செம்பருத்தி புதினத்தின் இருத்தலியல் கூறுகள்
தி ஜானகிராமனின் எல்லாப் புதினங்களிலும் மூன்று முக்கிய இழைகள் காணப்படுகின்றன, விதிவிலக்கான செம்பருத்தி தவிர. இந்தக் கட்டுரை அந்த மூன்று இழைகளையும், செம்பருத்தி ஏன் அவற்றிலிருந்து மாறுபடுகிறது என்பதைப் பற்றியும் ஆராய்கிறது. இப்புதினங்களின் கதை சுருக்கமாக கொடுக்கப்பட்டு, தி ஜாவின் பார்வையில் இந்த முரண் எப்படிக் கையாளப் படுகிறது என்பதையும் கொடுக்கப்பட்டுள்ளது.
மூன்று இழைகள்:
அ. மைய முரண்பாடு: தி ஜானகிராமனின் எல்லாப் புதினங்களிலும் ஒரு மைய முரண்பாட்டைக் காணலாம்.
ஆ. அந்த முரண்பாடு, சமூகம் ஒழுக்கமற்றதாகக் கருதும் காதலை அடிப்படையாகக் கொண்டது.
இந்தக் காதல் கைக்கிளை (ஒருதலைக் காதல்) ஆகவோ அல்லது பெருந்திணை (பொருந்தாக் காமம்) ஆகவோ இருக்கலாம்; சில நேரங்களில் இரண்டும் கலந்ததாகவும் இருக்கும்.
இ. முரணின் தீர்வு புதினத்தின் நாயகன் அல்லது நாயகி விலகிச் செல்வதன் மூலமோ, நாயகன் / நாயகியிடம் இருந்து மற்ற பாத்திரங்கள் விலகிச் செல்வதன் மூலமோ தீரக்கப்படுகிறது.
இந்த விலகல் சில சமயங்களில் அந்தக் கதாபாத்திரத்தின் மரணமாகவோ அல்லது கதாபாத்திரத்தின் / கதாபாத்திரங்களின் இடப் பெயர்ச்சியாகவோ அமைகிறது
இந்த மூன்று முக்கியக் கருத்துக்களை மனதில் வைத்து, தி ஜானகிராமனின் ஒவ்வொரு புதினத்திலும் இந்த வடிவங்கள் (motifs) எப்படி இடம் பெறுகின்றன என்பது அடுத்து வருகிறது. அதே சமயம், தி ஜாவின் புதினங்களில் உள்ள பொதுமைகள் ஏன் தவறாமல் ஒவ்வொரு புதினத்திலும் இடம் பெறுகின்றன என்ற கேள்வி எழுகிறது. இதற்கான விடையை தி ஜானகிராமன் தான் சொல்லியிருக்க முடியும்!
1. அமிர்தம்
கதைச் சுருக்கம்:
இது தி ஜாவின் முதல் நாவல். இது 1944-ல் கிராம ஊழியன் இதழில் தொடராக வெளிவந்து, 1948-ல் நூலாக வெளியானது.
நாவலின் மையப் பாத்திரம் அமிர்தம். அவள் தேவதாசி மரபில் பிறந்த பெண். அவளுடைய தாய் குசலம், அந்த மரபின் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்த விரும்புபவர். அமிர்தத்திற்கு தாயின் வாழ்க்கையைத் தொடரவோ, பணக்கார ஆணின் ஆதரவில் வாழவோ விருப்பமில்லை. அமிர்தத்தின் ஆசை மிகவும் எளிமையானது. சாதாரணப் பெண்ணைப் போல காதலித்து, திருமணம் செய்து, மரியாதையுடன் குடும்ப வாழ்க்கை நடத்த வேண்டும். இதற்கு எதிராக அவளுடைய தாய், அந்தக் காலச் சமூக யதார்த்தத்தை முன்வைக்கிறாள். தாசி மரபிலிருந்து வெளியேறி திருமணம் செய்து கொள்வது எளிதல்ல; பொருளாதாரப் பாதுகாப்பும் சமூக அங்கீகாரமும் கிடைக்காது என்று அவள் நினைக்கிறாள்.
பணக்காரரும் வயதானவருமான சபேச முதலியார் அமிர்தத்தின் மீது ஆசைப்படுகிறார். முதலியார் அவளை திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு செல்லத் தயாராக இருந்தாலும், சமூக அந்தஸ்து, குடும்ப கௌரவம், சாதி ஆகியவை அவருடைய முடிவை கட்டுப்படுத்துகின்றன. ஆனால் அமிர்தம் அவரை ஏற்கவில்லை.
பின்னர் அவள் நடேசனை சந்திக்கிறாள். அவனிடம் அவளுக்கு காதல் உருவாகிறது. நடேசன் அவளுடைய பின்னணி தெரியாமல் அவளை ஒரு பெண்ணாகவே பார்க்கிறான். நடேசன், சபேச முதலியாரின் மகன் என்பது இருவருக்குமே முதலில் தெரியாது.
அந்தக் காதல் நிறைவேறுவதில்லை. முடிவில், அமிர்தம் நடேசனிடம் இருந்து விலகி அவளது ஊரை விட்டே சென்று விடுகிறாள். நடேசன், அமிர்தம் மற்றும் சபேச முதலியாரிடமிருந்து விலகி ரங்கூன் செல்கிறான்.
நாம் பார்த்த மூன்று பொதுத் தன்மைகள் இந்தப் புதினத்தில் எப்படி அமைகின்றன?
அ. நடேசனும் அவனது தந்தை சபேச முதலியாரும் அமிர்தம் என்ற ஒரே பெண்ணை நேசிப்பதே மைய முரண்பாடு.
ஆ. சபேச முதலியாரின் காதல், அவரது வயதின் காரணமாக பெருந்திணை. மேலும் அமிர்தம் அவரது காதலை ஏற்றுக் கொள்ளாததால் அது கைக்கிளையும் ஆகிறது.
இ. அமிர்தம் இருவரிடமிருந்தும் விலகிச் செல்கிறாள். நடேசன் தனது தந்தையை விட்டு விலகி ரங்கூனுக்குப் புறப்படுகிறான்.
2. மலர் மஞ்சம்
கதைச் சுருக்கம்:
ராமையாவுக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. அவருடைய முதல் மூன்று மனைவிகளும் இறந்து விடுகிறார்கள். குழந்தையும் இல்லை. நான்காவது மனைவி அகிலாண்டம் ஒரு பெண் குழந்தையைப் பெற்று விட்டு இறக்கிறார். அந்தக் குழந்தை தான் பாலி. அகிலாண்டம் இறப்பதற்கு முன், பாலியை தங்கராஜனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ராமையாவிடம் கூறுகிறாள். ராமையா அதை ஒரு சங்கல்பமாக ஏற்றுக்கொள்கிறார்.
ராமையாவின் நண்பரும் உறவுச் சூழலில் இருப்பவருமான வையன்னா தங்கம்மாளிடம் தவறான உறவு வைத்துக் கொண்டு, அவளுக்கு சொத்து தருவதாகக் கூறி பின்னர் ஏமாற்றுகிறார். தங்கம்மாள் வழக்குத் தொடர்கிறாள். அந்த வழக்கில் ராமையா உண்மையைச் சொல்லி வையன்னாவுக்கு எதிராக சாட்சி சொல்கிறார். இதனால் வையன்னாவுக்கு ராமையா மீது கடும் பகை ஏற்படுகிறது. அவன் ராமையாவின் தோட்டத்தையும் சொத்தையும் சேதப்படுத்துகிறான். இந்தப் பகை தான் பின்னர் நாவலின் மிகப் பெரிய திருப்பத்திற்குக் காரணமாகிறது.
வையன்னாவின் பகையால் மனம் வருந்தும் ராமையா பாலியை அழைத்துக் கொண்டு தஞ்சாவூர் செல்கிறார். அங்கு பாலிக்கு முறையான கல்வி கிடைக்கிறது. அதே நேரத்தில் அவளுக்கு நாட்டியம் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. அவளுடைய நாட்டிய குரு பெரியசாமி. ராமையாவின் நண்பர்களான வக்கீல் நாகேஸ்வரய்யர் மற்றும் கோணவாய் நாயக்கர் ஆகியோரும் பாலியின் வாழ்க்கையில் முக்கியமானவர்களாகிறார்கள். நாகேஸ்வரய்யர் மகன் ராஜா பாலியுடன் நெருங்கிப் பழகுகிறான்.
பாலி சென்னைக்கு கல்லூரிப் படிப்புக்காக செல்கிறாள். அங்கு ராஜாவும் வருகிறான். அவனுக்கு பாலி மீது இருக்கும் ஈர்ப்பைத் தெரியப் படுத்துகிறான். பாலியின் மனம் தங்கராஜனுக்கும் ராஜாவுக்கும் இடையே சிக்கித் தவிக்கிறது. பாலி தன்னுடைய உண்மையான உணர்வுகளை அவளது தோழியான செல்லத்திடம் பகிர்ந்து கொள்கிறாள்.
இந்நிலையில் வையன்னா கொலை செய்யப்படுகிறான். கொலை செய்தது தங்கராஜன்; காரணம் பாலியை வையன்னா இழிவாகப் பேசியது தான் என்று தெரிய வருகிறது. பாலி தங்கராஜனை மணம் செய்து கொள்கிறாள்.
புதினத்தின் முடிவில், ராஜா பாலியை விட்டு விலகிச் செல்கிறான். கோணவாய் நாயக்கர் காசிக்குச் சென்று துறவு மேற்கொள்கிறார். பிறகு, பாலியின் தந்தையும் பாலியைப் பிரிந்து காசிக்குச் செல்கிறார்.
அ. பாலியின் மீது ராஜாவிற்கும் தங்கராஜனுக்கும் ஏற்படும் காதல், பாலிக்கு இருவர் மீதும் ஒரே சமயத்தில் உள்ள ஈர்ப்பு இந்தப் புதினத்தின் மைய முரண்.
ஆ. ராஜாவினதும் தங்கராஜனதும் பாலி மீதான காதல், கைக்கிளை.
இ. ராஜா பாலியை விட்டு விலகிச் செல்கிறான். கோணவாய் நாயக்கரும், ராமையாவும் காசிக்குச் செல்கிறார்கள்.
3. அன்பே ஆரமுதே
கதைச் சுருக்கம்:
அனந்தசாமிக்கு இளமையில் ருக்மணி (ருக்கு) என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகிறது. ஆனால் திருமண நாள் நெருங்கியபோது, அவருக்குள் ஏற்பட்ட ஆழமான ஆன்மிகத் தேடல் காரணமாக, திருமண நாளன்றே யாரிடமும் சொல்லாமல் ஓடிவிடுகிறார். அவர் சன்யாசியாகிறார். பல ஆண்டுகள் அலைந்து திரிந்த பிறகு, மருத்துவ அறிவைப் பெற்று, சென்னை நகரில் மருத்துவராக வாழத் தொடங்குகிறார். பணக்காரர், ஏழை என்ற வேறுபாடில்லாமல் மக்களுக்கு வைத்தியம் செய்கிறார். அவருக்கு சொந்தக் குடும்பம் இல்லை. ஆனால் அவரிடம் வைத்தியம் பார்க்க வரும் மனிதர்களே அவருடைய குடும்பமாகி விடுகிறார்கள்.
சென்னையில் பல குடும்பங்களின் வாழ்க்கைக்குள் அனந்தசாமி நுழைகிறார்; ஒவ்வொருவருடைய பிரச்சினைகளையும் கேட்டு, அவர்களுக்கு உதவுகிறார். அனந்தசாமியின் நோயாளிகளில் ஒருவர் நாகம்மாள். அவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய மகள் சந்திரா. சந்திரா ஒரு காதல் பிரச்சினையால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அனந்தசாமி அவளுக்கும் நெருக்கமானவராகிறார்.
டெல்லியில் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராக பணியாற்றுகிற ருக்மணி நாகம்மாளைச் சந்திக்க வருகிறாள். திருமண நாளில் தன்னை விட்டுவிட்டு ஓடிய அனந்தசாமியை அவள் மறந்துவிடவில்லை. அவளுடைய வாழ்க்கையில் வேறு திருமணம் நடக்கவில்லை. அப்போது தற்செயலாக அனந்தசாமியை மீண்டும் சந்திக்கிறாள். அனந்தசாமியை சந்தித்த பிறகு, ருக்கு சென்னையிலேயே தங்கி விட முடிவு செய்கிறாள்.
டொக்கி என்ற இளம் பெண் அனந்தசாமியிடம் தந்தை போன்ற பாசம் கொண்டவள். அவள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் சென்னைக்கு வருகிறாள். அங்கே பிரபல நடிகன் அருண்குமார் மற்றும் அவனது குடும்பத்துடன் தொடர்பு ஏற்படுகிறது. டொக்கி ரங்கன் என்பவனை விரும்புகிறாள். சந்திராவும் ரங்கனை விரும்புகிறாள். ரங்கன் அனந்தசாமியை அவதூறாகப் பேசுகிறான்.
புதினத்தின் முடிவில், ரங்கன் தற்கொலை செய்து கொள்கிறான். சந்திரா மேல்படிப்புக்காக அனைவரையும் பிரிந்து வெளிநாடு செல்கிறாள்.
அ. சந்திரா போன்ற பெண் ரங்கன் போன்ற ஒருவனை ஏன் காதலிக்கிறாள்? டொக்கி ஏன் அருண்குமாரினால் ஈர்க்கப்படுகிறாள்? மேலும் அனந்தசாமி போன்ற ஒருவரை உலகம் ஏன் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறது? என்பவையே மையக் கேள்விகள்.
ஆ. ருக்மணியின் அனந்தசாமி மீதான காதல் கைக்கிளை. அது போலவே சந்திராவின் ரங்கன் மீதான காதலும் கைக்கிளை.
இ. ரங்கன் தற்கொலை செய்து கொள்கிறான். சந்திரா வெளிநாட்டிற்குச் செல்கிறாள்.
இங்கு ஒன்றைக் குறிப்பிட்ட வேண்டும். மற்றப் புதினங்களில் முழுதாகப் பொருந்தி வரும் சட்டகம், இந்தப் புதினத்தில் முழுதும் பொருந்தி வரவில்லை. கதையின் நாயகன் அனந்தசாமியிடம் ருக்கு வந்து சேர்கிறாளே தவிர, பிரிந்து செல்வதில்லை.
4. மோக முள்
கதைச் சுருக்கம்:
பாபு கும்பகோணத்தில் கல்லூரியில் படிக்கும் இளைஞன். அவனது நெருங்கிய நண்பன் ராஜம். பாபுவுக்கு கர்நாடக இசையில் மிகுந்த ஆர்வம். அவனுக்கு இசை பயிற்றுவிக்கும் ரங்கண்ணா இசையை புனிதமான சாதனையாகக் கருதுபவர். பாபுவிடம் பெரிய இசைக் கலைஞனாகும் திறமை இருப்பதை அவர் உணர்கிறார். பாபுவின் மனத்தில் இசையைப் போலவே இன்னொரு விஷயம் ஆழமாக இடம் பிடித்திருக்கிறது. அது யமுனா. யமுனா பாபுவை விட சுமார் பத்து வயது மூத்தவள். அவள் மராத்தியருக்கும், பிராமணருக்கும் பிறந்தவள் என்பதால் அவளுடைய திருமண வாய்ப்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பாபுவின் பார்வையில், யமுனா சாதாரணப் பெண் அல்ல. ஒரு தேவதை போன்ற உயரத்தில் அவளை வைத்திருக்கிறான்.
பாபுவுக்கு யமுனா மீது முதலில் உருவாவது பக்தி போன்ற ஈர்ப்பு. அவளைப் பார்க்கும் போது யமுனாவின் அழகு மட்டுமல்ல, அவளுடைய குணம், நிமிர்வு, நேர்மை ஆகியவையும் அவனை ஈர்க்கின்றன. காலப்போக்கில் அந்த ஈர்ப்பு காதலாக மாறுகிறது. பாபுவின் அடுத்த வீட்டில் வயதான ஆணுக்கு இரண்டாவது மனைவியாக வந்திருப்பவள் தங்கம்மா. அவள் இளம் பெண்; ஆனால் திருமண வாழ்க்கையில் அன்போ, உடல் உறவோ கிடைக்காமல் மிகவும் தனிமையில் இருக்கிறாள். பாபுவிடம் அவளுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் பாபுவும் தங்கம்மாவும் இணைகிறார்கள். மறுபடியும் தங்கம்மா பாபுவை நெருங்கும் போது, பாபு மறுத்து விடுகிறான். தங்கம்மா தற்கொலை செய்து கொள்கிறாள். இதனால் பாபுவுக்கு மிகப் பெரிய குற்ற உணர்வு ஏற்படுகிறது. அதே சமயம், அவனது மனம் யமுனாவை நாடுகிறது என்கிற உண்மை அவனுக்குத் தெளிவாகிறது. தனது காதலை யமுனாவிடம் சொல்கிறான். யமுனா மறுத்து விடுகிறாள்.
பாபு படிப்பு முடிந்து சென்னையில் வேலைக்கு சேர்கிறான். யமுனாவின் தந்தை இறந்த பிறகு யமுனாவின் குடும்பப் பொருளாதார நிலை மோசமாகிறது. யமுனாவுக்கும் அவளது அம்மா பார்வதிக்கும் ஏற்பட்ட மன வேறுபாட்டால், யமுனா சென்னைக்கு வந்து பாபுவை சந்திக்கிறாள். பாபு இன்னும் தன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்கிறாள். மனம் மாறி, பாபுவை ஏற்றுக் கொள்கிறாள்.
யமுனா பாபுவை ஏற்றுக் கொண்ட பிறகும், பாபுவின் வாழ்க்கை மீண்டும் இசையை நோக்கித் திரும்புகிறது. யமுனாவைப் பிரிந்து இந்துஸ்தானி இசை கற்க செல்கிறான் என்று புதினம் முடிகிறது.
அ. பாபுவுக்கு யமுனா மீதுள்ள ஈர்ப்பு காதலா, காமமா அல்லது இரண்டும் கலந்த, அல்லது இடைப்பட்ட ஒன்றா என்பதே மைய முரண்பாடு.
ஆ. பாபுவின் யமுனா மீதான காதல் முதலில் கைக்கிளையும், பெருந்திணையும் ஆகும். பின்பு யமுனா மனமொப்புவதால், பெருந்திணையாக மாறுகிறது.
இ. பாபு இந்துஸ்தானி இசை கற்க, யமுனாவையும், அவனது உறவுகளையும் விட்டுச் செல்கிறான்.
5. அம்மா வந்தாள்
கதைச் சுருக்கம்:
அப்பு சிறு வயதிலிருந்தே வேதம் கற்றுக் கொள்வதற்காக பவானி அம்மாள் நடத்தும் வேத பாடசாலையில் தங்கிப் படிக்கிறான். அப்புவின் கூடப் பிறந்தவர்கள் வாழ்க்கை வசதிகள் தரும் படிப்பைத் தேர்ந்தெடுத்த போது, அப்புவின் அம்மா அலங்காரத்தின் விருப்பத்தால், அப்பு வேதம் படிக்க அனுப்பப் படுகிறான். அப்புவுக்கு அவனது அம்மா அலங்காரம் புனிதமானவள்; தெய்வத்துக்கு நிகரானவள்.
பாடசாலையில் இருக்கும் இன்னொரு பெண் இந்து. இந்துவுக்கு பவானி அம்மாள் அத்தை முறை. சிறு வயதிலேயே திருமணம் ஆகி, கணவனை இழந்த இந்து தனது அத்தையுடன் வசிக்கிறாள். அப்பு வேதப் படிப்பு முடிந்து, சென்னைக்குத் திரும்பும் தருணத்தில் புதினம் ஆரம்பிக்கிறது. அப்பு சென்னைக்கு சென்ற பிறகு திரும்பி வருவது அரிது என்பதை உணர்ந்த இந்து அவனிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறாள். அப்பு மனம் கூசி, அக்காதலை மறுக்கிறான். அப்போது அப்புவின் அம்மா அலங்காரத்தைப் பற்றி இந்து சொல்லும் பழிச்சொல் அவனை உறுத்துகிறது.
அப்பு சென்னைக்கு வந்த பிறகு, அலங்காரத்தை அடிக்கடி சந்திக்க வரும் சிவசுவைப் பற்றித் தெரிய வருகிறது. அப்போது தான் இந்து சொன்னதன் பொருள் விளங்குகிறது. இதற்கிடையில் பவானி அம்மாளுக்கு உடல்நிலை மோசமாகிறது. அப்பு மறுபடியும் வேத பாடசாலைக்கு செல்கிறான். பவானி அம்மாள் வேத பாடசாலையை அப்புவும், இந்துவும் சேர்ந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாள். வேறு வழியில்லாமல், அப்பு ஒத்துக் கொள்கிறான். இந்துவின் காதலுக்கும் அவனது மனம் சம்மதிக்கிறது.
அலங்காரம் அப்புவைப் பார்க்க வேத பாடசாலைக்கு வருகிறாள். அப்புவை சென்னைக்கு திரும்ப வரும்படி அழைக்கிறாள். அப்பு மறுத்து விடுகிறான். மனம் உடைந்த அலங்காரம் காசிக்குச் செல்ல முடிவு செய்கிறாள்.
அ. அப்பு தனது தாயை புனிதராகக் கருதுகிறான். பின்னர் தனது தாயான அலங்காரம் சிவசுவுடன் கொண்டிருந்த தொடர்பை அப்பு அறிகிறான். இதுவே புதினத்தின் மைய முரண்பாடு.
ஆ. அப்புவுக்கும் இந்துவுக்கும் இடையிலான காதல் உலகின் பார்வையில் ஒழுக்கமற்றதாகக் கருதப்படுகிறது. அது போலவே அலங்காரமும் சிவசுவும் கொண்ட உறவும்.
இ. அலங்காரம் அப்புவையும், அவளது உறவுகளையும் விட்டு விலகி காசிக்குச் செல்கிறாள். அப்பு தனது குடும்பத்தையும், முக்கியமாக அவனது அம்மாவையும் விட்டு விலகி, பாடசாலையில் தங்குகிறான்.
6. உயிர்த்தேன்
கதைச் சுருக்கம்:
சென்னையில் தொழில் செய்து செல்வம் சேர்த்த பூவராகன், தனது தந்தை விரும்பிய கிராம வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் சொந்த ஊரான ஆறுகட்டிக்குத் திரும்புகிறான். அங்கே பூவராகன் பழுதடைந்த பெருமாள் கோயிலைச் சீரமைக்கிறான், விவசாயத்தை முன்னேற்ற முயல்கிறான், கிராம மக்களிடையே ஒற்றுமையை உருவாக்க முயல்கிறான். இந்த முயற்சிக்கு அக்கிராம மக்கள் ஒத்துழைக்கிறார்கள். அவர்களில் செங்கம்மா என்றவளை முக்கியத் தலைவராக முன்னிறுத்துகிறான். அவள் கார்வார் கணேசப் பிள்ளையின் மனைவி.
ஆறுகட்டியில் வசிக்கும் பழனிவேலு தனக்கு மரியாதை தரப்படவில்லை என்று கோபப்படுகிறான். அடிப்படையில் அவன் செங்கம்மாவின் மீது கொண்ட காதலும் காரணம். பழனிவேலு செங்கம்மாவிடம் இருக்கும் காதலில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறான். செங்கம்மா அவனுடைய நிலையைப் புரிந்து கொண்டு அவனைச் சந்திக்கிறாள். பழனிவேலு அவளைக் கட்டி அணைக்கிறான்.
ஊர் கூடி கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்துகிறார்கள். பழனிவேலு கலந்து கொள்வதில்லை. அப்போது அவன் ஊரிலேயே இல்லை என்று தெரியவருகிறது. பழனிவேலுவிடம் இருந்து கணேசப் பிள்ளைக்கு ஒரு கடிதம் வருகிறது. அதில் செங்கம்மாவை தான் தீண்டியதையும், இனி தான் வாழ்வதில் அர்த்தமில்லை என்று நினைப்பதையும் குறிப்பிடுகிறான். அவனது இறப்புடன் புதினம் முடிகிறது.
அ. செங்கம்மா மீது பழனிவேல் கொண்ட காதலும், காமமும் இந்த புதினத்தின் மைய முரண்பாடு.
ஆ. செங்கம்மா மீதான பழனிவேலின் காதல் (அல்லது காமம்) கைக்கிளை.
இ. பழனிவேல் தற்கொலை செய்து கொள்கிறான்.
7. செம்பருத்தி
கதைச் சுருக்கம்:
சட்டநாதன் படிப்பதில் ஆர்வமுள்ள இளைஞன். படிக்கும் போது, குஞ்சம்மாளின் குடும்பத்துடன் நட்பு ஏற்படுகிறது. குஞ்சம்மாளும், அவளது குடும்பமும் குஞ்சம்மாளை சட்டநாதனுக்கு மணமுடிக்கலாம் என்ற சூழ்நிலையில் சட்டநாதனின் சின்ன அண்ணனுக்கு குஞ்சம்மாள் மனைவி ஆகிறாள். சின்ன அண்ணனுக்கு குழந்தை பிறந்த சிறிது காலத்திற்குப் பிறகு சின்ன அண்ணன் காலரா வந்து இறந்து விடுகிறான். இறக்கு முன், சட்டநாதனை செண்பகவனம் பிள்ளையைப் பார்க்கச் சொல்லிவிட்டு இறக்கிறான்.
செண்பகவனத்தின் மகள் புவனாவை சட்டநாதனுக்கு மணம் முடிக்க சின்ன அண்ணன் பேசி இருப்பது தெரிய வருகிறது. திருமணம் நிச்சயமாகிறது. சட்டநாதனின் பெரிய அண்ணன் சிதம்பரத்தில் பெரிய கடை ஒன்றை நடத்துபவர். ஒப்புக் கையெழுத்து போட்டதால் சொத்து அத்தனையும் இழந்து, சட்டநாதனின் திருமணம் நடப்பதற்கு முன், தனது குடும்பத்துடன் வந்து தங்குகிறார். இதனால் திருமணம் நடக்குமா என்கிற நிலையில், செண்பகவனம் பிள்ளை உறுதியாக திருமணம் நடக்க வேண்டும் என்கிறார். புவனா புது மணப்பெண்ணாக சட்டநாதன் வீட்டுக்கு வருகிறாள். வசதியாக இருந்து நொடித்துப் போன குடும்பம். மேலும், சின்ன அண்ணன் குடும்பம், பெரிய அண்ணன் குடும்பம், தனது குடும்பம் என்ற மூன்று குடும்பங்களின் சுமைகளும் சட்டநாதன் தலையில் விழுகின்றன. புவனாவின் ஆதரவு தான் சட்டநாதனை நிலைநிறுத்துகிறது. கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சீரடைகிறது. சட்டநாதன் வாழ்க்கை முழுதும் குடும்பக் கவலைகளில் செலவாகிறது.
பெரிய அண்ணி குடும்பத்தை சீர்குலைக்கும் முறையில் நடந்து கொள்கிறாள். சின்ன அண்ணியையும், சட்டநாதனையும் இணைத்துத் தவறாகப் பேசுகிறாள். சின்ன அண்ணன் மகள், பெரிய அண்ணன் குழந்தைகள், சட்டநாதன் குழந்தைகள் வளர்ந்து, அவர்களுக்குத் திருமணம் நடக்கிறது. குழந்தைகள் வெவ்வேறு ஊர்களில் சென்று வசிக்கிறார்கள். பெரிய அண்ணி மோசமாக பேசியது தெரிய வர, பெரிய அண்ணி பட்டினி கிடந்து இறக்கிறாள். பெரிய அண்ணனும் இறக்கிறார். சின்ன அண்ணி அவள் மகளுடன் சென்று தங்கிக் கொள்கிறாள்.
சட்டநாதனுக்குத் துணையாக, ஆதாரமாக இருந்த புவனா, சட்டநாதனை சந்தேகப் படுகிறாள். பிறகு அதில் இருந்து மீண்டு வருகிறாள். ஆனாலும், அவர்கள் இடையே இருந்த பழைய பிணைப்பு இல்லாமல் போய்விடுகிறது. சட்டநாதனுக்கு பொம்மை ஐயர் என்ற நண்பர் கிடைக்கிறார். சொத்துத் தகராறில் அவர் கொலை செய்யப்படுவதுடன் புதினம் முடிவடைகிறது.
அ. தி ஜானகிராமன் எழுதிய புதினங்களில் இது தனித்துவமானது. சொல்லப்போனால், இந்தக் கட்டுரை செம்பருத்தி பற்றியது; குறிப்பாக அது அவரது பிற புதினங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை ஆராய்கிறது.
சட்டநாதன் மீது அவனது அண்ணிக்கு இருக்கும் ஈர்ப்பு ஓர் இழை என்றாலும், இப்புதினத்தின் மைய இழை அதுவல்ல என்பதால், இப்புதினம் தி ஜானகிராமனின் மற்றப் படைப்புகளிலிருந்து மாறுபட்டு, தனித்து விளங்குகிறது.
ஆ. சின்ன அண்ணி சட்டநாதன் மீது தொடரும் காதல் கைக்கிளை. பெருந்திணை என்றாலும் பொருந்தும்.
இ. சட்டநாதனிடம் இருந்து, இறப்பினாலோ (பெரிய அண்ணன், பெரிய அண்ணி), பிரிந்து செல்வதாலோ (சின்ன அண்ணி, சட்டநாதனின் குழந்தைகள், சின்ன அண்ணன், பெரிய அண்ணன் குழந்தைகள்) அல்லது மன வேறுபாட்டாலோ (புவனா) பிரிகிறார்கள். ஆனாலும், புதினம் இத்துடன் முடியாமல், மேலும் கிட்டத்தட்ட 100 பக்கங்களுக்கு நீள்கிறது. இதில் சட்டநாதனுக்கும், பொம்மை ஐயருக்கும் உள்ள நட்பு, புரிதல் சொல்லப்படுகிறது. பொம்மை ஐயர் கொலை செய்யப்படுவதில் புதினம் முடிவடைகிறது. இது கதையின் மைய முரணுக்கு (அப்படி ஒன்று இருந்தால்) தீர்ப்பு என்று சொல்லமுடியாது. ஆனாலும், புதினத்தின் முழுமைக்கு இந்த நிகழ்வு தேவை என்பதை நாம் பார்க்கப் போகிறோம்.
8. மரப்பசு
கதைச் சுருக்கம்:
அம்மணி இந்த நாவலின் கதைசொல்லியும் மையப் பாத்திரமும். தி ஜாவின் மற்ற புதினங்களில் கதை சொல்பவர் வெளியில் இருந்து விவரிக்கிறார். இதில் புதினத்தின் அம்மணி நாயகியும், கதை சொல்லியும் ஆவாள். அவளுடைய வாழ்க்கையை அவளுடைய பார்வையிலிருந்தே நாம் அறிகிறோம். சிறுவயதிலிருந்தே அவள் சமூகத்தின் சம்பிரதாயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. மற்றவர்கள் துக்கப்பட வேண்டிய இடத்தில் அவளுக்குச் சிரிப்பு வருகிறது. போலியான சடங்குகளையும் மனிதர்கள் நடிக்கும் நாடகங்களையும் அவள் கேள்வி கேட்கிறாள். அம்மணிக்குத் திருமணத்திலும் நம்பிக்கை இல்லை. அவளுக்குத் தேவையானது வழக்கமான குடும்ப வாழ்க்கை அல்ல. தன்னுடைய விருப்பப்படி வாழ்வதும், மனிதர்களிடம் அன்பு செலுத்துவதும், அவர்களுடன் நெருக்கமாக இருப்பதும் தான்.
கோபாலி புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர். பெண்களிடம் சபலம் கொண்டவர். அம்மணியைச் சந்தித்ததும் அவளிடம் நெருக்கம் ஏற்படுத்திக் கொள்கிறார். அம்மணியைச் சென்னைக்கு அழைத்துச் செல்கிறார். அவளுக்குப் படிப்பு, இசை, நடனம் ஆகியவற்றுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறார். அவளுடைய கலை வாழ்க்கையை வளர்க்கவும் உதவுகிறார். ஆனால், அம்மணி மற்றவர்களுடன் பேசுவதையும் நெருக்கமாக இருப்பதையும் அவர் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளுடைய வாழ்க்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்கிறார்.
பட்டாபி கோபாலியின் உறவினன். கல்லூரியில் படிக்கும் இளைஞன். கோபாலி அவனை அம்மணிக்குத் துணையாக இருக்கச் செய்கிறார். ஆரம்பத்தில் பட்டாபிக்கும் அம்மணிக்கும் இடையே பெரிய நெருக்கம் இல்லை. ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில், அம்மணியைத் தவறாக அணுகும் சுந்தரத்தைப் பட்டாபி தடுத்து வெளியேற்றுகிறான். இதனால் அம்மணி அவனிடம் நம்பிக்கையும் நெருக்கமும் கொள்கிறாள்.
இளமை குறைந்த பிறகு, உடல் அழகு மாறிய பிறகு, தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களும் விலகிவிட்டால், அவளுக்கு யார் துணையாக இருப்பார்கள் என்ற கேள்வி அம்மணிக்கு எழுகிறது. வெளிநாட்டில் சந்தித்த புரூஸ் போன்றவர்களின் கேள்விகளும் அவளுடைய சொந்த அனுபவங்களும் இந்தக் கவலையை அதிகரிக்கின்றன. அவள் சுதந்திரமாக வாழ்ந்திருக்கிறாள்; ஆனால் அந்தச் சுதந்திரம் அவளுக்குப் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்யவில்லை.
உயிருள்ள பசு பால் கொடுக்கிறது; கன்றுகளைப் பெற்றெடுக்கிறது; காலப்போக்கில் வயதாகி இறக்கிறது. ஆனால் மரத்தால் செய்யப்பட்ட பசு பால் கொடுக்காது, கன்றுகளைப் பெறாது, இறப்பதுமில்லை. அதை காட்சிப் பொருளாக வைத்துக்கொண்டு எப்போதும் அழகு பார்க்கலாம். அது போல தன்னை உணர்கிறாள் அம்மணி.
இறுதியில், தனது எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தையும் கோபாலியுடனான வாழ்க்கையின் சலிப்பையும் உணர்ந்த அம்மணி, பட்டாபியை மீண்டும் நாடுகிறாள். இத்துடன் புதினம் முடிகிறது.
அ. அம்மணி உலகிலுள்ள அனைவரையும் நேசிக்க விரும்புகிறாள். ஆனால் உலகம் அவளைப் பயன்படுத்திக் கொள்கிறது. அம்மணியின் சுதந்திர விழைவும், சமூகம் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதமும் புதினத்தின் மையமாகின்றன.
ஆ. அம்மணியின் உறவுகள் உலகின் பார்வையில் ஒழுக்கமற்றவை.
இ. அம்மணி கோபாலி முதல் எல்லா உறவுகளையும் முறித்துக் கொண்டு, பட்டாபியுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறாள். அம்மணியின் வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கிய நடனத்தையும் ஒதுக்கி விடுகிறாள்.
9. நளபாகம்
கதைச் சுருக்கம்:
காமேச்வரன் ஒரு திறமையான சமையல்காரன். யாத்திரை ரயிலில் பயணிக்கும் பக்தர்களுக்கு உணவு தயாரிக்கும் வேலையைச் செய்கிறான். அவனுடைய சமையல் வெறும் வயிற்றை நிரப்பும் தொழில் அல்ல; உணவை அக்கறையுடனும் நேர்த்தியுடனும் தயாரிப்பதில் அவனுக்கு தனிப்பட்ட மகிழ்ச்சி இருக்கிறது. சிறு வயதில் தாயை இழந்த அவன், குடும்பச் சூழலில் ஏற்பட்ட துன்பங்களால் வீட்டை விட்டு வெளியேறுகிறான். பின்னர் பிறரிடம் வேலை செய்தும், சமையல் கலையைக் கற்றும் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறான். அவனுக்கு ஆன்மிகத்திலும் ஈடுபாடு இருக்கிறது; குறிப்பாக அம்பாள் வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவன்.
காமேச்வரன் சமையல் வேலை செய்யும் ரயிலில் ரங்கமணி பயணம் செய்கிறாள். அவளுக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. அதனால், அவள் தத்தெடுத்து வளர்த்த மகன் துரை. துரையின் மனைவி பங்கஜம். அவர்களுக்கும் குழந்தை இல்லை என்ற ஏக்கம் ரங்கமணிக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்தக் ரயிலில் பயணம் செய்யும் முத்துசாமி தேர்ந்த ஜோசியர். அவர் துரை மற்றும் பங்கஜத்தின் ஜாதகங்களை ஆராய்ந்து, துரைக்கு குழந்தை இல்லை; பங்கஜத்துக்கு உண்டு என்று கூறி விடுகிறார். ரங்கமணி எப்படியாவது தங்கள் வீட்டில் குழந்தை வேண்டும் என்று, காமேச்வரனை தங்கள் வீட்டில் சமையல் வேலை செய்ய அழைக்கிறாள்.
காமேச்வரன் அந்தக் கிராமத்தில் ஒரு நட்புக் குழுவை சேர்த்து, பொதுக் காரியங்களில் ஈடுபடுகிறான். பணம் வசூலித்து, பள்ளிக் குழந்தைகளுக்கு நல்ல உணவுக்கு ஏற்பாடு செய்கிறான். ரங்கமணி பங்கஜத்திடம் தனது திட்டத்தைக் கூறுகிறாள். பங்கஜத்துக்கு முதலில் மறுப்பு இருந்தாலும், பிறகு ஒத்துக்கொள்கிறாள். அதை காமேச்வரனும், பங்கஜமும் தனியாக இருக்கும் வேளையில் நாசூக்காக வெளிப்படுத்துகிறாள். அதிர்ச்சி அடைந்த காமேச்வரன் மறுத்து விடுகிறான்.
துரைக்கும், பங்கஜத்துக்கும் குழந்தை பிறக்கிறது. ஆனால், அது காமேச்வரனுக்குப் பிறந்த குழந்தை என்று வதந்தி பரவுகிறது. இதை அறிந்த காமேச்வரன் தான் இருப்பதால் தான் இந்த மாதிரி அவப்பெயர் ஏற்படுகிறது என்று மறுபடியும் ரயிலில் சமையலுக்கு செல்ல முடிவு செய்கிறான்.
அ. பங்கஜமும் அவளது மாமியார் ரங்கமணியும் குழந்தை பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்ல முனைகிறார்கள். துறவற மனப்பான்மை கொண்ட காமேச்வரனைப் பயன்படுத்தி பங்கஜம் கருவுற வேண்டும் என்று ரங்கமணி திட்டமிடுகிறாள். காமேச்வரன் மறுக்கிறான்; ஆனால் பங்கஜம் கருவுறுகிறாள். குழந்தையின் தந்தை காமேச்வரன் தான் என்று மக்கள் நினைக்கிறார்கள். வம்சம் தொடர வேண்டும் என்ற ஏக்கம், அது சமூக நெறிகளுடன் மோதினாலும் பரவாயில்லை என்ற மனநிலை இங்கு வெளிப்படுகிறது.
ஆ. காமேச்வரனுடன் உறவு கொள்ள பங்கஜம் ஒத்துக்கொள்வது, பெருந்திணையும் கைக்கிளையும் ஆகும்.
இ. காமேச்வரன் அவர்களை விட்டு விலகிச் செல்கிறான்.
செம்பருத்தியின் தனித் தன்மை
நாம் இதுவரை தி ஜானகிராமனின் புதினங்களில் காணப்படும் பொதுவான கூறுகளைப் பார்த்த பிறகு, செம்பருத்தி எவ்வாறு வேறுபடுகிறது என்பதைப் பார்ப்போம். அது வேறுபடுகிறது என்பது மட்டுமல்ல; அதை இருத்தலியல் (Existentialist) புதினம் என்றும் கருதலாம்.
பிற புதினங்களில் முக்கியக் கதாபாத்திரங்கள் தான் இறக்கிறார்கள் அல்லது விலகிச் செல்கிறார்கள். ஆனால் செம்பருத்தியில் பொம்மை ஐயர் முக்கியமான கதாபாத்திரமே அல்ல. இருந்தும் அவர் இறக்கிறார். உண்மையில், அவரது மரணத்துடனேயே புதினம் முடிகிறது. பெரிய அண்ணன், பெரிய அண்ணி இறப்பிலோ, சின்ன அண்ணியின் பிரிவுடனோ அல்லது புவனாவின் மன வேறுபாட்டுடனோ புதினம் முடியவில்லை. இவையெல்லாம் நடந்த பிறகு, கதை 100 பக்கங்களுக்குத் தொடர்கிறது. இதில் சட்டநாதனுக்கும், பொம்மை ஐயருக்கும் உள்ள நட்பு, புரிதல் சொல்லப்படுகிறது. பின்பு, பொம்மை ஐயர் கொலை செய்யப்படுவதில் தான் புதினம் முடிவடைகிறது.
மேலுள்ள விவரிப்பின் படி பார்த்தால், செம்பருத்தி அவரது பிற புதினங்களிலிருந்து மிகவும் மாறுபட்டது. ஆனால் அதை இருத்தலியல் புதினம் என்று கருதலாமா?
அதற்கு நாம் முதலில் மற்றப் புதினங்களில் இல்லாத ஒரு புதிரை நாம் விடுவிக்க வேண்டும். இந்தப் புதினத்தில் பொம்மை ஐயர் இறக்க வேண்டிய காரணம் என்ன? கதையின் மைய முரணுக்கும் (இந்தப் புதினத்தில் மைய முரண் இருக்கிறதா என்ற கேள்வியையும் நினைவில் கொண்டு) பொம்மை ஐயருக்கும் பெரிதாக தொடர்பு இல்லை. எனவே, பொம்மை ஐயர் ஏன் இறக்க வேண்டும் என்கிற கேள்விக்குப் பதில் இந்தப் புதினத்தின் மையம் என்ன என்பதை அறிய உதவலாம்.
இந்துப் பண்பாட்டில், இறைவனை அடைய அல்லது வாழ்க்கையை நெறிப்படுத்த மூன்று வழிமுறைகள் சுட்டப்படுகின்றன. அவை முறையே, கர்ம மார்க்கம், ஞான மார்க்கம், பக்தி மார்க்கம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் புதினத்தில் இந்த மூன்று மார்க்கங்களும் சட்டநாதனால் உணர்ந்தோ, சூழ்நிலையாலோ பின்பற்றப்படுகின்றன.
ஆரம்பத்தில், சின்ன அண்ணன் இறந்து, பெரிய அண்ணன் திவாலாகவும் ஆகிவிடுவதால், அவன் கர்ம மார்க்கத்தைப் பின்பற்றுகிறான் அல்லது அதற்குள் தள்ளப்படுகிறான். தனது மற்றும் தன் அண்ணன்கள் குடும்பத்தைப் பாதுகாப்பது, முன்னுக்குக் கொண்டு வருவது என்பதற்காக உழைப்பு ஒன்றே எண்ணமாக சட்டநாதனது வாழ்க்கை அமைகிறது. இது கர்ம மார்க்கம். பின்னர், சட்டநாதனின் மாமனார் செண்பகவனம் பிள்ளை அவனுக்கு பக்தி மார்க்கத்தைக் கற்பிக்கிறார். அதை உள்வாங்கிக் கொண்டு, மிகுந்த ஈடுபாட்டுடன் அதில் சட்டநாதன் மூழ்குகிறான், மளிகைக்கடை போன்ற புற உலக செயல்பாடுகளை ஒதுக்கும் அளவுக்கு. பின், அதையும் சட்டநாதன் கைவிடுகிறான்.
அதற்குப் பிறகு, பொம்மை ஐயரின் வழியாக ஞான மார்க்கத்திற்குள் நுழைகிறான். நூல்களைப் படிப்பதில் ஆர்வம் ஏற்படுகிறது. உலகியல் ஈடுபாடு மிகவும் குறைந்து விடுகிறது. இதற்கு சில புற உலகக் காரணிகளும் உண்டு.
இந்தப் புறக்காரணிகள் அவனுடைய உறவுகளால் ஏற்படுபவை. கொஞ்சம் கொஞ்சமாக,, அவனுடைய எல்லா உறவுகளும் சிதைந்து போகின்றன. பெரிய அண்ணனும் இறக்கிறார். பெரிய அண்ணியும் இறக்கிறார். அவரது குழந்தைகளும் விலகிச் செல்கிறார்கள். சட்டநாதனின் குழந்தைகள் அவனை விட்டு செல்கிறார்கள். சின்ன அண்ணியும் கசப்புணர்வுடன் பிரிந்து செல்கிறாள். சின்ன அண்ணன், அண்ணியின் மகள் பாப்பாவும் திருமணமாகி சென்று விடுகிறாள்.
இவற்றை எல்லாம் விட, சட்டநாதன் யாரைச் சுற்றி தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டாரோ, யார் சட்டநாதனுக்கும் மற்ற உறவுகளுக்கும் பாறை போன்று இருந்தாரோ, அந்த புவனாவும் முதலில் அவருக்கு எதிராக மாறி, பின்னர் அவரைப் பற்றிய அக்கறையையே இழக்கிறாள். அரசியல் அரங்கிலும் போலி மனிதன் தலைவராக உயர்கிறான்; உண்மையான தியாகி புறக்கணிக்கப்படுகிறார். இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக அவருக்கு அறிவுரீதியான துணைவனாக இருந்த பொம்மை ஐயர் கொலை செய்யப்படுகிறார். சட்டநாதன் நம்பியிருந்த, துணையாய் விளங்கிய, சுற்றி இருந்த அனைவரும் நீங்குகிறார்கள். புதினத்தின் இறுதியில் சட்டநாதனுக்கு யாரும் எஞ்சியிருக்கவில்லை. தன் வாழ்க்கையின் பயனற்ற தன்மையையும், முழுமையான அர்த்தமின்மையையும் அவன் உணர்கிறான்.
பொம்மை ஐயர் இறக்காவிட்டால், சட்டநாதனின் தனிமை முழுமை பெறாது. அவருக்கு ஞானத் துணைவனாக பொம்மை ஐயர் தொடர்வார். சட்டநாதனின் யாருமற்ற தனிமையை உறுதிப்படுத்த பொம்மை ஐயர் இறக்க வேண்டிய அவசியம் நேரிடுகிறது. இதுவே செம்பருத்தியை இருத்தலியல் புதினமாகக் கருதுவதற்கான மிக முக்கியச் சுட்டலாக நான் நினைக்கிறேன். இந்தத் தனிமை உணர்வும், வாழ்வின் அபத்தமும், நம்பிக்கையின்மையும் புதினத்தில் வெளிப்படையாகவே தி ஜாவால் சொல்லப்படுகின்றன .
- “நான் என்னைப் பத்தித்தான் சொல்லிக்கிறேன். தேசத்துக்காக நாம எவ்வளவோ செஞ்சிருக்கலாம். நமக்கு நிறைய வாய்ப்பு இருந்துது. நான் மளிகைக் கடை வச்சுக் காலத்தைப் போக்கினேன். நீர் நிலத்தைக் குத்தகைக்கு விட்டு, புஸ்தகம் படிச்சிட்டு உட்கார்ந்திருந்தீம். என்னத்தைக் கண்டுட்டோம் நாம ரண்டு பேரும்? என்னத்தைச் சாதிச்சிட்டோம் – ஊருக்காக, ஜனங்களுக்காக?”
- கண்ணை மூட முடியவில்லை அவரால். “இது என்ன கண் மூடல்! என் நம்பிக்கை எல்லாம் என்னைக் கைவிட்டுவிட்டதே . . .”
- அவளைப் பார்த்து இப்போது அவருக்கு ஏக்கமாக வந்தது – தன்னை நினைத்து, இந்த எழுத்தைத் தொடங்கியபோது அவள் சொன்னது நினைவுக்கு வருகிறது. “என்னை அழித்துக்கொள்ள, கரைந்து போக இந்த வழி” என்று சொன்னாள். அதற்குக் குரு சட்டம்தான். ஆனால் குருநாதர் இப்போது அந்தரத்தில் நிற்கிறார். அவருடைய நம்பிக்கை ஒடிந்த பூங்கிளையாகப் பெருங்கிளையில் சிறிது ஓட்டிக்கொண்டு ஆடிக் கொண்டிருக்கிறது, ‘நானும் கரைந்து கொண்டுதான் இருக்கிறேன் – ஆனால் அவநம்பிக்கையில், சந்தேகத்தில்.’
- பலகை மட்டும் இல்லை. திருவாசம், தேவாரம், கீதை என்று அந்த ரகத்துப் புத்தகங்கள் கூட அவர் கையை விட்டுப் பெயர்ந்து விட்டன. இப்பொழுதெல்லாம் அவர் ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் என்று பல தேசத்து நாவல்களைத்தான் படித்துக் கொண்டிருந்தார். அன்பைப் பற்றி இவை இன்னும் தெரிந்து கொண்டு ஊடாடியதாகத்தான் அவருக்குத் தோன்றிற்று. நாயன்மார்களையும் தத்துவ ஞானிகளையும்விட செக்காவும் தாஸ்தோவிஸ்கியும் ரவீந்திரரும் சரத்தும் மானும் மாபசமானும் இன்னும் இதயத்தைத் திறந்து ஆழப்படுத்தி, அன்பை மேலும் மேலும் கொட்டிச் சேர்க்க இடம் செய்வதுபோல் தோன்றிற்று.
- சட்டம் வெளியே பார்த்தார். உலகத்தோடு அவருக்கு இருந்த ஒரே பிடிப்பும் போய்விட்டது. சீதாபதி உலகத்தோடு, மனிதர்களோடு, உழைப்பவர்களோடு ஒட்டிக்கொண்டிருந்தவர். மனிதனிடம் அவர் கொண்ட எல்லையில்லாத அன்பு தான் அவர் மனத்திலிருந்து கடவுளை விரட்டிவிட்டது போல் தோன்றிற்று, அவரை எப்படிச் சாக அடிக்கத் தோன்றிற்று ஒரு மனிதனுக்கு? அவன் மனிதனா? உணர்வில்லாதவனா? கேள்விக்கு விடையில்லாமல் தவித்தார் சட்டம்.
மிக முக்கியமாக, புதினத்தின் கடைசிப் பக்கத்தில் வரும் வரிகள் இவை:
“துணையில்லாம தனியா இருக்கிறதுதான் நல்லது. அய்யர் போனது கூட நம்மைத் தனியா விடத்தான்.”
புவனா பேசாமல் உட்கார்ந்திருந்தாள்.
பிறகு தலையில் இருந்த இரண்டு செம்பருத்திகளையும் எடுத்து அவர் மார்பு மீது வைத்தாள். “இந்த ரண்டும்?”
“அதுகளும் தனித் தனிதான்.”
“யாருக்கு இதெல்லாம் வேணும்? நான் ரண்டு ரண்டாத் தான் வச்சுக்கப் போறேன் எப்பவும் போல.”
“வச்சுக்க.”
“கிர்ர்நீவ்’ என்று தோப்பில் ஒரு வலியன் கத்திற்று. அந்த இருளில் இன்னொரு வலியன் அதற்கு “கிர்ர்நீவ்” என்று விடை கூறிக்கொண்டிருந்தது.
தான் சொன்னது சரிதானா என்று சட்டத்திற்குச் சந்தேகமாயிருந்தது.
எழுந்தார். உட்கார்ந்திருந்த புவனாவைக் கையைப் பிடித்துத் தூக்கினார். அவள் எழுந்து நின்றாள். அவளை இறுக அணைத்துக் கொண்டார். அவளும் அவருக்குள் புகுந்து விடுவதுபோல் ஒட்டிக்கொண்டாள்.
ஒன்றாக முடியவில்லை என்றுதான் இருந்தது அவருக்கு. அணைப்பு விட்டதும் மீண்டும் தனியாகத்தான் இருந்தது.
‘ஈச்வரனால் தான் முடியும் போலிருக்கிறது’ என்று அவருக்குத் தோன்றிற்று. “ஈச்வரனுக்கும் முடியாது. ஒரு முலையும் ஒரு மூக்குத்தியும் ஒரு கொலுசும் நசுங்கிவிடவில்லை. மறைந்து விடவில்லை.”
இந்த வரிகளுடன் ஒப்பிடத்தக்க வரிகள் சார்த்தரின் The Age of Reason புதினத்தின் கடைசிப் பக்கத்தில் வருகின்றன. கதையின் நாயகன் மாத்யூ அனைத்து கோட்பாடுகளையும் நிராகரிக்கும், தனது தனிமையை உணரும் அற்புதமான பகுதி உள்ளது. வியக்கத்தக்க வகையில், செம்பருத்தியின் முடிவை ஒத்திருக்கிறது.
“மாத்யூ, டானியல் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தான். ‘நான் தனியன்’ என்று நினைத்துக கொண்டான். தனிமை தான்; ஆனால் முன்பை விடச் சுதந்திரமானவனாக இல்லை. முந்தைய மாலை அவன் தனக்குள் சொல்லிக்கொண்டிருந்தான்: ‘மார்செல் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்…’ ஆனால் அப்படிச் சொல்லிக்கொள்வதன் மூலம் அவனே தன்னை ஏமாற்றிக் கொண்டிருந்தான். ‘எனது சுதந்திரத்தில் யாரும் குறுக்கிடவில்லை; எனது வாழ்க்கையே அதை முற்றிலுமாக வற்றச் செய்துவிட்டது’. அவன் ஜன்னலை மூடிவிட்டு அறைக்குத் திரும்பினான். இவிச்சின் வாசனை காற்றில் இன்னமும் மிதந்துகொண்டிருந்தது. அந்த நறுமணத்தை ஆழமாக உள்ளிழுத்துக் கொண்டு, அன்றைய அமளி நிறைந்த நாளை மனதில் அசை போட்டான். ‘எதற்குமே பயனில்லாத வீண் ஆர்ப்பாட்டம்’ என்று நினைத்தான். வீண்: இந்த வாழ்க்கை அவனுக்கு எந்தக் காரணமுமின்றி அளிக்கப்பட்டிருந்தது; அவனும் ஒன்றுமற்றவன். இருந்தும், அவன் தன்னை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. அவன் எப்படிப் படைக்கப் பட்டிருந்தானோ, அப்படியே இருந்தான். காலணிகளைக் கழற்றிவிட்டு, சாய்வு நாற்காலியின் கைப்பிடியில் அசைவின்றி அமர்ந்தான். அவனது தொண்டையின் பின்புறத்தில் இன்னமும் அம்பர் பிசினின் மணமும் சர்க்கரையின் இனிப்பும் கலந்த அந்தக் காரமான ரம்மின் சுவையை உணர முடிந்தது. அவன் கொட்டாவி விட்டான். அந்த நாள் முடிந்து விட்டது. அவனது இளமையையும் முடிந்து விட்டது. பலவிதமான வாழ்க்கைத் தத்துவங்கள் ஏற்கெனவே அவனுக்கு நாசூக்காக தங்கள் சேவைகளை வழங்க முன்வந்திருந்தன: ஏமாற்றங்களை மீறிய இன்ப நுகர்வுக் கொள்கை, புன்னகையுடன் கூடிய சகிப்புத்தன்மை, சரணாகதி, நடைமுறை அறிவு, பற்றற்ற மனப்பான்மை – மனிதன் தனது வாழ்க்கையின் தோல்வியை, ஒவ்வொரு நிமிடமும், தேர்ந்த ரசிகனைப் போலச் சுவைத்து அனுபவிப்பதற்கான துணைக் கருவிகள். அவன் தனது மேலங்கியைக் கழற்றிவிட்டு, கழுத்துப்பட்டையை அவிழ்க்கத் தொடங்கினான். மீண்டும் ஒருமுறை கொட்டாவி விட்டபடியே தனக்குள் சொல்லிக்கொண்டான்: ‘இது உண்மை தான். முற்றிலும் உண்மை. நான் இப்போது பகுத்தறிவின் காலத்தை அடைந்துவிட்டேன்.’”.
மாத்யூ போலவே, சட்டநாதனும் எல்லா கோட்பாடுகளையும் நிராகரிக்கிறான்; விரக்தியடைகிறான்; அவநம்பிக்கை கொள்கிறான்; தனியனாக நிற்கிறான்; தனது தனிமையை உணர்கிறான்.
இருத்தலியலின் முக்கியக் கோட்பாடுகளில் ஒன்று “இருத்தல், சாராம்சத்திற்கு முன்னதாக வருகிறது” (Existence precedes essence) என்பதாகும். மற்றொன்று, மனித முயற்சிகளின் அபத்தத் தன்மை (absurdity). இருந்தாலும் நமது செயல்களின் மூலம் நம்மை நாமே மீட்டெடுக்க வேண்டும் என்ற கருத்து.
இதைத்தான் சட்டநாதன் செய்கிறான். தனது செயல்களின் மூலம் தன் சாராம்சத்தை உருவாக்க முயல்கிறான். ஆனால் இறுதியில் அவன் செய்த செயல்கள் அவற்றுக்குரிய மதிப்பைப் பெறுவதில்லை. எல்லோரும் அவனை வெறுக்கிறார்கள், புறக்கணிக்கிறார்கள் அல்லது விட்டு விலகிச் செல்கிறார்கள்.
இந்த அர்த்தமின்மையும் அபத்தமும் பொம்மை ஐயரின் கொலையில் உச்சத்தை அடைகின்றன. புதினத்தின் இறுதியில், பொம்மை ஐயரின் இறப்பில் தான் சட்டநாதன் அனைத்தையும் இழந்து முற்றிலும் தனிமையில் நிற்கிறான்; தனது முழுமையான தனிமையை உணர்கிறான்.
சார்த்தர் தனது The Age of Reason புதினத்தின் இறுதியில் “நான் தனியாகவே எஞ்சியிருக்கிறேன்” (“I remain alone”) என்று எழுதுகிறார். இதுவே சட்டநாதனுக்கும் நிகழ்கிறது. இதுவே சட்டநாதனின் உணர்வும் ஆகும்.
இருத்தலியல் தத்துவத்துக்கும் இந்துத் தத்துவத்தில் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு. இந்துத் தத்துவத்தில் “சாராம்சம், இருத்தலுக்கு முன்னதாக வருகிறது” (Essence precedes existence) என்ற அடிப்படை உண்டு. அதாவது, ஒருவர் முன்கூட்டியே கருமச் சுமையுடன் பிறக்கிறார்; தற்போதைய வாழ்க்கையில் அந்தக் கருமச் சுமையை குறைக்க வேண்டும் என்பதே வாழ்வின் நோக்கம். இது இருத்தலியலின் அடிப்படை கருதுகோளுக்கு நேர்மாறானது.
செம்பருத்தி புதினத்தில் சட்டநாதனுக்கும் அவரது உறவினருக்கும் பல துரதிருஷ்டவசமான நிகழ்வுகள் நடக்கின்றன. ஆனால் அவற்றுக்குக் கரும வினை காரணம் என்று யாரும் கூறுவதில்லை. மற்ற தி ஜானகிராமன் புதினங்களில் கதாபாத்திரங்கள் கருமத்தை அடிக்கடிக் குறிப்பிடுகின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதிலும் செம்பருத்தி மாறுபட்டு நிற்கிறது.
இந்துத் தத்துவத்தில், வாழ்வின் மீது கொண்ட வெறுப்பினால், நிராசையால், அனைத்தையும் விட்டு விலகி துறவறம் கொள்வது உண்டு. சொல்லப் போனால், சன்யாசம் கொள்வது வாழ்வின் நான்காவது கட்டமாக, உயரிய நிலையாக கருதப் படுகிறது. கடைசியில், அது இறைவனிடம் சரணாகதி அடைவதில் முடியும். ஆனால், சட்டநாதனுக்கு இதுவும் நிகழ்வதில்லை. எல்லாவற்றையும் இழந்த பின் வரும் வைராக்கியம் வேறு; புதினத்தில் காட்டப்படும் சட்டநாதனின் தனிமை வேறு. ஒரு வித வெறுமை தான் சட்டநாதனுக்கு ஏற்படுகிறது; பக்தி இலக்கியங்களில் வரும் சரணாகதி மற்றும் துறவுக்கும் இதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது. சரணாகதியில், இறைவனிடம் நம்பிக்கை உண்டு. துறவில் கர்ம, ஞான, பக்தி மார்க்கங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பார்கள், எதிலும் நம்பிக்கையற்று விலக மாட்டார்கள். இருத்தலியல் கூறும் வாழ்வின் அபத்தம் இந்திய பக்தி, ஞான, கர்ம மார்க்கங்களில் பொதுவாக இல்லை.
எனவே, செம்பருத்தி முழுமையான இருத்தலியல் புதினம் என்று கருத இடமில்லாவிட்டாலும், அதில் இருத்தலியலின் அடிப்படைக் கருத்துக்கள் ஆழமாகப் பதிந்துள்ளன என்பதற்கான மற்றொரு வலுவான சான்று இதுவாகும்.
தி ஜாவின் மற்றப் புதினங்களில் காணப்படும் சமூக விதிகளை மீறிய காதல், காமம் இந்தப் புதினத்தில் வகிக்கும் பங்கு மிகக் குறைவு என்பதையும் கவனிக்க வேண்டும். செம்பருத்தி புதினத்தின் மையம் பெருந்திணையோ, கைக்கிளையோ அல்ல. இந்தப் புதினத்தில் வெளிப்படும் கருத்து வாழ்வின் அர்த்தமின்மையும், யாரோடு எவ்வளவு நெருங்கினாலும், கடைசியில் மிஞ்சும் தனிமையும் தான். இதுவே இப்புதினம் இருத்தலியல் புதினத்துக்கு நெருங்கி வருகிறது. இதனால் தான், தி ஜானகிராமனின் மற்றப் புதினங்களில் இருந்து செம்பருத்தி மிகவும் மாறுபட்டது என்று தோன்றுகிறது.
தி ஜானகிராமன் இந்தப் புதினத்தை இருத்தலியல் புதினமாக எழுத எண்ணியிருந்தார் அல்லது எழுதினார் என்று நான் கூறவரவில்லை. செம்பருத்தி புதினத்தை இருத்தலியல் பார்வையில் ஆராயலாம்; அதனால் செம்பருத்தி புதினத்தைப் பற்றிய பார்வை விரிவடையலாம் என்பதை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
