இப்போது க்ருபா சூப்பர் மார்க்கெட் இருக்கும் இடத்திலிருந்து சற்றுத் தொலைவில்தான் அன்றொரு நாள் சோழமன்னன் வந்த போது, குதிரையின் குளம்பு ஒரு புற்றை இடறியது. புற்றிலிருந்து ரத்தம் பீறிட்டெழ பதறினான் மன்னன். ஆட்கள் அந்த இடத்தைச் சுற்றித் தோண்ட ஞானபுரீஸ்வரர் வெளிவந்தார். அந்த இடத்தில் பெரிய ஆலயம் எழும்பியது. ஏராளமான நிலங்கள் நிவந்தமாக அளிக்கப்பட்டன. பூங்குழலித் தாயாரும் உடன் எழுந்தருளினார்.
பின்னொரு காலத்தில் கவனிப்பார் இல்லாமல் முட்புதர்கள் மண்டி வௌவால்கள் குடிபுகுந்தன. ராஜகோபுரம் இடிந்து விழுந்து விட்டது. பலபேர் முயற்சித்தும் நடக்கவில்லை. மொட்டை கோபுரமாக நின்றது. ஞானபுரீஸ்வரரும் ஊர்மக்களும் கவலைப்படவில்லை. அப்படியே விட்டுவிட்டுத் தங்கள் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள்.
பின்னர் ஒரு நாள் யாரோ ஒருவரின் கனவில் அந்தக் கோவிலின் மண்டபத் தூணில் இருக்கும் சித்தர் தோன்றி தன் மகிமையையும், செய்ய வேண்டிய பிரத்யேக வழிபாட்டையும் விளக்கிச் சொல்லியிருக்கிறார். அவர் ஊருக்குச் சொல்ல, புனருத்தாரணம் ஆயிற்று. வளர்ந்து வரும் நடிகையும் அரசியல் வாரிசும் வழிபட வந்தார்கள். கூட்டம் வர ஆரம்பித்தது.
மதிலை ஒட்டி மிகப் பெரிய தெப்பக் குளம். குமரன் அந்தப் படிகளில் உட்கார்ந்துதான் அழுவான். படிப்பான். ரேடியோவில் பாட்டு கேட்பான். எழுதுவான். அது அந்தக் காலம்.
எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு குமரனுக்கு இன்றைக்குத்தான் கோவிலுக்கு வரவேண்டும் போலிருந்தது.
மண்டபத்தில் தூணில் சாய்ந்து உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பதினாறு கால் மண்டபத்தின் ஒவ்வொரு தூணிலும் அழகிய சிற்பங்கள். விந்தையான உருவங்கள். அம்மா சொல்லுவாள். ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும் என. மூன்று கால்களுடன் ஒருவர். விதூஷகன் மாதிரி அகன்ற வாயுடன் ஒருவர், மிக நீண்ட தாடியுடன் தலைகீழாய் நிற்கும் ஒரு சித்தர், வெளிதேசத்தவர் முகஜாடையில் கையில் கூடையுடன் ஒரு தம்பதி..
கற்பாறைகள் பாவிய தரை. எண்ணூறு வருடங்களுக்கு முன்னர் இப்படி அழகாய்ச் சிற்பம் வடித்தவர்கள், அதை ஆராதித்தவர்கள், சித்தர்கள், மகான்கள், சாமான்ய மக்கள் இதில்தான் அமர்ந்திருக்க வேண்டும். இன்று கழுத்தில் மாலையுடன் வந்த ஒருவரின் குடும்பம் அருகில் உட்கார்ந்தது. மிச்சமிருக்கும் விபூதி குங்குமத்தைத் தூண்களில் உதறிவிட்டு தரையில் தேங்காய் மூடியை உடைத்துத் தின்றது.
குமரனும் அம்மாவும் இந்த மண்டபத்தில்தான் தினமும் நடை அடைக்கும் வரை இருப்பார்கள். அம்மா ஏன் இப்படிக் கோவிலிலேயே நேரத்தைக் கழிக்கிறாள் என்று குமரனுக்குப் புரிந்ததில்லை.
குமரனின் அப்பா குருமூர்த்தி பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர். அதைத்தவிர கடைகளுக்கு கணக்கு எழுதுவது மாதிரியாகச் சில உபரி வேலைகளும் பார்த்து வந்தார். அவர் சிரித்தே யாரும் பார்த்ததில்லை. எப்போதும் ஒரு இறுகிய முகத்துடன்தான் இருப்பார். விடியலில் கிளம்பி இருள் கப்பியதும்தான் வருவார்.
குமரன் நான்காம் வகுப்பு படிக்கும் போது சுதந்திர தினத்தன்று ரைஸ்மில் வைத்திருக்கும் சந்திரன் கொடியேற்றினார். அவர் இருக்கும் வரை இவனைப் பார்த்து சக மாணவர்கள் சிலர் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டனர். அவர்கள் மட்டுமில்லை, வாத்தியார்கள், டீச்சர்கள், மைதானம் பெருக்குபவர், ப்யூன் .. எல்லோரின் ஏளனப்பார்வையும் அவன் மேல் பரவியது.
எதற்குக் கேலி செய்கிறார்கள் எனப் புரிய நாளாயிற்று.
இத்தனை வருடங்களில் கோவிலில் அதிக மாற்றமில்லை.
கோபுரத்தின் கீழிருக்கும் பெரிய நிலைக்கல்லை மிதிக்காமல் ஒரு பெண் தாண்டி நிலத்தில் கைதொட்டு வணங்கி உள்ளே வருவதைப் பார்த்தான். நிமிர்ந்த போதுதான் தெரிந்தது ரத்னா..! உடல் நடுங்கியது. அவளும் பார்த்து விட்டாள்.
கண்கள் மலர குமரனை நோக்கி ஓடி வந்தாள். “குமரா..”
தலையைக் குனிந்து கொண்டான். பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். “எப்படி இருக்க?”
தலையாட்டினான்.
“இன்னும் இந்த இடத்தை விடலியா?”
மெலிதாய்ச் சிரித்தான். அவள் தலைக்கு மேல் கைகாட்டினான். மூன்றுக்கு மூன்று அமைப்பில் ஒரு மாயச்சதுரம். எப்படிக் கூட்டினாலும் பதினைந்து வரும் வகையில் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டிருந்தன. முதல் முதலில் குமரன்தான் ரத்னாவிற்கு இதைக் காட்டிக்கொடுத்தான்.
ரத்னா குடும்பம் எதிர்வீட்டிற்கு குடி வந்தது. புது ஊர் . சின்னச் சின்னத் தேவைகளுக்காக அக்கம் பக்கத்தில் உரையாடும்போது குமரனின் அம்மாவிடமும் பேசினார்கள். வந்த சிலநாட்களிலேயே ஊர் இவர்களை விட்டுச் சற்று விலகியே இருந்ததைக் கண்டு கொண்டார்கள்.
ரத்னாவிற்கு ஏனோ குமரனையும் அவன் அம்மாவையும் பிடித்துபோயிற்று. தினமும் அவனுடன் கோவிலுக்கு போகும் வரை அது வளர்ந்தது.
அப்போதெல்லாம் குமரனின் விரல்களைத் தன் விரல்களுடன் கோர்த்துக்கொண்டு பேசிக்கொண்டே இருப்பாள். குமரன் காற்றில் கலையும் அவளின் கேசத்தை, விரிந்து ஒளிரும் கண்களை, உதடுகளைப் பார்த்துக் கொண்டு இருப்பான்.
இருவருக்கும் அந்த அருகாமை பிடித்திருந்தது. அதற்குப் பெயர் ஒன்றும் வைக்கவில்லை.
அந்த வருடம் திருவிழாவின் போது கூத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். சினிமாவும் டிவியும் அலுத்துப் போயிருக்க வேண்டும். கூட்டம் இருந்தது. நாடக சபா மற்றும் அதன் பொறுப்பாளர்கள் பெயர் எழுதியிருந்த பச்சைகலர் படுதாவை இரண்டு தென்னை மரங்களுக்கு நடுவில் கட்டியிருந்தார்கள். முன்னால் ஒரு பெஞ்ச். ஹார்மோனியம், மிருதங்கம். அரங்கம், அதன் முன்னால் பார்ப்பவர்கள் என்றில்லாமல் எல்லா இடத்திலேயும் ஆட்கள் இருந்தார்கள் பீடியுடன் லுங்கி கட்டிக் கொண்டு வண்டிகள் மீது அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிசுபாலனுடன் ஒரு பெண் செல்ஃபி எடுத்து ஃபோனுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.
பாதியிலேயே ரத்னா கிளம்பினாள். சைகை காட்ட குமரனும் பின் தொடர்ந்தான். நடுஇரவிற்கு மேல் ஆகியிருக்க வேண்டும். கண்சிமிட்டும் தெருவிளக்குகள், அரைத்தூக்கத்தில் சில நாய்கள் தவிர யாரும் இல்லை. தன் வீட்டிற்குள் நுழையாமல் குமரனுடன் உள்ளே வந்தாள். அவளின் உடல் நடுக்கத்தையும் பெருமூச்சையும் அருகில் உணர்ந்தான். ஏதோ ஒரு பூவின் வாசனை. ஸ்பரிசம். எல்லாம் கலந்து ஒரு புது அனுபவம். நினைவில் அது அப்படியே தேங்கிவிட்டது.
ஒருநாள் அம்மா உடம்பு முடியாமல் படுத்து விட்டாள். அன்றைக்கு குமரனிடம் நிறைய பேசினாள். அம்மாவாக இல்லாமல் வேறு ஒரு மனுஷியாக.
“கூட்டுக்குடும்பத்தில பிறந்தவ நான். எப்பவும் ஆளுங்க நடமாட்டம்.. பேச்சு சிரிப்பு சண்டைன்னு பரபரப்பா இருக்கும். சமையலறையில் அடுப்பு எரிந்தபடியே இருக்கும். வியாபாரம்தான் குடும்பத்த உடையாம வச்சுருந்தது.. பைபாஸ் வரப்போவுதுன்னு கடையை இடிச்சுட்டாங்க.. வேற எடத்ல கடை போட முடியல்ல. வேற எதுவும் செய்யவும் தெரியல வீட்டு ஆளுங்களுக்கு.. வளந்து நின்ன பொம்பளப் பசங்கள ஒவ்வொரு இடத்ல கட்டிக் குடுத்துட்டாங்க.. அப்றம்தான் இங்க வந்தேன்..”
குருமூர்த்தியின் உலகம் வேறு. அவளால் அதில் பொருந்திப் போகவே முடியவில்லை. அப்போதுதான் ஒருநாள் நில வியாஜ்யம் சம்பந்தமாக கடிதம் எழுத அவரைத் தேடி சந்திரன் வந்தான். அதே ஊர் வடக்கு வீதியில் பெரிய வீடு. ரைஸ் மில், கடைகள் என நல்ல வியாபாரம். சிரிக்கும் கண்கள் வசீகரிக்கும் இளமை. குருமூர்த்திகாகக் காத்திருந்த போது மேஜையில் இருக்கும் புத்தகத்தைப் பார்த்தான்.
“யார் படிக்குறாங்க இந்தா மாதிரி புக்கெல்லாம் ? வாத்யாரா?”
“இல்ல.. நான்தான் படிக்கிறேன்..” தாரா உள்ளே இருந்தே பதில் சொன்னாள்.
குருமூர்த்தி வந்தார். வேலை முடிந்து சந்திரன் கிளம்பிப் போனான். மறுநாள் ஒரு புத்தகக்கட்டை அவன் ட்ரைவர் தந்து விட்டுப் போனான். பின்னொரு நாள் வீட்டிற்கே வந்து பேசினான். கோவிலில் சந்தித்துப் பேசினார்கள். புதிய காற்றைச் சுவாசித்தாள் தாரா. இழந்த ஏதோ ஒன்று கிடைத்தது போலிருந்தது.
ஒருநாள் குருமூர்த்தி, தாராவைக் காணாமல் தேடினார். சிலநாட்கள் போனதும் அவள் சந்திரனின் வீட்டில் இருப்பதை ஒருவர் பஸ் ஸ்டாண்டில் வைத்துச் சொன்னார். ஊரில் கேள்விப்பட்டு தாராவின் அம்மாவும் மாமாவும் வந்தார்கள். அவர்களுடன் குருமூர்த்தி சந்திரன் வீட்டிற்குப் போனார்.
தெரு வேடிக்கை பார்த்தது.
“அவங்க வந்தா கூட்டிட்டு போங்க.. நான் தடுக்கமாட்டேன்” என்றான் சந்திரன்.
தாரா வீடு வந்து சேர்ந்தாள். சில மாதங்களில் அவள் கர்ப்பமாய் இருப்பது தெரிந்தது. பொழுது போகாத நேரங்களில் ஊர் தாராவின் கதையைப் பேசிற்று.
குமரன் பிறந்தான். நர்சிங் ஹோம் வந்து சந்திரன் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டான். போகும் போது பிள்ளைப் பிறவுக்கான செலவு மொத்தத்தையும் கவுன்டரில் செலுத்தி விட்டுச் சென்றான். குருமூர்த்தி மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்.
நர்சிங் ஹோம் தன் வேலை மறந்து வேடிக்கை பார்த்தது.
அவன் மௌனமாய்க் கேட்டுக்கொண்டிருந்தான்.
குமரன் எஞ்சினியரிங் முடித்து விட்டு வேலைக்குப் போக ஆரம்பித்தான்.
ஒருநாள் குமரனின் அம்மா காலமானாள். காரியம் முடிந்ததும், வடக்குப் பக்கம் கோவில்களுக்குப் போவதாகச் சொல்லி அப்பா கிளம்பிப்போனார். அவர் திரும்பி வர மாட்டார் என குமரனுக்குப் பட்டது.
ரத்னாவும் காலேஜ் சேர்ந்திருந்தாள். ஒரு கோடைக்கால மாலைப்பொழுதில் கோவிலில், ரத்னா கல்யாணம் பற்றிப் பேசினாள்.
அன்றைக்குப் பிரதோஷம். கூட்டம் கொஞ்சம் அதிகமாய் இருந்தது.
பிராகாரத்தில், கையில் பூக்குடலையுடன் வந்து கொண்டிருந்த சிறுமியின் காலை கல் தடுக்கியது. பெரிய பூ ஒன்று கீழே விழுந்தது. சிறுமி அதை எடுக்கக் குனிந்தாள். உடன் வந்தவள் அது வேண்டாம் என சைகை காட்டினாள்.
“குமரா.. என்ன சொல்ற.. கல்யாணம் பண்ணிக்கலாமா?”
“சரி வராது ரத்னா.. வேணாம்..கஷ்டப்படுவ..”
“ஏன்.. என்னைப் பிடிக்கலையா.. கொஞ்சநேரம் சந்தோஷத்துக்குதான் என்னோட இருக்கயா?”
குமரனின் கீழ் இமைகளில் நீர் ததும்பியது. உதடுகள் நெளிந்தன.
அவன் பதில் பேசவில்லை.
அவள் கையை மெதுவாக விடுவித்துக் கொண்டு போய்விட்டான்.
பிறகு மைசூருக்கு வேலைமாற்றிக் கொண்டு போனான். அவன் திரும்பி வந்த போது ரத்னாவின் வீடு பூட்டப்பட்டிருந்தது. ஆளோட்டம் இல்லாமல் புதர் மண்டிக்கிடந்தது.
அவள் எங்கே போனாள் எனத் தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை குமரன்.
இத்தனை வருடங்களுப் பிறகு இன்றைக்குத்தான் பார்க்கிறான். பெரிய மாற்றமில்லை. இன்னும் அழகாகக்கூட இருந்தாள்.
ரத்னா அவன் தோளைத் தட்டினாள்.
“தூங்கறயா”
“இல்ல.. என்ன திடீர்னு ஊர்ப்பக்கம்..”
“நீ போனதும் கொஞ்ச நாள்ல கல்யாணம். புனே போயிட்டேன். குழந்தைங்க பாத்துக்க அம்மா அப்பாவும் என்னோட வந்துட்டாங்க.. இனிமே இந்தப் பக்கம் வர வாய்ப்பில்ல… இந்த வீட்டை விக்கலாம்னு ஒரு யோசனை.. அதான் வந்திருக்கோம்… “
காற்று பழைய நாட்களைப் போலவே வீசி, அவளின் கேசத்தைக் கலைத்தது. அவளே சொன்னாள்.
“ரெண்டும் பசங்க.. ப்ளே ஸ்கூல்ல போட்ருக்கேன்.. உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா குமரா?”
“ஹ்ம்”
“என்ன.. ஆயிடுச்சா?”
தலையாட்டினான்.
“ஓ….” சில வினாடிகள் மௌனம்.
“..லவ் மேராஜா”
சிரித்தான் குமரன். “ஒருதலைக் காதல்..!”
“அப்படின்னா..?”
மைசூரில் இருந்த பொழுது வேலை விஷயமாய் அவனை ஒரு தொண்டு நிறுவனத்திற்கு அனுப்பினார்கள். ஒரு மென்பொருளை நிறுவி பயிற்சி அளிக்க வேண்டும். உடன் வேலைசெய்பவர்கள் ஏதோ காரணம் சொல்லி அதைத் தவிர்த்ததன் காரணம் அங்கே போனதும்தான் தெரிந்தது.
பாலின அடையாளச் சிக்கல் இருப்பவர்களுக்கு உதவி செய்யும் அமைப்பு அது. அவர்களுக்கான உளவியல் மற்றும் மருத்துவ ஆலோசனை, வாழ்வாதாரத்துக்கான வழிகாட்டல் என இயங்கும் நிறுவனம். அவர்களின் பிரச்சனைகள், போராட்டங்கள், வலிகள் குமரனுக்குப் புதிதாய் இருந்தன.
காயங்களுக்கும் அவமானங்களுக்கும் நடுவில் அவர்களின் சிரிப்பும் கொண்டாட்டங்களும் அவன் முன் முற்றிலும் வேறோர் உலகமாய் அது விரிந்தது.
ஒரு மாதம் அங்கே வேலை இருந்தது. அவனுக்கு உதவியாய் இருக்க மோகனகுமாரியை தொண்டு நிறுவனம் நியமித்தது.
மின்சாரம் நாள் முழுவதும் தடைப்பட்டு ஓய்வாய் இருந்த ஒருநாளில், பான்ட் போட்டு மோகன் குமாராய் இருந்த தான், பாவாடை தாவணி அணியும் மோகனகுமாரியாய் மாறிய கதையை, குமரனுக்குச் சொன்னாள். நிறையப் பேசினாள். அங்கு வந்து போவோரின் வலிகளை விரல்களாலும் கண்களாலும் வார்த்தைகளாலும் விவரித்தாள்.
வந்த வேலை முடியும் சில நாட்களுக்கு முன் குமரன், நிறுவனத்தின் தலைவியைச் சந்தித்துத் தன் விருப்பத்தைச் சொன்னான்.
மழை தூறிக்கொண்டிருக்கும் ஒரு காலையில் மோகனகுமாரியுடன் திருமணம் அங்கேயே நடந்தது.
“வா போகலாம்.” ரத்னா எழுந்தாள். கண்கள் கலங்கியிருந்தன.
அம்மாவின் ஆள்காட்டி விரல் பிடித்துப் பின் தொடரும் சிறுவன் போல் உடன் போனான்.
வெளியில் கார் நின்றிருந்தது.
“உள்ளே வா” காரில் ஏறினான்.
வண்டியை எடுத்து வீடு இருக்கும் பக்கம் போகாமல் எதிர்த்திசையில் போய் ஒரு மரத்தடியில் நிறுத்தினாள். அவன் முகத்தைத் தன் பக்கம் இழுத்து அழுத்தமாய் முத்தமிட்டாள். உப்புக் கரிப்பு உதட்டில் கலந்தது.
அவன் முகத்தில் எந்தக் கலக்கமும் இல்லை.
ரத்னாதான் கேட்டாள்..
“ஏன் குமரா .. எனக்குப் புரியல.. எதுக்கு இப்படி??”
அமைதியாய் ரத்னாவின் கண்களைப் பார்த்தான். அவள் கைகளைத் தன்னுள் பதித்துக் கொண்டான்.
வெளியே மேளச்சத்தம் கேட்டது. ரத்னா ஜன்னல் வழியே பார்த்தாள்.
நேர்த்திக் கடனுக்காய்க் கன்னங்களில் நீளமான வேல் குத்திய சிறுவன் கையில் தீச்சட்டி ஏந்தி வந்து வந்து கொண்டிருந்தான். துணையாய்ச் சிலர் உடன் வர சத்தம் கடந்து போயிற்று.
தூரத்தில் மொட்டை கோபுரம் தெரிந்தது.
