இன்று எழுதுபவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் ரா. கிரிதரன். இவரது சிறுகதை தொகுப்புகள் சிறப்பான விமரிசன அங்கீகாரம் பெற்றது. பரவலான வாசிப்பு, நுண்ணுணர்வு, செவ்வியல் நாட்டம், நவீன பரிசோதனை முயற்சிகளில் ஈடுபாடு என்று ரா. கிரிதரனின் விழைவுகள் புதியன அறிதலும் அறிதலில் ஆழப்படுதலும் ஆகிய திசைகளில் விரிவன. ரா. கிரிதரனின் “துப்பாக்கி போல் சொகுசாய் பேனா“ என்ற விமரிசன கட்டுரைகளின் தொகுப்பும், “சாதகப்பறவையின் காத்திருப்பு“ என்ற புனைவு விமரிசன கட்டுரைகளின் தொகுப்பும் சென்ற ஆண்டு வெளி வந்தது.
கவித்துவ கற்பனையும் கருத்துருக்களைக் கையாளும் துணிவும் ரா. கிரிதரனின் மொழியமைப்புக்கு தனியுருவம் அளித்துள்ளன. அவரது புனைவு போலவே கட்டுரை நூல்களும் கனமான விமரிசன வரவேற்புக்கு உரியவை.
நூல் பட்டியல்
மொழியாக்கம்
- கர்நாடக சங்கீதம் ஒரு எளிய அறிமுகம் – மொழிபெயர்ப்பு,
சிறுகதை
- காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை
- கண்ணிநுண் உயிர்த்தாம்பு (அறிவியல் சிறுகதைகள்)
கட்டுரை
- காற்றோவியம் – இசை கட்டுரைகள்
- சாதகப்பறவையின் காத்திருப்பு
- துப்பாக்கிப் போல் சொகுசாய் கிடக்கிறது பேனா
அவரின் “தொலைந்த நதிகள்” – புத்தம்புதிய நாவலின் அத்தியாயத்தை கீழே வாசிக்கலாம்.
இந்த நாவல் யாவரும் பதிப்பகம் வெளியீடாக வர இருக்கிறது.
ஏழு வாரங்கள் பயிற்சி முடிந்தபின் நான்கு பொதி மூட்டைகளுடன் கோட்டை நகரான வெர்தொனுக்கு வந்து சேர்ந்தபோது வேலுச்சாமியின் கண்ணுக்குள் இருந்த கட்டியின் அரிப்பு அதிகரித்திருந்தது. போர்ட் லூயி துறைமுகத்திலிருந்து கிளம்பும்போது தங்கம் உருட்டித்தந்த தைல இலை சுண்ணாம்புக் களிம்பை பதினைந்து நாட்களாகத் தடவியிருந்தான். கட்டியின் வீக்கம் குறைந்ததேயன்றி எரிச்சல் கூடியிருந்தது. தன்னுடன் பயணம் செய்த மொரீஷியஸ்-பிரெஞ்சு பட்டாலியன் 12க்கானத் தலைவர் மேஜர் ழீன் ரவலுக்குத் தெரியாதவண்ணம் கப்பலில் சமாளித்துவிட்டான். வெர்தொனில் கேம்ப் மருத்துவமனையில் மருந்து கிடைத்துவிடும். நெட்டைக்கொக்கன் ழீனுக்குத் தெரியாமல் வைத்திருப்பதுதான் கஷ்டம்.
சரக்குக்கிடங்குத் தளத்திலிருந்து கயிற்றுக் கிராதியைப் பிடித்து ஏறுவது போல பாவனை செய்தான். பயிற்சியில் கிடந்த உடம்பை முறுக்கித் திருக வேண்டும் எனும் ஆவேசம் எழுந்தது. கடந்த மூன்று மாதங்களாக கடலில் அலைந்து புது தீவுகளுக்குச் சென்று பயிற்சி தன்னைப் புது ஆளாக மாற்றி இருந்ததை உணர்ந்தான். மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு ஊரில் சரக்கு கைமுதலுக்காக கப்பல் தரைதட்டும் என்றாலும் வேலுச்சாமிக்கு அப்போதும் வேலை இருக்கும். சிவப்பு மஞ்சள் நிற அந்தி மயங்கும் நேரத்தில் புது மணம் வீசும் நிலத்தில் கால் பட்டதும் கஃபே, கேளிக்கை விடுதி நோக்கி பட்டாலியன் சென்றுவிடும். பட்டாலியனுக்குத் தேவையான பொருட்களை நிரப்பிக்கொள்ளும் வேலையை எடுத்துக்கொண்டான். தங்கத்திடம் செய்துகொடுத்த சத்தியத்தை மீறாமலிருக்கும் வழிமுறை. உப்புகண்டக்கறி, ரொட்டி, வேப்பெண்ணெய், ஆலிவ் எண்ணெய், நதியாழங்களில் பல மாதங்கள் உறைதிடத்தில் வைத்திருந்த இறைச்சி உருண்டைகள் என வரிசையாகக் கணக்கு எழுதி பட்டாலியனின் மண்டியறையில் சேர்த்துவிடுவான். சில மணிநேரங்களில் வேலை முடிந்ததும் துறைமுக நகரத்தின் கல்பாவித்த தெருக்களைச் சுற்றிப்பார்ப்பான். பின்மாலை நேரம் தொடங்கி நள்ளிரவு அல்லது அதிகாலை வரை உலாவல் நீளும்.
களிம்பு தடவிய சிறு பஞ்சுக்குச்சியால் கண்ணின் ஓரங்களை நீவிக்கொண்டான். வலது கண் கலங்களாக இருந்தது. ரெண்டு வாரங்களுக்கு முன்னால் சூயஸ் துறைமுகத்தில் ரெண்டு நாட்கள் கழித்த சமயத்திலிருந்து இது தொடங்கியது. சூயஸ் சந்தை! அப்பப்பா, எகிப்திய சாம்ராஜ்ஜியம், ரோம நாட்டு தளவாடங்கள் எனப் படித்திருக்கிறான். சூயஸ் நகரத்தின் வெள்ளிக்கிழமை சந்தை வரலாற்றாசியர்களின் எந்த வர்ணனைகளுக்கும் பிடிபடாத ஒன்று. குட்டையான மக்னோலிய மரங்களும், ஆலிவ் தோட்டங்களுக்கு மத்தியில் துறைமுக நகரம் பத்மஜோதியாக ஒளிர்ந்தது. பெட்ரோல்மாக் விளக்கு போர்த்தியிருந்த மலை நள்ளிரவை வென்றெடுத்தது. குறுகலான சந்துகளில் கோதுமை நிற அழகிகள் வீரர்களுக்கு சிமிக்ஞை காட்டி அழைத்தனர். அதில் வெந்தைய நிறக் கண்களைக் கொண்டு நீள்கழுத்துப் பெண் ஒருத்தி வேலுச்சாமிக்குக் கைகாட்டினாள். “ஆவோ, சுக்ரன்” எனக் கைபிடித்து இழுக்காத குறையாக அழைப்பு விடுத்த பெண்களுக்கு மத்தியில் இவள் சற்று ஒதுங்கி இருந்தாள். எதிரே இருந்த கஃபேயில் நுழைந்த வீரர்களில் சிலர் கோப்பைகளோடு கும்பலாக நின்று வேடிக்கப்பார்த்தனர். மேஜர் ழீலின் முதல் நகர்வுக்காகக் காத்திருந்தனர்.
பெண்களுக்குப் பின்னே பதுங்கியிருந்த நீள்கழுத்து அழகி தனது ஈர்க்குச்சிக் கண்ணால் வேலுச்சாமி கண்ணைப் பார்த்திருந்தாள். “கர்ஸோன், கர்ஸோன்” யாரோ கத்துவது கேட்டதும் வேலுச்சாமி மீண்டான்.
“து வே மெ போர்ட் முவேஏ” (எத்தனை மணிக்குள் சரக்கை சேர்த்து முடிப்பாய்?)
“காய் மூட்டை பதினோறு மணிக்கும், அதிகாலை ரெண்டு மணிக்குள் கறி மூட்டைகளும் வந்துவிடும்” உள்ளே தோன்றிய எரிச்சலைக் காட்டாமல் சொன்னான். தன்னை விட இளையவர்கள் பட்டாலியனில் இருக்கும்போது வெள்ளையர்கள் வேலுச்சாமியை மட்டும் கர்ஸோன் எனக் கூப்பிடுவதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
பதிலேதும் சொல்லாது மேஜர் ழீன் எழுந்து நின்று தனது உடுப்பை சரிசெய்துகொண்டு எதிரே இருந்த சந்துக்குள் நுழைந்தார். குளவிக்கூட்டைக் கலைத்தது போல அடுத்த நொடியில் அந்த கஃபே காலியானது. சரசரவென வீரர்கள் அடுத்தடுத்துத் தெரிந்த சந்துகளுக்குள் ஓடினர். தன்னருகே கஃபே முதலாளி மட்டும் இருப்பதை உணர்ந்ததும் வேலுச்சாமி சகஜமானான். ஒரு உயர நாற்காலியில் ஏறி உட்கார்ந்து தங்கத்தின் கையைப் பிடிப்பதுபோல கோப்பையைத் தடவி நிதானமாகக் குடிக்கத் தொடங்கினான்.
**
வேலுச்சாமி லெப்டினண்டின் மாளிகைக்குள் வரும்போது இந்திய காலாட்படை வீரர்கள் பயிற்சி முடிந்து புல்வெளியில் கும்பல் கும்பலாகப் படுத்திருந்தனர். மேலுடுப்பைக் களைந்தவர்கள் வெயிலில் வியர்வை பளபளக்க ஓய்வெடுத்தனர். முகங்களில் பரவசம். உடலின் ஒவ்வொரு துடிப்பும் எதிரிக்காகக் காத்திருந்தன. போயர் போர்களில் சில சர்தார்கள், முஸல்மான்கள் இருவரோடும் வேலுச்சாமி பழகியிருந்தான்.
பிரெஞ்சு மிலிட்டரி முகாமின் இங்கிலாந்தின் காலனிப்பிரிவு அலுவலகம். லெப்டினண்ட் கமாண்டர் மேஜர் வில்லியன் வாலஸின் அறையில் புகுந்தான் வேலுச்சாமி. உள்ளே நுழைந்து அறையைச் சுற்றிப்பார்க்காது அகலமான மர மேசைக்குப் பின்னே உட்கார்ந்திருந்த மேஜருக்கு ராணுவ வணக்கத்தைத் தெரிவித்தான்.
அரைக்கண்ணால் வேலுச்சாமியின் வருகையைக் கவனித்திருந்த மேஜர் சில நொடிகளுக்குத் தலை தூக்காமல் புத்தகத்தில் மூழ்கியிருந்தார். ராணுவ அதிகாரிகளின் பயிற்சிக்கான தினக்குறிப்புகள் என்பதை வேலுச்சாமி அறிந்திருந்தான். யுத்தம் நடக்கும் பகுதி என்பதால் ஒரு முகாமுக்கு உண்டான குறைவான வசதியை எதிர்பார்த்திருந்தவன் அழகாகச் செதுக்கப்பட்டிருந்த ஓக் மர மேசை, அதற்குப் பின்னே ரோமன் காலச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அலமாரி, கண்ணாடிப்பேழைக்குள் வைக்கப்பட்டிருந்த உயர்தர மதுப்புட்டில்கள், நுண்ணிய வேலைப்பாடுடனான சீன பீங்கான்களை பார்வையின் ஒரு வீச்சில் கண்டு ஆச்சர்யப்பட்டிருந்தான்.
“என்ன வேணும்?”
“மேஜர் ழீன் மர்தன் பட்டாலியனின் பதினைந்தாவது மெட்ராஸ் பிரிவைச் சேர்ந்த காப்டன் வேலுச்சாமி பூங்காவனம் உங்கள் உத்தரவுக்காக பார்த்து வரச்சொன்னார் மேஜர்!”
“ஆங், பிரெஞ்சு தெரிந்த இந்தியன் தானே நீ? தூ காம்ப்ரன் பா? பள்ளிக்கூடம் பக்கமே போகாத மேஜர்னு என்னைச் சொல்லியிருப்பார்கள். எங்கள் நார்விச் கிராமத்தில் பிரெஞ்சு தெரிந்த ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன்…வேல்…”
“வேலுச்சாமி பூங்காவனம் மேஜர்”
“வேல்னு கூப்பிடறேன்…முதலில் குதிரை ஓட்டக் கற்றுக்கொள் என்ன?”
வேலுச்சாமி முகத்தில் சட்டென ஒரு கசப்புத் தோன்றி பின்னர் முறுவலித்தான்.
“தெரியும் மேஜர்”
“அட, இந்த பெங்காலிகளைப் போல நேற்று அம்மா காலிடுக்கிளிலிருந்து வந்துவிட்டு இன்று கப்பல் ஏறத்தொடங்கிய ஆளென்று நினைத்தேன். மொரீஷியஸ் சொந்த ஊர் தானே? தோட்டக்கூலி இல்லையா?”
“அதுவும்தான் மேஜர்” மீண்டும் முறுவலித்தான்.
“அதே இந்திய இளிப்பு. நூறு வருடங்களாக சொல்லில் அகப்படாததைசிரித்து சிரித்தே இட்டு நிரப்பும் கூட்டம். எங்கள் மேல் ஏளனமா, சிரிப்பா, கோபமா, என்னவென்றே பல சமயங்களில் தெரிவதில்லை”
வேலுச்சாமி எவ்விதமான உணர்ச்சியையும் காட்டாமல் நின்றிருந்தான்.
“பயம்தான் மேஜர்”
புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, “இல்லை இது வேறு. சரி, உனக்குக் கொடுக்கப்போகும் வேலை உடனடியான பலன்களைத் தராத ஒன்று. ஆனால் தொடர்ந்து செய்து என்னிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும் சரியா?”
“தெரியும் மேஜர்”
“உன்னை வரவழைக்கச்சொல்லுமுன் வேறு ஒரு வேலைக்காகத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அது உன் குணத்துக்குக் கீழானது “
“அப்படி ஒரு வேலையை இதுவரை நினைத்ததில்லை மேஜர்”
அதைப் பொருட்படுத்தாதவர் போலத் தொடர்ந்தார். “கொஞ்சம் சிக்கலான விஷயம். ஜெர்மன் அலுவலகம் சார்ந்தது. சூயிஸ் துறைமுகத்தில் பார்த்திருப்பாய். நமது எகிப்திய படைகளுக்குள் ஊடுருவ ஜெர்மன் உளவுத்துறை சில வருடங்களாகவே முயல்கிறது. கால்வாயைக் கைப்பற்றி நமது படையை எதிர்க்கும் எகிப்திய தீவிரவாதிகளைக் கையில் போட்டுக்கொண்டால் ஆஃப்கான் வழியாக இந்தியாவுக்குள் பெரும்படையுடன் நுழைந்துவிடலாம் எனக் கனவு காண்கிறார்கள்.”
“கேள்விப்பட்டிருக்கிறேன் மேஜர்”
“நமது உளவுத்துறை இதைத் தடுக்க முயலும்போதெல்லாம் உள்நாட்டுக்களவரங்களைத் தீவிரவாதிகள் கைக்கொள்கிறார்கள். இல்லையென்றால் நமது துலுக்க வீரர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ள தூண்டில் போடுகிறார்கள். ஏற்கனவே ரெண்டு லெப்டினண்ட்கள் அவர்களோடு இணைந்து ஜிஹாதிகளுக்கானப் பிரச்சாரத்தை நமது முகாம்களில் செய்கிறார்கள் எனத் தண்டனை கொடுத்திருக்கிறோம்.”
“அப்படியா? பெரிய விஷயமாக இருக்கிறதே. இதில் நான் என்ன செய்ய முடியும்?”
“உனக்கு பிரெஞ்சு மொழி தெரியுமல்லவா?”
“கவிதையே எழுதுவேன் மேஜர்”
“இந்த மண்ணில் ஒரு காதலியைப் பிடித்ததும் நானே உன்னிடம் எழுதிக்கேட்கிறேன். அதுவரை நீயே வைத்துக்கொள். இப்போது பிரெஞ்சுப் படையுடன் நமது வீரர்களும் ஒன்றாக முகாம்கள் அமைத்திருக்கும் நேரத்தில் உன் வேலை ஆரம்பம். லாகூர் பட்டாலியன் அடுத்த வாரம் மர்சயி வந்துவிடுவார்கள். சூயஸ் துறைமுகத்தில் வங்காள உளவுப்படை ஒன்று அமெரிக்காவிலிருந்து வந்து தங்கியிருக்கிறார்கள். அவர்கள் லாகூர் படை வீரர்களுடன், குறிப்பாக மேஜர் மாலிக் மும்தாஜ் முகமது கானிடம் சில நாட்கள் சந்தித்ததாகத் தகவல் உண்டு.”
மேஜர் கொடுத்த கோப்பை வாங்கிப்பார்த்தான் வேலுச்சாமி.
“மேஜர் மாலிக் கானை சந்தித்துப் பேச வேண்டுமா?”
“அவசரப்படாதே. மேஜர் கற்சிலை போன்றவர். இறுகிப்போன உடலை விட மனம் ரத்த ஓட்டம் அற்றது. ஆனால் அவரது திறமைக்கு இன்று நெப்போலியன் போல ஆகவேண்டியவர். தன்மானம், வீரம், நேர்மை எதிலும் அவருக்கு நிகரானவரே. ஆனால் இன்று ஆபத்தான பள்ளத்தில் காலை விட்டிருக்கிறார். தனது இனத்துக்கானப் போராட்டம் எனும் எண்ணமாக இருக்கலாம். அவரை சந்தித்துப் பேசும் முகாந்திரம் உன்னைப் போன்ற பிரெஞ்சுத் தமிழனுக்குக் கிடையாது. “
“சிக்கலான காரியம்தான். அவர்களது படை வீரர்கள் வெர்தானுக்கு வருவார்களா? நான் மர்சயி செல்வது உசிதமாக இருக்காதே?”
“வருவார்கள். ஆனால் படை வீரர்கள் அல்ல. ஜெர்மனிய உளவாளிகள் இருவர். தக்கானத்து ஆட்கள். உனக்கு உருது தெரியாதில்லையா?”
“காபி கேட்டால் பன்னீர் எடுத்து வருமளவு புரிந்துகொள்வேன். ஒரு வாரத்தில் பயின்றிடுவேன் மேஜர்.”
“வியக்க வைக்கிறாய் வேலு. அவர்கள் இருவரும் லண்டனில் படித்த பாரிஸ்டர்கள். பிரெஞ்சு கூடத் தெரிந்திருக்கலாம்.”
“அப்போ பேசி எதையும் சாதிக்க முடியாது மேஜர். போர்ட் லூயி வகை தந்திரம் ஒன்றுண்டு. சவத்துக்குப் பிறந்த பய கூட சிலிர்த்துத் துடிப்பான். அரையடி இடுப்பு பொடிந்துபோவது போல ஓர் உதை அதில் உண்டு. உடனடி விளைவுகள் வெளியே தெரியாது. ஒரு வாரத்தில் உடலைத் தாங்காது இடுப்பு.”
“நீ பலே கில்லாடிதான். ஆனால் உடனடி விளைவும் வேண்டாம். நீ அவர்களோடு ஒரு ஒப்பந்தத்தில் கலந்துகொள்ள வேண்டும். தந்திரம்தான். கைகாலுக்கு வேலையிலாது புத்தியால் ஆடும் ஆட்டம் ஒன்றுண்டு. உன்னுடன் பேசிய சில நொடிகளில் நீ அதற்குத்தகுதியானவன் என்பதை உணர்ந்துவிட்டேன். இதுதான் புது வேலை.”
எழுந்து நின்ற மேஜர் தனது கால்சட்டையிலிருந்து இரு தாள்களை எடுத்தார். எட்டாக மடித்திருந்த கடிதத்தை வேலுவிடம் நீட்டினார்.
“இதை புலன்விசாரணையாக நினைக்க வேண்டாம். உன் வேலைகளில் ஒன்று அவர்களுடன் நேரத்தைக் கழிப்பது. அவர்கள் கேட்கும் செயல்களைச் செய்வது. ஆனால் செய்து முடித்ததும் என்னை வந்து பார். கடிதம், குறிப்புகள் எதுவும் வேண்டாம்.”
“உத்தரவு மேஜர்.”
“உனது திறமையில் நம்பிக்கை வைத்துதான் மேஜர் ழீன் இந்த வேலையைக் கொடுக்கச் சொல்லியிருக்கார். கூலித்தொழிலாளிக்குப் பிறந்தவன் உன்னை இத்தனை நல்மதிப்பில் வைத்திருப்பது ஆச்சர்யமாக உள்ளது.”
“பட்டாலியனில் மேஜர் ழீனின் கடைக்கண் பார்வை கிடைக்க எங்களுக்குள் போட்டியே இருக்கும் மேஜர்.”
“கும்பலாக உட்கார்ந்து கிடப்பது, மாடு போல உழைப்பது தவிர இந்தியர்களால் புத்தியையும் உபயோகிக்க முடியும் எனக்காட்டு வீரனே”
“மன்னிக்கவும். நான் மொரீஷியஸ் நாட்டவன். பிரித்தானிய காலனியின் குடிமகன் என அழைக்கப்படுவதையே விரும்புபவன் மேஜர்.”
“வீரர் சிவாஜியின் வழிவந்தவன் என நம்பும்படியாக நடந்துகொள். அடுத்த சில வாரங்கள் உனக்கு உபயோகப்படும். ஜெர்மனி தாக்கும் முஸ்தீபுகளோடு ஹாம்பர்க்கில் தனது கப்பல்களைத் தயார்படுத்தி வருகிறது. ஆஸ்த்ரியா நாட்டு ராஜா தனது சுகபரிபாலனங்களை விடுத்து ஆயுதப்பயிற்சிக்கு தனது வீரர்களை முடுக்கிவிட்டதாக செய்தி வந்துள்ளது. அல்ஸாஸ் பகுதியை மீட்டாக வேண்டும் என பிரெஞ்சுப்படைகளும் ஆவேசம் கொண்டுள்ளன. பெரும்பலத்தோடு யூரோப்பில் பரவ இதைவிட நல்லவாய்ப்பு நமக்குக் கிடையாது என நாம் நினைக்கிறோம். வரிசையாக எத்தனை நம்பிக்கைகள் பார். ஆனால், கனவுகள் காணாத வீரனின் வாழ்வுதான் எத்தனை பயனற்றது?”
தனது வழக்கமான புன்னகையைக் காட்டினான் வேலுச்சாமி.
**
மார்கழி மாதத்தின் நடுப்பகுதி. வெர்தானின் மலையடிவார வயல்கள் சோளக்கதிர்கள் முற்றியிருந்தன. அறுவடை முடிந்திருந்த வயல்கள் திருவிழா முடிந்து காலியாயிருந்த திடல்கள் போல வெறிச்சோடியிருந்தன. காலை ஐந்து மணிக்கு வானம் செம்பிழம்புத் தீற்றலாகத் தெரிந்தது. முட்டிவரை இறுகக்கட்டிய பூட்ஸ் கால்களால் வயலைக் கிழித்தபடி வேலுச்சாமி நடந்தான். பூட்ஸ் காலடியில் நொறுங்கிய சருகுகளின் சத்தத்தில் சட் சட்டென சிறு பறவைக்கூட்டம் சோளக்கட்டிலிருந்துப் பறந்தன. பாத்தியோரம் மண்டிக்கிடந்த புதர்களிடையே எட்டிப்பார்த்த பெருச்சாளிகள் மீண்டும் ஆழத்துக்குள் ஒளிந்துகொண்டன.
வயலைக் கடந்த சில நிமிடங்களில் வானம் வேறொரு மஞ்சள் நிறத்துக்குத் தாவியிருந்ததை வேலுச்சாமி கவனித்தான். நீலவானக்கூரையின் கீழே தனது இருபத்தைந்து வருடங்களைக் கழித்தவனுக்கு வானத்தின் விசித்திர வண்ணங்கள் ஆச்சர்யத்தைத் தந்தன. மொர்ரீஸியஸிலிருந்து வந்த ஆறு வாரங்களில் தினமும் அதிகாலை கப்பலில் மேல் தளத்துக்கு விரைந்து மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பான். மேற்கே நகரும் ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்கள் பின்னுக்குத் தள்ளி வைப்பதுடன் கடிகாரத்தைத் தூர வைத்துவிடுவான். சூரியனின் திசை நோக்கி நேரத்தைக் கணிப்பதை குழந்தையின் குதூகலத்தோடு செய்துகாட்டுவான். ஆகாசத்தைப் பார்க்கும் ஆர்வமில்லாதவன் கப்பல் பயணத்தில் திசை எட்டும் பார்க்கத் தொடங்கினான்.
போர்ட் லூயியைச் சுற்றியிருந்த மலைப்பகுதியில் பயிற்சிக்காக கருக்கிருட்டில் அலைந்திருக்கிறான். மொர்ரீஸியஸின் செம்மண் பாறைகளில் பயிற்சி செய்வது இங்கிலாந்து ராணுவத்துக்கும் சிரமமானக் காரியம். வேலுச்சாமி சிறுவயதிலிருந்து விளையாடிய மண். செம்மண் பாறைகளைத் தோண்டி கொத்தளங்கள் அமைத்து, துறைமுகத்திலிருந்து மண்ணும் கல்லும் அள்ளி அனுப்புவதும் வேலுச்சாமியின் முதல் வேலை. ஓடுற பாம்பை விரட்டி மிதிக்கிற வயசு. ஒரு மாதமாகும் எனக் கணக்கு போட்டிருந்த கொத்தளங்களை பதினைந்தே நாட்களில் சீரமைத்தான். மேஜர் ழீனின் மேற்பார்வையில் நடந்தாலும் அவர் பெரிதாக வேலுச்சாமியைக் கவனிக்கவில்லை.
அடுத்து தமிழர் பகுதிக்கு மத்தியில் பட்டாலியன் அமைக்கும் பொறுப்பு வேலுச்சாமிக்கு வந்தது. கெய்ரோ, துருக்கி பகுதிகளிலிருந்து எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பயிற்சிக்காக போர்ட் லூயி வந்திறங்கினர். அது ஒரு தை மாதத் தொடக்கம். உக்கிரமான வெயில் ஆரம்பம். பயிற்சிக்காக வந்திருந்தனர் எனச் சொல்லப்பட்டாலும் முதல் சில வாரங்கள் துறைமுகத்தைத் தாண்டி வெளியே வராது தற்காலிக முகாம் அமைத்துத் தங்கியிருந்தனர். தமிழர்களுக்கு மிகுந்த ஆவல். கரும்புத்தோட்டத்தின் அறுவடை முடிந்த சமயமாததால் முகாம் அமைக்க மலைப்பகுதிக்கு வரும் ராணுவம் தரும் வசதிகளில் அவர்களுக்கும் கொஞ்சம் பொசியும். வாரக்கணக்கில் வெளியே வராததைப் பார்த்து ஊரெங்கும் பரவலான செய்தி.
கரும்புத்தோட்டத்தின் கணக்கர் பழனியப்பா வேலுச்சாமியிடம் திட்டவட்டமாகச் சொன்னார். “பெரியவக சொல்றது நடக்காமப் போகுமா. துலுக்க பிரதேசம் முழுக்க சீக்கு பிடிச்சிருக்காம்ல. நூறு இருநூறு அறியாப் புள்ளைகளை ஒரு எடத்துல அடைச்சி பயிற்சி கொடுத்தா வியாதி வராம என்ன செய்யும்? பொம்பளை தொடுப்புக்கு வசதி இல்லை. ஊர்ல பதினாறு வயசுல குடி கூத்தியான்னு பழகின பயலுவ. ஆடின ஆட்டம் சும்மா இருக்க விடுதா? சீப்பட்ட பயலுவலெல்லாம் வண்டி ஏத்தி இங்க அனுப்பிட்டாவ. லா பான் வீதி முழுக்க செய்தி பரவி அந்த பொம்பளைங்க எல்லாம் அடைஞ்சே கிடக்கறாங்க. கிராக்கி பிடிக்கப்போயி சீக்கு வாங்கிக்காதீவன்னு கட் அண்ட் ரைட்டா செய்தி அனுப்பிட்டானுவ.”
உருளைக்கிழங்குக் கிடங்கைக் கடக்கும்போது பழனியப்பாவை நினைத்து சிரித்துக்கொண்டான் வேலுச்சாமி. தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாத மக்கள். கரும்புத்தோட்டம், கணக்கர், விளைச்சல், கங்காணி என சிறு உலகில் வாழ்வைத் தொலைக்கும் கூட்டம். பரிதாபமானவர்கள்.
மலைப்பகுதியிலிருந்து கிழக்குமுகமாக நூறு மைலில் இருந்த லெஸ்காலியே கரும்புத் தோட்டத்தை தாண்டி ரெண்டு மைலில் இருந்த காட்டுப்பகுதியில் எகிப்திலிருந்து வந்த பட்டாலியன் தங்கி பயிற்சி பெறுவதற்கான ஏற்பாடு நடந்துவந்தது. வேலுச்சாமி தலைமை. அங்கிருந்து அவனது வீடு அதிக தூரம் அல்ல. திரெளபதியம்மன் ஆலயம் தாண்டியதும் தமிழர் குடி நிலம். அருகே சக்கரை ஆலை. அம்மன் திருவிழா முடிந்ததும் தோட்டத்தைத் தாண்டி செல்லும் பட்டாலியன் காலி மனையில் முகாம் அமைக்கும் திட்டம்.
வேகமாகக் கடந்து செல்லக்கூடிய பாதையில் ஆளுயரக் கற்களைப்போட்டுத் தடுத்திருப்பதைப் பார்த்தான். கற்களுக்குப் பின்னால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளிகள், திராட்சைத் தோட்டங்கள். அதைக் கடந்த சென்று மலையடிவாரக் கிராமத்தை அடைய முடியும். தூரத்தில் சில பிரெஞ்சுக் குடியானவர்கள் புதுக்கூரை வேய்ந்து கொண்டிருந்தார்கள். குதிரைக்களயமாக இருக்க வேண்டும்.
வேலுச்சாமி போர்ட் லூயி துறைமுக சுங்க அலுவலகத்துக்கு வந்தபோது வெயில் மலையுச்சியை அடைந்திருந்தது. குப்பை அம்பாரமாகக் குவிந்த கிடந்த படுகை. நான்கு பெரிய கப்பல்கள் முழுவதுமாக கடலை மறைந்திருந்தன. ஒன்று கிளம்பத் தயாராக இருந்தது. சிறிய ரயில் தண்டவாளம் மீது ஏற்றிவைத்த பெட்டிகள் லெ லூயி கொள்முதல் நிலையம் செய்ய தயாராக இருந்தன.
வெயிலின் உக்கிரத்தை மீறி ஆப்பிரிக்க அடிமைகள் க்ரெயோலில் பாடியபடி சரக்கு மூட்டைகளை அகலமான குதிரை வண்டிகளில் ஏற்றிக்கொண்டிருந்தனர். மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான வார்த்தைகள். ஒரேவிதமான ஜதியில் அவசரமில்லாமல் பாடினர். தூரத்திலிருந்து பார்க்கும்போது ஏதோ ஒரு லயத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் போல அவர்களது அசைவுகள் தெரிந்தன. இடுப்புக்கு மேல் யாரும் உடுத்தவில்லை. முழுவதுமாக வியர்வையில் குளித்திருந்தனர். வேலுச்சாமி ஆப்பிரிக்க அடிமைகளை சிறு வயதிலிருந்து பார்த்து வருகிறான். அவர்களைப் போல் உடல் வருத்த உழைப்பவர்கள் இல்லை; கடும் கோபத்தோடு அழிப்பவர்களும் இல்லை. தங்கள் சொந்த நாடுகளில் இல்லாத சுதந்திரம் கிடைப்பதாக நினைப்பவர்கள்; போலவே கொச்சின் கூலிகள், அல்ஜீரிய ஸ்வாவ், மொராக்கோ ஸ்பாஹி இன மக்களும் தங்களை பிரெஞ்சுப் பிரஜைகளாக உணர்ந்து வாழ்ந்தவர்கள் – வெள்ளையன் இந்த சிறு தீவைக் கைக்கொள்ளும் வரை.
கப்பலில் மேல் தளத்திலிருந்து பணிகளைக் கண்காணித்த வெள்ளையக் காரியஸ்தர், க்ரையோல் மொழியில் வேகமாகக் கட்டளைகளை கத்திக்கொண்டிருந்தார். காரியஸ்தரின் கட்டளைக்கு ஏற்றார்போல சாட்டையை வேகமாகச் சொடக்கிக்கொண்டிருந்தான் கறுப்பர்களுக்கு மத்தியில் நின்றிருந்த இந்தியன்.
கைக்கொள்ளாது கோப்புகளோடு சரக்கு கொள்முதல் தளத்துக்குள் நுழைந்த வேலுச்சாமியைப் பார்த்து இந்தியன் சாட்டையைத் தாழ்த்தி தனது முதுகுக்குப் பின்னால் மறைக்கப்பார்த்தான்.
“கொமான்…கேல் த்ரவாய் ஏத் இல்?”
கறுப்பர்களிடமிருந்து சற்று விலகி வாயில் பக்கம் வந்த இந்தியன் வேலுச்சாமியின் உடுப்பைப் பார்த்து குனிந்து சலாம் போட்டான்.
“சாட்டையை உபயோகிப்பது சட்டப்படி குற்றம் என யாரும் சொல்லவில்லையா? உன் பேர் என்ன?”
“மாலைக்குள் போர்ட் க்ளியரன்ஸ் ஃபினி ஆகிறது” வேலுச்சாமி முகத்தைப் பார்த்ததும் தமிழுக்கு மாறினான்.
இந்தியனைத் தாண்டி பின்னால் நின்றிருந்த கறுப்பர்களைப் பார்த்தான். வேலையை நிறுத்தியிருந்தார்கள். அதில் ஒருவன் எங்கோ பார்த்தவன் போலிருந்தான். அவனது சிவப்புக் கண்கள் வேலுச்சாமியை ஆழமாகப் பார்த்தது. எவ்விதமான சஞ்சலமும் இல்லாது இந்தியர்களையும், கறுப்பர்களையும் பார்க்கக் கற்றுக்கொண்டதே தனது முன்னேற்றத்துக்குக் காரணம் என்பதை நன்கு உணர்ந்தவன் போல மேல் தளத்தில் நின்றிருந்த காரியஸ்தனிடம் கையை ஆட்டினான். ஏதோ சொல்ல வந்த இந்தியன் பக்கம் திரும்பாமலேயே சுங்க அலுவலகத்தை நோக்கித் திரும்பினான்.
அடுத்த ஒருமணி நேரத்தில் கப்பலில் வேலை செய்த கறுப்பர்களோடு மேலும் பல அடிமைகள் இணைந்துகொண்டனர். அவர்களில் பலர் தாழ்ந்த தலையும் நிலையில்லாத விழிகளுமாக நின்றிருந்தனர். வேலுச்சாமி சுங்க அதிகாரியோடு துறைமுகச் சோதனை வாசலுக்கு வந்தபோது மோட்டார் பொருந்திய ஐந்து பெரிய வாகனங்கள் சரக்குகளோடு காத்திருந்தன. ஊரை காலி செய்து கிளம்பும் கூட்டம் போல ஒவ்வொன்றிலும் பட்டாலியன் வீரர்கள் சொந்த மூட்டைகளோடு அடைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.
ரெண்டு குதிரை பூட்டியிருந்த சாரட்டில் உட்கார்ந்திருந்த எகிப்தியன் அருகே வேலுச்சாமி உட்கார்ந்தான்.
துறைமுகத்தில் சிறு கூட்டம் கூடியிருந்தது. உயரமான சாரட்டிலிருந்து பலவிதமான முகங்களை வேலுச்சாமி பார்த்தான். மொரீஷியஸ் தீவை சொந்த நிலமாகக் வரித்துக்கொண்ட ஹிந்துக்கள், க்றயோல் தீவிலிருந்து வந்த ஆப்பிரிக்கர்கள், மஞ்சள் முக சீனர்கள் என கலவையானக் கூட்டம். ரஸ்தா விலகியதும் மண் திட்டில் அகலமானக் கூடைகளில் மீன், சக்கரைக்கட்டிகள், வெள்ளப்பாகு தோய்த்த மல்லாட்டை வியாபாரிகள் கடை போட்டிருந்தனர். வியாபாரம் செய்ய வந்தவர்கள் சிறு குன்றுபோல வரிசையாகச் சென்ற ராணுவ மோட்டார் வாகனங்களை வேடிக்கைப் பார்த்தனர்.
வேலுச்சாமிக்கு பெருமை கொள்ளவில்லை. தனக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் கூட்டத்தில் இருக்கிறார்களா எனப் பார்த்தான். முன்னே செல்லும் மோட்டார் வண்டிகள் சற்று மெதுவாகச் செல்லக்கூடாதா எனவும் நினைத்தான். ரஸ்தாவில் இறங்கி வண்டி வேகம் எடுத்ததும் முன்வரிசையில் வளைவாயிருந்த கைப்பிடியைப் பிடித்து நிதானத்துக்கு வந்ததும் இப்படியான சாரட்டில் உட்கார்ந்து எத்தனை மாதங்களாகிவிட்டன என ஆச்சர்யப்பட்டான். வருஷங்கள். கடற்கரைப் பகுதி தாண்டி மண் பாதையின் குண்டுங்குழியுமான ரஸ்தாவில் வண்டி நுழைந்தது. இருபுறமும் கருவேலம், புன்னை மரங்களின் வரிசை. வண்டிகளின் வரிசையைப் பார்த்து பாதைவிலகி ஓரங்களுக்குள் விரைந்தவர்கள் தலைச் சுமையை இறக்கிவைத்து வேடிக்கப்பார்த்தனர். மேலாடை இல்லாதிருந்த க்றோயல் பெண்கள் அவசரவசரமாக வீட்டுக்குள்ளே ஓடினர்.
காமாட்சி அம்மன் கோயிலை அடைந்தபோது குதிரைகளின் வியர்வை சவுரியை நனைத்திருந்தது. கிறேயோல் இளைஞர் பட்டாளம் ஒன்று செய்தி கேட்டு கோயிலுக்கு அருகே இருந்த செம்மண் திடலில் விரைந்திருந்தனர். தூரத்தில் தமிழர் கூட்டத்தினரின் அமளிதுமளி. ஊரே பீதி கண்டுவிட்டது. ஹிந்துக்கள் ஒருவருக்கு ஒருவர் ஆக்ரோஷமாகக் கத்திக்கொண்டு நின்றிருந்தனர்.
அதற்கு முந்தினம் சென்ற சேர்ந்த பட்டாலியன் குழுக் குழுவாகப் பிரிந்து கொண்டு நெருப்பு மூட்டி இறைச்சியை வாட்டத் தொடங்கியதிருந்து பிரச்சனை தொடங்கியிருக்கிறது. ஆடித்திங்கள் தோறும் காமாட்சியம்மனுக்கு கூழ் காய்ச்சி தேரோடும் திருவிழா நடக்கும் திடல் அது. சிதறிய குண்டாமணியை குனிந்து எடுத்துவிடாதபடி கூட்டம் வரும்.
வேலுச்சாமி ஹிந்துக்களின் கத்தல்களைத் தாண்டி பட்டாலியன் திடலை அடைந்தபோது அங்கு இரவு முழுவதும் நடந்த கேளிக்கை கடை பரப்பியிருந்தது. முந்தினம் பகல் கந்தகபூமியாக கொதித்திருந்தாலும் இரவு மழை பெய்து குளிர்வித்திருந்தது. திடலில் ஆங்காங்கே இறைச்சியை வாட்டிய கரித்துண்டுகள் குவிந்து கிடந்தன. கூடை நிறைய வீரர்கள் சாப்பிட்ட இலைகள், அழுகிய மீன்கள், மாமிசத்தில் தோய்த்திருந்த ரொட்டி. குதிரைகளின் கனைப்பு சத்தத்தைத் தாண்டி எதுவும் கேட்கவில்லை. வீரர்களுக்கு இன்னும் விடியவில்லை. விழித்திருந்த சிலர் கருவிகளைச் செப்பனிட்டுக்கொண்டிருந்தனர்.
வேலுச்சாமிக்கு இது புதிதல்ல. ஆனாலும் சாப்பிட்ட மிச்சங்களைக் கூட சரியாகத் தூக்கி எறியாமல் மிருகங்கள் போலக் கிடக்கும் கூட்டத்தை எரிச்சலுடன் பார்த்தான். மேஜர் ழீன் இங்கு இருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது என்ற எண்ணம் அவனுக்கு வராமல் இல்லை.
மூத்த சிவாச்சாரியர் பதமநாபன் திடலை நெருங்கி வந்து ஒதுங்கி நின்றார். எண்பது வயதுக்கு மேலான உடல் என அவரது கழுத்து ஆடுசதையைப் பார்த்தால்தான் தெரியும். தேஸஸான முகம். கழுத்தில் செம்பழுப்பு நிற ருட்திராட்சிர மாலை. அரையில் ஒரு துண்டு, கீழே ஒரு மஞ்சள்நிற வேட்டி. சொந்தமானப் பொருள் எல்லாமே அவர் எப்போதும் அணிந்திருப்பார் என வேடிக்கைக் கதை உண்டு. அவரை கடைசியாக எப்போது பார்த்தோம் என்பதே நினைப்பில்லையே என வேலுச்சாமி யோசித்தான். சுப்ரமணியர் கோவிலில்தான் எப்போதும் இருப்பார்.
வாசலில் வந்து நின்ற சிவாச்சாரியார் பொறுமையின்றி எங்கோ திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நின்றிருந்தார். அங்கு வீதியை அடைத்துக்கொண்டு மற்றொரு ஹிந்துக்கள் கூட்டம் நின்றிருந்தது
“என்ன சாமி? சேர வந்திருக்கீவோ?”
கிண்டலை ரசிக்கும் மனநிலையில் அவர் இன்று இல்லை.
“வேலு, சாமிக்குறை நடந்துபோச்சு. ஜனமெல்லாம் ரொம்ப கோபத்தில இருக்கிறாவோ. நானும் முப்பது வருஷமா இங்க பார்த்தவரை கங்காணியோ, துரை ராஜாவோ வந்தாகூட இந்தத் திடல்லே தங்கியிருந்து காலைல தோட்டத்துல பெத்தி தெழனே சாப்பிட்டுதானே பழக்கம்”
வேலுச்சாமி எதுவும் சொல்லாமல் அவரைப் பார்த்து நின்றான். இது போன்ற பிராதுகள் அவன் சின்ன வயதிலிருந்து பார்த்து வருகிறான்.
“இன்னும் பல வீரர்கள் வந்திருக்காங்க சாமி, மத்தியானத்துக்குள்ள சுத்தப்படுத்திடச் சொல்றேன். நீங்க இங்கெல்லாம் வந்து குறைப்படாதீங்கோ”
“இது எனக்குச் சரியாப்படவில்லை வேலு. எகிப்திய துலுக்கக் கூட்டம் நேத்து ராத்திரி கரும்புத்தோட்டத்தில கன்னுக்குட்டியைத் தூக்கி இங்க வந்திருக்காங்க. ராவெல்லாம் அதைக் கட்டி வெச்சி…அது கத்தின கத்தல். அப்பப்பா. நள்ளிரவு தாண்டித்தான் ஒரேடியா அடங்கிச்சு. நம்ம பூபாளன் என்னென்னு கேட்டதுக்கு கண்ணத்துல அறைஞ்சிருக்காங்க.”
“எல்லாம் சாராயம் செய்யிற வேலை சாமி. உங்களுக்குத் தெரியாததா? இன்னிக்கு மேஜர் ழீனும் இங்க வந்திடுவார். வாலச்சுருட்டிக் கிடப்பாவோ.”
“காட்டுப்பன்னிங்க ரெண்டப்பிடிச்சாந்து தட்டி கட்டி குச்சியால குத்தியிருக்காவோ. அது ஒருபக்கம் கூச்சல். சாமியேற்றத் திட்டுல மூணு பன்னிங்கள கட்டிவெச்சு வயித்தக் கிழிச்சிவுட்டாவோ. காலைல வரை ஒரே அலறல்.”
“சாமியேற்றத் திட்டுலியா? மெசாண்ட்…நெஸ் தெ போர்க்ஸ்…” வேலுச்சாமி நெற்றியில் கைவைத்துத் திட்டினான்.
“இவர்களது ஆட்டத்தை பார்க்கமுடியலை வேலு. ஆடுத்தமாசம் ஆடிப்பூசத் தேர்த்திருவிழாவ இந்தத் திடல்ல நடத்த முடியாது”
“இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்கங்க சாமி. எப்படி இருந்ததோ அப்படியே செய்திடலாம்.”
வேலு கசப்புடன் பேசினான்.
“மாபாவிங்க. கோயில் நிலத்துல இப்படியா செய்யறது? நம்மாட்களெல்லாம் எப்படி வாழறது சொல்லு வேலு? “
போர்ட் லூயிக்கு அருகில் இருந்தும் இன்னும் கிறிஸ்தவ மயமாக ஆகாமல் இருப்பது சுப்ரமணியக் கோயில்புறம், திரெளபதி அம்மன் கோயில் சுற்றியிருந்த கரும்புத்தோட்ட ஹிந்துச்சேரி.
வேலுசாமி சாமியேற்றத் திட்டைத் திரும்பிப் பார்த்தான். புராதனமானக் கல்மேடை. மண்ணாலான அடித்தளம். அதுமீது கல்தூண்கள். நூறு வருடங்களுக்கு முன்னால் பாகூர், வில்லியனூரிலிருந்து வந்த புதுச்சேரி ஜனங்கள் தோட்டக்கூலிகளாகத் தங்கியிருந்த பகுதி. பிரெஞ்சு பெற்றன் துரையின் அரசு முரசு திடலில் கட்டப்பட்டிருக்கும். புல் அடர்ந்து பாறைக்கல்லாக இருந்த இடம். கூலிவேலை செய்த தமிழர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாறை மண்ணைக் கையால் தோண்டி புது நிலமாக மாற்றவே நாற்பது வருடங்கள் ஆனது. ஒரு தலைமுறையினர் நூற்றுக்கணக்கானவரின் உழைப்பு எட்டடிக்கு எட்டடி சாமியேற்றத்திட்டாக எழும்பியது.
சுமையை இறக்கி வைத்ததில் பத்மநாப சாமி கொஞ்சம் அமைதியானார்.
வேலுச்சாமி திடலைவிட்டு விலகி நடக்கத் தொடங்கினான். பத்மநாபசாமியின் நடை சற்று தளர்ந்திருந்தாலும் அவனது வேகத்துக்கு ஈடு கொடுத்தார். பிரம்மாண்டமான ஆலமரத்தின் கீழே தமிழர்கள் திரண்டிருந்தனர். ஆலமரமே ஒரு சிறு தோப்பு போல இருந்தது. மெல்ல வீசிய காற்றில் விழுதுகள் அசைந்தாடின. அதன் நிழலை முதலில் அடைந்தான். சூழலின் வெம்மையை மீறி சட்டென குளுமை சூழ்ந்தது. முரட்டு நரம்புகள் போல தடிமனான வேர்ப்பகுதிகள் நிலத்தின் நீளத்தையும் ஆழத்தையும் அளந்தன. விருட்சம். ஆலமரம் தொடக்கமாகப் அடர்த்தியானக் கரும்புத்தோட்டம் பின்னாம் இருமையைத் தக்கவைத்திருந்தது.
கூட்டத்தினரின் சத்தம் குறைந்தது. சாமியேற்றத் திட்டின் தீட்டை உடைத்துவிடும் சக்தி கொண்டவனின் வருகை போல வேலுச்சாமியை அவர்கள் பார்த்தனர். வேர்கள் தடுக்கிவிடாதபடி தாண்டி சென்று அவர்களுடன் நின்றுகொண்டான் வேலுச்சாமி. அங்கிருந்து பார்த்தபோது சாமியேற்றத் திட்டு பிரம்மாண்டமாக நின்றிருந்தது.
