந்த மாணவர்கள் குழுவான ‘கியூ- செக்ட்ஐ’ சேர்ந்தவர்கள் கைதாகும் பொழுது கதையின் போக்கு தீவிரமடைகிறது.
இதைத் தொடர்ந்து நியாயமற்ற முறையில் அட்சுவோ மற்றும் அவர்களின் கூட்டாளிகள் மிருகத்தனமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் விவரங்கள் விவரிக்கப்படுகிறது..காகா , சடடக கோகி என்னும் பெயரில் 1929 ஆம் ஆண்டு பிறந்தவர். .டோக்கியோ பல்கலையில் உளவியல் மற்றும் குற்றவியல் படித்தவர். அவர் ஒரு உளவியளராகவும், பேராசிரியராகவும் பல வருடங்கள் பணியாற்றியவர் . இந்த துறையில் அவரின் நிபுணத்துவம் மார்ஷ்லாண்ட் நாவலில் வெளிப்படுகிறது.
அட்சுவோ கதையின் கதாநாயகனாக இருந்தபோதிலும் வாக்காகோ மற்றும் பல கதாபாத்திரங்களின் மூலம் அவர்கள் சிறைவாசத்தில் பட்ட வேதனைகள் சொல்லப்படுகிறது. சிலர் சூழ்நிலையை சகித்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள் ,சிலர் மனநோயாளிகளாகிவிடுகிறார்கள், சிலர் தற்கொலை முடிவை நாடுகிறார்கள். பட்டினி, அவமானங்கள், கழிப்பறையை பயன்படுத்த அனுமதி இல்லாமை போன்ற சித்ரவதைகளையும் அனுபவிக்கிறார்கள் . அட்சுவோ இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஒரு போலியான ஒப்புதல் வாக்குமூலத்தை அளிக்கிறார். சதிகாரர்கள் என்று கருதப்படும் அனைவருக்கும் பலவருட சிறைதண்டனை முதல் மரணதண்டனை வரை தீர்ப்பாகிறது. அட்சுவோவுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
நேமுரோவில் இருக்கும் அட்சுவோவின் குடும்பத்தாருக்கு நிலைமை தெரியவரும்பொழுது அவர்கள் ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்கிறார்கள். ரஷ்யாவில் சட்டத்திற்கு புறம்பாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த அட்சுவோவின் உறவினரான டெட்சுகிச்சி திரட்டும் நிதியைக்கொண்டு அட்சுவோ குடும்பத்தார் அவருக்கு ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்கின்றனர். அவர் அட்சுவோ மற்றும் வாக்காகோவின் அயலிட சான்றை பெற முயற்சி செய்கிறார். வழக்கு திசை திரும்புகிறது. ஆனால் ஜப்பானின் சிக்கலான நடைமுறைகளை கொண்ட நீதித்துறையினால் வழக்கு ஒன்பது வருடங்கள் இழுத்தடிக்கப்படுகிறது. பிரதிவாதிகள் தீவிர காவலில் வைக்கப்படுகிறார்கள்.
இந்த காலகட்டத்தில் அட்சுவோ ஒப்புதல் வாக்குமூலம் என்ற பெயரில் தனது நினைவு குறிப்புகளை எழுத ஆரம்பிக்கிறார். தன் சிறு வயதில் நடந்த சம்பவங்கள் முதல் நாவல் ஆரம்பிப்பதற்கு முந்தைய நிகழ்வுகள் வரை அதில் பதிவு செய்கிறார் . இந்த புத்தகம் நாவலில் இரண்டு அத்தியாயங்களாக இடம்பெறுகிறது. இந்த இரண்டு அத்தியாயங்கள் மட்டுமே இருநூறு பக்கங்களைக் கொண்டிருக்கிறது. இது நம் கவனத்தை ஈர்க்கும் பகுதியாக அமைகிறது.
அட்சுவோவின் அனுபவங்களை ஒரு வழக்கு ஆய்வாக வைத்து காகா நவீன சமூக அமைப்புகளின் முறைகள் மீது குற்றச்சாட்டை வைக்கிறார். காகா அதிகாரத்துவ அமைப்புகளை பற்றி பல கதாபாத்திரங்கள் மூலம் அவர்களின் கைது மற்றும் சிறை வாச அனுபவங்களின் மூலம் அவற்றை வெளிப்படுத்துகிறார். பல கதாபாத்திரங்களின் மூலம் மீண்டும் மீண்டும் ஒரே கருத்துகள் வெளிப்படுத்துவது சற்று சலிப்பை அளிக்கிறது.
காகா ஒழுங்கு முறை அமைப்புகளின் தனது விமர்சனத்தை சிறைகள், இராணுவம், பல்கலைக்கழகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் இதர பின்ன அமைப்புகளின் மூலம் பல கோணங்களிலிருந்து தனது நேர்த்தியான விவரிப்பின் மூலம் முன்வைக்கிறார்.காகா சிறிய மற்றும் முக்கிய கதாபாத்திரங்களின் வாழ்க்கையை ஆய்வு செய்யும் பகுதிகள் நாவலில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் ஈரம் கசியும் பகுதிகளாக அமைகிறது. நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஜப்பானின் குற்றவியல் நீதி அமைப்பின் மீது அவர் வைக்கும் விமசனங்களை நம்மால் தற்கால அமெரிக்காவின் குற்றவியல் நீதி அமைப்புடனும் ஒப்பிட முடியும்.
காகாவின் வலிமையான வர்ணனைகள் மற்றும் விவரிப்புகளுக்கு இடையே முறையான எண்ண அலைகள் மீண்டும் மீண்டும் பாய்வது கதை ஓட்டத்தில் ஒருவித சீர்கேட்டை அளிக்கிறது. குறிப்பாக பதினேழு ஆண்டுகளுக்கு முன் நடந்த டோக்யோவின் மாணவகலவரத்தை அவர் நினைவு கூறும் பொழுது சகித்துக்கொள்ள முடியாததாக இருக்கிறது. மாணவ கலவரத்தின் வர்ணனைகள் கவனத்தை ஈர்ப்பவையாக இருந்தபோதிலும் மாணவர்களின் அர்த்தமில்லாத அழிவுகளும், நோக்கமில்லாத செயல்களும், அறிவற்ற சீர்திருத்த சிந்தனைகளும் பெரும் ஏமாற்றத்தையே தருகிறது. மிகவும் நேர்த்தியாக நெய்யப்பட்ட கதை களத்தில் இது ஒரு சீர்கேட்டை தருகிறது.
மழலையின் சிணுங்கல்களை புரட்சிகரமான கோட்பாடுகள் என்று கருதி மகிஹிகோ மோரியா என்னும் மாணவன் தன் மகள் வாக்காகோ மனதில் பதிய வைத்ததை தன்னால் மன்னிக்க இயலவில்லை என்று சுனிதரோ இகிஹதா பேசுவது நம்மை யோசிக்க வைக்கிறது. தீவிர அரசியல் அமைப்புகள் மற்றும் முறையான கோட்பாடுபடுத்துதல் மேல் உள்ள கசப்புத்தன்மையை மகிஹிகோ மோரியாவின் தி ஸ்டேட் அண்ட் பிரீடம் எனும் அரசியல் கட்டுரைக்கு நாவலின் இறுதியில் ஒரு சில வரிகளை மட்டுமே காகா ஒதுக்கி இருப்பதில் வெளிப்படுகிறது.
அவ்வப்பொழுது விகாரமான வசனங்களாலும், தேவையில்லாத தொய்வான தருணங்களாலும் காகாவின் நேர்த்தியான எழுத்து பாணி சீர்கெடுகிறது. மொழிபெயர்ப்பாளர் ஆல்பர்ட் நோவிக்ஸ் பல இடங்களில் வசனங்களில் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு இருப்பது தெரிகிறது. ஒரு சில கதாபாத்திரங்கள் பேசும் வட்டாரமொழி வழக்குகளின் குறிப்புகளும், மொழிபெயர்ப்பில் வாக்கோவின் “ஜிவ் டாக்’ போன்ற ஆங்கில ஸ்லாங் பயன்படுத்தி இருப்பதும் சற்று கலவையான உணர்வை தருகிறது. ஒரு மொழிபெயர்ப்பாளரின் இந்த சமரசம் சரியான அணுகுமுறையா என்று தெரியவில்லை. அயன் ஹீடியோ லெவி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த காகாவின் ரைடிங் தி ஈஸ்ட் விண்ட் நாவலின் மொழி பெயர்ப்பை 1999ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு விமர்சனம் அதை ” போலித்தனமான ………. வசனங்கள் ” என குறிப்பிடுகிறது. காகாவின் வசனங்களை மொழிபெயர்பதில் இருக்கும் சிரமங்கள் நோவிக் மட்டுமே சந்தித்தவை அல்ல என்று பொருள் படுகிறது.
காகா நாவல் முழுவதும் சில அற்புதமான வார்த்தை சித்திரங்களை வரைந்து இருக்கிறார் : ” அடைக்கப்பட்ட நெரிசலான காரில் அடையாளம் இல்லாத ஆடை மற்றும் மாமிச பெருந்திரள் “, ” பால் வெள்ளை பிரகாசம் சாம்பல் உலகத்திற்கு இரவின் முடிவை அறிவிக்க நுழைந்தது”, ” கொட்டாவி விடும் காட்டிற்குள் கருமையை வழிந்தோடியது” போன்ற சித்திரங்கள் அவரின் சீர் இல்லாத எழுத்து பாணியின் சான்றுகள். மூல உரையில் உள்ள குறைகளை ஒரு மொழிபெயர்ப்பாளர் எவ்வளவு தூரம் உண்மையாக பிரதிபலிக்க முடியும் அல்லது நிராகரிக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. மோசமான வசனங்கள், மிகைபடுத்தப்பட்ட உணர்ச்சிபூர்வமான காட்சி அமைப்புகள் மற்றும் பாத்திர படைப்புகள் ஒரு தெளிவான விவரிப்பை சீர்குலைக்கிறது. இன்பினிட் ஜெஸ்ட் போன்ற நாவலின் எழுத்து பாணியை மார்ஷ்லாண்ட் கொண்டிருந்தாலும் ஒரு ஆயிரம் பக்கக்கங்கள் கொண்ட நாவலில் இது போன்ற கவன சிதறல்கள் வலுவான பகுதிகளை வலுவிழக்க செய்கிறது .
பலமுறை ஃபிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட காகா இருபதாம் நூற்றாண்டின் கிழக்கு மற்றும் மேற்கு கலாச்சார மோதல்களை ரைடிங் தி ஈஸ்ட் விண்ட் நாவலில் நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார். இந்த கரு மார்ஷ்லாண்ட்டிலும் கையாளப்படுகிறது. பிரெஞ்சு, ஜெர்மானிய , ரஷ்ய இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள், தத்துவவாதிகள், மது வகைகள் மற்றும் கிறிஸ்தவ மதத்தின் இறையியல் ஊகங்கள் ஆகியவை கதையில் பின்னப்பட்டிருக்கிறது.
மார்ஷ்லாண்ட் வெளியானதற்குப் பிறகு தன்னுடைய ஐம்பத்தியெட்டாவது வயதில் கத்தோலிக்க மதத்தை தழுவினார் காகா. அட்சுவோவின் மத சிந்தனைகள் காகாவின் உள்ள உரையாடல்களே. காகாவின் எழுத்துப் பாணியில் உள்ள பலவீனங்கள் என்று வாயின் சி. பூத்தின் வரிகளில் சொல்ல வேண்டுமென்றால் காகா “தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் துயரங்களை தன் படைப்புகளில் திணிக்கிறார்” .
மத்திய வயதை அடைந்த அட்சுவோவுக்கும் வாக்காகோ போன்ற ஒரு இளம் பெண்ணுக்கும் இடையில் நடக்கும் இன்பப்பரிமாற்றங்கள் காகவை ஒத்த வயதுடைய ஒரு ஆணின் கற்பனையாக இருக்குமோ என அச்சமூட்டுகிறது. மாணவ தீவிரவாதிகளை சித்தரிக்கும் பகுதிகளுக்கு தேவையான ஆராய்ச்சியோ, தனித்திறமையோ நாவலின் மற்ற சிறப்பான பகுதிகளை விட குறைவாகவே காணப்பட்டாலும், ஜப்பானின் போருக்குப் பிந்தைய காலங்களை தெரிந்து கொள்ள ஆர்வமுள்ள வாசகர்களுக்கு ஆங்கிலத்தில் இது ஒரு சிறந்த, ஒப்பில்லா படைப்பாகும்.
